இன்னொருமுறை வேண்டும்..

பள்ளிக்கூட விடுமுறை வந்தால் ஊரிலேயே இருப்பதென்பது அரிது. எங்கேயாவது போவோம். அதுக்காக ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒவ்வொரு ஊர் போய்ப் பார்த்தோம் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. கொழும்பு கம்பஹா, யாழ்ப்பாணம். இவ்வளவும்தான். சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள மாதிரி.

இவற்றிலேயும் கம்பஹா போனால் போடுற கும்மாளம்! அந்த ஊர்களில் நிலத்தில் சிறு சிறு கற்கள் நிறையக்கிடக்கும். செருப்பில்லாமல் முதல் இரண்டு நாட்களுக்கு நடக்க ஏலாம இருக்கும். பிறகு பழகிவிடும். பழகின பிறகு வெறுங்காலோட நடக்கிறதென்ன..ஓடியும் திரியலாம். (இப்ப போனா எல்லா நாளும் செருப்புத் தேவைப்படும் ..பின்னென்ன.. காப்பெட்டிலயும் பளிங்குத்தரையிலயும் தானே நடக்கிறது!)

எம்மி வீட்டில் அவவின் தம்பி மகள் என்னை விட ஒரு வயது மூத்தவ. அவவுடனும், பக்கத்திலிருக்கும் அவவின் தோழிகளுடனும் சேர்ந்து ஒரே விளையாட்டுத்தான். வீட்டுக்குக் கிணறு இருந்தாலும் "பல்லெஹா லிந்த"(கீழ் கிணறு) ல் குளிக்கும் சுகமே தனி. கிணறு என்று பெயர்தான் தவிர அங்கே சீமெந்தும் இல்லை துலாவும் இல்லை. மேடான இடத்தில் உள்ள வீட்டு வழியாக நடந்து வந்தால், வழி நெடுக இறப்பர், தென்னை, கமுகு, முந்திரிகை, கொறுக்காப்புளி, நமினங், பலா, வில்வம், விளா, மா, இவற்றுடன் பெயர் மறந்துவிட்ட & தெரியா மரங்களும் எலுமிச்சை, மிளகாய், கறுவா, கோப்பிச் செடிகளும் வளர்ந்து இருக்கும். எத்தனையோ ஆண்டாய் வீட்டிலிருந்து கிணற்றுக்கு நடந்த ஒற்றையடிப் பாதை பச்சைப் புல்லுக்கு நடுவில், ஆறொன்று வளைந்து நெளிந்து ஓடுவதைப் போல சிறுகல் நிரம்பிக் கிடக்கும். பள்ளத்திலே ஒரு 10 -12 அடி ஆழத்துக்கு கிண்டின வளைந்த மூலைகளுள்ள ஒரு 6 அடி x 7 அடி குழிதான் கிணறு. மேல் மட்டத்தில் தண்டவாளத்துக்கு ஸ்லீப்பர் கட்டை போல பலகைகள் (ஆனால் அடுத்தடுத்துப்) போட்டிருக்கும். மேட்டுப்பகுதியிலிருந்து இறங்கி வருவதற்கு மண்ணும் சுற்றி நின்ற மரங்களின் இயற்கையான வேரின் ஓட்டமும் கொண்டு அமைத்த படிகள். குளித்த/கழுவிய நீர் போக ஒரு ஓடை மாதிரிச் செய்திருப்பார்கள். கிடுகு பின்னி ஊற விட்டிருப்பார்கள். உடுப்புத் தோய்க்க ஒரு கல். கிணற்றுக்குப் பக்கத்தில் சின்னதொரு மண்மேடு. அதற்கப்பால் பசுமையான வயல். அரை மணி நேரத்திலே மூன்று நான்கு தடவை கேட்கும் தொடர்வண்டிச் சத்தம், மரத்தில் இருந்து கூவும் குயில் மற்றும் பெயர் தெரியாப் பறவைகள் என்று வெயில் தெரியாமல் அந்தக் கிணற்றில் கை வாளியால் அள்ளிக் குளிப்பது தனிச் சுகம். அதுவும் வேறெங்கு போனாலும் தலைக்கு மேல் ஷவரைத் திறந்து நின்று குளித்துப் பழகினால் இந்தக் குளிப்பு சொர்க்கம் மாதிரித்தானே இருக்கும். :O)

