"இரை" மீட்டல் 1

கொழும்பில் எனது சாப்பாட்டு நினைவுகள்/அனுபவங்களைப் பதிய நினைத்திருக்கிறேன். பள்ளிக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்:

காது என்டொராள் இருந்த. பள்ளிக்கூடத்தில பொது உதவிக்கெண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவர். வகுப்புகள் இடம் மாறினா கரும்பலகை தூக்கிறண்டா, ப்ரொஜெக்டர் போடுறண்டா, ஒடிட்டோரியத்தில திரை வேலை செய்யல்லண்டா அவரத்தான் கூப்பிடுற. ரசாயன வகுப்புக்கு குடுவைகள் கழுவுறது, lab சுத்தமாக்குறது என்டும் பலதரப்பட்ட வேலைகள். அவற்ற பேர் காது என்டு சொன்னான் தானே.. முழுப்பேர் சல்காது. எப்ப பள்ளிக்கூடத்தில வேலைக்குச் சேர்ந்தவர் என்டு ஒருதருக்கும் தெரியா. படிச்சு முடிச்சு பள்ளிக்கூடத்திலயே வேலைக்குச் சேர்ந்த அக்காமாரைக் கேட்டாலும் அவங்களுக்கும் தெரியா. அவரோட கதைக்க முயற்சித்ததாயும் ஞாபகமில்ல. ஆனா என்னண்டா ஆள் சரியான அமசடக்கி. கொஞ்ச நாள் தொடர்ந்து மிடில் ஸ்கூல் (6 - 8ம் வகுப்பு)பிள்ளையள்ர சாப்பாடு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரியோ.. முழுக்கவோ சாப்பிடுப்பட்டோ இருக்கத் தொடங்கித்து. பிள்ளையள் ஒரே முறப்பாடு. மினக்கெட்டு வீட்டில சொல்லி நேற்று நண்பி கொணந்த மாதிரி நூடுல்சோ இல்லாட்டி நண்பி கேட்டெண்டு சொல்லி தோசையோ[சிங்களப்பிள்ளையளுக்கு தோசையெண்டாக் காணும். எங்களுக்கு அதுகள்ர பிஞ்சுப் பிலாக்காக் கறியில (பொலொஸ்)(இதுக்கு அர்ப்பணிக்கிறத்துக்கெண்டே தனிப் பதிவு போடலாம்!!) கண்] கொணந்து அது சாப்பிடாமலே காணாமப் போறண்டா!!

இடைவேளை பற்றிச் சொல்லக் கிடக்கு. எல்லாப்பள்ளிக்கூடத்திலயும் இது நடக்குமெண்டு நினைக்கன். இடைவேளை மணியடிச்சாக் காணும். 11.10 - 11.40 என்டு நினைக்கிறன். (மாட்டு
க்கிளையள் ஏறி மிரிக்கிறமாரி இடிச்சுத் தள்ளி ஓடுங்கள். படியால போகயும் ஏலா.. வரயும் ஏலா). அரைமணித்தியாலத்துக்குள்ளதான் சாப்பாடும் விளையாட்டும். கிடுகிடெண்டு கொணந்ததைப் பிரிக்கிற. Tuck Shop போற கதை தனிக்கதை. அத இப்பத்தைக்கு விடுவம். கொணந்ததைப் பிரிச்சா, உங்களுக்கெண்டு ஒரு குழு இருக்குமெல்லா.. அதுக்குள்ள என்டதிலருந்து ஒரு துண்டு ஒராளுக்கும் இன்னொராளிடதிலருந்து ஒரு கரண்டி மற்றாளுக்கும் போகும். கடசியாப் பாத்தா வீட்டருந்து கொணந்தது உங்களுக்கு வாய்க்குள்ளயே போயிருக்காது. மற்றாக்கள்ர சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமா வயித்த நிரப்பிரும். எல்லாருக்கும் இதான் கதை. ஆருக்கும் பிறந்தாநாளெண்டாக் காணும். கேக் என்டதையே சீவியத்தில முதல் முதல் கண்டமாதிரி (பிறந்தாள்க்காரப் பிள்ளை தோழியெண்டா) எனக்கு ரெண்டு துண்டெண்டு முதல்லயே சொல்லி வைச்சிர்ர. பிள்ளையும் அதுக்கேத்தமாதிரி ரெண்டு துண்டுக்காராக்களையெல்லாம் எண்ணி கேக்கை வெட்டிக் கொண்டரும். அதையும் உள்ளுக்கு அனுப்பிற. பிறகு விளையாடப் போற. சில பிள்ளையள் விளையாடித்து வந்துதான் சாப்பிடுங்கள். வகுப்பு நடக்கும் .. தண்ணி குடிக்கிற சாக்கில நைசா ஒரு துண்டுப் பாணை விழுங்கிற. ரீச்சரும் ஒண்டும் சொல்லுறல்ல..அநேகமா. சிரிச்சித்து விட்டிருவாவு.

