சுடுகிற கேள்விகளும் உண்மைகளும்

- முன்னுக்குப் போகிறவன் ஈரமாயிருந்த படிகளில் சறுக்குகிறான். அப்பாடா நான் சறுக்கவில்லை. நிம்மதி.
- என்னது! ராஜ் வீட்டில் களவு போனதாமா? நல்ல காலம், எங்களுக்கு ஒன்றும் அப்படி நடக்கவில்லை. நிம்மதி.
- சித்தியும் பிள்ளைகளும் பாதுகாப்பான பகுதிக்கு வந்து விட்டார்கள். இனிமேல் பயமில்லை. நிம்மதி.

இப்படி எத்தனை உதாரணங்கள்? எங்களுக்கோ, உடனடி வட்டத்துக்கோ நடக்காத வரையில் அப்பாடா! என்று நிம்மதிப் பெருமூச்சு எத்தனை தரம் விட்டிருப்போம். இப்படி நினைப்பது சரியானதுதானா? எங்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் ஏதேனும் ஒன்றென்றால் பதறிப்போகிற அளவுக்கோ அல்லது அதில் ஒரு அரைவாசியளவு கூடவோ வேறு எவருக்கும் வருத்தப்படுவதில்லையே.. ஏன்? ஏன் அப்படி நினைக்கிறோம்? அப்படி எங்களை நினைக்கத் தூண்டுவது என்ன?

சக மனிதரையும் தன்னைப் போலவே உணர வேண்டுமல்லவா? எது சரி எது சரியல்ல என்பது தனிப்பட்ட வரைவுகளுக்கு உட்பட்டது என்றாலும், பொதுவில் வைக்கக் கூடிய பல இயல்புகள் உண்டுதானே? அவற்றில் "சரியற்ற" ஒன்றாய் ஏன் 'சக மனிதரின் (எவராயினும்) துன்பத்தை அவ்விதமே பார்க்காமல், எங்களுக்கு இன்னும் ஏற்படாத ஒன்றாய்ப் பார்த்து நிம்மதி கொள்வது' இருப்பதில்லை? இதுதான் சுயநலம் எனப்படுவதா? சுயநலமென்றால், அது உயிர் என்றதொன்று உருவாகினதோடவே தோன்றியிருக்க வேண்டும். இனத்தின் விருத்திக்கும், தொடர்தலுக்கும் சுயநலம் அவசியமே. ஆனால் இனத்தின் தொடர்ச்சிக்கு/விருத்திக்குச் சவாலான/ஆபத்தை விளைவிக்கும் ஒரு சூழ்நிலை இல்லாதவிடத்தில் சுயநலத்துக்கு ஏன் இடம்? "நல்லகாலம்-எங்களுக்கு-நடக்கவில்லை" என்பது, ஒரு அடிப்படையான, தன்னிச்சையான உணர்வா?

சக மனிதன் வழுக்கி விழுந்து நோவதும், களவு போனால் எப்படியிருக்கும் என்பதும், சித்தி அனுபவித்ததைப் போன்றே இன்னும் மற்றவர்கள் அல்லற்படுவார்கள் என்பதும் என்னிடமிருந்து மிகக்குறைந்த பட்சம் ஒரு ஒத்துணர்வையோ அல்லது சித்திக்கு இருந்தது போன்று மற்றவர்களின் பாதுகாப்புக்காக (ஒன்றையும் அது சாதிக்காதெனினும்) கவலையையோ, அதற்கு ஆவன செய்வதோ பற்றிய சிந்தனையாகவோ இல்லாமல், எனக்கும் எனது நெருங்கின வட்டம் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையில்லை என்றதுடன் நிம்மதியாக உணரத் தலைப்படுவது எனக்குக் குற்றவுணர்ச்சியையே தருகிறது. நான் என்ன செய்யட்டும் அதைப் போக்கிக் கொள்வதற்கு? ஏனையவர்களையும் என்னைப் போலவே ஏன் பார்ப்பதில்லை? அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது. கொடூரமான சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. (உணர்வுகள் மரத்துப் போக ஆரம்பிப்பது இப்படித்தானா?)

