அம்மாவுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள அம்மா,

நாம் நலம். அதுபோல் நீங்களும் இருக்கக் கடவுளை வேண்டுகிறேன்.

என்னடா நேற்றுத்தானே தொலைபேசியில் கதைத்தாள்.. இன்றைக்குக் கடிதம் போடுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். கடிதம் போல் வராதுதானே அம்மா. கதைப்பவை மறந்து போகும், எழுத்திலிருப்பவை என்றும் இருக்கும்.

நான் வலைப்பதிகிறேனென உங்களுக்குச் சொல்லியிருக்கக்கூடும். இல்லாவிட்டால் இப்பொது தெரிய வந்திருக்கும். ஒன்றும் பெரிதாய் எழுதிக் கிழிப்பதில்லை. கைக்கு வந்ததைக் கிறுக்குவதுதான். என்னைப்போலவே நிறையப்பேர் வலைப்பதிகிறார்கள். ஒவ்வொரு விதமான எழுத்துகளும் கருத்துகளும் வெளிப்படுகின்றன. அப்படி ஒருவர் இன்றைக்கு அவரது அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அது இங்கே. மனதைக் கனக்கச் செய்த பதிவு. தனது அப்பாவைப் பற்றித் தெரிந்ததாக நினைத்ததெல்லாம் தெரியாததாகவே இருந்திருக்கிறது என்கிறார் அம்மா.

என் நிலைமையும் அப்படித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் உங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பினேன் தானே..உங்களுக்குப் பிடித்ததாயிருக்க வேண்டுமேயென யோசித்து அவற்றைத் தேடியெடுக்க எனக்குப் பல நாட்கள் சென்றன. அம்மா என்கிற பாத்திரம் தவிர ஒரு பெண்ணாய் சுய விருப்பு வெறுப்புடைய மனிதராய் உங்களைப் பார்த்ததில்லையே நான். அதுதான் பெரிதாய் ஒன்றும் உங்களைப் பற்றிப் தெரியவில்லை.

உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாதே... அடுத்த ஆண்டு போகும் போது போய்ப் பார்ப்போம் என்று நினைத்திருந்த பெரியம்மா இறந்த பிறகு, உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற நினைப்புத் தீவிரமாகியிருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் வயது போகிறது. உடல்நிலையிலும் நினைவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட முன்பு இயலுமான அளவு நேரத்தை உங்களுடன் கழிக்க வேண்டும். சின்ன வயதில்
கிடைத்த நேரங்களின் அருமை தெரியவில்லை. எத்தனையோ முறைகள் உங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன். பிழைகளை இப்பத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள். அப்பா இல்லாமல் போன பிறகு தனியாய் எங்கள் மூவரையும் வளர்த்தது எவ்வள்வு பெரிய விதயம் என்று இப்ப விளங்குகிறது.

எம்மியினதும் ரீச்சரினதும் இழப்புக்குப் பின் நீங்கள் இன்னும் அமைதியாகி விட்டது போலத் தோன்றுகிறது. உண்மையா? இவர்களிருவரும் தவிர, மாமியைத் தவிர்த்து - நீங்கள் யாருடனும் மனந்திறந்து பேசியதை நான் கண்டதில்லை. சகோதரிகளைப் போன்ற நண்பிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நினைத்த நேரம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள என் தோழிகளையே நான் மிஸ் பண்ணுகிறேன். பொங்கி வரும் உணர்வுகளை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமற் போகிற போது மிகவும் தவித்துப் போகிறேன். பகிர விரும்புபவற்றை கொஞ்ச நேரத்திற்கென்றாலும் மனதில் பூட்டி வைத்திருப்பது கடினமான செயலாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் அம்மா?

இங்கே சிட்னிக்கு உங்களைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே என்று நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நானும் உங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் எப்போதுமே முழுமனத்தோடல்ல. அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே வராதம்மா. நினைத்த நேரம் பேருந்தில் ஏறிப்போய் தியான நிலையத்தில் இருந்து விட்டு வரலாம்..வேலைக்குப் போகலாம், போய் வருகிற வழியில் மரக்கறிக் கடையில் தேவையானதை வாங்கி விட்டு கைப்பையையோ, குடையையோ மறந்து விட்டுவிட்டு வரலாம்!

பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க?