இப்பிடிச் செய்யிற பிள்ளையளுக்கு இன்டவெலுக்க சாப்பாட்டுப் பெட்டியத் திறந்தா சாப்பாட்டக் காணல்லண்டா எப்பிடி இரிக்கும்! ஒரேயடியா முறைப்பாடு வரத் தொடங்கித்து. சரியெண்டு ஒருநாள் மூணு prefect அக்காமார் ஒவ்வொரு வகுப்பிலயும் ஒளிஞ்சித்து இருந்தவங்களாம். பிள்ளையளெல்லாம் அசெம்பிளிக்கோ காலமைப் பிரார்த்தனைக்கோ பொய்த்துகள். சுத்தமுத்த பாத்துத்து ஒராள் வகுப்புக்குள்ள வருதாம். ஒரு பையத் திறந்து சாப்பாட்ட எடுத்து விறுவிறெண்டு சாப்பிடுப்படுதாம். பிறகு இன்னொரு பை. ஆராள்.. சல்காதுதான்! prefect அக்காச்சிக்கு இப்ப என்ன செய்யிறண்டு தெரியல்ல. சத்தம் போடயும் ஏலா. பேசாம இருந்துபோட்டு, பிறகு ரீச்சரிட்டப் போய் சொன்னதாம். பிறகு பிறின்சிப்பல் கூப்பிட்டுக் கதைச்சண்டும் அதுக்குப் பிறகு களவு போறல்லெண்டும் சொல்லிக் கிடந்த. அப்பல்லாம் அந்தாளக்கண்டா கிளுகிளெண்டு சிரிக்கிறதான் தொழில். இப்ப நினைக்கத்தான் பாவமா வருது. உண்மையாவே களவுதானா இல்லாட்டிப் பசீல எடுத்துச் சாப்பிட்டதா என்டு இத்த வரைக்கும் தெரியா. :O
இந்தப் பள்ளிக்கூடத்திலதான் எனக்கு போண்டா என்ட சாமான் அறிமுகமான. மணியடிக்க, வெளிவேலைக்குப் போய் வர ஒராள் இருந்த. என்ன பேரெண்டு மறந்துத்தன். காசு குடுத்தா வாங்கித் தருவேர். A/L நேரந்தான் இந்த வேலை செய்த. தவா சேர் தூங்கித்தூங்கிப் பாடமெடுப்பார், நாம இஞ்சால சத்தம் போடாம வெட்டுறதான். சிலவேள டபிள் ட்ரிப்பிள் பீரியடும் பாடம் நடக்கும் ஒரே ஆளோட.

தவா சேர் இரிக்காரே அவர் ஒரு முசிப்பாத்தியான ஆள். ஒருநாள் எங்கயோ அவர்ர ஸ்கூட்டர்ல போகக்குள்ள விபத்தாகித்து. ஆரோ வந்து இடிச்சித்தான். அடுத்தநாள் வந்து தான் எப்பிடிப்போன அவன் எதால வந்து இடிபட்ட என்டெல்லாம் விளக்கம் சொல்லத் தேவல்லயா! எங்களுக்கும் உசார் பிடிச்சிரும் ஏனெண்டா இந்தாள் கதைக்கத் தொடங்கினா எப்பிடியும் ஒரு முக்கா மணித்தியாலத்துக்கு பாடமில்லண்டு தெரியும். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் நழுவ விட்டிருவமா!! இன்னும் ஞாபகமிருக்கு, விபத்து நடந்து ரெண்டு மூண்டு மாசத்துக்குப் பிறகும் அவரிட்ட கதை கிளறுற. ஸ்கூட்டர் திருத்திட்டீங்களா சேர்? என்டு! அவரும் நாங்க கேக்கிறதப் பத்தி விளப்பமில்லாம கதை சொல்லுவார்! படிப்பிக்கத் துடங்கின காலத்துக் கதையும் வரும். இவரிட்டத்தான் ரியூசனுக்குப் போன. மூண்டுமணிக்கு வகுப்பு. ஒருநாள் சேர் வெண்பலகையில வெப்பக் கணக்கு ஏதோ எழுதிறார். எப்பிடித் தீர்க்கிற என்டும் எழுதியெழுதி வந்தவர், திடீரென்டு எழுதாம நிண்டுத்தார். எங்களுக்கு முதல் விளங்கல்ல. பிறகு சிரிப்பெண்டா!! பள்ளியால வந்து நல்லாச் சாப்பிட்டுத்து வகுப்புக்கு வந்ததில சேர் வெண்பலகையில சாஞ்சு நித்திர!! :O))

