பிஞ்சுமனம்

27ம் திகதி அபிநயாக்குப் பிறந்தநாள். எட்டாவது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் பெரியவர்களுக்கென்றும் குழந்தைகளுக்கென்றும் தனித்தனியே பிறந்தநாள் கொண்டாட்டம். விதம் விதமாய் கேக்கும் வேறு தின்பண்டங்களும் பெரியவர்களுக்கென்று உணவும் இருக்கும். இதற்கெனவே பிறந்தநாளுக்கு இன்னும் எத்தனை என்று நாட்கணக்குப் பார்ப்பாள். தம்பியினதுக்கும் நாட்கணக்குப்பார்ப்பது இவளே. அபிநயாக்குத் தம்பி இருந்தாலும் அவள் அம்மா செல்லந்தான். பிறந்த நாள் தொடக்கம் ஒரு வயது வரை ஒவ்வொரு நாளும் நிழற்படம் எடுத்ததும், வெட்டிய தலைமயிரில் கொஞ்சத்தை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்திருப்பதும் அம்மாவின் சிறப்புக் கவனிப்பில் சில.

அம்மாவின் தம்பி - இந்திரன் மாமாக்கும் மேரி மாமிக்கும் குட்டிக் குழந்தை விரைவில் பிறந்துவிடும். அதுவும் இந்த வாரமே. குட்டிப்பாப்பாவைப் பார்க்கப் போகும் உற்சாகம் மனதில் நிரம்பியிருந்தது. காணும் எல்லாரிடமும் வரப்போகும் குட்டி பேபியைப் பற்றித்தான் கதை. உடனே தூக்குவேன்..வீட்டே கூட்டி வருவேன் தம்பியும் நானும் பேபியுடன் விளையாடுவோம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெட்டிய கேக்கைக் கொடுக்க வந்த அபிநயாவை இழுத்துப் பிடித்த ரேணு மாமியின் "எப்ப பேபி வரும்?" கேள்விக்கு "She came now, few minutes ago. we are going to see her after the party. we have the same birthday" என்று பதில் சொன்ன அபிநயா ரேணு மாமியின் நச்சு வசனங்களை எதிர்பார்த்திருக்கவில்லை.

"இன்டைக்குத்தான் அவக்கும் birthday. அப்ப இனி உமக்கு ஒரு partiesம் இருக்காது, இனி அவக்குத்தான் எல்லாம். same birthday என்ட படியா இனிமேல் no one will come to your party. everyone will go to her's."

முகஞ் சிறுத்துப் போனது அபிநயாக்கு. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.

மருத்துவமனையில் புது வரவு அமுதாக்குட்டி "ஙா ஙா" என்று கை கால் ஆட்டிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. எல்லாரும் கிட்டே போய்ப் பார்த்தார்கள். அபிநயா மட்டும் தள்ளியே நின்றிருந்தாள். மேரி மாமி "பேபி பாக்கல்லயா? துக்கி மடியில வைச்சிருக்கிறீங்களா?" என்று கேட்டதற்கு அமுதாக்குட்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அபிநயாவிடமிருந்து இல்லையென்ற தலையாட்டலே கிடைத்தது.

-- கற்பனையல்ல :O(

18 படகுகள் :

Anonymous August 29, 2005 1:04 pm  

யாகவராயினும் நா காக்க ......

துளசி கோபால் August 29, 2005 1:11 pm  

இப்படித்தான் சிலர் என்ன பேசறோமுன்னு யோசிக்காமப் பேசி, பிஞ்சு மனசுலே நஞ்சை விதைச்சுடறாங்க.

பாவம் அபிநயா. இந்த அதிர்ச்சியிலே இருந்து மீண்டுவரணுமுன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

'ஹேப்பி பர்த்டே' அபிநயா.

முகமூடி August 29, 2005 1:23 pm  

சில 'பெரிசு'கள் சிறிசாவது இம்மாதிரி கணங்களில்தான்.. இதுமாதிரி ஆட்கள் குழந்தைகளிடம் இன்னொன்றும் கேட்பார்கள் : உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா.. இரண்டு பேரையும் பிடிக்கும் என்று குழந்தை சொன்னாலும் விடமாட்டார்கள்.. அதுநாள் வரை இரண்டு பேரையும்தானே பிடிக்கும் என்று இருக்கும் குழந்தைக்கு ஒருவரைத்தான் பிடிக்க வேண்டும் என்று நினைப்பு வரும் வரை ஓயமாட்டார்கள்..

