அன்புள்ள அம்மா,
நாம் நலம். அதுபோல் நீங்களும் இருக்கக் கடவுளை வேண்டுகிறேன்.
என்னடா நேற்றுத்தானே தொலைபேசியில் கதைத்தாள்.. இன்றைக்குக் கடிதம் போடுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். கடிதம் போல் வராதுதானே அம்மா. கதைப்பவை மறந்து போகும், எழுத்திலிருப்பவை என்றும் இருக்கும்.
நான் வலைப்பதிகிறேனென உங்களுக்குச் சொல்லியிருக்கக்கூடும். இல்லாவிட்டால் இப்பொது தெரிய வந்திருக்கும். ஒன்றும் பெரிதாய் எழுதிக் கிழிப்பதில்லை. கைக்கு வந்ததைக் கிறுக்குவதுதான். என்னைப்போலவே நிறையப்பேர் வலைப்பதிகிறார்கள். ஒவ்வொரு விதமான எழுத்துகளும் கருத்துகளும் வெளிப்படுகின்றன. அப்படி ஒருவர் இன்றைக்கு அவரது அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அது இங்கே. மனதைக் கனக்கச் செய்த பதிவு. தனது அப்பாவைப் பற்றித் தெரிந்ததாக நினைத்ததெல்லாம் தெரியாததாகவே இருந்திருக்கிறது என்கிறார் அம்மா.
என் நிலைமையும் அப்படித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் உங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பினேன் தானே..உங்களுக்குப் பிடித்ததாயிருக்க வேண்டுமேயென யோசித்து அவற்றைத் தேடியெடுக்க எனக்குப் பல நாட்கள் சென்றன. அம்மா என்கிற பாத்திரம் தவிர ஒரு பெண்ணாய் சுய விருப்பு வெறுப்புடைய மனிதராய் உங்களைப் பார்த்ததில்லையே நான். அதுதான் பெரிதாய் ஒன்றும் உங்களைப் பற்றிப் தெரியவில்லை.
உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாதே... அடுத்த ஆண்டு போகும் போது போய்ப் பார்ப்போம் என்று நினைத்திருந்த பெரியம்மா இறந்த பிறகு, உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற நினைப்புத் தீவிரமாகியிருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் வயது போகிறது. உடல்நிலையிலும் நினைவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட முன்பு இயலுமான அளவு நேரத்தை உங்களுடன் கழிக்க வேண்டும். சின்ன வயதில்
கிடைத்த நேரங்களின் அருமை தெரியவில்லை. எத்தனையோ முறைகள் உங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன். பிழைகளை இப்பத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள். அப்பா இல்லாமல் போன பிறகு தனியாய் எங்கள் மூவரையும் வளர்த்தது எவ்வள்வு பெரிய விதயம் என்று இப்ப விளங்குகிறது.
எம்மியினதும் ரீச்சரினதும் இழப்புக்குப் பின் நீங்கள் இன்னும் அமைதியாகி விட்டது போலத் தோன்றுகிறது. உண்மையா? இவர்களிருவரும் தவிர, மாமியைத் தவிர்த்து - நீங்கள் யாருடனும் மனந்திறந்து பேசியதை நான் கண்டதில்லை. சகோதரிகளைப் போன்ற நண்பிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நினைத்த நேரம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள என் தோழிகளையே நான் மிஸ் பண்ணுகிறேன். பொங்கி வரும் உணர்வுகளை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமற் போகிற போது மிகவும் தவித்துப் போகிறேன். பகிர விரும்புபவற்றை கொஞ்ச நேரத்திற்கென்றாலும் மனதில் பூட்டி வைத்திருப்பது கடினமான செயலாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் அம்மா?
இங்கே சிட்னிக்கு உங்களைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே என்று நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நானும் உங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் எப்போதுமே முழுமனத்தோடல்ல. அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே வராதம்மா. நினைத்த நேரம் பேருந்தில் ஏறிப்போய் தியான நிலையத்தில் இருந்து விட்டு வரலாம்..வேலைக்குப் போகலாம், போய் வருகிற வழியில் மரக்கறிக் கடையில் தேவையானதை வாங்கி விட்டு கைப்பையையோ, குடையையோ மறந்து விட்டுவிட்டு வரலாம்!
பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க?
முதலெல்லாம் அடிக்கடி "எப்ப வாறாய்" என்று கேட்பீர்கள்" இப்போது கேட்பதில்லையே? ஏன்? கேட்காததும் நல்லதுக்குதானோ...எனக்கும் குற்ற உணர்ச்சி வராது. "இப்ப டிரெக்ட் லைனில கதைக்கிறன்..பிறகு கார்டில எடுக்கிறன்" என்றதுடன் சேர்த்துச் சொல்லும் அவசர 5 - 10 சொற்களும், கடிதங்கள் இல்லாமல் வரும் வாழ்த்து மடல்களுமன்றி அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என நினைப்பதும் வாழ்த்து மடலுடன் 10 வரிக் கடிதமும் இரண்டு படங்களுமாவது அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாழ்வதும் வேறெதைத்தருமெனக்கு?
வழக்கம் போல அல்லாமல் கடிதம் கொஞ்சம் கனத்துப் போய் விட்டது. உண்மை பேசினதினாலேயோ என்னவோ.. மனப்பளுவை ஏந்தாத ஒரு அன்பான கடிதத்தில் மீண்டும் சந்திப்போம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு
அன்பு மகள்