பயணியின் குறிப்புக்கள்

காணவில்லையென்று தேடின கனபேரின்.. சரி சரி.. மூன்று பேரின் அன்புக்கு நன்றி.

இங்கே கோடை ஆரம்பிக்க உலகத்தின் வடபாதியில் குளிர்காலம் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு கார்த்திகை மாதத்தில் அமைந்தது என் வாழ்வின் முதலாவது பெரிய (பள்ளிக்காலம் தவிர்த்த) விடுமுறை & பயணம். பயணிப்பது ஒரு கலை. முதன்மையான அடிப்படைப் பாடங்கள் சில இப்பத்தான் கற்றிருக்கிறேன். இலக்கின்றிப் போக வேண்டும் என்கிற ஆசையிருந்தாலும், இந்த முறை இலக்கு வைத்துத் தான் புறப்பட்டோம். எனக்கும் ஒரு ஞாபகமாய் இருக்கட்டுமென்று நினைத்து
க் குறிப்பேடொன்றைக் கொண்டலைந்தேன். ஆனாலும், எப்பொழுதும் நடப்பது போல அரைகுறை வேலைதான். கடைசி 11 - 12 நாட்கள் பதியப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னாலெல்லாம் போன இடம் வந்த இடமென்றும் அந்த நாட்களில் என்ன நினைத்துக் கொண்டேன், எதைப் பற்றி சிந்தித்தேனென்றும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொருதாளாய் படமெடுத்து வலையேற்றலாமோவென்று யோசித்து, வேண்டாமென்று, நான் மிகவும் ரசித்த இடங்கள் பற்றிய என் குறிப்புகளை மட்டும் படங்களுடன் வலையேற்றுகிறேன்.

இடம் பார்த்ததை விட ஆட்கள் பார்த்ததுதான் அதிகம் என்றாலும் ஐந்து வாரங்களில் மொத்தம் 6 நாடுகளில் திரியக் கிடைத்தது. அதிலே எப்படியும் 7 நாட்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணிப்பதிலேயே கழிந்து விட்டன. ஆக நான்கு வாரங்களில் ஆறு நாடுகள். நினைத்த வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒன்றைத்தான் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், அந்தக் கதைக்கு அவரது நாட்டுக்கு வரும் வரை பொறுக்க வேண்டும். :O)

வழமையாக உல்லாசப்பயணிகளின் காலடி பட்டுத் தேய்ந்து போன தெருக்களினதும், சில முக்கிய இடங்களினதும் விருந்தினர் வரிசையிலே நாங்களும் இணைந்து கொண்டோம். உல்லாசப் பயணித் தடம் நிரம்பாத இடங்களையும் பார்த்தோம். இயற்கையை ரசித்தபடியும், வியந்தபடியும் கழிந்த பயணங்கள். பாரிஸில் நின்ற போது சின்னையாவிடமிருந்து (மூதூர்த் தோட்டத்தில் வேட்டையாடப் போவாராம்.. அந்தக்காலத்தில்) உக்கிளான் என்கிற சிறு மான் வகை பற்றி அறிந்து கொண்டேன். நண்டு பிடிக்கப் போகிற கதை சொன்ன போதும் ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன்.. ஆனால் பிறகு மறந்து விட்டது. அவரிடம் கேட்டால் என்ன சொன்னாரென்று அவருக்கும் ஞாபகமில்லை.

மனித இயல்புகள் & வாழ்வைப் பற்றியும் காலவோட்டம் பற்றியும் கூட நிறையக் கற்றுக் கொண்டதொரு பயணமாக இருந்தது. பயணிக்கும் போது மனதைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளே நுழைந்து இனிதாய் நிறைக்கும் அனுபவங்கள் எதிர்பாராதனவாய் இருக்கும். அட! என்று வியந்து நின்று நிதானமாய் அனுபவிக்கிற நாட்கள் நீண்டு கொள்ளும்.

எப்போதுமே ஏதோ ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று கொண்டுதானே இருக்கிறோம்?
வாழ்வதே பயணிப்ற்குத்தானோ என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். :O)

"இரை" மீட்டல் 2

I scream, you scream , we all scream for ice cream!!

எப்ப கார்ணிவெல் ஐஸ்க்றீம் அறிமுகமானண்டு தெரியல்ல. ஒருவேளை பள்ளிக்கூட விடுதியில தங்கியிருக்கேக்குள்ளயாயிருக்கலாம்.

விடுதிச் சாப்பாடு.. காலையில பாண் இரிக்கும் இல்லாட்டி புதன் கிழமையில கிரிபத். (கிரிபத் இரிக்கே, திண்டுத்துப் போனா சரியா ரெண்டாம் பீரியட்டுக்கு நித்திரை தான் வரும்) வேற என்னென்ன இரிந்தண்டு ஞாவகமில்ல. எட்டுமணிக்குப் பள்ளி துடங்கிற. ஏழு மணிக்கு மணியடிச்சோண்ணே வந்து வரிசையா நிக்கோணும். பிறகு சாப்பாட்டறைக்குள்ள போய் மேசையடியில நிண்டு ஒருக்கா சாப்பாட்டுக்கு நன்றி/செபஞ் சொல்லோணும். சொல்ல விருப்பமில்லண்டா பேசாம நிக்கல்லாம் இல்லாட்டி ஆரையோடையும் தனகுவேலை. முதல் நாள் பின்னேரம் புறக்கின காக்கா இறக ஆராவது புள்ளையிர தலைமயிரில செருகல்லாம்.. பிரார்த்தனை சொல்ற மேட்ரனுக்கு ரொக்கற் உடல்லாம்.. ரெண்டு நிமிசத்துக்குள்ள என்ன கூத்தெல்லாம் காட்டேலுமோ அதெல்லாம் காட்டி எப்பிடியாவது ஆரயாவது சிரிக்க வைச்சிர்ற. சின்னாக்கள்தானே.. 1 - 4ம் வகுப்புப் புள்ளையள் தான் பக்கெண்டு சிரிக்குங்கள். மத்தியானச் சாப்பாடு சொல்றதுக்குப் பெரிசா ஒண்டுமில்ல. இரவுச் சாப்பாட்டுக்கு மீன்/முட்டை/மாட்டிறைச்சி இரிக்கும். புள்ளையள் பாவமெண்டுத்து கிழமையில ஒரு நாளோ ரெண்டு கிழமைக்கொரு தரமோ கோழிறச்சி. வியாழக்கிழமையில.

சனி-ஞாயிறுக்கு வீட்டுக்குப் போற பிள்ளையள் கொண்டாற, இல்லாட்டி பாக்க வாற அம்மாப்பா கொண்டாற தின்பண்டமெல்லாம் வைக்க இடமிரிந்த. பின்னேரம் படிச்சி முடிஞ்சோணே இதுகளக் கொண்டுபோய்த் தின்ற. விதம் விதமான பலகாரம், முட்டைமா(இது என்ட பங்குக்கு) பிஸ்கற் என்டு நிறய.

இவ்வளவுமெல்லாம் திண்டும் , பிறகு சில நாள் நடு இரவில நள்ளிரவு விருந்தெண்டு சொல்லி நடத்திற. மேட்ரன் ஒருநாள் சத்தம் போட்டாவு. அடுத்த தரம் என்ன செய்தமெண்டா ஒராள் போய் அவட அறைக்கதவில் பூட்டைப் போட்டுத்து வந்துத்து. அவ பாவம், "கதவத் திறங்கடி" என்டு ஒரே ஏச்சு. எங்களுக்கென்ன கழண்டா கிடக்கு அவட கதவைத் திறக்க. பேசாம உட்டுத்தம். அவையும் படுத்துத்தாவு.. நாம நல்லாக் கிடந்து சிரிச்சி கூத்தடிச்சி திண்டிட்டுப் படுத்த. அடுத்தநாள் காலம்பிற நைசாப் போய் பூட்டைக் கழட்டித்தம். அவ காலையிலயும் கிடந்து தட்டுறாவு. ஒன்டுந் தெரியாத மாரிப் போய் "ஏன் மிஸ்? கதவு திறந்துதானே கிடந்த" என்டு சொல்லித்து அவ பதில் சொல்ல முதல் ஒரே ஓட்டம்!! :O)

ஒரு தவணைக்கு ஒருக்கா மாதிரி வெளில கூட்டித்துப் போவாங்க விடுதிப் பிள்ளையள. அதுக்கெண்டே சனி-ஞாயிறில வீட்டுக்கும் போகாமச் சில கிளையள் நிக்கிற. தெறிப்பு வேல பாக்கத்தான். ஒருக்கா இப்பிடித்தான் படம் பாக்கக் கூட்டிப் போனவங்க முன்னுக்கு லிபேர்ட்டித் தியேட்டருக்கெண்டு நினைக்கன். இன்டியானா ஜோன்ஸ் யேசு கடைசியாப் பானமருந்தின புனிதக் கோப்பையைத் தேடிப் போற கதை.[வேதக்காரப் பள்ளிக்கூடமெண்டவடியா வேற கதைகள் கூட்டிப் போமாட்டாங்க] அண்டைக்கு நாங்க காட்டின கூத்தில அதுக்குப் பிறகு படத்துக்கே கூட்டிப் போறல்ல. :O) அப்பிடி வெளில போனநேரம்தான் முதல்தரம் கார்ணிவெலுக்குப் போயிரிப்பன் போல. ஏனெண்டு தெரியா அதப்பத்தி ஞாவகமில்ல.

ஒரு நாள் என்ட ஒரு நண்பி அக்காச்சிக்குப் பிறந்த நாள். முதலே அம்மாட்டக் கேட்டு வைச்சித்து, பிறகு எப்பிடியோ wardenட்டயும் அனுமதி வாங்கித்தாவு. செரியான கெட்டிக்காரி. அவட நண்பிகள் நாலு பேரும் இவையும் நானும். கார்ணிவெலப் பத்தி என்ட முதல் ஞாவகம் அதுதான். அங்க போனா, என்னத்தை ஓடர் பண்ணிற எண்டு தெரியா. சரியெண்டு ஒரு சொக்ளற் சன்டே குடிச்சன். சா! என்ன திறமான ஐஸ்க்றீம். மட்டக்களப்பில இருக்கக்குள்ள பல்லுப் புடுங்கி
துக்குக் கிடைச்ச "பௌசியா"க்கடை ஐஸ்க்றீமை விடயே பரவால்லண்டா பாத்துக் கொள்ளுங்க.

விடுதியால வெளிக்கிட்ட பிறகும் ஆருக்கும் ட்றீட் குடுக்கிறண்டா இந்தக் கடைதான்.கொஞ்சம் பழைய வீட்டிலானே கடை நடந்த, திருத்த வேலை செய்யிறண்டு பிறகு கொஞ்ச நாள் பூட்டியிருந்த. Banana boat என்டும் ஒரு ஐஸ்கிறீம். வாழைப்பழத்த நெடுக்காப் பிளந்து இன்னுமென்னென்னையோ போட்டுத் தருவாங்க. [இப்ப சிட்னில இப்பிடி ஒரு ஐஸ்கிறீம நினைச்சும் பாக்கேலா! கிலோ தொண்ணுத்தொம்பது சதத்துக்கு வித்த வாழைப்பழம் இப்ப கிலோ 11 டொலருக்குக் குறைவா இல்ல. இந்த சீத்துவத்துல பனானா போட்தான்!!] பிறகு walls (streets) ஐஸ்க்றீம் கடை எல்ல இடத்திலயும் வந்தோணே வாற வழில வாங்கி வழி வழியாக் குடிச்சி வாற. அம்மாக்கு அந்தப் பழக்கத்தை கண்ணில காட்டேலா. ஆக்கள் ஒரு சாங்கமாப் பாப்பாங்களாமெண்டு சொல்லுவாவு. அவ ஏசிறன்டுத்து, விறு விறெண்டு ஐஸ்க்றீமைத் திண்டொழிச்ச பிறகுதான் வீட்டுக்கே போற. :O))

இந்த வனிலா ஐஸ்க்றீம் இரிக்கெலுவா..அதோட உறைப்புச் சுண்டல் சாப்பிட்டிருக்கெயளா? [க்றீம் கிறக்கரோட சேத்து சீசும் சீனிசம்பல்/கட்ட சம்பலும் சாப்பிடுற. இப்பிடி கொஞ்சம் 'வித்தியாசமான' கொம்பினேசன் முயற்சியும் இடைக்கிட செய்யிறதான் :O) ] [க்றீம் கிறக்கரெண்டத்தான் இன்னொண்டு ஞாவகம் வருது. லெமன் பவ் என்டொரு பிஸ்கற் வாறதானே. அதில பிஸ்கற் ரெண்டுக்கும் நடுவில லெமன் க்றீம் இரிக்கும். சின்னனில பிஸ்கற்றப் பிரிச்சி கிறீம மட்டும் ராவித் திண்டுத்து வெறும் பிஸ்கற்ற அம்மாட்டத் திருப்பிக் குடுக்கிற. போன கிழமை ஒரு சின்னாள் அதேவேலை செய்யிறதக் கண்டன். ;O) ]

உறைப்புச் சுண்டல் ஐஸ்கிறீமோட சாப்பிட்டதா என்டு கேட்டனாந்தானே..அந்தச் சுண்டலுக்கு காலிமுகத்(Galle face) திடலுக்குப் போகோணும். ஒரு காலத்தில வீட்டில எல்லாரும் சேர்ந்து போகக் கூடியதா இருந்த. தண்ணில் கால் நனைக்க உட மாட்டாங்க .. ஆனா அந்தக் காத்து.. அப்பிடியொரு சுகம். கடற்கரைக்குப் போனாக் கிடைக்கிற இன்னொண்டு அவிச்சுப் பொரிச்ச மரவள்ளிக் கிழங்கு. கொச்சிக்காத்தூளும் உப்பும் தூவி வச்சிரிப்பான். அந்த மாதிரி இரிக்கும். அந்தத் தள்ளு வண்டில் அங்கெங்கயோ வரக்குள்ளயே கண்டுபிடிச்சிருவம். இப்ப யோசிக்கிறன், தின்னுறத்துக்குத்தான் பீச்சுக்குப் போனனாமளா என்டு.

அண்ணாவங்க நிண்டா, கடற்கரைக்குப் போனா அன்டைக்கு முக்கியமான ஒரு சாப்பாட்டுச் சாமான் கட்டாயம் இரிக்கும். அத என்னண்டு அடுத்த பதிவில. சரியா மனே..

சொல் விளக்கம்:
கிரிபத்(சிங்களச் சொல்) - பொங்கல்
தெறித்தல் - குழப்படி/அட்டகாசம் பண்ணல்.
வேதக்கார - கிறிஸ்துவக்கார
அதுக்காவண்டி - அதற்காகவேண்டி
கொச்சிக்காய் - மிளகாய்
போனனாமளா - போனோமா
திறமான - உயர்ந்த/சிறந்த
ஏசிறன்டுத்து - ஏசுவது(திட்டுவது) என்பதால்
இரிக்கெலுவா - இருக்கிறது அல்லவா
ஒரு சாங்கமா - ஒரு மாதிரியாக
திண்டொழிச்ச - தின்று (உண்டு) முடித்த

கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் - ஒரு பின்னூட்டம்

"சக்தி"யில் பத்மாவின் "கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்" பதிவுக்கான என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் தனிப் பதிவாக இடுகிறேன்.

----------------------------------------------------

சுதந்திரம் "கொடுக்கப்படும்" ஒன்றல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பெண்களில் பலர் உட்பட. இதில் இன்னமும் வேதனையான ஒன்று என்னவென்றால் படித்த பெண்களும் அடங்கி நடத்தல்தான் அழகு/சரி என்கிற ரீதியில் நினைப்பதும் வாழ்வதும். பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு உறவில் அடங்கி நடத்தல்/கட்டுப்பாடுகள் என்பன இருப்பதில்லை.

பெண்ணை, சார்ந்திருப்பதனூடாகப் பெருமைப்பட்டுக் கொள்ளச் சொல்கிறது எங்கள் சமூகம். ஒரு பெண்ணின் இருப்பு ஆணைச் சார்ந்ததாக ஆக்கப்படுவது ஏன்? உதாரணமாக எடுத்துக் கொண்டால், பெண் தனித்து வாழ்வதை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. அதெப்படி தனியாக வாழக்கூடும்? ஏன்.. தன்னைத் தானே கவனித்துக் கொள்வதற்கும் பிடித்தமான வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஒரு பெண்ணால் இயலுமாயிருந்தால், ஒரு பந்தத்தில் இணைந்திருக்கப் பிடிக்காமலிருந்தால் அந்தப் பெண் திருமணஞ் செய்ய வேண்டியதின் அவசியம் அடிபட்டுப் போய்விடுகிறது. (திருமணம் வேண்டியதா/ வேண்டாததா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) ஆனால் இதை ஒரு சராசரி ஆளுக்குச் சொல்லிப் பாருங்கள்.. அதெப்படி பெண் தனியாக வாழ்வது என்ற பதில் தான் வரும். ஏன்? பெண்கள் அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சார்ந்தே இருந்து பழகிப் போனதால். ஆண்கள் சொல்வது ஏனென்று என்னால் ஊகிக்கக் கூடியது ஈகோ. "நான் இருக்கிறேன்தானே பார்த்துக்கொள்ள.. தேவைகளைக் நிறைவேற்ற. பெண் என்பவள் என் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும்" என்கிற எண்ணம்.

சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம்.. நம் பெண்களில் எத்தனை பேரை விரும்பிய இடத்துக்குத் தனியே (எவ்வளவு தூரமானாலும்) குடும்பத்தினர் போக விடுவார்கள்? "ஐயோ பெண்ணை அவ்வளவு தூரம் தனியே அனுப்புவதா"/"அவளுக்குப் போய்ப் பழக்கமில்லை"/"அவளால் முடியாது" என்ற ரீதியில் பதில் வரும். அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன். நன்கு படித்து வேலையிலிருக்கும் ஒரு பெண் (புத்தகங்களையே ஆணுக்குரியவை பெண்ணுக்குரியவை என்று வகைப்படுத்திய அறிவாளி) நேற்றுப் பயணம் போதல் பற்றிப் பேசுகையில் சொல்கிறா "நான் தனியாய்ப் போகமாட்டேன். அதெப்பிடிப் போவது. கலியாணங் கட்டின பிறகு தனியே பயணம் செய்வது அழகில்லையல்லவா. அப்படி நான் விரும்பி அதைச் சொன்னாலும், கணவர் 'ஏன் அப்படித் தனியே போக யோசிக்கிறீர்கள்? என்ன பிரச்சனை' எனக் கேட்கக் கூடும்".

