-:சற்றே நீண்ட இடுகை, பஞ்சி பாராமல் எழுதச் சொல்லி பிரபா சொன்னதால் :O) :-
பரீ(நன்றி சிறி அண்ணா)யிலிருந்து அடுத்த நாடு நோக்கின பயணம். இந்தப்பயணம் ரயிலில். [ஐரோப்பாவில் ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வது பிரசித்தம். ஒவ்வொரு பிரதான நகரத்திலிருந்தும் இன்னொரு நகரத்திற்கு ரயிலோ பேருந்தோ செல்கிறது. பயன்படக்கூடிய சுட்டிகள் கீழே.]
ரயிலைப் பற்றி் - மிகவும் வசதியான இருக்கைகள். துப்பரவான கழிவறைகள்.பயணப்பொதிகளை வைப்பதற்கென்றே ஒவ்வொரு பெட்டியின் முன் பின் பகுதிகளில் தனியிடம். இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்). முன்பதிவு செய்து வைத்திருந்தது TGVயில். இது ஒரு கடுகதி ரயில். பயணம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில்/குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை உட்கார்ந்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுமாம். வண்டி மிக வேகமாகப் போவதால் சமநிலை தவறக்கூடும் என்பதாலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. நின்று பார்க்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
கார் டு நோட் (Gare du Nord)இற்கு நாங்கள் போக்குவரத்து நெரிசலுக்கூடாக நீந்திப் போய்ச் சேர்ந்த போது நேரம் காலை 7.42. ரயிலோ 7.45இற்கு. சின்னையா சொல்லச் சொல்ல காலை ஆறரை வரை முதல்நாள் கடையில் எங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தெரியாமல், எங்கள் நிறத்தில் தெரிந்த ஒருவரைப் பிடித்ததில் அவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்து தமிழும் தெரிந்தவராகி இருந்து விட்ட பாவத்தில், அவருதவியால் வாங்கிக் கொண்டு வந்த சிம் மை செல்பேசியில் போட்டு நோண்டிக்கொண்டிருந்துவிட்டுக் குளிக்கப்போன கண்ணன் வாங்கின திட்டை நான் திரும்ப வாங்கவேண்டும் என்பதால் அவரை மட்டும் காருக்குள் விட்டுவிட்டு அடுத்தாய் வண்டி எத்தனைக்கு என்று பார்க்க கண்ணன், தம்பியுடன் சேர்ந்து நானும் ஓடினேன்.
பயணச் சீட்டு விற்பனைப் பகுதிக்குப் போனால், அங்கிருந்த பெண் சொன்னதின் படி அடுத்த TGV அன்று மாலைதான். வேறென்ன வண்டியுள்ளது என்று விசாரித்தால், SNCF இருக்கிறது. ஆனால் பயண நேரம் அதிகம் என்றார். சரியென்று அதற்குரிய சீட்டை வாங்கினால், அது TGVயினதை விட 40யூரோ குறைய என்று சொல்லி அந்தக் காசை மீளத் தந்தார். ஆனால் 9.40க்கு ரயில் புறப்படுவதோ கார் லெ எஸ்ற்றிலிருந்து(Gare l'est). அங்கே போய் ரயிலேறினோம். இரண்டு மணித்தியாலங்களின் பின் கண்விழித்தேன். பிரான்சின் நகர்ப்புறம் மறைந்து புல்வெளிகள் நிறைந்த நாட்டுப்புறம் கண்ணில் பட்டது.
சில மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது. எனக்கு எந்தப் பக்கம் படமெடுப்பதென்றே தெரியவில்லை..அவ்வளவு அழகு. இந்தப்பக்கம் பார்த்தால் பச்ச்ச்சைப் புல்வெளிகள், அந்தப்பக்கம் மலைகள். இரண்டு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இலையுதிர்காலம் நிறந்தீட்டின இலைகளுடன் மரங்கள். கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிறு நீர்நிலைகளும் அவற்றில் மீன்பிடிப்பவர்களும் அவர்கள் வசித்திருக்ககூடிய பண்ணை வீடுகளும் எங்களைக் கடந்து போன காட்சிகளுள் அடங்கும்.