பள்ளில இருக்கக்குள்ளதான் பெரேரா & சன்ஸ் இல(பள்ளிக்கு நேர முன்னாலயே கடை வச்சிரிந்தாப் பின்ன!!) இக்ளெயாஸ் (Éclairs) என்ட ஒண்டையும் தின்னப் பழகின. இஞ்ச வந்து பாத்தா வெறுங் கிறீம உள்ளுக்கு அடைஞ்சு அதுக்கு மேல சொக்கிலட்ட ஊத்திரிக்கான். அங்கெண்டா மெதுமெதெண்டு ம்ம்ம்... மெதுமெதெண்டத்தான் இன்னொரு சாமான் ஞாபகம் வருது. Carnival கடை ஐஸ்கிறீம். அது அடுத்த பதிவில. :O)

(இந்தத் தமிழ் விளங்கல்லண்டாச் சொல்லுங்க, வழமையா எழுதிற மாதிரி அடுத்ததை எழுதிறன். இப்ப பொய்த்து வாறன் மக்காள்.)

14 படகுகள் :

Anonymous October 10, 2006 1:51 pm  

அப்ப மெதடிஸ்டிலெயே படிச்சனிய.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 10, 2006 2:37 pm  

ஓம். முதலே ஒரு பதிவில சொல்லியிருக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) October 10, 2006 5:10 pm  

இந்தத் தமிழ் நல்லாயிருக்கு ஷ்ரேயா. இந்தக் கதையை இப்படியே எழுதுங்க.

Tuck Shop - இந்தப் பெயரை நினைவுபடுத்திவிட்டுட்டீங்கள். நன்றி.

கொழும்பில படிச்சதென்னவோ மூண்டாம் வகுப்பு வரையெண்டாலும் டக் ஷொப் எல்லாம் நல்லாத்தெரியும். ;)

கானா பிரபா October 11, 2006 2:35 pm  

கார்னிவெல் கடையைத் தேடி என் ஒவ்வொரு கொழும்புப்பயணமும் இருக்கும். பம்பலபிட்டி மஜெஸ்டிக்கிற்கு முன்னால இருந்தது இப்ப செருப்பு கடை.
இரை மீட்டல் என்ட தலைப்பை பார்தோண்ணை இன்னுமொரு சாப்பாட்டு விசயமாக்கும் எண்டு நினைச்சன். உந்த தமிழ்ழ எழுதுறது பிரச்சனையில்லை, ஆனாப்பாருங்கோ சில சொல்லு எனக்கே என்னெண்டு விளங்கேல்லை. ஆனால் சம்பவத்தோட ஒன்றினா விளங்கும்.

ஒரு சந்தேகம், மதி மூண்டாம் வகுப்பு வரைக்குமே படிச்சவா:-) ம்ம் படிக்காத மேதைதான் (சும்மா ஒரு பேச்சுக்கு, குறைவிளங்காதேங்கோ)

`மழை` ஷ்ரேயா(Shreya) October 11, 2006 3:55 pm  

கார்ணிவெல் கொள்ளுப்பிட்டில தானே? பம்பலபிட்டிலயும் இருந்ததோ? (பள்ளிக்கூடத்துக்குக் கிட்ட இருக்கிறதுகளைத் தானே முதல்ல தெரிய வாறது... :O))

நான் நினைக்கிறன் மதி, தான் படிச்சது மதியெண்டு(சிங்களம்) மதியாகும்(மலையாளம்) வரைக்கும் இன்னும் படிக்கிறாவெண்டு!! மதி தான் சொல்லோணும்!! [இந்தக் கதையக் கேட்டுத்துத் தலை கிறுகி மடுவுக்குள்ள கொண்டு உழுந்திராதீங்க!!] ;O))

ஏதேனும் சொல்லுகள் குறிப்பா விளங்கேல்ல எண்டா கேளுங்க. சொல்லுறன்.

Anonymous October 11, 2006 4:23 pm  

//பம்பலபிட்டி மஜெஸ்டிக்கிற்கு முன்னால இருந்தது இப்ப செருப்பு கடை//
கானா பிரபா கொஞ்சம் எட்டிப்போயிருந்தால் கார்ணிவல் ஐஸ்கிறீமை சுவைச்சிருக்கலாம்.

//அப்ப மெதடிஸ்டிலெயே படிச்சனிய//
அப்ப சகோதரப் பள்ளிக்கூடத்தில எண்டு சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்துக்கு முன்னால பேக்கரி ஒண்டும் கிடையாது. ஜெயில் தான் முழுவியளம்.