(ஒவ்வொருமுறையும் இறப்புகள் குறித்தும் காயங்கள் தாக்கங்கள் குறித்தும் பேசப்படுகிற பொழுதில் உணராத வலிகள் ஏன் சிற்சில ஒற்றைக்கணங்களில் தம் கோரம் காட்டிப் போகவேண்டும்? டிசேயின் பதிவொன்றில் சில மரணங்கள் மட்டுமே உலுக்குவதைப் பற்றியும், (பெயரிலியினது என்று நினைக்கிறேன்) எங்கேயாவது செய்தியில் குண்டுவெடிப்பில் பத்துப் பேர் இறந்தார்களென்று சொன்னால் அவ்வளவுதானா, ----ம் ஆண்டு ----இல் நடந்த குண்டு வெடிப்பில் இத்தனைபேர் கொல்லப்பட்டார்களென்று கணக்குச் சொல்வதுமாய் இருக்கிற எங்களைப்பற்றியும் வாசித்தது, சொல்லத் தெரியாத ஒரு வேதனையான உணர்வுடன் நான் மட்டுமே இப்படி உணர்வதில்லை என்கிற சங்கடமான நிம்மதியையும் அங்கீகரிப்பையும் தந்தது.)

இப்படியெல்லாம் உணர்வது எனக்கே என்னை ஒரு கொடூரச்சியாய்க் காட்டுகிறது. என்னைக் குறித்து எனக்கே பயமெழுகிற வேளைகளிலும் "நல்லகாலம்-நாங்கள்-தப்பிவிட்டோம்"என்கிற அற்ப நிம்மதி (தொலைந்து போகாமல்) தலையெடுக்கிற நாளிலும் எவ்வளவு தூரம் நான் ஒரு மனிதப்பிறவியாக இருக்கிறேன் என்பது விளங்கித் தொலைக்கிறது. விளக்கம் அழகானதாக இல்லை என்பதைத் தவிர சொல்லிக் கொள்வதற்கு வேறில்லை.

17 படகுகள் :

Desperado August 07, 2006 12:14 pm  

இது போன்றே நானும் சில சமயங்களில் எண்ணுவதுண்டு. இப்பதிவு அச்சிந்தனயை நன்றாக தூண்டி(கிளரி!) விட்டதென்பதில் சந்தேகம் இல்லை. மேலும் நமக்கே எதேனும் விபத்து நடந்தாலும் ( பிறரின் தவறே காரணம் ஏனினும்) நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம் என எண்ணுவோமே தவிர அத்தவறை கண்டிக்கவோ எதிர்க்கவோ முனைவதில்லை.

பிறருக்காக கவலைப்படுவதற்கும் இவ்வாறே (Dha)தத்தியாகி விடுகிறது மனது. யாரிடம் இருந்து, எப்போதிருந்து இம்மனோபாவம் அடைந்தோம் என யோசித்துப்பார்க்கிறேன். இதுவரை சரியாகத் தெரியவில்லை. மற்ற்படி மிக நல்லதொரு பதிவு.

ரவி August 07, 2006 1:30 pm  

இது மனித இயல்புங்க...

மாற்ற முடியாது.,..

கஸ்தூரிப்பெண் August 07, 2006 2:09 pm  

மனிதம் ஒரு குறுகிய வட்டத்தில்தானே உழண்டு வருகிறது. பொதுநலத்தை விரும்பியவர்களை நாம் தேசத்தலைவர்களாக ஆக்குவோமே தவிர , நாம் செயல்பட மாட்டோம். செய்யமாட்டோம் என்பதை விட செயல்பட நமக்கு சுதந்திரம் இல்லை என்பதே உண்மையாகும். நம்மை அறியாமலே நாம் ஒரு அடிமைகள்.
நேற்று ஒரு படம் பார்த்தேன், அதிலுள்ள வசனங்களில் ஒன்று உங்களது பிரிய வார்த்தைகளில்...

பொதுநலம் - மழை
சுயநலம் - குடை

:)>

துளசி கோபால் August 07, 2006 2:19 pm  

தெரிஞ்சவுங்க மரணம் உலுக்கித் தள்ளும் அளவு தெரியாதவர்கள் மரணம் ஒரு செய்திபோலத்தான் தெரிகிறது.
ஒருவேளை மனுஷனுக்கு 'சுய'நலம் படைப்பிலேயே கொடுக்கப்பட்டது போல இருக்கு.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 07, 2006 2:35 pm  

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி Desperado.
//எப்போதிருந்து இம்மனோபாவம் அடைந்தோம் என யோசித்துப்பார்க்கிறேன்.//
எங்கிருந்து ஆரம்பித்தது என்று அறிந்து கொண்டீர்களானால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.

