இறப்புப் பற்றிய என் குறிப்பு

மரணம் தொட்ட முதல் கணமென்று தம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து விபத்தைப் பற்றி எழுத முடியாதவாறு மரணம் தொட்ட பொழுதிலேயே அதனோடு போய் விட்ட கார்த்திகேயனுக்கு அஞ்சலி.

இறப்புத் தேவைதான். அல்லாவிடில் உலகின் சமநிலை குழம்பிவிடும். மரணம் குறித்த பயம் கிட்டத்தட்ட எல்லாருக்கும் மனதின் அடியில் உறங்கிக் கிடக்கும். அதை மேல் மட்டத்திற்குக் கொண்டுவருவது தன் வட்டத்தில் நிகழும் இழப்பே. சில வேளைகளில் சில மரணங்கள் நிம்மதியைத் தந்தாலும் பல வேளைகளில் மனக் கிலேசத்தையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் பழகிய ஒருத்தரின் மரணம் பல நாட்களுக்கு மனதில் தேங்கும்.

மரணமென்று எனக்கு அறிமுகமாகிய போது எனக்குப் பத்துப் பதினொரு வயதிருக்கலாம். முதலாவது எம்மியோடு கூடவே செல்லும் புத்தவிகாரையின் பிக்குவும் இரண்டாவதாக எனது ஆசிரிரியரின் தங்கையும். பிக்குவுக்குத் தலை பிளந்ததால் ஏற்பட்ட காயம் ஏற்படுத்திய மரணம். மருத்துவமனையிலிருந்தவரைப் பார்த்த ஞாபகம் இன்னும் அவ்வப்போது தலைகாட்டும். ஆசிரியரின் தங்கை நஞ்சுண்டு தற்கொலை. வீட்டே தான் அலறியடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். ஒன்றும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை. வழியிலேயே உயிர் பிரிந்திருந்தது. அதற்கு முதல் 3 நாட்களுக்கு முன்னர் தான் கல்வி+இன்பச் சுற்றுலா ரியூஷன் மாணவர்களோடு போய் வந்திருந்தார்கள். அதன் போதெல்லாம் உற்சாகமாய் இருந்த பெண். என்ன ஏதென்று தெரியவில்லை. அரளிவிதை கைகொடுத்திருந்தது அவவின் மரணத்தை நிறைவேற்ற. அவவின் கணவரைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. நெருங்கியவர்களின் இறப்பு எப்படிப் பாதிக்கும் என்று கண்கூடாகப் பார்த்து உணர்ந்து கொண்டேன் அவவின் கணவரையும் அண்ணாவையும் பார்த்து. இன்னும் ஞாபகமிருக்கிறது, எத்தனை பேருடைய நாவில் எத்துணை கதைகள் அவவைப் பற்றியும், அவவின் இறப்பிற்கான காரணி பற்றியும். அவர்களின் சொல்லும் செயலும் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் காலாக இருந்தது.

நெருங்கிய உறவினர்களில் அறுவர் இறந்த போதும், அதில் மூவரின் செத்த வீட்டுக்குத் தான் போகக்கிடைத்தது. இறந்து போன அத்தையுடனான என் கடைசி ஞாபகம் எதற்கென்றே ஞாபகமில்லாத அவவுடனான அற்பச் சண்டை. மிகவும் பாதித்த மரணங்கள் இரண்டு. எம்மியினதும். ரீச்சரினதும். எம்மியைப் போன்றல்லாது ரீச்சரைக் கடைசியாகக் கூட பார்க்கக் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ்க்கைக்குக் கொடுக்கும் விலையில் இதுவும் ஒன்று. ஆனால் காணாததும் ஒரு வகையில் நல்லதுதானோ! இனிமையாய் வழியனுப்பி வைத்த முகம் தானே மனதில் நிற்கிறது. அசைவின்றிக் கிடக்கும் அவவை என்னால் பார்த்திருக்க/அதை மனதில் உள்வாங்கியிருந்திருக்க முடியாது.

சில செத்த வீடுகள் களைகட்டும் - சில பல வேளைகளில் திராவகங்களின் உதவியொடும். ஆனாலும் சுற்றத்தின் அழகு மரணவீட்டில்தான் வெளிப்படும். தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை இறந்தவர் காட்டிய அன்பு & சொத்து. பழைய குடும்பக் கதைகள் வெளிவரும். சுவாரசியம் குன்றாது சொல்வதில் விண்ணர்கள் புண்ணியத்தில். கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றியிருக்கும். சிலவேளைகளில் திருமணப்பேச்சுகளும் தொடக்கப்படும். ஒரு இறப்பு பலநாள் காணாதோருக்கு ஒரு சந்திப்புச் சந்தர்ப்பமாக அமைவதனாலாக இருக்கலாம்.

செத்த வீடுகளில் நான் செய்ததும் இப்போதும் செய்யத் தலைப்படுவதும் ஒன்றே ஒன்றுதான். ஏனென்று தெரியவில்லை - சவத்தை உற்றுப் பார்த்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா எனப் பார்ப்பேன்.. என்னதான் நான் ஊன்றிப் பார்த்தாலும், உற்றவர் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டவராவதில்லை. போனவர் போனவர்தான். செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை.

இது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது: மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள்.

பெட்டகம்