01 - வரம்

முக்கியமான ஒராள் சொன்னதின் படி கீழுள்ள disclaimer போட்டு ஆரம்பிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer:- பின்வருவது, கதை சொல்வதில் எழுதுவதில் செய்து முடித்த முதல் முயற்சி.
------------------------------------------------------------------------------------------------------------------------

காலம்: ஏதோ ஒர் காலம்..
இடம்: கிளிமஞ்சாரோ மலை உச்சி.

எல்லாக் கடவுளரின் வீடும் அங்கேதான். இதுவரைக்கும் மக்காவும், ஜெருசலேமும் கைலாயமும்தான் புத்தகயாவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஒரே களேபரமாயிருக்கிறது. சிவனையும் விஷ்ணுவையும் காணோம். எங்கேயென்று தெரியாமல் பத்தினிப் பெண்களின் இலக்கணப்படி பிலாக்கணம் பாடி மூக்கைச் சிந்துகிறார்கள் பார்வதியும் இலக்குமியும். அவர்களுக்கு மரியாளும் சரஸ்வதியும் ஆறுதல் சொல்ல, அல்லாவும் தாடியைத் தடவினபடி யேசுவும் மற்றையவர்களோடு ஆலோசிக்கிறார்கள். சித்தார்த்தன் முருகனிடம் மயில் மணிக்கு என்ன வேகத்தில் போகும் என்று சன்னக்குரலில் விசாரிக்கிறான்.


அதே சமயத்தில், இன்னுமோரிடத்தில்...

சிவன் இப்போ கைதி. ஒருத்தர் பிடித்துக் கொண்டு போய்ப் பொதுச் சிறையில் அடைத்துவிட்டார். தொடர்ந்த காவல். ஒன்றையும் இந்த மனிதர்களுக்கு முன்னால் நின்று நினைத்துக் கொள்ள முடியவில்லை. எதிரிலிருப்பவன் மனதில் என்ன ஓடுகிறது என்று தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அதைச் செய்யலாமென்று கண்டுபிடிக்குமளவு திறனுடையவர்களாக மனிதர்களைப் படைத்ததை எண்ணி பிரம்மனின் மேல் அடக்கமுடியாத கோபம் வந்தது சிவனுக்கு. அவருக்கான காவலாளி அதை அறிந்து சிரித்துக் கொண்டான். சிவன், ஆசுவாசப் படுத்திக் கொள்ள வற்றிக் கொண்டு போகிற தண்ணீர் கொஞ்சம் தலையிலிருந்து குடித்துக் கொண்டார்.

தண்ணீர் குடிக்கையில்தான் அவருக்குக் கூடவே கைதான விஷ்ணுவின் ஞாபகம் வந்தது. "என்ன செய்கிறானோ" என்று நினைத்துக் கொண்டதுக்கு, காவலாளி, "விஷ்ணுவா, அவன் செத்துப் போய்விட்டான்! காலையில் விசாரணைக்குக் கூட்டிக் கொண்டு போக ஆள் வந்து பார்க்கையில்தான் நாங்களே தெரிந்து கொண்டோம்" என்றான். "அடப்பாவமே..இந்த மனிதர்கள் பிடித்த நாளிலிருந்து தண்ணீரோ உணவோ தரவில்லையே.. கைவரிசை காட்டிச் சாப்பாடு வரவழைத்தாலும் அதையும் பிடுங்கி விடுகிறார்கள். நானாவது தலையிலிருந்து வருவதைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.. அவனென்ன செய்வான் பாவம்!" என்று பரிதாபப்பட்டுக்கொண்டார். என்னதான் இருந்தாலும் மச்சான். அதுக்கும் மேலாக கடவுள் வியாபாரத்தில் ஒரு முக்கிய பங்காளி. அப்படிப்பட்ட விஷ்ணு செத்துப் போனானே என்று சிவனுக்குக் கண்ணீர் வந்தது.