செந்தழல் ரவி: மாற்ற முடியாது என்று அப்படியே உதாசீனப்படுத்தாமல், மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது. எந்தளவுக்குச் சாத்தியம் என்பதுதான் தெரியவில்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 07, 2006 2:44 pm  

துளசி - சுயநலம் ஒரு basic animal instinct என்பதுதான் என் நினைப்பும்.

கஸ்தூரிப்பெண் - இதுவுமா இப்படி? :O)
நம்மையறியாமலே நாம் அடிமைகள் என்பது சரிதான். பழக்கத்துக்கு அடிமை. சிந்திக்காமல் இயந்திரத்தனமாகவே இருக்கிறோம்/இயங்குகிறோம்.

//பொதுநலம் - மழை & சுயநலம் - குடை//
பிடித்த வார்த்தைகளில் சொன்னவைக்கு நன்றி.

FAIRY August 09, 2006 3:43 pm  
This comment has been removed by a blog administrator.
FAIRY August 09, 2006 3:55 pm  

எவ்வளவு தூரம் நாம் மற்றவர்களை நெருக்கமான அன்புடன் நேசிக்கின்றோமோ அப்பொழுது இப்படி தோன்றது. தீமை நிறைன்திருக்கும் உலகில் எங்கு யாரை கண்டாலும் தீயவராகவே, சந்தேகத்துடன் பார்க்கும் போது எப்படிங்க தெரியாதவர்கள் மீது அன்பு வைக்க முடியும் நல்லவரா இல்லை கெட்டவரா என்று அவர்கள் மறைவிற்க்கு பின் தான் அதை யூகிக்க முடியும். ஒரு "பாவம்" என்று மட்டும் தான் சொல்ல முடியும்.நல்லவர்கள் என்று நினைக்கும் போது கண்டிப்பாக மனதில் மறைந்தவர்களை பற்றி கவலை அடைவோம். "நிம்மதி" என்று மட்டும் பெருமூச்சு விட முடியாது

Chandravathanaa August 09, 2006 6:25 pm  

http://manaosai.blogspot.com/2005/02/blog-post_110785569067361769.html

மலைநாடான் August 09, 2006 9:44 pm  

ஆழமான சிந்தனை!
பதிவுக்கு நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2006 8:48 am  

கருத்துகளுக்கு நன்றி "தேவதை"யே. ஒருவரின் மரணத்தின் பின்னால் அவரைக் குறித்து எழும் கேள்விகளையோ எண்ணங்களையோ பற்றிச் சொல்ல விழையவில்லை. எங்களின் தனிப்பட்ட வட்டம் குறித்தான சுயநல எண்ணங்கள் மனத்தில் ஏன் எழுகின்றன என்பதைப் பற்றின ஒரு வித தேடல்தான் இந்தப் பதிவு.

நல்லவரோ கெட்டவரோ என்று இறந்தவரைப் பற்றித் தெரியாத வேளையிலும் சில மரணங்கள் எம்மை கலங்கச் செய்யுமல்லவா? அதைத்தான் சொல்லியிருக்கிறேன். மரணம் பற்றிப் பேசியிருப்பது என் மன ஓட்டங்களை இன்னும் தெளிவாகச் சொல்லுவதற்கே.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2006 8:51 am  

உங்கள் பதிவிற்கான சுட்டிக்கு நன்றி சந்திரவதனா. எல்லாருக்கும் எப்போதும் இருக்கிற கேள்விகள்தான். கேட்கிற வடிவம் மட்டுமே மாறுபடுகிறது. :O\

நன்றி மலைநாடான்.

FAIRY August 12, 2006 6:24 pm  

தெளிவு படுத்தியதுக்கு நன்றி, மழை. நலம் – சுயம் or பொது, எல்லாம் நம்ம மனசில் தான் இருக்கு.

கார்திக்வேலு August 17, 2006 1:54 pm  

நீங்கள் சாப்பிடவில்லை என்றால் எனக்குப் பசிக்காது , நீங்கள் விரலை நறுக்கிக் கொண்டால் எனக்கு வலிக்காது ..இதுவே உண்மை, நிதர்சனம்.

ஆனால் அப்படி இல்லாது அடுத்தவர் துன்பத்தை நமதாகக் காண, சிந்திக்க நாம் பழக்கப்படக் காரணம் நம் "பண்படுத்தப்பட்ட தன்முனைப்பே" (Super Ego).

