இருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்

ஒரு புள்ளிதான் தேவையாயிருக்கிறது
எல்லாத் தொடக்கங்களுக்கும்.

சந்திப்புகளுக்கும்
அறிமுகத்திற்கும்
காத்திருப்புகளுக்கும் பிரிவுகளுக்கும்
அனுபவங்களுக்கும் ஞாபகங்களுக்கும்
கரைந்து போகிற எந்தவொரு தருணத்துக்கும்.

கோவத்தினையும் குழப்பங்களையும்
தீர்வுகளையும் தீர்மானங்களையும்
அழுகை/சிரிப்புகளையும் பயணங்களையும்
மாற்றங்களையும்
ஆரம்பித்து வைக்கிற அதே புள்ளிதான் எதற்குமே தேவைப்படுகிறது
இதை எழுதவும் கூட.

அன்புக்கு மட்டும் ஏதுமில்லை
காலத்தின் சுவாசத்தைப் போல - என்றென்றைக்கும்
அது ஆரம்பமற்றதாய் இருக்கிறது
அம்மாவைக் கண்ட முதல் நாளினை ஒத்ததாய்.

தேவதைகளின் புன்னகை மந்திரம்

இரவு நேரத்துக் காவல்காரர்களாய் பிறையும் நகரத்து வெளிச்சம் விழுங்காத பத்துப் பன்னிரண்டு நட்சத்திரங்களும் கூடவே முழித்திருக்கின்றன. நினைப்பு முழுவதையும் இன்றைக்குக் கண்ட & காணாத அழகிய சிறு பெண்கள் ஏனோ நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று. அங்கே வந்த இரண்டு அழகிகளுக்கும்
2-3 வயது. ஒருத்திக்குக் கை கொள்ளாதளவு சொக்லட். ஒவ்வொருவரிடமும் போய் "High 5" கொடுத்து அவர்களிடமிருந்து சொக்லட்டை வாங்கிக் கொண்டா. உறையுடனே இருந்த சொக்லட்டை ஒரு கடி கடிப்பா.. பிறகு கையில் இடமில்லாவிடில் அம்மாவிடம் கொடுத்துவிடுவா. அவவின் தலையில் இருந்த இரட்டைத் தென்னைகள் சிறுவயதுத் தலைவாரல்களை ஞாபகப் படுத்திப் போயின. சொர்ணாவாம் பெயர்.. பேசாமல் சொக்லட் என்றே வைத்திருந்திருக்கலாம்.

வந்த மற்றவவோ எம்மி என்னைப் பற்றிச் சொன்னதை நினைவுக்குக் கொணர்ந்தா. எங்கே நடந்தாலும் ஒரு துணி அவவின் கையில் இருந்தது. கோழிக்குஞ்சின் மஞ்சள் நிறத்தில் வெள்ளையினால் கோலம் போட்ட துணி. அவவைப் பார்த்தாலே ஒரு கோழிக்குஞ்சைப் போல தூக்கிக் கொள்ள வேணும் போல இருந்தது. தாய் சொன்னா அந்தத் துணி எப்போதும் அவவோடேயே இருக்குமாம். நானும் சின்னனில 'தூய' என்று என்னால் அழைக்கப்பட்ட துணி இல்லாமல் படுக்க மாட்டேன் என்று எம்மி சொன்ன கதையும் அந்தக் குட்டிப் பெண்ணை இன்று மாலை கண்டதிலிருந்து என்னோடேயே இருக்கிறது.

---*~*~*---
அழகி #1. இவவுக்கும் மிஸ். high5-சொக்லட்டுக்கும் நல்லாவே ஒத்துப் போகும் என்று நினைக்கிறேன். சொக்லட் விரும்பி. "சொக்லட் தாறன், வாறீங்களா இங்கே?" இன்று கேட்டதற்கு "சொக்லட் அனுப்புங்கோ பிறகு வாறன்" என்று சொன்னவ. நான் காணாமல் போன கதை சொன்ன போது படுத்துக் கிடந்து கதை கேட்ட முக பாவம் இன்னும் புன்னகைக்க வைக்கும்.

