போர்களும் போர்வீரர்களும்

துளசியின் ANZAC நாள் பற்றிய பதிவை வாசித்த பின் உடனே எழுத வேணுமென நினைத்திருந்தேன்..இப்பத்தான் எழுதுகிறேன்.

சமூகக் கல்வி, இலங்கையில் படித்தவர்களுக்கு அறுவையான பாடம். இத்துடன் பல பேரால் தரித்திரம் என ஏசப்படும் சரித்திரமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஏசி ஏசித்தான் அதை படிப்பதே!

நான் இப்போ சொல்ல வருவது நான் எப்படியெல்லாம் ஏசினேன் என்பதை அல்ல. சமூகல்வியிலா அல்லது வரலாற்றிலா என்று ஞாபகமில்லை..உலக வரலாறு பற்றிய ஒரு பகுதி இருந்தது. அதில், நடந்த உலகப் போர்களைப் பற்றியும் ஐ.நா சபை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இருக்கும். என் ஞாபகத்திற்கு எட்டியவரை (எட்டாட்டி கொக்குத்தடிதான்! :o) ) அதிலே போர்களேற்பட என்ன காரணி தூண்டுதலாக இருந்தது என்றும் என்னென்ன நாடுகள் எந்தப் பக்கம்(போரில்!!) கட்சி சேர்ந்தன என்பதைப் பற்றியும் தான் இருக்கும். ஜப்பானுக்குக் குண்டு போட்டதும் படித்தோம். ஆனால் இவை அனைத்துமே மேலோட்டமாக ஏதோ ஒரு சம்பந்தமில்லாத ஒன்றைச் சொல்வது போலவே கையாளப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்பதைத் தவிர, அவன் அரங்கேற்றிய இனப்படுகொலை பாடத்திட்டத்தில் இருக்கவில்லை (அல்லது, படித்து, நான் தான் மறந்து போய் விட்டேனோ தெரியாது! தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

{ஆஷ்விட்ஸிற்கு இரயில் மூலம் அனுப்பபட்ட கணக்கற்ற யூதர்களைப் பற்றியும் அவர்களின் கொடுமையான இறுதிநாட்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிச் சொல்லும் The Twentieth Train" (எழுதியவர்: Marion Schreiber, இது Silent Rebels:The true story of the raid on the twentieth train to Auschwitz என்ற பெயரில் முன்னர் வெளியிடப்பட்டது) புத்தகத்தைத் தான் இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடிந்தவுடன் அதைப்பற்றிய ஒரு தனிப்பதிவை இடுகிறேன்.}

இலங்கையில் இருந்தவரை உலகப்போர்களைப் பற்றிய எனது அறிவு மிக மிக மிகக்குறைவு. இங்கே சிட்னிக்கு வந்த பின்னரே நான் பல டொக்யுமென்ட்ரிகளைப் பார்த்தும், புத்தகங்கள் & அச்சிதழ்களை வாசித்தும் இப்போர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவிலிருந்து எண்ணிலடங்காதோர் போருக்குச் சென்றமையால் இந்நாடு போர்களின் ஞாபகார்த்தத்திற்கு பெரும் மதிப்பளிக்கிறது.

என் சந்தேகம் இது தான்...உலகப்போர்கள் இரண்டும் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையும் (அவுஸ்திரேலியா போன்றே) பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து இப்போர்களுக்குச் சென்ற (போயிருக்கிறார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்) வீரர்கள் நினைவு கூரப்படுவதுண்டா?இல்லையெனின் ஏன்? இந்தியாவில் எப்படி?

6 படகுகள் :

துளசி கோபால் April 28, 2005 2:43 pm  

ஷ்ரேயா ஷ்ரேயா,

நீங்க எந்த உலகத்துலே இருக்கீங்க? இந்தியா போன்ற நாடுகளிலே மனுஷனுக்கும்
மனுஷ உயிருக்கும் ஏதாவது மதிப்பு இருக்கா? செத்தாலும் பத்தோடு பதினொண்ணூதானே!

