கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் - ஒரு பின்னூட்டம்

"சக்தி"யில் பத்மாவின் "கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்" பதிவுக்கான என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் தனிப் பதிவாக இடுகிறேன்.

----------------------------------------------------

சுதந்திரம் "கொடுக்கப்படும்" ஒன்றல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பெண்களில் பலர் உட்பட. இதில் இன்னமும் வேதனையான ஒன்று என்னவென்றால் படித்த பெண்களும் அடங்கி நடத்தல்தான் அழகு/சரி என்கிற ரீதியில் நினைப்பதும் வாழ்வதும். பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு உறவில் அடங்கி நடத்தல்/கட்டுப்பாடுகள் என்பன இருப்பதில்லை.

பெண்ணை, சார்ந்திருப்பதனூடாகப் பெருமைப்பட்டுக் கொள்ளச் சொல்கிறது எங்கள் சமூகம். ஒரு பெண்ணின் இருப்பு ஆணைச் சார்ந்ததாக ஆக்கப்படுவது ஏன்? உதாரணமாக எடுத்துக் கொண்டால், பெண் தனித்து வாழ்வதை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. அதெப்படி தனியாக வாழக்கூடும்? ஏன்.. தன்னைத் தானே கவனித்துக் கொள்வதற்கும் பிடித்தமான வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஒரு பெண்ணால் இயலுமாயிருந்தால், ஒரு பந்தத்தில் இணைந்திருக்கப் பிடிக்காமலிருந்தால் அந்தப் பெண் திருமணஞ் செய்ய வேண்டியதின் அவசியம் அடிபட்டுப் போய்விடுகிறது. (திருமணம் வேண்டியதா/ வேண்டாததா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) ஆனால் இதை ஒரு சராசரி ஆளுக்குச் சொல்லிப் பாருங்கள்.. அதெப்படி பெண் தனியாக வாழ்வது என்ற பதில் தான் வரும். ஏன்? பெண்கள் அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சார்ந்தே இருந்து பழகிப் போனதால். ஆண்கள் சொல்வது ஏனென்று என்னால் ஊகிக்கக் கூடியது ஈகோ. "நான் இருக்கிறேன்தானே பார்த்துக்கொள்ள.. தேவைகளைக் நிறைவேற்ற. பெண் என்பவள் என் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும்" என்கிற எண்ணம்.

சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம்.. நம் பெண்களில் எத்தனை பேரை விரும்பிய இடத்துக்குத் தனியே (எவ்வளவு தூரமானாலும்) குடும்பத்தினர் போக விடுவார்கள்? "ஐயோ பெண்ணை அவ்வளவு தூரம் தனியே அனுப்புவதா"/"அவளுக்குப் போய்ப் பழக்கமில்லை"/"அவளால் முடியாது" என்ற ரீதியில் பதில் வரும். அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன். நன்கு படித்து வேலையிலிருக்கும் ஒரு பெண் (புத்தகங்களையே ஆணுக்குரியவை பெண்ணுக்குரியவை என்று வகைப்படுத்திய அறிவாளி) நேற்றுப் பயணம் போதல் பற்றிப் பேசுகையில் சொல்கிறா "நான் தனியாய்ப் போகமாட்டேன். அதெப்பிடிப் போவது. கலியாணங் கட்டின பிறகு தனியே பயணம் செய்வது அழகில்லையல்லவா. அப்படி நான் விரும்பி அதைச் சொன்னாலும், கணவர் 'ஏன் அப்படித் தனியே போக யோசிக்கிறீர்கள்? என்ன பிரச்சனை' எனக் கேட்கக் கூடும்".

[அவவிற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் திருமணம் செய்திருந்தால் எல்லாவற்றையும் சேர்ந்தே செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பிழையாக நினைப்பார்கள்/ (கணவன்) பெயர் கெட்டுவிடும் என்று இன்னும் நினைப்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. திருமணம் செய்து கொண்டால் நீங்கள் தனித்தன்மையற்றவர் ஆகி விடுகிறீர்களா? இல்லையே!. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கும் கட்டாயம் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை தனியே உங்களுக்குரிய வெளியில்(personal space) இயங்க முற்படுவது பிரச்சனைக்குரிய ஒன்றெனக் கருத வேண்டிய காரணம் இல்லை. ஒன்றாகச் சேர்ந்து செய்வதையும் செய்யுங்கள். தனிப்படவும் இயங்குங்கள். அது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இன்னும் நேசிக்கவும் இடந் தரும்]

