வந்தேறுகுடிகளா?

இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும்(இவர்களது வழித்தோன்றல்கள்தான் வேடர்களா?) இருந்தார்கள். பிறகு நாடு கடத்தப்பட்ட விஜயன் வந்திறங்கியதிலிருந்து புதிதாக ஒரு இனத்தவர். புதியவர்களே சிங்களவர்கள். இப்படித்தான் எங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். ஏற்கெனவே தீவின் வடபாலிருந்த நாகர்களைத் தமிழரென சிங்கள வரலாற்றறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

இப்போதும் பல சிங்களவரைக் கேட்டால் தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றுதான் சொல்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை - வரலாற்றுப் புத்தகத்தில் இருப்பதுதானே அவர்களுக்குத் தெரியும். அப்போ வடக்கில் இருந்த நாகர்கள் யார் எனக் கேட்டால் முழிப்பார்கள். வரலாற்றுப் புத்தகங்களில், (எந்த நூற்றாண்டுகளென மறந்து விட்டேன்) இன்னின்ன நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்பின் போது (உதாரணம் ராஜ ராஜ சோழன்) வந்த படைகளில் இருந்தவர்களிற் பலர் - இலங்கையரை மணம் செய்து - இலங்கையிலேயே குடியேறியமை என்று குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் தான் முதலில் இலங்கைக்குத் தமிழர் வந்தனராம். அதற்குப் பிறகு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தேயிலை / கோப்பித் தோட்டங்களில் வேலைக்காக அமர்த்தப்பட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தமிழர்கள் வந்தமை.

இவ்விரண்டு காரணிகளாலுமே இலங்கையில் தமிழ்க்குடியேற்றம் உண்டாயிற்று என்பதே வரலாற்றுப் பாடங்களினது அசைக்க முடியாத கூற்று. இந்த எண்ணம்/நிலைப்பாடு அரசியல்வாதிகளினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் மட்டுமல்லாது, ஆவணங்கள், இணையத்திலும் இலங்கை வரலாறு எனத் தேடினால் மேற்கூறிய விதத்திலேயே இலங்கை (தமிழரது) வரலாறு விபரிக்கப்படும். இதனை படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை. இலங்கையிலே விஜயனின் வரவுக்கு முன்னமிருந்தே வாழ்ந்து வந்த நாகர்களின் வழி வந்தவரே தமிழர் என்பது எனது நம்பிக்கை. இது சரியா பிழையா?

இங்கே எனது அலுவலகத்தில் இரண்டு தென்னிந்தியர் உளர். அதில் ஒருவர் கொஞ்ச நாளைக்கு முதல் "தென்னிந்தியாவில் உங்களது மூதாதையரின் இடம் என்ன?" என்று கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தெரியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். (இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கடலால் இலங்கை பிரிக்கப்பட்டு எத்த்த்தனை ஆயிரம் ஆண்டுகள். இதிலே அம்மம்மாட அம்மம்மாட (x 250)......அம்மம்மாட ஊர் எதுவென்று கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்!!) பிறகு தான் விளங்கிற்று, அவர் பிரிட்டிஷாரால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களின் வழித்தோன்றல்களில் ஒருவராக என்னை நினைத்திருக்கிறார். போய்ச் சொன்னேன், "அப்படியல்ல. நான் இலங்கைத் தமிழ்". அவருக்கோ குழப்பம்.."பிரிட்டிஷாரால் கொண்டு போகப்பட்டவர்கள் தானே இலங்கையில் தமிழர் " என்று கேட்டார். இலங்கை வரலாறு சொல்ல வேண்டியதாயிற்று (என் version :o) ). ஆனாலும் அவர் முழுக்க convince ஆகின மாதிரித் தெரியவில்லை.