பாசல் நகரை அடைந்து அடுத்த ரயிலேறி - சுங்க அதிகாரிகள்/காவலர் எங்கிருந்து வருகிறோம், எங்கு நிற்போம், எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்டுவிட்டு உள்ளே சுவிசுக்குள்ளே விடுகிறார்கள் - வின்ரத்தூர் நகரை அடைந்தோம். தங்கியிருந்த வீட்டில் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்த இரு சிறு பெண்கள். நல்ல்ல்லாவே தமிழ் கதைக்கிறார்கள்/எழுதுகிறார்கள்
ஒரு பாலர் பாடசாலைக்கு அடுத்த நாள் போனோம். வகுப்பில் எத்தனை பிள்ளைகளோ அத்தனை பேரின் தாய்மொழியிலும் 'வணக்கம்' என்று சொல்லி ஒரு வரவேற்புப் பாடல் ஒவ்வொருநாட் காலையிலும் படிக்கப்படுமாம். நல்லம் என்ன? பாலர் பாடசாலைகளில் கரல்ஸ் பாடிப் போகிற வழக்கம் இருக்கிறது. Turnip கிழங்கினை சிறு மூடியுள்ள ஒரு சட்டி போல வெட்டிக் கொண்ட பின் - கிண்டியெடுத்த கிழங்கின் உள்ளீடு அவித்து ஒரு சூப் மாதிரிச் செய்யப்பட்டு ஊர்வலம் போவதற்கு முதல் நாள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் - அதற்குள் மெழுகுதிரி வைத்து ஊர்வலம் போவார்கள்.. வீடு வீடாய் கரல் பாடிக் கொண்டு. அநேகமானோர் இனிப்புகள் பரிசளிப்பார்களாம். நாங்கள் போன அன்று இருவரும் ஊர்வலம் போய் வந்திருந்தார்கள்.
போய் நின்ற நாள் முதல் அங்கத்தேய வெண்ணெய்க்கட்டிகளையும் சொக்கிளேற்றையும் ஒரு கை பார்த்தோம். :O) பிரபல காப்புறுதி நிறுவனமான வின்ரத்தூர் க்ரூப் இந்நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. வின்ரத்தூரின் பிரபல தேவாலயத்தைப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனால் புனித தந்தையர் பேதுரு+பவுலின் ஆலயத்தைப் போய்ப் பார்த்தேன். நடந்து போகக்கூடிய தூரத்தில் இருந்ததும் தனி ஆராய்ச்சிக்குக் காரணம். ஆனால் கமரா பிழையான தெரிவில் விடப்பட்டிருந்ததால் அநேகமான படங்கள் தெளிவாக வரவில்லை. :O
அமைதியான ஆலயத்தைச் சுத்தஞ் செய்தபடி ஒருவர். சுவர் முழுதும் விவிலியத்துக் கதைகள் சொல்லும் ஓவியங்கள். அத்துடன் வேலைப்பாடுடைய உட்கூரை. சிறு உருவங்கள் (புனிதர்களாயிருக்கலாம்) அமைந்த stained glass windows. விட்டு வரவே மனமில்லை. நீர்வீழ்ச்சி பார்க்கப் போவதென்றிருந்தபடியால் மனமில்லாமல் திரும்பினேன்.
சுட்டிகள்:
www.eurorailways.com
www.raileurope.com
www.eurostar.com
www.busabout.com
www.eurolines.com
www.europeforvisitors.com
இரண்டாம் தரிப்பு
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
17 January 2007
20 படகுகள் :
இப்பொழுது நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருக்கிறது, நன்றிகள்.
SNCF இன் இணைப்பு சரியாக இணைக்கவில்லை, பார்க்கவும்.
சுட்டியதற்கு நன்றி பிரபா, இப்போ திருத்திவிட்டேன். போனபதிவு உண்மையிலேயே அவசரமாயும் நிறைய வெட்டிக் கொத்தியும் போட்டது என்று அப்பட்டமாய்த் தெரிகிறது. :O\
// இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்).//
இது எங்கள் அந்தக்காலத்து யாழ்ப்பாண ரயில்களுக்கே உரித்தான சிறப்பம்சம். மேசைக்குப் பக்கத்தில இருக்கப் போட்டி போட்ட நினைவுகள் வரூது.
