தெ.து.வ.ச.நி.கி.ச. க்கு வாழ்த்து!

நாளை தொடக்கம் நாளையன்றை வரை நடக்கவிருக்கும் நியூஸிலாந்து வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

சந்தித்துக் கொள்ளப்போகிறவர்களே, சிட்னி சந்திப்புப் போல அல்லாது விரைவிலே (சுடச்சுட) படங்களை வலையேற்றுங்கள்! ;O)

ஒரு அலறல்

அன்றைய ஒன்றுகூடல் எங்கேயோ, அங்கே திட்டுத்திட்டாய், தீவுகளாய்ப் பிரிந்து நின்று உரையாடல்கள். வெற்றுப்போத்தல்களுக்குப் பக்கத்தில் ஆண்கூட்டம். பிள்ளைகள் ஓடித்திரிவார்கள். அடிக்கடி, ஒரு விதுஷனுக்கோ அல்லது ஒரு லக்சனாவுக்கோ அம்மாவிடமிருந்து ஒரு உருட்டல்/மிரட்டல் குழப்படி கனத்தால் பரிசாய்க் கிடைக்கும். பிறகும் அம்மா தன் தோழிகளுடன் கதையில் மூழ்கிவிடுவா. அப்படியென்ன கதை என்று கேட்டால், நீங்கள் பாவம், "அனுபவிக்க" நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.

இந்தப் பெண்களுக்கு அநேகமாக ஒத்த வயதாயிருக்கும், அல்லது ஒத்த வயதில் பிள்ளைகளிருப்பார்கள். இங்கே முக்கியம் பிள்ளைகள் இருப்பது. அதுதான் அடித்தளமே! ஒருமாதம் தொடங்கி பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வரை அங்கே செல்லுபடியாவார்கள். பிள்ளைக் கவனிப்பு/வளர்ப்பு/தண்டனை & சமாதான முயற்சிக்கான வழிமுறைகள் பற்றிய அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படும். கொஞ்ச நேரம் அந்தக் குழுவுக்குள்ளே மாட்டுப்பட்டால்:

  1. இல்லாத பிள்ளையைக் கவனிக்க / சரிவர வளர்க்கத் தேவையான 100% அறிவு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உங்களுக்குக் கிடைக்கும்/தெரியவரும்.
  2. பைத்தியம் பிடிக்கும். விறாண்டுவதற்குப் பாயும் தேவைப்படலாம்.

எங்கள் "ஒன்றுகூடல்" சனத்தில் 3 தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ளாத பாக்கியசாலிகள். எப்ப பிள்ளை என்று எப்போதும் எங்கேயும் கேட்கப்பட்டு நச்சரிக்கப்படுபவர்கள். இதிலே நானும் ஒருத்தி. சில வேளைகளில் இவர்களது அலுப்புத் தாங்காமல் "pregnant ஆன் உடன் உங்களுக்குத்தான் முதல்ல சொல்லுவன். வந்து எல்லாம் செய்து தரோணும்" என்று (அல்லது இதே மாதிரி ஏதாவது) சொன்னால் அதற்குப் பிறகு ஒரு 3 சந்திப்புகளுக்குத் தப்பலாம். பிறகு ப.கு.க.தி. தான்! மற்றவர்களெல்லாரும் இருந்து Nappy rash, உடுப்பளவு, பிள்ளை சாப்பிடாமல் இருக்கிறது (இதற்கு பிள்ளையைத் தூக்க நாம்தான் 2 முட்டை குடிக்க வேண்டும்) பிள்ளைப்பராமரிப்பு நிலையத்துக்கு ஆகும் செலவு என்று நீண்டு போகும் கதைகளில் மூழ்கி அறிவுரை முத்துகளெடுத்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் இருந்து எங்களுக்குத் தேவையான கதைகள் பேசுவோம். அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்புகளுடனே எங்கள் சம்பாசணைகள் தொடரும்.

அதுக்கும் வைபட்டது ஆப்பு! தோழியர் இருவரும் மூன்று மாத வித்தியாசத்தில் பிள்ளைகளையும் பெற்றார்களா, நான் அம்போ! என்று தனித்தீவாய் இந்த அறிவுரைக்கடல்களில் தப்பிக்க இயலாமல் முக்குளிக்கிறேன். தோழியரும் இருந்து nappy விலையும், சாப்பாடும், தேவைப்படக்கூடிய பிள்ளைப் பராமரிப்பையும் பற்றிக் கதைக்கிறார்கள். இப்ப யாருமே என் தோணியில் இல்லை.

இப்போதெல்லாம் இந்த ஒன்று கூடல்கள் நிறைய சக்தி விரயமாகிறது. ஏனா, பிள்ளைக் கதை மழையில் நனைந்து, nappy விற்கும் விலையில் துவாய் வாங்கித் தலைதுவட்ட முடியாமல் அயர்ந்து போய்ச் சளி பிடித்து ..ஆ..ஹச்!

பிள்ளை இருக்கிறவர்களெல்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க. பிள்ளை என்றொன்று எனக்கு வந்தால் அறிவுரைக்கும், சம்பாசணைகளுக்கும் கட்டாயம் உங்களைத் தேடி வருகிறேன்; அப்படி நானாக வரும் வரைக்கும் தயவு செய்து என்னைச் சும்மா விடுங்கள்!

(பரவாச்)சோதியில் நானும்!

ஈழநாதனின் பதிவிலிட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிக்கிறேன்.

தமிழ்மணத்திலே பலரும் வழங்குவர் பதிவுகளை வாரி
வாசிக்கையிலே இருக்கையை விட்டெழுவார் மேலதி காரி
சாளரத்தைச் சொடுக்காவிட்டால் மாறி
கண்மணியே - வேலையிலே எல்லாம் நாறிவிடும் நாறி!


இன்னுமொன்று:

இன்னொரு வெள்ளியுடன் வருது வார இறுதி
இரண்டே நாளில் திங்கள் வருவதும் உறுதி
அளவின்றிச் சோமபானம் பருகி
புதுக்கிழமையும் உடல்கள் தள்ளாடும் வெறி பெருகி
குடிப்பது ஏனென்றால் stressஸை இளக்க
கைமேற் பலன் தலைவலி மண்டை பிளக்க!

பி.கு: இந்த நேரிசை , சொத்தி இசை எண்டெல்லாம் சொல்லுறாங்களே, அப்பிடியெண்டா என்ன?

