ஆசை ஆசை இப்பொழுது!

முதலில், என்னைப் போலவே ஆசைகளையுடைய கறுப்பிக்கு அவ எழுதின "கனவு" பதிவுக்காக பெரீய்ய்ய்யதொரு நன்றி. இந்த மாதிரி ஆசைகள் எனக்கு மட்டும் தான் இருக்கும் என இவ்வளவு நாளும் naive ஆக நினைத்துக் கொண்டிருந்த என்னை 'அப்படியல்ல' என்று உணர வைத்ததற்கு!

கறுப்பியைப்போலே எனக்கும் ஆசை..இலங்கையையும் இந்தியாவையும் அலுக்கும் வரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று. இதைப்போலவே இன்னும் ஆசைகள் இருக்கு. நனவாக்குவது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை. அம்மா ஆட்டுக்குட்டி என்று பிள்ளைகள் வாலைப்பிடிக்க முன்னம் இவற்றைச் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகுதான்!(பிள்ளைகள் கட்டாயம் பிறக்கும்..வாலைப்பிடிக்கும் என்று நினைப்பது நான் வளர்ந்த பின்னணியின் default எண்ணங்களில் ஒன்றா??)

தொல்பொருள் ஆராய்ச்சியிலும், பழங்கால அரண்மனை/கோயில்/குகை/சிற்பம்/கல்வெட்டு இதெல்லாம் பார்ப்பதிலும் ஈடுபாடு அதிகம். சரித்திரக் கதைகள் வாசித்தது இந்த ஆசைகளை அதிகரித்து விட்டது. பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தொ.கா.பெட்டியில் இது சம்பந்தமாய் டொக்யுமென்ட்ரி போட்டார்களோ..அந்தப் பொழுதில் அதைப் பார்ப்பதைத் தவிர வேற வேலை ஒன்றும் நடவாது. நிறைவேற்றக் கடினம் அல்லது இன்னும் கொஞ்சம் காலம் தேவை என நான் கருதும் என் ஆசைகளை (இப்போதைய நிலவரப்படி) பட்டியலிட்டால்:

1. நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்
2. இலங்கையில் சைக்கிளில் திரிய வேண்டும் + இடங்கள் பார்க்க வேண்டும்
3. இந்தியாவில் காலவரையறையன்றி சுற்றிப்பார்க்க வேண்டும்
4. தொல்பொருளாராய்ச்சி நடக்கும் இடத்தில் தங்கி, ஆராய்ச்சிக்குழுவில் இடம் பெற வேண்டும் (புதிதாய் எதாவது கண்டுபிடித்தல் மிகவும் விரும்பப்படும் :o)

மிக மிக முக்கியமாக: இவையெல்லாவற்றுக்கும் போதுமானளவு $$ வேண்டும்!! ;o)

எனக்குள் ஒரு கேள்வி. அதைக்கேட்க முன்:
எனக்கு - ஒரு வீட்டிலோ, யுனிற்/அப்பார்ட்மென்டிலோ - தனியே /என் நண்பிகளுடன் தங்கி வாழ வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது(இப்பவும் சில வேளை தலை தூக்கும்!). ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருமணம் முடித்து வெளிநாடு வந்துமாயிற்று. ஆசை எட்டிப்பார்க்கும். என் ஆசையை வாழும் , இங்கைத்தேய நண்ப நண்பிகளை பொறாமையுடன் பார்க்க வைக்கும். எனக்கும் அப்பிடி அவர்களைப்போல இருக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது. கணவர் கனடா போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 20 நாட்கள். ஆசை நிறைவேறிற்று. எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்தேனோ அப்படியே இருந்தது. சந்தோசமாக உணர்ந்தேன். அதற்காக திருமணவாழ்க்கை பிடிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. குடும்பத்தினரோடு கழிக்கும் நேரம்/ வாழ்க்கை தந்ததை விட நான் தனியே இருந்து சுதந்திரமாகச் செயற்பட்டது எனக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தந்தது. முக்கியமாக, நான் குறிப்பிட்ட எதையும் செய்யும் போது இன்னொருவரைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவருக்கு வசதிப்படுமா..விருப்பமான activity ஆக இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமல், carefree யாக இருக்க, எனக்கு விருப்பமானதெல்லாம், விரும்பியபோதெல்லாம் செய்யவும் முடிந்தது.( அடிப்படையில் சொல்லப்போனால் பொறுப்புகளற்றிருப்பது!)

