என் அம்மாவைத் தெரியாது!

முந்தநாளுக்கு முதல்நாள்(நாலாம் நாள்) எங்கள் வீட்டு பதிலிறுக்கும் கருவியில் "அம்மா மட்டக்களப்பால் வந்து விட்டா. உங்களுடன் கதைக்க வேணுமாம்.அவவுக்கு எடுங்கோ" என்று அண்ணா சொல்லியிருந்தார், அம்மா தனது பிரம்மகுமாரிகள் ராஜயோகத்தினரில் மருத்துவத்துறையில் உள்ளோருடன் கிழக்கிற்குப் போவது இந்த வருடத்திற்கு இது நாலோ ஐந்தாவது முறை. கடற்கோளால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மருத்துவ முகாம்களிற்கு மருந்து விநியோகிப்பதும் மருத்துவம் பார்ப்பதும் இவர்களது பணி.

போன கிழமையும் இப்படித்தான் புறப்பட்டுப் போக முன் கதைத்தேன். வந்து விட்டா தானே, புதினங்கள் சொல்லப் போகிறாவென்று எடுத்தால், "நான் சுகமா இருக்கிறன், பயப்பிட ஒண்டுமில்லை" என்று தொடங்கினா. என்னவென்று கேட்டால், திரும்பி வரும்போது பெய்த மழையால் ஈரமாகியிருந்த பாதையில் சாரதி தன் கை(கால்?) வரிசையைக் காட்ட வாகனம் பாதையிலிருந்து விலகி புரண்டு விட்டதாம். நெஞ்சுக்கூட்டு எலும்புகளில் இரண்டின் முறிவும் கழுத்தெலும்பில் ஒரு வெடிப்பும் பக்கத்திலிருந்த இருவர் இவவுக்கு மேலே விழுந்ததில் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒருமாதம் ஓய்வாகப் படுக்கையில் இருக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். நிலமையின் பாரதூரம் விளங்கிய படியால், ஓமென்றிருக்கிறா. நான் பிறந்ததற்கு இருந்தபின், இது தானாம் இரண்டாம் தரமாக அவ ஒரு மாதம் தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப்போவது!!!!

சரி வீட்டிலேயே இருந்தால் அலுப்படிக்குமே..பாவமே என்று அம்மாவுக்குப் புத்தகங்கள் வாங்கி அனுப்பத் தீர்மானித்தேன். புத்தகக் கடைக்குள் நுழையும் வரை ஒன்றும் மனதில் தோன்றவில்லை. என்ன வாங்கலாம் என்று கண்ணை அலைய விட்ட போதுதான் உறைத்தது..எனக்கு அம்மாவைத் தெரியாது. அவக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும்? வரலாறு பிடிக்குமோ?காதல்?பயணங்கள் சம்பந்தமாய் ஏதாவது?ஆங்கில இலக்கியம்?மர்மக் கதைகள்?த்ரில்லர்? ஆஆ!!!!(கற்பனை செய்க: ஷ்ரேயா தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது!!)

சித்திக்கு அவவின் பிள்ளைகளிடமிருந்து கிடைத்த புத்தகமாம் என்று Chicken soup for the mother's soul பற்றிச் சொன்னா.தானும் மிகவும் விரும்பி வாசிக்கிறா என்று போன முறை கதைத்த போது சொன்னதில் அந்த தொடரிலேயே வேற என்ன கிடைக்கும் என்று பார்த்தேன். Chicken soup for the mother's soul 2 கிடைத்தது. அதுவும், Chicken soup for the working woman உம் வாங்கினேன். பிறகு அப்படியே பண்பியல்(classics) புத்தகங்களைப் பார்த்த போது Moby Dick கண்ணில் படவே அதையும் எடுத்துக் கொண்டு, மனிதனின் வரலாறு பற்றி ஆராயும் The footsteps of Eveம் இவற்றுடன் சேர்த்து அம்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே என்று வாங்கியுள்ளேன். இன்று பின்னேரம் அல்லது நாளை மீண்டும் ஒருமுறை புத்தகக்கடைக்கு விசிட்டடிக்கணும். ஏதாவது நல்ல புத்தகங்களின் தலைப்புகள் சொல்றீங்களா?

அம்மாவைப் பற்றி, ஒரு தனி மனுசியாக, 'அம்மா' என்கிற பாத்திரத்திலிருந்து விலக்கிப் பார்த்தால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாருக்கும் இப்படியா? புத்தகக்கடைக்குள் இது என் (மர)மண்டைக்குள் உறைத்தபோது உண்மையாகவே அதிர்ந்தேன்.(அந்த 9.0 ரிக்டர் அதிர்ச்சி, பிறகு சாப்பிட்ட டொம் யம்முடன் சேர்ந்து மூக்காலும் வியர்வைச் சுரப்பிகளாலும் சுனாமி வடிவெடுத்தது வேறே விஷயம்!). விரைவில் அவவிடம் போய் புதிதாய்ச் சந்தித்து, அவவை அறிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்...இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும்! அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் "தவற" விடுகிறோமோ?

பெட்டகம்