தேங்கிய சில - I

பெண்களுக்கான அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அங்கே வரும் பெண்ணொருவர் என்னைக் கூப்பிட்டு, இன்னொரு நிறுவனத்தின் சார்பில் சில பெண்களை நேர்முகங் காணவேண்டியிருக்கிறது. முடியுமா எனக் கேட்டா. சரியென்று ஒத்துக் கொண்டேன். நேர்முகத்திற்குரிய கேள்விகளடங்கிய தாளில் என்னவெல்லாம் இருந்ததென்று ஞாபகமில்லை. ஆனாலும் காணவிருந்த பெண்களிடம், அவர்களைப் பேசவிட்டு, அந்தப் பேச்சோட்டத்தின் இயல்பு மாறாமல் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்திருந்தார்கள்.

பெண்களுக்கான தடுப்பு நிலையம். என்னையும், அழைத்த பெண்ணையும் சேர்த்து மூவர் மட்டுமே. பழைய அரச மருத்துவமனைகள் பார்த்திருக்கிறீர்களா? காவி நிறமடித்து, சீமெந்துத் தரைக்குச் சிவப்படித்து, இருக்கையென்ற பெயரிலே இற்றுப் போன வாங்குமாக... அப்படித்தான் இருந்தது நாங்கள் போன இடம். நாலைந்து கதிரைகளும் போடப்பட்டிருந்தன. அவை அந்தச் சூழலுக்குப்
பொருத்தமில்லாமல் திணிக்கப்பட்டவைகளாய்த் தெரிந்தன.

முன்னமே இவர்கள் அனுமதி பெற்றிருந்தார்கள். அதனால், பணிப்பாளரைப் பார்த்ததும் ஒரூ குறிப்பேட்டில் எங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றைக் குறித்துக் கொண்டு உள்ளே போக அனுமதித்தார்கள். உள்ளிருந்து வெளியே வரவோ, வெளியிலிருந்து உள்ளே போகவோ (எப்படிப் பார்த்தாலும்) ஒரே ஒரு கதவுதான். அந்த மரக் கதவுக்கும் ஒரு கதவு. பூச்சுக்கும் மேலாய் ஆங்காங்கே துரு தலைகாட்டும் இரும்புக் கிராதி போட்டது. மரக்கதவு திறந்திருக்கிறது, இரும்புக் கதவுக்கு ஆமைப் பூட்டு. கதவைத் திறக்கப் போன காவலாளியுடன் கூடவே போகையில், அந்தக் கதவுக்குப் பின்னால் எத்தனை வகை உணர்ச்சிகளைத் தேக்கிக் கொண்ட முகங்கள். புன்னகைக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. கதவு திறக்கிறது. ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எங்கேயிருந்து வருகிறோம், எதற்கு, என்ன கொண்டு வந்திருக்கிறோம்... கேள்வி மேல் கேள்வி. பணிப்பாளர் இந்தக் கூச்சலைக் கேட்டு, வந்து போட்ட அதட்டலில் கலைந்து போனார்கள். ஆனாலும் தூண்களுக்குப் பின்னால் நின்று பார்த்தபடி.

ஒரு பெண் எங்களைக் கவனிக்கவேயில்லை. கையில் குழந்தையை வைத்துத் தாலாட்டுவது போன்று பாவனை செய்து கொண்டிருந்தார். திடீரென கைகளை ஆட்டிப் பெருங்குரலெடுத்து "ஐயோ! என் பிள்ளை" என்று கத்தினா. அந்தக் கத்தல் அதிர்வைக் கொடுத்தது எனக்கு மட்டும்தான். மற்றவர்களெல்லாரும் ஒன்றும் நடவாதது போல் தத்தம் வேலை. என்னுடன் வந்தவர்களும் கூட. என்னுடன் வந்த பெண்ணொருவ நாம் அன்றைக்கு வெளியில் வந்ததும் அந்தக் கத்தலிலும் சூழலிலும் என் முகம் வெளிறிப் போனதாகச் சொல்லப் போவது எனக்கு அப்போது தெரியவில்லை.

என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிறந்து சில நாட்களேயான குழந்தையுடன் தெருவில் அலைந்திருக்கிறா. பிடித்துக் கொண்டு வந்து உடல் நலமின்றி இருந்த குழந்தையை அவரிடமிருந்து பிரித்துத் தனியே வைத்திருந்திருக்கிறார்கள்.

[அவவைப்பார்த்ததும் ஆறாம் வகுப்புப் படிக்கையிலே மட்டக்களப்புப் பேருந்து நிலையத்தில் பைத்தியக்காரி என்று எல்லாராலும் ஏளனஞ் செய்யப்பட்ட பெண்தான் ஞாபகத்திற்கு வந்தார். எப்படியென்று இப்போது ஊகிக்கக்கூடிய நிலையிலே அவர் கருத்தாங்கிக் குழந்தை பெற்றெடுத்து, பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்குக் காணாமல் போய் மீண்டும் ஒரு சுட்டெரிக்கிற இரண்டு மணி வெயிலில் தேநீர்க் கடையில் வாங்கின கொதிக்கும் தேநீரை அந்தக் குழந்தைக்குப் புகட்ட முயற்சித்து அது வீலென்று அலறியதில் அடி கொடுக்கும் பெண்ணாய் மீண்டும் அதே பேருந்துத் தரிப்பிடத்திற்கே குடிவந்தா. பிற்பாடு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.]

தடுப்பு நிலையப் பெண், குழந்தை இறந்ததைச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறா. காண்பவர்களிடம் போய் "என் குழந்தையைக் கண்டாயா" என்பதும், பதில் சொல்லாவிடில் அவர்களைத் திட்டுவதுமாக இருந்தவவின் அறிமுகத்துடன் அந்த தடுப்பு நிலையத்தின் கதவு அன்றைக்குத் திறந்து கொண்டது.

பெட்டகம்