மற்றத் தென்னிந்தியருடன் கதைக்கும் போது, அதிலும் இலங்கை வரலாறு மூக்கை நுழைத்தது. தமிழர் குடியேற்றம் தென்னிந்தியப் படையெடுப்பின் (மீண்டும், ராஜ ராஜ சோழன்) போது, தமிழ்ப்போர்வீரர்கள் இலங்கையில் குடியேறின போது தான் ஆரம்பித்தது என்றே இவர் சொல்கிறார். (இவர்தான் இராணுவத்தில் இருந்தவர்..அதனால் இப்படி யோசித்திருக்கக் கூடும்)

எது சரி? நான் நினைப்பதுவா? முதலில் குறிப்பிட்ட இந்திய நண்பரது எண்ணமா? இரண்டாவது இந்திய (இராணுவ) நண்பரின் கூற்றா? அல்லது இவர்கள் இருவரும் சொல்வதைச் சேர்த்துச் சொல்லும் இலங்கை வரலாற்றுப் புத்தகமா?

7 படகுகள் :

துளசி கோபால் May 06, 2005 12:34 pm  

அன்புள்ள ஷ்ரேயா,

'கோண்டுவானா'காலமுன்னு சொல்றாங்களே அப்ப எல்லா நிலப்பரப்பும் ஒண்ணைஒண்ணு ஒட்டியேதானே
இருந்திருக்கு. அப்ப இந்தியா இலங்கைஇன்னும் சொல்லப்போனா ஆஸ்தராலியாவும் ஒட்டிக்கிட்டேதான்
இருந்திருக்காம். அப்ப ஜனங்க எல்லா இடத்துக்கும் போய்வந்திருப்பாங்களே!

இங்கே எங்க கிறைஸ்ட்சர்ச் ம்யூசியத்துலே இந்த நிலங்கள் பிரிஞ்சது எப்படின்னு ஒரு நல்ல விளக்கம் இருக்கு!

ஆஸ்தராலியாவிலே இருக்கற அபாரிஜன் ஆளுங்களுக்கும், தமிழ் நாட்டிலே மலைவாழ் ஜனங்களாகிய
'இருளர்'என்ரு சொல்லப்படுற பிரிவினருக்கும் ஏராளமான ஒத்துமை இருக்க்குன்னு சொல்றாங்க.அவுங்க
உடம்புலே வெள்ளையாப் பூசிக்கிறாங்கல்ல, அதுகூட விபூதி( திருநூறு) அப்புறம் தமிழ் நாட்டுலே இருக்கற சுடலை
சாமியாடிங்களைப் போல இருக்குன்னும் சொல்றாங்க.

விஜயன் வர்றதுக்கு முன்னாலேயே தமிழாக்கள் அங்கெ கட்டாயம் இருந்த்கிருக்கோணும்! ராமேஸ்வரத்துக்கும் அப்பாலே
தனுஷ்கோடி இருந்தது நினைவிருக்கா. அங்கிருந்து இலங்கை ரொம்பக்கிட்டம்தானே!

என்றும் அன்புடன்,
துளசி.

குமரேஸ் May 06, 2005 1:14 pm  

சிங்களவர்கள் தங்களுக்கு வசதியாக இலங்கையின் வரலாற்றினை மாற்றி எழுதி வைத்துள்ளார்கள்
என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்தானே. தென்னிந்தியாவில் இருந்து குதிரை விற்பதற்காக கண்டி சென்ற சேனனும் குத்திக்கனும், அங்கிருந்த அரசனைத் துரத்திவிட்டு அரசாண்ட கதைகூட பிரித்தானிய ஆட்சிக்காலத்திற்கு முற்பட்டதுதான்.

விஜயனின் வரவுக்கு முன்னமிருந்தே வாழ்ந்து வந்த நாகர்களின் வழி வந்தவரே தமிழர், அதனால்தான் யாழ்பாணத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் தொடர்புகள் மிகவும் நெருக்கமாக இருந்தன.

இந்த சுட்டிகளில் போய்ப்பாருங்கோ
http://www.rediff.com/news/2002/nov/21spec.htm
http://www.zealand.org.nz/history.htm

`மழை` ஷ்ரேயா(Shreya) May 06, 2005 1:58 pm  

gondwana land = குமரிக்கண்டம். நிறைய வாசித்திருக்கிறேன் இது பற்றி. (முருகன் வந்து சூரனோட சண்டை பிடித்ததும் இங்கே தானே!! :o)

நியுஸிலாந்தில் ஒரு பழைய மணியைக் கண்டு பிடித்தார்கள் - அதிலே தமிழ் எழுத்துக்கள் இருந்தனவாம். அதற்கான சுட்டி: http://www.tepapa.govt.nz/TePapa/English/CollectionsAndResearch/FAQs/History.htm#tamilbell

