ஆறும் மீனும்


எங்கோ ஒரு தொட்டியிலிருந்தபடி ஆற்றைக் கனவு காண்கிறது மீன்.
மழையைக் கரைத்தும் படுகையை வளைத்தும் 
ஆற்றை நீட்டிக்கும் மீன் அறியாததல்ல
ஆறு கடல் சேரும் நியதி.
நீச்சலில் அதன் அழகும்
செதிலிடுக்கில் அதன் வெம்மையும் என 
ஆற்றைக் கொண்டலைகிறது மீன்.
வெயில் தொட்டு ஆவியாகிற  ஆற்றையும் 
அது சேரப்  போகிற கடலையும்  கனவில் கேட்டு விதிர்க்கிறது.
கலைந்த கனவில் சுழித்தோடுகிறது அதன் ஆறு.

நிலவு வருகிறது கூடவே


எழுதி எத்தனையோ காலமாகிறது. 
இன்றைய நாளைக் குறித்து வைக்கத் தோன்றுகிறது.  அதைத் தனிப்படட முறையில் வைத்துக் கொள்ளலாமே எதற்கு பகிர என்றும் தோன்றாமலில்லை. ஆனாலும் இங்கே பதிகிறேன். 

தெளிந்த மனதாய் இருக்கிறது. நிறைய நாட்களுக்குப் பிறகு. வருடங்களென்று தான் சொல்ல வேண்டும் - முக்கியமாய் கடந்த இரண்டு/இரண்டரை ஆண்டுகள்.

மனதளவில் கொஞ்சங் கொஞ்சமாய் சுருங்கி, எல்லாரிடமுமிருந்து விலத்தி, சாப்பிடத் தோன்றாமல்/பிடிக்காமல் உடல் மெலிந்து, பிடித்தவை செய்யத் தோன்றாமல்/பிடிக்காமல், மரத்துப் போன மனதுடன் நாட்கள் கடந்தன. எதோ பிரச்சனை - நான் சரியாக இல்லை என்று எனக்குப் பிடிபட சில மாதங்கள் எடுத்தன. ஒரு நாள் காரணமேயில்லாமல் சக அலுவலர் எனக்குப் பிடித்த வகை சொக்லற் எனக்காகவென்றே வாங்கியதாகச் சொல்லி கையில் தந்து விட்டு நகர்ந்தார்.  கண்ணீரை  வழிய விடாதிருப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனாலும் முடியவில்லை. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாய்ஏனென்று விளங்காமல் நிறுத்தவும் முடியாமல் அழழென்று அழுதேன்.  
உடனடியாக உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது ஒரு சொக்லற். 

அப்போதிருந்ததை விடவும் இருண்ட இடத்தில் என் மனம் பிறகு கிடந்திருக்கிறது. நல்ல காலத்திற்கு மீள முடியா இடங்களுக்குப் போக உந்தவில்லை என் எண்ணங்கள். ஆனாலும் அதற்கு மிக மிகக் கிட்டப் போயிருக்கிறேன் என்பது என் உளவியல் ஆலோசகருடனான சந்திப்புக்கள் எனக்குச் சொல்லின. 

எனக்குத் தெரிந்து ஒரு வருடத்திற்கும் மேலாய் என்ன ஏதென்று தெரியாமல், மனவுளைச்சலோடு மரத்துப் போன மனதுடன்  நாட்களைக் கடத்தியிருக்கிறேன். என் மனதினை /எண்ணங்களைக் கவனித்து உரிய முறையில் கையாளப் பழகியிராததன் விளைவு தான் இந்த பிந்திய "ஓடி வெளித்தல்". நான் உணராமலேயே என்னைத் தொலைத்து நாலைந்து வருடங்கள் ஓடியிருந்திருக்கின்றன..படிப்படியாக பாரத்தை ஏற்றியபடிக்கு.
உடல் சார் காரணங்களால் அல்லாமல் புறக் காரணிகளால்  ஏற்பட்ட மனவழுத்தம். 

எவ்வளவு நெருங்கினவர்களென்றாலும் சொல்ல முடியாது எதோ சரியில்லை என்று.. அவ்வளவு சிறந்தது என்  முகமூடி . உடம்பு மெலிவதை தவிர வேறெதுவும் வெளியில் தெரியாது. அதையும் கூட நான் எடை குறைக்கிறேன் என்று (தாமாக) எடுத்துக் கொண்டார்கள். 