"சின்னனில பெரியப்பா ஒரு coin swallow பண்ணிட்டார், பிறகு அவர் toiletல இருக்கேக்க அது வெளில வந்தது" என்று தாளமாட்டாத சிரிப்புக்கூடாகச் சொல்லும் அழகி #2. மூன்று வயது வரை சொக்லட் நிராகரிக்கப்பட்ட ஒரு சீவன் இவள். வளர்ந்து chocoholic ஆவாளெனின் அதைப் போல ஒரு பகிடி கிடையாது உலகில்! :O)

"எறும்பு கிட்ட வர மாணாம் சொல்லுங்க" இரண்டரை வயதில் இலங்கை வந்த போது அழகி #3 சொன்னது.
இவ பாடினபடி"இன்னிசை பாடி வரூம்ம்ம் இளங்காற்றுக்கு உடுக்கமில்லை" என்றுதான் எனக்கு அந்தப் பாடல் இப்போதும். இன்னும் ஒரு மாதத்தில் பதின்மப் பருவத்தில் காலடி எடுத்து வைப்பா. ஓ! இந்த நாட்கள் எங்கே தான் போகின்றன?

அழகி #4 குட்டித் தேவதை அஞ்சலி. இவரது கொஞ்சும் தமிழ் கேட்கப் பிடிக்கும். இவவின்இடுகையொன்றைக் களவாடிவிட்டார்களாம் :O(

---*~*~*---

சந்தனமுல்லையைத் பதிலின்றித் திகைக்க வைக்கும் பப்பு முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் பேருந்தில் தாயுடன் கைகோர்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் வரை, நினைத்த மாத்திரத்தில் புன்னகை வரவழைக்கும் மந்திரத்தை எம்மீது ஏவியிருக்கும் எல்லா அழகிகளின் நினைவுகளும் மெல்லத் தலை தூக்குகின்றன. சிறிது நேரம் மல்லிகையோ ரோசாவோ ஏந்தியிருந்ததற்கான அடையாளமாய் கையில் தங்கிவிடும் ஒரு மெல்லிய வாசனை போல இவர்களும் புன்னகைகள் அணிந்தபடி, அணிவித்தபடி கூடவே எம்மோடு பயணிக்கிறார்கள்.

விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்

எனக்கு அளவான வெப்ப நிலையிலும் பேருந்துக்குள்ளிருந்த மற்ற எவருக்குமே வெக்கையாவும் இருந்த ஒரு காலைப் பொழுதில் தான் அந்தக் கபில நிறக் கண்ணழகியிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

பேச ஆரம்பித்து, கையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவொண்ணாமற் பண்ணியதன் பேரிலும் அந்தக் காலைப் பொழுதிலேயே சளசளவென்று ஒன்றேகால் மணித்தியாலத்துக்கு வழி நெடுகலும் பேசிக் கொண்டே வந்ததிலும் அந்தப் பெண்ணை இனிக் காணக் கூடாது என்று நான் வேண்டிக் கொண்டதில் எனக்கு வியப்பில்லை. அன்றுதான் கண்டு பேசிய என்னிடம் தன் குழந்தையின் படங்கள் காட்டி, தங்களுடனே வசிக்கும் மாமியார்/மாமனார் பற்றி 4-5 லொறி கொள்ளக்கூடியளவு குறை சொல்லி, தான் இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் போல தன் செல்பேசி இலக்கம் தந்து போன அந்தப் பெண்ணைக் காணக் கூடாதென்ற என் வேண்டுதல் கொஞ்ச நாட்களுக்குப் பலித்தது. ஆனாலும் மெர்பியின் விதி வேலை செய்தது நேற்று.

வீடு நோக்கிய பயணத்திற்கு, ஓடோடி வந்தும் பேருந்தைத் தவற விட்டுவிட்டேன்(12B / Sliding Doors திரைப்படங்களின் ஞாபகம் வருதா?) . அடுத்ததாய் வந்து நான் ஏறிய பேருந்துக்குள் அவவைக் கண்டேன். பார்த்ததும் சிரித்தா. உசைன் போல்ட்டின் வேகம் மட்டும் எனக்கு இருந்திருக்குமானால் பிடித்திருக்கக் கூடிய பேருந்தில் இந்தப் பெண் இல்லாமல் புத்தகத்தோடு மட்டுமானதாய் அமைந்திருக்கக் கூடிய பயணத்தை நினைத்துக் கொண்டு எரிச்சலாய் விதியே என்று சிரித்து வைத்தேன்.