சரி கேள்விக்கு வருகிறேன்: எந்த இடமாகவோ பயணமாகவோ இருந்தாலும், தனித்து அதைப் பார்க்க/பயணிப்பதற்கும் கூடவே இன்னும் ஆட்களுடன் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அனுபவம் கட்டாயம் வேறுபடும். நினைத்த மாத்திரத்தில் பயணம் கிளம்புவது சாத்தியமாவதில்லை. திருமணமானோர் பாடு கேட்கவே வேண்டாம்..பயணி தன்னை மட்டுமல்லாது குடும்பத்தவரையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை (மிகச் சிலரைத்தவிர) இருக்கிறது. தனி அனுபவம் பெற விரும்பும் ஒருவருக்கு (கறுப்பி / என்னைப் போல!) தனித்திருப்பதுதான் இதற்கு தீர்வாக முடியுமா? அல்லது ஆசைகளின் நிறைவை, கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பெறலாமா?

உயிர் காத்தல்

இந்தப்புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பது பற்றி கடந்த ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வாசித்து முடித்துவிட்டேன். என்ன புத்தகம் என்று கேட்கிறீர்களா? முதலில் புத்தகத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு பெயரைச் சொல்கிறேன். கொஞ்ஞ்ஞ்சம் பொறுத்தருள்க :o)

ஹொலொகாஸ்ட் பற்றி கட்டாயம் அறிந்திருப்பீர்கள். எத்தனை லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எல்லாம் ஹிட்லருக்கு அவ்வினத்தின் மேல் இருந்த வெறுப்புத் தான் காரணம். சிறுவர், முதியோர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஜேர்மனி, ஆக்கிரமித்த நாடுகளிலெல்லாம் யூத வெறுப்பு பிரச்சாரம் நடத்தியது. ஆனாலும் பெல்ஜியத்தில் மிக மிக மிகக் குறைந்த அளவிலேயே ஜேர்மனியின் யூத எதிர்ப்பிற்கு ஆதரவு கிடைத்தது. ஆனாலும் இது ஜேர்மனிக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. பெல்ஜியத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான யூதர்கள் சித்திரவதை முகாம்களிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீண்டு வந்தவர் எண்ணிக்கை மிகக்குறைவே. கைது செய்யப்படும் அல்லது தாமாகவே (உண்மை சொன்னால் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில்) நாம் யூதர் என்று ஒத்துக் கொண்டவர்களும் முதலில் 'மெக்கலன்' என்கிற இடத்திலிருந்த ஒரு முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். ஒரு ரயில் பயணத்திற்குரியளவு ஆட்கள் சேர்ந்ததும் ரயில்களில், கால்நடைகளை அடைத்துச் செல்வது போல் மனிதர்களையும் அடைத்தே அவர்களின் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்று நடுவழியில் வழிமறிக்கப்பட்டதிலும், ஓடும் ரயிலில் இருந்து குதித்தவர்களூமாக அந்த இரயிலில் பயணித்த யூதர்களில் கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு பேர் தப்பினர்.

ஆயுதக்குழுவினரால் 'அபாயகரமானது' என நினைக்கப்பட்ட செயலைச் செய்தோர் மூன்றே மூன்று பேர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள்: ஒரே ஒரு கைத்துப்பாக்கியும், சில pliersம் தான். கூடவே, இரயிலை நிற்பாட்ட உதவியாக சிவப்புக்கடதாசியால் சுற்றப்பட்டு நிறுத்தச் சைகை விளக்குப் போல உருமாற்றப்பட்ட ஒரு அரிக்கன் விளக்கு. விளக்கின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஆட்களை தப்பிச்செல்லுமாறு சொன்னார்கள்.அத்துடன் தப்பிச்சென்றவர்களுக்கு, கைச்செலவுக்கென 50 பிராங் பணத்தையும் கையளித்தார்கள். இதில் ஈடுபாட்ட மூவர்: யூரா லிவ்ஷிட்ஸ், ஜீன் ஃப்ராங்கள்மொன், ரொபேர்ட் மைஸ்ற்ரியௌ ஆகியோர்.