ஒரு நாள் அமைதி

இன்றைக்கு

Peace One Dayயாம். ஐ.நா சபையினரால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாள் செயல்முறைக்கு வரக் கொஞ்சம் அதிகப்படியான முயற்சி தேவைப்பட்டிருக்கிறது. எப்படி இந்த நாளைப்பற்றிய எண்ணம் வந்தது என்பதிலிருந்து எந்தெந்த நாட்டு / பாதுகாப்பு / கூட்டுறவுச் சபைகளின், சமயத்தலைவர்களை அணுகி, செப்.21 ஐ போர் நிறுத்தங்களுக்குரியதொரு நாளாகக் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டது என்பதைப் பற்றியும், இந்த நாளின் முக்கியத்துவம், அது உணர்த்த விழையும் செய்தி என்பதையும் உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை நேற்றிரவு அரைவாசியிலிருந்து பார்க்கக் கிடைத்தது. ஜெரமி, தனது எண்ணத்தைச் செயற்படுத்தக் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்திருக்கிறார். அதையே நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தார்கள். ஒரு நாளைக்குப் போர் நிறுத்தமென்பது உணவு, மருத்துவ உதவி, தகவல், ஏனைய உதவிகள்/தேவைகள் போன்றவற்றைப் பெறுவதிலும் பகிர்வதிலும் அளப்பரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

2001ம் ஆண்டு செப். 11ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சமாதான மணியடித்து கோஃபி அனான் இந்த நாளைப்பற்றிப் பேசுவதாக இருந்த நேரத்திலே உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீதான தாக்குதலால் அந்நிகழ்வு தள்ளிப்போடப்பட்டது. ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்று இப்போது ஒரு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா நாடுகளுமல்ல. கடைப்பிடிக்கும் நாடுகளில் எல்லா அரசாங்கங்களுமல்ல. ஆனாலும் அரசு சாரா நிறுவனங்கள் (NGO), மாணவர் முன்னணிகள், மதக்குழுக்கள் போன்றோரால் இந்த "ஒருநாள் போர்நிறுத்தம்" பற்றிய விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. இவர்களின் நோக்கம் யுத்தத்தின் மூலம், வன்முறையின் மூலமன்றி வேறு வழியாலும் அமைதியைப் பெறலாம், நிலைநிறுத்தலாம் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லுதல். நம் சிறு பங்குக்கு, இந்த நாளைக் குறித்து நாம் என்ன செய்யலாம்?

தித்தோம்.. சந்தித்தோம்

நேற்றைய அறிவித்தலின் படியே சிட்னி வலைப்பதிவர் சந்திப்பு இடம்பெற்றது.

ஒரே "மேடை"யிலேயே நின்றிருந்தாலும் ஷ்ரேயாவுக்கும் சயந்தனுக்கும் ஆளையாள் கண்டுபிடிக்கக் கொஞ்ச நேரமெடுத்தது. எங்க நிற்கிறீங்கள்? மேடைக்கு வந்துட்டீங்களோ? போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்தவாறே தன்னைத் தேடி நடக்க ஆரம்பித்த சயந்தனை - வலைப்பதிவில் அவர் போட்டிருந்த படத்திலிருந்ததைப் போலவே ஒருவர் கடந்து போகிறார் என உணர்ந்ததும் - ஷ்ரேயா கையை ஆட்டித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். செயலாளருக்குப் 19 வயது தானாம்.. மெல்பேணில் அப்படித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்பக்கூடிய தோற்றம்தான்!

செயலாளரைப் பத்திரமாக மீண்டும் மெல்பேணுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதால் மிகுந்த பாதுகாப்பிற்கிடையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. ஒளிப்பதிவுக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. சில காவலர்களும் இதற்கெனவே சிறப்பு ஏற்பாடாக அமர்த்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பார்வையாளகளில் சிலருக்கு இருக்கக்கூட இடமிருக்கவில்லை. அவ்வளவு வலைப்பதிவு ஆர்வலர்களைப் பார்த்ததில் செயலாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அடிக்கடி பார்வையாளரில் சிலர் மீது அவர் பார்வை திரும்பியமை சந்திப்பில் சிறிது சலசலப்பையும் திசைதிரும்புதலையும் உருவாக்கச் சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனாலும் சிறிது நேரத்தில் செயலர் தன்னைச் சுதாரித்துக் கொண்டதில் கூட்டம் வழமைக்குத் திரும்பியது.

இந்தச் சந்திப்பில் முதலிலே என்ன கதைப்பதெனத் தயக்கமேற்பட்டதில் சில சொந்த விதயங்கள்/ தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் கொஞ்ச நேரத்தில் சந்திப்புக் களைகட்டியது. பேசப்பட்ட விதயங்களில் தெரிந்த/அறிந்த வலைப்பதிவர்களின் பிளவாளுமை பற்றிய கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது. ஊரறிந்த இரகசியமொன்றையும் வலைப்பதிவராகும் ஆர்வமுடையவர்களின் நன்மை கருதிச் செயலர் போட்டுடைத்தார், அது மிகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிளவாளுமை பற்றிய உரையாடலின் போதே வலைப்பதிவுலகின் துப்பறியும் நிபுணர்கள் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரோடு சேர்ந்து செயற்பட்டால் அத்துறையினர் மிகவும் பலனடைவர் என நம்பப்படுகிறது.

மேற்கூறியது, தமிழ் வலைப்பதிவுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பேச வழிகோலியது. சிட்னியில் தமிழ்/தமிழர் நிலை, பண்பு குறித்துத் தனது மனமகிழ்வைத் தெரிவித்த செயலர், சிட்னியில் போன்றதான் தமிழார்வம் மெல்பேணில் இல்லையென விசனமடைந்தார். இனிதே இவ்வாறு சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தலைவர் வசந்தன் செய்மதி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். (மாநாடு பற்றிய அறிவிப்பில் பின்னூட்டமிட்டு ஆசி தெரிவித்தமைக்கும் தலைவருக்கு நன்றி) செயலகத்தினை சிட்னிக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆராய்ப்பட்டது. ஆனாலும் இப்போதைக்கு அது தேவையில்லையெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவர் இருவரும் தத்தம் வாசிப்புக்குட்படுவன பற்றியும் பேசினர். ஏனைய வேலைகளுக்கிடையில் வாசிப்பிற்கென போதுமானளவு நேரம் ஒதுக்க முடியவில்லையென செயலாளர் மனம் வருந்தினார். பார்வையாளர்களுக்கு உதவுமுகமாக இடையிடையே ஒலிபரப்பப்பட்ட சில அறிவுறுத்தல்கள் சந்திப்புக்கு அவ்வப்போது இடையூறாய், நாராசமாய் இருந்திருப்பினும் அவை பெருந்தன்மையாக எம்மாலும், ஏனைய பார்வையாளர்களாலும் பொறுத்தருளப்பட்டன.

க்றைஸ்ட்சர்ச் மாநாடு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துத் தெரிவித்ததுடனும், ஞாபகார்த்தமாக சில புகைப்படங்கள் எடுத்ததுடனும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முதலாவது சிட்னி வலைப்பதிவர் மாநாடு இனிதே நிறைவேறியது. மேலும் விபரங்களும், படங்களும் விரைவில் செயலாளரின் பதிவில்.

