அடுத்ததாய்ப் பார்க்கப்போன இடம் - வர்சாய் அரண்மனை. சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன். வரைந்து நிறந் தீட்டின மாதிரிப் புற்தரை. இதைப் பராமரிக்க எவ்வளவு மினக்கட வேணும்! மூன்று பக்கங்களிலும் அரண்மனைத் தோட்டங்கள்.
பரிசிலிருந்து, தனது அரசியல் குழப்பங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கவென்று வந்து தங்கியிருந்தானாம் 14ம் லூயி மன்னன். அப்படியே படிப்படியாகக் கட்டிக் கட்டி 2600+ அறைகளும் பென்னாம் பெரிய தோட்டங்களுமுள்ளதாக இந்த அரண்மனை உருவெடுத்திருக்கிறது.
நாங்கள் போன நாளன்று அரசியரின் அறைகளிலொரு பகுதி திறந்திருந்தது. அதன் முகப்பில் தங்க முலாம் பூசிய கடிகாரம். விட்டால் எல்லவற்றுக்குமே தங்க முலாம் பூசியிருப்பார்கள் போல! காட்சிக்கு விக்ரொறீ, அடிலேய்ட் என்ற இருவர் பாவித்த பொருட்கள் சில இருந்தன. அவர்களின் பாவனையிலிருந்த பெரிய ஓவியங்கள், கட்டில், பியானோ, புத்தக அலுமாரி, கண்ணாடி என்று பலவித பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்திருந்தார்கள்.
குளிர் காலமென்றாலும் கூட்டம். கோடைக்கு நினைத்தும் பார்க்கேலாது என்று எண்ணுகிறேன்.
தோட்டங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. சிலைகளை மூடியிருந்தார்கள். பூச்சாடிகள் இரண்டு ஆளுயரமாய் . அவற்றையும் மூடியிருந்தார்கள். குளிர்காலத்தில் பனி படிந்து/தங்கி விடக்கூடும் என்பதால்.
பெரிய பெரிய நிலைகளும் அவற்றைச் சுற்றிச் சிலைகளும் என்று பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது.
குட்டிக் குளங்களுக்கு நடுவே சிலைகள். கால் நோகும் வரை தோட்டத்தில் உலாவினதில், மரத்தாசை பிடித்த எனக்கு நிறையப் படங்கள் எடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.
இலையுதிர் காலம்/குளிர்காலம் என்றதால் சில மரங்கள் மொட்டையாயும், சில நிறம் நிறமாய் இலைகள் கொண்டும்.. படமெடுத்துத் தீரவில்லை!
போன இரண்டாம் நாடு பற்றி அடுத்த பதிவாய்ப் போடுகிறேன்.
முதல் தரிப்பு -II
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
14 January 2007
12 படகுகள் :
//சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன்.//
"பாரீ"யை இன்னும் பாரீஸ் எண்டெல்லோ சொல்லிறம்.
சரியாச் சொன்னீங்கள் சிறி அண்ணா. உச்சரிப்புக்கும் எழுதிறதுக்கும் எவ்வளவோ வித்தியாசம் பிரெஞ்சில. ஆங்கிலமும் கொஞ்சம் அப்பிடித்தான்.
இந்த வருஷம் நான் போகத்தீர்மானித்திருக்கும் ஐரோப்பியப்பயணத்திற்கு உங்கள் பதிவு உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் கொஞ்சம் பஞ்சி பாராமல் நீட்டி எழுதுங்கோ. அதாவது செல்லும் வழித்தடம் குறித்த விபரங்கள்.
//செல்லும் வழித்தடம் குறித்த விபரங்கள்.//
உண்மையாச் சொன்னப்போனால் பிரான்சுக்குள்ள நாங்கள் எங்கட பாட்டில திரியேல்ல. அதால சரியாத் தெரியாது. கேட்டு/ஆராய்ஞ்சு போடுறன்.
எந்த மாதிரிப்பயணம், எப்பிடிப் போனாச் சுகம் எண்டெல்லாம் பதிவுகளில போடலாம் என்டு யோசிச்சாலும் அலுப்படிக்கக்கூடுமெண்டு நினைச்சதால தவிர்த்தன். அடுத்ததிலயிருந்து போடுறன்.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
நன்றி குமரன்.
//இந்த வருஷம் நான் போகத்தீர்மானித்திருக்கும் ஐரோப்பியப்பயணத்திற்கு உங்கள் பதிவு உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் கொஞ்சம் பஞ்சி பாராமல் நீட்டி எழுதுங்கோ. அதாவது செல்லும் வழித்தடம் குறித்த விபரங்கள்//
உங்களுக்கேன் இந்த வீண் கவலை. பயணத்திகதியை அறிவித்தால், உங்கள் ரசிகர் மன்றங்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ளாதோ?..:))
மலைநாடர் - பிரபா தன்ட ரசிகப் பட்டாளத்துக்கு surprise குடுக்கப் போறாரா இருக்கும்!! ;O))
//மலைநாடான் said...