புத்தகத்தின் பெயர்: The Silent Rebels (ISBN: 1903809894) அல்லது The 20th Train to Auschwitz (ISBN: 1843540444)

இந்தப்புத்தகத்தை வாசிக்கும் வரையில் நான் இந்நிகழ்வைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை. கொடூரச் சாவிலிருந்து ஷிண்ட்லரைப் போலவே மக்களை மீட்ட இவர்கள் பரவலாக அறியப்படாதிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.

ஒரு கடிதம்!

17 மே 2010



அன்புள்ள ஷ்ரேயா

எப்படி சுகம்,இன்றைக்கு இதை எழுதும் போது நான் நலமாக இருக்கிறேன். நீர் இதை வாசிக்கும் போதும் & எப்போதும் எல்லாரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன். எல்லாக் கடிதங்களிலும் நலம் பற்றிக் கேட்கிறோமே..கேட்கப்படுகின்ற நலம் வெறும் உடல் நல விசாரிப்பாக மட்டுமே இருக்கிறது. யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவரது மனமும் நலம் விசாரிக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதை எப்படிக் கேட்பது? "மனத்தளவில் நலமாக இருக்கிறீர்களா?" என்றா? "எனக்கு மனநலக் குறைவா" என்று கேட்டு அடிக்க வந்து விட மாட்டார்களா? :o)

நீர் 2005 இல் சொல்வது போல் நான் இப்போது சொல்கிறேன்: "இங்கே வரமுதல் என் வாழ்வில் நான் கற்றவை/உணர்ந்தவை மிகக் குறைவு. அதைப்பற்றிய மனவருத்தங்கள் நிறைய உண்டு எனக்கு. இங்கே வந்ததிலிருந்து நான் நிறையக் கற்று/உணர்ந்து கொண்டுள்ளேன். என்னை வளர்த்துக் கொண்டுள்ளேன். இன்னும் முன்னேற எவ்வளவோ உண்டு". மிகவும் உண்மையான வார்த்தைகள். அதைப் போலத் தான் நான் இப்போது உணர்கிறேன். நீர் என்னதான் சொல்லும்... இந்தச் சோம்பேறித்தனம் தான் என்னை விட்டால் தான் ஏதிலியாகிவிடுமாம் என்று கூடவே ஒட்டிக் கொண்டு திரிகிறது. என்னைச் சூழ்ந்திருக்கும் அருமையான குடும்பத்தையும், நண்பர்களையும் குறித்து நான் சந்தோசப்படுகிறேன். மிகவும் கொடுத்துவைத்தவள் நான். கடைசியாய் நான் உமக்குக் கடிதம் எழுதிய காலத்தில் இருந்தது போன்று வெடுக்கென நினைத்ததைச் சொல்லிவிடுவதில்லை இப்போது. ஓரளவுக்கு யோசித்துக் கதைக்கிறேன்.

இப்பவும் வெளிநாட்டிலா இருக்கிறீர்? உலகம் சுற்றிப் பார்க்க விருப்பமாயிருந்தீரே..அந்தக் கனவு நிறைவேறியதா? எந்தெந்த நாடுகளுக்குப் போனீர்? எத்தனையாம் ஆண்டு? தற்போது எங்கே, என்ன வேலை செய்கிறீர்? உம்முடைய பட்டப்படிப்பு என்னவாயிற்று? ராம் அண்ணாவின் நெறியாள்கையில் நடந்த நாடகத்துக்குப் பிறகு வேறேதாவது நாடகத்தில் நடித்தீரா?தன்னையறிதல்" கலந்துரையாடல்கள் எப்படிப் போகின்றன? கடைசியாக நான் போன வகுப்பில் நிலையானவை, நிலையல்லாதவை பற்றியும் , நிலையானவை போலத் தோன்றும் நிலையல்லாதவை பற்றியும் கதைத்தோம். உணர்ச்சிகள், ஒருவரின் தனித்தன்மை (individuality), நமது மனதிலுள்ள எண்ணங்கள்/ஆசைகள்/பயங்கள்/கனவுகள் - இவற்றின் தோற்றம்..இந்த தலைப்பிலே அமைந்த உரையாடல்கள்தான் எங்கட எல்லா உரையாடல்களுக்குள்ளும் நிறையக் கற்றுத் தந்தவையும், எனக்கு மிகவும் பிடித்தவையும். அடிக்கடி இந்தச் சந்திப்புகளுக்கு இப்போ போகாததையிட்டு கொஞ்சம் மனவருத்தம்.