[அவவிற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் திருமணம் செய்திருந்தால் எல்லாவற்றையும் சேர்ந்தே செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பிழையாக நினைப்பார்கள்/ (கணவன்) பெயர் கெட்டுவிடும் என்று இன்னும் நினைப்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. திருமணம் செய்து கொண்டால் நீங்கள் தனித்தன்மையற்றவர் ஆகி விடுகிறீர்களா? இல்லையே!. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கும் கட்டாயம் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை தனியே உங்களுக்குரிய வெளியில்(personal space) இயங்க முற்படுவது பிரச்சனைக்குரிய ஒன்றெனக் கருத வேண்டிய காரணம் இல்லை. ஒன்றாகச் சேர்ந்து செய்வதையும் செய்யுங்கள். தனிப்படவும் இயங்குங்கள். அது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இன்னும் நேசிக்கவும் இடந் தரும்]

இப்படி, தங்களை உண்மையாகவே வெளிப்படுத்துவதற்கும் விருப்பப்படி செயலாற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளே வாழ்க்கையாகிப் போகின்றன. தளைகளை உடைத்துக் கொண்டு வெளியில் வர முயற்சிக்கையிலேயே அப்பெண்ணிற்கிருக்கக்கூடிய தன்னம்பிக்கையின்மை, பொருளாதார முட்டுக்கட்டைகள் என்பவை அவளுக்கெதிராக ஆயுதமாக்கப்பட்டு அம்முயற்சிகள் தோற்பிக்கப்படுகின்றன. அப்படியும் விடாது முயன்று சுதந்திரமாய் வாழும் சகோதரிகள் எம் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொள்பவை நாம் அறியாதவையல்ல. [அவற்றைப் பற்றி இப்போதைக்கு இங்கு வேண்டாம்.]

நினைத்தநேரம் நினைத்தபடி சென்றுவரக்கூடிய சூழல் தருகிற சுதந்திரத்தை/புத்துணர்ச்சியை, தளைகளை வென்று செயலாற்றுவது தரும் தன்னம்பிக்கையை, சமூகத்தில் தன் பங்களிப்பை, விரும்பியது கற்றுத் தேறித் தன்னை முன்னேற்றிக் கொள்வதில் கிடைக்கிற திருப்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் இன்னுமின்னும் பொத்திப் பொத்தி "பாதுகாப்பு, பண்பாடு" என்று அடைத்து வைக்கப்படுவதையுணராத பெண்களும் தங்கக்கூண்டென்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டு காலம் தள்ளுவார்கள். கண் திறப்பதேயில்லை பலருக்கு!

"இரை" மீட்டல் 1

கொழும்பில் எனது சாப்பாட்டு நினைவுகள்/அனுபவங்களைப் பதிய நினைத்திருக்கிறேன். பள்ளிக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்:

காது என்டொராள் இருந்த. பள்ளிக்கூடத்தில பொது உதவிக்கெண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவர். வகுப்புகள் இடம் மாறினா கரும்பலகை தூக்கிறண்டா, ப்ரொஜெக்டர் போடுறண்டா, ஒடிட்டோரியத்தில திரை வேலை செய்யல்லண்டா அவரத்தான் கூப்பிடுற. ரசாயன வகுப்புக்கு குடுவைகள் கழுவுறது, lab சுத்தமாக்குறது என்டும் பலதரப்பட்ட வேலைகள். அவற்ற பேர் காது என்டு சொன்னான் தானே.. முழுப்பேர் சல்காது. எப்ப பள்ளிக்கூடத்தில வேலைக்குச் சேர்ந்தவர் என்டு ஒருதருக்கும் தெரியா. படிச்சு முடிச்சு பள்ளிக்கூடத்திலயே வேலைக்குச் சேர்ந்த அக்காமாரைக் கேட்டாலும் அவங்களுக்கும் தெரியா. அவரோட கதைக்க முயற்சித்ததாயும் ஞாபகமில்ல. ஆனா என்னண்டா ஆள் சரியான அமசடக்கி. கொஞ்ச நாள் தொடர்ந்து மிடில் ஸ்கூல் (6 - 8ம் வகுப்பு)பிள்ளையள்ர சாப்பாடு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரியோ.. முழுக்கவோ சாப்பிடுப்பட்டோ இருக்கத் தொடங்கித்து. பிள்ளையள் ஒரே முறப்பாடு. மினக்கெட்டு வீட்டில சொல்லி நேற்று நண்பி கொணந்த மாதிரி நூடுல்சோ இல்லாட்டி நண்பி கேட்டெண்டு சொல்லி தோசையோ[சிங்களப்பிள்ளையளுக்கு தோசையெண்டாக் காணும். எங்களுக்கு அதுகள்ர பிஞ்சுப் பிலாக்காக் கறியில (பொலொஸ்)(இதுக்கு அர்ப்பணிக்கிறத்துக்கெண்டே தனிப் பதிவு போடலாம்!!) கண்] கொணந்து அது சாப்பிடாமலே காணாமப் போறண்டா!!

இடைவேளை பற்றிச் சொல்லக் கிடக்கு. எல்லாப்பள்ளிக்கூடத்திலயும் இது நடக்குமெண்டு நினைக்கன். இடைவேளை மணியடிச்சாக் காணும். 11.10 - 11.40 என்டு நினைக்கிறன். (மாட்டு
க்கிளையள் ஏறி மிரிக்கிறமாரி இடிச்சுத் தள்ளி ஓடுங்கள். படியால போகயும் ஏலா.. வரயும் ஏலா). அரைமணித்தியாலத்துக்குள்ளதான் சாப்பாடும் விளையாட்டும். கிடுகிடெண்டு கொணந்ததைப் பிரிக்கிற. Tuck Shop போற கதை தனிக்கதை. அத இப்பத்தைக்கு விடுவம். கொணந்ததைப் பிரிச்சா, உங்களுக்கெண்டு ஒரு குழு இருக்குமெல்லா.. அதுக்குள்ள என்டதிலருந்து ஒரு துண்டு ஒராளுக்கும் இன்னொராளிடதிலருந்து ஒரு கரண்டி மற்றாளுக்கும் போகும். கடசியாப் பாத்தா வீட்டருந்து கொணந்தது உங்களுக்கு வாய்க்குள்ளயே போயிருக்காது. மற்றாக்கள்ர சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமா வயித்த நிரப்பிரும். எல்லாருக்கும் இதான் கதை. ஆருக்கும் பிறந்தாநாளெண்டாக் காணும். கேக் என்டதையே சீவியத்தில முதல் முதல் கண்டமாதிரி (பிறந்தாள்க்காரப் பிள்ளை தோழியெண்டா) எனக்கு ரெண்டு துண்டெண்டு முதல்லயே சொல்லி வைச்சிர்ர. பிள்ளையும் அதுக்கேத்தமாதிரி ரெண்டு துண்டுக்காராக்களையெல்லாம் எண்ணி கேக்கை வெட்டிக் கொண்டரும். அதையும் உள்ளுக்கு அனுப்பிற. பிறகு விளையாடப் போற. சில பிள்ளையள் விளையாடித்து வந்துதான் சாப்பிடுங்கள். வகுப்பு நடக்கும் .. தண்ணி குடிக்கிற சாக்கில நைசா ஒரு துண்டுப் பாணை விழுங்கிற. ரீச்சரும் ஒண்டும் சொல்லுறல்ல..அநேகமா. சிரிச்சித்து விட்டிருவாவு.

இப்பிடிச் செய்யிற பிள்ளையளுக்கு இன்டவெலுக்க சாப்பாட்டுப் பெட்டியத் திறந்தா சாப்பாட்டக் காணல்லண்டா எப்பிடி இரிக்கும்! ஒரேயடியா முறைப்பாடு வரத் தொடங்கித்து. சரியெண்டு ஒருநாள் மூணு prefect அக்காமார் ஒவ்வொரு வகுப்பிலயும் ஒளிஞ்சித்து இருந்தவங்களாம். பிள்ளையளெல்லாம் அசெம்பிளிக்கோ காலமைப் பிரார்த்தனைக்கோ பொய்த்துகள். சுத்தமுத்த பாத்துத்து ஒராள் வகுப்புக்குள்ள வருதாம். ஒரு பையத் திறந்து சாப்பாட்ட எடுத்து விறுவிறெண்டு சாப்பிடுப்படுதாம். பிறகு இன்னொரு பை. ஆராள்.. சல்காதுதான்! prefect அக்காச்சிக்கு இப்ப என்ன செய்யிறண்டு தெரியல்ல. சத்தம் போடயும் ஏலா. பேசாம இருந்துபோட்டு, பிறகு ரீச்சரிட்டப் போய் சொன்னதாம். பிறகு பிறின்சிப்பல் கூப்பிட்டுக் கதைச்சண்டும் அதுக்குப் பிறகு களவு போறல்லெண்டும் சொல்லிக் கிடந்த. அப்பல்லாம் அந்தாளக்கண்டா கிளுகிளெண்டு சிரிக்கிறதான் தொழில். இப்ப நினைக்கத்தான் பாவமா வருது. உண்மையாவே களவுதானா இல்லாட்டிப் பசீல எடுத்துச் சாப்பிட்டதா என்டு இத்த வரைக்கும் தெரியா. :O
இந்தப் பள்ளிக்கூடத்திலதான் எனக்கு போண்டா என்ட சாமான் அறிமுகமான. மணியடிக்க, வெளிவேலைக்குப் போய் வர ஒராள் இருந்த. என்ன பேரெண்டு மறந்துத்தன். காசு குடுத்தா வாங்கித் தருவேர். A/L நேரந்தான் இந்த வேலை செய்த. தவா சேர் தூங்கித்தூங்கிப் பாடமெடுப்பார், நாம இஞ்சால சத்தம் போடாம வெட்டுறதான். சிலவேள டபிள் ட்ரிப்பிள் பீரியடும் பாடம் நடக்கும் ஒரே ஆளோட.

தவா சேர் இரிக்காரே அவர் ஒரு முசிப்பாத்தியான ஆள். ஒருநாள் எங்கயோ அவர்ர ஸ்கூட்டர்ல போகக்குள்ள விபத்தாகித்து. ஆரோ வந்து இடிச்சித்தான். அடுத்தநாள் வந்து தான் எப்பிடிப்போன அவன் எதால வந்து இடிபட்ட என்டெல்லாம் விளக்கம் சொல்லத் தேவல்லயா! எங்களுக்கும் உசார் பிடிச்சிரும் ஏனெண்டா இந்தாள் கதைக்கத் தொடங்கினா எப்பிடியும் ஒரு முக்கா மணித்தியாலத்துக்கு பாடமில்லண்டு தெரியும். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் நழுவ விட்டிருவமா!! இன்னும் ஞாபகமிருக்கு, விபத்து நடந்து ரெண்டு மூண்டு மாசத்துக்குப் பிறகும் அவரிட்ட கதை கிளறுற. ஸ்கூட்டர் திருத்திட்டீங்களா சேர்? என்டு! அவரும் நாங்க கேக்கிறதப் பத்தி விளப்பமில்லாம கதை சொல்லுவார்! படிப்பிக்கத் துடங்கின காலத்துக் கதையும் வரும். இவரிட்டத்தான் ரியூசனுக்குப் போன. மூண்டுமணிக்கு வகுப்பு. ஒருநாள் சேர் வெண்பலகையில வெப்பக் கணக்கு ஏதோ எழுதிறார். எப்பிடித் தீர்க்கிற என்டும் எழுதியெழுதி வந்தவர், திடீரென்டு எழுதாம நிண்டுத்தார். எங்களுக்கு முதல் விளங்கல்ல. பிறகு சிரிப்பெண்டா!! பள்ளியால வந்து நல்லாச் சாப்பிட்டுத்து வகுப்புக்கு வந்ததில சேர் வெண்பலகையில சாஞ்சு நித்திர!! :O))

பள்ளில இருக்கக்குள்ளதான் பெரேரா & சன்ஸ் இல(பள்ளிக்கு நேர முன்னாலயே கடை வச்சிரிந்தாப் பின்ன!!) இக்ளெயாஸ் (Éclairs) என்ட ஒண்டையும் தின்னப் பழகின. இஞ்ச வந்து பாத்தா வெறுங் கிறீம உள்ளுக்கு அடைஞ்சு அதுக்கு மேல சொக்கிலட்ட ஊத்திரிக்கான். அங்கெண்டா மெதுமெதெண்டு ம்ம்ம்... மெதுமெதெண்டத்தான் இன்னொரு சாமான் ஞாபகம் வருது. Carnival கடை ஐஸ்கிறீம். அது அடுத்த பதிவில. :O)

(இந்தத் தமிழ் விளங்கல்லண்டாச் சொல்லுங்க, வழமையா எழுதிற மாதிரி அடுத்ததை எழுதிறன். இப்ப பொய்த்து வாறன் மக்காள்.)

நா. ப. கா 2

பிரேமலதாவுக்குச் சொன்னாலுஞ் சொன்னன்.. இப்பத்தான் படம் போட நேரம் வந்திருக்கு! எல்லாமே செல்.பேசில எடுத்த படங்கள்.

நிறைய நாளாகுது பணியாரஞ் செய்து சாப்பிட்டு. பணியார உதவி: கஸ்தூரிப்பெண். (பக்கத்தில இருக்கிறது கரட் அல்வா,
சப்பாத்தி):






வடிவாயிருக்கும் என்டு தோணினா போக வரேக்க செல்.பேசில சுடுறதுதான். அப்பிடிச் சுட்ட பூக்கள்:




சீசனில முதன் முதலா எங்களுக்கு இரையாகப் போகுதெண்டு தெரியாமலே (ஒருதருஞ் சொல்லிராதீங்க!!)ஒருக்காத் தொட்ட கையில வாசம் மிச்சம் வைச்சிட்டுப் போற மாம்பழம். ம்ம்... புட்டவிக்கிறதா இல்லாட்டி சாப்பிட்ட பிறகு சாப்பிடுறதா?


வாசித்தது

தன் உடல்மீதான மருத்துவ உரிமைக்காக வழக்குப் போடும் 13 வயதுப் பெண் அனா. அனா, தாய் சேரா, தகப்பன் பிரையன், தமையன் ஜெஸி, வழக்குரைஞர் கம்பெல், வழக்கில் அனாவின் பாதுகாவலர் யூலியா என்போர் பேசுவதினூடாகக் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது.

அனாவின் தமக்கை கேற்றிற்கு ஒருவித இரத்தப்புற்று. அவளுக்கு அந்நோயுள்ளது என்று அறியப்பட்ட போது சிகிச்சைக்கு இரத்தம் கொடுப்பதற்கான பொருத்தமான வழங்கிகளாக அவள் குடும்பத்தினர் இருக்கவில்லை. சிறுதொகைக் கருக்களிலிருந்து கேற்றிற்குப் பொருந்தும் மரபணு வடிவமைப்புள்ள ஒரு கருவைத் தேர்ந்து செயற்கை முறையில் அனாவை சேரா பெற்றெடுக்கிறார். பிறந்த போது தொப்புட் கொடியிலிருந்தும், பிற்பாடு ஒவ்வொரு கட்டத்திலும் தன் உடலிலிருந்து என்புமச்சை, குருதி முதலியனவும் கொடுக்கும் ஒரு வங்கியாக அனா வாழ்கிறாள். தேவையானதை அனாவின் உடலிலிருந்து பெறுவதற்கான வழிமுறைகள் படிப்படியாக உடலுக்கு அதிகம் தாக்கம் கொடுப்பவையாகின்றன. அடுத்ததாய் ஒரு சிறுநீரகம் வழங்கப்பட வேண்டி வருகிறது. கேற்றை உயிரைப் போன்று நேசிக்கிறாள் அனா. ஆனாலும் இதுவரை போலன்றி 13 வயதில் இனிமேலும் தன் உடல் பற்றிய மருத்துவ முடிவுகளைத் தானே எடுக்கவேண்டும் என்ற முடிவில் தன் பெற்றோரின் அதிகாரத்தின் கீழ் அவ்வுரிமை இனிமேலும் வராதிருக்கும் வண்ணம் வழக்குத் தொடர்கிறாள். கேற்றுடைய சிகிச்சைக்காகவே பிறந்த அனாவின் இம்முடிவு குறிப்பாக தாய் சேராவுக்கு விசனத்தைத் தருகிறது. அனாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார்.

வழக்குரைஞராய் இருந்து, பிள்ளைகளைக் கவனிப்பதற்காய் வீட்டிலே இருந்துகொண்ட தாய் சேராவின் பாத்திரம், நோயுற்றிருக்கும் கேற்றைப் பற்றிய சிந்தனை மட்டுமேயுடையவராய்ச் சித்தரிக்கப்படுகிறது. போதியளவு அழுத்தம் கொடுக்கப்பட்டில்லை. அனா மீதோ ஜெஸி மீதோ சேரா கொண்டுள்ள கரிசனை மிகவும் மேற்போக்கானதாயிருக்கிறது. அப்படி வளர்த்த பாத்திரம் திடீரென அனாவின் நிலையை உணர்ந்து கொள்ளக்கூடியதாய் இருக்கிறதெனச் சொல்வது கொஞ்சம் நெருடுகிறது. தகப்பன் பிரையன், எந்நேரமும் நடக்கக்கூடும் என்றிருக்கும் கேற்றின் மரணத்துக்குத் தன்னை தயார்ப்படுக்கொண்டுள்ளதாயும் தன் மற்ற இரு பிள்ளைகளுக்கு வேண்டிய போதிய கவனிப்பு இல்லாமலிருப்பதை உணர்ந்தவராயும் காணப்படுகிறார். இவர் ஒரு தீயணைப்பு வீரர். ஜெஸி - முழுக்கவனமும் கேற் மேலேயே இருப்பதாலும், கேற்றுக்கு அவசியம் என்பதால் அனாவுக்கும் அந்தக் கவனமிருப்பதாலும் தனிமையாக உணர்கிறான். வெறுமையாய் விடப்பட்டிருக்கும் கட்டடங்களுக்குத் தீவைக்கிறான்.