சாதாரணமான உரையாடல்கள், கேள்விகளினூடே politically incorrect ஆனதும் மற்றவரின் அந்தரங்கத்துள் அத்துமீறுவதுமான கேள்விகளும் என்னிடம் கேட்கப் பட்டன.
இதுவரை பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டு வந்த நான் ஒரு கட்டத்தில் நெளிய ஆரம்பித்திருந்தேன். அதைப்பற்றி அவ ஏன் கவலைப்பட!!! "இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை" என்று சில இடங்களில் சொல்லியும் திரும்பத் திரும்பத் துளைத்தவவை நினைக்க நினைக்க எரிச்சலாயும் அதே நேரம் வியப்பாயும் இருக்கிறது. எப்படி முடிகிறது இவர்களால்?

இந்தியப் பெண்கள் எல்லாத்தையும் தமக்குள்ளேயே மூடி வைத்து புழுஙகி மனவுளைச்சலுக்கு ஆளாகுகிறார்களென்றும் அதனாலேயே இந்தியப் பெண்களைக் கண்டால் பேசினால் அவர்களை மனம் திறந்து பேசப் பண்ணுவதற்குத் தான் முயற்சிப்பதாயும் சொன்னா. கதை பிடுங்க யோசிக்கிறாவோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஒரு கணம் வந்து போனது. குமுதம் ஆ.வி போன்றவற்றில் வரும் மாமியார்-மருமகள் சண்டை பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் பார்த்தது போல இருந்தது அவவின் மாமனார், மாமியார் குறைப் படலம். என்னிடம் கேட்டா நீயும் மாமனார்-மாமியாருடனா வசிக்கிறாய் என்று? இல்லை என்றேன். அவர்கள் வந்து போவார்களா அவர்களின் தலையீடு உண்டா என்ற கேள்விக்கு அவர்கள் உயிருடன் இல்லை என்று சொன்னேன். ஓ! என்றவர், தனது மாமனார்-மாமியாரைப் பிடிக்காததால் அவர்களின் தலையீடு இருப்பதால் அவர்களுக்கு ஏதேனும் கெட்டது நேரட்டும் என்று வேண்டிக் கொள்கிறாவாம். அவவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஏன் இப்படி?

இப்போது முன்னையிலும் அதிகமாக வேண்டிக் கொள்கிறேன்.. அந்தப் பெண்ணைக் காணக் கூடாதே என்று. காலையில் அவவின் தரிப்புத் தாண்டும் வரை தூங்குவது போல நடிக்கவும் மாலையில் ஏறும் முன் பேருந்தை நோட்டம் விடவும் நேர்கிறது. சாதாரணமான ஒரு பேருந்துப் பயணம் இப்படி ஒரு திகிலளிக்கும் ஒன்றாய், தொங்கல் (Suspense) நிறைந்ததாய் அமையக்கூடும் என்று யார்தான் நினைத்தார்கள்! எதேதோ வேண்டுதல்களைப் பலிக்க வைக்கிற எத்தனையோ கோயில்களும் கடவுளரும் இருக்கின்றனரே.. ஒருவரைக் காண வேண்டாமென்றால் அதிலே எந்தக் கோயில் எந்தச் சாமிக்கு நேர்ந்து கொள்ள வேண்டும்?

என்னுடன் இருக்கும் நீ

உன்னோடு பேசுவது தான் எவ்வளவு இதமாய் இருக்கிறது. உன் வீட்டு முற்றத்து நித்தியகல்யாணியைப் போல எப்போதும் புன்னகைக்க வைக்கிறாய். எனக்கு எப்போது தொலைபேச வேண்டும் என்பதை எப்படியோ உன்னால் அறிய முடிகிறது. எப்படியடி? இன்றைக்கும் எடுத்தாய் - வேறு சில ஆற்றாமைகள் கோபங்களுடன் கூடவே ஒரு மணி நேரமாய் எல்லாப் பெட்டிகளுக்குள்ளும் தேடிக் கிடைக்காத ஆனாலும் வீட்டிற்குள்ளே கட்டாயம் இருக்கிற 3 காமாட்சி விளக்குகளிலும் எரிச்சல் தோன்றி, அதை இறக்க வழியின்றி, ஒரு சுவர் அலுமாரிக்குள் அடைத்து வைத்திருக்கிற பிள்ளையாரை நான் முறைத்து திட்ட ஆரம்பிக்கையில்.

