திரு(க்)கோணமலைப் படுகொலை சம்பந்தப்பட்ட கட்டுரைகளிரண்டுடன் படங்களும் கைக்குக் கிடைத்தன. பார்த்த பின் ஏன் பார்த்தோமென்று இருந்தது. தாங்கவே முடியவில்லை. மண்ணில் அரைவாசி புதைந்து கிடந்த உடல், தாயின் சடலத்தினருகே தலையின்றிக் குழந்தை... எழுதும் போதே மனம் பதைக்கிறது. நேரிற் பார்த்தவருக்கும் படமெடுத்தவருக்கும் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை பண்ணவே தயக்கமாயிருக்கிறது.
குழந்தைகளும் வயது போனவர்களும், சட்டென்று பயப்படும் இயல்புடையவர்களும் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேட்டோம். பதிலாய்க் கிடைத்தது:
"ஊடகங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. செய்தியை எவ்வளவு graphicக் காட்ட முடியுமோ அப்படிக் காட்டுவார்கள். பரபரப்புத்தான் அங்கே விலைபோகிறது. மற்றது, மக்களும் பயப்பட்டு என்ன ஆகப்போகுது? அவங்களுக்கு, தெருவோரத்தில் சுடப்பட்டு இறந்தவர் பிணம் என்பது தினப்படி காணும் ஒன்றாகவே இருக்கிறது. அங்கே, ஒருத்தர் இறந்து விட்டாரென்றால் அது மிகச் சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. இறப்பு எப்போதும் வரக்கூடும் என்பதை ஞாபகப்படுத்தவே தேவையில்லை. நன்கு அதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சம்பவத்தில் நான்கு பேர் இறந்து விட்டர்களென வைத்துக்கொள்வோம். அதைச் செய்தியில் சொன்னால், 'நாலு பேர்தானாமே செத்தது. அன்டைக்கு 15 பேர் செத்தவங்க' என்று ஏதோ க்ரிக்கற் ஸ்கோர் சொல்வது போலச் சொல்லிப் போவார்கள். பத்திரிகையில் வரும் படங்களிலுள்ள காட்சிகளுக்கும் அதே கதியே. கழுத்தில் துப்பாக்கிச் சூட்டோடுள்ள சடலத்தின் படத்தைப் பார்க்கிலும் தலை சிதறிய சடலத்தில் படம் அதிகமாய்ப் பேசப்படும். சில வேளைகளில் இவ்வளவுதான் காயமா என்கிற ஏமாற்றத் தொனியும் தென்படும்."
கழுத்தில் பாய்ந்து உயிர் குடித்ததுவும், தலையைச் சிதறடித்து உயிர் எடுத்தததும் அதே சன்னம் தான், போனதும் உயிர்தான். ஆனாலும் அவற்றிலே வித்தியாசம் பார்த்து, எது வலித்திருக்கும் அதிகமென்று ஆராய்ச்சி செய்யுமளவுக்குக் குரூரர்களாகிப் போனோமா? :O(
மதிப்பில்லா உயிருக்கு மதிப்பேயில்லாத சூழலில், வன்முறகளின் தாக்கங்களைத் தம்மில் நிறைத்துக் கொண்டு வளரும் பிள்ளைகள் தாமே வன்செயலாளராவதில் வியப்பில்லை. உளவியல் பாதிப்புத்தானே அதுவும்! "பைத்தியம்" என்பதை மட்டுமே உளநலக்குறைவாய் அறிந்த சமூகத்தில், யுத்தத்தின் போது ஏற்படும் பாதிப்புக்கு மருந்தில்லை. (யாழிலிருந்த சகலருக்கும் ஒரே ஒரு உளவியல் மருத்துவர்/நிபுணர் மட்டுமே இருப்பதாக 2001/2002ல் அறிய வந்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது).
அடுத்த கேள்வியாய் எழுவது, ஊடகச் செய்தியாளரது உளநலம். கருத்தில் கொள்ளப்படுகிறதா? ஆமென்றால் என்ன விதத்தில் பேணப்படுகிறது? நேரே போய் இரத்தமும் சதையுமாய் தெறித்துக் கிடக்கிறதை, இலக்கின்றி வெறிக்கிற கண்களை.. என்று இன்னும் எத்தனையையுமோ தம் கருவிகளால் பதிவு செய்யும் தம் ஊழியரைப் பற்றிச் செய்தி நிறுவனங்களுக்கு அக்கறையுண்டா? செய்தியும் அதற்குப் படமும் கிடைத்தால் சரி என்கிற நிலைதானே நிலவுகிறது? இது சரியானதுதானா?