மரணம் தொட்ட முதல் கணமென்று தம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து விபத்தைப் பற்றி எழுத முடியாதவாறு மரணம் தொட்ட பொழுதிலேயே அதனோடு போய் விட்ட கார்த்திகேயனுக்கு அஞ்சலி.
இறப்புத் தேவைதான். அல்லாவிடில் உலகின் சமநிலை குழம்பிவிடும். மரணம் குறித்த பயம் கிட்டத்தட்ட எல்லாருக்கும் மனதின் அடியில் உறங்கிக் கிடக்கும். அதை மேல் மட்டத்திற்குக் கொண்டுவருவது தன் வட்டத்தில் நிகழும் இழப்பே. சில வேளைகளில் சில மரணங்கள் நிம்மதியைத் தந்தாலும் பல வேளைகளில் மனக் கிலேசத்தையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் பழகிய ஒருத்தரின் மரணம் பல நாட்களுக்கு மனதில் தேங்கும்.
மரணமென்று எனக்கு அறிமுகமாகிய போது எனக்குப் பத்துப் பதினொரு வயதிருக்கலாம். முதலாவது எம்மியோடு கூடவே செல்லும் புத்தவிகாரையின் பிக்குவும் இரண்டாவதாக எனது ஆசிரிரியரின் தங்கையும். பிக்குவுக்குத் தலை பிளந்ததால் ஏற்பட்ட காயம் ஏற்படுத்திய மரணம். மருத்துவமனையிலிருந்தவரைப் பார்த்த ஞாபகம் இன்னும் அவ்வப்போது தலைகாட்டும். ஆசிரியரின் தங்கை நஞ்சுண்டு தற்கொலை. வீட்டே தான் அலறியடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். ஒன்றும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை. வழியிலேயே உயிர் பிரிந்திருந்தது. அதற்கு முதல் 3 நாட்களுக்கு முன்னர் தான் கல்வி+இன்பச் சுற்றுலா ரியூஷன் மாணவர்களோடு போய் வந்திருந்தார்கள். அதன் போதெல்லாம் உற்சாகமாய் இருந்த பெண். என்ன ஏதென்று தெரியவில்லை. அரளிவிதை கைகொடுத்திருந்தது அவவின் மரணத்தை நிறைவேற்ற. அவவின் கணவரைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. நெருங்கியவர்களின் இறப்பு எப்படிப் பாதிக்கும் என்று கண்கூடாகப் பார்த்து உணர்ந்து கொண்டேன் அவவின் கணவரையும் அண்ணாவையும் பார்த்து. இன்னும் ஞாபகமிருக்கிறது, எத்தனை பேருடைய நாவில் எத்துணை கதைகள் அவவைப் பற்றியும், அவவின் இறப்பிற்கான காரணி பற்றியும். அவர்களின் சொல்லும் செயலும் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் காலாக இருந்தது.
நெருங்கிய உறவினர்களில் அறுவர் இறந்த போதும், அதில் மூவரின் செத்த வீட்டுக்குத் தான் போகக்கிடைத்தது. இறந்து போன அத்தையுடனான என் கடைசி ஞாபகம் எதற்கென்றே ஞாபகமில்லாத அவவுடனான அற்பச் சண்டை. மிகவும் பாதித்த மரணங்கள் இரண்டு. எம்மியினதும். ரீச்சரினதும். எம்மியைப் போன்றல்லாது ரீச்சரைக் கடைசியாகக் கூட பார்க்கக் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ்க்கைக்குக் கொடுக்கும் விலையில் இதுவும் ஒன்று. ஆனால் காணாததும் ஒரு வகையில் நல்லதுதானோ! இனிமையாய் வழியனுப்பி வைத்த முகம் தானே மனதில் நிற்கிறது. அசைவின்றிக் கிடக்கும் அவவை என்னால் பார்த்திருக்க/அதை மனதில் உள்வாங்கியிருந்திருக்க முடியாது.
சில செத்த வீடுகள் களைகட்டும் - சில பல வேளைகளில் திராவகங்களின் உதவியொடும். ஆனாலும் சுற்றத்தின் அழகு மரணவீட்டில்தான் வெளிப்படும். தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை இறந்தவர் காட்டிய அன்பு & சொத்து. பழைய குடும்பக் கதைகள் வெளிவரும். சுவாரசியம் குன்றாது சொல்வதில் விண்ணர்கள் புண்ணியத்தில். கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றியிருக்கும். சிலவேளைகளில் திருமணப்பேச்சுகளும் தொடக்கப்படும். ஒரு இறப்பு பலநாள் காணாதோருக்கு ஒரு சந்திப்புச் சந்தர்ப்பமாக அமைவதனாலாக இருக்கலாம்.