தினப் பத்திரிக்கையிலெ பாருங்க, ஜஸ்ட் ரோடு ஆக்ஸிடெண்ட்லே தினம் அம்பது
பேரு மேலே போறாங்க. அரசியல் காரணங்களுக்காக தினமும் பல கொலைகள்.


சினிமா டிக்கெட் கிடைக்கலைன்னு தீக்குளிக்கற கண்றாவி எல்லாம் எங்கே அரங்கேறுது?
மேலை நாடுகளிலா?

க்ரிக்கெட்லே தோத்தாலும் தற்கொலை செஞ்சுக்குவாங்க இவுங்க. ஆடறவன் ஜெயிச்சாலும் தோத்தாலும்
காசு வாங்கிக்குவான். பாக்கறவங்கதான் இந்தக் குழப்படி செய்யறது!

இப்படி இருக்க,முதல், இரண்டாம் உலக மஹா யுத்தத்திலே இறந்தவர்களை
எல்லாம் யார் நினைக்கபோறா? அவுங்க குடும்பத்து ஆட்கள் நினைச்சால்தான் உண்டு!

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous April 29, 2005 4:51 am  

நான் பள்ளியில் படிக்கும்போது எந்த ஒரு சப்ஜக்டிலும் பாரபட்சம் பார்த்தது கிடையாது, சரித்திரம், பூகோளம், அறிவியல், கணக்கு, மொழி என்று எல்லாவற்றையும் ஒரே மாதிரிதான் தேர்வு நேரத்தில் கூட அணுகுவேன். அதாவது, படிப்பதெல்லாம் எப்படியும் வயதானால் மறந்துவிடும் என்ற ஒரு தீர்க்கதரிசனத்தை உணர்ந்திருந்ததால், எந்த ஒரு சப்ஜக்டையும் படித்து மார்க் வாங்கும் தீய பழக்கவழக்கம் எதுவும் என்னிடம் இருந்ததிலை. :-)

உலகப்போரில் இந்தியாவின் பங்கு என்று பார்த்தால், இந்தியா நேசநாடுகளின் பக்கம் என்று ப்ரிட்டன் தானே ப்ரகடனப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியைக் கலந்தாலோசிக்காமல் இப்படி தத்தேரியாக "அறிக்கை" விட்ட ப்ரிட்டனை கன்டிக்க மட்டும் அல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தது காங்கிரஸ்/இந்தியா. எனவே, இந்தியா போரில் கலந்து கொன்டது என்பதை எந்த அளவு ஏற்றுக்கொள்ளலாம் என்பதும் குழப்பமாக இருக்கிறது (எனக்கு).

இரன்டாம் உலகப்போர் என்பதும் கிட்டத்திட்ட சுதந்திரப்போர் என்ற அளவில், முதலில் இந்தியாவுக்கு ப்ரிட்டன் விடுதலை அளிக்கட்டும்; பிறகு ஆதரவு பற்றி எல்லாம் யோசிக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்ததாம்.

போர்களில் 'நேசநாடுகளின் பக்கம்' என்றாலும், இந்தியப்பங்களிப்பு என்பது ஆட்கள்/ஆயுதம் என்ற அளவில் இல்லை (என்று நான் படித்தவரையில் அறிகிறேன்). சோறு, தண்ணி (ஐயோ, நான் அடிக்கறதை சொல்லலை, குடிக்கறதை சொன்னேன்) மட்டும்தான் படைவீரர்களுக்குப் போச்சாம். ஒரு விதத்தில் பார்த்தால், இந்தியப்படைகள் என்பது சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய ஐ.என்.ஏ என்றும் சொல்லலாம் இல்லையா? ஐ.என்.ஏ. ப்ரிட்டனுக்கு எTஇரான ஒரு படை.