அனாவின் வழக்குரைஞர் - கம்பெல்.
கம்பெல் உதவிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சேவை நாயை வைத்திருக்கிறார். அது பற்றிக் கேட்போருக்கெல்லாம் சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறார். கடைசியில் ஏனென்கிற காரணம் தெரியவருகிறது. வாக்கு நடக்கையில் அவருக்கு வலிப்பு வந்துவிடுகிறது. நாய், வலிப்பு வரமுன்னம் கம்பெலின் உடலிலிருந்து வெளிப்படும் மணம், வேறு சில மாற்றங்களைக் கவனித்து அவருக்கு தன்னாலியன்ற முறையில் நடக்கப்போவதைத் தெரியப்படுத்துகிறது, ஆனாலும் அவர் அதை வழக்கின் உச்சகட்டத்தை அண்மிப்பதால் உதாசீனம் செய்கிறார். [இதற்காகவே, முன்னறிவிப்புப் பெறுவதற்காகவே இவருக்கு நாய் வேண்டியதிருக்கிறது]. வழக்கின் போது ஒரே வீட்டில் வாழ்வதால் அழுத்தத்துக்குள்ளாக்கப்படாமல் அனா இருக்கும் பொருட்டு ஒரு பாதுகாவலரை நீதிபதி நியமிக்கிறார். அவர் ஜூலியா. கம்பெலும் ஜூலியாவும் முன்னரே ஒருவரையொருவர் அறிந்திருந்ததாயும் காதலராயிருந்ததாயும் சொல்லப்படுகிறது. இருவருக்குமிடையிலான உறவு அழுத்தமில்லாததாயும், வலிந்து திணிக்கப்பட்டதாயுமுள்ளது.

வழக்கு நடக்கையில் கேற் மிகவும் சுகவீனமுற்று மருத்துவமனையிலுள்ளாள். குறுக்கு விசாரணையின் போது வழக்குத் தொடரச் சொல்லி அனாவைக் கேட்டுக் கொண்டது கேற் எனத் தெரியவருகிறது. வழக்கில் அனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கம்பெல் அனாவுக்குப் 18 வயதாகும் வரை அவள் நலனை கருத்திற் கொண்டு மருத்துவ முடிவுகளை அனா சார்பில் எடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிடுகிறார். சில வேலைகள் செய்ய வேண்டியதிருப்பதால் அனாவும் கம்பெலும் நீதிமன்றில் பின் தங்க, பெற்றோர் மருத்துவமனை செல்கிறார்கள். அங்கே கேற்றுடன் பேசுகிறார்கள். பிரையனுக்கு வேலையிலிருந்து அவசர அழைப்பு வருகிறது. ஒரு வாகனவிபத்து. பயணியை விடுவிக்கும் பொருட்டு சேதமடைந்த வாகனத்துக்குள் நுழையும் பி
ரையன், பயணிகள் அனாவும் கம்பெலும் எனக் காண்கிறார். அனா உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டும், அவளது மூளை செயலிழக்கிறது. கம்பெல் அனாவின் சிறுநீரகத்தை கேற்றிற்குக் கொடுக்கும்படி சொல்கிறார். அனாவை உயிருடன் வைத்திருக்கும் இயந்திரம் அணைக்கப்படுகிறது.

கடைசி அத்தியாயம் கேற் பேசுவது போல். ஜெஸி பற்றியும், எப்படி அனாவின் இழப்பினூடாக வாழ்ந்தார்கள் என்பது பற்றியும் பேசும் கேற் இதுவரை பெற்ற சிகிச்சைகளின் பலனாய் சுகமுற்றுள்ளாள். ஆனாலும் தன் வேண்டுகோளுக்கிணங்க வழக்குத் தொடுத்தமையால்தான், அன்றைக்கு நீதிமன்றம் சென்றமையால்தான் அனா இறக்க நேரிட்டது என்கிற குற்றவுணர்ச்சி அவளுக்கிருக்கிறது.

இதுதான் My Sister's Keeper
ன் கதை.

ஒரு தேவைக்காக வடிவமைக்கப்படும் குழந்தைகள், அப்படிப்பட்ட ஒரு தெரிவை (சில பல காரணங்களுக்காக) செயற்படுத்தும் பெற்றோர் என்பன பற்றித் தொட்டுச் செல்கிறது இப்புத்தகம். கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் படைத்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. கதைக் கரு சற்றே வித்தியாசமாய், சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கிறது. ஆனாலும் ஆசிரியர் எங்கும் தன் முடிவுகளை (இறுதிப் பகுதி தவிர்த்து) வாசகர் மேல் சுமத்தவில்லை. மாறாக வாசகரை சிந்திக்க வைக்கிறார். இதனை வாசிக்கையிலேயே கேள்விகள் எழுகின்றன. ஒரு குழந்தைக்கு உடல்நலமில்லையென அவளுக்கு உதவவென்று மட்டுமே பெற்றெடுக்கப்படும் மற்றக் குழந்தை. மூத்த பிள்ளையின் நலன் சாராமல் இந்தப்பிள்ளையின் இருப்பு? மூத்தவள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனால் குடும்பத்தில் இவளது இடம் என்ன? கதையிலேயே இவற்றுக்கான விடைகளை ஓரளவில் காணலாம்.

தேவைக்காக உருவாக்கப்படும் திசுக்கள்/கருக்கள்/குழந்தைகள் என்பதும் ஒரு நோயாளிக்கு எந்தக் கட்டம் வரை & at what/whose expense சிகிச்சை வழங்குவது, அதை யார் தீர்மானிப்பது என்பதும் முடிவற்ற விவாதமாயே நீள்கின்ற விதயங்கள். வார்ப்புரு போல இந்த சூழ்நிலையில் இன்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சொல்ல முடியாது ஏனெனில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கப்படுகின்ற முடிவுகளும் அவை எடுக்கப்படுவதன் பின்னணியும் வேறுவேறாகத்தான் இருக்கும்.

கதைக்கு முடிவென்று ஒன்று இருக்க வேண்டுமென்பதற்காக அமைத்தது போன்று, மரணத்தைத் தொடும் நோயாளிக்கான சிகிச்சை என்கிற விதயத்தில் ஆசிரியரின் கருத்தோ என்ற ஐயத்தை எழுப்புகிறது போ அமைக்கப்பட்ட முடிவு - கேற் சுகமடைவதும் அனா இறப்பதும் - செயற்கையாகத் தோன்றுகிறது.

மிகச் சிறந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும், வாசிப்பிற்குகந்ததாய் - சிந்தனையைத் தூண்டுவதாய் எனக்கு
இந்தப் புத்தகம் தோன்றியது.

சுடுகிற கேள்விகளும் உண்மைகளும்

- முன்னுக்குப் போகிறவன் ஈரமாயிருந்த படிகளில் சறுக்குகிறான். அப்பாடா நான் சறுக்கவில்லை. நிம்மதி.
- என்னது! ராஜ் வீட்டில் களவு போனதாமா? நல்ல காலம், எங்களுக்கு ஒன்றும் அப்படி நடக்கவில்லை. நிம்மதி.
- சித்தியும் பிள்ளைகளும் பாதுகாப்பான பகுதிக்கு வந்து விட்டார்கள். இனிமேல் பயமில்லை. நிம்மதி.

இப்படி எத்தனை உதாரணங்கள்? எங்களுக்கோ, உடனடி வட்டத்துக்கோ நடக்காத வரையில் அப்பாடா! என்று நிம்மதிப் பெருமூச்சு எத்தனை தரம் விட்டிருப்போம். இப்படி நினைப்பது சரியானதுதானா? எங்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் ஏதேனும் ஒன்றென்றால் பதறிப்போகிற அளவுக்கோ அல்லது அதில் ஒரு அரைவாசியளவு கூடவோ வேறு எவருக்கும் வருத்தப்படுவதில்லையே.. ஏன்? ஏன் அப்படி நினைக்கிறோம்? அப்படி எங்களை நினைக்கத் தூண்டுவது என்ன?

சக மனிதரையும் தன்னைப் போலவே உணர வேண்டுமல்லவா? எது சரி எது சரியல்ல என்பது தனிப்பட்ட வரைவுகளுக்கு உட்பட்டது என்றாலும், பொதுவில் வைக்கக் கூடிய பல இயல்புகள் உண்டுதானே? அவற்றில் "சரியற்ற" ஒன்றாய் ஏன் 'சக மனிதரின் (எவராயினும்) துன்பத்தை அவ்விதமே பார்க்காமல், எங்களுக்கு இன்னும் ஏற்படாத ஒன்றாய்ப் பார்த்து நிம்மதி கொள்வது' இருப்பதில்லை? இதுதான் சுயநலம் எனப்படுவதா? சுயநலமென்றால், அது உயிர் என்றதொன்று உருவாகினதோடவே தோன்றியிருக்க வேண்டும். இனத்தின் விருத்திக்கும், தொடர்தலுக்கும் சுயநலம் அவசியமே. ஆனால் இனத்தின் தொடர்ச்சிக்கு/விருத்திக்குச் சவாலான/ஆபத்தை விளைவிக்கும் ஒரு சூழ்நிலை இல்லாதவிடத்தில் சுயநலத்துக்கு ஏன் இடம்? "நல்லகாலம்-எங்களுக்கு-நடக்கவில்லை" என்பது, ஒரு அடிப்படையான, தன்னிச்சையான உணர்வா?

சக மனிதன் வழுக்கி விழுந்து நோவதும், களவு போனால் எப்படியிருக்கும் என்பதும், சித்தி அனுபவித்ததைப் போன்றே இன்னும் மற்றவர்கள் அல்லற்படுவார்கள் என்பதும் என்னிடமிருந்து மிகக்குறைந்த பட்சம் ஒரு ஒத்துணர்வையோ அல்லது சித்திக்கு இருந்தது போன்று மற்றவர்களின் பாதுகாப்புக்காக (ஒன்றையும் அது சாதிக்காதெனினும்) கவலையையோ, அதற்கு ஆவன செய்வதோ பற்றிய சிந்தனையாகவோ இல்லாமல், எனக்கும் எனது நெருங்கின வட்டம் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையில்லை என்றதுடன் நிம்மதியாக உணரத் தலைப்படுவது எனக்குக் குற்றவுணர்ச்சியையே தருகிறது. நான் என்ன செய்யட்டும் அதைப் போக்கிக் கொள்வதற்கு? ஏனையவர்களையும் என்னைப் போலவே ஏன் பார்ப்பதில்லை? அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது. கொடூரமான சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. (உணர்வுகள் மரத்துப் போக ஆரம்பிப்பது இப்படித்தானா?)

(ஒவ்வொருமுறையும் இறப்புகள் குறித்தும் காயங்கள் தாக்கங்கள் குறித்தும் பேசப்படுகிற பொழுதில் உணராத வலிகள் ஏன் சிற்சில ஒற்றைக்கணங்களில் தம் கோரம் காட்டிப் போகவேண்டும்? டிசேயின் பதிவொன்றில் சில மரணங்கள் மட்டுமே உலுக்குவதைப் பற்றியும், (பெயரிலியினது என்று நினைக்கிறேன்) எங்கேயாவது செய்தியில் குண்டுவெடிப்பில் பத்துப் பேர் இறந்தார்களென்று சொன்னால் அவ்வளவுதானா, ----ம் ஆண்டு ----இல் நடந்த குண்டு வெடிப்பில் இத்தனைபேர் கொல்லப்பட்டார்களென்று கணக்குச் சொல்வதுமாய் இருக்கிற எங்களைப்பற்றியும் வாசித்தது, சொல்லத் தெரியாத ஒரு வேதனையான உணர்வுடன் நான் மட்டுமே இப்படி உணர்வதில்லை என்கிற சங்கடமான நிம்மதியையும் அங்கீகரிப்பையும் தந்தது.)

இப்படியெல்லாம் உணர்வது எனக்கே என்னை ஒரு கொடூரச்சியாய்க் காட்டுகிறது. என்னைக் குறித்து எனக்கே பயமெழுகிற வேளைகளிலும் "நல்லகாலம்-நாங்கள்-தப்பிவிட்டோம்"என்கிற அற்ப நிம்மதி (தொலைந்து போகாமல்) தலையெடுக்கிற நாளிலும் எவ்வளவு தூரம் நான் ஒரு மனிதப்பிறவியாக இருக்கிறேன் என்பது விளங்கித் தொலைக்கிறது. விளக்கம் அழகானதாக இல்லை என்பதைத் தவிர சொல்லிக் கொள்வதற்கு வேறில்லை.

இருப்பதும் இல்லாமலிருப்பதும்


அது, இருப்பது, இருக்கிறது;
அது, இல்லாமலிருப்பது, இல்லாமலிருக்கிறது;

ஆனால், அது, இல்லாமலிருப்பது, இருக்கிறது என்பதல்ல;
அதைப்போலவே, அது, இருப்பது, இல்லாமலிருக்கிறதுமல்ல.

அம்மா வைத்திருந்த verse புத்தகம் போலே நானும் பள்ளிக்கூடக் காலங்களில் வைத்திருந்தேன். பகிடியான (autographல் எழுதக்கூடிய மாதிரி) சின்னச் சின்ன ஆங்கிலக் குறும்பாக்களையும் பிடித்த கவிதைகளும் தன்னில் கொண்டது. வாசித்தது பிடித்தால், உடனே அந்தக் கொப்பியில் எழுதிவிடுவேன். ஆனால் என்னுடையதிற்போல, உள்ள கஞ்சல் குப்பைகள் அவவின் புத்தகத்தில் காணக் கிடையாது. கிறிஸ்தவப்பள்ளிக்கூடத்தில் படித்ததன் பாதிப்புகள் ஆங்காங்கே தெரியும். பூக்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும், அவ வாசித்துப் பிடித்த கவிதைகளென்று அந்தக்காலத்து தடிப்பமான அட்டை கொண்ட கொப்பி.

நண்பர்கள்/வேண்டியவர்களின் பிறந்த நாட்கள் கடைசித் தாளில் சீராக எழுதப்பட்டிருக்கும். என் கொப்பிகளின் கடைசித் தாட்கள் போல் முகம் தெரியாத கிறுக்கல்கள் அம்மாவின் கொப்பியினை ஆக்கிரமித்தில்லை. அசிங்கமாக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை மூலைகள் மடியாமல் பள்ளிப்புத்தகங்களோ குறிப்பேடுகளோ இருந்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சபதமெடுத்துக் கொள்வேன்.. மூலை மடியாமல் பாவிப்பது என்று. ஒரு மாதம் போதும் எனக்கு, தோல்வியைக் காட்ட. மடிந்த மூலைகளை நிமிர்த்தும் போது என்னவோ செய்யும். புத்தகம் அழுகிறாற் போல ஒரு பிரமை. அதற்காகவே என்ன செய்தேன், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டையிலும் "மூலை மடியாமல் கவனமாகத் திருப்பவும்" என்கிற பொருள் வர எழுதி ஒட்டினேன். பழக்கம் குறைந்து இல்லாமலே போனது. அம்மாவின் கொப்பியைப் பற்றி ஆரம்பித்து சுயபுராணம் பாடுறேன்.. :O)

எத்தனையாம் வகுப்பிலிருந்து வைத்திருந்தாவோ தெரியாது, ஆனால் சிறு வயதிலேயே ஆரம்பித்திருக்க வே
ண்டும். சிறு வயதிலிருந்து படிப்படியாக அவவுடன் கூடவே அவவின் எழுத்தும் வளர்ந்து மாறி வருவதை அழகாக அவதானிக்கலாம். வளர்ந்த பின்னால் எங்களுக்குக் காணக் கிடைக்கும் தோற்றத்தை/வாழ்வை விடவும் முந்தியதொன்று அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாயத் தெரிந்த ஒன்றானாலும் அதை நேரே பார்த்து உணருமாற் போல இருக்கும், பக்கங்களைப் புரட்டப் புரட்ட. கடைசிக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்தும் அவவின் இப்போதைய எழுத்தும், ஒரு பருவத்தில் சேர்ந்திருந்து சில காலப்பிரிவின் பின் கண்டாலும் அடையாளம் காணக்கூடியதாயிருக்கிற தோழியின் முகச்சாயல் போல நிறையவே ஒத்திருக்கிறது. மாறாத எழுத்துக்களால் பக்கங்களை நிரப்பும் எவரைக் காண்பினும் எனக்கு அதிசயமே. ஒரு வரி எழுதும் போது இருக்கும் எழுத்து அடுத்த வரி எழுதும் போது மாறிவிடும். 10 வரியில் குறைந்தது ஏழு விதமான எழுத்துக்கள் இடம்பிடிக்கும். இந்தப்பழக்கம் காரணமாயோ என்னவோ , ஒருவருடன் பேசும் போது அவரைப்போன்றே பேச முற்படும் தன்மை போல, ஒருவரது எழுத்தையும் எழுதிப் பார்த்து ஓரளவுக்கு செய்யக்கூடியதாயும் இருந்தது.(கையொப்பங்களைப் "பிரதி" செய்து பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டதுதான்..நம்புங்கள்!!)

ஏனோ காலையில், அம்மாவின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது. வாசித்த முதற் சில தடவைகள் விளங்காமல் குழம்பினதும், மண்டையில் ஏறினதும் ஏற்பட்ட சந்தோசமும் ஞாபமிருக்கின்றன. கொஞ்ச நாள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் என்னாலான மொழி பெயர்ப்பில், மேலே.

ஆங்கில மூலம்:

That, that is, is;
That, that is not, is not;
But that, that is not, is not that that is;
Nor is that, that is, that that is not.

பெண்பால் என்ன??

காரிலே ஏறி, வானொலிக் குமிழைத் திருகினால், எங்கேயோ எப்பவோ கேட்ட ஒரு ஹிந்திப் பாடல் ஒலித்தது .. மே ஷாயர் தோ நஹி.(நான் கவிஞன்/புலவன் இல்லை) மகர் ஏசி ஹசி....என்று ஆரம்பித்து ஷாயரீ ஆகயீ (கவிஞை/கவிதாயினி வந்துவிட்டார்) என்று முடியும். ஒரு தடவை டிவிடியில் பார்த்தபோது அர்த்தம் போட்டதில் தெரிந்து கொண்டேன்.

நேற்று முழுக்க யோசித்தும் பிடிபடவில்லை. நீங்களாவது சொல்லுங்க.. ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் / தோழன், தோழி, தோழர் ..இப்படி, கவிஞனுக்கும் பெண்பால் & பொதுப்பால் தெரியும். ஆனால் புலவனுக்கு??

புலவர் என்பது பொதுப்பால். பெண்பால் என்ன?

என்னத்தைச் சொல்ல!


நான் சொல்லவில்லை.. பத்திரிக்கையொன்றில் வந்திருந்ததாய் நண்பரொருவர் அனுப்பியிருந்தார். குஞ்சு, குட்டி பற்றிக் கூடவா படத்துக்கு "விளக்கம்" எழுதியவருக்குத் தெரியாமல் போய்விட்டது? :O(

01 - வரம்

முக்கியமான ஒராள் சொன்னதின் படி கீழுள்ள disclaimer போட்டு ஆரம்பிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer:- பின்வருவது, கதை சொல்வதில் எழுதுவதில் செய்து முடித்த முதல் முயற்சி.
------------------------------------------------------------------------------------------------------------------------

காலம்: ஏதோ ஒர் காலம்..
இடம்: கிளிமஞ்சாரோ மலை உச்சி.