செத்த வீடுகளில் நான் செய்ததும் இப்போதும் செய்யத் தலைப்படுவதும் ஒன்றே ஒன்றுதான். ஏனென்று தெரியவில்லை - சவத்தை உற்றுப் பார்த்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா எனப் பார்ப்பேன்.. என்னதான் நான் ஊன்றிப் பார்த்தாலும், உற்றவர் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டவராவதில்லை. போனவர் போனவர்தான். செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை.
இது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது: மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள்.
33 படகுகள் :
அத்தை என்பவர் அன்னையின் அக்காதங்கையா?
அத்தை என்றால் அப்பாவின் தங்கை.
மாமியைச் சொல்கிறீர்களா?
அவர்கள் வாழ்வைவிடவும் இனிமையானவர்கள்;
மரணத்தைவிடவும் உறுதியானவர்கள் என்றொரு நக்சல் கவிதை உண்டு.
ஒருகாலத்தில் பல நாட்கள் என்னை யோசிக்கவைத்த கவிதை வரிகள் அவை. மரணம் சட்டெனக்கொண்டுவரும் நினைவுகளுள் இந்த வரிகளும் இருக்கும். இப்போதும் நினைவுக்கு வந்தது.
உறுதியானது (confirmed) என்று சொல்வதற்கு மரணத்தைத் தவிர்த்த இன்னொன்று உண்டா?
அதேபோல இனிமையானது என்று சொல்வதற்கும்..
/செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை./ ஆழமான வரிகள்.
மரணித்தவர்கள் வேறு ஒரு உலகத்தில் இருப்பார்கள் என்றும் அவர்களை மீண்டும் சந்திக்க முடியும்( நான் இறக்கும் போது ) என்ற நம்பிக்கை (?)
இழப்பின் வலியை குறைக்க உதவுகிறது.
//சவத்தை உற்றுப் பார்த்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா எனப் பார்ப்பேன்.. //
ஷ்ரேயா, நானும் இப்படித்தான். நிச்சயமாய் தெரியுமா அவுங்க இறந்துட்டாங்கன்னு? தீ வைக்கறப்ப முழிச்சுக்கிட்டா எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் நினைச்சுக்கிட்டே இருப்பேன்.
அனோனிமஸ்மாரே - பெயரைச் சொல்லுங்க. :O)
அனோனிமஸ் #1 - மாமி: அப்பாவின் அக்காவையும் கணவரின் தாயாரையும் மாமாவின் மனைவியையும் குறிக்கும். அத்தை அப்பாவின் தங்கை. சிலர் அப்பாவின் சகோதரிகளை மாமி என்றோ அல்லது அத்தை என்றோ தான் கூப்பிடுவது.
தங்கமணி - முழுக்கவிதையையும் படிக்க ஆவலாய் இருக்கிறது. நக்சல் கவிதை என்றால் என்ன?
//உறுதியானது (confirmed) என்று சொல்வதற்கு மரணத்தைத் தவிர்த்த இன்னொன்று உண்டா? அதேபோல இனிமையானது என்று சொல்வதற்கும்//
:O\
அனோனிமஸ் #2 -
//மரணித்தவர்கள் வேறு ஒரு உலகத்தில் இருப்பார்கள்... //
paradise? இழப்பின் (என்னைப்பொறுத்தவரை) காலத்தால் மட்டுமே ஆறக்கூடியதொன்று.
/அனோனிமஸ் #1 - மாமி: அப்பாவின் அக்காவையும் கணவரின் தாயாரையும் மாமாவின் மனைவியையும் குறிக்கும். அத்தை அப்பாவின் தங்கை. சிலர் அப்பாவின் சகோதரிகளை மாமி என்றோ அல்லது அத்தை என்றோ தான் கூப்பிடுவது./
ஷ்ரேயா,
பதிலுக்கு நன்றி.
இலங்கையிலும் இப்படியாகத்தான் கூப்பிடுகின்றார்கள் என்று இன்றைக்குத்தான் அறிந்துகொண்டேன்.
துளசி..அலைவரிசை ஒன்றாக இருக்கிறதே!
உயிருக்கு என்ன நடக்கும் என்று யோசிப்பதுண்டு நான். ஒருவேளை பக்கத்தில் உட்கார்ந்திருந்து கொண்டு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்குமோ என்னவோ! :O)
//அனோனிமஸ் #1 - மாமி: அப்பாவின் அக்காவையும் கணவரின் தாயாரையும் மாமாவின் மனைவியையும் குறிக்கும். அத்தை அப்பாவின் தங்கை. சிலர் அப்பாவின் சகோதரிகளை மாமி என்றோ அல்லது அத்தை என்றோ தான் கூப்பிடுவது.//
அப்பாக்கு மூத்தவ என்றால் மாமி & இளையவ என்றால் அத்தை - இப்படித்தான் சொல்லித்தந்தவங்க!