வளரும் சூழல், கற்பிக்கப்படும் விஷயங்கள் , சொந்த அனுபவம் போன்ற பல காரணிகளையும்/தாக்கங்களையும் பொறுத்த இந்த SE பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியுற்றிருக்கும்.

Society does a lot of conditioning to the way our individual morality and responsibility develops and has a set of rules about the role of each individual and how, we as humans, relate to each other in a well defined hierarchy of that of family,relatives, friends, acquaintances, colleagues, our dog, the authority and then Mr.Nobody.

There is something called as the "circle of concern" and "circle of influence" for every individual .Happiness depends a lot on how these
two circles stay close as a subset to each other.

If your "circle of concern" is x number of people who get injured every day ..your circle of influence maynot be able to reachout to all that x number of people and the resultant conflict affects the individuals ..equlibrium and therby his/her happiness.Selfishness is not just a trait of survival ..its also the key force behind every individuals quest to be happy, through whatever means and ways they suppose is right.

இதையெல்லாம் தாண்டி இயல்பாக நம் மனதில் அடுத்தவர் மீது எழும் கருணையும் பரிவும் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான அபூர்வ குணம்.
இப்படியெல்லாம் நமக்குத் தோண்றவில்லையே என்று வருத்தப்பட வேண்டியதில்லை,ஒவ்வொருவருடைய வட்டத்திற்குள்ளும் செய்யும் சிறு காரியங்கள் கூட குறிப்பிடத்தகுந்தவையே.

இந்த நிலை தாண்டி இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம் என்றால் ..இந்த "Circle of concern/influnce"ஜ பெரிது படுத்திக் கொள்ளலாம்.
Going still wider one could take the Utilitarian path of thinking that of doing things which provide "greatest good for the greatest number of people"

--------------------------------

//நிம்மதியாக உணரத் தலைப்படுவது எனக்குக் குற்றவுணர்ச்சியையே தருகிறது. நான் என்ன செய்யட்டும் அதைப் போக்கிக் கொள்வதற்கு?//
The focus here is not about helping others ...rather than the uneasy guilt in not doing so ..and how to handle it .is it :-)

//ஏனையவர்களையும் என்னைப் போலவே ஏன் பார்ப்பதில்லை?//
people are different

//அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது. கொடூரமான சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. (உணர்வுகள் மரத்துப் போக ஆரம்பிப்பது இப்படித்தானா?)//

இதில் கொடூரம் என்று என்ன ஒன்றும் இல்லை ....this is just the guilt feeling of staying away from what the Individual holds up as a performce standard and the disappointment of not able to meet it.Everyone had different standards , for one it might just be helping the cliched "helping blind person crossing the road" for someone it might be more ambitious bigger one [middle east anyone :-)]
உணர்வுகளையும் காரியங்களையும் / கடமைகளையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.

//இறப்புகள் குறித்தும் காயங்கள் தாக்கங்கள் குறித்தும் பேசப்படுகிற பொழுதில் உணராத வலிகள் ஏன் சிற்சில ஒற்றைக்கணங்களில் தம் கோரம் காட்டிப் போகவேண்டும்//

நம்முள் உள்ள இன்னும் வரண்டு போகாத நல்ல தன்மையின் சாட்சியங்கள்
இவை

------------------------------------
Every good deed ,every comforting word , every gesture of humanity shown to anyone [including the dear / near ] counts ..however small or insignificant it seems .

`மழை` ஷ்ரேயா(Shreya) August 21, 2006 3:44 pm  

?/circle of concern & circle of influence//
இப்படிச் சிந்தித்ததேயில்லை. கரிசனம் காட்டும் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்வதற்கு ஒரு விதப் பக்குவம் வேண்டும் என்றே நினைக்கிறன். இப்படி நடந்து விட்டதே..பாவமே என்ற நுனிப்புல் கரிசனமாய் இல்லாமல் உளமார்ந்ததாக இருக்கணும் அல்லவா?

//The focus here is not about helping others ...rather than the uneasy guilt in not doing so ..and how to handle it .is it :-)//
is it not that to remove that feeling, one has to be more concerned for/help others? then the "handling" part of it will be much more managable.

அந்தந்த நேரத்திலே உணர்வதை வைத்துத்தானா தீர்மானங்களும் எண்ணங்களும்? பிற்பாடு இரண்டாம்/மூன்றாம் முறை செய்யப்படுபவை ஆராய்ந்து சீர்தூக்கத்தானா?