நீயென்று ஸ்கைப்பில் கண்டதும் இயலாமையில் வந்த அழுகை எட்டிப்பார்த்தது உண்மை. "என்னடி செய்ற" என்ர ஒரு கேள்வி போதுமாக இருக்கிறது என் விளக்குத் தேடல் எரிச்சல்களைக் கொட்டிவிட. உன்னுடன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒரு சிறு பெட்டியைத் திறந்ததில் 2 விளக்குகள் கிடைத்தன. சிரிக்கிறாய் நீ. எனக்கு எப்படி இதமாய் இருக்கிறாயோ, அப்படி உனக்கு நானுமிருக்கிறேன் என நம்பிக் கொள்கிறேன்.

அடுத்து மற்றவரால் என்ன சொல்லப்படும் என என்னாலும் உன்னாலும் சொல்ல முடியும். எப்படி அது சாத்தியம் என்பதும், எப்படி உன்னிடம் சொல்லும் போது மட்டும் உப்புச் சப்பில்லாத விதயங்களும் சுவையானவையாகின்றன என்பதும் எனக்குப் புரிவதேயில்லை. எலி பிடித்த அதிமுக்கியமான கதை சொல்லத் தொடங்குகிறேன், என்னைத் தவிர உன் உலகத்தில் வேறு யாருமில்லை என்ற பாவனையில் கதை கேட்கிறாய். வேறெவருக்கும் சொல்லும் போது சிரிப்பே வராத எலி பிடித்த கதை உன்னிடம் சொல்லப்படும் போது மட்டும் வயிறு வலிக்கும் படியான நகைச்சுவையாகிப் போகிற மாயம் என்ன? அன்றைக்கொருநாள் உன்னுடன் கதை பேசிச் சிரித்த ஞாபகம் என் முன் வந்தமர்ந்திருக்கிறது. எதற்கோ உனக்குக் கண் கலங்க அதைப் பார்த்து நானும் அழ பிறகு நாம் அழுவதைப் பார்த்து நாமே சிரித்துக் கொண்டதொரு அழகிய பொழுது. உலகம் முழுவதிலும் எல்லாத் தோழிகளுக்கிடையிலும் இருப்பது போலவே எங்களுக்கேயான பிரத்தியேக சிரிப்புக்கள், பேச்சுக்கள். இதை எழுதுகையில் கூட உன் சீரியல் கனவு சிரிக்க வைக்கிறது. வீட்டிற்குள் பின்கதவால் நுழைவதற்குக் கள்ளன் எடுக்கும் முயற்சியைக் கனவாக, அதுவும் தொடர்ந்த கனவாகக் கண்டவள் நீயாய்த்தானிருப்பாய்.

பதின்ம வயதின் இறுதியிலும் இருபதுகளின் ஆரம்பத்திலும் நடந்தவைகளை இப்போது நினைத்தால் வேறெவருக்கோ நடந்தது போலத் தோன்றுகின்றன.
கண்ணீராலேயே ஒரு கடிதம் போட்டேன் உனக்கு, கல்யாணமாகின பிறகு ஒரு முறை வந்த போது அதைக் காட்டினாய். இன்னும் வைத்திருப்பாயோ என்னவோ!! உன் கணவன் உன் காதலனாயிருந்த காலத்தில் என்னால் "மிரட்ட"ப்பட்டதற்கு மன்னித்துக் கொள்; எக்காரணங் கொண்டும் உனக்கு வலித்து விடக் கூடாதென்பதே என் நோக்கமாய் இருந்தது. அதை நீயும் தெரிந்து கொண்டிருந்தாய். என் மீதான அவன் பயங் குறித்துப் பேசிச் சிரித்திருக்கிறோம். என்னிடம் பயப்பட்ட ஒரே சீவன் - அவனிடம் பேசிக் கொள்ள வேண்டும் ஏன் அப்படி இருந்தது என்பதை. உன் விருப்பமான படிப்பை முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாய் என எனக்குத் தெரியும். ஒன்றுமே செய்யாமல் வீட்டில் இருப்பதன் அலுப்புப் புரிகிறது. ஆனால் கண்ணம்மா இந்த நேரத்தை உன்னை அறிந்து கொள்ளப் பயன்படுத்து. உனக்கான நேரம் வரும். நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கொழும்பின் ஏதாவதொரு வீதியில் மழையில் நனைந்தபடி ஒருவரையும் சட்டை செய்யாமல் உன்னோடு மீண்டும் நடக்கத் தோன்றுகிறது.
இன்றைக்கு ஏனோ உன்னிடம் பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பபிள் கரைசலுடன் வருகிறாயா மஞ்சள் வெயிலோடு ஒரு புல்வெளிக்கு?