இவ்விடயம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. நியுஸிலாந்துக்காரர்கள் அருங்காட்சியத்தில் கேட்டுப்பாருங்கள்.
500 வருடங்களுக்கு முந்தியது என்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு நப்பாசை..ஒருவேளை கடாரம் தாண்டியும் ராஜ ராஜ சோழன் வந்து போன அடையாளமோ என்று! :o)

Anonymous May 07, 2005 4:44 pm  

இந்தியாவில் கூட வந்தேறிக்குடிகள் என்று ஒரு இனத்தைச் சொல்லும் ஆதாரமற்ற தியரி ஒன்று இருக்கிறது. போதுமான ஆதாரமற்று இலக்கியங்கள் வாயிலாக மட்டும் "அனுமானிக்கப்படும்" உண்மைகள் குழப்பத்தையே கொடுக்கும்.

எனவே, இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகள் என்பதை சுவையான ஒரு அனுமானமாக மட்டும் ரசிக்கவும். அதையெல்லாம் போய் சீரியஸா எடுத்துக்காதீங்க. :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) May 07, 2005 5:54 pm  

க்ருபா,

வந்ததுதான் வந்த, அந்த நியூசீலாந்து மணியப் பத்தி சொல்லி இருக்கலாம்தானே?

ஷ்ரேயா & துளசிக்கா,

அந்த மணி பற்றி ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் இணையத்தில் கதை வந்தது. அகத்தியர் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜேபி ஐயா, விரிவான விளக்கத்தை அகத்தியர் குழுவிலும் பொன்னியின் செல்வன் குழுவிலும் மரத்தடியிலும் கொடுத்தார்.

சுருக்கமாக நினைவில் இருப்பதை வைத்துக்கொண்டு (இங்க நேரம் இப்ப அதிகாலை 3.30) சொல்கிறேன்.

இந்த மணிக்கு மிஞ்சி மிஞ்சிப்போனா நூறு நூற்றைம்பது வயதுதான் இருக்குமாம். தமிழகத்தில் இருந்து வணிகம் செய்யப்போன கப்பலின் மணி அது. அகத்தியர் குழுமத்தில் தேட வேண்டும். 2002 திசைகள் இதழொன்றிலும் இதைப்பற்றிய விஷயங்கள் இருக்கும். திசைகளில் வந்த ஆண்டு+மாதம் வைத்துக்கொண்டு அகத்தியரில் தேடலாம்.

====

ஷ்ரேயா,

TSCII எழுத்துருவைக் கொண்டு நீங்களே 'அகத்தியர்' குழுமத்தில் ஜேபி அய்யாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். ஜேபி அய்யா அல்லது இராம.கி. ஐயா போன்றவர்கள் பதில் சொல்வார்கள். நான் ஏதும் சொல்லிக் குட்டையைக் குழப்புவதாக இல்லை. ;)

-மதி

`மழை` ஷ்ரேயா(Shreya) May 11, 2005 12:59 pm  

இப்பிடி ஆசையில் மண்ணை அள்ளிப்போடலாமா மதி? :o(

நீங்க சொன்ன பிறகு இணையத்தில் தேடிப்பார்த்தேன்..சரிதான்..100 - 150 வருஷம் தானாம்!
என்னை மாதிரி ஆட்கள் இருக்கிற வரைக்கும் ராஜ ராஜ சோழன் நியுஸிலாந்துக்கு மட்டுமில்ல, கனடாவுக்கும் கப்பல்ல போயிருப்பான்(ர்)! ;o)

rameswaramrafi May 21, 2008 9:11 pm  

நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தது தமிழர்களா?