குளிக்கப் போவதற்கு இல்லாத ஆயத்தமெல்லாம் செய்வோம். அள்ளிக்குளிக்கும் வாளிக்குள்ளே குளித்த பின் அணியும் ஆடையும் சவர்க்காரமும் துவாயும். சொன்ன அனைவரும் வர முதல் நீ போகக்கூடாது என்று "விதிமுறைகளும்" கள்ளமாய் எடுத்துக்கொண்டு போகும் உப்பு மிளகாய்த்தூளும் (எதற்கா? வழியில் மா, நமினங் மரம் இருக்கென்று சொன்னேன் தானே..அதுக்குத்தான்.) இந்த நமினங் ஒரு விதமான பழம். பார்த்தால் காது போன்ற அமைப்பில் சுருக்கங்களுடன் இருக்கும். கடித்த அப்பிளின் உட்புறம் வெண்மையிலிருந்து ஒரு வித சிவப்பாய் மாறுவது போல இதன் நிறமும் மாறும். காலையில் 8 மணி போலத் தொடங்கி மத்தியானம் 12 ௧ மணி வரை போகும் விளையாட்டு. பிறகு குளிக்க ஆயத்தப்படுத்தப் பிரிவது 10 நிமிஷத்துக்கு. பிறகு குளிக்கப் போனவளுகளைத்தேடி யாராவது வரும்மட்டும் ஒன்றரை இரண்டு மணித்தியாலத்துக்கு நீராடல்தான். சில வேளைகளில் அட்டை வரும் என்று பயப்படுத்தினால் அன்றைக்கு சேற்று நிறத்தில் கலங்கிய தண்ணீரில் காலில் வந்து ஒட்டும் இலையும் எனக்கு "அட்டை"தான். மேட்டுப்பகுதிக்குத் தாவினால் தண்ணி(யின் நிறம்) தெளியும் வரை திரும்ப இறங்குவதில்லை! குளித்துமுடித்து உடுப்புக்கழுவி, கழுவின உடுப்பைக் கையிலும் ஒரு வாளி நிறையத் தண்ணியும் கொண்டு வீடுகளுக்குப் போவோம்.

பின்னேரத்தில் புளியங்கொட்டையும் கிரிக்கெட்/எல்லேயும் விளையாடுவோம். படிப்போம். (என்ன படிப்பு.. படத்துக்கு நிறம் பூசிறது தான்) பிறகு ஒரு ஐந்து மணிபோல போய் கறுவா மரத்தின்(செடியின்?) இலைத்தண்டைக் கடித்துச் சுவைத்த படியே மஞ்சாடி பொறுக்கிறது. சின்னனா சிவப்பா பாக்க வடிவா இருக்கும். (அது நிறயச் சேத்துக் கொண்டு மட்டக்களப்புக்குப் போனா, அதில கொஞ்சத்தைக் குடுத்தா, "காய்கள்" சன்னங்களா பாவிக்கப்படுற தன்ட மரத்துவக்கை செல்வம் அண்ணா 2/3 பின்னேரங்களுக்குக் கடன் தருவார்!)
பின்னேரம் சாமியும் கும்மிடவேணும். புத்தருக்கு "சரணம் கச்சாமி" சொல்லி அவ கும்பிடுவா. நான் அதையும் சொல்லி, அதுக்குப் பிறகு ரெண்டு தேவாரமும் படிப்பன். பூவெல்லாம் போட்டு தடல்புடலா பூசையும் நடக்கும். தேவாரம் தெரியாதுதானே என்ட தோழிக்கு. அதனால மத்தியானத்தில "படிக்கிற" நேரத்தில "தேவாரப்பட்டறை" நடக்கும். நல்லாச்சிரிக்கலாம்.. உச்சரிப்பைக் கேட்ட அம்மனோ.. சிவபெருமானோ.. புத்தரோ.. ஓடியே போயிடுவாங்க! ;O)

அங்கே மின்சாரம் 89 - 90ம் ஆண்டில்தான் வந்தது. அது வரை தொலைக்காட்சி இல்லை எங்களைத் தொந்தரவு பண்ண. சிலர் car கலத்திலே பாத்தவங்கதான். இரவில நிலாவோ இல்லையோ.. கட்டாயம் வெளி முற்றத்தில இருந்து ஆளுக்கு ஒவ்வொருவர் மடியில் தலை வச்சிருந்து கதை கேட்பம்.