அத்தை, மாமிக்குப் பதிலாக பாவிக்கப்படும் வேறேதாவது சொற்கள் இருக்கிறதா பெயரிலி?(அன்ரி, அன்ரா தவிர்த்து! :O)
அன்ரா, அன்ரி... அம்மா வழியிலேதான் வருமாக்கும்.
மட்டக்கிளப்பிலே அத்தை என்பது எனக்குப் புதிது. விளக்கத்துக்கு நன்றி.
நல்ல பதிவு ஷ்ரேயா.. கடைசி வரிகள் நன்றாக இருக்கிறது.
மனதை பிழிகிறது..
எல்லோரும் தினமும் காலையில் எழுந்து தான் வாழப்போகும்; கடைசிநாள் இதுதான் என நினைத்துக்கொண்டால் யாருமே தவறு செய்யமாட்டார்கள்.
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியாh
// மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள் //
நல்ல வரி
மரண பயமே மனித வாழ்வுக்கு அடித்தளம். நாளைக்கும் நானிருப்பேன் என்ற பேராசையே எல்லாவற்றுக்கும் நதிமூலம். அது இருக்கட்டும், கலைஞர் "பிண ஊர்தி" என்பதை மாற்றி "அமரர் ஊர்தி" என்றாக்கி தமிழுக்கு அழகு சேர்த்தார். நீங்க என்னடான்னா வரிக்குவரி "செத்தவீடு" என்று வீட்டையே சாகடிச்சுட்டீங்க. "அமரர்வீடு" ன்னு எழுதிப்பாருங்களேன் அழகாக இல்லை?
//யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்குமோ என்னவோ! :O)//
என்ன பேசுறாங்குன்னு பார்க்கும்! அக்கப்போரா இல்ல உண்மையான அழுகையான்னு.
மஞ்சள் கலர்லே என்னமோ சரியா இல்லாதமாதிரி இருக்கே ஷ்ரேயா
சுரேஷ்..நீங்க சொல்றது சரி. திருப்பி வாசிக்கும் போது ஒரு மாதிரியாத்தான் இருக்கு. பழக்கம் என்பது எவ்வளவு strong பாத்தீங்களா! சொல்றமாதிரியே எழுதியிருக்கிறேன்! :O(
அதையேன் கேட்கிறீங்க துளசி! டெம்ப்ளேட்ல கைய வைச்சிட்டேன்! என்னமோ நடந்திட்டு! :crying:
see tagboard! :O(
ஷ்ரேயா யதார்த்தத்தை பறை சாற்றும் ஆளமான பதிவு. பல செத்தவீடுகளை எனக்கும் நேரில் காணக்கிடைத்தது. ஆரம்பத்தல் பயம். கிட்டவே போகமாட்டேன். கொஞ்ச காலத்தின் பிறகு செத்தவீடு என்றதில் பயம் இல்லாமல் போய்விட்டது காரணம். வன்னியில் அடிக்கடி செத்தவீடு காணக்கூடியதாய் இருக்கும். இப்படிப்பாத்து அதுகள் சாதாரனவிடயமாய் போய்விட்டது. மற்றவை வீட்டில் நடக்கிறதுக்கும் சொந்த வீட்டில் நடக்கிறதுக்கும் வித்தியாசம் உண்டு தானே?
//
எல்லோரும் தினமும் காலையில் எழுந்து தான் வாழப்போகும்; கடைசிநாள் இதுதான் என நினைத்துக்கொண்டால் யாருமே தவறு செய்யமாட்டார்கள்.//
எத்தனை அழகான வரிகள். மனசில நிறுத்திக்கொள்ள வேண்டும். :-)
/செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை./ ஆழமான வரிகள் எனக்கும்தான்
நிதர்சனம் இதுதானோ? நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.
//எல்லோரும் தினமும் காலையில் எழுந்து தான் வாழப்போகும்; கடைசிநாள் இதுதான் என நினைத்துக்கொண்டால் யாருமே தவறு செய்யமாட்டார்கள்//
எனக்கும் இந்த வரிகள் பிடித்திருக்கின்றன. வாழ்க்கையை அந்தந்தக் கணத்திலும் நாளிலும் வாழச் சொல்லுகிறது.
செயற்படுத்தும் போதுதான் அதன் உண்மை தெளிவாய் விளங்கும் என்று நினைக்கிறேன்.
இருப்பும் இறப்பும் தரும் கேள்விகள் பல. அவற்றில் எல்லாவற்றிற்கும் பதில் காண முடியாது. தேவையும் இல்லை. இறப்பு என்பது ஒரு ஆரம்பத்தின் முடிவும், மீண்டுமொரு ஆரம்பத்தின் முதலும் என்பதைப் புரிந்து கொள்ளலே போதுமானது.