பெரியவர்கள் பேசி இந்நேரம் அபி சகஜமாயிருப்பாள். அபிநயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 29, 2005 1:50 pm  

அனோனிமஸ்: சரியாகச்சொன்னீங்க!

துளசி & முகமூடி - நீங்கள் சொன்னவையே என் கருத்தும். ஒரே பிறந்தநாளென்று மகிழ்ந்திருந்த குழந்தையின் மனதை கசக்கிவிட்டார்கள்.

//பெரியவர்கள் பேசி இந்நேரம் அபி சகஜமாயிருப்பாள்.//

I hope so.

Ganesh Gopalasubramanian August 29, 2005 2:20 pm  

ரேணு மாமி........ சரியான லூசு மாமியா இருப்பாங்க போல...
சிறு குழந்தைகளின் possessiveness பின்னாளில் பெரிய விபரீதங்களையும் ஏற்படுத்தும், பெரியோர்கள் தான் அதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

//happy bday to both of them//

`மழை` ஷ்ரேயா(Shreya) August 29, 2005 4:09 pm  

உண்மைதான் கணேஷ். வீட்டிலே பெரியவர்கள் விளங்கப்படுத்தியிருப்பார்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால் யோசித்துப்பாருங்கள்..ஒன்றுமறியா ஒரு குழந்தை மேல் இன்னொரு குழந்தை காரணமின்றி - பெரியவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் - வெறுப்புணர்வே கொண்ட நிலை வந்திருக்கக்கூடும். கேட்டவுடன் மனவருத்தமாக இருந்தது.

கலை August 29, 2005 5:20 pm  

பெஇர்யவர்கள் பலரும் அறிந்தோ, அறியாமலோ, இப்படி தவறுகளைச் செய்கிறார்கள். இதில் கவலைக்கிடமான நிலை என்னவென்றால் ஒரு சிலர், இப்படி குழந்தைகளைக் கேட்காதீர்கள், அது குழந்தைகள் மனதைப் பாதிக்கும் என்று சொன்னாலும் கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் எதே கேள்வியைக் கேட்கிறார்கள். எமது குழந்தைகளிடம் சில பெரியவர்கள் இப்படிக் கேள்வியை கேட்கும்போது என்ன செய்வது என்று தெரியாத தவிப்பு நமக்கும்தான்.

கயல்விழி August 29, 2005 6:22 pm  

பெரியவர்கள் இப்படிச்செய்கின்ற சிறு தவறுகளால். பாதிக்கப்படப்போறது பிள்ளைகள் தான். அடிமனதில் இந்த வடுக்கள் பதிந்துவிடும். பின்னர் விரோதப்போக்கு வளரத்தான் இவை வழிவகுக்கும். கற்பனையல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள் அந்த சிறுமிக்கு அவர் சொன்னது நகைச்சுவையாக சொன்னதாய் மாற்றிவிடுங்கள். தேற்றுங்கள்.

Anonymous August 29, 2005 6:44 pm  

no one will come to your party. everyone will go to her's

ஏதோ ஒன்று கிடைக்காது என்பதை விடவும், கிடைத்தது இனிமேல் கிடைக்காது என்பதுதான் நிறைய வருத்தம் தரும் விஷயம் போல. ம்ம்ம்...?

அதே குழந்தை 10 வருடங்கள் கழித்து இதே டிக்ளரேஷனை எந்த மாமியிடமிருந்து கேட்டாலும், 'அப்பாடி. கேக் செலவு மிச்சம்'னு நெனச்சுக்காதா என்ன?. ;-)

Ramya Nageswaran August 29, 2005 6:51 pm  

அனானி, துளசியக்கா, முகமூடி, கலை, கயல்..எல்லோருமே சரியான கருத்துக்கள் சொல்லியிருக்காங்க... நானும் கோ. கணேஷ் கட்சி தான். கலை சொல்றா மாதிரி நானும் சில முறைகள் அனுபவிச்சிருக்கேன்.. 'அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா' என்பது முகமூடி சொல்வது போல் உலகில் நம்பர் ஒன் அபத்த கேள்வி.