முழுதாய் வெளி வந்து விட்டேனென்று சொல்வதற்கு இன்னும் நாளிருக்கிறது. ஆனாலும் அதற்குரிய பாதையில் பயணிக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். 
கையைப் பிடித்துக் கடக்கும் சந்தர்ப்பங்களிலும், இருட்டென்றாலும் பாதை இருக்கிறதென்று தைரியம் சொல்லி வெளிச்சம் காட்டும் நேரங்களிலும், எனக்கு முதலே இந்தப்பாதை நடந்த அனுபவம் பகிரும் தருணங்களிலும் என வழிகாட்டிகளும் சக பயணிகளும் வாய்க்கப் பெற்றவள் நான். என் வாழ்விலுள்ளோர் மீது பெரும் வாஞ்சை பொங்குகிறது. நீங்களில்லாமல் நானில்லை (தமிழ் வாசிக்கத்  தெரியாது விட்டாலும் கூட உங்களிடம் இது வந்து சேரும்). 

உயிர்ப்பை  மீண்டும் உணரத்  தொடங்கியிருக்கிறேன். 

மழை வரும்.

இவரும் அவரும்


அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார். கொண்டாட்டத்துக்கு வந்த இடத்தில் அவரைக் காணக்கூடும் என்பதே இவருக்குத் தோன்றியிருக்கவில்லை.  கடைசியாகக் கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தன்னில் வரும் மாற்றம் பற்றி அறியாதவராய் நாட்களை  இவரைக் கொண்டு  நிரப்பி வழியனுப்புபவராய்  முன்னர் அவர் இருந்தார். என்ன  நடக்கிறது என்று அவர் உணர்ந்த போது இவர் வெகு தூரம் போய்விட்டிருந்தார். 

சிறுவனோடு விளையாடிக் கொண்டிருந்தவரைக் கலைத்தது முன் வந்து நின்ற உருவம். நிமிர்ந்து பார்த்தார். இவர் அவரைக் கண்ட முதல் நாளில் முகம் நிறைத்திருந்த அதே சிரிப்பு கணத்தில் விரிந்தது . ஆச்சரியத்தின் சாயம் பூசிய முகம். இறுக்கக் கட்டிக் கொண்டார். அவர் சமநிலை கலைந்தது போல இவர் மெல்ல உணர்ந்தார்.  தன்னால் அவர் மனம் அலைவுறுவது தெரிந்து தான் விலத்தி இருந்தார். ஆனால் சில நாட்கள் படுத்தி எடுக்கும். ஒருவரை இந்தளவுக்குத் தன்னால் அலைக்கவும் மனம் உழலவும் செய்ய முயும் என்பதே பெரிய போதையாக இருக்கும். பூனை எலியைச் சீண்டுவது போல,   தூண்டில் போட்டு மீனைப் பிடிப்பது போல, வறண்ட மண் நோக்கி விழும் சில துளி மழை போல வருத்துவார். இவருக்குப் போதையை ஏற்றும் வகையிலேயே இவருக்கான அவரது இயல்பான பதிலோ நடவடிக்கையோ இருக்கும். இவரை என்றும் நோகாத அவரை அப்போது சற்றே வெறுக்கவும் செய்வார்.  பிறகு பாவமாயிருக்கும். வருத்தாமல் விலத்தி இருப்பார், நெடுநாட்களுக்குப் பிறகு திரும்பவும் போதை தேவைப்படும் வரை .

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். அவரோ இறக்க முடியாதவற்றைச் சுமந்தபடி இருந்தார். இவருக்குத் தாளாத ஆச்சரியம் இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா, தொடர்ந்து சுமக்க முடியுமா, எதற்காக  என்றெல்லாம் மருகினார். தொடர்ந்து எழுந்த படியிருந்த கேள்விகள் இவரில் இடப்பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருந்தன. அவரவர் திக்கில் திரும்பி நடந்த போது, தான் அறிந்தே விரும்பித் தோற்கும் ஒரே இடத்தை மீண்டும் உறுதி செய்தவராக அவர் புன்னகைத்தார்.  இறக்கி விட முடியாக் கேள்விகள் இவரில் கனக்கத் தொடங்கியிருந்தன.

