குடும்பம் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்

 மூத்தண்ணனின் மகள் தன் இணையோடு வந்து தங்கியிருந்தாள். எங்கள் வீட்டின் மூத்த பேரப்பிள்ளை. அவள் எங்களுக்கு எத்தனை செல்லம் என்பது அவளுக்குப் புதினமாய் இருக்கிறது. அவள்  குழந்தையாயிருந்த போது எடுத்த ஒளிப்பதிவுக் காட்சிகளை பார்த்தபடி "I was such a brat and you all encouraged me" என்றாள். குழந்தைக்கு, அதுவும் ஒன்றோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான்  காணக்கிடைக்குமென்றால் அதைத்தானே செய்வோம்! 25 ஆண்டுகளின் பின் அவளோடு கிடைத்த 2 கிழமைகள் அற்புதமானவை. 

வேலை முடிந்து வீடு வரும் போது வீட்டில் ஆளிருக்கும். சிரிப்புச் சத்தமிருக்கும். அன்றைக்குப் போய் வந்த பயணத்தைப் பற்றிச் சொல்லுவார்கள் ஆளுக்கொரு புத்தகத்தில் நிறந்தீட்டியபடியே. அதற்கும் ஒரு நாள் செல்லமாய் அலுத்துக் கொண்டாள் .. "உங்கட நிறப்பேனைகளின் கூர் சிறிதாக இருக்கின்றது".. அவள் நீர்வர்ணங் கொண்டு அழகாய் வரைபவள். அடுத்தடுத்த நாளே ஒரு சிறு பொதியைத் தந்து "உங்களுக்கு, எங்களிடமிருந்து " என்று சொன்னாள். திறந்தால் தூரிகைப் பேனாக்கள் பல நிறங்களில். அதை வைத்து மூவரும் ஆளுக்கொரு புத்தகத்தில் நிறந்தீட்டியபடியே பல நாட்கள் எத்தனையோ பேசி எங்கள் பொழுதுகளை அழகாக்கிக் கொண்டோம்.  

அந்தக்காலத்து எங்களையும், இப்போதைய எங்களையும் வாழ்வையும் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. சில பல இயல்புகள் ஒரே போன்று இருக்கின்றன எங்களுள். ஒரு நாள் எதற்கோ விழுந்து விழுந்து சிரித்தாள்.. என் ரோசாப்பூ மருமகள்..அவளது 4 வயதில் சிரித்தது போன்றே கால் நூற்றாண்டு கழித்தும் அதே சிரிப்பு. சிரிப்பு மாறாதுதானே. 

அவர்கள் வந்து நின்ற நாட்களில் எனது நத்தார்க் கொண்டாட்டங்களும் வந்து போயின. ஒரு நாள் பிந்தி வீட்டுக்கு வந்தால் "இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வாறிங்க ?" என்று பகிடியாக அதட்டியதற்கு  "அப்பம்மாவே இப்படிக் கேட்டதில்லை" என்று நான் பதில் சொல்ல,  என் வீட்டில் முத்துகள் கொட்டிக் கிடந்தன.

அவளது இணை மக்ஸ். அவனே சமைத்தான், சுத்தப்படுத்தினான். இயல்பாய் இருக்கவும் மனம் விட்டுக் கதைக்கவும் முடிந்தது அவனோடு.  மென்மையாயும் வருத்தாமலும் ஓட்டமில்லாமலும் வாழ முனைகிற இளையோர்.

இரண்டு கிழமைகளை மிக மிக அழகாக்கி விட்டு அவர்களுடைய பயணத்தைக் தொடர்ந்திருக்கிறார்கள்.  மூன்று கிழமைகளில் பின் தொலைபேசினோம். அவள் எதோ தின்பண்டம் தயாரிப்பதைக் காட்டியபடியே மக்ஸ் என்னுடன் பேச இடையிடையில் அவளும் என்று பேசிக் கொண்டிருந்தோம். வேலை முடித்து வந்து தாங்கள் குறுக்கெழுத்துப் புதிர் செய்ததாகச் சொன்னாள். தங்களால் கண்டுபிடிக்கமுடியாத எதோ இரண்டு மூன்று சொற்களுக்குரிய துப்புச் சொல்லிக் கேட்டாள் ..ஒன்றைச் சரியாகச் சொன்னேன். அப்படியே ஆரம்பித்து அதைச் செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் பேசத்தான் வேண்டுமென்றில்லை குறுக்கெழுத்துப் புதிரும் செய்யலாம் என்று அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். 

அடுத்த முறை அதையே பாதி நேரம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். வாழ்க்கையின் இனிமை எங்கெல்லாமிருந்து எட்டிப்பார்க்கிறது! 

 

பெட்டகம்