தொடர்வண்டி அனுபவங்கள்

வேலைக்கு நான் தொடர்வண்டியில் (புகை இல்லாத புகையிரதம்) தன் செல்வது. பயணம் 75 % சுவாரசியமானதாகவே அமையும்( சக பயணிகள் பலரைப் போலவே மற்ற 25% நேரமும் ஷ்ரேயா நித்திரை கொள்வா / புத்தகத்தில் தொலைந்து போவா!). சந்திக்கும் மனிதர்களும் நமது உலகம் எவ்வளவு பன்முகமுடையது என்பதை உணர்த்திச் செல்வர். காலை வணக்கம் அல்லது சும்மா ஒரு "ஹாய்" புன்சிரிப்போடே சொல்பவர்களூம், நாம் முந்திக் கொண்டோமென்றால் கடமைக்குச் சொல்பவர்களுமாகப் பயணம் தொடங்கும். அனேகமாக எல்லாரும் புத்தகம் வாசிப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு பார்த்திருந்தீர்களானால் கிட்டத் தட்ட 60 - 65 % பயணிகள் டான் ப்ரௌனின் டா வின்சி கோட் வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

எனக்கு நண்பர்கள் சிலர் தொடர்வண்டி நிலையத்திலே அறிமுகமானவர்கள். கணவனை இழந்து, மகளுடன் இங்கே குடியேறி சகோதரியுடன் வதியும் ஒரு அன்ரி, என் வயதொத்த இரு பெண்கள், இவர்கள் எல்லாரிலும் பார்க்க, சுவாரசியமாகக் கதை சொல்லும் ஒரு இந்தியப் பெண். இது வரை எத்தனையோ நாட்கள் அவவுடன் பயணித்திருக்கிறேன். அவளது மகனதும் கணவனதும் பெயர் தெரிந்தாலும்,இற்றை வரை அவவின் பெயர் தெரியாது! அடுத்த முறை கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், கதை ருசியில் மறந்து விடுவேன். :o) தனக்கு கல்யாணம் நடந்த கதை சொன்னாள். எங்கள் பயண நேரம் 40 நிமிடம்..அவ்வளவு நேரமெடுத்து, புதுப்பெண் போல வெட்கி, முகம் சிவந்து, எப்படி கல்யாணப்பேச்சு வந்தது என்பதில் ஆரம்பித்து கல்யாணம் நடந்தது வரை...அப்படிக் கதை சொல்லக் கூடிய ஒருவரை நான் அதுவரையில் சந்தித்திருக்கவில்லை. அவ சொன்ன விதம்,முடிவு தெரிந்திருந்தாலும், அடுத்து என்ன நடந்ததோ என்று நினைக்க வைத்தது! கன நாட்களாகக் காணவில்லை.அடுத்த வண்டியைப் பிடிக்கிறாவோ என்னவோ!

காலை வண்டியில் ஏறும் போது இன்னொரு பெண்ணும் கூடவே ஏறுவா. அவவின் தோழியைக் கண்டாவோ...என் கோழித் தூக்கம் போச்சு! கதையை விட, சிரிப்பே அதிகம். ஒரு நாள் அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று கவனித்தேன். ஒரு பையனை விரும்புகிறா என்று விளங்கிற்று. அது ஒரு வியாழனோ..வெள்ளிக்கிழமை. வந்தது திங்கள்..அவவும் வந்தா. தோழியக் கண்டது தான் தாமதம்...ஓடிப் போய் அருகில் உட்கார்ந்து வார இறுதியில் அவனைக் கண்ட, கதைத்த கதை சொன்னாள். அவன் தனது தொ.பே.இலக்கத்தை எடுத்ததாக சொன்னா. இப்படியே அவவின் கதைகள் ஒரு நாடகம் போல நீண்டு செல்லும். வழமையாய் அந்தப் பெட்டியிலேயே ஏறும் சில பேருக்கு முழுக்கதையும் தெரியும். அந்தக் கிழமைஇறுதியும் முடிந்து அடுத்த திங்கள், தோழியிடம் (+ அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரின் காதிலும்!!).."We went out..YAY!" எல்லார் முகத்திலும் அடக்க மாட்டாத ஒரு புன்சிரிப்பு. (நாங்கள் கை தட்டியிருந்திருக்க வேண்டும் என இப்ப நினைக்கிறேன்)

இப்படிச் சந்தோசமனவைகளுடன் நடக்கிற பயணங்களில் சில மனவருத்தங்களும் ஏற்படுவதுண்டு. வேலை முடிந்து திரும்புகின்ற ஒரு களைத்த பொழுதில், இருக்க இடம் கிடைக்கவில்லை. நான் மூவர் இருக்கக் கூடிய இருக்கைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அதிலே சாளர ஓரமாக ஒரு வெள்ளையினப் பெண்மணி, நடுவில் ஒரு சீனரோ ஜப்பானியரோ கொரியரோ (இப்போதைக்குச் சீனர் என்று வைத்துக் கொள்வோம்) அவருக்குப் பக்கத்தில் இக்கரையில் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த பெண்..அவவோ நல்ல நித்திரை. வெள்ளைப் பெண் புத்தகம் வாசித்துக் கொண்டு, ஒரு can "Jim Beam" beer குடித்துக் கொண்டிருந்தா. சீனர் அசைந்ததில் அவரது கால் அவவின் காலில் பட்டு விட்டது. "மன்னியுங்கள்' என்று அவர் சொன்னாலும் அவவோ "என்னைத் தொடாதீர்கள்/என்னில் பட வேண்டாம்." என்று கடுமையாகச் சொன்னதுமல்லாமல் தூசைச் தட்டுவது போல அவரது கால் பட்ட இடமும் தட்டி, ஏதோ அருவருப்பான ஒன்றை மிதித்து விட்டது போல முகஞ்சுளித்து, அருவருத்தா. சீனர் முகங் கறுத்து என்னைத் திரும்பிப் பார்த்தார். இப்படி நடப்பதுதான் என்று நான் கேள்விப்பட்டிருந்தாலும், கண்முன்னே நடந்ததில் நான் திகைத்துப் போயிருந்தது அப்பட்டமாக என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது பதிலடி கொடுக்க முடியாத இயலாமையின் வெளிப்பாடு என்பது இருவருக்கும் தெளிவாகவே தெரிந்தது.