//
எல்லோரும் தினமும் காலையில் எழுந்து தான் வாழப்போகும்; கடைசிநாள் இதுதான் என நினைத்துக்கொண்டால் யாருமே தவறு செய்யமாட்டார்கள்.//
...என்றால் ஒருத்தருமே வாழமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
ஆஹா பெயரிலி..சொல்ல வர்றதை முழுசாச் சொல்லுங்க. எனக்கு உங்கட பதிவும் "விளங்கிலி".. பின்னூட்டமும் "விளங்கிலி". :O)
அன்றன்றைக்கு என்று வாழ்ந்தா முதல்ல கஷ்டமாயிருக்கும். ஏனென்றா நாங்க "நாளை" பற்றிய நம்பிக்கையில நிறையத் திட்டம் போட்டுப் பழகிட்டம். பழக்கத்தை இல்லாமச் செய்றது கஷ்டந்தானே!
ஒரு சந்தேகமும் வருது - நாளை பற்றிய யோசனை/சிந்தனை இல்லாட்டி அநியாயங்கள் பெருகிவிடாதா?
50 first dates படத்தில மாதிரி ஒவ்வொரு நாளைய நினைவும் அன்றன்றைக்கு மட்டுந்தான் என்றிருந்தால் எப்படிருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்..
ஒவ்வொருநாளும் புதிதாய்ப் பிற(ப்போ)ந்தோம் ஞாபகம் வருது. சரிதானோ! :O|
//ஒவ்வொரு நாளைய நினைவும் அன்றன்றைக்கு மட்டுந்தான் என்றிருந்தால் எப்படிருக்கும் //
அப்ப ப்ளொக்லே எழுத ஒண்ணுமே இருக்காது. ஹை!!!!!:-))))))
/ஆஹா பெயரிலி..சொல்ல வர்றதை முழுசாச் சொல்லுங்க. எனக்கு உங்கட பதிவும் "விளங்கிலி".. பின்னூட்டமும் "விளங்கிலி". :O)/
அடடா நீங்களும் நான் எழுதுவதற்கு அகராதி தரவேண்டிய பட்டியலிலே இருக்கின்றீர்களா? தயவு செய்து என் தமிழினை மன்னித்துக்கொள்ளுங்கள். ;-)
காலையிலேயே இறப்பினைப் பற்றி எண்ணிக்கொண்டு எழுந்தால், ஒழுங்கான அன்றைய நாளிலே எதையும் உற்சாகமாகச் செய்யமுடியாது, மகிழ்ச்சியிருக்காது என்று சொல்ல வந்தேன். அவ்வளவுதான். இதுக்குமேலே பெயரிலிக்கு விளக்கமாகச் சொல்லத் தமிழ் தெரியிலி.
இதுவரை நாள் இருந்ததுபோலவே, இனிமேலும் இங்கே எதுவும் சொல்லவரமாட்டேன். தப்பிப்பிழைத்தீர்கள். ;-)
அனோனிமஸ் - மீண்டுமொரு ஆரம்பத்தின் முதல் என்பது இரண்டு சாத்தியங்களைத் தருகிறது. 1. மறுபிறப்பு
2. இறப்போ பிறப்போ அற்றதொரு புதிய ஆரம்பம்.
எனக்கு இரண்டையுமே பிடித்திருக்கிறது. :O)
//அப்ப ப்ளொக்லே எழுத ஒண்ணுமே இருக்காது. ஹை!!!!!:-)))))) //
துளசி - இப்பிடிப் போட்டு வாராதீங்க! :O(
பெயரிலி -
//காலையிலேயே இறப்பினைப் பற்றி எண்ணிக்கொண்டு எழுந்தால், ஒழுங்கான அன்றைய நாளிலே எதையும் உற்சாகமாகச் செய்யமுடியாது, மகிழ்ச்சியிருக்காது//
contempating...
//இதுவரை நாள் இருந்ததுபோலவே, இனிமேலும் இங்கே எதுவும் சொல்லவரமாட்டேன். தப்பிப்பிழைத்தீர்கள். ;-) //
ஐயோ அப்பிடிச் சொல்லாதீர்கள். பெயரிலி வந்து பின்னூட்டம் போடுற அளவுக்கு ஏதோ உருப்படியா எழுதியிருக்கிறனெண்டு மிதப்பில திரியிறன்..கெடுத்துடாதீங்க! ;O)
தொடர்ந்து வரவேணும்.. குழப்பங்களுடன் தெளிவுகளும் தரவேணும். கட்டாயம் வாங்க!
அகராதி வேலைகள் எப்பிடிப் போகுது? ;O)
//மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள். //
சத்தியமான வரிகள்.
Post a Comment