முதல் தரிப்பு

முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ். அவசரத்துக்குப் போவதானால் கூட 30சதம் கொடுத்தாக வேண்டும் பொதுவிடங்களில். இப்படியே உழைத்து பெரும்பணக்காரராய்விடலாம் போல! பரிசில் கண்ட இன்னுமொன்று எல்லா வீட்டுக்கும் ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம்.


வழமையாக எல்லாரும் பார்கிற ஐபல் கோபுரம் பார்க்கப் போனோம். எனக்குத் தேவையாயிருந்த மாதிரி - நான் கோபுரத்தின் உச்சியைத் தொடுவது போல - படமெடுக்க என்னோடு சேர்ந்து வந்த இரண்டு படக்காரர்களாலேயும் முடியவில்லை. தடை செய்யப்பட்டிருந்தாலும், வளையத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் உலோகத்தாலான கோபுரச் சிற்றுருவங்களை 'சல் சல்'லென்றுபடி ஆட்டியபடி வழி மறிக்கும் சிறு வியாபாரிகள் நிறைந்திருந்தார்கள். பழங்காலத்தைய சிற்பங்கள்/சிலைகள்.

சுழித்துக் கொண்டோடும் 'சுகந்தமான' செய்ன் நதியைக் கடந்து போய் தொடர்ந்து வளைக்கும் 'ஸ' போல நெளிந்த வரிசையில் நுழைவுச் சீட்டு வாங்க சேர்ந்து கொண்டோம். நகர்ந்து போன வரிசையில் திடீரென ஆங்கிலம் கேட்டது - அதுவும் ஒஸி வழக்கில். எனக்கா இனியில்லையென்ற மகிழ்ச்சி. போன இரண்டு நாட்களுக்குள் பொறுக்கின 'bon jour', 'au revoir' 'merci', 'madamme', 'monsieur' என்பவற்றை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாத ஆளுக்கு தெரிஞ்ச இங்கிலிபீசைக் கேட்டால் சொல்லவும் வேணுமா!! ஹொக்கிப் போட்டியொன்றுக்காக வந்திருந்த 4 பெண்கள். நல்லா அளவளாவி, போட்டிக்கு ஊக்கப்படுத்தி விடைபெற்றோம்.


கோபுரத்திலே மேலே ஏறினால் படமெடுக்க பொக்கற்றிலிருந்து கையை எடுக்க முடியவில்லை. குளிரோ குளிர். ஆனால் என்ன காட்சி.. நெப்போலியன் கோட்டை/அணையாவிளக்கு,
வெள்ளைத் தேவாலயம், லூயி மன்னனின் கோட்டை எல்லாம் தெரிந்தன.





[பரிசில் நடந்து கொண்டே இருக்கலாம் போல. cobble stone பாதைகளில் பழங்காலத்தைய வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியபடி, அகலமான பாதைகளைச் செப்பனிட்டவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி நடந்தோம். வழமையாய்ப் பார்க்கும் நிறங்களிலான வானம்தான்.. பார்க்க ஆசையாய் இருந்தது. வீசும் காற்றிலே கிளையிலிருந்து தரைக்கு இடம் மாறும் இலைகள்; தரையிலேயே இடம் மாறித்திரியும் சருகுகள்(ஆனால் நாளைக்காலையில் தெருவில் அவை இரா). தொடர்ந்து நடக்கச் சொன்ன இருபுறமும் மரம் வளர்த்த தெருக்கள். நடப்பதற்காகவே இன்னொருமுறை போக வேண்டும்.முதல் முதலாய்ப் போகும் ஆர்வத்துடன்.]

அன்றைகே வெள்ளைத் தேவாலயமும் போகக் கிடைத்தது. நகரின் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. அதன் பெயர்:La Basilique du Sacré Coeur.

வெள்ளைக் கட்டிடடமென்பதால் 'வெள்ளைத் தேவாலய'மாக்கி விட்டார்கள். வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows. என்னதொரு கூரை.. 25 - 30 ஆள் உயரமிருக்கும். உள்ளுக்குள்ளே சலன/ஒளிப்படமெடுக்க அனுமதியில்லை. நிறைய ஓவியங்கள். கூரையில் பென்னாம்பெரியதொரு ஓவியம். பிறரால் உருக வைகப்படவென்றே மெழுகுதிரிகள்.

ஆலயத்தின் மாதிரி உருவைச் செய்து வைத்து "உங்கள் ஆலயத்தின் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் உதவுங்கள்" என்று தமிழ் உட்பட 15 - 20 மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாம் தாண்டி வந்ததும் ஒரு ஒரு வேண்டுதல்/பிரார்த்தனைப் புத்தகம். தமிழில் கூட இருந்தது - கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்லி, பிள்ளைக்கு நடக்கவிருக்கிற திருமணத்திற்கு ஆசி வேண்டி என்று பலதரப்பட்ட வேண்டல்கள், இறைஞ்சல்கள். மனதில் சொல்லக்கூடியதை 'வணக்கம் கடவுளே' என்று நானும் தாளையும் மையையும் வீணாக்கி வெளியேறிய பிறகுதான் ஞாபகம் வந்தது ஏனையோர் போட்டதுபோல முகவரி போடாமல் வந்தது. அடடா..யார் வணக்கம் சொன்னதென்று யேசு யோசித்திருப்பாரோ?

பெட்டகம்