சிட்னி மாநாடு

சிட்னியின் வலைப்பதிவர் மாநாடு தென் துருவ வலைப்பதிவர் சங்கச் செயலாளர் சயந்தனுக்கும் சிட்னிப் பொறுப்பாளராக தலைவர் வசந்தனால் நியமிக்கப்பட்டவருக்குமிடையிலான சந்திப்பாக நூற்றுக் கணக்கான பார்வையாளர்களுடன் இன்னும் இரண்டரை மணித்தியாலத்தில் நடக்கவிருக்கிறதென்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்!

பாதுகாப்புக் காரணங்களையொட்டி, எங்கே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறதென்பதை வெளியிட முடியாததற்கு வருந்துகிறோம்.

சிட்னியில் இசைப்புயல்

நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்து (என்ன நிகழ்ச்சியென்று கேட்பவர்கள் இதற்குப் பிறகு இந்தப்பதிவை வாசிக்கக் கடவது!!) அதைப்பற்றின என்னுடைய நினைப்பை போட வேணும் என்கிற எழுதப்படாத வலைப்பதிவு விதிப்படி நான் தட்டச்சத்தொடங்க முன்னமே, ஏன் இன்னும் பதியவில்லை என்று நிறையப்பேர் (நிறையப்பேர் என்டுறது இருவரைத்தான் என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குந்தானே) கேட்டதால(யும்) இந்தப்பதிவு. எள் விழக்கூட இடமில்லாதளவு கூட்டமெண்டு நான் சொல்ல மாட்டன்; ஏனா? ஆட்கள் நடந்து போறதுக்கு இருக்கை வரிசைகளுக்கிடையில நடைபாதையெல்லாம் இருக்கும், எள்ளைப்போட்டா அதிலயும், பட்டும் நகைகளுமா, தலைமயிருக்கு அளவுக்கதிகமான களிம்பெல்லாம் பூசிக் கொண்டு வந்திருந்த ஆட்கள்ட தலையிலயும்தான் விழுந்திருக்கும். (பிறகு சிலவேளை தலையில எள்ளோட வாறதே ஒரு நாகரீகமான ஒன்றாக மாறவும் சந்தர்ப்பம் இருக்கு!)

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னபடிக்கு 13,000 சனம். ஆனா எனக்கென்னவோ அதை விட இன்னும் கொஞ்சம் கூடப்பேர் இருந்த மாதிரி இருந்தது. சரி அதை விடுவம். எத்தினை பேர் வந்தா என்ன..கனபேர் என்டுறது தான் தேவை. அதிசயமா, நாங்களும் எங்கட "நேரத்துக்குப் போகாத" கலாச்சாரத்தை கைவிட்டுட்டு சரியான நேரத்துக்கு இருக்கையில! ஆனா ரஹ்மான் குழுவினர் பாவம், நாங்க நல்லபிள்ளைகளா மாறீட்டமெண்டு தெரியவில்லைப் போல, கொஞ்சம் பிந்தித்தான் வந்தார். முதல்ல மெல்பேணில போலவே ஹிந்திப் பாடல்களோட தொடங்கினது. "ரெலிபோன் மணிபோல்" பாட்டை ஹரிஹரன் வந்து கால்வாசி தமிழ், மீதி ஹிந்தியில படிச்சார். தமிழ்ல பாட்டுத்துண்டு வர தமிழ்ச்சனம் உற்சாகக்கூச்சல் போட்டிச்சினம். எங்களுக்கு முன்னுக்கு இருந்த வெள்ளை தம்பதியருக்கு ஏனெண்டு விளங்கல்ல. ஆளையாள் பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டாங்க. "மெல்பேண் மலர்"க்குப் பதிலா "சிட்னி மலர் போல்" என்டு மாத்திப் படிக்க, பின்னுக்கிருந்த கொஞ்சப்பேர், "there's no such flower" என்டு ஹரிஹரனுக்கு விளங்கப்படுத்த வெளிக்கிட்டாங்க.

3, 4 ஹிந்திப்பாட்டுக்குப் பிறகு வந்த உன்னிமேனன் முதல் முறையா ஏஆரோட அவுஸ்திரேலிய மேடையில பாடச் சந்தர்ப்பம் தந்ததுக்கு நன்றி சொல்லீட்டு சிவமணியின்ட மேளதாள் அடிகளோட தொடங்கினார் "என்ன விலை அழகே" என்டு. அரங்கம் அதிர்ந்தது என்டு கேள்விப்பட்டிருக்கிறன், சனிக்கிழமைதான் அதின்ட முழுப்பரிமாணத்தையும் உணரக்கூடியதா இருந்தது. "ஹே"க்களும் "யேய்"க்களும்! வந்திருந்த கூட்டத்தில தமிழாட்கள்தான் 65 - 70%. சிட்னிக்கு சங்கர் மகாதேவன் வரவில்லை. அவருக்குப் பதிலாத்தான் உன்னிமேனன். உன்னிமேனன் பாடப்பாட அங்க இங்கயென்டு வெளிக்கிட்ட சின்னச்சின்ன வெளிச்சம் அரங்கு முழுக்க திட்டுத்திட்டா நிறைய்..ய்..ய்ய்.ய!! நானும் என்ட பங்குக்குத் "ஒளிவீச" கைத்தொலைபேசியை எடுத்து on பண்ணிட்டு தலைக்கு மேலை துக்கிப்பிடிச்சு பாட்டுத்தாளத்துக்கேற்ற மாதிரி எல்லாரோடையும் சேர்ந்து ஆட்டிக் கொண்டிருந்தன் (ஊரோட ஒத்துவாழ் என்டு சின்னனில சொல்லித்தந்திருக்கிறங்களே!!). பார்க்க நல்ல வடிவா இருந்தது. நாங்கள் தமிழ்க்குஞ்சுகள் ஆட்டினதைக்கண்டு தங்கட பாட்டுகளுக்கு மற்றவையும் "ஒளிவீச" வெளிக்கிட்டாங்க, ஆனாச் சரிவரல்ல. கடல்ல போற தனிக்கப்பலின்ட ஒரு விளக்கு மாதிரி அங்கயும் இங்கையுமாத்தான் அவர்களுக்கு ஏலுமாயிருந்துது. நாங்களும் அடிக்கடி தூக்கித்தூக்கி ஆட்டினாலும், பிறகு எல்லாரும் சவுத்திட்டம். உன்னிமேனனுக்குக் கிடைச்ச ரசிகர் சத்தத்தை வைச்சு ரகுமான் பிடிச்சிட்டார் தமிழ்ச்சனம்தான் இதுக்குள்ள நிறைய என்டு. பிறகென்ன, ஹிந்தி!ஹிந்தி!! என்டு பின்னாலயிருந்து கொஞ்சம் கூச்சலைச் சகிச்சுக்கொள்ள வேண்டியதாகிட்டுது. ஆனாப்பாருங்க ரஹ்மானுக்கு நல்ல வசதி, அவற்ற பாட்டுகள் தமிழ்லயும் ஹிந்தியிலயும் இருக்கு. இரண்டு மொழியையும் கலந்து பாடி ரெண்டு தரப்பையும் சந்தோசமாக்கினாங்க.