எல்லாக் கடவுளரின் வீடும் அங்கேதான். இதுவரைக்கும் மக்காவும், ஜெருசலேமும் கைலாயமும்தான் புத்தகயாவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஒரே களேபரமாயிருக்கிறது. சிவனையும் விஷ்ணுவையும் காணோம். எங்கேயென்று தெரியாமல் பத்தினிப் பெண்களின் இலக்கணப்படி பிலாக்கணம் பாடி மூக்கைச் சிந்துகிறார்கள் பார்வதியும் இலக்குமியும். அவர்களுக்கு மரியாளும் சரஸ்வதியும் ஆறுதல் சொல்ல, அல்லாவும் தாடியைத் தடவினபடி யேசுவும் மற்றையவர்களோடு ஆலோசிக்கிறார்கள். சித்தார்த்தன் முருகனிடம் மயில் மணிக்கு என்ன வேகத்தில் போகும் என்று சன்னக்குரலில் விசாரிக்கிறான்.


அதே சமயத்தில், இன்னுமோரிடத்தில்...

சிவன் இப்போ கைதி. ஒருத்தர் பிடித்துக் கொண்டு போய்ப் பொதுச் சிறையில் அடைத்துவிட்டார். தொடர்ந்த காவல். ஒன்றையும் இந்த மனிதர்களுக்கு முன்னால் நின்று நினைத்துக் கொள்ள முடியவில்லை. எதிரிலிருப்பவன் மனதில் என்ன ஓடுகிறது என்று தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அதைச் செய்யலாமென்று கண்டுபிடிக்குமளவு திறனுடையவர்களாக மனிதர்களைப் படைத்ததை எண்ணி பிரம்மனின் மேல் அடக்கமுடியாத கோபம் வந்தது சிவனுக்கு. அவருக்கான காவலாளி அதை அறிந்து சிரித்துக் கொண்டான். சிவன், ஆசுவாசப் படுத்திக் கொள்ள வற்றிக் கொண்டு போகிற தண்ணீர் கொஞ்சம் தலையிலிருந்து குடித்துக் கொண்டார்.

தண்ணீர் குடிக்கையில்தான் அவருக்குக் கூடவே கைதான விஷ்ணுவின் ஞாபகம் வந்தது. "என்ன செய்கிறானோ" என்று நினைத்துக் கொண்டதுக்கு, காவலாளி, "விஷ்ணுவா, அவன் செத்துப் போய்விட்டான்! காலையில் விசாரணைக்குக் கூட்டிக் கொண்டு போக ஆள் வந்து பார்க்கையில்தான் நாங்களே தெரிந்து கொண்டோம்" என்றான். "அடப்பாவமே..இந்த மனிதர்கள் பிடித்த நாளிலிருந்து தண்ணீரோ உணவோ தரவில்லையே.. கைவரிசை காட்டிச் சாப்பாடு வரவழைத்தாலும் அதையும் பிடுங்கி விடுகிறார்கள். நானாவது தலையிலிருந்து வருவதைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.. அவனென்ன செய்வான் பாவம்!" என்று பரிதாபப்பட்டுக்கொண்டார். என்னதான் இருந்தாலும் மச்சான். அதுக்கும் மேலாக கடவுள் வியாபாரத்தில் ஒரு முக்கிய பங்காளி. அப்படிப்பட்ட விஷ்ணு செத்துப் போனானே என்று சிவனுக்குக் கண்ணீர் வந்தது.

ஏன் இதை நடக்க அனுமதித்தாய், ஏன் அதைப் படைத்தாய் என்று சரமாரியாகக் குறுக்கு விசாரணை. இருக்கிற சடைமுடியெல்லாம் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒன்றுமே பேசவில்லை. ஒன்றுமே நினைத்துக் கொள்ளாமலிருக்கவும் பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. இரவாகிற்று. மனிதர்கள் அடித்த அடிகளில் சிலது பட்டு பாம்புகளெல்லாம் உஸ்புஸ்சென்று சீற ஆரம்பித்திருந்தன. காவலாளி உறங்கி விட்டான் என்று உறுதி செய்துகொண்டு தப்பிக்கும் வழி பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார் சிவன். எதுவும் சரி வராது என்று தெரிந்தது. நினைத்துக் கொண்டதைச் செயற்படுத்த முடியாது. மனதிலிருப்பதெல்லாம் தெரிந்து விடுகிறது.

மனதிலே திடீரென ஒரு எண்ணம். இத்தனை நாட்களிலும் இல்லாமற் போன வரங்களால் படாரெனச் சரிந்திருக்கக் கூடிய கடவுள் நிறுவனப் பங்கின் விலை நிலவரம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அல்லா யேசு பிரம்மன் மூவரும் நிலையை எப்படிக் கையாளுவார்களோ என்று கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. சித்தார்த்தன் சிறுபிள்ளை, கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. வாகனம் கூட இல்லை அவனுக்கு. கடவுள் நிறுவனம் வர்த்தகக் காப்புக்காய் எடுத்த முடிவு இப்
டியொரு இக்கட்டில் உதவக்கூடுமென்று அவர் யோசித்திருக்கவில்லை. தனக்கு முன்னாலிருந்த அல்லாவிடமிருந்து தான் பொறுப்பேற்றுக் கொண்டது போல அடுத்ததாய் இயேசு பதவிக்கு வருவார் என்பதும் இவ்வளவுநாள் கட்டிக்காத்த நிறுவனம் அழியாதென்பதும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. "பிரம்மன் குட்டையை குழப்பினால்?" என்கிற சந்தேகம் எட்டிப்பார்த்து புளிக்கரைசலாய் வயிற்றை மொத்தமாய் நிரப்பிற்று. அதைப் போக்க, எப்படிக் கைதானோம் என்று நினைத்துப் பார்த்தார் சிவன். எல்லாம் இந்த தவமிருப்பதைக் கண்டதும் வரும் புல்லரிப்புத்தான் காரணம். பூரித்துப் போய் வரம் கொடுப்பதை இனி நிறுத்தவேண்டும். விளம்பரம் போனாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். உடனேயே சிரிப்பும் வந்தது. இந்தச் சிறைக்குள்ளிருந்து எப்படி வெளியில் போவது, எப்படி வரம் கொடுப்பது!! பிடித்துக் கொண்டு வந்தவனுக்கு என்ன வரம் கொடுத்தோம்..யோசிக்கலானார். ஆ! ஞாபகம் வந்து விட்டது.. சும்மா வரமா கேட்டான்.. "எப்போது நான் அழைத்தாலும், நான் திருப்பி அனுப்பும் வரை என்கூடவே வரவேண்டும். அப்படி நீர் என்னுடன் இருக்கும் போது, நாம் எங்கிருக்கிறோம் என்பது வேறு யாருக்குமே தெரியக் கூடாது" என்றெல்லவா வரம் வாங்கினான். அவன் கெட்டித்தனத்தை மெச்சிக் கொண்டார் சிவன்.

வரம் கொடுத்து மாட்டுப்படுவது இருவருக்குமே வழமைதானென்றாலும், அவருக்குப் புரியவில்லை எப்படித் தான் விழுந்த அதே வலையில், அதே நேரத்திலேயே விஷ்ணுவும் மாட்டினானென்று. உரத்து யோசித்தார். சீறியபடியே பாம்பு, "மடச்சிவனே, மனிதன் முன்னமொருமுறை சும்மா பாட நீரும் எங்கோ கற்பனையிலிருந்த படி ஆகட்டும் என்று சொன்னதை மறந்தீரோ" என்றது. சிவனுக்கு அப்பவும் புரியவில்லை. தண்ணீர் வறண்டுபோன தலையைத் தடவிய படியே யோசிக்கிறார். பாம்பே பாடிக்காட்டிற்று: "இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்". அப்படி வரம் கொடுத்ததையும், சிறைப்பிடித்தவனுக்கு கொடுத்த வரத்தில் தான் தப்பிக்க ஓட்டை வைக்காமல் போகவும் வைத்த தன் மறதியை (அல்லது, பெயர்ந்து போன அறளையை) நொந்துகொண்டார். multi tasking & mutliple desktop விளையாட்டைத் தம்மிடமே காட்டிய மனிதனை நினைத்து சிவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஏற்கெனவே அரக்கர்களுடன் போரிட்டுத் தளர்ந்திருந்த உடல். தண்ணீர் தண்ணீ ரென்று அலறினார். யாருக்கும் கேட்கவில்லை. சிவனும் செத்துப்போனார்.

ஏன்?எப்படி?உங்களுக்குமுண்டா?

குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.

````````````````````````````````````

உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.

போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல"
என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.

இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.

இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?

மழையின் ஆறு

கூப்பிட்ட பொடிச்சிக்கு நன்றி.

மதி தனது ஆறுப்பதிவில் சொன்னது போல, இந்தப்பட்டியல் இந்தக்கணத்துக்குரியதுதான். நாளைக்குக் கேட்டால் கட்டாயம் சற்றேனும் மாறியிருக்கும். கீழிருப்பவை எந்தவித ஒழுங்கிலுமில்லை. முதலாவதாக இருப்பது முதலாவதாயோ கடைசியா இருப்பது கடைத் தேர்வாகவோ இல்லை. வேண்டுமானால் ஞாபகம் வந்த ஒழுங்கென்று வைத்துக் கொள்ளலாம்.


பிடித்தவற்றில் சில
1. மென்மையான தூறலோ பேரிரைச்சலோ - மழை.
2. மழைக்கு இதமாய் வாழ்த்து மடல் (நன்றாக ஆக்குகிறேனென்று சொல்லி அதை அசிங்கமாக்குவதைப் பற்றிப் பேசப்போவதில்லை :O\ ) செய்தல் அல்லது ஒரு புத்தகத்தை யன்னற்கட்டில்/யன்னலருகில் இருந்து வாசித்தல். ஏலவே வாசித்து முடித்த ஒன்றானால் எழுமாறாகப் பொறுக்கிய ஒரு பக்கத்தை வாசித்தல் - எனக்கு மட்டுமே என்று நினைத்திருந்த பழக்கம் இன்னொருவருக்குமுண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. வியந்து கொண்டேன்.
3. பயணிப்பது. சைக்கிளுக்குத் தனீ இடம்
4. நண்பர்களுடன் வெட்டி அரட்டையாய் இல்லாமல் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து விதயங்கள் பேசுவது.
5. பெயர் தெரியாமல் ஆரம்பம் தவறவிட்டுப் பார்த்துப் பிடித்துப் போகிற அந்தப் பின்னிரவுப் படப்பெயரின் தேடல்
6. வீணை வாசிப்பு



பிடித்த இசை/இசையமைப்பாளர்
1. SBS வானிலை அறிக்கை காட்டுகையில் போடுகின்ற இசை - அநேகமாக. இதில் இந்த மாதம் குறிப்பாகப் பிடித்தது: மாலி. இத்துடன் ABC போடுகின்ற குறும்பட (என்னவென்று வகை பிரிக்கத் தெரியவில்லை) இசை
2. ஷ்யாமாண்ணா - விரைவில் உடனடிச் சூழல் தவிர இன்னும் நன்கு அறியப்படுவார் எனும் நம்பிக்கையுண்டு. எனது பதின்மப்பருவத்தில் நிகழ்ந்ததுக்கெல்லாத்துக்கும் ஒரு பின்னணி இசையாய். (என் பாட்டு இன்னும் ஞாபகமிருக்கிறது yay!!)
3. பாத்திய - சந்துஷ்
4. இளையராஜா/ஏஆர் ரகுமான்
5. என்னையறியாமல் அசைய வைக்கும், கரைக்கும் எதுவும்
6. யானி - இன்னமும் நீட்டுத் தலைமயிரின் வசீகரிப்புப் போகவில்லை என்று அம்மா சொல்லிக்கொள்ளக்கூடும்!! ;O)


எப்போதும் சிரிக்க வைப்பவர்கள்/உற்சாகப்படுத்துபவர்கள்/சும்மா பேசினாலேயே ஆசுவாசப்படுத்துபவர்க
ள்
1.
ண்ணன்
2. சஷி அண்ணா
3. அம்மா
4. ஷாமினி
5. மிஸிஸ் ஜோண்
6. ஷகி


பாதிப்பவர்கள் / பார்வை சீரமைப்பவர்கள் (தொடர்ந்தும் நான் கற்
றுக்கொண்டிருப்பதால் இறந்தகாலத்தில் போட யோசிக்கவில்லை)
1. அம்மா
2. பென்னா (இவரெழுதி, கொதியில் நான் கிழித்துப் போட்டு அம்மா ஒட்டி வைத்திருப்பதை அனுப்பச் சொல்ல வேண்டும்) :O)
3. ரஞ்சன் அண்ணா & சாந்தி அக்கா (என் பதின்ம வயதுப் பார்வைகளை - அவர்களறியாமலே - மாற்றியதில் இத்தம்பதியருக்கு முக்கிய பங்குண்டு)
4. நண்பர்கள் சிலர்
5. வலைப்பதிவர் ஓரிருவர்
6. ரீச்சர்


வாசித்தவற்றில் பிடித்தவை
1. மணல் வீடு, அக்னி நட்சத்திரம்
2. யாரெழுதினதென்றோ பெயரோ தெரியாமல் ஆனந்தவிகடனில் வந்து, மனிங் ப்ளே
ஸ் சம்சன் புத்தக நிலையத்தில் கட்டி வைத்திருந்த அந்தப் புத்தகம். அது உண்மைக்கதையென்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.
3. Kite Runner
4. The Alchemist
5. தமிழில் ஈழமுரசோ/உதயனோ ஏதோவொன்றில் வந்து, வாசித்த விலங்குப் பண்ணை
6. The Gate
....ஏதோ இரண்டு சொன்ன மாதிரி இருந்துது..அதற்கிடையில் ஆறா?


பிடித்த திரைப்படங்க
ள்
1. அஞ்சலி
2. ஹிமாலயா
3. ப்ளாக்
4. மறுபடியும்
5. பெயர் மறந்து போன எத்தனையோ ஆசிய/சுவீடிஷ்/அரபு மொழிப்படங்கள். குறிப்பாக, மூன்றாம் பரிசான சப்பாத்துக்காக ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவதா வந்த சிறுவனின் ஏமாற்றம் பற்றினது..
6. பாட்டுகளுக்காக & பின்னணி இசைக்காகவே பிடித்த படங்கள்.



மறக்காத இடங்கள்
1. பாட்டிவீடு
2. பெரியம்மா வீட்டுப் பின் முற்றம்
3. கம்பகா
4. ரீச்சர்வீட்டுக் கொய்யாமரமும், மாமா மத்தியானம் படுக்கிற கொட்டிலும்
5. பள்ளிக்கூட விடுதி/கடல் தெரியும் வகுப்பறைகள்
6. மனம் குழம்பினபோது போய் சிலதடவைகள் உட்கார்ந்த அந்த மத்தியான வேளையின் சுடுபாறை
...........இதுவும் ஆரம்பித்ததுமே முடிந்துவிட்டதே!!



போக விரும்பும் நாடுகள்(இலங்கை தவிர்த்து):
1. இந்தியா
2. அயர்லாந்து (அந்த அக்சன்ற்றுக்காகவும், பச்சைப்பசேலுக்காகவும்)
3. கிரேக்கம்
4. கம்போடியா
5. திபெத்
6. நோர்வே (இந்த முறை ஒழுங்காப் பார்க்க)



திருத்த வேண்டிய (என்னைப்பொறுத்தவரை) கெட்ட பழக்கம்/மாற்ற வேண்டியது
1. செயல்கள் தள்ளிப்ப்போடுவது
2. பல நேரங்களில் நேரம் தவறுவது
3. ஓம் ஓமென்று சொல்லிச் சொல்லியே ஒன்றைச் செய்யாதிருப்பது
4. குறிப்பறியாமை
5. எடுத்ததை முடிக்காமல் இன்னொன்றுக்குத் தாவுவது
6. அலட்டுவது



செய்ய வேண்டுமென நினைத்திருப்பவை
1. இன்னும் படமெடுக்க
2. நீச்சல் கற்றுக் கொள்ள
3. மலையேற
4. இன்னும் நிறைய வாசிக்க
5. இதுவரைக்கும் இல்லாமலிருக்கிற ஒரு "பெரியாள் உரையாடல்" (அல்லது ஒரு கடிதமேனும்) - என் அண்ணாவுடன்
6. லொஜிக் உதைத்ததில் நின்று போன "படைப்பை"த் தொடர



தொடருங்கள் என்று அழைக்க விரும்புவது:

ஹீரோயினி!

ஒரு ஊரிலே... இல்லை, பல ஊர்களைக் கொண்டதொரு பெரிய ஊரிலே ஒரு ராணி இருந்தாவாம். இருந்தாவாம் என்ன.. இருக்கிறாவாம். அவ கனவு காணுறதிலதான் ராணியாம். என்னது? இந்தக்கதை வேண்டாமா? பிறகு வேற கதை சொல்லிறன். இன்டைக்கு இந்தக் கதைதான்.

என்னுடன் கூடப்படித்த தோழிக்கு 21ம் பிறந்தநாளாம். கொண்டாடுறாவெண்டு போறன். அங்கே போனால் பள்ளியில் ஒரே வகுப்பை என்னோட பகிர்ந்து கொண்ட நண்பிகள். (ஒரு நண்பனையும் காணேல!!) எங்கள விட ஒரு வகுப்புக் கூடின ஆட்களில 4 பேர். அதில ஒராளுக்கு என்னைத் தெரியும். நானும் அவவும் ஆளையாள் கண்டதும், தன்னுடன் இருந்த ஆட்களுக்கு என்னை அறிமுகப்படுத்துறா. ஆனா வேறென்னவோ பெயர் சொல்லி. என்னடா இது என்று யோசிக்கிறேன். எனக்குப் பெயர் மாற்றினது எனக்கே தெரியவில்லையோ??

சரி, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம் என்று போகிறேன். கையிலே அன்பளிப்புகளொன்றும் இருக்கவில்லை. (நான் போறதே பெருசு. இதுக்குள்ள அன்பளிப்புத் தேவையில்லைத்தானே!!). ஒரு காவிப்பூச்சுள்ள கட்டடம். (கட்டின இடமெண்டா கட்டிடம் தானே..ஏன் கட்டடம் என்று எழுதுறோம்?? ஒருவேளை நான் மட்டுந்தானோ தாடி போர்வைக்கு வெளிலையா உள்ளுக்கா என்ட கதை மாதிரிக் குழம்பிட்டன்??)

கட்டிடமெண்டதும் பெரிசா இஞ்ச பிள்ளையிட முதலாம் பிறந்த நாளுக்கு வாடகைக்குப் பிடிக்கிற ஹோல் மாதிரியென்று யோசிக்காதீங்க... அந்தக்காலத்து இலங்கை பஸ் ஸ்டாண்ட் சீமெந்தால கட்டியிருப்பாங்களே..அதுமாதிரி ஒரு சின்ன இடம். அங்கே மற்றத்தோழிகள் சுற்றிவர இருக்க இவ சிதிலமான கொங்கிறீற்/சீமெந்துத் தரையில இருக்கிறா. ஓட்டுக் கூரை. அங்கே போனாலும் ("லும்" என்டுறது ஏனெண்டு கொஞ்சத்தில சொல்றன்) என்னைக் கண்டு கொள்வார் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதிருந்த அதே “குழுவில சேராததால்” வாற (நானேன் சேராம இருக்கப் போறன், “சேர்க்கப்படாததால் வாற” என்டு வாசிக்கவும்) ஒரு பாதுகாப்பின்மை (என்ன பணியாரப் பாதுகாப்பு? ஆசிரியையிட்ட தனியப் பேச்சு வாங்கத் தேவையில்லை! அவ்வளவுதான்!!) அல்லது ஒரு தனிமையா/தாழ்வா உணர்ந்த மாதிரி (கனவுக்குத் திரும்புறன். நீங்களும் வாங்க) உணர்ந்தன். சரி, இவர்கள் கதைக்கப் போறதில்லை என்டபடியால இறங்கி அந்தக்கட்டிடத்தைச் சுற்றினன். இவங்க இருந்த இடத்துக்கு இடப்பகுதியில ஒரு கதவு. சரி, கொஞ்ச நேரம் இந்த அறைய ஆராய்வம் என்டு போனா அது ஒரு கழிப்பறையாம். அதுவும் பழைய தரைச் சாயலில்! வாளியொண்டு ஒரு மூலையில் கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கு. அதுக்குள்ள நிக்கத் தேவையில்லையென்று வெளியில வாறன்.

இப்ப, என்னைக் கண்டிட்டு, நண்பிகள் கூட்டம் கூப்பிடுது. (கழிப்பறைக்குள்ள போய் வாறதுதான் தகுதியா அல்லது முன்னம் கண்ணுக்குத் தெரியாம இருந்து அதுக்குள்ள போயிட்டு வந்த பிறகு தெரியிறனா என்டு எனக்கு விளங்கல்ல). வாழ்த்துறன் என்ட தோழியை. அப்பத்தான் (கனவிலையே) யோசிக்கிறன், என்னண்டு இவக்கு 21 வயசா இருக்கும்? இந்த வருசம் n வயசாயெல்லா இருந்திருக்கோணும் என்டு.

அப்பிடி என்ட மூளை கொஞ்சம் வேலை செய்ய எத்தனிக்கையில, கீயா மாயாவெண்டு ஒரே சத்தம். என்னெண்டு பாத்தா காலிமுகத் திடல்ல மாதிரி படிக்கட்டோட உரசி கடலலையடிக்குது. விளிம்புக்குப் போய் நின்டு பாக்கிறன். பெரியதொரு அலையெழும்பி (கடற்கோள்?) வருது. ஆனா இன்னும் கரைக்கு வரயில்ல. அலை எழும்பின படி நிக்க, அதுக்குப் பின்னாலும் முன்னாலும் என்டு மாறி மாறி (தொ.கா.வில, படம்பிடிச்ச எதையாவது, இன்னொண்டோட ஒப்பிட க்ராபிக்ஸ் பயன்படுத்திற மாதிரி) ஒவ்வொரு நகரங்கள் தோன்றுது. என்னெண்டா, அலையிட உயரத்தோட அந்த நகரங்களில இருக்கிற கட்டிடங்களின்ட உயரத்தை ஒப்பிட்டு, எது உயரமா இருக்கோ, அதுக்கேத்த மாதிரி உயரமானதைப் பின்னுக்கும், கட்டையானதை முன்னுக்கும் படபடவெண்டு மாறி மாறிக் காட்டுப் படுது. (ஆர் காட்டினதெண்டு எனக்குத் தெரியாது!!). பாத்தால் அலை கரைக்கு வருது (பின்ன, எவ்வளவு நேரந்தான் அசையாம க்ரபிக்சுக்கெண்டு நிற்கிறது).

இப்பிடி அலை வந்தா தடுக்கவெண்டு(!!) ஒரு திரை மாதிரி ஒன்று வைச்சிருக்கிறாங்க. கடல்ரோந்துப் படையினரும் அவங்கட விசைப்படகில வந்து ஸ்டைலா ஒரு வளைவடிச்சு நிண்டாங்க. திரைய இறக்கோணும். ஒராள் முயற்சிக்கிறார். அது ஒரு கம்பில சுத்தியிருக்கு. அடிக்கிற காத்தில அவரால திரைய விரிக்க முடியுதில்ல. அந்தக் கம்பிட ஒரு முனை வந்து நாங்க நிண்டு புதினம் பாக்கிற தரைக்கு வந்து "டணங்" கெண்டு விழுகுது. அப்ப ஒராள் வந்து, அந்த "டணங்"கி விழுந்ததைப் பிடிச்சு இழுக்க, திரை விரியுது. எல்லாரும் வந்து நிண்டு பாராட்டுறாங்க. ஆரையா? என்னைத்தான். ஏனா? கடல் ரோந்து வீரரே செய்யக்கஷ்டப்பட்டதை நாந்தான் செய்து திரைய விடுவிச்சது.

குறிப்பல்லாத குறிப்பு:: பாராட்டு விழாவோ ஏதோவெண்டு கனவு தொடரத் தொடங்க, விடிகாலைக் கனவு பலிக்குமெண்டு தெரிஞ்சோ அல்லது தெரியாமலோ, நான் கனவிலையாவது ஒரு VIP ஆகிறது பிடிக்காமலோ மிச்சக்கனவைக் கலைத்த தொலைபேசி அழைப்பை .........!!!

தேங்கிய சில - 3


தெருவில் அலைந்தவர்களும், பாலியல் தொழிலாளியாயிருந்தவரும், வெளிநாடு போகவென்று வந்து முகவரால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாய் நின்றவரும், பெண்போராளியென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரும், இன்னுமின்னும் எத்தனையோ சூழ்நிலைகளால் தன்னிடம் தள்ளப்பட்டவர்களைக் கொண்ட அதே "பெண்களுக்கான தடுப்பு நிலையம்".

தையல், கூடை பின்னல் போன்ற "பெண்களுக்குரிய" கைத்தொழில்கள் கற்றுத் தருகிறார்கள். அழகழாக பொம்மைகளும், ஆடைகளும் கைவினைப்பொருட்களும் நிறைந்து கிடக்கின்றன. அதனை விற்பார்களாம்.(விற்று வரும் காசு யாருக்குப் போகும்? தயாரித்தவர்களுக்கு உரிமையானது அவர்களிடமே போய்ச் சேருமா அல்லது சுரண்டலா என்று இன்றைக்குத்தான் கேள்விகள் எழுகின்றன.)

நன்னடத்தை(!?)யுடையவராய், நம்பிக்கையுடையவராய் (தொடர்ந்து) காணப்படின், அலுவலகங்கள், அங்காடிகள், என்பவற்றைச் சுத்தம் செய்வதைக் குத்தகைக்கு எடுத்
துக் கொண்ட நிறுவனத்தின் மூலம் வேலைக்கனுப்பப்படுவர். அப்படி வெளியே போனவர்களில் சிலர் வேலைக்குப் போய்த் திரும்பாமல் தப்பின சம்பவங்களுமுண்டு. அப்படி நடந்தால் அவவுடன் கூடப் போனவர் பாடு அன்றைக்கு அவ்வளவுதான். அடியும் வசவுகளும் வாங்கி, வேலைக்குப் போவதிலிருந்தும் நிறுத்தப்படுவார்.

இத்தடுப்பு நிலையத்திற்கு ஒரு பக்கத்தில் தொழிற்சாலையொன்றுண்டு. அங்கே வேலைக்கு வருபவர்களுடன், மேலாளருக்குத் தெரியாமல் மதிலால் எட்டிப் பேசிச் செய்திகள் அறிவதில் ஆரம்பித்து, காதல் வயப்பட்டு தப்பியோடுவதும், காதல் முறிவடைந்தால் ப்ளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு குருதி இவர்களுக்கிருக்கும் ஆசையை, தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நடக்கும். இருக்கிற ஒரு தொலைக்காட்சியில் ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் பார்ப்பதும், ஆங்காங்கே உட்கார்ந்து கதை பேசுவதும் மட்டுமே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

வசிக்கும் சூழலில் காவலாளி தவிர ஆண்வாடையே இல்லை. என்னதான் அடைத்துக் கிடந்தாலும், மனதுக்குக் கடிவாளம் போட்டாலும், அவற்றையும் மீறி உடலின் தேவைகள் தலைகாட்டுவதில் தன்னினச் சேர்க்கையாளராகின சில பெண்களுடனும் பேசக் கிடைத்தது. மற்றப் பெண்களால் இவர்கள் ஒதுக்கப்படவில்லை. இப்பெண்களின் முதுகுக்குப் பின்னால் இவர்களைப் பற்றிக் கதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. போன பதிவில் சொல்லியிருந்த பெண்ணிடம் பேசுகையில் தன்னினச் சேர்க்கையாளரான இப்பெண்கள் குறித்து அவவின் கருத்துக்க் கேட்டதற்கு அவ "அது அவர்கள் சொந்த விசயம். எனக்கு வெறுத்தது அவர்களுக்கும் வெறுக்க வேண்டும் என்றில்லையே. உடல் தேவையை நிறைவேற்ற ஒரு வழி. அவ்வளவுதான்" என்று சொன்னதில் இருந்த முதிர்ச்சியை வழமையாக் குறுகிய கண்ணோட்டத்துடனே பாலுறவைப் பார்க்கும் எம் சமூகத்திலிருந்து வந்த ஒருவருடையது என்று நான் உணரக் கொஞ்சக் காலம் சென்றது.

மறந்து போயிருந்த இந்தத் தடுப்பு நிலையத்தில் இருக்கிறவர்களைப் பற்றின நினைவு இதை எழுதத் தொடங்கியதும் ஞாபகங்களை அசைபோட்டுப் பல கேள்விகளை எழுப்புகிறது. என் நினைவுத் திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நிலையத்தினதும் பெண்களினதும் சுகாதார நிலை என்ன? அவற்றைக் கவனிப்பது யார்?
வேலைக்கனுப்பப்படும் பெண்களினது சம்பளம் அவர்களிடம் சேர்கிறதா?
கைவினைப்பொருட்கள் விற்ற பணத்திற்கு என்ன நடக்கிறது?
வெளிவாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறார்களா?
வெளியில் வந்தால் இவர்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது?

விடை தெரியாத கேள்விகள் இன்னும் இன்னும் எழுகின்றன.

குறிப்பு: இன்னும் விரிவாக எழுதலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னுமின்னும் இந்த அனுபவங்களைப் பற்றி தோண்டித்தோண்டி யோசிக்கையில் வருகிறதெல்லாம் மனவருத்தத்தையும் எழுப்பி, என்னைப்பற்றி நிறையக் கேள்விகளையும் முன்வைக்கிறது. அவை காரணமாகச் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன்.

தூது

கீழ இருக்கிறது போலத்தான் எண்ணமோடினது, சில சமீபத்திய புகைப்படங்களைப் பாக்கக் கிடைச்சதில. வழமையா எழுதுற மாதிரி எழுத வரேல்ல. அப்பிடி இருந்திருந்தா எவ்வளவோ நல்லாருந்திருக்கும் என்டு எனக்கே தெரியுது.

