உலாத்தப் போக..

இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.

பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)

விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?

போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:

  • அவுஸ்திரேலியா
  • மொரோக்கோ
  • இலங்கை
  • நியுஸிலாந்து
  • இந்தியா
  • அந்தமான்-நிகோபார்
  • காஷ்மீர்
  • கம்போடியா
  • நேபாளம்
  • கிரேக்கம்
  • அயர்லாந்து
  • ஸ்கொட்லாந்து
  • வேல்ஸ்
  • வடதுருவம்
  • பிரான்ஸ்
  • சுவிட்சர்லாந்து
  • நோர்வே
  • டென்மார்க்
  • சுவீடன்
  • தாய்லாந்து
  • மாலைதீவு
  • கனடா
  • ஐஸ்லாந்து
  • கிரிபற்றி
  • எத்தியோப்பியா
  • தென்னாபிரிக்கா
  • எகிப்து
  • மடகாஸ்கர்
  • இந்தோனேசியா(பாலித் தீவு)
  • ஈரான்
  • துருக்கி
  • ஆப்கானிஸ்தான்
இன்னும் காணக் காண, படிக்கப்படிக்க என் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப்போல வரையறுத்த திட்டம் இல்லாவிட்டாலும் எனக்கென்று மேலே சொன்ன இடங்களைப் பார்ப்பதற்கான திட்டமல்லாத பெருந்திட்டமிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு எங்கு என்ன எப்போது என்றெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் பயணிப்பது.

திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)

--O-0-O--

பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி '
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.

தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.

என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு,
நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.

13 படகுகள் :

ஆயில்யன் September 24, 2008 6:58 pm  

//பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன ///
;)

ஊருக்கு போய்ட்டு வந்து ஒரு வருசம் ஆச்சு :(

ஊருக்கு போகப்போறதை பத்தி நினைச்சு நினைச்சு ஒரு வருசம் ஆகுது :))))

ஆயில்யன் September 24, 2008 6:59 pm  

//'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு.//


மீ 222222222


அப்படியே கற்பனையால்ல நினைச்சுக்கிட்டிருந்தோம்! இப்ப அந்த ஊர் மண்ணுல நிக்கிறோம்டான்னு நினைக்க தோணும்!

ஆயில்யன் September 24, 2008 7:03 pm  

//'இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.//

:))

ஆயில்யன் September 24, 2008 7:05 pm  

//அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்///


அருமை!

(என்கிட்ட கூட நிறைய பேர் இதே போன்ற கருத்துக்களை பரிமாறிகொள்வார்கள்! - நான் அம்புட்டு அழகா இருப்பேன்! :)))

`மழை` ஷ்ரேயா(Shreya) September 24, 2008 10:21 pm  

வருகைக்கு நன்றி ஆயில்யன்.

விரைவில் ஊருக்குப் போயிட்டு வர வாழ்த்துக்கள்

சோமி September 24, 2008 10:33 pm  

chennai kkum vaaralaamE niraya athisayangkal irukku.

சயந்தன் September 24, 2008 10:55 pm  

இப்பிடி லிஸ்ட் போட்டிருக்கத் தேவையில்லை. பதிலாக உலகம் என்றே சொல்லியிருக்கலாம்.
எனக்கும்
ஐரோப்பா
கனடா
அவுஸ்ரேலியா
ஸ்கன்டிநேவிய நாடுகள்
தவிர்ந்த மற்றய இடங்களுக்கு போகணும்னு ஆசை. ஏனென்றால் போற இடத்தில வீட்டுக்குள்ளை இருந்து டிவில தமிழ் நாடகத்த பாத்து புட்டும் சம்பலும் சாப்பிட்டு வர பிடிக்காது. :)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 25, 2008 9:29 am  

சோமி, சென்னை இந்தியாவில. இந்தியா பட்டியலில. :O)

இந்தியாவை நுனிப்புல்லாப் பாக்கிறதெண்டாலே 2-3 வருசம் வேணுமென்டு நினைக்கிறன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 25, 2008 9:40 am  

உண்மைதான் சயந்தன்.. பாரிஸில எங்களுக்கு 2-3 நாள் அதுதான் நடந்தது. போனதே நவம்பர் மாசத்தில- 3மணியோட இருட்டவும் தொடங்கிடும். காலமைச் சாப்பாடு முடிச்சு, மத்தியானச் சாப்பாடும் முடிச்சு வெளிக்கிட இருட்டிவிடும், பிறகென்ன வந்து இராச் சாப்பாட்டை ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.. பிறகு ஒரு மாதிரி காலமைச் சாப்பாட்டோட வெளிக்கிடப் பழகிட்டம்..

சரி, எப்ப ஆபிரிக்காப்பக்கம் போற உத்தேசம்? :O)

பாபு September 25, 2008 1:51 pm  

உங்கள் எண்ணங்களை மிக அழகாக வெளிபடுத்தியிருகிறீர்கள்.என்னுடைய பயணம் எல்லாம் அதிகபட்சம் தமிழ்நாடு தான்,ஓரிரு முறை அலுவலக விஷயமாக வட இந்தியாவிற்கு சென்றிருக்கிறேன்.
//பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன ///
நான் ரசித்த வரிகள்.
பத்து கிலோ மீட்டர் பயணம் என்றாலும் ,எனக்கு அந்த பயணம் செய்யும் நேரம் தான் மிகவும் பிடிக்கும்

தேவன் மாயம் January 19, 2009 1:19 pm  

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

இப்னு அப்துல் ரஜாக் February 04, 2009 6:07 pm  

visit and give your feedback

http://www.peacetrain1.blogspot.com/

sarathy March 25, 2009 12:27 am  

இதை படித்ததும் உங்களோடு பயணித்தது போல் ஒரு பிரமை...

வாழ்த்துக்கள்..

பெட்டகம்