ஒருமுறை உறவினர் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டு, பேருந்திலிருந்து இறங்கும் போது இருட்டிவிட்டது. தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியால் 3/4 நிமிடம் நடந்தால் அவர்கள் தெரு வரும். இறங்கி நடக்க முற்படுகையில் தான் அதைக் கவனித்தேன் - கறுப்புமில்லாத பழுப்புமில்லாத ஒரு நிறத்தில், வீதி மூலையில் நின்றது. நான் நடக்க ஆரம்பித்ததும் என் பின்னே ஓடிவந்து, கூடவே நடக்க ஆரம்பித்தது. இந்த உயிரினம் என்றால் நான் எப்போதும் கொஞ்சம் எட்டியே இருப்பேன்.(ஹி..ஹி! சின்ன வயது அனுபவம்தான் காரணம்) வலப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு வினாடி நின்று, பிறகு இடப்பக்கம் வந்து நடக்கத்தொடங்கியது. நடக்க நடக்க பத்தடிக்கொரு தரம் ஒரு கணம் நிற்பதும், நடக்கும் பக்கத்தை மாற்றி நடப்பதுமாக...அதன் 'நட'வடிக்கை. ஏன் என்னுடன் கூடவே வருகிறது என்று விளங்காமல் அதனுடன் "எனக்கு நாய்களெண்டா பெரிய விருப்பம் எண்டு இல்ல..அதோட கொஞ்சம் பயமும் இருக்கு. நீ ஏன் என்னோடையே வாறாய்?" என்றும் வேறு பலதும் கதைத்துக் கொண்டே நடந்தேன்.(அன்றைக்கு யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்!)
என் பேச்சை(!?) அது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..தன் பாட்டுக்கு நிற்பதும் பக்கம் மாறுவதுமாய் தொடர்ந்தது. இந்த தெருவிலிருந்து பிரியும் ஒரு ஒழுங்கையிலுள்ள 4 வீடுகளில் ஒன்று தான் உறவினர் வீடு. அவ் ஒழுங்கை பிரியும் இடத்திற்கு வந்ததும் நாய் நின்று விட்டது. இனி பத்திரமாய் போய் விடுவாள், துணை தேவையில்லை என்று நினைத்ததோ என்னவோ.. மேற்கொண்டு என்னுடன் வரவில்லை. நான் வீட்டுப் படலையடியில் நின்று திரும்பிப் பார்த்த போது நாய் அங்கிருக்கவில்லை. அங்காலே எங்காவது போயிருக்கலாம்.
என் சந்தேகங்கள்:-
- ஏன் வலது-இடது-வலது என்று பக்கம் மாறி மாறி நடந்தது?
- ஏன் ஒழுங்கைக்குள் நாய் வரவில்லை? (ஒருவேளை அவ் ஒழுங்கையில் இருப்பவர்கள் யாராவது அதற்கு கல்லெறிந்திருப்பார்களோ?)
- ஒருவருக்கு இப்படி நடப்பதற்கான சாத்தியத்தின் நிகழ்தகவு என்ன?( எல்லாம் நான் 1/1000, 1/100000 என்றெல்லாம் சொல்லி பீத்திக் கொள்ளத்தான்..ஹி..ஹி..ஹி!!!!!)
பி.கு: இதை நான் மலேசியாவுக்கு படிக்கப் போயிருந்த என் நண்பிக்கு எழுதினேன். அவளிடமிருந்து வந்த பதில் மடலில் (என் கடிதம் கிடைத்து சில நாட்களில்) தனக்கும் ஒரு நாய் துணை வந்ததாகக் கூறியிருந்தாள்.(weird!)