வலைப்பதிவர்களில் யாரையாவது சந்தித்திருக்கிறீரா? யார் இந்த வார நட்சத்திரம்? இந்தக்கடிதம் பற்றி வலைப்பதிவில் எழுதுவீரா? இந்தக்கடிதம் உமக்குக் கிடைத்தவுடன் "கடிதம் கிடைத்தது" என மறக்காமல் ஒரு வரியாவது எழுதவும்.குடும்பத்தில் அனைவரையும் அன்புடன் கேட்டதாகச் சொல்லவும். குறிப்பாக அம்மாவை. உமது மற்றைய நண்பிகள் என்ன செய்கிறார்கள்?அவர்களும் தத்தம் குடும்பம், வேலைகள் என்று பிஸியா?அவர்களையும் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

கடிதம் நீண்டு விட்டது. இதை ஒருங்குறியில் எழுதியிருக்கிறேன். தற்போது இணையத்தில் அதுதான் பாவிக்கிறார்கள். ஒருவேளை உமது கணினியில் வாசிக்க முடியாமல் போகலாம். அதனால் கீழே இதனை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எங்கே போய் தமிழுக்கு மாற்றி வாசிக்க வேண்டுமென உமக்குத் தெரியுந்தானே!

என்றும் அன்புடனும், அமைதியுடனும், மனநிறைவு+திடத்துடனும், தேகசுகத்துடனும் வாழ்க்கையை வாழ்க!

இப்படிக்கு,
அன்புடன்,
ஷ்ரேயா

கடிதத்தில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திகதியன்று எனக்கு (இன்ஷா அல்லாஹ்!) வரும்..எனக்கு நானே எழுதிக்கொண்ட கடிதம். ஏன் என்று கேட்கிறீர்களா? சுத்தமா தெரியாது ;o)

உங்களுக்கும் எதிர்காலத்தில் உங்களிடமிருந்து ஒரு கடிதம் வர ஆசையா? இவர்கள்தான் அஞ்சல்காரர்கள் : www.futureme.org

வந்தேறுகுடிகளா?

இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும்(இவர்களது வழித்தோன்றல்கள்தான் வேடர்களா?) இருந்தார்கள். பிறகு நாடு கடத்தப்பட்ட விஜயன் வந்திறங்கியதிலிருந்து புதிதாக ஒரு இனத்தவர். புதியவர்களே சிங்களவர்கள். இப்படித்தான் எங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். ஏற்கெனவே தீவின் வடபாலிருந்த நாகர்களைத் தமிழரென சிங்கள வரலாற்றறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

இப்போதும் பல சிங்களவரைக் கேட்டால் தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றுதான் சொல்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை - வரலாற்றுப் புத்தகத்தில் இருப்பதுதானே அவர்களுக்குத் தெரியும். அப்போ வடக்கில் இருந்த நாகர்கள் யார் எனக் கேட்டால் முழிப்பார்கள். வரலாற்றுப் புத்தகங்களில், (எந்த நூற்றாண்டுகளென மறந்து விட்டேன்) இன்னின்ன நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்பின் போது (உதாரணம் ராஜ ராஜ சோழன்) வந்த படைகளில் இருந்தவர்களிற் பலர் - இலங்கையரை மணம் செய்து - இலங்கையிலேயே குடியேறியமை என்று குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் தான் முதலில் இலங்கைக்குத் தமிழர் வந்தனராம். அதற்குப் பிறகு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தேயிலை / கோப்பித் தோட்டங்களில் வேலைக்காக அமர்த்தப்பட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தமிழர்கள் வந்தமை.