"அந்த அரபிக்கடலோரம்" பாட்டைத் தொடங்கிவிட ரஹ்மான் வந்தார். "ஹம்மா ஹம்மா"வை கொஞ்சம் வித்தியாசமா எல்லாம் படிச்சுட்டு பாட்டைத் தொடங்கினாங்க. பாட்டு முடியக்கிட்டவா நல்ல விரைவான தாளமா மாத்தி சனத்தை எழும்பி ஆட வைச்சிட்டார். தைய தையா சைய சையாவையும் அப்பிடித்தான் விரைவாயெல்லாம் பாடினாங்க. சிவமணி தன்ட "கை"வரிசையைக் காட்டினார். அவரோட சேர்ந்து பொஸ்னியாலேருந்து வந்த ஒரு பெண் (பொம்பே ட்ரீம்ஸுக்கு பாட்டுப் படிச்சவவாம்) பாடினா. முதல்ல opera பாட்டு மாதிரி இருந்தது, பிறகு கொஞ்சம் வித்தியாசமா வந்துது. என்ன உயரம் அவ!! இப்பிடி மூச்சை இழுத்துப் பிடிச்சுப் பாடுறதெண்டா எவ்வளவு பயிற்சி செய்திருக்கோணும். அசந்து போனன். முன்னுக்குப் பாடிக்கொண்டிருக்க, பின்னால நெருப்பு, கதகளி, இன்னும் வேறயென்னவோ மாதிரியெல்லாம் தனியொராள் பெரீ..ஈ..ஈ..சா உடுப்புப் போட்டுக் கொண்டு வந்து அங்காலயும் இங்காலயும் என்று ஒரே இடத்தில நின்டு அசைஞ்சு கொன்டிருந்தார். காதல் ரோஜாவே பாட்டுக்கு பின்புல நடனம் கொஞ்சம் (நல்ல மாதிரிச் சொல்லுறதெண்டா..) வித்தியாசமா இருந்துது. ஆணும் பெண்ணும். ஆண் அவக்குக் கிட்டப்போறதும் ஏதோ மீள்கயிற்றில(elastic) கட்டுப்பட்டவர் மாதிரி பிறகு இழுபட்டு மற்றப்பக்கம் வாறதுமா கொஞ்சம் ballet அசைவுகளோட அமைஞ்சிருந்தது நடனம்.

தொடக்கத்தில வந்து ஒரு குட்டி ஒரு ஆள் துள்ளிக்கொண்டு ஒரு ஹிந்திப் பாட்டுப் படிச்சார், பேர் கைலாஷ் ஆக இருக்க வேணும். நீட்டுத்தலைமயிரும் ஆளும்..பார்க்க முசிப்பாத்தியா இருந்துது. பிறகும் வந்து நடுவில என்னவோ ஹிந்தில கதைச்சுப் போட்டு நல்ல ஆட்டம் போடக்கூடிய பாட்டுகள் ரெண்டை ஆட்டம் போட்டுக் கொண்டே பாடினார். உச்சஸ்தாயிக்குப் போற திறமான குரல்.

சொல்ல மறந்திட்டனே..நிறைய்ய்ய்ய்ய விசிலடிச்சான் குஞ்சுகள்..எனக்குப் பக்கத்திலயிருந்த 50+ வயதுப் பெண்மணி உட்பட!

ஒரு பொப் பாட்டொண்டு பாடினவர் ஹரிஹரன்..வாய்க்கேல்ல. நல்ல காலம் சின்னப்பாட்டு. ட்ரம்ஸுக்கு ஏத்த மாதிரித்தான் கனபாட்டுகள். எனக்கு விளங்கல்ல ஏன் "தங்கத்தாமரை மகளே"யை மறந்தாங்க என்டு. போய்ஸ் படப்பாட்டு "சரிகாமே..பதநிசே" தான் கடைசியா ஆட வைச்ச பாட்டு. பிறகு 'வந்தே மாதரம்' பாடி விரைவில் மீண்டும் சந்திப்போம் என்டு சொல்லி நிகழ்ச்சியை முடிச்சார் இசைப்புயல்.

காட்டப்பட்ட முப்பரிமாணக் காட்சிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஏன் லண்டனுக்கு முப்பரிமாணக்கண்ணாடி போகவில்லையெனக் கண்டுபிடித்தேன். (தெரிந்து கொள்ள விரும்பினால் தனிமடல் போடவும்). இசைநிகழ்ச்சி - மிகவும் திறமானதென்று சொல்வதற்கில்லை, ஆனாலும் இசைப்புயலுக்கும், சிவமணிக்கும் அந்தப் புல்லாங்குழலிசைத்தவருக்கும் (நவீன்குமாரென நினைக்கிறேன், சரியாய்த்தெரியவில்லை) பொஸ்னியப் பெண்ணுக்கும், கைலாஷ்க்கும் ..(நான் போட்டிராத) hats off! உள்ளம் கேட்குதே once more! :O)

இந்த நிகழ்ச்சி மூலம் அவுஸ்திரேலிய டொலர் 100,000 உதயன் சிறுவர் இல்லத்துக்கு கிடைக்கும். அதிலே ஒரு கொஞ்சமாய் என் பங்கும்...

அறிக்கை / சுற்று நிருபம்

வணக்கம்,

இன்றைய அறிக்கை, வாசிப்பது நீங்கள்.

தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் சுயம்புத் (தான் தோன்றி) தலைவர் வசந்தனின் குணாதிசயங்கள் ஒரு அரசியல்வாதியினதைப் போன்றே இருப்பதைக் கண்டு தென் துருவ வலைப்பதிவர் பலரும்(!!!) அதிர்ச்சியடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த மாதம் மெல்பேண் நகரில் இவர் கூட்டிய சந்திப்பொன்றில் தென் துருவ வலைப்பதிவர் சங்கத்திற்குத் (தான் தோன்றி) தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது யாவரும் (சரி சரி..அநேகமானோர்) அறிந்ததே! இதனையடுத்து ஏனைய நகரங்களில் இருப்பவையனைத்தும் கிளைச்செயலகங்களெனவும் அவை சந்திப்புகளை நடத்த முன்னர் தம்மிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இவர்களது அறிவிப்புக்கு முதலேயே சந்திப்பொன்றை க்றைஸ்ட்சர்ச் நரகத்தில் மன்னிக்கவும் நகரத்தில் ஒழுங்கு செய்திருந்த துளசிக்கு இது பேரிடியாக அமைந்தது. துளசி, தென் துருவத்திலிருந்து வலைப்பதிவுலகிற்கு அளப்பரிய சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பைக் குழப்ப/திசைதிருப்ப சிட்னியில் ஒழுங்கு செய்யப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பொன்றின் சூத்திரதாரி தான் தோன்றி தலைவர் வசந்தனேயாவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தன்னிடம் அனுமதி பெறாமல் வலைப்பதிவர் சந்திப்பொன்று தென் துருவத்தில் நடக்கவிருந்தமை இவருக்குப் பொறுக்கவில்லை என மேலும் அறியப்படுகிறது. (சிட்னி சந்திப்பைப் பற்றியதொரு விபரம் பிந்தியதொரு அறிக்கையில் தரப்படும்)