(disclaimer: பின்குறிப்பை வாசிச்சுட்டு மேற்கொண்டு வாசிக்கிறதா என்ட முடிவுக்கு வரவும். )

-------------------

எனக்குள் நிறைவது தான்
அவர்களுக்குள்ளும்

எவர் கடந்து போகையிலும்
ஏற்படும் அந்தச் சிறு வெளியை
தடவிச் சென்று நிரப்பும் நாசியின் நட்பு.

இன்று என்னுட் புகுந்து வெளிவருங் காற்றே,
நாளையோ மறுநாளோ
எப்போதேனும் அவர் நாசி சேர்ந்தால்
நீ என்னுள்ளிருக்கையில்
அவர்களை நினைத்துக் கொள்வதைச் சொல்.

இத்தனை நாட்களிலும் - நான்
அவர்களைக் காணாத போதுகளிலும்
அவர்கள் என்னை எண்ணாத போதுகளிலும்
எமக்குள் நிறைந்திருந்தாய் - காற்றே
போய்ச் சொல்,
நினைவுகள் சுருங்கிய போதிலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று.

என் கண்களுக்குத் தெரியும்,
நான் பார்த்தவை - இன்று
இக்கரையில் நானும்
அக்கரைக்கு அப்பாலுமாய் அவர்களும் நிற்கையில்
தூரங் கடந்த சகபயணி
காட்டிப்போன காட்சிகளில்
முன்னை நாட்களில் - பிரிவென்பதைச்
சந்திக்காதவரை நான் கண்டவை
இன்றைய பொழுதில் வேற்றுருவாய்

அப்படியேதானிருப்பர் என்றவென் எண்ணம்
பொடியாகி உன்னில் கலக்கக் கண்டாய்
ஆண்டுகளின் பசித்தீவிரத்தில்
உண்ணப்பட்டுப் போயிருக்கின்ற
உறவுகளிடம் - காற்றே
போய்ச்சொல்
உடல்கள் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

உன்னைக் கிழித்தபடி பறந்த - அந்த
உந்துருளிச் சவாரிகளின் சாரதியை
பயணி மீண்டும் காணும் வரை
சாரதிக்குப் பயணியை ஞாபகமில்லாப்
பொழுதொன்றில் அவருக்கும்,
உன்னூடாகக் கைகள் வீசிக் - கிளையிருந்து
குதித்து,
கைகளும் வால்களும் ஆட - கால்களுதறி
ஆளையாள் கண்டுகொள்ளும் வஞ்சமில்லா
வாஞ்சை மட்டும் நிரம்பியதாய்
ஓடிக் களைத்த போதுகளில்,
அவதி அவதியாய்ப் பேரளவுகளில்
உன்னை விழுங்கிய - என்
சிறுபருவத்து மாந்தரும் விலங்குகளும்,
அடிவாங்கிக் கற்ற பின்னும்
புகலிடந் தருமந்தத் தாவரங்களும்
எங்கெங்கிருப்பினும் - காற்றே
போய்ச்சொல்
தோல் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

அவர்களைத் தொட்டு - என்னிடம்
மீள்வாயெனின், எனக்கும் வந்து
சத்தமாய்ச் சொல்லிப் போ காற்றே
காலம் போல நேசிப்பும்
ஒருபோதும் சுருங்காதென்று.

-------------------

குறிப்பு: அறுவையாயிருக்கு(ம்! கட்டாயமா) . பாவம் நீங்க.

தேங்கிய சில - 2

அந்தத் தடுப்பு நிலையத்திற்குப் போவதற்கு கொஞ்சம் ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. துணிமணிகளும், முக்கியமான பொருட்களாக சவர்க்காரக்கட்டிகளும், சானிற்றரி நப்கின் முதலியனவும் வாங்கியும், சேகரித்தும் கொண்டு போனோம். அங்கே போகிற ஒவ்வொரு தடவையும்.

கொண்டு போனவற்றை மேலாளரிடம் கொடுத்துவிடுவோம். அவவிடந்தான் கொடுக்கவும் வேண்டும். அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்று மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். சரியான முறையில் பங்கிடப்பட்டதா என்றறிய இயலாது. மாதத்துக்கு ஒரு சவர்க்காரம். அதுவே உடலுக்கும் துணி துவைக்கவும். எங்கள் போன்று நிறுவனத்தினர் யாரேனும் போனால் மட்டுமே உடலுக்கும் துணி துவைக்கவும் என்று தனித்தனியான ச. கட்டிகள் கிடைக்கும். சமயத்தில் உடுப்பைக் கழுவித் தம்மைக் கழுவாமலும், மாறியும் நடப்பது வழமையென நேர்முகங் கண்ட பெண் சொன்னா. அவ சொல்கையில், குளியலறையில் கரைத்துக் கரைத்து நுரையூதுவது ஞாபகம் வந்தது இப்பவும் ஞாபகமிருக்கிறது. மாதா மாதம் வரும் உபாதைக்குத் துணி பாவிப்பார்களாம். அதைக் கழுவத்தான் சவர்க்காரச் சேமிப்பு மும்முரமாக நடப்பதாம். எப்ப போனாலும், இவர்கள் கேட்பது சவர்க்காரம்! இப்படிப்பட்ட சூழலில் தோல் நோய்கள் பரவலாயிருப்பது ஆச்சரியமில்லை.

[19..20 வயதென்றாலும், அப்போதெல்லாம் சிந்திப்பதில்லை. இங்கிருக்கும் பெண்களின் சுகாதாரம் பற்றிய கேள்விகளோ, அடிப்படைத் தேவைகளினைப்பற்றியோ, அவற்றின் நிலையைப் பார்க்கையில்/அறிகையில் ஏற்படும் அதிர்ச்சி தவிர, என்னிடம் கேள்விகளோ, அவற்றுக்கான பதிலோ, அல்லது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதகு என்னாலான முயற்சிகளைச் செய்யும் தொடர்ந்த ஆர்வமோ இருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்க, என்ன மாதிரி ஒரு கிணற்றுத் தவளையாய் இருந்திருக்கிறேன்.. சூழலை/சமூகத்தைப் பற்றிய உணர்வின்றி இருந்திருக்கிறேன் என்பதை நினைக்க வெட்கமாயிருக்கிறது. ஏன் அப்படி இருந்தேன்? இப்பவும் சில வேளைகளில் யோசிப்பது, ஒருவேளை நான் கொஞ்சம் slowவோ என்று. அதாவது 5 வயசில் யோசிக்கிறதை 7இல யோசிப்பது, 15 இல விளங்கியிருக்க வேண்டியது 18இல மண்டையில் உறைப்பது..இப்படிப் பல. அதன் தாக்கமோ? இது என்னைப் பற்றின ஆய்வாகப் போக முதல் நிறுத்துறன்.]

நேர்முகங் கண்டவர்களில் ஒரு பெண், திருகோணமலைப் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டோ மூன்றோ வயதான குழந்தைக்குத் தாயாம். அது நான் இவரிடம் பேச இரண்டு வருடங்களுக்கு முன். வெளிநாடு செல்வதற்காக முகவரான ஒரு தெரிந்த பையனை நம்பி வந்தவர். முகவர் ஒரு விடுதியில் அறையெடுத்து இவரைத் தங்க வைத்து உணவு உடையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஓரிரவு, பணத்தைத்தா நாளையன்றைக்கு நீ விமானமேறுவாய் என்று சொல்லிப் பணமெடுத்துப் போனது போனதுதான். அதற்குப் பிறகு காணவேயில்லை. பார்த்துப் பார்த்து இருந்திருக்கிறா..இரண்டு நாளாயிற்று. அன்றிரவு பாலியல்தொழிலாலியென்று தவறாக அடையாளங் காணப்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வாரமிருந்தவர், வெளியில் வந்ததும் விடுதிக்குப் போகப் பிடிக்காமல் ஊருக்குப் போகத் தெரியாமல் தெருவில் அலைந்ததில் உண்மையாகவே பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார். இடையிடையே இத்தொழிலுக்கேயுரிய காவற்துறைக் கெடுபிடிகளில் காவல்நிலையம் சென்று வந்திருக்கிறார். கடைசி முறை பிடிபட்ட போது அங்கிருந்த அதிகாரியிடம் தன்னைத் திருப்பியனுப்ப வேண்டாமென்று கெஞ்சி, ஊருக்குப் போக உதவுமாறு கேட்டதற்கு அவ்வதிகாரி இங்கு கொணர்ந்து விட்டிருக்கிறார்.

என்னிடம் தனது தொழிலைப் பற்றிப் பேச நிறையக் கஷ்டப்பட்டார். இடையிடையே "சின்னப்பிள்ளைகளுக்கு/திருமணமாகாதவர்களுக்குச் சொல்லும் விசயமில்ல" என்று தணிக்கையும் செய்வா. ஒரு ஆறுதல், இவவின் பா. தொழில் முதலாளி எயிட்ஸ் பற்றி அறிவுறுத்தியிருந்தது. தான் பாவித்த காப்பு முறைகள் பற்றிச் சொன்னா. சில நேரங்களில் பார்வைகள் வெறிக்கும்.

உழைக்கிற பணத்தில் குழந்தைக்குப் பொருட்கள் வாங்கி அனுப்புவதாம். குழந்தை பற்றிப் பேசயில் கண் கலங்கும். வீட்டுக்குப் போகக்கிடைத்தால் போக விரும்பினாலும், எப்படித் தன்னால் கணவனை/குழந்தையை/பெற்றாரை எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. அவ்வளவு கறை படிந்தவராக உணர்கிறார். எவ்வளவு தேய்த்தாலும் படிந்த கறை போகுமா எனக் கேட்பார். சொல்வதற்குப் பதில் தெரிந்ததில்லை. வெளிநாடு போகவென்று முகவரை நம்பி வந்த
இவவினுடையதைப் போன்ற கதையுடன் இன்னுஞ் சிலர் அங்கு இருக்கிறார்கள்.

நானும் படங்காட்டுறன்


கொஞ்ச நாளாய் [26ம் மாடிக்கு வேலையில் குடி பெயர்ந்ததிலிருந்து என்று வாசிக்கவும் :O) ]கட்டடங்கள்/சாளரங்களைப் படமெடுக்கும் வியாதி வந்திருக்கிறது.

எடுத்தவற்றில் இரண்டு:

கண்ணாடியில் கோபுரம்

பட்டுத்தெறித்ததில் நெளிந்த யன்னல்

சொல்லத்தான் நினைக்கிறேன்

நிறையச் சொல்லோணும் போல, ஆனா என்னத்த எப்பிடி எங்க தொடங்கிச் சொல்லுறதெண்டு தெரியாம முழிச்ச/தவிச்ச அனுபவம் இருக்கா? அப்பிடித்தான் எனக்கு வழமையாவே இருக்கிறது.

nervousஆனா (இல்லாட்டிப் பொய் சொல்லக்குள்ள)தான் நான் வழமையா வளவளவெண்டு அலட்டுறது. இல்லாட்டிக் கொஞ்சம் அமைதியா நல்ல பிள்ளையா (இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட மாதிரி) இருந்துகொள்ளுவன். ஆனாலும் எப்பவும், ஆரோடையும் பகிர்ந்து கொள்ளோணும் என்டு நினைக்கிறவைகளைப் பற்றிச் சிந்தனை ஓடும். படிச்ச புத்தகமோ, நடந்த விசயங்களோ இல்லாட்டி மனசில வாற எண்ணங்களோ - இப்பிடி நிறைய. என்னதான் நெருங்கின நட்பிருந்தாலும், எதையும் பேசக் கூடியதாயிருந்தாலும் பல விசயங்கள் சொல்லப்படாமலே போய் விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில இது கூடினாப்போல தான் தெரியுது. புதிதாய் எதையுமே கதைக்ககூடியவர்களின் அறிமுகம் கிடைத்து நல்லாப் பழகியிருந்தாலும், ஏதோ தடுக்கும். இவர்கள் என்ன நினைப்பார்களோ என்டுற நினைப்பாலயோ என்டு நீங்கள் நினைச்சா நான் பொறுப்பில்ல. (அந்த எண்ணம் எப்பவாவவது வருமா என்டு அம்மா ஒரே கேக்கிறவ). என்னெண்டு சொல்லத்தெரியல்ல. ஆனா ஏதோ
ஒன்டு - இதப்பற்றிக் கதைக்காம விடுவம் என்டு எண்ண வைக்கும். அதுவும் சில விசயத்துக்குத்தான். [குழப்புறனா?] அது என்ன, ஏனெண்டு இன்னுந் தெரியாது.

சொல்லாமப் பூட்டிப் பூட்டி வைக்கிறதுகள் நிறைஞ்சு மூச்சு முட்டுமாப் போல வரும் சில நேரம். அப்ப மட்டும், வன்தகடு நிறம்பினா கொஞ்சக் கோப்புகளை அழிச்சு இடமெடுக்கிற மாதிரி, சிலது மட்டும் வெளியில கொட்டும். எனக்கிருக்கிற ஒரு தோழிக்கு இதுக்கு முற்றிலும் எதிர்க்குணம். அவ சொல்லாம உள்ளுக்கு வைச்சுக் கொண்டிருக்கிறதுதெண்டு பாத்தா ஒருகைவிரல் விட்டு எண்ணலாம். அந்தளவுக்குக் கதை. முதலொருக்கா அவவிட்டக் கேட்கப் போக, உள்ளுக்கு வைச்சிருந்து என்ன செய்யிறது? சிந்தனை ஊறுகாய் போடுறதோ என்டு பதில் தந்தவ. எப்பிடி அவவுக்கு ஏலுமாயிருக்கென்டு இப்பவும் யோசிக்கிறனான்.

சரி நேர இன்னொராளிட்டக் கதைக்கத்தானே வேண்டாமெண்ணுது மனம், அப்ப எழுதிப் பாப்பமெண்டாலும் (அதுக்கு ஒரு "இது" வேணுமெண்டதையெல்லாம் கணக்கில சேர்க்காம விடுவம்), ம்கூம், வரமாட்டுதாம். சொல்லல்லண்டா ஒண்டும் குறையப் போறதில்லத்தான். ஆனா எத்தினையோ பேர் ஒரு ரெண்டு வரிக் கவிதையிலையோ, இல்லாட்டி ஒரு கதையிலையோ, கட்டுரையிலயோ தங்களை/ தங்களின்ட எண்ணங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திறாங்க என்டு பாத்தால் ஆசையா இருக்கு. அட, இதை நானும் யோசிச்சனான்/வாசிச்சனான்/பாத்தனான் என்டு மனதில படும். ஆனா அந்தளவுக்கு எளிமையா அழகா வெளிப்படுத்தத் தெரியல்லையே என்டு தோணும். பிறகென்ன, சொல்லத் தெரியாட்டிச் சொல்லத் தேவையில்ல என்டிட்டு இன்னும் சேரச் சேர பூட்டிப் பூட்டி வைக்கிறது தான். அது என்னையுமறியாமலேயே வெளிவாறது தாதிக்கு முன்னால உடைஞ்ச கொட்டின மாதிரிச் சந்தர்ப்பங்களிலதான்.

இனி அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வேண்டாமெண்டு எழுதத் தொடங்கினன். ஏன் அப்பிடிச் சொல்லவெளிக்கிட்டனான்? என்ட எண்ணங்கள் என்னையறியாம வெளிவாறதை எண்ணி வெட்கப்படுறனா? ஆனா அப்பிடி வெளிவாறது எப்பவும் எல்லாருக்கும் நடக்கிற ஒண்டுதானே.. என்டு யோசிக்கத் தொடங்கி, பதில் இன்னும் கிடைக்காம, கேள்வியையும் சேர்த்துப் பூட்டி வைக்கிறன், இப்போதைக்கு.

சுயசரிதை

தனது ஆய்வுக்காக "உம்மைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக" என்று (எல்லாரையும்) கேட்ட மதுமிதாவுக்கு-

முன்குறிப்பு: ஆய்வில் என் பதிவைச் சேர்த்துக் கொள்ள இத்தால் (சுயநினைவுடன் என்று நினைத்துக் கொண்டு..) சம்மதம் அளிக்கிறேன்.

வலைப்பதிவர் பெயர்: ஷ்ரேயா

வலைப்பூ பெயர் : "மழை"

சுட்டி(உர்ல்) : http://mazhai.blogspot.com

ஊர்: எதைக் கேட்கிறீங்க? பிறந்ததா? வளர்ந்தவையையா அல்லது வசிப்பதையா? இல்லாட்டி பிடிச்சதையா???

நாடு: முன்னம் இருந்தது இலங்கையில. இப்ப வசிப்பது அவுஸ்திரேலியாவி
ல.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான். (தன் கையே தனக்குதவியாமே!!)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: தமிழ்ப்பதிவிலே.. 01/மார்ச்/2004

இது எத்தனையாவது பதிவு: நூறுகள் - 01, பத்துக்கள் - 04, ஒன்றுக்கள் - 08

இப்பதிவின் சுட்டி: http://mazhai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தது எப்பவுமே நாட்குறிப்பு மாதிரி இருந்தது. வாசித்த தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கம் வித்தியாசமாய் இருந்ததால், முயற்சித்துப் பார்க்க என்று சோதியில் கலந்தேன்.

சந்தித்த அனுபவங்கள்: 90% நல்லவையே

பெற்ற நண்பர்கள்: அருமையானவர்கள்.

கற்றவை: நிறைய. என் பார்வைகள்/கருத்துக்கள் சீர்ப்பட்டிருக்கின்றன

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்பொழுதும் இருந்ததுதான். புது ஊடகம், அவ்வளவுதான் வித்தியாசம்.

இனி செய்ய நினைப்பவை: ஆரம்பிப்பதை முடிப்பது. நிறைய இடம் பார்க்க வேண்டும். புத்தகங்களும் வாழ்க்கையும் நிறையப் படிக்க வேண்டியதிருக்கிறது. இன்னும் நிறையச் சிரிக்கவும் வேண்டும்.. நான் சிரிப்பது காணாதாம்!! ஆ!மறந்துவிட்டேன்..தண்ணீரும் குடிக்க வேண்டும் இப்போதையதை விட அதிகமாக.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லாரையும் மாதிரி ஆசையும் கோபமும் கனவும் ஆதங்கமுமென்று எல்லாம் நிரம்பிய, இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறவர்.(<<<"வள்" போடாமல் "வர்" போட்டதன் காரணம்: தன்னைத்தானே முதல்லே மதிக்க வேணுமாமே!)

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: 1)மனிதர்களைப் போலச் சிறந்த ஆசான்கள் யாருமில்லை.(தத்துவம் தத்துவம்!!). 2) நன்றி.. வணக்கம்.

தேங்கிய சில - I

பெண்களுக்கான அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அங்கே வரும் பெண்ணொருவர் என்னைக் கூப்பிட்டு, இன்னொரு நிறுவனத்தின் சார்பில் சில பெண்களை நேர்முகங் காணவேண்டியிருக்கிறது. முடியுமா எனக் கேட்டா. சரியென்று ஒத்துக் கொண்டேன். நேர்முகத்திற்குரிய கேள்விகளடங்கிய தாளில் என்னவெல்லாம் இருந்ததென்று ஞாபகமில்லை. ஆனாலும் காணவிருந்த பெண்களிடம், அவர்களைப் பேசவிட்டு, அந்தப் பேச்சோட்டத்தின் இயல்பு மாறாமல் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்திருந்தார்கள்.

பெண்களுக்கான தடுப்பு நிலையம். என்னையும், அழைத்த பெண்ணையும் சேர்த்து மூவர் மட்டுமே. பழைய அரச மருத்துவமனைகள் பார்த்திருக்கிறீர்களா? காவி நிறமடித்து, சீமெந்துத் தரைக்குச் சிவப்படித்து, இருக்கையென்ற பெயரிலே இற்றுப் போன வாங்குமாக... அப்படித்தான் இருந்தது நாங்கள் போன இடம். நாலைந்து கதிரைகளும் போடப்பட்டிருந்தன. அவை அந்தச் சூழலுக்குப்
பொருத்தமில்லாமல் திணிக்கப்பட்டவைகளாய்த் தெரிந்தன.