வெளிக்கிடுறநாள் வந்தா அதைப்போல துக்கம் கிடைக்காது. ஏதோ இனிக்கிடைக்காது மாதிரி உள்ள இளநீரெல்லாம் ஆய்ஞ்சு தரச்சொல்லி வழுக்கல் எல்லாம் போட்டுக் குடிக்கிறதும், உலகத்திலயே கடைசி நாள் போல பலகாரம் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கென்டு பிரத்தியேகமாக் கட்டின ஊஞ்சல் ஆடி தோழிக்கு பதினைஞ்சு தரம் அடுத்த முறை வரும் போது என்ன செய்வது என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கையில் எம்மி கூப்பிடுவா. "ஏந்தான் இந்த அலுப்புப் பள்ளிக்கூடம் தொடங்குதோ!" என்று பலவிதமான திட்டுக்களோடவே, வெட்டக் கூட்டிக்கொண்டு போறது மாதிரி இழுபட்டுக் கொண்டு போவேன்.

இனிமேல் போனால் அந்த கவலையற்ற வயதில் செய்தவற்றின் நினைவுத்தடங்க்ள் தான் எஞ்சியிருக்கும். சாப்பாட்டுக்கோ குளிப்புக்கோ இருட்டுக்கோ நித்திரைக்கோ சொல்லவோ/கூப்பிடவோ எம்மியிருக்க மாட்டா. நேரத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்கிறதொரு அர்த்தமில்லாத அவசரமுள்ள ஒரு adult ஆக நான்..

17 படகுகள் :

துளசி கோபால் September 05, 2005 1:20 pm  

இதுதானே வேணாங்கறது:-)
இப்ப இங்கே என் மண்டைக்குள்ளெ கொசுவர்த்தி ஏத்தியாச்சு.

ஆத்துலே போய் குளிக்கறேன்னுட்டு நாலஞ்சுமணிநேரம் கழிச்சுக் கண்ணெல்லாம் சிவந்துபோய்வந்து வீட்டுலே நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன். ஹூம் ... இனி அதுபோல ஒரு காலம் வருமா?

`மழை` ஷ்ரேயா(Shreya) September 05, 2005 1:52 pm  

ஆத்துலே தண்ணி வந்துதா? :O)

எம்மி ஊர்லே நல்ல அகலமான வாய்க்கால்லே தண்ணி ஓடும். எனக்கு நீச்சல் தெரியாததால விடமாட்டா. படிக்கரையில குந்தியிருந்து வேடிக்கை பார்ப்பதோடு சரி. :O|

துளசி கோபால் September 05, 2005 2:42 pm  

எல்லாம் 40/45 வருசத்துக்கு முன்னே!
அப்பெல்லாம் ஆத்துலே தண்ணி ஓடிக்கிட்டு இருந்துச்சு.

வசந்தன்(Vasanthan) September 05, 2005 6:39 pm  

நல்லாயிருக்குப் பதிவு.

G.Ragavan September 05, 2005 11:12 pm  

தூத்துக்குடியில ஏது ஆறு? கடலுதான்.

"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்"ன்னு படிச்சிட்டு வந்து தூத்துக்குடி அழகில்லையான்னு நெறையப் பேருகிட்ட கேட்டுட்டுத் திரிஞ்சேன். அந்தளவும் தூத்துக்குடிப் பாசம்.

கருநாடகாவில் சங்கமுன்னு ஒரு எடம். காவிரிக் கரைதான். அங்க ரெண்டு மூனு கிளையாறுங்க சேருதாம். அங்க போய்க் குளிச்சோமுல்ல....ஆளரவே இல்லை. பஸ்ஸே எப்பவோ ஒரு வாட்டி வரும். ஆகையால நாம வண்டி வெச்சுத்தான் போகனும். பைக்ல போனோம்.

உருண்டு பெரண்டு தண்ணீலயும் மண்ணுலயும். அடடா! என்ன சுகம்...என்ன சுகம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 06, 2005 9:09 am  

நிறையப்பேருக்கு ஆறு அருவிகள்ல குளிச்சுக் களிச்ச நினைவுகள் இருக்குப் போல.

