அன்னை என்னும் ஆலயம்

ஒரு ஊரிலே ஒரு சின்னப் பெடியன் இருந்தான்.பள்ளிக்கூடம் போவதென்றால் வேப்பங் கொழுந்தை விடக் கசக்கும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் வழியில் வயலுக்கூடாகவும் போக வேண்டி வரும். ஒருநாள் பள்ளிக்குப் போகும் போது வரம்பில் தடுக்கி விழுந்து விட்டான். வெள்ளைச் சீருடையில் சேற்றோவியம்.வீடு திரும்பி, நடந்தது சொல்லி, வேறு சீருடை மாற்றி மீண்டும் பள்ளி நோக்கிய பயணம். மனதில் மின்னலாய் ஓர் எண்ணம். 30 நிமிடத்தில் பழைய சேற்றோவியக் கோலத்தில் வந்து நின்ற மகனைப் பார்த்த அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "மகன்..உங்களுக்கு இருப்பது 3 சீருடைதான், இதுதான் சுத்தமானதும் கடைசியும், ஆகவே பத்திரமாகப் போ" என்று சொல்லி வழியனுப்புகிறா. மகனோ அடுத்த 30வது நிமிடத்தில் திரும்பி வந்தானாம்..இம்முறையும் சீருடையில் சேற்றோடு.பாடசாலைக்கும் நேரமாகி, சுத்தமான வேறு சீருடையும் இல்லாமற் போகவே அவன் அன்றைக்குப் பாடசாலைக்குப் போகவில்லை.

பெரிய சாதனையாக தன் 4 வயது தம்பியிடம் சொன்னானாம் "முதலாம் தரம் உண்மையாத்தான் விழுந்தனான், பிறகு வேணுமெண்டு தான் விழுந்தனான்" என்று. இதைக் கேட்ட தாயார் அவனது புத்தியை சிலாகித்துக் கொன்டாலும் வெளியே காட்டாமல் இவனை அழைத்து பள்ளிக்குப் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாராம்.

இச் சம்பவத்தில் வரும் சின்னப் பெடியன்: என் அண்ணா, தாயார்: எங்கள் செவிலித் தாயார்.

இப்படி நிறைய கதை சொல்லும் எங்கள் செவிலித் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி. 1963ம் ஆண்டு தொடக்கம் எங்கள் குடும்பத்தவர். இனப் பிரச்சனையின் போதும், கொழும்பிற்கு இடம் பெயர்கையிலும் இவர் காட்டிய மனவுறுதி அளப்பரியது. பல இராணுவத்தினர் கேட்டனர்.."நீ ஏன் இந்த தமிழ் ஆட்களுடன் இருக்கிறாய்?" என்று. அதற்கு அவரது மாறாத பதில் "என் குடும்பத்தினரோடு நான் இருக்கிறேன்..உனக்கு அதனால் ஏதாவது பிரச்சனையா?" அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல வராது.வாயடைத்துப் போய் நிற்பான்.

இவரது சமையல் எம் குடும்ப நண்பர்களிடையேயும், அம்மா வேலை செய்த வைத்தியசாலைகளிலுள்ள ஊழியர்களிடையேயும் மிகவும் பிரபலம். அண்ணாமார் விடுதியிற் தங்கிப் படித்த போது ஒவ்வொரு வார இறுதிக்கும் பல விதமான உணவுப் பண்டங்களோடு அவர்களைப் பார்க்கப் புறப்பட்டுவிடுவாராம். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்கும் திறனுடையவர். அவர் சொல்லும் போது சிரிக்கும் நாம், அக்கூற்று பலருக்கும் மிகச் சரியாகப் பொருந்துவதை கண்டு வியந்துள்ளோம். வருடத்துக்கு ஒரிருமுறை ஊருக்குப் போய் வருவா. அம்மாவை விட்டு எத்தனை நாளும் இருக்க முடிகிற எங்களால், இவவை விட்டு இருக்க முடிவதில்லை. வழியனுப்பப் போகும் போது "என்னட்டயும் ticket இருக்கு, என்னையும் கூட்டிப் போங்க" என்று தன் கையிலுள்ள platform ticket ஐக் காட்டி அழுவாராம் பெரியண்ணா. ஊரிலிருந்து திரும்பும் போது, சமையல் சாகசங்களின் பலனாக அம்மாவின் கையில் குறைந்தது 2 வெட்டுக்காயமாவது இருக்கும். வந்தவுடன் எங்களைப் பார்த்து விட்டு "சூட்டி/புத்தாலா கெட்டு வெலா" (சின்னவள்/மகன்மார் மெலிந்து விட்டார்கள்) என்பார்("ஏதோ நான் சாப்பாடு குடுக்காத மாதிரி"<--அம்மா). அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் போது அண்ணாக்கள் வேண்டிக் கொள்ளும் தெய்வமும் இவதான்.அன்னபூரணி + ஆபத்பாந்தவி / அனாதரட்சகி.