இவ்விரண்டு காரணிகளாலுமே இலங்கையில் தமிழ்க்குடியேற்றம் உண்டாயிற்று என்பதே வரலாற்றுப் பாடங்களினது அசைக்க முடியாத கூற்று. இந்த எண்ணம்/நிலைப்பாடு அரசியல்வாதிகளினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் மட்டுமல்லாது, ஆவணங்கள், இணையத்திலும் இலங்கை வரலாறு எனத் தேடினால் மேற்கூறிய விதத்திலேயே இலங்கை (தமிழரது) வரலாறு விபரிக்கப்படும். இதனை படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை. இலங்கையிலே விஜயனின் வரவுக்கு முன்னமிருந்தே வாழ்ந்து வந்த நாகர்களின் வழி வந்தவரே தமிழர் என்பது எனது நம்பிக்கை. இது சரியா பிழையா?

இங்கே எனது அலுவலகத்தில் இரண்டு தென்னிந்தியர் உளர். அதில் ஒருவர் கொஞ்ச நாளைக்கு முதல் "தென்னிந்தியாவில் உங்களது மூதாதையரின் இடம் என்ன?" என்று கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தெரியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். (இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கடலால் இலங்கை பிரிக்கப்பட்டு எத்த்த்தனை ஆயிரம் ஆண்டுகள். இதிலே அம்மம்மாட அம்மம்மாட (x 250)......அம்மம்மாட ஊர் எதுவென்று கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்!!) பிறகு தான் விளங்கிற்று, அவர் பிரிட்டிஷாரால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களின் வழித்தோன்றல்களில் ஒருவராக என்னை நினைத்திருக்கிறார். போய்ச் சொன்னேன், "அப்படியல்ல. நான் இலங்கைத் தமிழ்". அவருக்கோ குழப்பம்.."பிரிட்டிஷாரால் கொண்டு போகப்பட்டவர்கள் தானே இலங்கையில் தமிழர் " என்று கேட்டார். இலங்கை வரலாறு சொல்ல வேண்டியதாயிற்று (என் version :o) ). ஆனாலும் அவர் முழுக்க convince ஆகின மாதிரித் தெரியவில்லை.

மற்றத் தென்னிந்தியருடன் கதைக்கும் போது, அதிலும் இலங்கை வரலாறு மூக்கை நுழைத்தது. தமிழர் குடியேற்றம் தென்னிந்தியப் படையெடுப்பின் (மீண்டும், ராஜ ராஜ சோழன்) போது, தமிழ்ப்போர்வீரர்கள் இலங்கையில் குடியேறின போது தான் ஆரம்பித்தது என்றே இவர் சொல்கிறார். (இவர்தான் இராணுவத்தில் இருந்தவர்..அதனால் இப்படி யோசித்திருக்கக் கூடும்)

எது சரி? நான் நினைப்பதுவா? முதலில் குறிப்பிட்ட இந்திய நண்பரது எண்ணமா? இரண்டாவது இந்திய (இராணுவ) நண்பரின் கூற்றா? அல்லது இவர்கள் இருவரும் சொல்வதைச் சேர்த்துச் சொல்லும் இலங்கை வரலாற்றுப் புத்தகமா?

காலைப்பொழுது

அவர்களை நான் கண்டது ட்ரெயினைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தான். அன்றைக்கு எழும்புவதற்குக் கொஞ்சம் பிந்தி விட்டது. தொடராக அப்படியே எல்லாச் செயல்களும் பிந்தி விட்டன. தொடர்வண்டியையாவது பிந்திப்போகாமல் பிடித்து விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தேன்.

