இரண்டாம் தரிப்பு

-:சற்றே நீண்ட இடுகை, பஞ்சி பாராமல் எழுதச் சொல்லி பிரபா சொன்னதால் :O) :-

பரீ(நன்றி சிறி அண்ணா)யிலிருந்து அடுத்த நாடு நோக்கின பயணம். இந்தப்பயணம் ரயிலில். [ஐரோப்பாவில் ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வது பிரசித்தம். ஒவ்வொரு பிரதான நகரத்திலிருந்தும் இன்னொரு நகரத்திற்கு ரயிலோ பேருந்தோ செல்கிறது. பயன்படக்கூடிய சுட்டிகள் கீழே.]


ரயிலைப் பற்றி் - மிகவும் வசதியான இருக்கைகள். துப்பரவான கழிவறைகள்.பயணப்பொதிகளை வைப்பதற்கென்றே ஒவ்வொரு பெட்டியின் முன் பின் பகுதிகளில் தனியிடம். இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்). முன்பதிவு செய்து வைத்திருந்தது TGVயில். இது ஒரு கடுகதி ரயில். பயணம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில்/குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை உட்கார்ந்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுமாம். வண்டி மிக வேகமாகப் போவதால் சமநிலை தவறக்கூடும் என்பதாலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. நின்று பார்க்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கார் டு நோட் (Gare du Nord)இற்கு நாங்கள் போக்குவரத்து நெரிசலுக்கூடாக நீந்திப் போய்ச் சேர்ந்த போது நேரம் காலை 7.42. ரயிலோ 7.45இற்கு. சின்னையா சொல்லச் சொல்ல காலை ஆறரை வரை முதல்நாள் கடையில் எங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தெரியாமல், எங்கள் நிறத்தில் தெரிந்த ஒருவரைப் பிடித்ததில் அவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்து தமிழும் தெரிந்தவராகி இருந்து விட்ட பாவத்தில், அவருதவியால் வாங்கிக் கொண்டு வந்த சிம் மை செல்பேசியில் போட்டு நோண்டிக்கொண்டிருந்துவிட்டுக் குளிக்கப்போன கண்ணன் வாங்கின திட்டை
நான் திரும்ப வாங்கவேண்டும் என்பதால் அவரை மட்டும் காருக்குள் விட்டுவிட்டு அடுத்தாய் வண்டி எத்தனைக்கு என்று பார்க்க கண்ணன், தம்பியுடன் சேர்ந்து நானும் ஓடினேன்.

பயணச் சீட்டு விற்பனைப் பகுதிக்குப் போனால், அங்கிருந்த பெண் சொன்னதின் படி அடுத்த TGV அன்று மாலைதான். வேறென்ன வண்டியுள்ளது என்று விசாரித்தால், SNCF இருக்கிறது. ஆனால் பயண நேரம் அதிகம் என்றார். சரியென்று அதற்குரிய சீட்டை வாங்கினால், அது TGVயினதை விட 40யூரோ குறைய என்று சொல்லி அந்தக் காசை மீளத் தந்தார். ஆனால் 9.40க்கு ரயில் புறப்படுவதோ கார் லெ எஸ்ற்றிலிருந்து(Gare l'est). அங்கே போய் ரயிலேறினோம். இரண்டு மணித்தியாலங்களின் பின் கண்விழித்தேன். பிரான்சின் நகர்ப்புறம் மறைந்து புல்வெளிகள் நிறைந்த நாட்டுப்புறம் கண்ணில் பட்டது.சில மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது. எனக்கு எந்தப் பக்கம் படமெடுப்பதென்றே தெரியவில்லை..அவ்வளவு அழகு. இந்தப்பக்கம் பார்த்தால் பச்ச்ச்சைப் புல்வெளிகள், அந்தப்பக்கம் மலைகள். இரண்டு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இலையுதிர்காலம் நிறந்தீட்டின இலைகளுடன் மரங்கள். கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிறு நீர்நிலைகளும் அவற்றில் மீன்பிடிப்பவர்களும் அவர்கள் வசித்திருக்ககூடிய பண்ணை வீடுகளும் எங்களைக் கடந்து போன காட்சிகளுள் அடங்கும்.

பாசல் நகரை அடைந்து அடுத்த ரயிலேறி - சுங்க அதிகாரிகள்/காவலர் எங்கிருந்து வருகிறோம், எங்கு நிற்போம், எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்டுவிட்டு உள்ளே சுவிசுக்குள்ளே விடுகிறார்கள் - வின்ரத்தூர் நகரை அடைந்தோம். தங்கியிருந்த வீட்டில் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்த இரு சிறு பெண்கள். நல்ல்ல்லாவே தமிழ் கதைக்கிறார்கள்/எழுதுகிறார்கள்
/வாசிக்கிறார்கள்.

ஒரு பாலர் பாடசாலைக்கு அடுத்த நாள் போனோம். வகுப்பில் எத்தனை பிள்ளைகளோ அத்தனை பேரின் தாய்மொழியிலும் 'வணக்கம்' என்று சொல்லி ஒரு வரவேற்புப் பாடல் ஒவ்வொருநாட் காலையிலும் படிக்கப்படுமாம். நல்லம் என்ன? பாலர் பாடசாலைகளில் கரல்ஸ் பாடிப் போகிற வழக்கம் இருக்கிறது. Turnip கிழங்கினை சிறு மூடியுள்ள ஒரு சட்டி போல வெட்டிக் கொண்ட பின் - கிண்டியெடுத்த கிழங்கின் உள்ளீடு அவித்து ஒரு சூப் மாதிரிச் செய்யப்பட்டு ஊர்வலம் போவதற்கு முதல் நாள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் - அதற்குள் மெழுகுதிரி வைத்து ஊர்வலம் போவார்கள்.. வீடு வீடாய் கரல் பாடிக் கொண்டு. அநேகமானோர் இனிப்புகள் பரிசளிப்பார்களாம். நாங்கள் போன அன்று இருவரும் ஊர்வலம் போய் வந்திருந்தார்கள்.

போய் நின்ற நாள் முதல் அங்கத்தேய வெண்ணெய்க்கட்டிகளையும் சொக்கிளேற்றையும் ஒரு கை பார்த்தோம். :O) பிரபல காப்புறுதி நிறுவனமான வின்ரத்தூர் க்ரூப் இந்நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. வின்ரத்தூரின் பிரபல தேவாலயத்தைப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனால் புனித தந்தையர் பேதுரு+பவுலின் ஆலயத்தைப் போய்ப் பார்த்தேன். நடந்து போகக்கூடிய தூரத்தில் இருந்ததும் தனி ஆராய்ச்சிக்குக் காரணம். ஆனால் கமரா பிழையான தெரிவில் விடப்பட்டிருந்ததால் அநேகமான படங்கள் தெளிவாக வரவில்லை. :Oஅமைதியான ஆலயத்தைச் சுத்தஞ் செய்தபடி ஒருவர். சுவர் முழுதும் விவிலியத்துக் கதைகள் சொல்லும் ஓவியங்கள். அத்துடன் வேலைப்பாடுடைய உட்கூரை. சிறு உருவங்கள் (புனிதர்களாயிருக்கலாம்) அமைந்த stained glass windows. விட்டு வரவே மனமில்லை. நீர்வீழ்ச்சி பார்க்கப் போவதென்றிருந்தபடியால் மனமில்லாமல் திரும்பினேன்.

சுட்டிகள்:
www.eurorailways.com
www.raileurope.com
www.eurostar.com
www.busabout.com
www.eurolines.com
www.europeforvisitors.com

பெட்டகம்