முதலெல்லாம் அடிக்கடி "எப்ப வாறாய்" என்று கேட்பீர்கள்" இப்போது கேட்பதில்லையே? ஏன்? கேட்காததும் நல்லதுக்குதானோ...எனக்கும் குற்ற உணர்ச்சி வராது. "இப்ப டிரெக்ட் லைனில கதைக்கிறன்..பிறகு கார்டில எடுக்கிறன்" என்றதுடன் சேர்த்துச் சொல்லும் அவசர 5 - 10 சொற்களும், கடிதங்கள் இல்லாமல் வரும் வாழ்த்து மடல்களுமன்றி அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என நினைப்பதும் வாழ்த்து மடலுடன் 10 வரிக் கடிதமும் இரண்டு படங்களுமாவது அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாழ்வதும் வேறெதைத்தருமெனக்கு?

வழக்கம் போல அல்லாமல் கடிதம் கொஞ்சம் கனத்துப் போய் விட்டது. உண்மை பேசினதினாலேயோ என்னவோ.. மனப்பளுவை ஏந்தாத ஒரு அன்பான கடிதத்தில் மீண்டும் சந்திப்போம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
அன்பு மகள்

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் ஒரு நாய், ஒரு பூனை. இவ்வளவும் தான் வளர்கையில் செல்லப்பிராணிகள். அவற்றுக்கும் எனக்குமான தொடர்பை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை எழுதச் சொல்லும் "எனது செல்லப்பிராணி" கட்டுரையின் 5 வசனங்களில் அடக்கி விடலாம். அவ்வளவு நெருக்கம். அதற்காக நாய்/பூனை பிடிக்காதென்றில்லை. பிடிக்கும் என்றுமில்லை. கிட்டே வந்தால்..கடிக்க முயற்சிக்காவிட்டால் தடவிக் கொடுப்பேன்.

எங்கள் பூனை (பெயர் ஞாபகமில்லை..அதனால் இப்போதைக்கு 'பூனை' என்றே வைத்துக் கொள்வோம்.) வீட்டிற்கு வந்தது எப்படி என்று சொல்கிறேன். நாங்கள் இருந்தது அரச உத்தியோகத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட மனையொன்றில்.(குவார்ட்டர்ஸ்) பக்கத்தில் ஓரளவு பெரிய காணி. அதற்குள் ஒரு கிணறு(இல்லை..பூனை இதற்குள் இருந்து எடுக்கப்படவில்லை!!) ஏனோ தெரியவில்லை, ஒரு சிறிய (2 அடி X 4 அடி) செவ்வகத் துவாரம் தவிர்த்து கிணற்றின் மேல் புறம் மூடப்பட்டிருக்கும். வழக்கம் போல கிணற்றுவாசிகள்: தவளைகள் & ஒன்றிரண்டு மீன்கள்.கிணற்றிற்கு10 - 15 மீற்றர் தள்ளி ஊர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு. அதற்குப் பக்கத்தில் ஒரு பனை மரம். அப்பாலே 4 அடி எடுத்தால் தெரு. தெருவிலிருந்து வீட்டிற்கு வரும் ஒரு வழி இந்த வெளிநோயளர் பிரிவைத் தாண்டி வருவது. ஒரு நாள் எங்கள் வீட்டுக் கருணைக்கந்தன், பிராணிகளின் உயிர்காப்போன் , போனதொரு பிறவியில் சிபிமன்னனாயிருந்திருக்கக்கூடிய எனது சின்னண்ணா (இதை வாசிச்சா எனக்கு இருக்கு!;O) ) அவ்வழியால் நடந்து வந்துகொண்டிருக்கையில் வழக்கமா எல்லாப் பூனையும் கத்துற மாதிரியே 'மியாவ்..மியாவ்' என்று சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் வருகிறது...உருவத்தைக் காணவில்லை. தேடியதில் கண்டு பிடித்தது எங்கே தெரியுமா? பனைமரத்தில்!! அம்மரம் மற்றப் பனைகளோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குட்டையானது. யாரையோ பிடித்து மரத்திலிருந்து பூனையை இறக்கினார்களாம். வீட்டில் வைத்துப் பராமரித்தார் அண்ணா. அவருக்கு பூனைகள் என்றால் நல்ல விருப்பம் என நினைக்கிறேன். (ஆனால் தவளையைக் கண்டால் வேறே வினையே வேண்டாம்!! கரப்பானைக் கண்டால் (வீராவேசம்(!?) வரும் வரை) நான் செய்வது போல கதிரையிலிருந்து இறங்க மாட்டார்!!) :OD அதுதான் பூனை வந்த கதை.