2014ன் குறிப்புகள்


புத்தாண்டு பிறந்து விட்டது. ஒவ்வொருத்தரும் இந்த ஆண்டு புத்தகம் படிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய, இனிப்பைக் குறைக்க,  பயணிக்க என்றெல்லாம் உறுதி பூண்டிருப்போம். போன வருடத்தில் செய்ததையே 2015இலும் தொடரலாம் என்றிருக்கிறேன் நான்.  அப்படிச் செய்தது அன்றன்றைய நாளில் என்னை மகிழ்வித்த, புன்னகைக்க வைத்த, ஓ!இதற்கு நன்றி என்று தோன்றிய ஒன்றோ சிலவோ பலதோ எதுவானாலும் குறித்து வைப்பது. கொஞ்சம் தினக்குறிப்பு மாதிரி.
எதையும் இலகுவாய் எடுத்துக் கொள்ளும் ஆள் நான். பலருக்கு மனதை வருத்தும் காரணங்களாக அமைபவற்றை என்னால் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போக முடியும். அப்படிப்பட்ட என்னை 2012 இன் இறுதிக் கால் (என் கவனமின்மையால்) கலைத்திருந்தது. என் இயல்பிலிருந்து மாறிப் போனேன். அது உறைத்ததும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு எப்போதும் மகிழ்ந்திருக்கும் கலையை மீளக கற்க வேண்டியிருந்தது. அன்றைய நாளை அதன் நிகழ்வுகளை எந்தளவுக்குக் கவனித்திருக்கிறேன்/அனுபவித்திருக்கிறேன் அல்லது எவை என்னைக் குழப்ப இடமளித்திருக்கிறேன் என்று பார்க்கவே  இந்தப்பயிற்சியைத் தேர்ந்தேன். ஆனால் பட்டியலில் இடம்பெறுபவை மேற்பந்தியில் சொன்ன வகைப்பாட்டுக்குள் வர வேண்டும். நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை விட்டுவிடல். அவ்வளவுதான். ஒரு நாளில் அன்பான, அழகான, மகிழ்ச்சியான, நன்றிக்குரியதான அல்லது அமைதி தருவதான பல நிகழ்வுகள் நடக்கும். அதே நாளில் நாம் சினந்து எரிச்சல் பட்டு மனம் வருந்தி அலைக்கழிந்துமிருப்போம். அன்றிரவு அல்லது அடுத்த நாள் (சில வேளைகளில் வார, மாத, ஏன் ஆண்டுக்கணக்கிலும்) முன்னவற்றை விடப் பின்னவைக்குத்தான் தான் மனதில் அதிகம் இடம் கொடுக்கும் மனப்போக்கு நம்மில் பலருக்கும் இருக்கிறது. கனம் மிக்கது அந்த மனப்போக்கு. ஆனால் ஒரு இறகைப் போலே எங்கள் தோள்களில் அமர்ந்துகொள்ளவும் எண்ணங்களுக்கு ஏதோ எங்கள் தெரிவு போலவே தன் வண்ணத்தைப் பூசுவதே தெரியாமல் பூசவும் அதால் முடியும். மெல்ல மெல்ல அழுத்திச் சேற்றில் தள்ளிவிடும். சரியானதை எடுத்துச் சொல்லும் அமைச்சர்களில்லாத அரசின் நிலைதான் பிறகு. உணராமல் நாமும் உழப்பிக் கிடப்போம். என்னைப் பொறுத்தளவில் பயிற்சி பயனளித்தது என்றே சொல்வேன். முழு ஆண்டிலும் மிகச்சில நாட்களே எழுதவில்லை. அன்றிரவே எழுதவில்லையென்றால் அப்படியே விட்டேன். இந்த முறை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் அந்த விதியை. அடுத்த நாள் வரை அனுமதிக்கிறேன் எனக்கு. 

நீஈஈஈல வானம், அனலடித்த பின் அள்ளிக் கொண்டு வீசும் குளிர்ந்த தென்காற்று, மழை, மரங்கள், காதல், குடும்பம், சுற்றம், புத்தகங்கள், அன்பு, பயணம், நட்பு, கொண்டாட்டம், நகைப்பு, நீச்சல், தேனீர், ஞாபகங்கள், இசை என 2014ஐ நிறைத்தவற்றுள் உறைய வைத்த வெட்டிய காய்கறிப் பொதிக்கான நன்றி நவிலலும் உண்டு. ஒரு சின்னச் சந்தோசமே போதுமாயிருக்கிறது. நிறைவளிக்கிறது. மிகவும் எளிமையான ஒரு சிந்தனையோட்டமோ என்று சந்தேகமும் வராமலில்லை. ஆனால் இப்படி இலகுவாய் சந்தோசப்பட்டுக் கொள்ளுவது பிடித்திருக்கிறது.

இதை எழுதின 2015ன் முதல் நாளினை இங்கே குறித்து வைக்கிறேன். சிட்னிக்குரித்தான வாணவேடிக்கைக் களியாட்டங்களுடன் அன்புக்குரியவர்களின் அருகாமையில் தொடங்கிய நாள். விடுமுறை நாளின் ஆறுதலான பகற்பொழுது. நட்பைக் கொண்டாடிய அருமையான மாலை. சாய அமர்ந்த போது தற்செயலாய் தொலையியக்கி மூலம் உயிர்பெற்ற தொலைக்காட்சியில் எங்களுக்கு மிகப்பிடித்த Edinburg Military Tattoo வின் 2014ம் ஆண்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஸூபின் மேத்தாவின் வழிநடத்தலில் Vienna Philharmonic Orchestra வின் நிகழ்ச்சியும் நிறைத்த அற்புத இரவுப்பொழுது. மனம் குறை கொண்டதும் நிகழ்ந்ததுதான் நேற்று. ஆனாலும் அதிக நேரமில்லை.. சொன்ன சந்தோஷங்களின் முன் அவை காணாமலே போய்விட்டன. 