இச்சந்திப்பினை உண்மையான ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ஷ்ரேயாவுடன் தனிமடலில் தொடர்பு வசந்தன் அவர் 16ம் திகதி இரவு சிட்னி வருவதாயும் தொலைபேசுவதாயும் தெரிவித்திருக்கிறார். அச்சந்திப்பிற்கான நாள், நேரம், இடம் என்பவற்றிற்குரிய தீர்மானங்களை வசந்தனிடமே விட்டிருந்த ஷ்ரேயாவுக்கு நேற்றுக் காலை மின்னஞ்சலில் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் பற்றி ஷ்ரேயா சொன்னதாவது:

முதலில் தான் வந்து சிட்னியில் ஒரு கிழமை தங்கப்போவதாயும், எப்போது சந்திப்பை வைத்துக் கொள்ளாலாமென்றும் கேட்டார். எனக்கு வசதியான நேரத்தை அவருக்குத் தெரியப்படுத்தினேன். தலைவர் என்ற மரியாதையிலும், சிட்னி விருந்தோம்பற் பண்பிலும் சந்திப்பைக் குறித்த கடைசித் தீர்மானங்களை அவரிடமே விட்டிருந்தேன். யோசித்துச் சொல்வதாய்ச் சொல்லியிருந்தார். இந்த தகவற் பரிமாற்றமெல்லாம் தனிமடலிலேயே நடைபெற்றது. இம்மடல்களிலே தனது ஆலோசகர்கள் சரியில்லை எனவும், அவர்களை @#$%^!* எனவும் விளித்திருந்தார். சங்கத்தின் தலைமைக் குழுவில் இல்லாத ஏனைய உறுப்பினர்களைச் சந்திப்பதில் வசந்தனுக்கிருந்த தயக்கம் அவரது தனிமடலில் நன்கு வெளிப்பட்டது. மேலும் "தலைவர்" என்கிற கெறுவில் தான் அவரது மடல்களும், தொடர்பாடலும் அமைந்திருந்தன.

தனது பாதுகாப்பிற்கு சிட்னியில் உத்தரவாதமில்லையெனவும் தனக்கு இப்போது சோதனைக் காலமென்ற படியாலும் தான் சிட்னிக்கு வருவதற்கில்லை எனவும் தனக்குப் பதிலாக @#$%^!* என ஏளனமாகக் குறிப்பிடப்பட்ட ஆலோசகர்/ சங்கச் செயலாளர் சயந்தனை அனுப்பி வைப்பதாயும் வசந்தன் அறிவித்துள்ளார். க்றைஸ்ட்சர்ச் மாநாட்டிற்கு ஆதரவாக நடந்து கொண்டமைக்காக சிட்னி சந்திப்பு ஏற்பாட்டாளரைக் குறித்து அதிருப்தி கொண்டிருந்த வசந்தன், சிட்னி சந்திப்பைப் பற்றித் தொடர்ந்து மடல்களெல்லாம் அனுப்பியது, அவரைக் குழப்பி, ஏமாற்றி, அவர் முகத்தில் கரி பூசுவதற்காகவே எனப் பரவலாக நம்பப்படுகிறது.

சங்க உறுப்பினர்களைச் சந்திப்பதில் தயக்கமும் சிட்னி அலுவலகம் அவரது பாதுகாப்பை உறுதி செய்யாதது போன்றதொரு பொய்மைத் தோற்றமும் காட்டும் தலைவரின் வார்த்தைகள் குறித்து கிளைச் செயலகங்கள் விசனம் தெரிவித்துள்ளன. தலைவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை அவருடைய சோதனைகளை எதிர்கொள்ள நல்வாழ்த்துக்களையும், சிட்னிக்கு வருகை தரவிருக்கும் அன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய செயலாளர் சயந்தனை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் சிட்னி அலுவலகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இக்கண்டன அறிக்கை வெளியிடப்படுகிறதெனத் தெரிய வந்ததும் வசந்தன் சிட்னிக் கிளையலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வறிக்கை வெளிவராது தடுக்க முயற்சித்தார். அது கைகூடாமற் போனதினால் தனது பெயரில் களங்கமேதும் வந்து விடாவிடாதிருக்கும் பொருட்டே (சுயநல நோக்கிலேயே) தனது வலைப்பதிவில் ஒரு ஒரு கற்பனையான உள்ளிடுகையை இட்டுள்ளார் என்பதை இத்தால் சிட்னி கிளையலுவலகம் உறுத்திப்படுத்துகிறது.

ஒரு புத்தகத்திலிருந்து..

கெமரூஜ் உடனான தனது அனுபவங்கள் பற்றி Francois Bizot எழுதிய The Gate புத்தகம் வாசித்தேன். நான் வாசித்த மற்றைய போர்க்காலப் புத்தகங்கள் போல் இது இருக்கவில்லை. கெமரூஜினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒரேயொரு வெளிநாட்டவர் இவராம்.

கம்போடியாவை விட்டு நீங்கியதை இப்படிக்குறிப்பிடுகிறார்: வார்த்தைகளில் சொல்ல முடியாத மிகுந்த வலியினூடாக, பிறக்கும் ஒரு சிசுவைப்போல நான் வெளித்தள்ளப்பட்டேன்..(I was expelled, like the newborn, in the torments of an unspeakable pain).

கடைசியாய்ச் சொல்கிறார்:

But on this Earth, there is no place of permanent refuge

"ஆனால், இந்தப்பூமியில் பாதுகாப்பான இடமென்றொன்று நிரந்தரமாக இல்லை"

துக்கச்செய்தி

மலேசியாவிலிருந்து எழுதும் மீனாவின் தாயார் காலமானதாக நா.கண்ணனின் வலைப்பதிவில் அறியக்கிடைத்தது. மீனாவுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாக்களின் பிரிவு வலிக்கும். நிரந்தரப்பிரிவு இன்னும் அதிகமாகவே. என்னென்னவோ நினைக்கிறேன்..சொல்லத்தெரியவில்லை.

அம்மாவின் நினைவுகளும் பாசமும் மீனாவையும் குடும்பத்தாரையும் தேற்றட்டும்.

அம்மாட்டப் போகப் போறன்!

