தேங்கிய சில - 3


தெருவில் அலைந்தவர்களும், பாலியல் தொழிலாளியாயிருந்தவரும், வெளிநாடு போகவென்று வந்து முகவரால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாய் நின்றவரும், பெண்போராளியென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரும், இன்னுமின்னும் எத்தனையோ சூழ்நிலைகளால் தன்னிடம் தள்ளப்பட்டவர்களைக் கொண்ட அதே "பெண்களுக்கான தடுப்பு நிலையம்".

தையல், கூடை பின்னல் போன்ற "பெண்களுக்குரிய" கைத்தொழில்கள் கற்றுத் தருகிறார்கள். அழகழாக பொம்மைகளும், ஆடைகளும் கைவினைப்பொருட்களும் நிறைந்து கிடக்கின்றன. அதனை விற்பார்களாம்.(விற்று வரும் காசு யாருக்குப் போகும்? தயாரித்தவர்களுக்கு உரிமையானது அவர்களிடமே போய்ச் சேருமா அல்லது சுரண்டலா என்று இன்றைக்குத்தான் கேள்விகள் எழுகின்றன.)

நன்னடத்தை(!?)யுடையவராய், நம்பிக்கையுடையவராய் (தொடர்ந்து) காணப்படின், அலுவலகங்கள், அங்காடிகள், என்பவற்றைச் சுத்தம் செய்வதைக் குத்தகைக்கு எடுத்
துக் கொண்ட நிறுவனத்தின் மூலம் வேலைக்கனுப்பப்படுவர். அப்படி வெளியே போனவர்களில் சிலர் வேலைக்குப் போய்த் திரும்பாமல் தப்பின சம்பவங்களுமுண்டு. அப்படி நடந்தால் அவவுடன் கூடப் போனவர் பாடு அன்றைக்கு அவ்வளவுதான். அடியும் வசவுகளும் வாங்கி, வேலைக்குப் போவதிலிருந்தும் நிறுத்தப்படுவார்.

இத்தடுப்பு நிலையத்திற்கு ஒரு பக்கத்தில் தொழிற்சாலையொன்றுண்டு. அங்கே வேலைக்கு வருபவர்களுடன், மேலாளருக்குத் தெரியாமல் மதிலால் எட்டிப் பேசிச் செய்திகள் அறிவதில் ஆரம்பித்து, காதல் வயப்பட்டு தப்பியோடுவதும், காதல் முறிவடைந்தால் ப்ளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு குருதி இவர்களுக்கிருக்கும் ஆசையை, தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நடக்கும். இருக்கிற ஒரு தொலைக்காட்சியில் ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் பார்ப்பதும், ஆங்காங்கே உட்கார்ந்து கதை பேசுவதும் மட்டுமே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

வசிக்கும் சூழலில் காவலாளி தவிர ஆண்வாடையே இல்லை. என்னதான் அடைத்துக் கிடந்தாலும், மனதுக்குக் கடிவாளம் போட்டாலும், அவற்றையும் மீறி உடலின் தேவைகள் தலைகாட்டுவதில் தன்னினச் சேர்க்கையாளராகின சில பெண்களுடனும் பேசக் கிடைத்தது. மற்றப் பெண்களால் இவர்கள் ஒதுக்கப்படவில்லை. இப்பெண்களின் முதுகுக்குப் பின்னால் இவர்களைப் பற்றிக் கதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. போன பதிவில் சொல்லியிருந்த பெண்ணிடம் பேசுகையில் தன்னினச் சேர்க்கையாளரான இப்பெண்கள் குறித்து அவவின் கருத்துக்க் கேட்டதற்கு அவ "அது அவர்கள் சொந்த விசயம். எனக்கு வெறுத்தது அவர்களுக்கும் வெறுக்க வேண்டும் என்றில்லையே. உடல் தேவையை நிறைவேற்ற ஒரு வழி. அவ்வளவுதான்" என்று சொன்னதில் இருந்த முதிர்ச்சியை வழமையாக் குறுகிய கண்ணோட்டத்துடனே பாலுறவைப் பார்க்கும் எம் சமூகத்திலிருந்து வந்த ஒருவருடையது என்று நான் உணரக் கொஞ்சக் காலம் சென்றது.

மறந்து போயிருந்த இந்தத் தடுப்பு நிலையத்தில் இருக்கிறவர்களைப் பற்றின நினைவு இதை எழுதத் தொடங்கியதும் ஞாபகங்களை அசைபோட்டுப் பல கேள்விகளை எழுப்புகிறது. என் நினைவுத் திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நிலையத்தினதும் பெண்களினதும் சுகாதார நிலை என்ன? அவற்றைக் கவனிப்பது யார்?
வேலைக்கனுப்பப்படும் பெண்களினது சம்பளம் அவர்களிடம் சேர்கிறதா?
கைவினைப்பொருட்கள் விற்ற பணத்திற்கு என்ன நடக்கிறது?
வெளிவாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறார்களா?
வெளியில் வந்தால் இவர்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது?

விடை தெரியாத கேள்விகள் இன்னும் இன்னும் எழுகின்றன.

குறிப்பு: இன்னும் விரிவாக எழுதலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னுமின்னும் இந்த அனுபவங்களைப் பற்றி தோண்டித்தோண்டி யோசிக்கையில் வருகிறதெல்லாம் மனவருத்தத்தையும் எழுப்பி, என்னைப்பற்றி நிறையக் கேள்விகளையும் முன்வைக்கிறது. அவை காரணமாகச் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன்.

பெட்டகம்