கார்திக்வேலு August 21, 2006 6:18 pm  

looong one :
===================
Is there true altruism ?(முன்பின் அறிமுகமற்றோருடன் உளமார்ந்த கரிசனம்)is in itself a highly debated question in various spheres of human knowledge.

[In majority of the situations people are "pseudo altruistic" ..its not a bad thing but its the situation of the true altruistic possibility being withheld by our more stronger survival instinct like //என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது//]

Considering selfishness is the opposite to altruism it does not fit the evolutionary theory of that of every organisms innate selfishness to preserve themselves and propogate copies of themselves / their genes.

Evolutionary theorist view :
-------------------------------------
say a person is truely altruistic he is causing two effects by being so

1.He is incresing the chances of survival fo the non-altruistic person by helping him.
2.He is indirectly reducing his own chances of survivial ..by doing lesser good to himself, bcoz his focus is on others .

Allowing this sort of model to propogate biologically ..over a period of time
the selfish group will have a higher rate of survival and well being than the altruistic group .

This selfish group will become ..bigger and bigger by propogating the selfish traits within their group by their genes and ideas [Culture].

இப்படி இருக்கையில் காலப்போக்கில் பொதுநலத்தில் அக்கறை உள்ளவர்
மிகக் குறைந்த அளவிலே இருப்பர்.சுயநலவாதிகள் அதிகரித்து "வளர்த்த கடா மார்பில்" பாயும் நிலமை வரலாம்.

peoples behavious in groups:
--------------------------------------
However there are some interesting scenarios possible when we think the
survival chances of a "altruistic group" and a "selfish group"

the altruistic group cooperate help each other out and pull through easily out of the most difficult of situations,whereas the selfish group will fight among themselves and stive to survive at any cost and endup being nowhere as a group.

going further let us consider a scenario where we add few number of selfish people to a largely altruistic group , in such a case the selfish people might gain initially but later the altruists might come down harshly and punish their selfish behavious ...bcoz altruism is not just abt helping others ..its also about discouraging selfishness, being egalitarian and the
belief in justice and equality.
(இங்கு கறுப்பு ஆடுகள் என்ற பதம் ஞாபகம் வருகிறது ....:-)

the other scenario ...when we put a small number of altruistic people to a largely selfish group things turn out the other way .the altruists endup a being exploited by the majority of selfish people and endup being a small weak subgroup going nowhere
//ஏனையவர்களையும் என்னைப் போலவே ஏன் பார்ப்பதில்லை? அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது//

இப்பொழுது நீங்கள் யார் எந்த குழுவில் எங்கு உள்ளீர்கள் என்று உணர முடிகிறதா ...:-)

--------------------------------------
//அந்தந்த நேரத்திலே உணர்வதை வைத்துத்தானா தீர்மானங்களும் எண்ணங்களும்? பிற்பாடு இரண்டாம்/மூன்றாம் முறை செய்யப்படுபவை ஆராய்ந்து சீர்தூக்கத்தானா? //

ஓரளவு அப்படித்தான் என்று நினைக்கிறேன்,உறுதியாக அறுதியாக செய்யப்படும் தீர்மானங்கள் சிகப்பு விளக்கில் காரை நிறுத்துவது மட்டுமே :-)

seriously ..I dont think all our views, ideas , understanding come all of a sudden out of thin air ..there is a constant process of evaluating and re-evaluvation and when necessary questioning the basics and de-constructing certain ideas and beliefs ...else we would become stagnant.

[somethings stay the same ...even after all this process of demolishing and reconstructing ideas and views ..those things ...are very precious in life and stand the test of time and influences ,ex love, family, rain :-) become more and more part of us as we go/grow ..the rest will just disappear ]

காரூரன் August 10, 2007 6:31 am  

எந்த பொது நலத்திலும் ஒரளவு சுயநலம் கலந்து இருக்கும். தனக்காக என்பதை விட தன் குடும்பத்திற்காக செய்வது பெரிது. அதைவிட கிராமத்திற்காக அல்லது தேசத்திற்காக என்று பொது நலத்தின் அலகு மாறுபடும். எல்லாவிற்றிலும் ஒரு மனிதன் தன்னையோ அல்லது தன்னை சார்ந்தவர்களின் நலனையோ கருத்தில் கொண்டு தான் இயங்குகின்றான்.

ஓரு சில கணங்களாவது மற்றவர்காளின் மனநிலையில் இருந்து பார்க்கின்ற போதுதான் மனித நேயம் வளரும்.

பெட்டகம்