அப்பா முன்னுக்கு நடக்க, அக்காவும் தங்கையும் தம் பைகளை முதுகில் கொழுவிக் கொண்டு நடந்து வந்தார்கள். அப்பாவிடம் என்னவோ கேட்டா அக்கா. அப்பாவும் ஆமென்று சொன்னாரென நினைக்கிறேன். விரையும் என்னைப்பார்த்து புன்னகைத்தார். எங்களுடைய ஊரில் இந்தியத் துணைக்கண்டத்தவர் அதிகம். எங்கள் நிறத்தில் யாரைக் கண்டாலும் ஒரு புன்னகை. சிலர் பதிலுக்குச் சிரிக்காமலும் போவதுண்டு. இவர்களும் துணைக்கண்டத்தவர்தான். அவர் பார்த்துச் சிரித்ததற்கு பதிலாக ஒரு அவசரப் புன்னகையை நானும் உதிர்த்து விட்டு அவ்ர்களைக் கடக்கையில் காதில் "good morning" ஒருமித்த குரலில் கேட்டது.

அவர்கள் சொல்வார்கள் என்று எதிபார்க்கவில்லை. good morning இனித்தது. அவசரமாகத் திரும்பி அவர்களுக்கும் பதிலுக்கும் சொன்னேன். என் வியப்பு அப்பட்டமாக குரலில் தெரிந்தது. அதே வாரம் திரும்பவும் சில முறை கண்டேன். அப்பவும் ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் காலை வணக்கம் சொன்னார்கள். பதிலுக்குச் சொல்லிப் போனேன்.

இன்றைக்குக் காலையில் அப்பா, அக்கா கேட்ட எதற்கோ கடுமையாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார். என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. அவவுக்கு முகமெல்லாம் கறுத்து அழுகை வரும்போல இருந்தது. இந்த நிலையில் காலை வணக்கம் சொன்னால் திரும்பிச் சொல்வார்களோ என்று எனக்குத் தயக்கம். ஒன்றுமே பேசாமல் தொங்கிய தலையோடு போகும் அந்த வாடிய பிஞ்சு முகத்தைப் பார்த்தபடி - கடுஞ்சொல் சொன்ன அப்பாவைத் மனதினுள் திட்டிக் கொண்டு - நான் மௌனமாக அவர்களைக் கடக்க..

"ஹலோ"...

மாயாவும் மணற்புயலும்

இங்கே SBS என்று ஒரு தொ.கா.நிலையமொன்றுண்டு. அதிலே பல உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்படுவது வழக்கம். இந்தியப் படங்களாக நான் அதில் பார்த்தவை: டெரரிஸ்ட், தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே<--இதை the braveheart takes away the girl என்பது போல மொழி பெயர்த்திருந்தார்கள்.), Sandstorm, மற்றது மாயா. சாண்ட்ஸ்டோர்மும் மாயாவும் எனக்குள்
ஏற்படுத்திய உணர்வுகளை மற்ற இரண்டும் ஏற்படுத்தவில்லை. டெரரிஸ்ட் படம், சில விடயங்களைக் காட்டிய விதம்(portray பண்ணிய விதம்) ஒரு விளங்கிக் கொள்ளாத / புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டியது என்றே நான் நினைத்தேன்.

