இன்னுமொரு மழையிரவு

கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய்த்தான் இருக்கிறது. ஆனாலும், அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்காது நனைந்து கொள்ளும் அழகில்லை. ஏன் அந்தச் சிறுபிள்ளை ஆசை அப்படியே (பலருக்கு) இருப்பதில்லை? சட்டைப்பையில் இருப்பதை நனையாமல் பற்றிக் கொண்டு குடைக்குள்ளோ கிடைத்த கூரையின் கீழோ எதற்கு மழையுடன் கண்ணாமூச்சி? நனைந்தால் சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் என்று குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டி மழையுடன் போடும் ஆட்டத்தைக் கெடுப்பது ஏன்? ஒரு மனமார்ந்த நட்பின் இதத்தோடு தொட்டுப் பேச தடவிக்கொடுக்க, சந்தோசமாய் விளையாட, ஏன், எங்கெ யாரிருக்கிறார் என்று கவனிக்காமல் முத்தமிடக்கூட மழை துளித்துளியாய் சரஞ்சரமாய் இறங்கிவர அதைப் புறக்கணிப்பானேன்? எத்தனை விதமாக உருவெடுக்கிறது - மனிதரைப்போலவே. அது மட்டுமே போதாதா எந்தக் கணத்தையும் அழகாக்கிவிடுவதற்கு. மழை வருவது தெரிகிறதா உங்களுக்கு? அதன் அழைப்புக் கேட்கிறதா? அதன் தொடுகையை, நடனத்துக்கான அழைப்பை உணரமுடிகிறதா? உங்களால் அதனுடன் ஆட்டம் போட முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதன் ஆட்டத்தைப் பாருங்கள். மனதிலிருப்பதைப் பேசுங்கள். அதைக் கேட்பதற்கு மழையைப் போல வேறு யாருமில்லை, பேசாதிருந்தாலும் மழை ஒன்றும் சொல்லப்போவதில்லை. அதற்குத் தெரியும் மௌனமும் பேச்சுத்தானென்று.

என் இரவுகளிலே மழை. என் பகல்களிலும் காலை மாலைகளிலும் இடைப்பட்ட எவ்வேளைகளிலும். மேகத்திலிருந்து வராது விட்டாலும் ஒவ்வொரு விதமான மழை என்னைத் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. எண்ணங்கள் குறிப்பிட்ட ஒருவரிலிருந்து துளியாய் ஆரம்பித்து பெருமழையாய் பலபேரை நினைவூட்டிப் போகும். சாரலாய்த் தொடங்கும் ஒரு நட்பின் தொலைபேசி அழைப்பு அடைமழைப்பேச்சு. இடியென முழங்கி வார்த்தையால் ஆலங்கட்டி மழைபோல் தாக்கும கோவங்கள். துளித்துளியாய் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கிற ஆசீர்வாதங்கள். மழை எப்போதும் எல்லாரையும் எதோவொரு வடிவில் தொடர்ந்தபடியேதானிருக்கிறது.


இலைகள் தெளிக்கும் பன்னீராய் தரை தொட்டு, கண்ணாடியில், கூரையில் எங்கும் நெளி நெளியாய் பளிங்குப் பாம்பாய் நெளிந்து ஓடுகிறது மேகத்திறங்கிய நீர். அதனோடு கூடவே நடனமாடியபடி இலையுதிர் காலத்துக் கடைசி நாளின் வண்ண இலைகள்.. சொல்லாமலேயே அவற்றோடு ஓடிப்போய்விடுகிறது மனம்.

பெட்டகம்