இரவுகள்

பொதுவிலே இரவுகள் அழகானவை. அதிலும் மழையைப் போர்த்திக் கொண்ட இரவுகள் எப்பவும் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. அவற்றுடன் கூடவே நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும். பாசாங்குகள் ஏதுமற்று எங்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த இரவுகளுடன் மிகவும் இயல்பான நெருக்கம் உருவாகிறது- உற்ற நட்பொன்றினைப் போல. இன்றைக்கும் உட்கார்ந்திருந்தேன்(இருக்கிறேன்). மனதை சங்கடப்படுத்தும்/நடப்புச் சூழலிலிருந்து வெளியே ஒரு கனவுலகுக்குக் கொண்டு போகவோ அல்லது ஞாபகங்களைக் கிளறவோ வைக்கிற இசை மட்டுமே துணை வருகிறது.

இரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு. இன்றைக்கும்போய் படுகையில் சரிந்தால் எப்போதும் நடப்பது போலவே எங்கெங்கெல்லாமோ சுற்றி தொடங்கின எண்ணத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இன்னுமொரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிப் போகப் போகிறேன். அதற்கென்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் - வந்திருக்கும் மழையுடன் பேசிக் கொண்டு. மழை போல மனதைக் கழுவுகிற/நிறைவைத் தருகிற விதயங்கள் மிகக்குறைவு. சிரபுஞ்சி போகவேண்டும்..ஓரிரவுக்காவது.

9 படகுகள் :

ஆயில்யன் July 23, 2008 2:50 am  

//நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும்//

சுகமான ஒரு விஷயம் அந்த நிமிடத்தில் அதுபோலவே நகரும் நாட்களும் இருந்துவிடக்கூடாதா என்று ஏங்க வைக்கவும் செய்யும்!

தமிழன்-கறுப்பி... July 23, 2008 2:54 am  

நன்று..!

இன்னும் எழுதியிருக்கலாமோ...?

ஆயில்யன் July 23, 2008 3:03 am  

//இரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு///

உண்மைதான் சில சமயங்களில் அடக்க மாட்டமல் வரும் சிரிப்பினை கண்டு அக்கம்பக்கதது ரூம் ஆட்கள் கூட என்னவோ ஏதோ என்று வந்துவிடுகின்றனர்! அவர்களுக்கு எங்கே தெரியப்போகுது ஆயில்யன் நகைச்சுவை பதிவு எழுத டிரைப்பண்ணிக்கிட்டிருக்கறது :)))

கடைசியில் //குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது //இப்படியாகி இதுவரைக்கும் ஒண்ணுமே தேறல :((

ஆயில்யன் July 23, 2008 3:07 am  

//குழையல் சோறு//

இந்த அனுபவம் அதிகம் கிடைக்கிறது அயலக வாழ்வில் ஆண்டவன் புண்ணியத்தில் :)

அதுவும் சூடான குழைந்த சாதத்தில் தயிர் ஊற்றினால் அப்படியே இறக்கிக்கொண்டே இருக்கலாம் போல சட்டி சட்டியாக...! அதுவும் தொட்டுக்கொள்ள வத்தகுழம்பு மாதிரியான ஐட்டம் இருந்தால்!

ஹய்யோ ஹய்யோ சொல்ல சொல்ல இனிக்குதுங்க :))))))

நன்றி! நன்றி! அருமையானதொரு எண்ண அலைகள் அடிக்க செய்தமைக்கு :)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 23, 2008 9:43 am  

அடடா.. இன்னுமொரு 'சுடுசோறும் தயிரும்' பிரியர்!!
இப்படிப்பட்ட இரவுகள் கொண்டே காலம் கழியாதா என்று தோன்றும். எல்லாமே அழகாய்த் தெரியும்..இல்லையா ஆயில்யன்?