இந்தியப்பிரஜைகள் இரன்டாம் உலகப்போரில் ஆயுதம் தாங்கி பங்குகொன்டார்களா என்று ஊர்ஜிதமாகத் தெரியவில்லை. நாளைக்காலை கூகுலில் தேடிப்பார்க்கிறேன். அதனால்தான் நினைவுகூறல் தினம் எல்லாம் இந்தியாவில் எதுவும் இல்லை. ஆஸ்ட்ரேய்லியாவில் ப்ரிட்டன் ஆன்டவிதவும் இந்தியாவை ஆன்ட விதமும் வெவ்வேறானவைதானே?

ஜெய்கிந்த்! :-)

வால்துன்டு: ஜப்பானில் அமெரிக்கா குன்டு போட்டது பற்றி பள்ளியில் படித்தாலும் (அதாவது மத்தவங்க படிக்கறப்பொ நான் பொறுப்பாக றஜெஷ் Kஉமர் நொவெல் மட்டுமெய் படித்தாலும்), சென்னையில் ஜப்பான் குன்டு போட்டதை இணையத்தில்தான் படித்தேன் (). :-((

Anonymous April 29, 2005 6:53 am  

நம்ம அப்பா சமூக கல்வி ஆசிரியர். அழகாக கதை சொல்வார். நான் படித்த பாடசாலையிலேயே கல்வி கற்பித்து எனது வகுப்பக்கு ஆண்டு 6 முதல் 11 வரை அவர் தான் கற்பித்தார். அவரது உலக வரலாற்றை விபரிக்கும் தன்மையால் அந்த பாடம் ஆர்வமானதாகவே இருந்தது. புத்தகம் அனைத்தையும் மேலோட்டமாக தொட்டு சென்றாலும் அவரது கதை முலம் ஓரளவு ஆழமாக தெரியும். அப்போது பிரித்தானிய படையில் இருந்தவாகள் பிரித்தானிய படை என்ற ரீதியில் அதன் படையணியில் இருந்திருக்கிறார்கள். அது தெரியும். நாடுவிட்டு நாடு போய் போரிட்டார்களா தெரியாது.

`மழை` ஷ்ரேயா(Shreya) April 29, 2005 10:19 am  

ம்ம்..துள்ஸ் ;o) சொல்றதும் சரிதான். இலங்கை , இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பில்லை.

குளக்கட்டன்..நீங்க குடுத்து வைச்ச ஆள். கற்பித்தலை கடமையாகப் பார்க்காது, உற்சாகத்தோடு செய்யும் ஆசிரியர்கள் வாய்ப்பது அரிது. எங்களுடைய ச.கல்வி ஆசிரியை மிகவும் வடிவாகச் சொல்லித் தருவா. வெண்கட்டி எடுத்து அச்சடித்த வரைபடத்திலுள்ளதைப் போன்றே நுணுக்கமான வளைவுகளுடன் கரும்பலகையில் உலக, இலங்கை வரைபடமும் வரையும் நேர்த்தி இருக்கிறதே! .ஆனாலும், நிறைய விடயங்களை பாடமாக்க வேண்டியிருந்ததால் வர்லாற்றுப் பாடம் ஒட்டவில்லை!! அதை
இன்ட்ரஸ்டிங்காக ஆக்க, படத்தில் வரும் இடங்களுக்கோ அருங்காட்சியகங்களுக்கோ அழைத்துச் சென்றிருந்திருக்கலாம்
என்பது என் கருத்து.

க்ருபா..ஜப்பான் எதுக்கு, எப்போது சென்னையில் குண்டு போட்டது? இந்திய வீரர்கள் 2ம் உ. போருக்குச் சென்றதைப் பற்றி இங்கே அலுவலகத்தில் கேட்டுப் பார்க்கிறேன்..இருக்கிற 7 இந்தியர்களில் யாருக்காவது தெரிந்திருக்கக் கூடும்! (உலகப்)போருக்குச் சென்ற இலங்கையர் பற்றி யாருக்கேனும் தெரியுமா?