உங்களுடைய புத்தாண்டு ஆரம்பம் எப்படி? 


-------
இப்படியெல்லாம் நேற்று செல்பேசியிலிருந்து எழுதிவிட்டு பிரசுரிக்கும் பொழுதில் தவறுதலாக அழித்துவிட்டேன். எரிச்சல் வந்தது உண்மை. ஆனாலும் இதைப் போன்றதொரு பதிவு எழுதப்பட்டு இல்லாமலானதும் முரண்நகைதான் இல்லையா? சிரித்துக் கொண்டே நாளைக்குத் திரும்ப எழுதுவோமென்று போய்ப் படுத்துக் கொண்டேன். இடுகையைத் திரும்ப இன்றைக்கு எழுதியிருக்கிறேன். கணினியிலிருந்து. எப்போதும் நிமிடங்களைச் சுவையாக்குவதற்கு ஏதாவது இருந்து கொண்டுதானிருக்கிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்கள் :O)


பொற்பூ


ஒருத்தி இருக்கிறாள். பூவொன்று அவள் பெயர் கொண்டது. ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். 2012இன் மார்கழி மாதத்தில். அவளையும் அவளது அம்மாவையும் சந்திப்பது அதுவே முதல்முறை ஆனாலும் நெடு நாள் பழகியது போல உணர்ந்தேன். பெரியவர்கள் இருவரும் பேசி முடித்துக் கிளம்பும் போது 'அப்பாடா' என்று என்றாள். அவளுக்கு அலுப்படித்திருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அழகாய் ஒரு ஊதா நிறச் சட்டை அணிந்திருந்தாள்.

அவளைப் பற்றி சின்ன சின்ன வெளிச்சத் திட்டுகளாய் அறியக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இந்த வருடத்து இலையுதிர் காலத்தில் அப்படித் தெரிய வந்ததொன்று அவள் பூவிதழ் சேர்ப்பவளென்பதும். வெளியூரிலிருந்து பயணத்தின் பின் ஞாபகத்திற்காய் பொருளுள்ளவையைக் கொண்டு ஊர் திரும்புபவளாய் குடும்பத்தில் அவள் மட்டும்தான்.  செடி வேண்டாமென்று உதிர்த்த பூவிதழ்களும் மலை தூக்கிப் போட்ட சிறு கற்களும் மரத்திடமிருந்து விடை பெற்ற சருகுகளும் அவளது பொக்கிஷங்கள்.

அவளைச் சந்திக்கிற சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தது. அவளுக்குத் தக்கதாக அவள் விரும்பக்கூடியதாக என்ன இருக்கும் என்று யோசித்த போது கையுயர்த்தின சிட்னியின் குளிர்காலத்து ஆடி மாதத்துத் தெளிந்த நீல வானில் பறந்த வண்ணக் கொடிகள். இலையுதிர்காலம் முடிந்த பிறகும் வழமையிலும் கொஞ்சம் பிந்தி மரத்தோடு தங்கியிருந்த வண்ண வண்ண இலைகள். அதைத்தவிர பொருத்தமாக வேறெதையும் அவளுடன் பகிர முடியாதென்று தோன்றியது. சிட்னிக்கென்றே தனி  வெளிச்சமிருக்கிறது. அதன் வானத்து நீலமும் தனி அழகானது. மரங்கள் எப்போதும் இனியவை.  குளிரோடு முகிலற்ற வானத்தையும் நிறம் மாறிய இலைகள் கொண்ட மரங்களையும் அனுபவித்துத்  தீராது . இலையுதிர்காலமும் குளிர்காலமும் அத்தனை அழகு.  பசிய இலைகள் நிறம் மாற மஞ்சளிலிருந்து கருஞ்சிவப்பு வரை இயற்கை தீட்டிய ஓவியம். பயணத்திற்கு நான்கு வாரங்கள் இருக்கத் தக்கதாகவே இலைகளைப் பறித்தும் பொறுக்கியும் சேகரித்தேன். பறிக்கும் போது மரங்களிடம் இது ஒரு சின்னப் பெண்ணுக்கு என்று மனதுக்குள்ளாகச் சொல்லிக் கொண்டது நினைவிருக்கிறது. பயணத் திகதிக்குக் கிட்டவாக இலைகள் இருக்காதென்று நினைத்தே சேர்த்தேன். எத்தனையோ இடங்களில் நாம் அப்படித்தான், இல்லையா? பற்றாதோ அற்றோ போய்விடும் என்று முட்டி மோதுகிறோம். உலர்ந்த காற்று நிறம் மாறாமல் என் ரோசா மொட்டுக்களை ஒரு பெட்டியில் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இலைகளும் இருக்குமென்று நினைத்தேன். இரண்டு வாரங்களில் பெரும்பாலானவை நிறம் மாறி விட்டன. நானும் பத்திரமாகப் புத்தகமொன்றுக்குள்ளும் வைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிறம் பூசிய இலைகள் மரங்களிலிருந்தன. என்னைப் பார்த்து என் நம்பிக்கையீனத்தைப் பழித்துச் சிரிப்பதற்காய்.

பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் போனேன். என்னோடு வேலை செய்யும் தோழியும் கூடவே வந்து இலை சேர்த்தார். இவற்றைக் கவனமாக பயணத்தில் வாசிக்கவென்றிருந்த புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டேன். அந்தப்பெண்ணை நான் காணும் நாள் வந்தது ஒரு வாரம் கழித்து. அவள் வரவில்லை. அவளது அம்மாவும் நானும் காலம் தூசியை படிவித்திருந்த தெருக்களில் நடந்தோம். இளங்காற்று வீச ஒரு குளத்தருகே இலைகளை அவரது பைக்குள்ளிருந்த ஒரு புத்தகத்துக்குள் இடம் மாற்றினோம். அவரவர் வழி சென்றோம்.

திரும்ப சிட்னி வந்து இரண்டு மாதமிருக்கும். மரங்கள் பற்றிய தன் ஒப்படைக்கு சிட்னியிலிருந்து அவளைப் பார்க்கச் சென்ற இலைகளைப்  பயன்படுத்தியிருந்தாள் என்று அவளது அம்மா படங்கள் அனுப்பியிருந்தார். ஒரு மேப்பிள் இலைக்கருகில் ஓக்  என்ற தலைப்பிட்டு ஓர் இலை கொண்ட படம் கண்டேன். அது வரை நானறிந்த ஓக் மரத்திலை படத்தில் கண்டதை விட சற்று வேறானது. எல்லாம் அறிந்தவர் போல அது ஓக் அல்லவென்று செய்தி அனுப்பினேன். அப்படித்தான் அந்த இலையின் பெயரென்று அறிந்த கதை சொன்னார் அந்தத் தோழி. ஓக் அல்லதென்றால் என்ன இலையென்று அறிந்து சொல்லச் சொன்னார். வர்ணனையில் கூகிளினால் பலன் கிடைக்கவில்லை. இலை சேர்க்க உதவினவரே இதற்கும் துணை வந்தார். சில்க்கி ஓக் (Silky Oak) என்று பெயர் சொன்னார் . எனக்கு அப்படியொரு மரத்தைத் தெரிந்திருக்கவில்லை. வேலைகளுக்கு நடுவில் அதைப் பற்றி தோழிக்கு ஒரு வரி சொன்னதோடு சரி. அடுத்தடுத்த நாட்களில் வேலையிலிருந்து வீடு செல்லும் பயணத்தை அந்த வேலைத்தலத் தோழியோடு பகிர்ந்து கொண்டேன். ஏதேதோ பேசிக் கொண்டு வந்தோம். திடீரென்று ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னார் அதுதான் உனக்குச் சொன்ன மரம் என்று. நான் திகைத்துப் போனேன். சிட்னியில் வந்திறங்கிய காலம் தொட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒரு மரம். உயர்ந்த பெருமரம். கரும்பச்சை இலைகள் கொண்டது. பூத்தால் இலை தெரியாது. அதன் பூக்களோ பொன். பெயரறிய நான் முயற்சித்ததே இல்லை. இலைகளைக் கவனித்ததும் கிடையாது என்றே தோன்றுகிறது. வெட்கமாய் இருந்தது. பிரியமாய் இருக்கும் சிலரைப் பற்றி அந்த அன்பே போதுமென்று நினைத்து அறியாமல் போவது போல இருந்தது. இன்னுமொரு நாள் அவரோடு பயணித்தேன். அம்மரங்கள் குறைந்து விட்டன  போலத் தோன்றுகிறது என்று அவர் சொன்னார். எத்தனை காண்கிறோமென எண்ணினோம். வேலையிலிருந்து வீடு செல்லும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள். அதோ அதோ என்று போட்டி போட்டுக் கொண்டு எண்ணினோம். அம்மரங்களைப் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. பொற்பூ பூத்து பொற்துகள் சொரிபவை. மாலை வெயிலில் உருக்கி வார்த்த பொன்னாய் மரம் முழுதும் சூடிச் சிரித்தபடி அன்பே உருவாய்.