தமிழன்: ம்ம்..இப்ப வாசிச்சுப் பார்க்க அப்பிடித்தான் இருக்கு எனக்கும். இன்னுமொரு இரவிலே மீதியை எழுதப்பார்க்கலாம்.

Anonymous July 23, 2008 11:21 pm  

சிரபுஞ்சி: இந்தியாவில் எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் சிரபுஞ்சி, இன்னமும் கூட அதே வானிலை சூழலில் தான் இருக்கிறதா? மேகாலயா மாநிலத்தில் உள்ள மிகவும் முக்கியமான சுற்றுலா தலமான சிரபுஞ்சி, நாட்டிலேயே அதிகம் மழை பெய்யும் பகுதி என்ற அந்தஸ்தை இப்போது இழந்து வருகிறது. நாட்டிலேயே அதிகளவில் மழை பெய்யும் பகுதி சிரபுஞ்சி என, புவியியல் பாடங்களில் நாம் படித்திருக்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கு மேலாக சிரபுஞ்சிக்கு இந்தப் பெருமை உள்ளது.


சிரபுஞ்சியின் உள்ளூர் பெயர் சோக்ரா. ஆனால், தற்போது அதிகம் மழை பெய்யும் பகுதி என்ற அந்தஸ்தை சிரபுஞ்சி இழந்து வருகிறது. வட கிழக்கு மலை பல்கலைக் கழகம் மற்றும் போலந்து அறிவியல் அகடமி போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு ஒன்றை மேற் கொண்டனர். அப்போது, சிரபுஞ்சியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் பராமரித்து வரும் மழை தொடர்பான தகவல்களையும், சிரபுஞ்சியில் இருந்து 15 கி.மீ., மேற்கில் உள்ள, 100 மீட்டர் அதிகமான உயரம் கொண்ட மாவ் சின்ராமில் பெய்த மழை தொடர்பான ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். மாவ்சின்ராம், கடல் மட்டத்தில் இருந்து 1,401 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த 1986 முதல் 2000 வரை, இந்த இரு இடங்களிலும் பெய்த மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில், மாவ்சின்ராமில் ஒரு ஆண்டில் 12,666 மி.மீ., மழை பெய்துள்ளது. இது சிரபுஞ்சியில் பெய்த மழை அளவை விட அதிகம்.


ஆண்டு முழுவதும் மழை பெய்யும் பகுதி மற்றும் அதிக ஈரப்பதத்தை கொண்ட பகுதி என பெயர் பெற்றது சிரபுஞ்சி. அதனால், உலகிலேயே பிரத்யேகமான புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதிக்கு ஏராளமான விஞ்ஞானிகளும், சுற்றுலா பயணிகளும் வந்து சென்றனர். ஆனால், அவர்களின் கற்பனைக்கு மாறாக தற்போது சிரபுஞ்சி, "ஈரம் செறிந்த பாலைவனமாக' மாறிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சமீப ஆண்டுகளாக தென்பசிபிக் கடல் பகுதியில் உள்ள ஹவாயன் தீவுகளிலும், கேமரூன் கடலோர பகுதிகளும் அதிக அளவில் மழை பெய்வதால், சிரபுஞ்சி தனது பெருமையை இழக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
/http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=3085&cls=row4&ncat=IN/

`மழை` ஷ்ரேயா(Shreya) July 24, 2008 9:05 am  

நோரா, நீங்க சொல்லியிருக்கும் செய்தி சம்பந்தப்பட்ட ஆவணப்படமொன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொ.கா.வில் பார்த்தேன். எழுதும் போதும் ஞாபகம் வந்தது.

கோவை விஜய் July 25, 2008 10:53 am  

மழையின் நடன்ம் அதுவும் இரவின் ஆட்சியில் .கவிதக்காப் பஞ்சம். அருமை

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

`மழை` ஷ்ரேயா(Shreya) July 28, 2008 9:27 am  

சிரபுஞ்சி:
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7511356.stm

பெட்டகம்