முன்னமே இவர்கள் அனுமதி பெற்றிருந்தார்கள். அதனால், பணிப்பாளரைப் பார்த்ததும் ஒரூ குறிப்பேட்டில் எங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றைக் குறித்துக் கொண்டு உள்ளே போக அனுமதித்தார்கள். உள்ளிருந்து வெளியே வரவோ, வெளியிலிருந்து உள்ளே போகவோ (எப்படிப் பார்த்தாலும்) ஒரே ஒரு கதவுதான். அந்த மரக் கதவுக்கும் ஒரு கதவு. பூச்சுக்கும் மேலாய் ஆங்காங்கே துரு தலைகாட்டும் இரும்புக் கிராதி போட்டது. மரக்கதவு திறந்திருக்கிறது, இரும்புக் கதவுக்கு ஆமைப் பூட்டு. கதவைத் திறக்கப் போன காவலாளியுடன் கூடவே போகையில், அந்தக் கதவுக்குப் பின்னால் எத்தனை வகை உணர்ச்சிகளைத் தேக்கிக் கொண்ட முகங்கள். புன்னகைக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. கதவு திறக்கிறது. ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எங்கேயிருந்து வருகிறோம், எதற்கு, என்ன கொண்டு வந்திருக்கிறோம்... கேள்வி மேல் கேள்வி. பணிப்பாளர் இந்தக் கூச்சலைக் கேட்டு, வந்து போட்ட அதட்டலில் கலைந்து போனார்கள். ஆனாலும் தூண்களுக்குப் பின்னால் நின்று பார்த்தபடி.

ஒரு பெண் எங்களைக் கவனிக்கவேயில்லை. கையில் குழந்தையை வைத்துத் தாலாட்டுவது போன்று பாவனை செய்து கொண்டிருந்தார். திடீரென கைகளை ஆட்டிப் பெருங்குரலெடுத்து "ஐயோ! என் பிள்ளை" என்று கத்தினா. அந்தக் கத்தல் அதிர்வைக் கொடுத்தது எனக்கு மட்டும்தான். மற்றவர்களெல்லாரும் ஒன்றும் நடவாதது போல் தத்தம் வேலை. என்னுடன் வந்தவர்களும் கூட. என்னுடன் வந்த பெண்ணொருவ நாம் அன்றைக்கு வெளியில் வந்ததும் அந்தக் கத்தலிலும் சூழலிலும் என் முகம் வெளிறிப் போனதாகச் சொல்லப் போவது எனக்கு அப்போது தெரியவில்லை.

என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிறந்து சில நாட்களேயான குழந்தையுடன் தெருவில் அலைந்திருக்கிறா. பிடித்துக் கொண்டு வந்து உடல் நலமின்றி இருந்த குழந்தையை அவரிடமிருந்து பிரித்துத் தனியே வைத்திருந்திருக்கிறார்கள்.

[அவவைப்பார்த்ததும் ஆறாம் வகுப்புப் படிக்கையிலே மட்டக்களப்புப் பேருந்து நிலையத்தில் பைத்தியக்காரி என்று எல்லாராலும் ஏளனஞ் செய்யப்பட்ட பெண்தான் ஞாபகத்திற்கு வந்தார். எப்படியென்று இப்போது ஊகிக்கக்கூடிய நிலையிலே அவர் கருத்தாங்கிக் குழந்தை பெற்றெடுத்து, பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்குக் காணாமல் போய் மீண்டும் ஒரு சுட்டெரிக்கிற இரண்டு மணி வெயிலில் தேநீர்க் கடையில் வாங்கின கொதிக்கும் தேநீரை அந்தக் குழந்தைக்குப் புகட்ட முயற்சித்து அது வீலென்று அலறியதில் அடி கொடுக்கும் பெண்ணாய் மீண்டும் அதே பேருந்துத் தரிப்பிடத்திற்கே குடிவந்தா. பிற்பாடு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.]

தடுப்பு நிலையப் பெண், குழந்தை இறந்ததைச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறா. காண்பவர்களிடம் போய் "என் குழந்தையைக் கண்டாயா" என்பதும், பதில் சொல்லாவிடில் அவர்களைத் திட்டுவதுமாக இருந்தவவின் அறிமுகத்துடன் அந்த தடுப்பு நிலையத்தின் கதவு அன்றைக்குத் திறந்து கொண்டது.

புதுசு


யாகூ மின்னஞ்சல் புது வடிவமா புதுசா வடிவா வந்திருக்கு என்று போன வாரம் கிட்டத்தட்ட 2 மாசத்துக்குப் பிறகு யாகூவை எட்டிப்பார்த்த போது கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். நேற்றுப் பார்த்தா "சுடு அஞ்சல்" அந்த ஐடியாவத் தானும் சுட்டு புதுப் பிறவி எடுத்திருக்கு! எல்லாரும் கூகிளின் "சுயமாகப் புதுப்பிக்கிற" விளையாட்டுத்தான்.

ஹொட்மெயிலில், அவுட்லுக்கில் செய்வது போல வலதுசொடுக்கில் செய்கைகளுக்கான தெரிவும், சொடுக்கி, ஒன்றிலிருந்து இன்னொரு ஃபோல்டருக்கு (இதுக்குத் தமிழ் என்ன? "கோப்புப் பை"யா?) இழுத்துப் போடவும், அஞ்சலின் உள்ளடக்கத்தைப் பார்க்க ஒரு பகுதியுமென்று நல்லாத்தானிருக்கிறது.


யாகூ தனது இணையத்தளத்தையும் புது வடிவமாக்கியுள்ளது. அஞ்சல் கணக்கில் நுழைந்தால் கிறுக்குவதற்கு கிறுக்கற்புத்தகமும் தருகிறார்கள்.

ஆறுதலாய் ஆராய்ந்து பார்த்து ஒரு ஒப்பீடு எழுதணும்.

என்ன விலை

திரு(க்)கோணமலைப் படுகொலை சம்பந்தப்பட்ட கட்டுரைகளிரண்டுடன் படங்களும் கைக்குக் கிடைத்தன. பார்த்த பின் ஏன் பார்த்தோமென்று இருந்தது. தாங்கவே முடியவில்லை. மண்ணில் அரைவாசி புதைந்து கிடந்த உடல், தாயின் சடலத்தினருகே தலையின்றிக் குழந்தை... எழுதும் போதே மனம் பதைக்கிறது. நேரிற் பார்த்தவருக்கும் படமெடுத்தவருக்கும் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை பண்ணவே தயக்கமாயிருக்கிறது.

இலங்கை சென்று, போன கிழமை திரும்பிய நண்பரிடம் (அவருக்கு நான் அந்தக் கட்டுரை இணைப்பினை அனுப்பியிருந்தேன்) இதைப்பற்றிப் பேசுகையில், "நீங்க அனுப்பினதெல்லாம் பார்த்தா வெளிநாடுகளிலே இருக்க்கிறவர்களுக்குத்தான் மனம் வருத்தப்படும். ஏனென்றால் வெளிநாடுகளிலே குறிப்பாகத் தொலைக்காட்சிகளிலே காட்டுபவைக்கெல்லாம் பார்ப்பவர் மனதைக் கருத்தில் கொண்டு viweer advice என்று வன்முறைக் காட்சியா, சிறியவருக்கு உகந்ததா, பயப்படும்படியானதாய்க் காட்சியமைப்பு இருக்குமா என்றெல்லாம் நிகழ்ச்சி/செய்தி தொடங்க முன்னமே போடுவார்கள்.அங்கே இதெல்லாம் இல்லை. எடுத்தவுடன் இரத்தக்களறியாய்க் காட்டுவது சாதாரணம். இலங்கை ஊடகங்களில் இவற்றை விடக் கொடூரமான காட்சிகள் படங்கள் காட்டப்படுகின்றன/ பிரசுரிக்கப்படுகின்றன" என்கிறார் அவர்.

குழந்தைகளும் வயது போனவர்களும், சட்டென்று பயப்படும் இயல்புடையவர்களும் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேட்டோம். பதிலாய்க் கிடைத்தது:
"ஊடகங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. செய்தியை எவ்வளவு graphicக் காட்ட முடியுமோ அப்படிக் காட்டுவார்கள். பரபரப்புத்தான் அங்கே விலைபோகிறது. மற்றது, மக்களும் பயப்பட்டு என்ன ஆகப்போகுது? அவங்களுக்கு, தெருவோரத்தில் சுடப்பட்டு இறந்தவர் பிணம் என்பது தினப்படி காணும் ஒன்றாகவே இருக்கிறது. அங்கே, ஒருத்தர் இறந்து விட்டாரென்றால் அது மிகச் சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. இறப்பு எப்போதும் வரக்கூடும் என்பதை ஞாபகப்படுத்தவே தேவையில்லை. நன்கு அதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சம்பவத்தில் நான்கு பேர் இறந்து விட்டர்களென வைத்துக்கொள்வோம். அதைச் செய்தியில் சொன்னால், 'நாலு பேர்தானாமே செத்தது. அன்டைக்கு 15 பேர் செத்தவங்க' என்று ஏதோ க்ரிக்கற் ஸ்கோர் சொல்வது போலச் சொல்லிப் போவார்கள். பத்திரிகையில் வரும் படங்களிலுள்ள காட்சிகளுக்கும் அதே கதியே. கழுத்தில் துப்பாக்கிச் சூட்டோடுள்ள சடலத்தின் படத்தைப் பார்க்கிலும் தலை சிதறிய சடலத்தில் படம் அதிகமாய்ப் பேசப்படும். சில வேளைகளில் இவ்வளவுதான் காயமா என்கிற ஏமாற்றத் தொனியும் தென்படும்."

கழுத்தில் பாய்ந்து உயிர் குடித்ததுவும், தலையைச் சிதறடித்து உயிர் எடுத்தததும் அதே சன்னம் தான், போனதும் உயிர்தான். ஆனாலும் அவற்றிலே வித்தியாசம் பார்த்து, எது வலித்திருக்கும் அதிகமென்று ஆராய்ச்சி செய்யுமளவுக்குக் குரூரர்களாகிப் போனோமா? :O(

மதிப்பில்லா உயிருக்கு மதிப்பேயில்லாத சூழலில், வன்முறகளின் தாக்கங்களைத் தம்மில் நிறைத்துக் கொண்டு வளரும் பிள்ளைகள் தாமே வன்செயலாளராவதில் வியப்பில்லை. உளவியல் பாதிப்புத்தானே அதுவும்! "பைத்தியம்" என்பதை மட்டுமே உளநலக்குறைவாய் அறிந்த சமூகத்தில், யுத்தத்தின் போது ஏற்படும் பாதிப்புக்கு மருந்தில்லை. (யாழிலிருந்த சகலருக்கும் ஒரே ஒரு உளவியல் மருத்துவர்/நிபுணர் மட்டுமே இருப்பதாக 2001/2002ல் அறிய வந்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது).

அடுத்த கேள்வியாய் எழுவது, ஊடகச் செய்தியாளரது உளநலம். கருத்தில் கொள்ளப்படுகிறதா? ஆமென்றால் என்ன விதத்தில் பேணப்படுகிறது? நேரே போய் இரத்தமும் சதையுமாய் தெறித்துக் கிடக்கிறதை, இலக்கின்றி வெறிக்கிற கண்களை.. என்று இன்னும் எத்தனையையுமோ தம் கருவிகளால் பதிவு செய்யும் தம் ஊழியரைப் பற்றிச் செய்தி நிறுவனங்களுக்கு அக்கறையுண்டா? செய்தியும் அதற்குப் படமும் கிடைத்தால் சரி என்கிற நிலைதானே நிலவுகிறது? இது சரியானதுதானா?

மடல்

அன்புள்ள நண்பனுக்கு

நலம். நலமறிய ஆவல் என்றெல்லாம் வழமையான கடிதங்கள் போலே இது இல்லை. வெறுமனே நலவிசாரிப்பாக இருந்துவிட்டுப் போவதானால் எழுத வேண்டாமே.. தொலைபேசி இருக்கிறதே. குழப்புகிறேனா? கேட்பாய் என்கிற நம்பிக்கையில், கொஞ்சம் உரிமையாய் ஒரு விசயம் சொல்ல நினைத்திருக்கிறேன்.

நான் சொல்லப்போவதைச் சொல்ல எனக்கென்ன தகுதியிருக்கிறதென நீ யோசிப்பாய். தேவையான ஒன்றை எடுத்துச் சொ
ல்வதற்கு, அதைப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சரியானது எது என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதற்கு முதற்படி முயற்சி எடுப்பவரும் எடுத்துச் சொல்லலாம். அதை நானே செய்யும் வரை உனக்கு எழுத விரும்பவில்லை.

ஞாபகமிருக்கிறதா.. நாங்கள் வகுப்புகளுக்குப் போன அழகு? 8 மணி வகுப்புக்கு நான் உன் வீட்டுக்கு 7.45 இற்கு வந்து உன்னை எழுப்பி, நீ வெளிக்கிட்டு வந்து நாங்கள் வகுப்புக்கு நடந்து போய்ச் சேர 8.30 ஆகும். மிஸ்சும் "உங்களுக்கு ஓட்டோ அனுப்பிறதா" என்று கேட்டு எத்தனை முறை அறிவுரை சொல்லியிருப்பா? அப்போதெல்லாம் சிரிப்போமே.

அந்த நேரந்தவறும் பழக்கம் இன்னும் இருக்கிறது. என்னிடம், உன்னிடம். இப்போதைய ஒருநாள் காலையை யோசித்துப் பார். ஒரு 10 நிமிட நித்திரையை விட முடியாமல், அடிக்கும் அலாரத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டுப் போட்டு நிறுத்தி, ஐந்து நிமிடம், இன்னும் ஐந்து நிமிடமென்று எழுந்திருப்பதைத் தள்ளிப் போடுவோம். அந்த ஐந்துநிமிடங்களினது அருமை இன்னும் கொஞ்ச நேரத்தில் உணரப்படும். உனக்கே தெரியும். ஐந்து நிமிடமென்பது பத்தாகி, தற்செயலாய்க் கடிகாரம் பார்க்கையிலே புறப்பட நேரமாகிறதென்பது மூளையில் பதியும்.

அடித்துப் பிடித்து எழுந்து, காலைக்கடன் முடித்துப் புறப்படுகையிலேயே ஐந்து - பத்து நிமிடத் தாமதம் தலை காட்டியிருக்கும். ஓட்டமும் நடையுமாய் இளைக்க இளைக்க தொடர்வண்டி நிலையம் போய் மூடிக் கொண்டிருக்கும் வண்டியின் கதவு வழியே புகுந்து இருக்கையில் உட்கார்ந்தால் 40 நிமிட இளைப்பாறல். இல்லை, காரில் போகிறாயா வேலைக்கு? பிந்தி விட்ட அவசரம் காரை ஓட்டுவதில் தெரியும். எவ்வளவு பாதுகாப்பானது இந்த வண்டியோட்டல்? கவனக்குறைவுகளும், சிறுசிறு தாமதங்களும் ஏற்படுத்தும் எரிச்சலும் ஒரு அழகான காலையைக் குழப்பியிருக்கும். அலுவலகத்தை அடையும் போது இருக்கும் மனநிலையை நினைத்துப் பார்.

அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோமா? இல்லையே. காலை வந்தவுடன் செய்தி வாசிப்பு. ஒருதரம் வாசித்தவுடன் விடுகிறோமா என்ன! திரும்பத் திரும்ப பிபிசியும் சிட்னி மோர்னிங் ஹெரல்டும் பார்ப்பது அடிக்கடி பணியைக் குழப்பும். கிரிக்கெட் போட்டி நடந்தால் அதன் ஸ்கோர் பார்க்க, தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்ப, வலைப்பதிவு பார்க்க, மின்/தொ.பே/வாயு இணைப்புகளுக்கும் இன்ன பிறவுக்குமான கட்டணங்கள் செலுத்த, வங்கித் தொடர்பாடல் என்று தனிப்பட்ட செயல்களுக்கு, அலுவலகப் பணி செய்ய வேண்டிய நேரத்தில் எடுத்துச் செலவழிக்கிறோம். இதுவும் ஒரு வகைக் களவுதான். களவென்பது கிடக்க, இது என்ன செய்யும் தெரியுமா? செய்து முடிக்க வேண்டிய பணி தலைக்கு மேல் குவியும். சொந்த வேலை செய்ததில் அலுவலக நேரம் ஓடியே போய்விட்டிருக்கும். ஐந்து மணிக்கும் பிறகும் உட்கார்ந்து வேலையைச் செய்வோம். பலர் இந்த விதயத்தில் பரவாயில்லை. ஒரு ஏழு மணிக்காவது வீடு போய்விடுகிறார்கள். நீ முடித்து விட்டுத்தான் வீடு திரும்புகின்றாய். எத்தனை மணியானாலும். வேலை முடித்து
விட்டே போகிறாய். இங்கே என்ன நடக்கிறது? தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தை எடுத்து வேலைக்கெனச் செல்வழிக்கிறாய். ஒருவிதத்தில் இது குற்றவுணர்ச்சியால் வரும் ஈடுகட்டலே.

வீட்டை அடைவதும், இரவுணவும், இளைப்பாறலும், நித்திரைக்குப் போவதும் தட்டிவிட்ட டொமினோக் கட்டைகள் போல ஒன்றன் பின் ஒன்றாய் பிந்திப் பிந்தி நடைபெறும்.நேரஞ் சென்று படுத்தால் அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழும்ப மனம் வராது. மீண்டும் மேலே சொன்னது அடுத்த நாளும் தொடரும். இது உடலுக்கோ மனதுக்கோ நல்லதல்ல. கடின வழியில் நான் உணர்ந்த பாடம் அது. உன் அருகாமை கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் உன் களைப்பு வீட்டாரால் புரிந்து கொள்ளப்படும்.

காலையில் நேரத்துக்கு எழும்புவதிலிருந்து பணியக வேலை முடித்த பிறகுதான் சொந்தவேலை (அல்லது உணவு இடைவேளையின் போது) என்று உறுதி கொண்டாயானால் ஐந்து மணிக்குப் பிறகு எவ்வளவோ நேரம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வாய். வேலை அதிகமான நாட்களில் இரவிரவாய் பணியகத்தி
லேயே கிடக்காமல் "எவ்வளவு வேலையென்றாலும் இத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் விடுவேன்" என்று உறுதி எடுத்துக் கொள். இரவிரவாய்க் கண்முழித்து வேலை செய்த களை முழுதும் நீங்காமல் அடுத்த நாளும் வேலைக்கு வருவாயானால் அதிலே ஒரு பிரயோசனமும் இல்லை.

கேட்டால் சொல்வதென்ன? எல்லாம் குடும்பத்துக்குத் தான் மாடாய்/நாயாய் உழைக்கிறேன். நீ மிருகம் போலே உழைக்க வேண்டியதில்லை. மனிதனாய், குடும்பத்தை மனதிற் கொண்டவனாய் வாழ்ந்து கொள். போதும். யாருக்காக உழைக்கிறாயோ அவர்களே முக்கியமானவர்கள். உன் சம்பளம் மட்டுமே அங்கே எதிர்பார்க்கப்படுகிறதென்று நினைக்கிறாயா? உன்னைத் தவிர மற்றதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பணம் மட்டுமே தேவைகளை நிறைவேற்றிவிடுவதில்லை. உன் பணம் கொடுக்காத மனநிறைவை உன் அருகாமையோ அல்லது உன் கனிவான ஒரு வார்த்தையோ பெற்றுத்தந்துவிடும். கவனித்துப்பார்..உனக்கே தெரியவரும்.

இந்தக் கடிதம் பார்த்து "லெக்ச
டிக்கிறேன்" என்று நீ சொல்லக்கூடும். நான் உணர்ந்ததை, உரிமையுடன் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாய் என்று நம்புகிறேன். நலமறிய ஆவல்.

இப்படிக்கு, மாறா அன்புடன்
தோ
ழி.

தெரிந்தால் சொல்லுங்க

ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...

மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?

அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)

நன்றி.

அவையள் எங்கண்ட ஆக்கள் இல்லை!

இன்னார் இந்தச் சாதியென்று சொல்லிஅவருடன் பழகுவதை ஊக்கப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ எங்கள் வீட்டில் நடந்ததில்லை. சாதி பற்றிய பேச்சு எழுந்ததும் ஓரிரண்டு தருணங்களில் எனது கேள்விகளால்தான்.

சாதியும் அது பற்றிய விளக்கமும் இல்லாத ஒரு வயதிலேயே எனது முதல் அனுபவம். ஞாபகமிருக்கிறது. வீட்டிலிருந்து நாங்கள் தேநீர் குடிப்போம். மாவிடிக்க வரும் இரண்டு ஆச்சிமார். செல்லாச்சி, தெய்வானை - இவர்களை "ஆச்சி" என்று விளித்தேன். (அவர்கள் போன பிறகு எனக்கு "அவைய ஆச்சி என்டெல்லாம் சொல்றேல. பேர் சொல்லலாம்" என்று அறிவுறுத்தினார்கள். அவ்வளவு வயசான ஆட்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமெண்டா நான் ஏன் (15 வயசு மூத்த) மச்சாளை "தமயந்தி" என்டு பேர் சொல்லி கூப்பிடேலாது என்று கேட்டதற்குப் பரிசாய் முதுகில் மேள வாசிப்பும், "அது அப்பிடித்தான். சொன்னாக் கேட்கோணும்"மும் கிடைத்தன)