இலையுதிர்காலத்து வண்ணங்கள் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த வசந்த காலத்து ஓவியம். அதை அனுப்பிய, பூவின் பெயர் கொண்டவளுக்கு  என் அன்பு. பூவின் பூவாகிய அவளது அம்மாவுக்கும்.

அதுசரி, பூக்கள் அழகன்றி வேறெந்தத் தருணங்களைத் தரக்கூடும்?

ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?


நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து  விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். இரண்டாமாள்தான் எனக்கு மைக்கல் ஜக்சனையும் நுஸ்ரத் படே அலி கானையும் காட்டிவிட்டவர். அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நிற்கட்டும். என்னண்டு உலகம் ஒரு பொசிபிள் சங்கீத பூஷணத்தை இழந்ததெண்டு சொல்லுறன். 

ஆறாமாண்டு படிக்கும் போது இசை, நடனம், சித்திரம் என்டு பிரிப்பார்கள். முதல்ல எல்லாரும் சங்கீதம் (மேனாட்டு, கர்நாடகம் என்டு அதுக்குள்ளே 2 வகை. பள்ளிக்கூடத்தைப் பொறுத்து இரண்டுமோ அல்லது ஒன்றோ இருக்கும்). பிள்ளைகள் முதல்ல சங்கீதம் என்டு போறது. ஆசிரியை பாடச் சொல்லிப் பார்த்து தனக்கு தொண்டைத்தண்ணி வத்தாத அளவில உள்ள பிள்ளைகள் வடிகட்டிட்டு மிச்சங்களை நடன வகுப்புக்கு அனுப்ப, அவவும் வடிகட்டிட்டு சித்திரத்துக்கு அனுப்பி விடுவா. நடனத்தும் சித்திரத்துக்கும் விரும்பியே போற ஆட்களுமுண்டு. சங்கீதம் தன்னட்டப் படிக்கிற தைரியத்திலயோ என்னவோ என்னட்ட வாசியக்கா சொன்னா சங்கீதத்துக்குப் போகச் சொல்லி. நானும் போனன். பாடினன். ஆசிரியை எனக்குச் சங்கீதம் வராது என்டு சொல்லி அனுப்பிவிட்டா. அது உண்மையா இல்லையா எண்டு தெரியாது, ஆனாலும் பாட வராது என்று மனதில பதிந்து விட்டது. வந்து வீணை வாத்திச்சிட்ட சொன்னா அவவிட அம்மா , எங்கட ஊருக்கே பாலர் வகுப்பு எடுத்தவக்கு கோவம் வந்திட்டு. அதென்னண்டு, நீ சளியோட போய் பாடினனியா என்டு கேட்டா!! பிறகு அபிநயம் கொஞ்ச நாள் பிடிச்சு பிறகு கொழும்பு வந்ததும் சித்திரத்துக்கு மாறி திட்டித்திட்டி சோமசுந்தரப் புலவரிட பேத்திட்ட பள்ளிக்கூடத்தில படிச்சு ஒரு சி ஐயும் சித்திரத்துக்கு எடுத்தாச்சு.

பதின்ம வயசில கிடைச்சார்கள் சசி அண்ணாவும் சியாமாண்ணாவும். இசையமைப்பார்கள், பள்ளிக்கூட கலைவிழாக்களில் கலக்குவார்கள். அவருக்கெல்லாம் பாட்டு எழுதிக் குடுத்திருக்கிறமாக்கும்! இப்பவும் ஞாபகமிருக்கு, ஒரு முறை எதோ பாடிக் காட்டச் சொன்னார். நான் சொன்னன் எனக்குப் பாட வராது என்டு. ஏன் சொன்னார், உண்மையாத்தான் சொன்னாரா என்டெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அலெறிக்ஸ் ஐஸ்கிறீம் கடைக்குப் பக்கத்திலே இருந்த ஷகியின் வீட்டில் நாங்க இருந்த மேசையில் பின்னேர வெயில் விழுந்து கொண்டிருந்த நேரம் சியாமாண்ணா சொன்னார் "everyone can sing".