நாய் இருந்தது என்று சொன்னேன் தானே..நாய் எப்படி வீட்டே வந்தது..யாரேனும் காப்பாற்றினார்களா என்றெல்லாம் தெரியாது. சூரன் என்று பெயர் வைத்திருந்தார்கள் அண்ணாமார். நல்ல முசுப்பாத்தி. ஒருநாள், ஆளுயர நிலைக்கண்ணாடி, இரண்டு இழுப்பறைகள் கொண்ட ஒரு சின்ன தளபாடம்(Dressing table) இருக்கிற அறைக்குள்ளே போய்விட்டது. வெளியே எவ்வளவு கூப்பிட்டும் வரவில்லை. கண்ணாடிக்கு முன்னுக்குப் போய் நின்றது தான் தாமதம் குரைக்க ஆரம்பித்தது. நிறுத்தவே முடியவில்லை. கண்ணாடியை நகங்களால் கீறி வைத்தது. (கண்ணாடியின் வீரத்தழும்புகளை இன்றக்கும் காணலாம்!!).

இவனுக்கு மட்டும் மிருக வைத்தியர் வந்து போவா. பூனையை ஏனென்றும் இல்லை(அதை நாங்க துளசி மாதிரி அக்கறையா ஒன்றும் பார்த்துக்கொள்ளுறதுமில்ல. அது தன்பாட்டுக்குச் சுத்திவிட்டு வந்து போடுறதைச் சாப்பிடும். அடுப்புக்குக் கிட்ட படுத்துக் கிடக்கும்..பிறகு திரும்ப ஊர்சுத்தப் போகும்.) அந்த வைத்தியருக்கு ஒரு கால் போலியோவோ ஏதோ வந்து, கொஞ்சம் சூம்பினது போலிருக்கும். இழுத்து இழுத்துதான் நடப்பா. வடிவான நீட்டுப் பாவாடை(காலை மறைப்பதற்காக?) தான் அணிவா. ஒன்றின் டிசைன் இன்னும் ஞாபகமிருக்கிறது. கடும்நீல நிறப் பின்னணியில் சின்னச்சின்னதாக மயிலிறகு வரைந்திருந்தது. அவவுக்கு வடிவாக இருக்கும்.

சூரன் ஒருநாள் எழும்பக் கஷ்டப்பட்டு அதன் கூட்டுக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. கண்ணைப் பார்த்தால் கருவிழியில் வெண்படலம் தெரிந்தது. ஆளனுப்பி மிருக வைத்தியரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவ பார்த்து விட்டுச் சொன்னா இரவு பாம்பு கடித்திருக்கிறதென்று. அன்றைக்கே சூரன் செத்துப் போனான்.

அதற்குப் பிறகு வடிவான மஞ்சள், சாம்பல் நிறங்களில், கோழிக்குஞ்சுகள் 10 வாங்கி வளர்த்தேன். அம்மாவின் "மருந்தக'த்துக்கு வெளியே ஒரு கூடடித்து கம்பி வலை போட்டு பத்துக் குஞ்சையும் குடி வைத்தோம். காலையில் திறந்து விடுவதும், பிறகு பள்ளிக்கூடத்தால் வந்து கொஞ்ச நேரம் விளையாடிக் கூட்டில் அடைப்பதும் (அடைக்க முயற்சிப்பதும்) தான் என் வேலை. நடுவில் தீனி போட்டு, பருந்து கொத்திக் கொண்டு போகாமல், யாரும் களவெடுக்காமல் பார்த்துக் கொள்வது இவ!
ஒருநாள் இரவு யாரோ பத்தையும் களவெடுத்துப் போய் விட்டார்கள். :O( ஒரே அழுகை.

அதுக்குப் பிறகு வீட்டில மிருகங்கள் வளர்க்கவில்லை. ஆனா மிருகங்களோடு விளையாட்டுக்குக் குறைவிருக்கவில்லை.

(தொடரும்)

பெட்டகம்