கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் - ஒரு பின்னூட்டம்

"சக்தி"யில் பத்மாவின் "கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்" பதிவுக்கான என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் தனிப் பதிவாக இடுகிறேன்.

----------------------------------------------------

சுதந்திரம் "கொடுக்கப்படும்" ஒன்றல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பெண்களில் பலர் உட்பட. இதில் இன்னமும் வேதனையான ஒன்று என்னவென்றால் படித்த பெண்களும் அடங்கி நடத்தல்தான் அழகு/சரி என்கிற ரீதியில் நினைப்பதும் வாழ்வதும். பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு உறவில் அடங்கி நடத்தல்/கட்டுப்பாடுகள் என்பன இருப்பதில்லை.

பெண்ணை, சார்ந்திருப்பதனூடாகப் பெருமைப்பட்டுக் கொள்ளச் சொல்கிறது எங்கள் சமூகம். ஒரு பெண்ணின் இருப்பு ஆணைச் சார்ந்ததாக ஆக்கப்படுவது ஏன்? உதாரணமாக எடுத்துக் கொண்டால், பெண் தனித்து வாழ்வதை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. அதெப்படி தனியாக வாழக்கூடும்? ஏன்.. தன்னைத் தானே கவனித்துக் கொள்வதற்கும் பிடித்தமான வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஒரு பெண்ணால் இயலுமாயிருந்தால், ஒரு பந்தத்தில் இணைந்திருக்கப் பிடிக்காமலிருந்தால் அந்தப் பெண் திருமணஞ் செய்ய வேண்டியதின் அவசியம் அடிபட்டுப் போய்விடுகிறது. (திருமணம் வேண்டியதா/ வேண்டாததா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) ஆனால் இதை ஒரு சராசரி ஆளுக்குச் சொல்லிப் பாருங்கள்.. அதெப்படி பெண் தனியாக வாழ்வது என்ற பதில் தான் வரும். ஏன்? பெண்கள் அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சார்ந்தே இருந்து பழகிப் போனதால். ஆண்கள் சொல்வது ஏனென்று என்னால் ஊகிக்கக் கூடியது ஈகோ. "நான் இருக்கிறேன்தானே பார்த்துக்கொள்ள.. தேவைகளைக் நிறைவேற்ற. பெண் என்பவள் என் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும்" என்கிற எண்ணம்.

சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம்.. நம் பெண்களில் எத்தனை பேரை விரும்பிய இடத்துக்குத் தனியே (எவ்வளவு தூரமானாலும்) குடும்பத்தினர் போக விடுவார்கள்? "ஐயோ பெண்ணை அவ்வளவு தூரம் தனியே அனுப்புவதா"/"அவளுக்குப் போய்ப் பழக்கமில்லை"/"அவளால் முடியாது" என்ற ரீதியில் பதில் வரும். அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன். நன்கு படித்து வேலையிலிருக்கும் ஒரு பெண் (புத்தகங்களையே ஆணுக்குரியவை பெண்ணுக்குரியவை என்று வகைப்படுத்திய அறிவாளி) நேற்றுப் பயணம் போதல் பற்றிப் பேசுகையில் சொல்கிறா "நான் தனியாய்ப் போகமாட்டேன். அதெப்பிடிப் போவது. கலியாணங் கட்டின பிறகு தனியே பயணம் செய்வது அழகில்லையல்லவா. அப்படி நான் விரும்பி அதைச் சொன்னாலும், கணவர் 'ஏன் அப்படித் தனியே போக யோசிக்கிறீர்கள்? என்ன பிரச்சனை' எனக் கேட்கக் கூடும்".

[அவவிற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் திருமணம் செய்திருந்தால் எல்லாவற்றையும் சேர்ந்தே செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பிழையாக நினைப்பார்கள்/ (கணவன்) பெயர் கெட்டுவிடும் என்று இன்னும் நினைப்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. திருமணம் செய்து கொண்டால் நீங்கள் தனித்தன்மையற்றவர் ஆகி விடுகிறீர்களா? இல்லையே!. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கும் கட்டாயம் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை தனியே உங்களுக்குரிய வெளியில்(personal space) இயங்க முற்படுவது பிரச்சனைக்குரிய ஒன்றெனக் கருத வேண்டிய காரணம் இல்லை. ஒன்றாகச் சேர்ந்து செய்வதையும் செய்யுங்கள். தனிப்படவும் இயங்குங்கள். அது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இன்னும் நேசிக்கவும் இடந் தரும்]

இப்படி, தங்களை உண்மையாகவே வெளிப்படுத்துவதற்கும் விருப்பப்படி செயலாற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளே வாழ்க்கையாகிப் போகின்றன. தளைகளை உடைத்துக் கொண்டு வெளியில் வர முயற்சிக்கையிலேயே அப்பெண்ணிற்கிருக்கக்கூடிய தன்னம்பிக்கையின்மை, பொருளாதார முட்டுக்கட்டைகள் என்பவை அவளுக்கெதிராக ஆயுதமாக்கப்பட்டு அம்முயற்சிகள் தோற்பிக்கப்படுகின்றன. அப்படியும் விடாது முயன்று சுதந்திரமாய் வாழும் சகோதரிகள் எம் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொள்பவை நாம் அறியாதவையல்ல. [அவற்றைப் பற்றி இப்போதைக்கு இங்கு வேண்டாம்.]

நினைத்தநேரம் நினைத்தபடி சென்றுவரக்கூடிய சூழல் தருகிற சுதந்திரத்தை/புத்துணர்ச்சியை, தளைகளை வென்று செயலாற்றுவது தரும் தன்னம்பிக்கையை, சமூகத்தில் தன் பங்களிப்பை, விரும்பியது கற்றுத் தேறித் தன்னை முன்னேற்றிக் கொள்வதில் கிடைக்கிற திருப்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் இன்னுமின்னும் பொத்திப் பொத்தி "பாதுகாப்பு, பண்பாடு" என்று அடைத்து வைக்கப்படுவதையுணராத பெண்களும் தங்கக்கூண்டென்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டு காலம் தள்ளுவார்கள். கண் திறப்பதேயில்லை பலருக்கு!

பெட்டகம்