மணற்புயல் - வெள்ளி இரவு 12 - 1 மணியளவில் திரையிட்டார்கள் (அந்த நேரம் எதுக்கு முழிச்சிருந்து தொ.கா பார்த்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது) நடித்தவர்களில் நந்திதா தாஸை மட்டுமே அடையாளம் கண்டு கொண்டேன். படத்தில் அவவினது கதாபாத்திரத்துக்குப் பெயர் சன்வரி தேவி. கதையின் பின்புலம் ராஜஸ்தான். மட்பாண்டங்கள் செய்து விற்று பிழைப்பை நடத்தும் கீழ்ச் சாதிப் பெண்ணாக நந்திதா தாஸ். பிழை செய்தால் தட்டிக் கேட்கும் பெண். இவளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அரசாங்கத்தால் நடத்தப்படும் " ஸதின்" அமைப்பில் சேர அழைக்கிறார் ஒரு பெண்மணி. முதலில் இல்லையென்றாலும் பிறகு (ஷ்ரேயா நித்திரை கொண்டுவிட்டபடியால் ஏன் என்று தெரியவில்லை) போய் அதில் சேருகிறாள். இவ்வமைப்பு பெண்களுக்கானது. சிறு வயதுத் திருமணங்களை எதிர்ப்பது. ஊரில் ஒரு "உயர்"சாதியினரது சின்ன மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. வைபவத்தின் போது போலீசார் வந்து அத்திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனாலும் கையூட்டு வாங்கிக் கொண்டு திருமணம் நடத்தும் பெரியவர்களைக் கைது செய்யாமல் விடும் போலிஸ் அதிகாரி, தனக்குத் தகவல் வந்தது ஊருக்குள்ளிருந்து தான் என்று கிடைத்த கையூட்டுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். ஆரம்பிக்கிறது கஷ்டகாலம் சன்வரி தேவிக்கு. தொல்லை மேல் தொல்லை கொடுத்தும் அசையாமல் நிற்கும் அவளைப் பார்த்து ஊர்ப்பெரியவர்களுக்கு ஆத்திரம். சரியான பாடம் புகட்ட வேண்டும், அப்பத்தான் இவளது கொட்டம் அடங்கும் என்று சொல்லி, ஊர்த்தலைவர் உட்பட 5 பேர் சேர்ந்து அவளது கணவனுக்கு முன்னாலேயே அவளுடன் வன்புணர்கிறார்கள். இவர்கள் மீது வழக்குத் தொடர்கிறாள் ச.தேவி. அவளைக் காக்க இயலாமற் போனதை எண்ணிக் குமுறும் கணவனது நடிப்பு தத்ரூபம். படம் பார்க்கையில் ஆத்திரமும், கையாலகாத்தனமும் நம்மையும் தாக்குகின்றன. முறைப்பாடு செய்யக் காவல் நிலையத்திற்குச் செல்லும் சன்வரி தேவி தம்பதியை , கையூட்டுப் பெற்ற அதே அதிகாரி, மருத்துவச் சான்றிதழ் பெற்று வரும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றான்.ஸதின் அமைப்பில் சேர்ந்ததாலேயே சன்வரி தேவிக்கு இத்தனை பிரச்சனைகளும் என்று உணர்ந்த அவ்வமைப்பின் அதிகாரி (ச.தேவியை சேர அழைத்த அதே பெண்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுகிறா. இவர்களது வழக்கு, தத்தம் அரசியல் ஆதாயத்துக்காகப் பலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது & வழக்கு எவ்வாறு சாட்சியங்களும், அதிகாரிகளும் விலைக்கு வாங்கப்படுவதால் அலைக்கழிக்கப்படுகிறது என்பதே மீதிக் கதை.

சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கப் பார்க்க இரத்தம் கொதிக்கிறது. ஆனாலும் என்ன நடந்தாலும் அயராது போராடும் சன்வரி தேவியும் உறுதுணையாக நிற்கும் கணவனும் மனதில் நிற்கிறார்கள்.


(இயக்குநனர் திக்விஜய் சிங்கின் முதல் படம்) மாயாவின் கதைக்களமோ வேறு. ஒரு சின்னப்பெண். தாய் தந்தையரை விட்டு, உறவினர் வீட்டில் வளர்கிறாள். அவ்வுறவினரின் மகனும் இவளும் நல்ல நண்பர்கள். அந்த உறவினரது வீடு முழுக்க பல்லிகள். பல்லியை இந்தப்படத்தில் ஏதோ ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். என் மரமண்டைக்கு எது என்னவென்று எட்டவில்லை :o(