love u டி..

அந்த ஒற்றை வரி

தொடர்வண்டிப் பயணத்தின் போது மனதிற்குள்ளேயே அழகாய் உருக்கொடுத்துச் சிங்காரித்திருந்தேன் அந்த இடுகையை. வீட்டுக் கதவு திறந்தேன். அந்த இடுகையெங்கே? வண்டியிலேயே மறந்து விட்டேனா? அல்லது இறங்கி நடந்து வரும் வழியில் தொலைத்தேனா? "துளிர்த்து, வளர்ந்து, நிறம் மாறி, உதிர்ந்து காற்றிலலைந்து, தரை தடவி், மக்கி, உரமாய் மண்ணுக்குள் ஊறி, வேர் பிடித்து மரத்துக்குள் போய், சத்தாகித் திரும்பத் துளிர்த்து வரும் அந்த இலை போலே என்றென்றைக்குமான எங்கள் அலைதல்களோடேயே நீயும் நானும்" என்று நினைவில் பிசுபிசுத்தது எப்படியோ தொற்றிக் கொண்டு வந்துவிட்ட ஒற்றை வரி.

அணிந்தணிந்து மென்மையாகிப் போன பிரியமானதொரு ஆடையைப் போலே கவிந்திருக்கிறது வெள்ளியிரவு. மிஞ்சிக் கிடந்த அந்த ஒற்றை வரியை நூல் போலப் பிடித்துக் கொண்டு மீதி இடுகையை திரும்பவும் நெய்துவிடலாமென்று பார்க்கிறேன். வரவேயில்லை. காணாமல் போய்விட்ட அந்த இடுகை, இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது. யோசித்துக் கொண்டு அவவைப் போலவே விழித்திருக்கிறேன். இளவரசி பாவம். அவவுக்கும் வலைப்பதிவிருந்திருந்தால் ஒருவேளை பட்டாணியால் பறிபோன நித்திரையைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கக்கூடும்.

மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்

வழமையா, வேலையிலொரு அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்திறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, அதைத் தேத்தி எடுக்கிறதுக்கு ஒரு செயற்றிட்டம்(project) போட்டு நாலு பேரை வைச்சுப் பழையநிலைக்குச் செயற்றிறனைக் கொண்டு வரக் கூடியதாயிருக்கும். அப்பிடியான திட்டங்களுக்காக அலுவலகத்திலே எப்ப பார்த்தாலும் திட்டஅணிக் கூட்டம் நடக்கும். (அங்க யாரு இப்பவே கொட்டாவி விடுறது?). அப்பிடியான கூட்டங்களுக்குப் போய் பொறுக்கிக் கொண்டு வந்த ஒரு சில பயனுள்ள விதயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்டு பாக்கிறேன். எனக்குப் பழக்கமில்லாதளவு நீளமான பதிவு.

ஒரு சின்னக் குறிப்பு: இதில சொல்லப்போறவை உங்களைச் செப்பனிடவோ வேலை செய்யிற விதத்தை மேம்படுத்தவோ மட்டுமில்லாமல் இப்ப ஈழத்தமிழர் எதிர்நோக்கியிருக்கிற நிலைக்கும் பயன்படும்.

