தேவதைகளின் புன்னகை மந்திரம்

இரவு நேரத்துக் காவல்காரர்களாய் பிறையும் நகரத்து வெளிச்சம் விழுங்காத பத்துப் பன்னிரண்டு நட்சத்திரங்களும் கூடவே முழித்திருக்கின்றன. நினைப்பு முழுவதையும் இன்றைக்குக் கண்ட & காணாத அழகிய சிறு பெண்கள் ஏனோ நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று. அங்கே வந்த இரண்டு அழகிகளுக்கும்
2-3 வயது. ஒருத்திக்குக் கை கொள்ளாதளவு சொக்லட். ஒவ்வொருவரிடமும் போய் "High 5" கொடுத்து அவர்களிடமிருந்து சொக்லட்டை வாங்கிக் கொண்டா. உறையுடனே இருந்த சொக்லட்டை ஒரு கடி கடிப்பா.. பிறகு கையில் இடமில்லாவிடில் அம்மாவிடம் கொடுத்துவிடுவா. அவவின் தலையில் இருந்த இரட்டைத் தென்னைகள் சிறுவயதுத் தலைவாரல்களை ஞாபகப் படுத்திப் போயின. சொர்ணாவாம் பெயர்.. பேசாமல் சொக்லட் என்றே வைத்திருந்திருக்கலாம்.

வந்த மற்றவவோ எம்மி என்னைப் பற்றிச் சொன்னதை நினைவுக்குக் கொணர்ந்தா. எங்கே நடந்தாலும் ஒரு துணி அவவின் கையில் இருந்தது. கோழிக்குஞ்சின் மஞ்சள் நிறத்தில் வெள்ளையினால் கோலம் போட்ட துணி. அவவைப் பார்த்தாலே ஒரு கோழிக்குஞ்சைப் போல தூக்கிக் கொள்ள வேணும் போல இருந்தது. தாய் சொன்னா அந்தத் துணி எப்போதும் அவவோடேயே இருக்குமாம். நானும் சின்னனில 'தூய' என்று என்னால் அழைக்கப்பட்ட துணி இல்லாமல் படுக்க மாட்டேன் என்று எம்மி சொன்ன கதையும் அந்தக் குட்டிப் பெண்ணை இன்று மாலை கண்டதிலிருந்து என்னோடேயே இருக்கிறது.

---*~*~*---
அழகி #1. இவவுக்கும் மிஸ். high5-சொக்லட்டுக்கும் நல்லாவே ஒத்துப் போகும் என்று நினைக்கிறேன். சொக்லட் விரும்பி. "சொக்லட் தாறன், வாறீங்களா இங்கே?" இன்று கேட்டதற்கு "சொக்லட் அனுப்புங்கோ பிறகு வாறன்" என்று சொன்னவ. நான் காணாமல் போன கதை சொன்ன போது படுத்துக் கிடந்து கதை கேட்ட முக பாவம் இன்னும் புன்னகைக்க வைக்கும்.

"சின்னனில பெரியப்பா ஒரு coin swallow பண்ணிட்டார், பிறகு அவர் toiletல இருக்கேக்க அது வெளில வந்தது" என்று தாளமாட்டாத சிரிப்புக்கூடாகச் சொல்லும் அழகி #2. மூன்று வயது வரை சொக்லட் நிராகரிக்கப்பட்ட ஒரு சீவன் இவள். வளர்ந்து chocoholic ஆவாளெனின் அதைப் போல ஒரு பகிடி கிடையாது உலகில்! :O)

"எறும்பு கிட்ட வர மாணாம் சொல்லுங்க" இரண்டரை வயதில் இலங்கை வந்த போது அழகி #3 சொன்னது.
இவ பாடினபடி"இன்னிசை பாடி வரூம்ம்ம் இளங்காற்றுக்கு உடுக்கமில்லை" என்றுதான் எனக்கு அந்தப் பாடல் இப்போதும். இன்னும் ஒரு மாதத்தில் பதின்மப் பருவத்தில் காலடி எடுத்து வைப்பா. ஓ! இந்த நாட்கள் எங்கே தான் போகின்றன?