பயணங்கள் தொடர்கின்றன..கூடவே அனுபவங்களும்.

9 படகுகள் :

ஒரு பொடிச்சி April 19, 2005 1:41 pm  

ரயிலில் போவது அருமையான பல அனுபவங்களைத் தருமொன்றுதான்.. உங்கட பதிவு, இங்கே -subway என்பார்கள்- சப்வேயில் போவதுபோலவே இருக்கிறது!

துளசி கோபால் April 19, 2005 2:14 pm  

அன்புள்ள ஷ்ரேயா,

நிஜமாவா இப்படி? எப்படித்தான் இன்னொரு மனுஷனை அலட்சியப்படுத்தி
வெறுப்பா இருக்க முடியுது? அதுவும் பொது இடத்தில்.

பாவம். நாடு விட்டு நாடு வந்தவங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்.

கதை சொல்ற இந்தியப்பெண் நானா? :-)))

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: என்னை 'மாடத்தில்' வச்சதுக்கு நன்றி:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) April 19, 2005 3:35 pm  

பொடிச்சி, இங்கே cityக்குள்ளே மட்டும் தான் நிலக்கீழ் பயணம். மீதியெல்லாம் நிலத்துக்கு மேலேதான். அங்கே எப்படி?

அப்பெண்ணின் நடத்தை: ஆம், என்னால் நம்பவே முடியவில்லை, மனவருத்தமாகவும் இருந்தது.

ஆகா..துளசி----(அக்கா/aunty...எது வேணா போட்டுக் கொள்ளலாம் :o) )
உங்க கல்யாணக்கதையும் சுவாரசியமா இருக்கும் போலருக்கே... ;o)
சொல்லுங்களேன் இப்பிடி பக்கத்துல உட்கார்ந்து!

Anonymous April 22, 2005 1:33 pm  

Shraya Thanks for the feedback.U know the events and the background much enough because of u living in Sydney but the most of the readers don;t know fair enough abt the matter which u mentioned.Thatswhy I didn;t add that Incident with that matter.

As u said,This is the stupid thing they did even they know that Indonasia existing the tight Laws aginst the drug traffickers.

Keep on Shreya.I saw ur site regularly.Am proud of u Bcos of One of the tamil Aussie still with tamil & tamilar's feelings.

இளங்கோ-டிசே April 22, 2005 1:58 pm  

நல்ல பதிவு ஷ்ரேயா!
ரயில் பயண அனுபவங்கள் இனிமையாவைதான், சிலவேளைகளில் துரதிஸ்டமான சம்பவங்களும் நிகழ்ந்துவிடும். //"We went out..YAY!" எல்லார் முகத்திலும் அடக்க மாட்டாத ஒரு புன்சிரிப்பு// ஆகா பல ஒற்றுமைகள் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இருக்கும் போல? வசந்தன் கெதியாய் அடுத்த ஒன்றுகூடலை நடத்தி, ஷ்ரேயாவிடம் அறிவுரைகள் கேளும். நீர் தானே, மற்ற ஆக்களுக்கு திருமண ஆசையிருந்தால் வயிறு எரிகிறனீர் :-) !!!

`மழை` ஷ்ரேயா(Shreya) April 22, 2005 3:56 pm  

அடுத்த அவுஸ்திரேலிய வலைப்பதிவாளர் கூட்டத்தை நியுஸிலாந்துக்காரரையும் சேர்த்து சிட்னியில வைப்பமோவென்று யோசிக்கிறன். ஏனென்டா இந்த மெல்பேண்வாசிகள் தங்களுக்குள மட்டும் தான் வலைப்பதிவாளர் கூட்டத்தை நடத்துகினம்! :o(

என்ன சொல்லுறிங்க வசந்தன்?

வித்யாசாகரன் (Vidyasakaran) April 29, 2005 9:48 pm  
This comment has been removed by a blog administrator.
வித்யாசாகரன் (Vidyasakaran) April 29, 2005 9:49 pm  

நான் ஒருமுறை பேருந்தில் கடைசி இருக்கையில் உட்கார்ந்து போகும்போது, என் பக்கத்தில் பெரியவர் ஒருத்தர் இருந்தார். வண்டி குலுங்கி என் உடம்பு அவர் மேல் படும்போதெல்லாம் 'ப்ச்' 'ப்ச்' என்று சொல்லி என்னை வெறுப்பேத்தினார். அப்புறம், அவர் சொல்லுறதுக்கு முன்னாடி நான் அதையே சொல்ல ஆரம்பிச்சேன். அவர் முகத்தைப் பாக்கணுமே! :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) April 29, 2005 11:30 pm  

நல்ல பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் வித்யாசாகரன். :0)

பெட்டகம்