இப்படி, தங்களை உண்மையாகவே வெளிப்படுத்துவதற்கும் விருப்பப்படி செயலாற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளே வாழ்க்கையாகிப் போகின்றன. தளைகளை உடைத்துக் கொண்டு வெளியில் வர முயற்சிக்கையிலேயே அப்பெண்ணிற்கிருக்கக்கூடிய தன்னம்பிக்கையின்மை, பொருளாதார முட்டுக்கட்டைகள் என்பவை அவளுக்கெதிராக ஆயுதமாக்கப்பட்டு அம்முயற்சிகள் தோற்பிக்கப்படுகின்றன. அப்படியும் விடாது முயன்று சுதந்திரமாய் வாழும் சகோதரிகள் எம் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொள்பவை நாம் அறியாதவையல்ல. [அவற்றைப் பற்றி இப்போதைக்கு இங்கு வேண்டாம்.]

நினைத்தநேரம் நினைத்தபடி சென்றுவரக்கூடிய சூழல் தருகிற சுதந்திரத்தை/புத்துணர்ச்சியை, தளைகளை வென்று செயலாற்றுவது தரும் தன்னம்பிக்கையை, சமூகத்தில் தன் பங்களிப்பை, விரும்பியது கற்றுத் தேறித் தன்னை முன்னேற்றிக் கொள்வதில் கிடைக்கிற திருப்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் இன்னுமின்னும் பொத்திப் பொத்தி "பாதுகாப்பு, பண்பாடு" என்று அடைத்து வைக்கப்படுவதையுணராத பெண்களும் தங்கக்கூண்டென்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டு காலம் தள்ளுவார்கள். கண் திறப்பதேயில்லை பலருக்கு!

11 படகுகள் :

Premalatha October 11, 2006 6:47 pm  

//சுதந்திரம் "கொடுக்கப்படும்" ஒன்றல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பெண்களில் பலர் உட்பட.//

that IS point.


//ஆனால் இதை ஒரு சராசரி ஆளுக்குச் சொல்லிப் பாருங்கள்.. //

Abdul Kalam, Atal Bihari Vajpay - proud bachelors (not to mention their success in life). (proudly remembered for being bachelors).

//அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன். //

what about the women/girls who take pride in "எங்க வீட்டுல தனியா என்னை அனுப்ப மாட்டாங்க"! :)

//சகோதரிகள் எம் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொள்பவை நாம் அறியாதவையல்ல. //

சகோதரி, ஆதரவுக்கு நன்றிங்க. :))// கண் திறப்பதேயில்லை பலருக்கு//

மூடிய கண்கள் உன்னதமாம் உயர்வாம் எங்கள் தமிழ்கூறும் நல்லுலகில். :))

பத்மா அர்விந்த் October 11, 2006 9:02 pm  

பெண் என்னும் கொடிபடர ஆண் என்ற கொப்பு தேவை என்றே செல்லி பழகிய சமூகம் இது ஷ்ரேயா. இங்கே உயர்பட்தவிகள் வந்தாலும் கூட அதிக சிக்கல் இல்லாத பேருக்கான திட்டங்கள் தருவதையும் கூட பல அலுவகங்களில் காணலாம். தருவதல்ல உரிமை என்ற என் பழைய பதிவொன்றை தேடி மீண்டும் பதிகிறேன். இது போல இன்னும் பலரும் எழுதுவது கூட தேவையாகிறது. நன்றி

Unknown October 11, 2006 11:42 pm  

//அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன்.//

அதே..அவர்களே தீர்மானிக்கட்டும்.

நடைமுறையில் உள்ள எந்த நம்பிக்கை/பழக்கங்களையும் மாற்றி அமைக்க மிகவும் நிதானமும் உறுதியும் தேவை. ..எதிர் நீச்சல்.

இது ஒன்னும் புதியது அல்லவே? அதாவது வேறு(மேலை நாடுகள்) நாடுகளில் பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். அவர்களிடம் இருந்து Fashion மட்டும் கற்றுக் கொள்ளாமல் :-))) அவர்கள் எப்படி வென்றார்கள் என்பதையும் கற்க வேண்டும் நம் பெண்கள்.

அல்ட்ரா மாடர்னாக நடித்தும் வாழ்ந்தும் வரும் நடிகைகளே திருமணம் ஆனபின் சுயத்தை இழக்கிறார்கள். (விரும்பிச் செய்வது வேறு ஊர் சொல்லும், கணவர் சொன்னார் என்பதற்காக செய்வது வேறு)

So...பெண்களுக்கு (ஆணுக்கும் இதே அறிவுரைதான்) முதலில் என்ன வேண்டும் என்பது தெரிய வேண்டும் (define) பின்பு அதை அடைய தடைகளைக் களைந்து determination உடன் முன்னேற வேண்டும்.

