மன்னிப்பும் வேறு சிலவும்

விளையாட்டு சரியான கஷ்டமாகி விட்டது போல இருக்கு. ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகினதில வழக்குப்போடாத குறையா துளசி முறைப்பாடு! இன்னும் வேற யாருக்கும் சித்தம்/பித்தம் கலங்கியிருந்தா என்னை மன்னியுங்க! (உண்மையிலேயே அவ்வ்வ்வளவு கஷ்டமா இருக்கா?)வாசிக்கிற ஆக்களுக்கு விளையாட்டா இருக்கட்டும் என்று உலக அதிசயங்களை முக்கியமானவையா வைச்சுக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்கிறதுக்கு வழியாக இன்னும் கொஞ்சக் கேள்விகளையும் சேர்த்து வைச்சன். இப்ப விடைகளுக்கு வழி சொல்றேன். அந்தப்பதிவில போய் right click பண்ணி "Select All" என்று தேர்ந்தெடுங்கோ..விடை தெரியும்! ஆனா அதுக்கு முதல் எனக்குப் பதில் சொல்லீற்றுப் போங்க...

என்ட பெயர், புனை பெயர் என்டு தெரிஞ்சிருக்கும்(இல்லாட்டி இப்ப தெரிஞ்சு கொள்ளுங்க). ஏன் என்ட சொந்தப் பெயரில எழுதிறதில்லை?

வலைப்பதியத் தொடங்கிய போது, நான் என்னத்தையென்றாலும் உளறி வைக்கலாம்... சொந்தப்பெயரில இல்லாத வரைக்கும் என்றொரு நினைப்பு இருந்தது. ஆனா உண்மையான காரணம் அதுவல்ல என்று எனக்கே நல்லாத் தெரியும். என்ட பெயர் இல்லாத இடமில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவாங்களே "wornout" (தமிழ்ல என்ன?) என்று, அதுதான் என்னுடைய பெயரின் கதி. ஆனா, அம்மாக்கு கொஞ்ச நாள் எண்சாத்திரத்தில நம்பிக்கை வந்த படியால், என் பெயரின் ஆங்கில ஸ்பெலிங்கை மாத்தி கொஞ்சம் வித்தியாசம் ஆக்கப்பட்டது. அதாலதான் கொஞ்ச வித்தியாசமாவது தெரியும். சொன்னா நம்புவீங்களோ தெரியாது.. எனக்குத் தெரிஞ்சு, எப்போதும் என் வகுப்பில் என் பெயர் கொண்ட இன்னொருத்தி இருப்பா. என் பெயருடையவர்கள் 1..2..3 (பொறுங்க..எண்ணிப்பாத்திட்டு வாறன்)...கிட்டத்தட்ட 20 பேரைத் தெரியும். அப்படியொரு wornout பெயர் தான் என்னுடையது! அதனாலே தான் எங்கேயோ எப்பவோ ஷ்ரேயா என்று ஒரு முகமூடியைத் தூக்கி மாட்டினேன்.

இப்ப எதுக்கு இவ்வளவும் என்று கேட்கிறீங்களா...சொல்றன்..

இதுவரை இந்த ஷ்ரேயா என்கிற பெயர் எழுத்தில தான் என்னை குறிக்கக் கண்டிருக்கிறன். அதாவது யாராவது அஞ்சல் போட்டா "ஹாய் ஷ்ரேயா" அல்லது பின்னுட்டத்தில "சித்தம் கலங்கிடிச்சி ஷ்ரேயா". நேற்று, ஒருவர் தொலைபேசியில் அழைத்து "ஷ்ரேயா(வா)?" என்றார். எனக்கு ஒருகணம் "யாரைக் கேட்கிறார்" என்றுதான் தோன்றியது. பிறகுதான் 'அடே..நான்தான் ஷ்ரேயா!' என்று உறைத்தது. எனக்கு ஒரு சந்தேகம் (ஐயோ..ஓடாதீங்க), இவ்வளவு நாளாக (கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக) பாவிக்கிற ஒரு பெயர், என்னுடையதுதான் என்று ஏன் மனதில் பதியவில்லை?

இன்னொன்றும் சொல்ல வேண்டும், இதுக்கும், மேலே சொன்னதுக்கும் சம்பந்தமில்லை. யாருடனாவது உரையாடும் போது (பேச்சு & எழுத்து) என்னையறியாமலே (95%) அல்லது உணர்ந்தே(5%) அவர்களைப்போல எனது கதை பேச்சு அமைந்து விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு ஒஸியுடன் கதைத்தால், அவுஸ்திரேலிய accentஉடன் ஆங்கிலம் வருகிறது. மலேசிய நண்பியொடு அவளைப் போன்று (முழுக்க இல்லாது விடினும் 50%) accentம் வருது. யாழ்ப்பாணத்தவர் என்றால் முழுக்க அந்தத் தமிழும், மட்டக்களப்பென்றால் அந்தத் தமிழும், இந்தியரென்றால் அவர் தமிழும் என் வாயிலிருந்து(இப்ப 'விளங்குதா' க்ருபா?) வருகிறது. (இப்போது எழுத்திலும்). இது ஏன்? சில பல வேளைகளில் உரையாடலின் முடிவிலேயே அல்லது அதைப்பற்றி மீள நினைத்துப் பார்க்கையிலேயே இப்படிச் செய்கிறேன் என உறைக்கும்.