அபியிடம் அவளுடைய மாமா மாமி 'குட்டி பாப்பா உன்னோட சேர்ந்து தான் பிறந்த நாள் கொண்டாடுவா' ன்னு சொல்லிப் பார்க்கலாம்.

கயல்விழி August 29, 2005 9:37 pm  
This comment has been removed by a blog administrator.
வீ. எம் August 30, 2005 12:32 am  

ரேனு மாமிக்கு அவங்க சின்ன வயசுல பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருக்க மாட்டாங்க போல... அந்த வயத்தெரிச்சலா இருக்கும்..

குழந்தைகள் கிட்ட எப்படி பேசனும்னு தெரியாம... என்ன மாமியோ!!

ஆளும் வளரனும் அறிவும் வளரனும்..அது தாண்டா வளர்ச்சி - இந்த பாட்டை நான் சொன்னேனு மாமிகிட்டா பாடி காமிங்க ஷ்ரேயா!

அபி க்கும் , குட்டிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Anonymous August 30, 2005 12:34 am  

'கண்ணாடிப்பூக்கள்" நினைவுக்கு வந்தது.

தருமி August 30, 2005 2:49 am  

நண்பரின் மகள் பள்ளியில் படிக்கும்போது, 'யாரு ராணியா நடிக்க வர்ரீங்க' என்று ஆசிரியை கேட்டதும் கை தூக்கியிருக்கிறாள்.'நீ வேண்டம்; நீ கருப்பு' என்று சொன்ன ஆசிரியையிடம் போய் நண்பர் சண்டை போட்டு வந்தார். ஆனாலும் குழந்தை மனத்தில் விழுந்த வடு...

`மழை` ஷ்ரேயா(Shreya) August 30, 2005 9:01 am  

வீ.எம் - நீங்க சொன்ன மாதிரிப் பாடிக்காட்டினா எனக்கு என்னத்தைச் சொல்வாங்களோ! :O\

கலை சொல்வது போல சில "பெரியவர்கள்" வேண்டாமென்று சொன்னதையே விடாப்பிடியாக செயற்படுத்துவார்கள். அதில் என்ன சந்தோசமோ!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 30, 2005 9:03 am  

க்ருபா - இனிமே அந்த மாமிக்கு அபிநயா கேக் குடுப்பான்றீங்க! no chance! 10 வருஷம் கழிச்சு அபிநயா அம்மாட்ட போய் (hopefully) சொல்வா "அம்மா ..இந்த முறையும் ரேணு மாமியை கூப்பிடாதீங்க!"

என்ன ஆசிரியை..கறுப்பென்டா ராணியில்லையா? grrr!!!
நாவினால் சுட்ட வடு ஆறாது என்று தெரியாமலா சொல்லியிருக்கிறாங்க!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 30, 2005 9:03 am  

//ரேனு மாமிக்கு அவங்க சின்ன வயசுல பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருக்க மாட்டாங்க போல... அந்த வயத்தெரிச்சலா இருக்கும்.. //

LOL..இருக்கும் இருக்கும்! :O)

யாத்ரீகன் September 03, 2005 12:11 am  

கேட்கவே கஷ்டமாத்தான் இருக்கு... என் நண்பர் வீட்டில்.. அவரின் இரு சிறு வயது தம்பிகளிடையே வளர்ந்து விட்ட ஒரு வித சிறு விரோதம், இன்று அவர்களுகிடையில் நெருங்கிய உறவை மட்டுமின்றி, இயல்பான உறவையே வளர விட மாட்டேன்கின்றது.. இத்தனைக்கும்.. நாங்கள் இருவரும் எவ்வளோ முயற்சி செய்துவிட்டோம்...

பசுமரத்தாணி என்று சும்மாவா சொன்னார்கள்.. :(

அந்த குட்டி சீக்கிரம் அதிலிருந்து வெளிக்கொண்டு வரப்படுவாள் என வேண்டுகின்றேன்..

பெட்டகம்