விதயத்துக்கு வருவம். பல சந்தர்ப்பங்களில பார்த்தால் செயல்திறனைத் தேத்தி எடுக்கவென்டு கொண்டு வரப்பட்ட அந்தத் திட்டம் அடிப்படையா இருக்கிற பிரச்சனைகளை கருத்தில கொள்ளுறதில்ல. உதாரணமா, அடிப்படைப் பிரச்சனையை நோய் என்டு எடுத்துக் கொண்டா, செயற்திறன் குறையிறது அந்நோயின் அறிகுறிதான். செயற்திறன் பழையபடி மேலுக்கு வருது என்டா நோயிட அறிகுறிதான் கவனிக்கப்பட்டு இல்லாமலாக்கப் பட்டிருக்கு ஆனால் நோய் இன்னும் இருக்கு என்டு பொருள்.

எங்கட சூழல் மாற்றங்களால நிரம்பின ஒன்று. சில நேரங்களில மாற்றம் எங்கள் மேல திணிக்கப்படுது & அதனுடைய விளைவுகளை நாங்கள் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கு. சில நேரத்தில ஏலவே இருக்கிற நிலையை மேம்படுத்துறதுக்காக நாங்களாக் கொண்டு வாறதாவும் மாற்றங்கள் இருக்கு. எங்கேயோ வாசிச்சது: முன்னேற்றமெல்லாம் மாற்றமெனினும் மாற்றமெல்லாம் முன்னேற்றமல்ல.

நாங்க வழமையா இயங்குற/சிந்திக்கிற முறையில மாற்றம் கொண்டு வாறது கொஞ்சம் தயக்கம் தாற விதயம்தான். என்னென்ன குந்தகம் விளையக்கூடும் என்டு யோசிப்பது இயல்பு. இப்பிடியான யோசனைகளுக்குப் பதிலை நாங்களே கண்டடையக் கூடியதாப் பயன்படுத்த "முன்னேற்றத்துக்கான மாதிரியுரு" என்டு சொல்லக்கூடியதொன்டு இருக்கு. "முன்னேற்றத்துக்கான மாதிரியுரு"(model for improvement) வை 1992ல் நோலன் லாங்லி(Nolan Langley) என்பவர் பிரசுரித்தார். இந்த மாதிரியுரு, முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய வகையில் யோசனைகளை வடிவமைச்சு, அவற்றைச் சீர்திருத்தி, செயற்படுத்திப் பார்ப்பதற்கு ஒரு கட்டமைப்பைத்(framework) தருது.

இந்த மாதிரியுருவில ஒன்றையொன்று சார்ந்த 2 பகுதிகள் இருக்கு.

1. யோசித்து, சீர்தூக்கிப்பார்க்கும் பகுதி. பின்வரும் 3 கேள்விகளையுடையது:

 • எதைச் சாதிக்க /நிறைவேற்ற முயல்கிறோம்?
 • மாற்றம் முன்னேற்றந்தானா என்பதை எப்படி அறிவது?
 • முன்னேற்றம் ஏற்படுதற்கு என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்?

2. செயற்பாட்டுப் பகுதி: 4 பிரிவுகளுண்டு. பகுதி 1 இல் (யோசித்து, சீர்தூக்கிப்பார்க்கும் பகுதி)பெறப்பட்ட முடிவுகளை அடைவதற்காய்ச் செயலில் இறங்கல். இதிலே,
 • திட்டமிடல்
 • (திட்டமிட்டதைச்) செயற்படுத்தல்
 • (செயற்படுத்தினதின் விளைவுகளைக்) கவனித்தல்
 • (கவனித்து, [தேவையெனின்] சீர்திருத்திய திட்டத்தை) முன்னெடுத்தல்
.

