பேரைச் சொல்லடா!


"ஹாய்"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், எங்கேயோ பார்த்த முகமமொன்று மெலிதாய் புன்னகை ஒன்றைச் சுமந்து கொண்டு. ("ம்ம்..யாரிது??) "ஹாய்"

"எப்பிடி இருக்கிறீங்க"
(அட..தமிழ்..) "நல்லா இருக்கிறன். நீங்க?"
"ஓக்கே."

வழமையான வேலைக்குப் போறீங்களா, எங்கே இருக்கிறீங்க என்கிற பரஸ்பர(இதற்குத் தமிழ் என்ன?) விசாரணைகள். (டேய்.. நீ என்னோட படிச்சனி என்டு தெரியுது.. பேரைச் சொல்லன்டா!!)

"உங்கட ஃபிரெண்ட்..ம்ம்..மாலினி எப்பிடி இருக்கிறா? இப்ப எங்க ஆள்?"
"அவ இப்ப ரஷ்யாவில படிக்கிறா."
"மலேசியாவிலதானே முதல் படிச்சவ"
"ஓம்.அது முடிச்சு இப்ப ரஷ்யாவில."
"அடுத்த தரம் கதைக்கேக்குள்ள/மெயில் போடேக்குள்ள நான் கேட்ட என்டு சொல்லுங்கோ."
(ஆரோட கதைச்சுக் கொண்டிருக்கிறனென்டு தெரியாம நான் முழிக்கிறன்..அவக்கு என்னண்டு விளங்கப்படுத்திறது!!) "ஓ! கட்டாயம்". (ட்ரெயினால இறங்க முன்னம் பேர் சொல்லுவாய் தானே?)

இது நடந்தது சில மாதங்களிருக்கும். அவனைத் தொடர்ந்து காண்பதுவும், இருவருக்கும் பொதுவான/தெரிந்த நட்புகளைப் பற்றிய செய்திப் பரிமாற்றமுமாயும் தொடரும் உரையாடல்கள். (அடேய்..பேரைச் சொல்லித் துலையனடா..). கதைத்ததிலிருந்து ஊகித்ததில் அவன் படித்த பள்ளிக்கூடத்தின் இணையத்தளம் போய் உயர்தரப் பரீட்சை எடுத்த வருடத்தின் படி தேடி, நிழற்படங்களைக் கூர்ந்து பார்த்தும் எந்தப் பயனுமில்லை.

திரும்பவும் ஹாய்கள் & நட்பு வட்டங்கள் பற்றிய பேச்சு. நானும் ஏதோ நினைப்பில் இரண்டு குமார்களையும் (குமர்கள் அல்ல!) இன்னுமொருத்தனையும் ஞாபகப்படுத்திக் கொண்டு, அந்த மூவரில் ஒருவன்தான் இவன் என்று தீர்மானித்தேன். திருவிழா நேரத்தில் ஏதோ ஒரு குமார் என்னோட வந்து கதைத்தானே.. முகம் மறந்து போச்சே!! சரி, இனிமேல் process of elimination தான்!

குமார்1 என்று எடுத்துக்கொண்டேன் அடுத்த முறை காணும் போது. பேசுகையில் சொன்னான் குமார்1 வருகிற மாசி மாதம் திருமண்ம் செய்து கொள்ளப்போகிறான் என்று. (அடப்பாவி, அது நீயில்லையா!)

பிறகு கதைத்த சில சந்தர்ப்பங்களில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. (சந்தித்த அன்று முழுக்க.. " பேரைச் சொல்லி அறிமுகம் செய்கிற பழக்கமில்லையா உனக்கு" என்று திட்டித் தீர்ப்பதுதான்!! முகம் மட்டும், "என்னைப் பார்த்திருக்கிறாய்.. எங்கெயென்று சொல்லு" என்று வேதாளமாய் கேள்வி கேட்கும்.)

நேற்றும் அதே "ஹாய்". சரி இன்டைக்கு உன் பெயர் அறியாமல் விடுவதில்லை. கொஞ்ச நேரம் பேசிய பின், மாலினியின் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு, "உம்மட ஃபோன் நம்பரைப் போட்டுத்தாரும். அனுப்பிறன் என்று செல்லிடப்பேசியைக் கொடுதுவிட்டு பெயர் தெரிந்துவிடும் என சந்தோசத்தில் மிதந்தால், "இந்தாங்கோ" என்று நீட்டியதில் இருந்தது அவனது இலக்கம் மட்டுமே!!! (ஐயோ!!!)

