இருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்

ஒரு புள்ளிதான் தேவையாயிருக்கிறது
எல்லாத் தொடக்கங்களுக்கும்.

சந்திப்புகளுக்கும்
அறிமுகத்திற்கும்
காத்திருப்புகளுக்கும் பிரிவுகளுக்கும்
அனுபவங்களுக்கும் ஞாபகங்களுக்கும்
கரைந்து போகிற எந்தவொரு தருணத்துக்கும்.

கோவத்தினையும் குழப்பங்களையும்
தீர்வுகளையும் தீர்மானங்களையும்
அழுகை/சிரிப்புகளையும் பயணங்களையும்
மாற்றங்களையும்
ஆரம்பித்து வைக்கிற அதே புள்ளிதான் எதற்குமே தேவைப்படுகிறது
இதை எழுதவும் கூட.

அன்புக்கு மட்டும் ஏதுமில்லை
காலத்தின் சுவாசத்தைப் போல - என்றென்றைக்கும்
அது ஆரம்பமற்றதாய் இருக்கிறது
அம்மாவைக் கண்ட முதல் நாளினை ஒத்ததாய்.

5 படகுகள் :

சந்தனமுல்லை December 21, 2009 11:51 pm  

அழகா இருக்கு ஷ்ரேயா..ஆரம்பமும் முடிவும் கூட ஒரே புள்ளியாக இருப்பது போலத்தான் இருக்கிறது! :-)

துளசி கோபால் December 22, 2009 2:30 pm  

எங்கே ஆளையே கனகாலமாக் காணோம்?

பெயருக்கு ஏற்றாப்போலவா வருவதும் போவதும்!!!!!

சிங். செயகுமார். December 23, 2009 12:09 am  

எங்கே ஆளையே கனகாலமாக் காணோம்?

பெயருக்கு ஏற்றாப்போலவா வருவதும் போவதும்!!!!repeeettu

`மழை` ஷ்ரேயா(Shreya) December 23, 2009 11:43 am  

யாராவது தேடுறாங்களான்னு பார்க்கணுமில்லே.. :O)

மணிமேகலா December 27, 2009 11:21 am  

ஒரு அன்பு சார்ந்ததொரு உண்மையைக் கவித்துவத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் மழைப்பெண்னே!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பெட்டகம்