விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்

எனக்கு அளவான வெப்ப நிலையிலும் பேருந்துக்குள்ளிருந்த மற்ற எவருக்குமே வெக்கையாவும் இருந்த ஒரு காலைப் பொழுதில் தான் அந்தக் கபில நிறக் கண்ணழகியிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

பேச ஆரம்பித்து, கையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவொண்ணாமற் பண்ணியதன் பேரிலும் அந்தக் காலைப் பொழுதிலேயே சளசளவென்று ஒன்றேகால் மணித்தியாலத்துக்கு வழி நெடுகலும் பேசிக் கொண்டே வந்ததிலும் அந்தப் பெண்ணை இனிக் காணக் கூடாது என்று நான் வேண்டிக் கொண்டதில் எனக்கு வியப்பில்லை. அன்றுதான் கண்டு பேசிய என்னிடம் தன் குழந்தையின் படங்கள் காட்டி, தங்களுடனே வசிக்கும் மாமியார்/மாமனார் பற்றி 4-5 லொறி கொள்ளக்கூடியளவு குறை சொல்லி, தான் இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் போல தன் செல்பேசி இலக்கம் தந்து போன அந்தப் பெண்ணைக் காணக் கூடாதென்ற என் வேண்டுதல் கொஞ்ச நாட்களுக்குப் பலித்தது. ஆனாலும் மெர்பியின் விதி வேலை செய்தது நேற்று.

வீடு நோக்கிய பயணத்திற்கு, ஓடோடி வந்தும் பேருந்தைத் தவற விட்டுவிட்டேன்(12B / Sliding Doors திரைப்படங்களின் ஞாபகம் வருதா?) . அடுத்ததாய் வந்து நான் ஏறிய பேருந்துக்குள் அவவைக் கண்டேன். பார்த்ததும் சிரித்தா. உசைன் போல்ட்டின் வேகம் மட்டும் எனக்கு இருந்திருக்குமானால் பிடித்திருக்கக் கூடிய பேருந்தில் இந்தப் பெண் இல்லாமல் புத்தகத்தோடு மட்டுமானதாய் அமைந்திருக்கக் கூடிய பயணத்தை நினைத்துக் கொண்டு எரிச்சலாய் விதியே என்று சிரித்து வைத்தேன்.

சாதாரணமான உரையாடல்கள், கேள்விகளினூடே politically incorrect ஆனதும் மற்றவரின் அந்தரங்கத்துள் அத்துமீறுவதுமான கேள்விகளும் என்னிடம் கேட்கப் பட்டன.
இதுவரை பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டு வந்த நான் ஒரு கட்டத்தில் நெளிய ஆரம்பித்திருந்தேன். அதைப்பற்றி அவ ஏன் கவலைப்பட!!! "இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை" என்று சில இடங்களில் சொல்லியும் திரும்பத் திரும்பத் துளைத்தவவை நினைக்க நினைக்க எரிச்சலாயும் அதே நேரம் வியப்பாயும் இருக்கிறது. எப்படி முடிகிறது இவர்களால்?

இந்தியப் பெண்கள் எல்லாத்தையும் தமக்குள்ளேயே மூடி வைத்து புழுஙகி மனவுளைச்சலுக்கு ஆளாகுகிறார்களென்றும் அதனாலேயே இந்தியப் பெண்களைக் கண்டால் பேசினால் அவர்களை மனம் திறந்து பேசப் பண்ணுவதற்குத் தான் முயற்சிப்பதாயும் சொன்னா. கதை பிடுங்க யோசிக்கிறாவோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஒரு கணம் வந்து போனது. குமுதம் ஆ.வி போன்றவற்றில் வரும் மாமியார்-மருமகள் சண்டை பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் பார்த்தது போல இருந்தது அவவின் மாமனார், மாமியார் குறைப் படலம். என்னிடம் கேட்டா நீயும் மாமனார்-மாமியாருடனா வசிக்கிறாய் என்று? இல்லை என்றேன். அவர்கள் வந்து போவார்களா அவர்களின் தலையீடு உண்டா என்ற கேள்விக்கு அவர்கள் உயிருடன் இல்லை என்று சொன்னேன். ஓ! என்றவர், தனது மாமனார்-மாமியாரைப் பிடிக்காததால் அவர்களின் தலையீடு இருப்பதால் அவர்களுக்கு ஏதேனும் கெட்டது நேரட்டும் என்று வேண்டிக் கொள்கிறாவாம். அவவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஏன் இப்படி?

இப்போது முன்னையிலும் அதிகமாக வேண்டிக் கொள்கிறேன்.. அந்தப் பெண்ணைக் காணக் கூடாதே என்று. காலையில் அவவின் தரிப்புத் தாண்டும் வரை தூங்குவது போல நடிக்கவும் மாலையில் ஏறும் முன் பேருந்தை நோட்டம் விடவும் நேர்கிறது. சாதாரணமான ஒரு பேருந்துப் பயணம் இப்படி ஒரு திகிலளிக்கும் ஒன்றாய், தொங்கல் (Suspense) நிறைந்ததாய் அமையக்கூடும் என்று யார்தான் நினைத்தார்கள்! எதேதோ வேண்டுதல்களைப் பலிக்க வைக்கிற எத்தனையோ கோயில்களும் கடவுளரும் இருக்கின்றனரே.. ஒருவரைக் காண வேண்டாமென்றால் அதிலே எந்தக் கோயில் எந்தச் சாமிக்கு நேர்ந்து கொள்ள வேண்டும்?

8 படகுகள் :

சந்தனமுல்லை November 19, 2009 12:32 am  

ஆகா..மனிதர்கள்தான் எத்தனை விதம்!!! :)))

ஆயில்யன் November 19, 2009 5:18 am  

வேண்டுதல் பலிக்கட்டும்! :)


எங்களுக்காக இப்படி எதுவும் வேண்டவில்லைத்தானே ?! :)

`மழை` ஷ்ரேயா(Shreya) November 19, 2009 10:55 pm  

:O) இல்லை

கானா பிரபா November 19, 2009 11:27 pm  

மழை பாஸ்

ட்ரெயினை விட்டுட்டு பஸ் பிடிச்சா இதுதான் கதின்னு சிட்னி முருகன் சொல்லச் சொன்னார்

கானா பிரபா November 19, 2009 11:28 pm  

பதிவர் சந்திப்பை நடத்தவேண்டும் என்ற உள் நோக்கம் கருதி சிலர் பதிவுகளை அவசரமாக இடுவதாக ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி பதிவுலகம் தெரிவிக்கின்றது.

`மழை` ஷ்ரேயா(Shreya) November 20, 2009 8:11 pm  

அதாரது? (முருகனைக் கேட்கவில்லை, ராசதந்திர வட்டாரத்தைக் கேட்கிறேன்) :O)

கலை November 20, 2009 8:28 pm  

சில பேரிட்ட மாட்டிக் கொள்ளாம இருக்க வேண்டுதலெல்லாம் தேவைப்படுதுதான் போல கிடக்கு.

அதுசரி, அதிகம் கதைக்கிறது யாரோட எண்டு ஒரு இடுகை வந்தா, உடனே கதைக்காம இருக்க வேண்டுதலெண்டு எதிர்ப் பதிவு போடுறீங்களா :).

`மழை` ஷ்ரேயா(Shreya) November 28, 2009 11:47 pm  

ஆகா.. இப்பிடியெல்லாம் கூட இதைப் பார்க்கலாமா!! ஆனா எதிர்ப்பதிவு உடனயே வர வேணுமே, நான் பிந்தியெல்லா போட்டிருக்கிறன் :O)

பெட்டகம்