சிட்னி வந்ததும் வீணையைத் தொடங்கினேன். தொடங்கினேன் என்பதற்குப் பன்மை இருந்தால் அதைச் சொல்லுவது தான் இங்கே பொருத்தமாயிருக்கும். அப்பதான் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க அறிந்து கொண்டேன். பாட வராது. அதன் நுணுக்க அழகுகள் விளங்காது. ஆனாலும் பிடிக்கும். அருணா சாய்ராமும் பொம்பே ஜெயசிறியும் என்னோடு எங்கேயும் வந்தார்கள். வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கொரு தரம் கேட்கிற பாடல்களின் வகைகள் மாறும். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தனி வாத்தியம் போய் நாட்டியத்துக்கான பாடல் வகைளுக்குள் தாவி நாடு தாண்டி மொழி தாண்டி அறியாத இடமெல்லாம் போய், திரும்பவும் பழகியதொன்றிடமே வாரங்கள்/மாதங்கள் கழித்து வந்து சேர்வேன். சில நாட்களை ஒரே பாடலே நிறைத்ததுமுண்டு.அது எல்லாருக்கும் உள்ள அனுபவந்தானே!

முதுநிலை ஆய்வு செய்கிறா என்று பகிடி பண்ணுமளவுக்கு நான் மூஞ்சிப் புத்தகத்தில் குடியிருந்த காலம் அது. ஒரு நாள், நாலு வருசமிருக்கும், சியாமாண்ணா ஒரு பாட்டைப் பகிர்ந்திருந்தார். பாட்டைப் போய்ப் பார்த்தவள்தான். இன்னும் அவ்வகையில் சந்தோசமாகச் சிக்கிக் கிடக்கிறேன். அது பாகிஸ்தான் கோக்ஸ்டூடியோ (CokeStudio)பாட்டு. இசைத் திறமையை வெளிக் கொண்டு வர என்று கோககோலா நிறுவன ஆதரவில் நடக்கிற நிகழ்ச்சி. பார்த்ததும் அதிலிருந்த அத்தனையும் என்னை ஈர்த்தது. அதைப்பார்த்ததும் இந்தியாவின் கோக்ஸ்டூடியோ தேடிப் பார்த்தேன். இசையிருந்தது. திறமையிருந்தது. என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தேன். ஒரு வித செயற்கைத் தன்மை நிகழ்ச்சி  முழுவதும் விரவிக்கிடந்தது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. பாக் இசைத்திருந்த விதம் வித்தியாசமாயிருந்தது. நாட்டுப்புற, சூபி, நாடோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பாடல்களோடு அன்றாட வாழ்வியல் சொல்லும் பாடல்களும் கொண்டதாக இருந்தது. கர்நாடக இசையை 'morning raga' படத்தில் காட்டுவது போல ஒரு கலவை. இளந்தலைமுறையை ஈர்ப்பதற்காய் இருக்கலாம் அவர்கள் இந்த கலவை முறையை தேர்ந்தது. சரி இதிலென்ன என்கிறீர்களா, அப்பாடலை வழ்மையாகப் பாடும் ஆட்களையும், அவர்களது ஆடை ஆபரணங்கள் அவர்கள் பாவிக்கிற வாத்தியங்களையும் சேர்த்துக் காட்டியிருப்பார்கள். செவிக்கும் கண்ணுக்கும் ஒரு சேர விருந்து. சாப்பாடு என்டு கடைக்கு ஒரு ஆள் போக அவர் எதிர்பார்த்த வழமையான சாப்பாடாய் இல்லாமல் விதம் விதமாய் இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது எனக்கு கோக் ஸ்டூடியோ. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலின் பொருள் கூட பலவற்றிற்குக் கிடைக்கிறது. உண்மையான விருந்துதான். பாட்டுகளிலும் அதனைப் பாடுபவர்களின் தோற்றத்திலும் அவர்தம் உடை, ஆபரணங்களிலும் தான் எத்தனையெத்தனை நுணுக்கங்கள் வித்தியாசங்கள். இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!!! நிலத்திலுள்ள விரிப்புகளை அருகில் காட்டுகிறார்களில்லை என்ற குறைதான் எனக்கு. பழங்காலத்திலே பாவித்த நரம்பு, தோல், காற்று, கொட்டு வாத்தியங்களென்று கூடப் பார்க்க முடிகிறது. உண்மையில் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது கோக்ஸ்டூடியோ.

அண்ணா பகிர்ந்தது ஜுக்னி. பாட்டில் ஆரிவ் லோகரின் உசாரோடு சேர்ந்து மீஷாவின் சிரிப்பு அள்ள்ளிக் கொண்டு போகும். 4ம் நிமிடத்தில் இரு வேறு தருணங்களில் வருவது, சேர்ந்து முத்துக்குளித்து அனுபவத்தைப் பகிரும் சந்தோசம். 07ம் நிமிடம் 47ம் நொடியில் மீஷா சிரிப்பார் பாருங்கள்.. அகிலன் கச்சேரியில் கஜனைப் பார்த்துப் புன்னகைப்பது பற்றிப் படலைக்காரர் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும். அடுத்து என்ன விளையாட்டெல்லாம் வரப்போகுது என்டு தெரிந்த ஒரு சிரிப்பு. இந்தப்பாட்டு ஒரு உதாரணம்தான். இதோட சேர்த்து piano guys என்று தேடி, ஒரு பியானோவும் ஒரு செலோவும் எங்கெல்லாம் போய் வருகின்றன எப்படியெல்லாம் நம்மை மயக்குகின்றன என்று பாருங்கள்.