ஏன் இதை நடக்க அனுமதித்தாய், ஏன் அதைப் படைத்தாய் என்று சரமாரியாகக் குறுக்கு விசாரணை. இருக்கிற சடைமுடியெல்லாம் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒன்றுமே பேசவில்லை. ஒன்றுமே நினைத்துக் கொள்ளாமலிருக்கவும் பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. இரவாகிற்று. மனிதர்கள் அடித்த அடிகளில் சிலது பட்டு பாம்புகளெல்லாம் உஸ்புஸ்சென்று சீற ஆரம்பித்திருந்தன. காவலாளி உறங்கி விட்டான் என்று உறுதி செய்துகொண்டு தப்பிக்கும் வழி பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார் சிவன். எதுவும் சரி வராது என்று தெரிந்தது. நினைத்துக் கொண்டதைச் செயற்படுத்த முடியாது. மனதிலிருப்பதெல்லாம் தெரிந்து விடுகிறது.

மனதிலே திடீரென ஒரு எண்ணம். இத்தனை நாட்களிலும் இல்லாமற் போன வரங்களால் படாரெனச் சரிந்திருக்கக் கூடிய கடவுள் நிறுவனப் பங்கின் விலை நிலவரம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அல்லா யேசு பிரம்மன் மூவரும் நிலையை எப்படிக் கையாளுவார்களோ என்று கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. சித்தார்த்தன் சிறுபிள்ளை, கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. வாகனம் கூட இல்லை அவனுக்கு. கடவுள் நிறுவனம் வர்த்தகக் காப்புக்காய் எடுத்த முடிவு இப்
டியொரு இக்கட்டில் உதவக்கூடுமென்று அவர் யோசித்திருக்கவில்லை. தனக்கு முன்னாலிருந்த அல்லாவிடமிருந்து தான் பொறுப்பேற்றுக் கொண்டது போல அடுத்ததாய் இயேசு பதவிக்கு வருவார் என்பதும் இவ்வளவுநாள் கட்டிக்காத்த நிறுவனம் அழியாதென்பதும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. "பிரம்மன் குட்டையை குழப்பினால்?" என்கிற சந்தேகம் எட்டிப்பார்த்து புளிக்கரைசலாய் வயிற்றை மொத்தமாய் நிரப்பிற்று. அதைப் போக்க, எப்படிக் கைதானோம் என்று நினைத்துப் பார்த்தார் சிவன். எல்லாம் இந்த தவமிருப்பதைக் கண்டதும் வரும் புல்லரிப்புத்தான் காரணம். பூரித்துப் போய் வரம் கொடுப்பதை இனி நிறுத்தவேண்டும். விளம்பரம் போனாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். உடனேயே சிரிப்பும் வந்தது. இந்தச் சிறைக்குள்ளிருந்து எப்படி வெளியில் போவது, எப்படி வரம் கொடுப்பது!! பிடித்துக் கொண்டு வந்தவனுக்கு என்ன வரம் கொடுத்தோம்..யோசிக்கலானார். ஆ! ஞாபகம் வந்து விட்டது.. சும்மா வரமா கேட்டான்.. "எப்போது நான் அழைத்தாலும், நான் திருப்பி அனுப்பும் வரை என்கூடவே வரவேண்டும். அப்படி நீர் என்னுடன் இருக்கும் போது, நாம் எங்கிருக்கிறோம் என்பது வேறு யாருக்குமே தெரியக் கூடாது" என்றெல்லவா வரம் வாங்கினான். அவன் கெட்டித்தனத்தை மெச்சிக் கொண்டார் சிவன்.