மாலினியிடம் பேசுகையில் "பெயர் தெரியாமல் பேசும்" கதை சொன்னால், ஜோக் ஒஃப் த இயர் என்று சிரிக்கிறாள். பிறகு அவளுடன் சேர்ந்து யோசித்தும் பிடிபடவில்லை. காலையிலே நடந்து போகும் போது மின்னலாய் பொறிதட்டியது. வீதியிலே துள்ளாத குறை. கடந்து போன எவரும் முகத்தில் என் சிரிப்பைக் கண்டு ஒரு மாதிரித்தான் பார்த்துப் போயிருப்பர். பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் இவ்வளவு நாளும் என்டு அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்றொரு யோசனை வேறு வந்து தொலைத்தது.

இன்றைக்கும் கண்டேன். ஆனாலும் பெயர் சொல்லி அவனை விளிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டுமேயென அவன் மின்னஞ்சலைக் கேட்டேன்.

"என்ட பெயர் தெரியுந்தானே?" (அப்ப நான் பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் என்டது உனக்குத் தெரிஞ்சிருக்குமோ என்டு யோசிச்சது சரிதானா!! தெரியாம முழிக்கிறனென்டு கண்டா பேரைச் சொல்றதுதானே!!)
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "ஓமெண்டுதான் நினைக்கிறன்" "என்ன ஸ்பெலிங் பாவிக்கிறனீங்க? Gயா Kயா..."

வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது!


பி.கு: கணவரும் தோழியும் சொன்னமாதிரி "பெயர் தெரியாமல்தான் இதுவரைக்கும் உன்னுடன் கதைத்தேன்" என்று ஒத்துக்கொண்டு அவனிடமே பெயரைக் கேட்காமலிருந்தது நல்லதென்றே தோன்றுகிறது. எல்லாம் நன்மைக்கே!?

21 படகுகள் :

துளசி கோபால் January 04, 2006 6:38 pm  

பேரை மறந்த ' ஈ'

அதுசரி. இதை முந்தீயே படிச்ச மாதிரி ஒரு நினைவு. மீள்பதிவா?

`மழை` ஷ்ரேயா(Shreya) January 04, 2006 6:43 pm  

இல்லையே...ஒருவேளை தனிமயில்லே சொன்னேனோ?

ஈ தன் பெயரைத்தானே மறந்திச்சு!! இது என் ஃபிரெண்ட் பெயரை நான் மறந்த கதை!

க்ருபா January 05, 2006 3:59 am  

"டேய், குமார். நான்தான் ஜோதி. நினைவிருக்கா?"

"என் பேரை தப்பா சொல்றீங்களே. நான் குமார் இல்லை. கணேஷ்."

"என் கூட ஜோதி இல்லை. ஷ்ரேயா."

SnackDragon January 05, 2006 5:56 am  

:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) January 05, 2006 11:11 am  

சதீஷ் - அவன் பெயர் கணேஷ் இல்ல.

க்ருபா அண்ணாத்தே - "வேண்டியவங்க" பேர்கள இப்பிடித்தான் நீங்க தெரிஞ்சு கொள்றதா? ;O)

ஒரே சிரிப்பாப் போச்சு என் நிலமை என்கிறீர்களா கார்த்திக்ராமாஸ்? :O)

வசந்தன்(Vasanthan) January 05, 2006 1:39 pm  

"பேரைச் சொல்லடி" எண்டு நானொரு பதிவு போடப்போறன்.
அதுசரி, நீங்களும் உங்கட பேரை இன்னும் சொல்லவே இல்லையே?

`மழை` ஷ்ரேயா(Shreya) January 05, 2006 1:58 pm  

ஆர் உங்களுக்குப் பேரைச் சொல்லாமப் போனது? க்ருபா சொன்ன வழியைப் பயன்படுத்திப் பாருங்கோ!! :O)

என்ட பெயரைக் கண்டுபிடிக்கிறது கஷ்டமில்ல.. தமிழர் சிங்களவர் என்டு பாகுபாடில்லாம என்ட பெயர் உள்ள நிறையப் பெண்கள் இருக்கிறாங்க. நிறையவே புழக்கத்திலுள்ள பெயர்தான். :O(

என்னட்டக் கேட்கிறீங்களே..உங்களுக்கு வைச்சிருக்கிற புனிதற்ற பேர எப்ப நீங்க சொல்லுவீங்க?

வசந்தன்(Vasanthan) January 05, 2006 10:11 pm  

//என்னட்டக் கேட்கிறீங்களே..உங்களுக்கு வைச்சிருக்கிற புனிதற்ற பேர எப்ப நீங்க சொல்லுவீங்க?//


நான் புனிதரா வந்தப் பிறகு.

க்ருபா January 06, 2006 3:06 am  

"வேண்டியவங்க" பேர் கண்டுபிடிக்க வேற ஒரு வழியும் இருக்கு. இணையத்தில் இன்னும் நிறைய பேச்சுலர்கள் உலவி வருவதால், அவசியம் பிறிதொரு நாளில் மேல்Kindஇல் வெளியிடப் பார்க்கிறேன்.