ஆணாதிக்க உலகில் கட்டுடைப்பது கஷ்டம்தான்..அப்படியே இருந்து விட்டால் யார்தான் உதவுவார்கள். :-))

`மழை` ஷ்ரேயா(Shreya) October 12, 2006 9:32 am  

//what about the women/girls who take pride in "எங்க வீட்டுல தனியா என்னை அனுப்ப மாட்டாங்க"! :)//

இவங்களப் பத்தி ஒன்டும் சொல்றதுக்கில்ல பிரேமலதா( maybe பதிவின் கடைசிப் பந்தியைத் தவிர) :O(

//மூடிய கண்கள் உன்னதமாம் உயர்வாம் எங்கள் தமிழ்கூறும் நல்லுலகில். :))//
ஐயோ புல்லரிக்குதுங்க! ;O)
பாத்து..! நக்கலடிக்கிறீங்கனு கூடப் புரியாமல் ஏதாவது பின்னூட்டம் வந்திரப்போகுது. :O(


பத்மா - //உயர்பதவிகள் வந்தாலும் கூட அதிக சிக்கல் இல்லாத பேருக்கான திட்டங்கள் தருவதையும்//
வேலையிடத்தில் சமபங்கு என்பதும் கண்ணாடிக்கூரைதான். :O(

FAIRY October 13, 2006 9:30 pm  

நல்ல சுதந்திரமாக விட்டாலும் எங்கும் செல்லாமல், செல்ல இஷ்டமில்லாமல் தனக்கே கட்டுப்பாடு வைத்து நடப்பவர்களை என்ன சொல்வது. மற்றபடி எல்லாம் 100% கரெக்ட்

மு.கார்த்திகேயன் October 15, 2006 5:09 am  

//கிடைக்கிற திருப்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் இன்னுமின்னும் பொத்திப் பொத்தி "பாதுகாப்பு, பண்பாடு" என்று அடைத்து வைக்கப்படுவதையுணராத பெண்களும் தங்கக்கூண்டென்று //

பெண்களின் அடிமை எண்ணத்தையும் உங்களின் ஆதங்கத்தையும் நல்லாவே சொல்லி இருக்கீங்க, ஷ்ரேயா.. ஆனா..இதை எல்லாம் நடமுறையில் எல்லோரும் பயன்படுத்தனும்..இல்லைனா சும்ம எழுதுறதுக்கும், பேசுறதுக்கும், படிக்கிறதுக்கும் மட்டுமே சுவாரஸ்யமான தலைப்பாஇ போய்விடும்..இல்லியா..

செல்வநாயகி October 15, 2006 1:56 pm  

நல்லது ஷ்ரேயா இந்தப் பின்னூட்டத்தைப் பதிவாக இட்டது. நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 16, 2006 9:33 am  

கல்வெட்டு - //கட்டுடைப்பது கஷ்டம்தான்..அப்படியே இருந்து விட்டால் யார்தான் உதவுவார்கள்.//
குதிரைக்கு நீரைக் காட்டத்தான் முடியும், அதன் சார்பில் நாம் குடிக்க முடியாது. அவரவருக்குத் தெரிய வேண்டும். கருத்துக்கு நன்றி .

`மழை` ஷ்ரேயா(Shreya) October 16, 2006 9:43 am  

Fairy - எங்கேயும் போக விரும்புவதோ அல்லது எங்கும் செல்லாமல் இருப்பதோ ஒருவரது தனிப்பட்ட விருப்பம். (உதாரணத்துக்கு, எனக்குப் பிடிததெல்லாம்/இன்றியமையாதது என எண்ணப்படுவதெல்லாம் உங்களும் பிடிக்குமென்றில்லை/ தேவையானது என்று உங்களால் எடுத்துக் கொள்ளப்படவும் மாட்டாது. நீங்கள் செய்கிறதெல்லாம் நான் செய்யமுடியாது. இருவருடைய இயல்புகளும் வித்தியாசமானவையல்லவா.)

கட்டுப்பாடுகள் திணிக்கப்படக்கூடாது என்பது என் கருத்து.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 16, 2006 9:47 am  

கார்த்திக் - சரியாகச் சொன்னீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புரிதல். பேசிக்கொண்டே இருக்க இது நல்லதொரு தலைப்புத்தான். ஆனால் செயலில் கொள்ள முனையும் போதுதான் அதன் நடைமுறைப் பிரச்சனைகளும் ஏனைய கருத்துகளும் சந்திக்கப்படுகின்றன. சின்னச் சின்ன விதயங்களிலும் ஆதிக்கம் செலுத்தப்படாமல் இருப்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கருத்துக்கு நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 16, 2006 9:48 am  

நன்றி செல்வநாயகி

பெட்டகம்