அவர்களின் சுருங்கின தோல், தொட்டுப் பார்க்கவே ஆசையாயிருக்கும். மரியாதையா ஆச்சி எண்டே சொல்லேலாதாம், இதில தொட்டா உதைதான். சேலையைக் குறுக்கில கட்டியிருப்பார்கள். கிளாசில்தான் இவர்களுக்கு பானங்கள் கொடுக்கப்படும். அதை ஒருதரும் தொடவும் கூடாது. அந்தக் கிளாசை நாங்கள் பாவிப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. இதெல்லாம் தெரியாமல் நான் குதர்க்கமாய்க் கேள்வி கேட்டால் அம்மாவுக்குத்தான் பேச்சு விழும், "ஒண்டுஞ் சொல்லிக்குடுக்கிறேல்லையோ" என்று. அம்மா பாவம். ஏன் தனிக் கிளாசென்று கேட்டாலும் பீற்றிக் கொள்வார்கள் - "நாங்கள் கிளாசில குடுக்கிறம், எத்தினபேர் சிரட்டையில குடுக்கிறவை தெரியுமோ!" ('பூனைக்குட்டி சிரட்டையில தண்ணிய நக்கி நக்கிக் குடிக்கிற மாதிரிக் குடிப்பார்களா என்று சந்தேகம் வந்தாலும், கேட்டால் விழக்கூடிய அடியின் கனம் நாக்கை அடக்கும்) நினைத்துப் பார்க்கிறேன், இவர்களெல்லாம் இடம்பெயர்வின் போது சாதி பார்த்தா ஒன்றாய் வீடுகளில் தங்கியிருப்பார்கள்? சாப்பிட்டிருப்பார்கள்? இவர்களின் சாதியப் பார்வை உடைந்து சிதறியிராதா?

ஊரிலே இருக்கிறவரை விடுவோம். வெளிநாட்டுக்கு வந்துவிட்டாய். பிற சமூகங்களோடு இணைந்து கற்கிறாய்/செயல்படுகிறாய். ஆனாலும் அதே சாதிக் கண்ணாடி கொண்டுதானே உன் சமூகத்தைப் பார்க்கிறாய்.

ஒரு அன்ரி. பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமாம். ஆரேனும் நல்ல பெடியங்கள் இருந்தாச் சொல்லுங்கோ என்று என்னிடமும் என் தோழியிடமும் சொன்னா. உடனேயே ஞாபகம் வந்த ஒரு நண்பனைச் சொன்னோம். யாரென்று அவவுக்கும் தெரிந்திருந்தது.
"எனக்கும் தெரியும் அவைய, நல்ல பெடியன் தான்.. (மெல்லிய குரலில்) ஆனா எங்கட ஆட்களில்லை. அவை வேற".
என்ன சொல்கிறாவென்று தெளிவாயத் தெரிந்தாலும், வம்புக்கு "இல்லை அன்ரி. அவங்களும் சிலோன் தான்" என்றாள் என் தோழி. எனக்குத் தாளாத சிரிப்பு. பாவம் அன்ரிக்கு விளங்கவில்லை.
"இல்லை. அவை சிலோ
ன்தான். ஆனா வேறை". மென்று விழுங்குகிறார். நாங்களும் விடுவதாயில்லை.

"அப்ப என்ன சொல்றீங்க? அவையும் ஹின்டு. நல்ல boy. இதுக்கு மிஞ்சி என்ன அன்ரி?".
"இல்லையடா, உங்களுக்குத் தெரியாது, சாதி வேற"
"ஆ! ஷ்ரேயா..சா..ஆ..ஆ..தி வேறயாம்".. (ஆரம்பித்தோம்.) "நீங்க சாதி பாக்கிறனீங்களெண்டு தெரியாது அன்ரி எங்களுக்கு. அப்ப சிட்னியில நீங்க பழகிற எல்லாற்ற சாதியும் தெரியுமோ? பாத்தோ பழகிறனீங்கள்? ஊர் மாதிரி இங்கையும் புறிம்பாச் சாமான் வச்சிருக்கிறீங்களோ?" இன்னும் நிறைய அவவைக் கதைக்க விடாமல் கேட்டோம்.

எங்களிருவரின் கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லைப் போல. எதிர்பார்த்திருக்கவும் மாட்டா. "இல்ல, அப்பிடியெல்லாம் இல்ல" என்று தடுமாறிக் கொண்டிருந்தா. நேரமாகுதெண்டு அவவின் கணவர் வந்து கூப்பிட இதுதான் சான்ஸ் என்டு "வாறன் பிள்ளையள்" என்டிட்ட்டுப் போய்விட்டார். நாங்கள் சொல்லிச் சிரித்த போது, நாங்கள் அப்பிடி ஒரேயடியாப் போட்டுக் கேள்விகள் கேட்டிருக்கத் தேவையில்லையெண்டு தோழியின் அம்மா சொன்னா. "சாதி அன்ரி" கொஞ்சமாவது யோசித்திருப்பாவா என்பதே எங்களிருவருக்கும் உள்ள கேள்வி.

சாதி பார்க்கிற அன்ரி மாதிரியான ஆட்களைக் கண்டால், அவர்களது இந்தப் பழக்கம் வெளிப்பட்டால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதுவும் சில வேளைகளிலே அவர்கள் பற்றிய விம்பம் சரிகையில். எவ்வளவுதான் படித்த பண்பாளராய் இருந்தாலும் சாதி பார்க்கத் தூண்டுவது எது? ஏன் பார்க்க வேண்டும்? மனிதர்கள் தாம் பிறப்பது எந்தப் பெற்றாருக்கென்று தீர்மானிக்க முடிவதில்லையே? எல்லாரும் சமந்தானே? பொருள்வசதி தவிரப்பார்த்தால் எல்லாரும் ஆசைகளும் மகிழ்ச்சியும் கவலையும் பெருமையும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கனவுகளும் ஞாபகங்களும் நிறைந்தவர்கள் தானே? இதிலே எங்கே இவர் உயர்வென்றும் அவர் தாழ்வென்றும் சொல்லப்போயிற்று?

சில வருடங்களுக்கு முன்னாலே சாதி குறித்த ஒரு சூடான விவாதத்தின் போது அம்மா சொன்னா: "சாதி பாக்கிறது பிழையானது/தேவையில்லாததெண்டு தெரியுது. ஆனாலும் சின்னனில இருந்தே வந்த பழக்கம். கொஞ்சம் தயக்கம் இருக்கு. ஆனா அதுவும் இருக்கக் கூடாதெண்டு தெரியும். எப்பவுமே புதுசு புதுசா சரியானதுகளை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறம் என்ன!".
கடைசி வசனம் சத்தியமானது. நானும் புதிது புதிதாய்க் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.


சந்தேகம்: நாவலர் இந்தியாவிலிருந்தே இந்தச் சாதி வழக்கத்தைக் கொண்டு வந்தாரெனவும் அதன் பின்னரே இலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றியதென்றும் என தோழியின் தந்தை சொல்வார். எந்தளவுக்கு இது உண்மை?

நேர மாற்றம்

மு.கு: தொலைக்காட்சிச் செய்தி பார்த்தலும் இணையத்திலேயும் அசல் வடிவிலேயும் பத்திரிகை வாசிப்பதும் என் தினப்படி நடவடிக்கைகள்.

--------------------------

சனிக்கிழமை பின்னேரம்:
"சாந்திக்கா.. நாளைக்காலையிலே எனக்கு ஏழு மணிக்கு வேக்கப் கோல் .. மறந்திராதிங்க"
"இல்லமா..மறக்காம கட்டாயம் தரேன். இல்லன்னா பலகாரம் செய்ய வீட்டுக்குத்தான் வரணும்"
"ஒகே..நாளைக்காலையிலெ பேசலாம்..போய்ட்டு வர்றோம்"

ஞாயிறு காலை, 07:15 மணி
முழிப்பு வந்திட்டுது. என்னடா இந்த சாந்திக்கா இன்னும் போன் பண்ணல்லயே...என்று யோசித்துக்கொண்டே எழும்புகிறேன். நாட்காட்டியைப் பார்த்தால், 26 மார்ச். ம்ம்..இன்றைக்கு ஏதோ நடக்கோணுமே என்பது தெரிகிறதே ஒழிய என்னவென்று ஞாபகம் வர்ற மாதிரிக் காணோம்.சரி, வரக்குள்ள வரட்டும் என்று விட்டாச்சு.

8 மணி.. சாந்திக்காவின் வேக்கப் கோல். அவவின் "குட் மானிங்..எழுந்துக்கலயா இன்னும்?"க்குப் பதில் சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு, தன்னிச்சையாக தொ.காவைப் போட்டால் பொறி தட்டியது இன்றைக்கு நேரம் மாத்துற நாள் என்று. "ஒரு மணித்தியாலம் அதிகமாக இருக்கே.. அநியாயமா வெள்ளனவே எழும்பிட்டனே" என்று நொந்து கொண்டேன்.
என்றாலும் சந்தேகம்.. தொ.காவில் நேற்றுப் பார்த்த போதெல்லாம் நேர மாற்றத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? ம்ம்ம்... சரி எதுக்கும் டிவில பாப்பம்.. சனல்10 மாத்தியிருக்கு. சனல்7 ஏன் பழைய நேரத்தையே போட்டுக்கொண்டிருக்கிறாங்கள்? போடு டெக்ஸ்ற்ற..அதில மாத்திருக்கிறான். சாந்திக்காவும் அதுதான் 8 மணிக்கு எழுப்பியிருக்கிறா..நேரம் மாறினா 8மணி 7 மணியாயிரும்.. சரிதானே!!
என்டாலும் ஒரு சந்தேகம், கணினியைப் போட்டேன்..அதிலயும் நேரம் மாறிட்டுது. அப்ப சரிதான். அடட.. இன்டைக்கு நல்லா நேரமிருக்கு. ஆறுதலாப் போகலாம் பலகாரம் சுட. இவன் சனல்7காரனுக்கு லூஸ். நேரம் மாத்தாம சனத்தைக் குழப்புறான்.

எடு வீட்டிலில இருக்கிற மணிக்கூடெல்லாம். அலாரம் மட்டுமே 4. (இதிலே முக்கியமாச் சொல்லோணும்: அலாரமும் மின்சூளும் (டோர்ச் லைட்) கொஞ்சம் வித்தியாசமான உருவங்கள் நிறங்களில கண்டா, எங்கட வீட்டில குடியேறிடும். தலையாட்டிக்கொண்டிருக்கிற அலாரம் தொடங்கி, வட்ட/சதுர/திருகிற/பொத்தான் அமத்திற மின்சூள் வரைக்கும் இருக்கு. ஒரு மியூசியமே இதுகளுக்காண்டித் தொடங்கலாம். தூக்கி எறிவமெண்டா அதுக்கு தடையுத்தரவு. அதிலயும் ஒரு அலாரம் இருக்கு. சரிய சனிக்கிழமையிலே காலமை 11 மணிக்கு அடிக்கும். எங்கெருந்து சத்தம் வருதென்டு இன்னும் கண்டுபிடிச்சுக் கொண்டிருக்கிறம்)

சரி, இனி அறைக்குள்ளே இருக்கிறதும், வரவேற்பறையிலிருக்கிறதும் குசினியில இருக்கிரதும் என்டு இன்னும் மூண்டு. மொபைல்லயும் மாத்தோணும்.. எடு அதுகளையும். இருந்து எல்லாத்திலயும் மாத்தியாச்சு.

குளிச்சு வெளிக்கிட்டு, (அப்பவும் சனல்7 நேரம் மாத்தல்ல, அசல் விசரங்கள்) காலமைச் சாப்பாடு சாப்பிடுறன்.. தொ.பே.அழைப்பு வருது.

"ஓய்! எங்கெ இருக்கே? புறப்பட்டுட்டியா இல்ல இன்னு வீட்லேயேதானா? பத்தேகால் மணி இப்போ! ..பலகாரம் 10மணிக்கு ஆரம்பிக்க என்று இருந்தோமே..என்ன ISSAT (Indian Srilankan Standarad Arrival Time) ஆ?"
"ஹையோ! ISSATலாம் இல்ல. இன்னைக்கு டேலைட் சேவிங்க்ஸ்க்கு நேரம் மாத்தினாங்களே.. தெரியாதா? நான் லேட் இல்ல. இப்பத்தான் ஒம்பதேகால்"

"அம்மா..தாயே.. இ-மெயில்,பேப்பர் வாசிக்கிறப்ப, டீவி பாக்கறப்ப கொஞ்சூண்டு கான்சன்ட்ரேட் பண்ணனும்மா..டைம் இந்த வாரம் மாத்தலே"
"...(என்ன உளர்றா)..."
"அதான் மெல்பேண்லே கொமன்வெல்த் கேம்ஸ் நடக்குதில்ல..அதனாலே அடுத்த வாரம்தான் டைம் மாத்துறாங்க. ராசாத்தி, உங்க நேரத்தை மாத்திட்டு தயவு செஞ்சு உடனடியா புறப்படுறீங்களா?!"
"போச்சுடா!!அப்ப நான் இன்டைக்கும் லேட்டா?" :O(

பிடிக்கவில்லை

எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். பிடிக்காத ஆட்களென்று பார்த்தால் (அதற்காக தீராத பிறவிப்பகை என்றெல்லாமில்லை) ஒருகை விரல் கொண்டு எண்ணிவிடக்கூடியளவு பேர்தான் தேறுவார்கள். நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சக மனிதப்பிறவியின் மீது வெறுப்பு வந்திருக்கும். எனக்கு, அப்படியே வெறுப்பு வந்தாலும் அம்மனிதர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் நிகழ்பவைகளால் அநேகமான வேளைகளில் அந்த வெறுப்பின் தாக்கம் குறைந்துவிடும். புதிதாய்ப் பதிவு செய்கையில் பழையனவற்றைத் தூக்கிப்போடுவது மனித இயல்பா?

பிடிக்காமற் போவதற்கான எனது வகைப்படுத்தல்:

  • சிலரைப் பார்த்த(தா)லே பிடிக்கது.
  • சிலருடன் பேசியபின் பிடிக்காது. (கண்ணைப்பார்த்து/முகத்தைப்பார்த்துப் பேசாமை)
  • சிலருடன் ஆரம்பமே சரியாயிராது.
  • சிலரது பழக்கவழக்கங்கள்/குணங்கள் பிடிக்காது (ஆளைப் பிடிக்காமற் போவதற்கும் பழக்கவழக்கம்/குணங்களைப் பிடிக்காமற் போவதற்கும் வேறுபாடு உண்டெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு அறிவைச் சரியாய்ப் பிரயோகிப்பதில்லை!)

கொஞ்ச நாளாய்க் கவனிக்கிறேன், மிகவிரைவிலேயே (இவ்வளவு நாளும் இருந்ததை விடச் சற்று அதிகமாக)ஆட்களைப்பற்றிய அபிப்பிராயம் உருவாகி, என்னையறியாமலேயே வகைப்படுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. பார்த்த விதம் சரியில்லை, ஏன் இப்படிச் சத்தம்போடுகிறான்/ள், உதவவில்லை, கதைப்பது அறிவற்றதனமாய் உள்ளது - இப்படி (அநேகமாக) மிகச் சாதாரணமாய் கணக்கிலெடுக்கத் தேவையே இல்லாத விதயங்களெல்லாம் காரணிகளாய் அமைகின்றன. சிலவேளைகளில் மேற்கூறியவை எழுப்புவது எரிச்சலுணர்வாயிருப்பினும் அதையும் வெறுப்பெனக் கொள்கிறேன் போலவும் தோன்றுகிறது. என் சகிப்புத்தன்மை/பொறுமை இவையெல்லாம் தேய்கின்றனவோ? அறளை பெயருதோ??? :O(

எழுத ஆரம்பித்த நேரத்திலிருந்து இடையிடையே வேறு வேலைகளும் செய்ததால், பதிவு செய்ய நினைத்ததில் அரைவாசியே மேலே எழுதப்பட்டிருக்கிறது. மீதி மறந்து போய்விட்டது. இந்த வார இறுதியில் ஞாபகம் வந்தால் முழுமையாய் எழுதி மீள்பதிவு செய்வேன். இல்லாட்டி, இப்படியே.. அரைகுறையாய்!(இதுவும் பிடிக்கவில்லை)

பி.கு: இதை வகைப்படுத்துபவர் "அனுபவம்" என்று வகைப்படுத்தவும் , நன்றி.

நான் பார்த்த கூத்து!

இன்டைக்கு மட்ச், டிவியப் போடு

நல்லகாலம் ஞாபகப்படுத்தினாய்... நான் போடுறன் நீ ****க்கு அடிச்சு அவனை வரச்சொல்லு.

மூன்றாமவன்: "ஏன் அடிக்கப் போறீங்க ..நோகும்" (இரண்டாமவன், "எல்லாரும் ஒருக்கச் சிரியுங்களன்டாப்பா, எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறான்" என்று சொல்லி மூன்றாமவனிடமிருந்து ஒரு அடியை வாங்கிக்கொண்டான்)

(அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒருநாள் கிரிக்கற்போட்டி ஆரம்பித்திருந்தது)

பார்வையாளர்களைக் காட்டிக்கொண்டிருந்த போது ஒரே நேரத்தில் "சான்மான்" ஒரு கத்தல். கொஞ்ச நேரத்தில் "சங்கீதா" என்று இன்னோரு கூச்சல். (எனக்கென்னவோ சான்மானுக்குக் கிடைத்த கூச்சலை விட சங்கீதாவுக்கு இன்னும் உரக்கவும் உசாராகவும் கேட்டது போல இருந்தது. ஆனாலும், "பிரமை" என்று சொல்லிக்கொண்டேன்)

ஜயசூரிய விளாசத்தொடங்கியிருந்தார். கடைசி வரை பார்த்து விட்டு எழுந்து தேநீர் குடித்தார்கள். அவுஸ்திரேலிய ஆட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வீரராய் ஆட்டமிழந்ததும் பெருங்கூச்சல்.

"என்னதான் சிங்களவன் என்டு பேசினாலும், கிரிக்கட்டெண்டோடன ஏன்டா இலங்கைக்கு சப்போட் பண்ணிறம்?" என்று ஒரு புத்திஜீவி கேட்டார். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அன்ட்ரூ சிமண்ட்ஸ் வந்து ஒரு சிக்ஸரைத் தூக்கி விட்டார்.. "ஐயோ.. வந்திட்டாண்டா அனுமான்".

விளம்பர இடைவேளை போட்டதும், அவசர அவசரமாக மற்றத் தொ.கா.நிலையத்திற்கு மாற்றினான் ஒருவன். "அடெய், விசரா இப்பத் திரும்பப் போடுவாங்கள்..ஏன்டா சனலை மாத்துறாய்?"

மாற்றினவன் சிரித்துக் கொண்டே "மச்சான்... வடிவாப்பார் ! இப்ப சொல்லு பாப்பம் எனக்கு விசரோ என்டு!!!" திரையிலே ஷரபோவா அழகாக டெனிஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

"என்ன நீட்டுக்காலடா இது!" (இந்த "இது", மிகக்குறுகியதொரு "இ"யும், பெருமூச்சுக்களின் தொகுப்பாய் "து" என்பதும் சேர்ந்த ஒன்று என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!)

வெற்றிலை வைத்து அழைக்காத குறையாய், தொலைபேசியில் அழைத்து, அழைப்பை ஏற்று(!!) வந்தவன், "கிரிக்கற்றைப் பாக்காமல் என்னத்தையடா...." என்று ஆரம்பித்து "ஐயோ மரியாக்குஞ்சு, உந்த மெல்பேண் வெக்கைக்க உங்களை விளையாட வைச்சிட்டாங்களே" என்று தடாலடியா பிளேட்டை மாத்தினான். "அடப்பாவி" என்று கூட்டமாய்க் குரல் கொடுத்தார்கள்.

"உப்பிடிச் சின்னச்சின்ன சட்டையளும் காற்சட்டைகளும் போட்டுக்கொண்டுதான் விளையாடோணுமோடா? முழுக்கால், அற்லீஸ்ட் கால்வாசிக்கால் மறைக்கப் போடலாந்தானே?" - இது புத்திசீவி

"கால்காலை மறைக்கப்போடோணும் என்னடா, அதானே கேட்கிறாய்?"
"ஓம்..",
"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"
சொல்லிவைத்தது போலத் தலையிலடித்துக் கொண்டார்கள்.

"எதைப்போட்டாலும் விளையாடினாச் சரிதானே" என்று ஒருவன் சொன்னதும் ஆமோதித்து பழையபடி கிரிக்கட்டுக்குத் திரும்பினார்கள்.

"எனக்குப்பசிக்குது" சாப்பாடெடுக்கப் போனான் ஒருவன்.

அன்ட்ரூ சிமண்ட்ஸ் ரன்னவுட்டாகிப் போனார். "அப்பாடா, இனி வெண்டிடலாம்" ஒரு துளி சந்தேகமுமின்றி வெளிப்பட்டது குரல்.

"டேய், நான் சாப்பாடெடுக்கப்போகத்தான் சிமண்ட்ஸ் அவுட்டாகினவன். நீங்களும் வந்து எடுங்கோடா!". சிரிப்பலை.

மற்றவனும் சாப்பாடெடுக்கப் போனான்.. க்ளார்க் பவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தாங்கள் சாப்பாடு எடுக்கப்போனால் விக்கற் விழுமென்று எல்லாருக்குமே நம்பிக்கை வந்ததில் சமையலறைக்குள் போக்குவரத்து நெரிசல்.

கடைசியாய் ஒரு பந்திருக்கையில் மொத்தமாய் அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததும் உற்சாகமாய்க் கைதட்டி, நாளைக்குக் காணப்போகிற அவுஸ்திரேலிய நண்பர்களுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே கலைந்து போனார்கள்.

பெட்டகம்