"நிறையவே புழக்கத்திலுள்ள பெயர்தான்" பதிவுல யாரோடயோ செல்பேசில பேசினதப் பத்தி சொல்லி இருந்தீங்களே, அப்பறம் யாரோடன்னே சொல்லலை? அவனுக்கு விரைவில் குருபலன் கூடிவர வாழ்த்துகள். ;-)

இளங்கோ-டிசே January 06, 2006 7:14 am  

//"பேரைச் சொல்லடி" எண்டு நானொரு பதிவு போடப்போறன்.//
வசந்தன் அதை முதலில் செய்து ஆண்குலத்தின்ரை மானத்தை காப்பாற்றும் :-). ஒழுங்காய் மரியாதையாய்ப் பேசி/ எழுதிக்கொண்டுவந்த ஷ்ரேயா இப்படி எழுதத்தொடங்கியதற்கு சயந்தன்தான் காரணமாயிருக்கும். சிங்களத்திலும், தமிழிலும் அதிகம் தெரிந்த பெயர் என்டால், எனக்குத் தெரிந்த ஒரேயொரு சொல், கருணாகர மாத்தையா (என்னவென்டால் ஈழத்துக்கு தொலைபேசி எடுக்கும்போது இதை அடிக்கடி ஒரு தொலைபேசிப் பெண் சொல்லக்கேட்கிறனான்). அதுவா உங்கடை உண்மைப் பெயர் ஷ்ரேயா :-)?

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2006 11:45 am  

ஐயோ வசந்தன்!! உங்களைப் புனிதராக்கி, உண்மையான புனிதர்களை மனவருத்தப்படுத்தி.. எதுக்குத் தேவையில்லாத வேலைகளைச் செய்ய!! பெயர் தெரியாமலே இருந்திட்டுப் போகட்டும். :OP

"வந்தப் பிறகு" என்டு எழுதியிருக்கிறது சரியா? ஒற்று மிகுமா? "வந்த பிறகு" என்டால் பிழையா?

க்ருபா - நீங்க என்னத்தைச் சொல்றீங்க என்டு நினைக்கிறதைத்தான் நீங்களும் சொல்லியிருந்தீங்க என்டா - விரைவில் ஆகக்கடவது என்று ஆசிர்வதிக்கிறேன்.

எதுக்கும் ஒருக்கா துளசியின் பதிவையும் வாசிச்சிடுங்க! பிறகு பயன்படும்!! ;O)

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2006 11:48 am  
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2006 11:50 am  

சயந்தனை வம்புக்கிழுக்காட்டி ஒருத்தருக்கும் (சிலசமயங்களில் என்னையும் சேர்த்து) நிம்மதியில்லைப் போல!! :O)

இந்த விளையாட்டுக்கு நான் வரல்ல டிசே. (ஆனா என்ட பெயர் நீங்க சொன்னதில்ல).
ஒருவேளை உங்களிட்ட அடிக்கடி நீங்கள் சுழற்றிய இக்கத்தைச் சரி பார்க்கச் சொல்லிச் சொல்லுறவவின்டையோ, கருணாகரப் பசுவை அமத்தச் சொல்லுறவவின்டையோ பெயரா இருக்கலாம்! ;O)

கலை January 08, 2006 12:36 am  

எப்படியோ கடைசியில் பெயரை கண்டு பிடித்த பெருமை உங்களையே சார்ந்து விட்டதாக்கும். :)

Anonymous January 08, 2006 2:23 am  

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீகள்!!

சரவ்.

`மழை` ஷ்ரேயா(Shreya) January 09, 2006 9:04 am  

கலை - அதே!! அதே!! :O)

நன்றி சரவ்.

சினேகிதி January 09, 2006 4:04 pm  

Shreya??Karthika va ungada name?

சினேகிதி January 09, 2006 4:04 pm  

Shreya??Karthika va ungada name?

`மழை` ஷ்ரேயா(Shreya) January 09, 2006 5:07 pm  

//Shreya??Karthika va ungada name?//

இல்லை. neengga unggada pazaiya mails check paNNinaath theriya varum..

சினேகிதி January 11, 2006 4:37 pm  

ohhh kandu pidicheten..anal appidi ondum nalla malincha pear illa athu :) en 2 cousins ku iruku :)ammanta pear nalla pear.

`மழை` ஷ்ரேயா(Shreya) January 12, 2006 9:28 am  

யாருடைய அம்மாட பெயர்?

உங்கட கசின் ரெண்டு பேருக்கே என்ட இருக்கு. இதில மலிஞ்ச பெயரில்ல என்டுறீங்களே?

பெட்டகம்