திருமணமாகி இங்கே வந்த புதிதில் கணவர் வேலைக்குப் போய்விடுவார். தனியே வீட்டில் இருப்பேன். படிக்கத்தொடங்க இன்னும் 6 மாதம் இருந்தது. கணவர் வெளிக்கிட்டால், நான் குளித்து வெளிக்கிட்டு சாப்பிட்டு சித்தி வீட்டிற்குப் போவேன், அவவுக்கு வேலை இல்லாத நாட்களில். மற்ற நாளெல்லாம் வீட்டுக்குள்ளே. மற்றப்படி பக்கத்திலே கடைக்கும் நூலகத்துக்கும் தான். சில வேளைகளில் செய்ய ஒன்றுமிராது. மனமும் ஒரு நிலையில் இருக்காது. புது இடம், யாரும் தோழிகளும் இல்லை. கிடைத்தவர்களோ கணவரின் நண்பர்களின் மனைவியர். அவர்களுடன் இப்போதும் நல்ல நட்புண்டு, ஆனால் ஒத்த வயதிலர். ஒத்த வயதுக்காரருக்குள் இருக்கும் ஒட்டே தனி. என்னுடன் படித்து, நான் வர 7 வருடங்களுக்கு முன்பதாகவே இங்கு குடும்பமாகப் புலம் பெயர்ந்து வந்து விட்ட என் தோழியும் அவளது தங்கைகளும் வேலை படிப்பென்று திரிந்ததில் அங்கேயும் மனம் விட்டுப் பேச, வந்த புதிதில் எப்படியிருந்ததென்றெல்லாம் கேட்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

திருமணமாகிச் சில வாரங்களே! அப்படியிருக்க, "இங்கே இருக்க முடியவில்லை, அம்மாவிடம் போகப்போறேன்" என்று சொல்லலாமா என்று ஒரு ஏனென்று தெரியாத (தேவையற்ற) தயக்கமோ வெட்கமோ ஈகோவோ ஏதோ ஒன்று அவரிடம் மனம் விட்டுச் சொல்வதைத் தடுத்தது. ஆனாலும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டார். "வீட்டிலிருக்காதே.. நூலகம் போ, தொடர் வண்டியிலேறிப் போய் cityயைப் பார்" என்று நகரின் வரைபடத்தையும் தந்து அனுப்பினார் ("உனக்கு கையில map தந்ததே பிழையாப் போச்சு! - வீட்டிலயே இருக்கிறதில்லை" - இது இப்பத்தைய வசனம் ;O) . புதிதாக இரண்டு தெரு சுற்றி வந்து பெயர் என்னென்ன என்று அவருக்குச் சொல்ல வேண்டும். இதிலேயே எனக்கு ஓரளவு ஊர் பிடிபட்டது. cityயென்றால் எனக்கு ஏதோ பெரிய சொர்க்கம் மாதிரி. பின்னே.. கொழும்பு மாதிரி ஒரு சின்ன நகரிலேயே நேரம் செலவழித்த எனக்கு சிட்னி புதுமையாக இருந்தது. "பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பாத்த கதை"தான்.

ஊரில் என் நட்பு வட்டம் பெரிது. அப்படி இருந்து, அறிகிற / உணர்கிற எல்லாவற்றையும் இன்னொருவரிடம் பகிர்ந்தே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு இவரொருவரிடமும், பழக்கமற்ற புதியவர்களிடமும் தான் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றான போது ஏமாற்றமாகவிருந்தது. கணவருடனான பகிர்வு சரி. மூன்று நான்கு வாரங்களாய்த்தான் பழக்கமுள்ளவர்களிடம் நினைப்பதெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன! (இங்கைத்தேய வட்டம் இப்போது மிகவும் பெரிதாகிவிட்டது). செல்லமாகவே வளர்த்தார்களா.. சமையலும் ஒழுங்காத்தெரியாது. (ஏதோ..இது வரை மருத்துவமனைக்கு என் சாப்பாடு காரணமாகப் போகவில்லை!) எல்லாமே புதிது. சரியாக வரவில்லை என்றதும் சில தடவை முயற்சித்தேன்.. தொடர்ந்து செய்யத்தான் கைவரும் என்பது உறைக்கவில்லை. அதுவும் இன்னொரு ஏமாற்றம். இப்படிப் புது முயற்சிகள் ஏமாற்றத்தில் முடிந்தன.

இப்பிடியாக நிறைய எதிர்பார்ப்பிலிருந்து வித்தியாசப்பட்டதில் உணரத்தலைப்பட்டதெல்லாம் பகிர ஆளின்றி /ஆளிருந்தபோதிலும் வீண் வீம்பு / ஈகோ இடம் கொடுக்காததில் உள்ளுக்குள்ளேயே போட்டுப் பூட்டி புழுங்கியது இந்தா அந்தா என்று வெடிக்கும் நிலை வந்தது. 3 மாதத்தில் நுழைவனுமதி(விசா) மாற்ற வேண்டி வந்ததில் இலங்கை போய் 3 கிழமையில் திரும்பினேன். கொஞ்சம் ஆறியிருந்த மனம் திரும்பக் குப்பை சேர்க்கத் தொடங்கியது. ஒன்றிரண்டு மாதத்தில் ஏதோ உடல் நலக்குறைவும் ஏற்பட்டு வைத்தியரிடம் போக, அவர் சொன்னார், இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டுமென்று. தாதி உள்ளே அழைத்துச் சென்று பேசியபடியே இரத்தமெடுத்தா.

பிறகு கேட்டா: "நீ இங்கே வந்து எவ்வளவு நாள்?"

"4/5 மாதம்."

"இங்கே இடம், மனிதர், சூழல்..பிடித்திருக்கிறதா"

"ம்ம்.."

"இடமாற்றத்தை, வாழ்க்கை முறை மாற்றத்தை எப்படிக் கையாளுகிறாய்? இயலுமாக இருக்கிறதா?"

அவ்வளவுதான். ஆரம்பித்தது! எதுவா? நயகரா. அதுவும் தோற்றது போங்கள்! அடைத்து வைத்திருந்த அவ்வளவும் தீரும் வரை அழுதேன். நல்ல தாதி போல. என் முதுகை தடவிய படியே இருந்தா. கணவருக்கு ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும், என் அழுகையைப் பற்றிய அவருடைய புரிதல் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. "புதிய இடத்தில் முற்றும் புதிதாக வாழ்க்க தொடங்குவதென்பது கஷ்டமானது. இசைவடையக் கொஞ்சக் காலமெடுக்கும்" என்றெல்லாம் சொல்லி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தா. அங்கிருந்து வெளிக்கிடும் போது, தெரியாத ஒருவரின் முன் அழுது விட்டோமே என்று வெட்கம் பிடுங்கியது. அவவின் முகமோ பெயரோ ஞாபகமில்லை. வார்த்தைகளே மனதில் நிற்கின்றன.