ஒரு நாள் இவள் பெரிய பெண்' ஆகி விடுகிறாள். மாயாவை அவளது ஊருக்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செகிறார்கள். இவ்வளவு நாளும் சுதந்திரமாக விட்டவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள் என்று மாயாவுக்கும் உறவினச் சிறுவன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லை. முன்பு மாதிரி விளையாடப் போக முடியாதே!! தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்லப்படும் மாயாவுக்கு அவளது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குவார் யாருமில்லை. மாறாக அவள் தன் வயதுக்குரிய விடயங்களில் ஈடுபடும்போது, இடைநிறுத்தப்பட்டு 'நீ இப்போது ஒரு பெரிய/வளர்ந்த பெண்' என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறாள். ஊரிலுள்ளவர்களுக்குச் சொல்லி ஒரு பெரிய விருந்தும் விழாவும் என வீட்டவர் அவளைத் தயார்ப்படுத்துகின்றனர். என்ன விருந்து என்ன விழாவென்று எம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது. விருந்து நாளும் வருகிறது. அழகாக அலங்கரித்த மாயாவை கோயிலுக்கு அழைதுச் செல்கிறார்கள். பூசையோ, ஏதோ நடைபெற்ற பின் அவளை கதவுகள் கொண்டதொரு மண்டபத்துக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறதென்று அறியாது விட்டாலும், தான் போகவில்லையென மறுக்கும் மாயா வலுக்கட்டாயமாக அவ்வறைக்குள் அனுப்பப்படுகிறாள். சஞ்சய் அது பிடிக்காமல் அவளை மீட்கும் நோக்கில் கதவை நோக்கி ஓடுகையில், அவனது பெற்றோரால் இழுத்து நிற்பாட்டப்படுகிறான். அங்கே அந்தப் பூட்டிய மண்டபத்துள் அழும் மாயாவும், அவளைக் காக்க இயலாமல் நாமும். அறை/மண்டபத்தின் நடுவே ஒரு மேடை. பலிபீடம் என்பது பொருத்தமாயிருக்கும். அப்பீடத்தின் விளிம்பிலிருந்து 10 வயத்துக்குரிய முழங்கால் கீழே தொங்க, மாயா அணிந்திருந்த சேலையைக் காணோம். அந்தக் கால்களுக்கு நடுவே தலைமைப் பூசாரி. அவளது கால் துடிப்பதுவும், பூசாரியின் புணர்வுச் செயற்பாட்டின் காலசைவும் காட்டப்படுகிறது. மாயாவின் அலறலில் திடுக்கிடும் சஞ்சய். ஏதோ கெட்டது தான் நடக்கிறது என அவன் உணர்கிறான். வரிசையாய் எல்லாப் பூசாரிகளும் மாயாவை 'ஆசீர்வதித்த' பின்பு, துவண்டுபோய் நடக்கமுடியாம்ல் வெளியே வரும் மாயா. இந்த விருந்தும் பூசையும் இதற்குத்தானாம். சஞ்சய்யின் சினேகிதன், அவனது சகோதரிக்கும் பூசாரி கெடுதல் செய்து விட்டதால் அவர் மேல் கோபமுடையவனாக இருக்கிறான். அவனும் சஞ்சயும் சேர்ந்து பூசாரி வீட்டிற்குள் இறைச்சியை எறிகிறார்கள்.அவர்களுடன் கூடவே எனக்கும் ஒரு அற்ப சந்தோசம்.

பருவமெய்தும் பெண்களை பூசாரிகள் புணர்வதால் அப்பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என நம்பும் ஒரு சமுதாயம். இத்தனைக்கும் படத்திலே மாயாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள் அல்லர். இதுவும் சன்வரிதேவியினதைப் போன்றே ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. இந்த வழக்கம் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டாலும், இன்னும், வருடத்திற்கு கிட்டத்தட்ட 5000 சிறுமிகள் இக்கொடுமைக்கு (அவர்களது பெற்றோராலேயே) உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஒரு அதிர்ச்சியான புள்ளிவிவரத்தையும் இயக்குனர் தருகிறார். எனக்கு விளங்கவில்லை, ஒரு தாயானவள் தான் இப்படியான ஒரு கொடுமைக்குட்படுத்தப்பட்டதை, தனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்ததென்பதை மற்ந்து விடுவாளா? மகளுக்கு அந்தக்கஷ்டம் வேண்டாமே என்று நினைக்க மாட்டாளா? அறிவில்லையா இவர்களுக்கு? இவ்வழக்கம் இன்னும் தொடர்கின்றமைக்கு யார் காரணம்?

படம் பார்க்கும் போது எவ்வளவு ஆத்திரமாகவிருந்ததோ, அதை விட இன்னும் பல மடங்கு எழுதுகையில்.

பெட்டகம்