ஏன் இப்படிச் செய்கிறேன்? நான் நானாக இருக்க விருப்பப்படவில்லையா?? யாராவது சொல்லுங்களேன்.

7 படகுகள் :

துளசி கோபால் June 24, 2005 11:45 am  

வலைபதிவுலக மக்களே!

சொல்லுங்க 'பொதுமன்னிப்பு' கொடுத்துறலாமான்னு?

அன்புடன்,
துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 12:12 pm  

நன்றி..பொதுமன்னிப்புக்கு ஏற்பாடு செய்யுறதுக்கு. :o)

இந்தப்பதிவிலுள்ள என் கேள்விகளுக்கு பதில்? (துளசி..கேள்வி என்றதுமே ஏன் ஓடுறீங்க?) ;o)

Unknown June 24, 2005 2:46 pm  

ஷ்ரேயா., யோசிச்சு கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்கள். சில கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது அவ்வள்வுதான்., தொடர்ந்து போடுங்கள் புதிர்களை. அட நானும் கூட அப்படித்தான் ஷ்ரேயா., திருச்சி கல்லூரியில் படிக்கும் போதும்., இப்போது அமெரிக்காவில் இருக்கும் போதும் பேசுகின்ற வார்த்தைகள் வேறு., என் மண்ணில் இருக்கும்போது அப்படியே கிராமத்து மொழி வந்து விடும். சில அளப்பறை கேஸூ கள்ட அதாவது தான் தான் உலகத்துலயே புத்திசாலி மாதிரி அள்ளிவிடுங்கல்ல? அதுக கிட்டே பேசும் போது அதுகள் மாதியே பேச எங்கிருந்தோ வார்த்தைகள் கிடைத்துவிடும்., அதேபோல் ஒருவரைச் சந்தித்து 10 வருடம் கழித்து மீண்டும் சந்தித்தாலும் அவருடன் முன்பு உரையாடியே பாணியே டக் கென்று வந்துவிடும். இது நம்மையறியாமலும்., சில சமயம் வேண்டுமென்றேவும் நாம் செய்வது. வருத்தப் பட வேண்டாம். ஏதாவது ஓரிடத்தில் எல்லோரும் நாமாக நிச்சயம் இருப்போம். புரிந்ததா?.,

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 3:11 pm  

அப்பாடா! இன்னொருத்தரும் இந்த மாதிரி அனுபவப்பட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், நான்(ம்) செய்வது இயல்பான செயலா என்கிற சந்தேகம் வருகிறது.

//ஏதாவது ஓரிடத்தில் எல்லோரும் நாமாக நிச்சயம் இருப்போம்//
உண்மை. ஆறுதல் தரும் விதயமும் அதுதானே!

`மழை` ஷ்ரேயா(Shreya) June 24, 2005 5:13 pm  

என்னுடைய பெயர் wornout என்று சொன்னேன் தானே...இப்பத்தான் கவனிச்சேன் - வலைப்பதிவர்ல ஒரு புதியவரும் என் (உண்மைப்)பெயரில்!!!

எங்கே போனாலும் தப்பேலாது போல இருக்கு! :o(

கலை July 01, 2005 8:52 pm  

உங்க விளையாட்டுப் பார்த்தேன். கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் போலே இருந்துது. அதுக்கு இப்ப பொறுமையும், நேரமும் இல்லை என்றபடியால் (அது இருந்தால் மட்டும் பெருசா விடையை கண்டு பிடிச்சு விடுவீங்களோ என்ற குரல் கேட்குது) அடுத்து என்ன சொல்லி இருக்கிறீங்க என்று பார்த்தேன்.

//நான் நானாக இருக்க விருப்பப்படவில்லையா?//
இந்த கேள்வி பற்றி யோசித்தேன். எல்லாவற்றையும், அல்லது ஏதோ சிலவற்றையாவது, எல்லோரிடமும் சொல்ல முடியாத பிரச்சனை எல்லொருக்குமே இருக்கும் (என்ன கொஞ்சம் குழப்புகிறேனோ?). அப்படி இருக்கும் விடயங்களைக் கூட சொல்லி விடலாமே என்ற ஒரு நினைப்பிலும் வேறு பெயர் போட்டுக் கொள்ளலாம். (அப்படி போட்ட பின்னர் சிலவேளை அப்படி எதையுமே எழுத முடியாமல் போவதும், அப்படி எழுத எதுவுமே இல்லாமல் போவதும் வேறு விடயம்). நானும் அப்படி வேறொரு பெயரில் ஒரு blog போட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், ஹி ஹி.

அதனால் இப்படி வேறு பெயரில் எழுதுவது இயல்பான ஒரு விஷயம்தான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 01, 2005 11:31 pm  

குழப்பிறது என்ற முடிவோடதான் வந்திருக்கிறீங்க போல? ;o)

பெட்டகம்