அழகி #4 குட்டித் தேவதை அஞ்சலி. இவரது கொஞ்சும் தமிழ் கேட்கப் பிடிக்கும். இவவின்இடுகையொன்றைக் களவாடிவிட்டார்களாம் :O(

---*~*~*---

சந்தனமுல்லையைத் பதிலின்றித் திகைக்க வைக்கும் பப்பு முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் பேருந்தில் தாயுடன் கைகோர்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் வரை, நினைத்த மாத்திரத்தில் புன்னகை வரவழைக்கும் மந்திரத்தை எம்மீது ஏவியிருக்கும் எல்லா அழகிகளின் நினைவுகளும் மெல்லத் தலை தூக்குகின்றன. சிறிது நேரம் மல்லிகையோ ரோசாவோ ஏந்தியிருந்ததற்கான அடையாளமாய் கையில் தங்கிவிடும் ஒரு மெல்லிய வாசனை போல இவர்களும் புன்னகைகள் அணிந்தபடி, அணிவித்தபடி கூடவே எம்மோடு பயணிக்கிறார்கள்.

7 படகுகள் :

சந்தனமுல்லை November 28, 2009 11:53 am  

அழகான போஸ்ட்! நல்லா வந்திருக்கு ஷ்ரேயா! அழகிங்களைப் பத்தி சொல்றதினாலேயோ என்னவோ தெரியாலை, அழகா காட்சிகள் விரியுது கண்முன்னாடி! கடைசிலே பார்த்தா நாங்களும் இருக்கோம் உங்க பதிவுலே...ஆச்சரியமாக இருந்தது! :-))

`மழை` ஷ்ரேயா(Shreya) November 28, 2009 11:38 pm  

நன்றி ஆச்சி. அழகி #1 எழுதும் போது ஒரு வசனம் விடுபட்டுவிட்டது. இப்போ சேர்த்திருக்கிறேன்.

ஆயில்யன் December 03, 2009 4:24 am  

//புன்னகை வரவழைக்கும் மந்திரத்தை எம்மீது ஏவியிருக்கும் எல்லா அழகிகளின் நினைவுகளும் மெல்லத் தலை தூக்குகின்றன. சிறிது நேரம் மல்லிகையோ ரோசாவோ ஏந்தியிருந்ததற்கான அடையாளமாய் கையில் தங்கிவிடும் ஒரு மெல்லிய வாசனை போல இவர்களும் புன்னகைகள் அணிந்தபடி, அணிவித்தபடி கூடவே எம்மோடு பயணிக்கிறார்கள்.//


ம்ம்ம் அப்படியான நினைப்பு என்னிடத்திலும் உண்டு ! ஒவ்வொரு முறையும் பதிவுகளிலோ படங்களிலோ உண்ர்வுகளின் விவரித்தல்களை காண்கையில் உடனே காணும் எண்ணமோ அல்லது முன்பு கண்டபோது நினைவில் நின்ற எண்ணங்களோ நிழலாடிச்செல்லும் !

அழகான நினைவலைகள் !

ஆயில்யன் December 03, 2009 4:26 am  

பதிவினில் ஃபாண்ட் சைசினை கொஞ்சம் அதிகரித்தால்,வயதான காலத்தில் எங்களுக்கு படிக்க எளிதாக இருக்கும்!

:)

ஆயில்யன் December 03, 2009 4:26 am  

பதிவில் ஃபாண்ட் சைசினை கொஞ்சம் பெரிதாக்கினால் வயசான காலத்தில் எங்களை போன்றோர் படிக்க வசதியாகவும் இருக்கக்கூடும்! :)

`மழை` ஷ்ரேயா(Shreya) December 20, 2009 3:25 pm  

என்ன்ன்னது!!!! உங்களுக்கு வயசு போகுதா ஆயில்ஸ்??? (ஸ்மைலி போடல)

விக்கி December 27, 2009 6:52 pm  

மிகவும் அழகு

பெட்டகம்