உங்களுக்கேன் இந்த வீண் கவலை. பயணத்திகதியை அறிவித்தால், உங்கள் ரசிகர் மன்றங்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ளாதோ?..:)) //
January 19, 2007 4:16 PM
அட..அட அட. அழுவ அழுவயா வருதுங்க, நீங்க ரெம்ப நல்லவங்க ;-)
ஷ்ரேயா!
பிரான்சில் பார்க்க வேண்டிய மாளிகை; இந்த லூயி மன்னரும் தன்னைச் சூரியவம்சம் எனக் கருதியவர் அதனால் அந்த மாளிகையில் வெண்மையும்,தங்கமும் எங்கும் ஜொலிக்கும், அத்துடன் பின் பக்கத் தடாகத்தில் குதிரைகளில் உள்ளது சூரியதேவன். இவர் தன்னை roi de soleil(சூரிய அரசர்) எனத் தான் குறிப்பிட்டுள்ளார்.
இப் பூந்தோட்ட அமைப்பு பிரமிப்பில் ஆழ்த்தும் விடயமே!! அத்துடன் கோடையில் இயங்கும் நீர்த்தாரைகள்; அங்கு நடக்கும் வாணவேடிக்கையுடன் கூடிய இசை நிகழ்ச்சி (கட்டணம்);மிக அருமை
படமாகத் சுட்டுத்தள்ளக் கூடிய இடமே!!
நிற்க உச்சரிப்பு மிகச் சிரமமே!! Paris கூட "பரி" எனத்தான் உச்சரிக்கவேண்டும். Versailles -"வெர்சைய்" எனவே உச்சரிப்பார்கள்.
பிரபா!!;பயணத்தைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை; விமான நிலையத்திலுள்ள; உல்லாசப் பிரயாணிகள் கருமபீடத்தில் ஆங்கிலத்திலும் பயண விபரங்கள் பாரிசின் சுற்றுப்புற சுற்றுலாத் தலங்களுக்கு உண்டு.
எவருக்குமே தெரியாமல் வருவதானால் தான் இது தேவை!!
படங்கள் வெய்யில் இல்லை என்பதைக் காட்டுகிறது.கோடையில் பூந்தோட்டமும் மலர்களால் நிறந்திருக்கும் . கோடையில் சிலசமயம் நுளைவுச்சீட்டுக்கே! 2 மணி நிற்கவேண்டும்.
யோகன் பாரிஸ்
நன்றி யோகன்.
கோடையில் கூட்டம் நிரம்பி வழியும் என்று அறிந்தோம். சாதுவான வெயில்.. நல்லாயிருந்தது அன்றைக்கு. ஏனைய தகவல்களுக்கு நன்றி.
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
:) உங்கள் படங்கள் அற்புதம் - குறிப்பாக வர்சேய் அரண்மனை. பழைய நினைவுகளை கிளறுகின்றன!
ஜெர்மனியிலிருந்து ரயிலேறி - ஃப்ரென்ச் மண்ணில் கால் பதித்து, பரி தெருக்களில் தெரிந்த அரைகுறை ப்ரென்ச்சில் பேசி வழி கண்டுபிடித்து - வழிப்போக்கனாய் - நாடோடியாய் - நீண்ட நாள் கனவை நனவாக்கிய மகிழ்ச்சியுடன் அலைந்து திரிந்த 5 நாட்கள்!
தனி மனிதனாய் - தன்னை மறந்து - பரி-யை - ஃப்ரென்ச் மொழி பேசும் அழகை - மக்களை - ஐஃபில் டவரை - வர்சேய் அரண்மனையை - சாக்ர கூர் - லூவ்ர ம்யூசியம் (ஏதோ பரி-யே எனக்கு சொந்தமான சொத்தைப் போல) - பார்த்து ரசித்த நாட்கள்!
காரே டூ நார்த் ஸ்டேஷனுக்கருகில் - தமிழில் பயோரியா பல்பொடி விளம்பரம் பார்த்து - பின் தேடிப் போய் மெட்ராஸ் ஹோட்டல் கண்டு - இட்லியும் வடை சாம்பாரும் கிடைக்கப் பெறாததொரு பொக்கிஷம் கிடைத்தாற்போல சாப்பிட்ட அந்த மனித்துளிகள்! :)
:) பதிப்புக்கு நன்றி!
Post a Comment