சியாமாண்ணா சொன்ன 'எல்லாராலும் பாட முடியும்' என்பதற்கு அவர் சொன்ன சந்தர்ப்பத்தினையும் தாண்டிய பொருள் இன்றைக்கு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் பாட வரும். எல்லாருக்கும் பாட்டும் இருக்கிறது.   

கேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்?


வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன. அதுக்குப் பிறகென்றால் ஊர்வன தான். அதுவும் நத்தை வென்றுவிடும். எப்பிடியென்றாலும் ஏபிசி செவ்வியல் பண்பலை (நன்றி பிரபா) தான் கூட வருவது. அலட்டலில்லாது விளம்பரங்களில்லாது இசை மட்டுமே. எமா எயர்ஸ் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பின்னேரம் வீடு வரும் போது ஜுலியா லெஸ்டர் வானலை வழியே கூட வருவா.

இப்படி இசை பொழிய, காட்சிகள் கண் நிறைக்க வாகனத்தோட சேர்ந்து மனதில் சில எண்ணங்களும்  ஓடிக் கொண்டிருக்கும். அப்பிடி இன்றைக்கு உறைச்சதுதான் பதிவுக்குக் காரணம்.

மற்ற மதங்களில் திருமணச் சடங்குகள் பற்றித் தெரியவில்லை. இந்து முறைப்படி திருமணம் நடக்கையில் ஒருவேளை பெற்றோரில் ஒருவரே மணமக்களுக்கு (பிரிந்தோ இறந்தோ திருமணத்திற்குச் சமுகமளிக்க முடியா நிலையிலோ) இருக்கும் பட்சத்தில் ஏன் வேறொரு தம்பதியரை 'கன்னிகாதானம்' செய்யவோ 'தானத்தை'ப் பெறவோ ஒழுங்கு செய்ய வேண்டி வருகிறது? பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன? ஏன் செய்வதில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படுவதில்லை?

அப்பா இல்லாத காரணத்தால் எனது திருமணத்தில் அண்ணா/அண்ணி செய்தனர். அவர்கள் செய்ததில் ஒரு குறையுமேயில்லை. நான் அவரிடம்  நேரடியாகவோ அல்லது அம்மாவிடமோ (சரியாக யாரிடமென நினைவில்லை) அண்ணா செய்வது விருப்பம் என்று சொன்ன ஞாபகம். நான் அம்மாவைக் கேட்கவே இல்லை.  கேட்கத் தோன்றவே இல்லை. அதுதான் குறுகுறுக்கிறது. பெரியவர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. விதவை, அதனால் திருமணச் சடங்கில் பங்கு பெறுவதற்கில்லை என்று நடைமுறை வாழ்க்கையில் நூற்றாண்டுக் காலமாய் கற்பிக்கப்பட்டு விட்டது. அதுவே இயல்பாகத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே நான் கேட்கவில்லை. அம்மாவைச் செய்யச் சொல்லி (குறைந்த பட்சம் கேட்டாவது) இருந்திருக்கலாமே என்று இப்ப தோன்றுகிறது. அப்ப சிந்திக்கவே இல்லை. அம்மா சடங்குகளில் கலந்து கொண்டதாய் நினைத்துப் பார்க்க, ஏன் அம்மாவும் எம்மியும் சேர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்திருந்தால் என்று நினைக்க நல்லாய்த் தான் இருக்கிறது.

கேட்டிருந்தாலும் அம்மா ஒத்துக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே எனத் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் மறுப்பு காலங்காலமாக விதவைகளின் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பில் வேரூன்றியதாய் ஊரையும் அதன் பேச்சையும் குறித்துத் தேவையேயற்ற யோசனையில் முளைவிட்டதாய்த்தான்  இருந்திருக்கும். அப்படி இல்லாமல், எங்கேயாவது யாராவது ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ தனியாளாய் இருந்தாலும்  பிள்ளையின் திருமணச் சடங்குகளினை நிறைவேற்றினால் எத்தனை பொருத்தமாய் அழகானதாய் இருக்கும். நடந்திருக்கிறது/நடக்கிறது/நடக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நேர அட்டவணையைக் காலம் போட, அதற்கேற்ப வாழ்க்கை பாடத்தை நடத்துகிறது.

பெட்டகம்