எம் குறைகள் அவர் கண்களுக்குத் தெரிவதேயில்லை. அவரைப் பொறுத்தவரையில் எங்களைப் போல் Angels இந்த உலகத்தில் யாருமில்லை. அவவுக்குத் தன் பிள்ளைகளை (என்னை, அண்ணாமாரை) யாரும் ஒன்றும் சொல்லக் கூடாது..அது அம்மாவேயாயினும்.அதே போலத்தான் எங்களுக்கும் - அவரிடம் குறை யாதுமில்லை;யாரும் வேறு மாதிரிச் சொன்னார்களோ, தொலைந்தார்கள். வீட்டிலே பண்டிகைக்கோ அல்லது வேறு எதற்காவதோ புதுத் துணி அல்லது பொருட்கள் வாங்குவது என்றால் அவவுக்கு என்ன வாங்கலாம் என்பதையே நாங்கள் முதலில் தீர்மானிப்போம். சில விஷயங்கள் நேரடியாக அம்மாவிடம் கேட்க முடியாதுவிடின் இவர் காதில் போட்டால் போதும், காரியம் 90% முடிந்தமாதிரித்தான். சகோதரிகள் (அம்மாவும் அவவும்) என்னதான் கதைப்பார்களோ, கிசுகிசுப்பாய் இரகசியக் கதைகளும் வயிறு குலுங்கும் சிரிப்புமாய்...இரவிரவாய்த் தொடரும்.

அண்ணாவின் மகள், பார்த்த மாத்திரத்திலேயே தன்னிடம் ஒட்டிக் கொண்டது(அம்மாவிடம் அவள் சேர 1 மணித்தியாலம் எடுத்தது) அவருக்கு தனி மகிழ்ச்சி/பெருமை. தனது சுருங்கிய தோலை அவள் தொட்டுப் பார்ப்பதையும் பத்திரிகை வாசிக்கும் போது கைக்கும் பத்திரிகைக்குமுள்ள இடைவெளிக்குள்ளால் தலை புகுத்தி அவள் தன்னைப் பார்ப்பதையும் நிறையவே ரசித்தார். ஸ்ரியானி எனும் இயற்பெயர் கொண்டாலும் நாங்களும், எம்மூடாக அவரைத் தெரிந்தவர்களும் அண்ணா அவருக்குச் சூட்டிய "எம்மி" என்கிற பெயராலே தான் அவரை விளிப்போம்.

3 பிள்ளைகளையும் சோடியாகப் பார்க்கக் கிடைக்கும் என்பதனால் 2001 இல் நடந்த என் திருமணம் அவருக்கு விசேடமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு முதல் நாளன்று எம்மிடையேயிருந்து, இந்த மண்ணிலிருந்து மறைந்த எம் எம்மிக்கு என் அஞ்சலிகள்.

அவவைத் தந்த கடவுளுக்கு நன்றி.

"அன்னை என்னும் ஆலயம்...அன்பில் வந்த காவியம்"

பெட்டகம்