விளக்கமான நல்ல பதிவு. க. பிரபாவுக்கு பிரயோசனமாயிருந்தால் சரி:))
//வின்ரத்தூர் நகரை//
இந்த நகரின் பெயரை ஆங்கிலத்தில் தர முடியுமா? சரியாகப் புரியாததால் கேட்கிறேன்.
நன்றி.
//கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது//
அட! சுவிஸுக்கு வந்திருந்தீங்களா? சரி சரி எங்கெங்கு போனீங்க என்டு எழுதுங்க பார்ப்போம்.
எல்லாக் காலங்களிலும் சுவிஸ் அழகாகவே இருக்கும். அல்ப்ஸ் தொடர்களின் மேல் அடிக்கடி பயணம் செய்பவன் நான். ஒரு இடம் ஒருநாள் பார்த்தது போல் மற்றொரு நாள் இருப்பதில்லை. அப்படியொரு அழகு. மூன்றாம் தரிப்பில் சந்திப்போம்.:)
இலங்கை ரயில்களிலயும் மேசை இருந்தது என்பது எனக்குச் செய்தி. 'அந்தக்காலத்தில்' என்டு சொல்றீங்கள்.. அப்ப எனக்குத் தெரியாதுதான்! :O))
இலவசக் கொத்தனார் - Winterthur
இங்கே போய்ப் பாருங்க.
//மூன்றாம் தரிப்பில் சந்திப்போம்.:)//
அடுத்த முறை இன்னும் கனநாள் நிற்கோணும். இன்ஷா அல்லா கட்டாயம் சந்திப்பம். நீங்கள் சயந்தனைச் சந்திச்சிருக்கிறீங்களோ?
//வின்ரத்தூர் நகரை//
இந்த நகரின் பெயரை ஆங்கிலத்தில் தர முடியுமா? சரியாகப் புரியாததால் கேட்கிறேன். //
Winterthur ல், நம்மவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு விசயம் உள்ளது. அதுதான் ஓங்காரணந்தா ஆச்சிரமம். தனியே வெள்ளையர்களால் மட்டுமே நடாத்தப்படுகின்ற இவ்வாச்சிரமத்திலுள்ள துறவிகளால், நித்திய ஹோமம் எனப்படும் சிறப்பு வழிபாடு 20 வருடங்களாக இடைவிடாது, தொடர்ந்து நடந்துவருவது ஒரு சிறப்பம்சம்.
//மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது.//
சொல்லவேயில்லை..
இன்னொரு மாநாடு ரயிலிலேயே நடத்தியிருக்கலாம். வழமையா அதிலதானே.. நடத்திறது.
//நீங்கள் சயந்தனைச் சந்திச்சிருக்கிறீங்களோ?//
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு கிருஷ்ணர் கோயிலுக்குப் போகத்தான் அழைக்கப்பட்டோம்.. இந்த ஆச்சிரமத்தைப் பற்றி அறியவில்லை. (தெரிஞ்சாலும் போயிருந்திருக்க மாட்டம் என்டு நினைக்கிறன்). எதைக்குறித்து இந்தத் தொடர்பூசை மலைநாடர்?
சயந்தன் - என்ன ஆளப்பா நீர் இப்பிடிப் போட்டுடைச்சிட்டீரே!!! :O)
சரி சரி.. அடுத்த முறை சொல்லிட்டு வாறன். சந்திக்கலாம்.
/இலங்கை ரயில்களிலயும் மேசை இருந்தது என்பது எனக்குச் செய்தி. 'அந்தக்காலத்தில்' என்டு சொல்றீங்கள்.. அப்ப எனக்குத் தெரியாதுதான்/
இந்தக் காலத்திலும் மலையகத்தின் சுற்றுலா தொடர் வண்டிகலில் இதனைப் பர்க்கலாம். என்னால பாக்கதான் முடிந்தது போகிற அள்வுக்கு காசில்ல. அதுவும் கடினமெண்டால். பாலச்சந்தர் சம்பத்தில நடைத்த நாடகத்தில மன்னிக்கவும் படத்தில இந்த தொடர்வண்டியைப் பார்க்கலாம்
//மலையகத்தின் சுற்றுலா தொடர் வண்டிகலில்//
சுற்றுலாத் தொடர்வண்டியா? ம்ம்.. போகக் கிடைத்தால் பயணஞ் செய்யலாம். மலைநாட்டுக்கு ஒரே ஒருக்கா தொடர்வண்டியில போனதோட சரி.