`மழை` ஷ்ரேயா(Shreya) April 29, 2005 1:38 pm  

தான் இராணுவத்தில் ஒரு பொறியியல் battalion இல் பணிபுரிந்ததாக ஒரு அலுவலக நண்பர் சொன்னார். அந்த battalion மிகவும் பழமையானதாம். இப்படிப் பழமையான battalionகளின் தலைமையலுவகத்தில் போருக்குச் சென்றவர்களின் பெயர்கள் இருக்கும் என்கிறார். க்ருபா - நீங்க சொன்ன மாதிரியே, உணவும் நீரும் போனதாம். அதோடே இரண்டு உ.போர்களுக்கும் வீரர்களும் கொண்டு செல்லப் பட்டார்களாம். இங்கிலாந்துப் படையில் போரிட்டதால் தனிப்பட இவ்வீரர்களைப் பற்றி இந்திய இராணுவத்திடம் விவரங்கள் (அதாவது, இன்னின்ன உலகப் போருக்கு, இந்த battalion இல் குறித்த வீரர் சென்றார், அவர் காயப்பட்டாரா, மரணித்தாரா அல்லது தாயகம் திரும்பினாரா, கிடைத்திருக்கக் கூடிய விருதுகள் போன்றவை) பெரிதாக இராது என்றும் இந்த நண்பர் நினைக்கிறார்.

நான் இந்த வீரர்களைத் தெரியுமா என்று கேட்டது, உங்களில் யாருடையதாவது தாத்தாவோ பாட்டியோ போயிருந்தால், அறியலாம் எனறுதான்.

Anonymous April 30, 2005 7:07 am  

ஜப்பானியர்கள் சென்னையில் குன்டு போட்டார்கள் என்பதை விட இந்தியர்களே (ப்ரிட்டனைத் துரத்த) போட்டார்கள் என்பது சாலப்பொருந்தும்.

பாட்டலியன் பட்டியல் எல்லாம் ஒரு சாதாரண இந்திய ப்ரஜை போய் பார்க்க முடியுமா என்ன?

என் நண்பன் ஒருவனின் தாத்தா இங்கிலாந்து இராணுவத்தில் தான் பணிபுரிந்தாராம், அதாவது இங்கிலாந்துக்கு. க்றிஸ்துவராக மாறினால்தான் ப்ரிட்டன் இராணுவத்தில் பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும் என்று என் நண்பன் சொன்னான். அதனால்தான் மாறியதாகவும் சொன்னான். அதைச் சொல்லும்போதே கூட ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியுடன் சொன்னான் (அவனது பரம்பரையினரும் மாற நேர்ந்தது).

இப்பொழுது வேறு ஒரு ஊரில் இருக்கிறான். ஆனால் மேலும் ப்ரிட்டன் இராணுவத்தில் பணிபுரிந்த விவரங்களைப் பற்றி கேட்பதும் கொஞ்சம் தர்மசங்கடத்தில் ஆழ்த்த வாய்ப்பிருக்கும் போல் தோன்றுவதால் இதுபற்றி கேட்க தயக்கமாக இருக்கிறது.

என் தாத்தா(க்கள்) இப்பொழுது இல்லை. என் பாட்டி(களு)க்கு அடுப்படியில் குமுட்டி, விறகடுப்புடன் மட்டுமே போரிட்ட அநுபவம் உள்ளது.

நான் இதுபற்றிய விவரங்களை சேகரிக்க முயற்சிக்கிறேன். ஆனா ஒன்னு, இங்கிலாந்து இராணுவத்தில் பணிபுரிந்ததை அவ்வளவு பெருமையுடன் கூறுவார்கள் என்று தோன்றவில்லை.

பெட்டகம்