பொற்பூ


ஒருத்தி இருக்கிறாள். பூவொன்று அவள் பெயர் கொண்டது. ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். 2012இன் மார்கழி மாதத்தில். அவளையும் அவளது அம்மாவையும் சந்திப்பது அதுவே முதல்முறை ஆனாலும் நெடு நாள் பழகியது போல உணர்ந்தேன். பெரியவர்கள் இருவரும் பேசி முடித்துக் கிளம்பும் போது 'அப்பாடா' என்று என்றாள். அவளுக்கு அலுப்படித்திருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அழகாய் ஒரு ஊதா நிறச் சட்டை அணிந்திருந்தாள்.

அவளைப் பற்றி சின்ன சின்ன வெளிச்சத் திட்டுகளாய் அறியக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இந்த வருடத்து இலையுதிர் காலத்தில் அப்படித் தெரிய வந்ததொன்று அவள் பூவிதழ் சேர்ப்பவளென்பதும். வெளியூரிலிருந்து பயணத்தின் பின் ஞாபகத்திற்காய் பொருளுள்ளவையைக் கொண்டு ஊர் திரும்புபவளாய் குடும்பத்தில் அவள் மட்டும்தான்.  செடி வேண்டாமென்று உதிர்த்த பூவிதழ்களும் மலை தூக்கிப் போட்ட சிறு கற்களும் மரத்திடமிருந்து விடை பெற்ற சருகுகளும் அவளது பொக்கிஷங்கள்.

அவளைச் சந்திக்கிற சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தது. அவளுக்குத் தக்கதாக அவள் விரும்பக்கூடியதாக என்ன இருக்கும் என்று யோசித்த போது கையுயர்த்தின சிட்னியின் குளிர்காலத்து ஆடி மாதத்துத் தெளிந்த நீல வானில் பறந்த வண்ணக் கொடிகள். இலையுதிர்காலம் முடிந்த பிறகும் வழமையிலும் கொஞ்சம் பிந்தி மரத்தோடு தங்கியிருந்த வண்ண வண்ண இலைகள். அதைத்தவிர பொருத்தமாக வேறெதையும் அவளுடன் பகிர முடியாதென்று தோன்றியது. சிட்னிக்கென்றே தனி  வெளிச்சமிருக்கிறது. அதன் வானத்து நீலமும் தனி அழகானது. மரங்கள் எப்போதும் இனியவை.  குளிரோடு முகிலற்ற வானத்தையும் நிறம் மாறிய இலைகள் கொண்ட மரங்களையும் அனுபவித்துத்  தீராது . இலையுதிர்காலமும் குளிர்காலமும் அத்தனை அழகு.  பசிய இலைகள் நிறம் மாற மஞ்சளிலிருந்து கருஞ்சிவப்பு வரை இயற்கை தீட்டிய ஓவியம். பயணத்திற்கு நான்கு வாரங்கள் இருக்கத் தக்கதாகவே இலைகளைப் பறித்தும் பொறுக்கியும் சேகரித்தேன். பறிக்கும் போது மரங்களிடம் இது ஒரு சின்னப் பெண்ணுக்கு என்று மனதுக்குள்ளாகச் சொல்லிக் கொண்டது நினைவிருக்கிறது. பயணத் திகதிக்குக் கிட்டவாக இலைகள் இருக்காதென்று நினைத்தே சேர்த்தேன். எத்தனையோ இடங்களில் நாம் அப்படித்தான், இல்லையா? பற்றாதோ அற்றோ போய்விடும் என்று முட்டி மோதுகிறோம். உலர்ந்த காற்று நிறம் மாறாமல் என் ரோசா மொட்டுக்களை ஒரு பெட்டியில் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இலைகளும் இருக்குமென்று நினைத்தேன். இரண்டு வாரங்களில் பெரும்பாலானவை நிறம் மாறி விட்டன. நானும் பத்திரமாகப் புத்தகமொன்றுக்குள்ளும் வைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிறம் பூசிய இலைகள் மரங்களிலிருந்தன. என்னைப் பார்த்து என் நம்பிக்கையீனத்தைப் பழித்துச் சிரிப்பதற்காய்.

பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் போனேன். என்னோடு வேலை செய்யும் தோழியும் கூடவே வந்து இலை சேர்த்தார். இவற்றைக் கவனமாக பயணத்தில் வாசிக்கவென்றிருந்த புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டேன். அந்தப்பெண்ணை நான் காணும் நாள் வந்தது ஒரு வாரம் கழித்து. அவள் வரவில்லை. அவளது அம்மாவும் நானும் காலம் தூசியை படிவித்திருந்த தெருக்களில் நடந்தோம். இளங்காற்று வீச ஒரு குளத்தருகே இலைகளை அவரது பைக்குள்ளிருந்த ஒரு புத்தகத்துக்குள் இடம் மாற்றினோம். அவரவர் வழி சென்றோம்.

திரும்ப சிட்னி வந்து இரண்டு மாதமிருக்கும். மரங்கள் பற்றிய தன் ஒப்படைக்கு சிட்னியிலிருந்து அவளைப் பார்க்கச் சென்ற இலைகளைப்  பயன்படுத்தியிருந்தாள் என்று அவளது அம்மா படங்கள் அனுப்பியிருந்தார். ஒரு மேப்பிள் இலைக்கருகில் ஓக்  என்ற தலைப்பிட்டு ஓர் இலை கொண்ட படம் கண்டேன். அது வரை நானறிந்த ஓக் மரத்திலை படத்தில் கண்டதை விட சற்று வேறானது. எல்லாம் அறிந்தவர் போல அது ஓக் அல்லவென்று செய்தி அனுப்பினேன். அப்படித்தான் அந்த இலையின் பெயரென்று அறிந்த கதை சொன்னார் அந்தத் தோழி. ஓக் அல்லதென்றால் என்ன இலையென்று அறிந்து சொல்லச் சொன்னார். வர்ணனையில் கூகிளினால் பலன் கிடைக்கவில்லை. இலை சேர்க்க உதவினவரே இதற்கும் துணை வந்தார். சில்க்கி ஓக் (Silky Oak) என்று பெயர் சொன்னார் . எனக்கு அப்படியொரு மரத்தைத் தெரிந்திருக்கவில்லை. வேலைகளுக்கு நடுவில் அதைப் பற்றி தோழிக்கு ஒரு வரி சொன்னதோடு சரி. அடுத்தடுத்த நாட்களில் வேலையிலிருந்து வீடு செல்லும் பயணத்தை அந்த வேலைத்தலத் தோழியோடு பகிர்ந்து கொண்டேன். ஏதேதோ பேசிக் கொண்டு வந்தோம். திடீரென்று ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னார் அதுதான் உனக்குச் சொன்ன மரம் என்று. நான் திகைத்துப் போனேன். சிட்னியில் வந்திறங்கிய காலம் தொட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒரு மரம். உயர்ந்த பெருமரம். கரும்பச்சை இலைகள் கொண்டது. பூத்தால் இலை தெரியாது. அதன் பூக்களோ பொன். பெயரறிய நான் முயற்சித்ததே இல்லை. இலைகளைக் கவனித்ததும் கிடையாது என்றே தோன்றுகிறது. வெட்கமாய் இருந்தது. பிரியமாய் இருக்கும் சிலரைப் பற்றி அந்த அன்பே போதுமென்று நினைத்து அறியாமல் போவது போல இருந்தது. இன்னுமொரு நாள் அவரோடு பயணித்தேன். அம்மரங்கள் குறைந்து விட்டன  போலத் தோன்றுகிறது என்று அவர் சொன்னார். எத்தனை காண்கிறோமென எண்ணினோம். வேலையிலிருந்து வீடு செல்லும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள். அதோ அதோ என்று போட்டி போட்டுக் கொண்டு எண்ணினோம். அம்மரங்களைப் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. பொற்பூ பூத்து பொற்துகள் சொரிபவை. மாலை வெயிலில் உருக்கி வார்த்த பொன்னாய் மரம் முழுதும் சூடிச் சிரித்தபடி அன்பே உருவாய்.

இலையுதிர்காலத்து வண்ணங்கள் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த வசந்த காலத்து ஓவியம். அதை அனுப்பிய, பூவின் பெயர் கொண்டவளுக்கு  என் அன்பு. பூவின் பூவாகிய அவளது அம்மாவுக்கும்.

அதுசரி, பூக்கள் அழகன்றி வேறெந்தத் தருணங்களைத் தரக்கூடும்?

0 படகுகள் :

பெட்டகம்