அவ சொன்னதன் உண்மை விளங்க எனக்குக் கொஞ்சக் காலம் எடுத்தது. விரைவில் படிக்கவும் ஆரம்பித்ததில் மனதிலிருந்தவைகளும் படிப்படியாக அகன்று என் இயல்பு நிலைக்கு வந்தேன். படிப்பதற்கோ வேலைக்கோ செல்பவர்கள் வீட்டிலிலேயே இருப்பவர்களை விட மிகக்குறைந்த கால அளவிலே இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவது கண்கூடு. வெளியில் செல்லாது வீட்டிலேயே தம் வாழ்க்கையை நடத்துவோர் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே தம்மை அடைத்துக் கொள்கின்றனர். இருக்குமிடம் பற்றிய ஆர்வமோ வெளியுலகில் ஈடுபாடோ இல்லாதவர்களின் "பிடுங்கி நடப்படும் வாழ்க்கை" எப்படியிருக்குமென யோசித்துப்பாருங்கள். கவனத்தைக் செலுத்துவதற்கு வேறு செயற்பாடுகள் / பிள்ளைகள் இல்லாதவிடத்து இதுவரை பழகியன போய் புதியனவாய்ப் புகும் புதுச் சூழலும் மனிதரும் வாழ்க்கை முறையும் மனதைப் போட்டு அருட்டும். ஆரம்பிக்கும் புது வாழ்க்கை ஒருவருக்குத்தான் என்றால் பரவாயில்லை. மற்றவர் உறுதுணையாயிருக்கலாம். இருவருக்குமே புதிதாய் வேர்விட வேண்டிய சந்தர்ப்பமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். அடிப்படையாய் நாம் பார்த்துப் பழகியவைகளும் கலாச்சாரமும் இருக்க, புதிதாய் எதிர்கொள்ளக்கூடியவைகள் முற்றிலும் மாறுபட்டதாயிருப்பது சாத்தியமே. எப்படி இவற்றையெல்லாம் சமாளித்து, பழகியெடுப்பது என்று ஒரு மலைப்பு ஏற்படுவது இயல்பே. சில எதிபார்ப்புகளும் கணிப்புகளும் நிறைவேற, வேறு சிலது ஏமாற்றங்களாகலாம். புதிய வாழ்க்கைக்கென எவ்வளவுதான் ஒத்திகை பார்த்து, எதிர்கொள்ளக்கூடியதென எதிர்பார்த்து அதற்கேற்ப ஆயத்தஞ் செய்து நடந்து கொண்டாலும் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துவதாய் எதிர்பாராமல் நிகழ்பவையும் புதிய இடத்தில் சுயமாய் ஒரு வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் நினைத்திருந்தவைகளைப் புரட்டிப் போட்டு விடும்.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்கிறேனென நீங்கள் கேட்பீர்கள். புதுசா உறவினரொருவரின் மனைவி வந்திருக்கிறா. அவ ஊரிலிருந்த பொழுதிருந்தே நான் தொலைபேசியிருக்கிறேன். ஒத்த வயது. அவவும் துணைவர் வேலைக்குப் போக வீட்டிலிருக்கிறா. பயந்த சுபாவம், இருக்குமிடம் ஆராயும் ஆர்வமுமில்லை. திரைப்படம் பார்த்து, சமைத்து, தூங்கியெழுகின்றதிலேயே அவவின் நாட்கள் கழிகின்றன. எதையும் இலகுவாக எடுத்துக் கொள்பவள் என்று என்னைக் குறித்து எனக்குக் கொஞ்சம் (தற்)பெருமையான எண்ணமுண்டு. அப்படியான நானே புதிதாய் வேர் விட வேண்டி வந்ததில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். அவவைப் பார்த்தால் அதிகமாக மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் சாத்தியமிருக்கும் போலத் தோற்றுகிறது. இயன்றவரை நான் கடந்து வந்த உணர்வுகள், பெற்ற அனுபவங்கள், இங்கத்தேய வாழ்க்கை & நடைமுறைகள் பற்றிச் சொல்லிவருகிறேன். வேலை தேடுகிறா. விரைவில் கிடைத்தால் நலம்.

இங்கே வந்து அடுத்த கிழமை என்னிடம் பேசிக்கொண்டிருந்தவ கேட்கிறா: "ஏங்க ஷ்ரேயா, உங்க வேலைய செவ்வாயிலேருந்து சனி வரைன்னு மாத்திக்க முடியாதா?" ஒரு குழந்தையிடம் பேசுவது போலிருக்கிறது.

இன்னொருமுறை வேண்டும்..

பள்ளிக்கூட விடுமுறை வந்தால் ஊரிலேயே இருப்பதென்பது அரிது. எங்கேயாவது போவோம். அதுக்காக ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒவ்வொரு ஊர் போய்ப் பார்த்தோம் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. கொழும்பு கம்பஹா, யாழ்ப்பாணம். இவ்வளவும்தான். சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள மாதிரி.

இவற்றிலேயும் கம்பஹா போனால் போடுற கும்மாளம்! அந்த ஊர்களில் நிலத்தில் சிறு சிறு கற்கள் நிறையக்கிடக்கும். செருப்பில்லாமல் முதல் இரண்டு நாட்களுக்கு நடக்க ஏலாம இருக்கும். பிறகு பழகிவிடும். பழகின பிறகு வெறுங்காலோட நடக்கிறதென்ன..ஓடியும் திரியலாம். (இப்ப போனா எல்லா நாளும் செருப்புத் தேவைப்படும் ..பின்னென்ன.. காப்பெட்டிலயும் பளிங்குத்தரையிலயும் தானே நடக்கிறது!)

எம்மி வீட்டில் அவவின் தம்பி மகள் என்னை விட ஒரு வயது மூத்தவ. அவவுடனும், பக்கத்திலிருக்கும் அவவின் தோழிகளுடனும் சேர்ந்து ஒரே விளையாட்டுத்தான். வீட்டுக்குக் கிணறு இருந்தாலும் "பல்லெஹா லிந்த"(கீழ் கிணறு) ல் குளிக்கும் சுகமே தனி. கிணறு என்று பெயர்தான் தவிர அங்கே சீமெந்தும் இல்லை துலாவும் இல்லை. மேடான இடத்தில் உள்ள வீட்டு வழியாக நடந்து வந்தால், வழி நெடுக இறப்பர், தென்னை, கமுகு, முந்திரிகை, கொறுக்காப்புளி, நமினங், பலா, வில்வம், விளா, மா, இவற்றுடன் பெயர் மறந்துவிட்ட & தெரியா மரங்களும் எலுமிச்சை, மிளகாய், கறுவா, கோப்பிச் செடிகளும் வளர்ந்து இருக்கும். எத்தனையோ ஆண்டாய் வீட்டிலிருந்து கிணற்றுக்கு நடந்த ஒற்றையடிப் பாதை பச்சைப் புல்லுக்கு நடுவில், ஆறொன்று வளைந்து நெளிந்து ஓடுவதைப் போல சிறுகல் நிரம்பிக் கிடக்கும். பள்ளத்திலே ஒரு 10 -12 அடி ஆழத்துக்கு கிண்டின வளைந்த மூலைகளுள்ள ஒரு 6 அடி x 7 அடி குழிதான் கிணறு. மேல் மட்டத்தில் தண்டவாளத்துக்கு ஸ்லீப்பர் கட்டை போல பலகைகள் (ஆனால் அடுத்தடுத்துப்) போட்டிருக்கும். மேட்டுப்பகுதியிலிருந்து இறங்கி வருவதற்கு மண்ணும் சுற்றி நின்ற மரங்களின் இயற்கையான வேரின் ஓட்டமும் கொண்டு அமைத்த படிகள். குளித்த/கழுவிய நீர் போக ஒரு ஓடை மாதிரிச் செய்திருப்பார்கள். கிடுகு பின்னி ஊற விட்டிருப்பார்கள். உடுப்புத் தோய்க்க ஒரு கல். கிணற்றுக்குப் பக்கத்தில் சின்னதொரு மண்மேடு. அதற்கப்பால் பசுமையான வயல். அரை மணி நேரத்திலே மூன்று நான்கு தடவை கேட்கும் தொடர்வண்டிச் சத்தம், மரத்தில் இருந்து கூவும் குயில் மற்றும் பெயர் தெரியாப் பறவைகள் என்று வெயில் தெரியாமல் அந்தக் கிணற்றில் கை வாளியால் அள்ளிக் குளிப்பது தனிச் சுகம். அதுவும் வேறெங்கு போனாலும் தலைக்கு மேல் ஷவரைத் திறந்து நின்று குளித்துப் பழகினால் இந்தக் குளிப்பு சொர்க்கம் மாதிரித்தானே இருக்கும். :O)