-ஆய்வுக் கட்டுரை:எச்.எஸ். முகம்மது ராஃபி
நியூஸிலாந்து அருங்காட்சியகம் கப்பல் மணி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து பல நாடுகளில் வியாபாரத்தில் கோலொச்சியவர்கள் தமிழர்கள். முற்கால இந்தியாவில் கப்பலோட்டும் கலை தமிழருக்கே உரித்தாயிருந்தது என்றால் அது மிகையில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல்களைக் கட்டி கடலிலே செலுத்தியதை ஹரப்பா, மொகதஞ்சரோ நாகரிகங்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற் படைகளை உடையவராயிருந்தனர். இராஜராஜசோழன் லட்சக்கணக்கான தமிழ் வீரர்களை கப்பலில் கொண்டு சென்று இலங்கை, மலாய் முதலியத் தீவுகளை வென்றதாக வரலாறு கூறுகின்றது. மேலும் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்திற்கு முத்திரைப் பதிக்கும் விதமாக அமைந்துள்ளது நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் தமிழ் மணி. நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் 'கப்பல்மணி' தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இதுக் கருதப் படுகின்றது. இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் 'முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி' என்று மணயைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணியில் காணப்படும் எழுத்தைக் கொண்டு இது 17ம் அல்லது 18ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். முற்றிலும் வெண்கலத்தினால் ஆன இம்மணியை சுற்றிலும் 23 தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது. 1836ஆம் ஆண்டில் இந்த மணியை வில்லியம் கோல்ன்ஸோ கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதில் உருளைக் கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தனர் நியூஸிலாந்து மௌரி இனப் பழங்குடியினர். வில்லியம் கோல்ன்ஸோ மௌரி இனப் பழங்குடியினரிடம் ஒரு இரும்பிலான சமையல் பாத்திரத்திற்கு இந்த மணியை பண்டம் மாற்று செய்து கொண்டார். மௌரி இனப் பழங்குடியினரோ இந்த மணியை பெரும் சூறாவளியில் கரையடைந்து, ஒரு பெரிய மரத்தின் வேர்களால் சூழப்பட்ட நிலையில் இதனைக் கண்டனர். பாதிரியார் மணியைக் காண்பதற்கு முன்னர் மௌரிகள் இதனை எத்தனை காலம் சமையல் பாத்திரமாக உபயோகித்தார்கள் என்றோ, மௌரிகள் எந்த ஆண்டில் கண்டெடுத்தனர் என்றோ குறிப்புகளும் இல்லை. இறுதியாக பாதிரியாரின் உயிலின் பிரகாரம் இந்த மணி நியூஸிலாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தல்
15-ம் நூற்றாண்டின் வாக்கிலேயே தமிழர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு சென்று வாணிபம் செய்திருக்கலாம் என்று நம்மப் படுகின்றது. ஐரோப்பியக் கண்டத்து கடல் ஆய்வாளர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பல்வேறு புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்த பிறகு வேறு புதிய நாடுகளை கண்டுபிடிக்க பசிபிக் பெருங்கடலில் பல ஆண்டுகள் வெள்ளையர் சலித்தெடுத்தனர். இறுதியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் எனும் கடல் ஆய்வாளர். 1769-ம் ஆண்டில் நியூஸிலாந்தை அவர்க் கண்டுபிடித்தார். நியூஸிலாந்து நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் தமிழர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட கப்பல் மணி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்றால் அது ஆச்சர்யமான விஷயமில்லை தான். ஆனால் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வெள்ளையர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தடம் பதித்தது மட்டுமின்றி வாணிபமும் செய்ததற்கும் இந்த கப்பல் மணி ஒன்றே போதுமான ஆதாரமாகவும் இதனைக் கருதலாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மணிக்கு தமிழகத்தில் மூன்று ஊரார்கள் உரிமை கோருகின்றனர் இதோ கீழே.
வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்கள் வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம். பெயருக்கு ஏற்றார் போல் இவ்வூர்வாசிகள் கப்பல் வணிகராகவும், கப்பல் உரிமையாளராகவும், கடல் சார்ந்த தொழில் வித்தகர்களாவும் விளங்கினர். சேது நாட்டின் சிறந்த துறைமுகமாக வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் திகழ்ந்தது என்றால் அது மிகைன்று.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையினிலும் இவர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்ட காலங்கள் பொற்காலம் என்றே வர்ணிக்கலாம்.
நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப் பட்ட மணி எங்களுக்குச் சொந்தமானது என ஒ.மு.சே.மு.உம்முசல்மாபீவி மற்றும் அவரின் சகோதரர் ஒ.மு.சே.மு.செய்யது முகையதீன் ஆகியோர்; எங்கள் பாட்டனார் சேகப்பா அவர்களின் தாத்தாவே வக்காஸ் ஆவார். அவருக்கு சில கப்பல்களை வைத்திருந்ததாவும் அவற்றில் ஒரு கப்பலின் மணியாக இது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்து வாசிகள் வக்காஸ் எனும் பெயரை காலகாலமாக தங்களின் குழந்தைகளுக்கு இன்று வரை சூட்டிவருகின்றனர். மேலும் வக்காஸ் எனும் பெயர் தமிழகத்தில் வேறு எந்த ஊர்களிலும் புலக்கமும் கிடையாது. இன்று வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனோர் முகையதீன் வக்காஸ் அவர்களின் வழியில் வந்தவர்களே என்கின்றக் காரணத்தினாலும் இந்த மணியின் உரிமையை இவர்கள் பெற முனைவதாகத் தெரிகின்றது. வக்காஸிற்குப் பின்னர் அவரது மகன் முகையதீன் மீராசா ஷையாரின் பேரன் சேகப்பா, சேகப்பாவின் மகன்கள் ஐவரும் கப்பல் வணிகர்களாகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள்.
ஹபீபு முகம்மது அரசர்
கீழக்கரையைச் சேர்ந்த ஹபீபு முகம்மது அரசர் மரைக்காயர் பட்டிணத்தை நிறுவினார். 1822ஆம் ஆண்டு மதுரை ஜில்லா கலேக்டர் மௌதா ரொசுபீத்தா என்பவர் ஹபீபு முகம்மது அரசரின் சகோதரர் அப்துல் காதர் சாகிபு மரைக்காயர் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த ஆவணம் ஒன்றின் மூலம் இது நிறுபணமாகின்றது. முதலில் ஹபீபு மம்மது புரம் என்று அழைக்கப் பட்டாலும் பின்னர் மருவி மரைக்காயர் பட்டிணம் என்றானது. இந்த மணி-கீழக்கரை வள்ளல் ஹபீபு மரைக்காயரின் நாப்பது கப்பல்களின் ஒன்றின் மணி எனவும் கீழக்கரை வாசிகள் கருதுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்தை ஹபீபு முகம்மது அரசர் உருவாக்கினாலும் கீழக்கரையினிலேயெ அவர் வாழ்ந்து மறைந்ததால் இந்த மணியை கீழக்கரைவாசிகள் உரிமை கோருகின்றனர்.
மேலும் கீழக்கரை சேதுநாட்டின் முதன்மை துறைமுகமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.ஆயினும் பல இஸ்லாமிய எழுத்தாளர்கள் இந்த மணி ஹபிப் அரசருக்குச் சொந்தமானது என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தாலும் போதிய ஆதாரங்களை இதற்காக அவர்கள் மேற்கொள் காட்டவில்லை.முகையதீன் பக்ஸ் சமீபகால ஆய்வுகளில் பழவேற்காட்டில் மீர் முகம்மது ஷபீ மற்றும் ஜேன் டி மட்டு டி அக்வாரரெஸ் என்னும் டச்சுக்காரரும் இணைந்து கூட்டாக ஒரு கப்பலை நடத்தி வந்தனர். அந்தக் கப்பலுக்கு முகையதீன் பக்ஸ் என்று பெயர். இந்த கப்பல் பழவேற்காடு, நாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலிருந்து தூரகிழக்கு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த மணி இது போன்ற கப்பலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கின்றார் பிரபல தொல்லியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளருமான முனைவர்: ஜெ.ராஜாமுகம்மது (இவர் முன்னாள் புதுக்கோட்டை அருங்காட்சியகத் தலைவரும்; கூட).
இலங்கைத் தமிழர்களின் மணியா!
இந்த மூன்று ஊரார்களின் உரிமை போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும் என்சைக்ளோபீடியா ஆஃப் நியூஸிலாந்தில் (நுnஉலடழிநனயை ழக நெற ணநயடயனெ ) இந்த மணியை ஸ்ரீலங்கா நாட்டின் தமிழ்மணி என்று கூறப்படடிருந்தாலும் அதனை மெய்பிக்க எவ்விதமான சான்றுகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கவில்லை

பெட்டகம்