வரம் கொடுத்து மாட்டுப்படுவது இருவருக்குமே வழமைதானென்றாலும், அவருக்குப் புரியவில்லை எப்படித் தான் விழுந்த அதே வலையில், அதே நேரத்திலேயே விஷ்ணுவும் மாட்டினானென்று. உரத்து யோசித்தார். சீறியபடியே பாம்பு, "மடச்சிவனே, மனிதன் முன்னமொருமுறை சும்மா பாட நீரும் எங்கோ கற்பனையிலிருந்த படி ஆகட்டும் என்று சொன்னதை மறந்தீரோ" என்றது. சிவனுக்கு அப்பவும் புரியவில்லை. தண்ணீர் வறண்டுபோன தலையைத் தடவிய படியே யோசிக்கிறார். பாம்பே பாடிக்காட்டிற்று: "இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்". அப்படி வரம் கொடுத்ததையும், சிறைப்பிடித்தவனுக்கு கொடுத்த வரத்தில் தான் தப்பிக்க ஓட்டை வைக்காமல் போகவும் வைத்த தன் மறதியை (அல்லது, பெயர்ந்து போன அறளையை) நொந்துகொண்டார். multi tasking & mutliple desktop விளையாட்டைத் தம்மிடமே காட்டிய மனிதனை நினைத்து சிவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஏற்கெனவே அரக்கர்களுடன் போரிட்டுத் தளர்ந்திருந்த உடல். தண்ணீர் தண்ணீ ரென்று அலறினார். யாருக்கும் கேட்கவில்லை. சிவனும் செத்துப்போனார்.

7 படகுகள் :

துளசி கோபால் July 04, 2006 4:55 pm  

ஙே...............

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2006 5:07 pm  

போச்சுடா!! ஆரம்பமே "ஙே.." வா! :O(

கார்திக்வேலு July 04, 2006 5:24 pm  

good imagintaion (some very funny ideas !)
good attempt at writing comedy
Not very easy to write to comedy mostly in "passive voice"
More dialogues ..would have made it funnier.Need to loosen up the structure a bit
Story bit predictable ..but twists in dialogue would have fixed it , I guess.

When deciding to use contemporary term like "company" "shares" etc ...you could have gone all the way and given it a whole contemporary look and feel in the words and actions of the characters

கார்திக்வேலு July 04, 2006 8:09 pm  

geez ..i sound like a seasoned writer behind thick glass frames enjoying his retirement ..dont i :-)

pls read my previous comment in a suggestive tone :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2006 8:49 pm  

//pls read my previous comment in a suggestive tone :-)//
அப்படித்தான் எடுத்துக் கொண்டேன் கார்திக். :O))

ம்ம்..உரையாடல்களாக்கியிருக்கலாம்தான். சிவனைக் கொல்லாமல்[அவரைக் கொல்வது சிலருக்குப் பிடிக்கவில்லை :O) ] தண்ணீருக்கு அவர் அலறுவதோடு நிறுத்தியிருக்கலாமென்றும் இப்போ தோன்றுகிறது.

கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொன்று, எதுவுமே உடனடியாக எழுதி முடித்துப் படைக்க வேண்டியதில்லை என்பது!! எழுதியதுமே, கொஞ்சம் ஆறப் போட்டு பிறகு திருத்திப் பதிக்கிற பழக்கமிருந்தால் இன்னும் கொஞ்சம் திருத்தப்பட்டு மேற்சொன்னது போல வந்திருக்கக் கூடும். [[சிவாஜி பாணியில் வாசிக்கவும்]]ஆனால் அப்பிடி நடக்கல்லயே..!! :O)

there's always next time eh? :O)

ரவி July 04, 2006 11:30 pm  

உடனே ஆட்டோ அனுப்புகிறேன்...

`மழை` ஷ்ரேயா(Shreya) July 05, 2006 10:41 am  

ஐயோ செ.ரவி!! ஆட்டோவா? எதுக்கு? கதைன்னு சொல்லி அறுத்ததுக்கா, சிவன்-விஷ்ணுவைக் கொன்னதுக்கா?

ஆட்டோ புடிச்சு, அவன் இனிமே இவ்வ்ளோ தூரம் சவாரி வர ஒத்துக் கொண்டு, வண்டி வாடகைக்குப் பேரம் பேசி.. எரிபொருள் காசும் உங்க தலையில் விழ.. எதுக்கு நண்பரே இவ்வளவு கஷ்டப்பட?? பரவால்ல.. விட்டிடுங்க! :O))

பெட்டகம்