சலசலத்து ஓடும் நீர் தரும் சந்தோசமே தனி!

Ganesh Gopalasubramanian September 06, 2005 2:49 pm  

// தூத்துக்குடியில ஏது ஆறு? கடலுதான்.//
நம்மூர்ல ரெண்டும் கிடையாதுங்க...... கம்மாய்தான்

துளசி கோபால் September 06, 2005 3:00 pm  

ஷ்ரேயா சொல்ல விட்டுப் போச்சு.

உங்க பதிவோட முகப்பு ரொம்ப நீட்டா ஜம்முன்னு இருக்கு.

சிம்பிள் ஆளுப்பா நீங்க:-)

ramachandranusha(உஷா) September 06, 2005 3:04 pm  

ஏங்க இப்படி எல்லாம் எழுதுவது கொஞ்சம் கூட நல்லாயில்லே!
இப்படிக்கு,
100% துர்பாக்கிய நகரவாசி

`மழை` ஷ்ரேயா(Shreya) September 06, 2005 4:50 pm  

வாங்க! வாங்க!! உஷா. . திரும்பப் போனால் சின்ன வயதில் கண்ணில் பட்டிருக்காத (பட்டிருந்தாலும் கண்டு கொள்ளப்பட்டிருக்காத) சேறு மற்றும் இன்ன பிற கட்டாயம் இப்ப கண்ணில் படும். "அழுக்கு" என்று மனதில் நெருடும். ஏனென்றால் நானும் இப்ப 100% நகரவாசிதான் :O(

`மழை` ஷ்ரேயா(Shreya) September 06, 2005 4:51 pm  
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) September 06, 2005 4:53 pm  

நன்றி துளசி. இப்பிடி எடுக்கத்தான் முயற்சி செய்து கையச் சுட்டதிலே 2 நாள் "பச்சை நிறமே பச்சை நிறமே" என்று ஆகினது. ஆசைவந்தது "பிரதிப்"பின் தலைப்பைப் பார்த்து. (கொஞ்சம் பிரதி பண்ணுறது தானே அழகு..முழுக்கப் பண்ணினா ஈயடிச்சான் கொப்பியாகிடாது? ;O)

ramachandranusha(உஷா) September 06, 2005 5:26 pm  

நீங்க வேற! கிராமத்து சமாசாரங்களை சினிமாலதாங்க பார்த்திருக்கேன் :-(

`மழை` ஷ்ரேயா(Shreya) September 07, 2005 8:45 am  

//கிராமத்து சமாசாரங்களை சினிமாலதாங்க பார்த்திருக்கேன் :-( //

உண்மையா??? (இதுக்கு மேலே விலாவாரியாக் கேட்டு உங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ள மாட்டேன்) விரைவில் "கிராமத்துச் சாமாச்சாரங்கள்" நேரிலே பார்க்கக் கிடைக்கட்டும்.

ஆறு, குளம் பர்ர்க்க வேணுமென்டா ஒரு பறப்பு (கடல் நீரிலே "நடை" முடியாதே!) நியூஸி மாநாட்டுக்குப் போய்ட்டு வாங்க. துளசிய மிஞ்சின guide எங்கேயாவது இருக்காங்களா என்ன! :O)

Anonymous September 11, 2005 7:08 pm  

Till ma age of ten I lived in out back of kurunegala mmm U remind me that time mmm irunthalum ungala vida sutti naan. Neengal sonna ellame eneku athupadi... neengal athai elam remind pannureenga

வானம்பாடி September 13, 2005 6:58 pm  

நல்ல பதிவு ஷ்ரேயா.

சீமெந்து
துலா
கறுவா

அருஞ்சொற்பொருள் ப்ளீஸ்!

`மழை` ஷ்ரேயா(Shreya) September 14, 2005 12:10 pm  

சீமெந்து - cement
கறுவா = பட்டை = cinnamon

துலா - தண்ணீர் இறைக்க பயன்படும். ஒரு முனையில் வாளியும் மற்ற முனையில் ஏதாவது ஒரு பாரமும் (அநேகமாக ஒரு பெரிய கல்)கட்டியிருக்கும். see saw up & down மாதிரித் தொழிற்படும்! :O)

பெட்டகம்