எங்கட டக் ஷொப்பில மாலு பணிஸ் தான் பிரசித்தம். முக்கோண வடிவில இருக்கும்.

நல்லா "இரை" மீட்ட வைச்சிருக்கிறியள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 11, 2006 5:51 pm  

பள்ளிக்கூடத்தில carnival/show வைச்சா வந்து "பேய்வீடு" கட்டிற சகோதரங்களையும், "கவனமா சிஸ்டர்" என்டு சவாரிகளில ஏறேக்குள்ள சொல்ற சகோதரங்களையும் ஞாபகப்படுத்திட்டீங்க.. :O)

மாலுபணிஸ், சீனிசம்பல் பணிஸ்..நினைக்கவே வாயூறுது.:O))

ramachandranusha(உஷா) October 11, 2006 6:37 pm  

மழை மேடம்! இப்படியே எழுதுங்க. மண்வாசனையுடன் நல்லா இருக்கு. என்ன கொஞ்சம் மெல்ல படிக்கணும் :-)

எங்க டீச்சரம்மா ஒருத்தர், விதவிதமான புடைவையில் வருவாங்க. அவங்க கட்டிக்கிட்டு வர புடவையைப் பார்க்க காலையில்
ரசிக கூட்டமே காத்திருக்கும். புடவையைப் பற்றி விசாரித்தா போதும் புடவையாயணம் ஆரம்பித்துவிடும் அப்ப சாதாரண வீட்டுல வாங்குவது நிர்மா சோப் பவுடர்தான். இவங்க சர்ப் போட்டு துணி ஊற வைத்து தோய்க்கிற கதையும் சொல்வாங்க , நாங்க
சிரிச்சிக்கிட்டு இருப்போம். அவங்களுக்கு பசங்க வெச்ச பேரூ "சர்ப்" ;-)

கொழுவி October 11, 2006 6:39 pm  

மெத்தோவிலயோ.. சரியான கெப்பர் பிடிச்ச பீட்டரக்காமார் தானெ அங்கை படிச்சவை..

Anonymous October 11, 2006 10:02 pm  

எழுத்து நடை, தமிழ்(ழும்) சூப்பர்.

(இனிமேல் அளவாதான் பேச முடியும்).

`மழை` ஷ்ரேயா(Shreya) October 12, 2006 8:57 am  

கொழுவி.. வாங்கோ வாங்கோ.. அதென்னப்பு பீட்டரக்காமார் என்டுறீங்கள். ஏதோ இராமநாதனும் இந்துமகளிரும் விவேகானந்தாவும் தமிழிலயே கதைச்ச மாதிரி. :OP

கெப்பர் எல்லாப் பள்ளிக்கூடத்திலையும் சிலருக்கு இருக்கிறதுதானே.. :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) October 12, 2006 9:12 am  

இந்த "மேடம்" விட்றுங்க ப்ளீஸ் உஷா(க்கா) :O)

நல்லாத்தான் பேர் வைச்சிருக்கீங்க உங்க ஆசிரியைக்கு! எங்களுக்கு ஒரு விஞ்ஞான ஆசிரியை இருந்தாங்க. (அப்ப அவதான் எங்களுக்கெல்லாம் உலகமகா அழகி.. அவங்க கண் இருக்கே.. யப்பா!! பெரிசா அழகா இருக்கும். நேரா கண்ணு பார்த்துதான் பேசுவாங்க வேறே. பொய்யே சொல்ல வராது அவங்ககிட்டே) அவகிட்டே புடவைக்கடையே இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். ஒரு நாளைக்கு உடுத்தின சேலைய நீங்க ரெண்டு மாசம் கழிச்சுதான் திரும்பப் பார்ப்பீங்க!! :O)

இந்த புடவை பைத்தியம் நிறைய பேருக்கு இருக்குது.. (அப்பிடி என்னதான் இருக்குனு எனக்குத் தெரியலே) :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) October 12, 2006 9:16 am  

க்ருபா அண்ண்ண்ணே... எப்ப்டிண்ணே இருக்கீங்க?

//(இனிமேல் அளவாதான் பேச முடியும்).//
ஆமால்ல! "பேச்சிலர்" ஆகிட்டீங்கள்ல.. அப்பிடித்தான் இருக்கும்! ;O)

//எழுத்து நடை, தமிழ்(ழும்) சூப்பர்.//
நன்றிண்ணே.

கலை October 12, 2006 5:57 pm  

அட, இரை மீட்டல் இந்த தமிழில நல்லாத்தான் இருக்குது. இந்த தமிழையும் ஒருக்கால் இரை மீட்டின மாதிரி இருக்கு. :)

பெட்டகம்