ஆக, முன்னேற்றத்துக்கான மாதிரியுரு கீழ உள்ள மாதிரி அமையும்:முன்னேற்றுறத்துக்கு எடுக்கிற எந்த முயற்சியையும் வடிவாத் திட்டமிட்டுச் செய்வது இலக்கை வெற்றிகரமா அடைவதுக்கு வழிவகுக்கும். மேல காட்டின மாதிரியுருவைக் கொஞ்சம் விளக்கமாப் பாப்பம். முதல்ல கேள்விகள் பகுதி:

1. எதைச் சாதிக்க /நிறைவேற்ற முயல்கிறோம்?
இந்தக் கேள்வி :
 • இப்ப இருக்கிற நிலை என்ன,
 • அதில என்ன மேம்படுத்தலைச் செய்ய விரும்புறீங்க,
 • என்ன விளைவுகள் ஏற்படுத்தப்படுறதை விரும்புறீங்க,
 • இப்ப இருக்கிறதிலும் பார்க்க என்னென்ன வித்தியாசமா இருக்க வேணும்
போன்றவற்றுக்குரிய விடைகளை உய்த்தறிவதின் மூலம் உங்கட அடிப்படை நோக்கத்தைத் தெளிவாக்க உதவுது.

உதாரணமா, ஒரு உணவகத்திலே சாப்பாடு சுவையில்ல என்டா,
- இப்ப இருக்கிற நிலை: சாப்பாட்டைச் சாப்பிட முடியவேயில்ல.
- மேம்படுத்தல்: சுவை கூட வேணும் - உப்பு சரியாப் போட வேணும், உறைப்புக் குறைக்க வேணும்
- விரும்பிய விளைவு: எப்ப நினைச்சாலும் அட! அதுவல்லோ சாப்பாடு என்டு (சாப்பிட்டவர்கள்) மீண்டும் மீண்டும் தேடி வரச் செய்யோணும்.
- இனிமேல் வித்தியாசமாக: வெவ்வேறு வகையான உணவுகளையும் சுவையாகத் தயாரிக்கிறது, சமைக்கத் தெரிந்த சமையல்காரரைப் பணிக்கு அமர்த்துவது2. ஏற்படுகிற மாற்றம் முன்னேற்றந்தானா என எப்படி அறிவது?
இந்தக் கேள்விக்குரிய நோக்கம், ஏற்பட்ட மாற்றத்தை அளவிடுறது எப்படி என்பதைத் தீர்மானிப்பது. மாற்றமேற்பட்டதை அறிவது அளவீடில்லாமல் சாத்தியமில்லை. இந்தக் கேள்வி கேட்கப்படும் போது பின்வரும் துணைக்கேள்விகள் அதில் தொக்கி நிற்கின்றன:

 • உங்கட அளவீட்டு முறைகள் என்ன?
 • என்ன அடிப்படையில் இம்முறைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?
 • அவ் அளவீட்டு முறைகள் எதை அளக்கப் போகின்றன? (தேவையெனக் குறிக்கப்பட்ட மாற்றம் ஏற்படுவதையா, ஏற்படாமல் போவதையா?)
 • பெறுபேறுகள்(results) எவ்வாறு அளக்கப்படப் போகின்றன?
 • யார் அளவீடுகளை முன்னெடுப்பது, தொகுப்பது?