புறக்கோட்டை stationலருந்தா சுற்றுலாத் தொடர்வண்டி வெளிக்கிடுது?
ஷ்ரேயா, நீங்கள் சயந்தனைப்பார்க்காதது நல்லது; எனெனில் அவர் 'யாருக்கோ' பயந்து underground life எல்லோ வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்றொரு வதந்தி :-).
....
/ பாலச்சந்தர் சமீபத்தில நடித்த நாடகத்தில மன்னிக்கவும் படத்தில இந்த தொடர்வண்டியைப் பார்க்கலாம்/
சோமி, எண்டாலும் உங்களுக்கு நக்கல் அதிகந்தான். 'பொய்' படத்தைத்தானே சொல்கிறீர்? எனக்கும் நாடகம் பார்த்ததுமாதிரித்தான் தோன்றியது. ஏழெட்டு வருடங்களாய் எந்த நாடகமும் பார்க்காமல் இருந்த என் சபதத்தை 'கேபிசார்' உடைத்துவிட்டாரே :-(.
ஒரே மூச்சில் 'எல்லாம்' படித்தேன்.
பல இடங்கள் 'ஞாபகம் வருதே.........'
நல்ல பதிவு.
//சோமி, எண்டாலும் உங்களுக்கு நக்கல் அதிகந்தான். 'பொய்' படத்தைத்தானே சொல்கிறீர்?//
முன்னெச்சரிக்கை தந்ததுக்கு சோமிக்கும் டிசேக்கும் நன்றி. பார்க்கேல்ல படத்தை/நாடகத்தை.
//அவர் 'யாருக்கோ' பயந்து underground life எல்லோ வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்றொரு வதந்தி//
உண்மையோ சயந்தன்? :O)
நன்றி துளசிம்மா. இத்தாலி போன பயணத்திலேயேவா இங்கேயும் போனீங்க?
ஷ்ரேயா!
சுவிஸ் அழகான,சுத்தமான,சட்டத்தை மதிக்கும் நாடு. நீங்கள் வெண்ணைக் கட்டிகள் எனக் குறிப்பிடுவது
"பாற்கட்டிகளை" அதாவது "சீஸ்" என நினைக்கிறேன். சுமார் 5 ஆயிரம் வகையுண்டாம். பிரான்சிலும் பிரபலம். ஆட்டுப்பாலில் செய்தது மிக அருமையாக இருக்கும்.
அடுத்து!! ரியீவீ யில் நிற்கவோ;நடக்கவோ முடியாதென இல்லை. தாராளமாக உலாவலாம். ஆனால் கட்டாயம் உங்கள் இருக்கையை பதிவுசெய்ய வேண்டும். அதற்குக் 2யூரோ கட்டணம் அறவிடுவார்கள்.சாதாரண வண்டிகளில் பதிவின்றி பிரயாணம் செய்யலாம்.
சுவிஸ் சொக்கலட்டைவிட பெல்ஜியமே சுவையும் பிரபலியமும்.
யோகன் பாரிஸ்
//ரியீவீ யில் நிற்கவோ;நடக்கவோ முடியாதென இல்லை//
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கூடாகப் போகும் போதுதான் என்று சொன்னார்கள். மிக வேகமாய்ப் போகுமாம். மற்றும்படி உலாவலாம்தான்.
//"சீஸ்" என நினைக்கிறேன். சுமார் 5 ஆயிரம் வகையுண்டாம்.//
ஐயாயிரம் வகையா? நான் மிஞ்சிப் போனால் ஒரு 4-5 வகைதான் சாப்பிட்டிருப்பேன் அங்கே.
//சுவிஸ் சொக்கலட்டைவிட பெல்ஜியமே// கேள்விப்பட்டிருக்கிறேன். பரிசில் வாங்கியுண்டோம். yummm..
Post a Comment