ஒரு கடிதம்!

17 மே 2010அன்புள்ள ஷ்ரேயா

எப்படி சுகம்,இன்றைக்கு இதை எழுதும் போது நான் நலமாக இருக்கிறேன். நீர் இதை வாசிக்கும் போதும் & எப்போதும் எல்லாரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன். எல்லாக் கடிதங்களிலும் நலம் பற்றிக் கேட்கிறோமே..கேட்கப்படுகின்ற நலம் வெறும் உடல் நல விசாரிப்பாக மட்டுமே இருக்கிறது. யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவரது மனமும் நலம் விசாரிக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதை எப்படிக் கேட்பது? "மனத்தளவில் நலமாக இருக்கிறீர்களா?" என்றா? "எனக்கு மனநலக் குறைவா" என்று கேட்டு அடிக்க வந்து விட மாட்டார்களா? :o)

நீர் 2005 இல் சொல்வது போல் நான் இப்போது சொல்கிறேன்: "இங்கே வரமுதல் என் வாழ்வில் நான் கற்றவை/உணர்ந்தவை மிகக் குறைவு. அதைப்பற்றிய மனவருத்தங்கள் நிறைய உண்டு எனக்கு. இங்கே வந்ததிலிருந்து நான் நிறையக் கற்று/உணர்ந்து கொண்டுள்ளேன். என்னை வளர்த்துக் கொண்டுள்ளேன். இன்னும் முன்னேற எவ்வளவோ உண்டு". மிகவும் உண்மையான வார்த்தைகள். அதைப் போலத் தான் நான் இப்போது உணர்கிறேன். நீர் என்னதான் சொல்லும்... இந்தச் சோம்பேறித்தனம் தான் என்னை விட்டால் தான் ஏதிலியாகிவிடுமாம் என்று கூடவே ஒட்டிக் கொண்டு திரிகிறது. என்னைச் சூழ்ந்திருக்கும் அருமையான குடும்பத்தையும், நண்பர்களையும் குறித்து நான் சந்தோசப்படுகிறேன். மிகவும் கொடுத்துவைத்தவள் நான். கடைசியாய் நான் உமக்குக் கடிதம் எழுதிய காலத்தில் இருந்தது போன்று வெடுக்கென நினைத்ததைச் சொல்லிவிடுவதில்லை இப்போது. ஓரளவுக்கு யோசித்துக் கதைக்கிறேன்.

இப்பவும் வெளிநாட்டிலா இருக்கிறீர்? உலகம் சுற்றிப் பார்க்க விருப்பமாயிருந்தீரே..அந்தக் கனவு நிறைவேறியதா? எந்தெந்த நாடுகளுக்குப் போனீர்? எத்தனையாம் ஆண்டு? தற்போது எங்கே, என்ன வேலை செய்கிறீர்? உம்முடைய பட்டப்படிப்பு என்னவாயிற்று? ராம் அண்ணாவின் நெறியாள்கையில் நடந்த நாடகத்துக்குப் பிறகு வேறேதாவது நாடகத்தில் நடித்தீரா?தன்னையறிதல்" கலந்துரையாடல்கள் எப்படிப் போகின்றன? கடைசியாக நான் போன வகுப்பில் நிலையானவை, நிலையல்லாதவை பற்றியும் , நிலையானவை போலத் தோன்றும் நிலையல்லாதவை பற்றியும் கதைத்தோம். உணர்ச்சிகள், ஒருவரின் தனித்தன்மை (individuality), நமது மனதிலுள்ள எண்ணங்கள்/ஆசைகள்/பயங்கள்/கனவுகள் - இவற்றின் தோற்றம்..இந்த தலைப்பிலே அமைந்த உரையாடல்கள்தான் எங்கட எல்லா உரையாடல்களுக்குள்ளும் நிறையக் கற்றுத் தந்தவையும், எனக்கு மிகவும் பிடித்தவையும். அடிக்கடி இந்தச் சந்திப்புகளுக்கு இப்போ போகாததையிட்டு கொஞ்சம் மனவருத்தம்.

வலைப்பதிவர்களில் யாரையாவது சந்தித்திருக்கிறீரா? யார் இந்த வார நட்சத்திரம்? இந்தக்கடிதம் பற்றி வலைப்பதிவில் எழுதுவீரா? இந்தக்கடிதம் உமக்குக் கிடைத்தவுடன் "கடிதம் கிடைத்தது" என மறக்காமல் ஒரு வரியாவது எழுதவும்.குடும்பத்தில் அனைவரையும் அன்புடன் கேட்டதாகச் சொல்லவும். குறிப்பாக அம்மாவை. உமது மற்றைய நண்பிகள் என்ன செய்கிறார்கள்?அவர்களும் தத்தம் குடும்பம், வேலைகள் என்று பிஸியா?அவர்களையும் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

கடிதம் நீண்டு விட்டது. இதை ஒருங்குறியில் எழுதியிருக்கிறேன். தற்போது இணையத்தில் அதுதான் பாவிக்கிறார்கள். ஒருவேளை உமது கணினியில் வாசிக்க முடியாமல் போகலாம். அதனால் கீழே இதனை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எங்கே போய் தமிழுக்கு மாற்றி வாசிக்க வேண்டுமென உமக்குத் தெரியுந்தானே!

என்றும் அன்புடனும், அமைதியுடனும், மனநிறைவு+திடத்துடனும், தேகசுகத்துடனும் வாழ்க்கையை வாழ்க!

இப்படிக்கு,
அன்புடன்,
ஷ்ரேயா

கடிதத்தில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திகதியன்று எனக்கு (இன்ஷா அல்லாஹ்!) வரும்..எனக்கு நானே எழுதிக்கொண்ட கடிதம். ஏன் என்று கேட்கிறீர்களா? சுத்தமா தெரியாது ;o)

உங்களுக்கும் எதிர்காலத்தில் உங்களிடமிருந்து ஒரு கடிதம் வர ஆசையா? இவர்கள்தான் அஞ்சல்காரர்கள் : www.futureme.org

3 படகுகள் :

இளங்கோ-டிசே May 17, 2005 2:36 pm  

Interesting :-).

Anonymous September 02, 2005 12:43 pm  

சுவாரசியாமன கடிதம்..

//மனத்தளவில் நலமாக இருக்கிறீர்களா?" என்றா? "எனக்கு மனநலக் குறைவா" என்று கேட்டு அடிக்க வந்து விட மாட்டார்களா?//
:O)

//வாழ்வில் நான் கற்றவை/உணர்ந்தவை மிகக் குறைவு. அதைப்பற்றிய மனவருத்தங்கள் நிறைய உண்டு எனக்கு...இன்னும் முன்னேற எவ்வளவோ உண்டு......//


இந்த வரிகளை என்னைக் குறிப்பன போன்று தோன்றுகின்றன.

தருமி October 17, 2005 2:01 pm  

ஷ்ரேயா,
இன்னைக்கே நான் எனக்கு 'அடுத்த வார தேதி' போட்டு மெயில் போட்டுகிறேன்! நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி!

அந்த தமிழன் ஏன் இவ்வளவு நீள முடி வைத்திருக்கிறார். அது சரி, அதை அவரிடம்தானே கேக்கணும்!

பெட்டகம்