 • இதுக்கு உதாரணமா, உங்கட வலைப்பதிவுக்கு அதிகமான வாசகர்களை வரவழைக்க முயலுறீங்க என்டால்,
  - அளவீடுகள்: வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை, பின்னூட்டங்களின் எண்ணிக்கை, எப்படியான பதிவுகளுக்கு அதிகமான வாசகர்கள்
  - தேர்ந்தெடுக்கப்படும் அடிப்படை: வாசகர்கள் வருவதைக் கணிக்க உதவுது
  - எதை அளக்கின்றன: ஒவ்வொருத்தரும் எத்தனை முறை பதிவுக்கு வருகிறார்கள் என்பதை
  - அளக்கும் முறை: ஐபிஎண்ணை வைத்து அளக்கலாம்
  - அள்வீட்டுத் தொகுப்பு: புள்ளிவிவரச் சேவையை வழங்கும் தளங்களில் ஒன்றையோ, பலதையோ பயன்படுத்தலாம்.. அதான் வெத்திலைபாக்கு வைக்காத குறையாக் கூப்பிடுறாங்களே...  3. முன்னேற்றம் ஏற்படுதற்கு என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்?
  கடைசிக் கேள்வியான இதற்குரிய பதில், உங்கள் இலக்கை அடைவதற்கு / முன்னேற்றமடைவதற்கு தேவையான மாற்றங்களில் எவற்றை முயல ஆயத்தமாய் இருக்கிறீர்கள் என்று தெளிவு படுத்தும்.
  • அநேகமாய் பயன் தரும் எனக் கருதப்படும் வழிமுறைகள் என்னென்ன? இதைப் பின்பற்றுகையில், அவ்வழிகள் பயன்தருவன என்பதற்கு என்னென்ன ஆதாரங்களுண்டு என்பதையும் கவனிக்க வேணும்.
  • நீங்களும் திட்டப்பணியைச் சார்ந்தவர்களும் நல்லதென நினைப்பவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கலாம்.
  • வேறெங்காவது பயன்படுத்தப்பட்டதில் எதையாவது் பாவிக்கலாமா?
  • இக்கேள்விக்குப் பதிலளிக்கையில வழமையான முறையிலேயே சிந்திக்காமல் புதுமையான வழிகளும் முற்போக்கானவையும் முன்வைக்கப்படுற வாய்ப்புகள் இருக்கு.
  கடைசிக் கேள்விக்குரிய உதாரணத்திற்கு, உங்களுக்கு வேலை அதிகம் என்று வைத்துக் கொள்வோம்(என்ன வைச்சுக் கொள்ளுறது, அதேதான் என்டு நீங்க புலம்புவது கேட்குது), குறைப்பதுதான் இலக்கு.
  - அநேகமாய்ப் பயன் தரக்கூடியவை: வேலை நேரத்தில் வலை மேயாதிருப்பது, ஒவ்வொரு நாளும் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாய் வேலை செய்வது. இந்த 2 வழிகளும் பயன் தரும் என்பதற்கு ஆதாரம்: பணியை முடிக்கக் கிடைக்கிற மேலதிக நேரம்.
  - நல்ல வழியென நினைப்பவை: சீரான பணிமுறைகளைக் கையாளல், உங்கட அலுவலகத்திலேயே உள்ளவருடனான தொடர்பாடல் முறையை தொ.பே அல்லது நேரிலே பேசுதல் ஆக மாற்றல் (பதிலுக்காகக் காத்திருக்க வேண்டிய நேரம் குறையும்தானே.. கெதியா வேலையை முடிச்சு கெதியா வீட்ட போகலாம்)
  - வேறெங்காவது பயன்பட்டவை இங்கு: முடிந்தால் வேலையை எந்திரமயமாக்கிறது (அப்ப வேலை போயிருமே என்டு கேட்டால் நான் பதில்ல மாட்டேனேஏஏஏ..)
  - வேற புதிய வழிகள்: மேலாளரிடம் சொல்லிப் பளுவைக் குறைப்பது(நடக்கிற காரியமா என்று யோசிக்காம செய்து பார்க்கலாம், சரி வராட்டி் அதேயளவு வேலையத்தானே செய்யப்போறீங்க), சக பணியாளரோடு பேசியோ சொக்ளேற் கையூட்டாக் குடுத்தோ கொஞ்ச வேலையை அவரிடம் தள்ளி விடுவது, வேலை செய்யும் நேரத்தை மாற்றுவது - 9-5 செக்குமாடா இல்லாமல் 8-4 அல்லது 11-7 என்று உங்களுக்கு உசார் அதிகமிருக்கிற நேரத்துக்கு வேலையை மாற்றிக் கொள்வது, பளு குறைந்த வேறு வேலைக்கு மாறுவது.
  மேல சொன்னவற்றில வேலைப்பளுவைக் குறைப்பதற்காய் எந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் ஆயத்தம் என்ட தெளிவு இதுகளுக்குப் பதில் (உண்மையாச்) சொல்லேக்க கிடைக்கும்.


  அடுத்ததா, தி-செ-க-மு சுழற்சி. இதை அடுத்த பதிவில பாப்பம்.

  சிவப்பு!

  சிவப்பு!

  என்ன செய்ய?

  திகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்
  இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்

  இன்னுமொரு பயங்கரம் விரிகிறது
  கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
  வேறென்ன செய்ய முடிகிறது?

  எம் தப்பித்தல்களுக்காய்

  வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி கொள்வதும் தவிர்த்து?

  பெட்டகம்