குளிக்கப் போவதற்கு இல்லாத ஆயத்தமெல்லாம் செய்வோம். அள்ளிக்குளிக்கும் வாளிக்குள்ளே குளித்த பின் அணியும் ஆடையும் சவர்க்காரமும் துவாயும். சொன்ன அனைவரும் வர முதல் நீ போகக்கூடாது என்று "விதிமுறைகளும்" கள்ளமாய் எடுத்துக்கொண்டு போகும் உப்பு மிளகாய்த்தூளும் (எதற்கா? வழியில் மா, நமினங் மரம் இருக்கென்று சொன்னேன் தானே..அதுக்குத்தான்.) இந்த நமினங் ஒரு விதமான பழம். பார்த்தால் காது போன்ற அமைப்பில் சுருக்கங்களுடன் இருக்கும். கடித்த அப்பிளின் உட்புறம் வெண்மையிலிருந்து ஒரு வித சிவப்பாய் மாறுவது போல இதன் நிறமும் மாறும். காலையில் 8 மணி போலத் தொடங்கி மத்தியானம் 12 ௧ மணி வரை போகும் விளையாட்டு. பிறகு குளிக்க ஆயத்தப்படுத்தப் பிரிவது 10 நிமிஷத்துக்கு. பிறகு குளிக்கப் போனவளுகளைத்தேடி யாராவது வரும்மட்டும் ஒன்றரை இரண்டு மணித்தியாலத்துக்கு நீராடல்தான். சில வேளைகளில் அட்டை வரும் என்று பயப்படுத்தினால் அன்றைக்கு சேற்று நிறத்தில் கலங்கிய தண்ணீரில் காலில் வந்து ஒட்டும் இலையும் எனக்கு "அட்டை"தான். மேட்டுப்பகுதிக்குத் தாவினால் தண்ணி(யின் நிறம்) தெளியும் வரை திரும்ப இறங்குவதில்லை! குளித்துமுடித்து உடுப்புக்கழுவி, கழுவின உடுப்பைக் கையிலும் ஒரு வாளி நிறையத் தண்ணியும் கொண்டு வீடுகளுக்குப் போவோம்.

பின்னேரத்தில் புளியங்கொட்டையும் கிரிக்கெட்/எல்லேயும் விளையாடுவோம். படிப்போம். (என்ன படிப்பு.. படத்துக்கு நிறம் பூசிறது தான்) பிறகு ஒரு ஐந்து மணிபோல போய் கறுவா மரத்தின்(செடியின்?) இலைத்தண்டைக் கடித்துச் சுவைத்த படியே மஞ்சாடி பொறுக்கிறது. சின்னனா சிவப்பா பாக்க வடிவா இருக்கும். (அது நிறயச் சேத்துக் கொண்டு மட்டக்களப்புக்குப் போனா, அதில கொஞ்சத்தைக் குடுத்தா, "காய்கள்" சன்னங்களா பாவிக்கப்படுற தன்ட மரத்துவக்கை செல்வம் அண்ணா 2/3 பின்னேரங்களுக்குக் கடன் தருவார்!)
பின்னேரம் சாமியும் கும்மிடவேணும். புத்தருக்கு "சரணம் கச்சாமி" சொல்லி அவ கும்பிடுவா. நான் அதையும் சொல்லி, அதுக்குப் பிறகு ரெண்டு தேவாரமும் படிப்பன். பூவெல்லாம் போட்டு தடல்புடலா பூசையும் நடக்கும். தேவாரம் தெரியாதுதானே என்ட தோழிக்கு. அதனால மத்தியானத்தில "படிக்கிற" நேரத்தில "தேவாரப்பட்டறை" நடக்கும். நல்லாச்சிரிக்கலாம்.. உச்சரிப்பைக் கேட்ட அம்மனோ.. சிவபெருமானோ.. புத்தரோ.. ஓடியே போயிடுவாங்க! ;O)

அங்கே மின்சாரம் 89 - 90ம் ஆண்டில்தான் வந்தது. அது வரை தொலைக்காட்சி இல்லை எங்களைத் தொந்தரவு பண்ண. சிலர் car கலத்திலே பாத்தவங்கதான். இரவில நிலாவோ இல்லையோ.. கட்டாயம் வெளி முற்றத்தில இருந்து ஆளுக்கு ஒவ்வொருவர் மடியில் தலை வச்சிருந்து கதை கேட்பம்.

வெளிக்கிடுறநாள் வந்தா அதைப்போல துக்கம் கிடைக்காது. ஏதோ இனிக்கிடைக்காது மாதிரி உள்ள இளநீரெல்லாம் ஆய்ஞ்சு தரச்சொல்லி வழுக்கல் எல்லாம் போட்டுக் குடிக்கிறதும், உலகத்திலயே கடைசி நாள் போல பலகாரம் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கென்டு பிரத்தியேகமாக் கட்டின ஊஞ்சல் ஆடி தோழிக்கு பதினைஞ்சு தரம் அடுத்த முறை வரும் போது என்ன செய்வது என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கையில் எம்மி கூப்பிடுவா. "ஏந்தான் இந்த அலுப்புப் பள்ளிக்கூடம் தொடங்குதோ!" என்று பலவிதமான திட்டுக்களோடவே, வெட்டக் கூட்டிக்கொண்டு போறது மாதிரி இழுபட்டுக் கொண்டு போவேன்.

இனிமேல் போனால் அந்த கவலையற்ற வயதில் செய்தவற்றின் நினைவுத்தடங்க்ள் தான் எஞ்சியிருக்கும். சாப்பாட்டுக்கோ குளிப்புக்கோ இருட்டுக்கோ நித்திரைக்கோ சொல்லவோ/கூப்பிடவோ எம்மியிருக்க மாட்டா. நேரத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்கிறதொரு அர்த்தமில்லாத அவசரமுள்ள ஒரு adult ஆக நான்..

பெட்டகம்