"இரை" மீட்டல் 2

I scream, you scream , we all scream for ice cream!!

எப்ப கார்ணிவெல் ஐஸ்க்றீம் அறிமுகமானண்டு தெரியல்ல. ஒருவேளை பள்ளிக்கூட விடுதியில தங்கியிருக்கேக்குள்ளயாயிருக்கலாம்.

விடுதிச் சாப்பாடு.. காலையில பாண் இரிக்கும் இல்லாட்டி புதன் கிழமையில கிரிபத். (கிரிபத் இரிக்கே, திண்டுத்துப் போனா சரியா ரெண்டாம் பீரியட்டுக்கு நித்திரை தான் வரும்) வேற என்னென்ன இரிந்தண்டு ஞாவகமில்ல. எட்டுமணிக்குப் பள்ளி துடங்கிற. ஏழு மணிக்கு மணியடிச்சோண்ணே வந்து வரிசையா நிக்கோணும். பிறகு சாப்பாட்டறைக்குள்ள போய் மேசையடியில நிண்டு ஒருக்கா சாப்பாட்டுக்கு நன்றி/செபஞ் சொல்லோணும். சொல்ல விருப்பமில்லண்டா பேசாம நிக்கல்லாம் இல்லாட்டி ஆரையோடையும் தனகுவேலை. முதல் நாள் பின்னேரம் புறக்கின காக்கா இறக ஆராவது புள்ளையிர தலைமயிரில செருகல்லாம்.. பிரார்த்தனை சொல்ற மேட்ரனுக்கு ரொக்கற் உடல்லாம்.. ரெண்டு நிமிசத்துக்குள்ள என்ன கூத்தெல்லாம் காட்டேலுமோ அதெல்லாம் காட்டி எப்பிடியாவது ஆரயாவது சிரிக்க வைச்சிர்ற. சின்னாக்கள்தானே.. 1 - 4ம் வகுப்புப் புள்ளையள் தான் பக்கெண்டு சிரிக்குங்கள். மத்தியானச் சாப்பாடு சொல்றதுக்குப் பெரிசா ஒண்டுமில்ல. இரவுச் சாப்பாட்டுக்கு மீன்/முட்டை/மாட்டிறைச்சி இரிக்கும். புள்ளையள் பாவமெண்டுத்து கிழமையில ஒரு நாளோ ரெண்டு கிழமைக்கொரு தரமோ கோழிறச்சி. வியாழக்கிழமையில.

சனி-ஞாயிறுக்கு வீட்டுக்குப் போற பிள்ளையள் கொண்டாற, இல்லாட்டி பாக்க வாற அம்மாப்பா கொண்டாற தின்பண்டமெல்லாம் வைக்க இடமிரிந்த. பின்னேரம் படிச்சி முடிஞ்சோணே இதுகளக் கொண்டுபோய்த் தின்ற. விதம் விதமான பலகாரம், முட்டைமா(இது என்ட பங்குக்கு) பிஸ்கற் என்டு நிறய.

இவ்வளவுமெல்லாம் திண்டும் , பிறகு சில நாள் நடு இரவில நள்ளிரவு விருந்தெண்டு சொல்லி நடத்திற. மேட்ரன் ஒருநாள் சத்தம் போட்டாவு. அடுத்த தரம் என்ன செய்தமெண்டா ஒராள் போய் அவட அறைக்கதவில் பூட்டைப் போட்டுத்து வந்துத்து. அவ பாவம், "கதவத் திறங்கடி" என்டு ஒரே ஏச்சு. எங்களுக்கென்ன கழண்டா கிடக்கு அவட கதவைத் திறக்க. பேசாம உட்டுத்தம். அவையும் படுத்துத்தாவு.. நாம நல்லாக் கிடந்து சிரிச்சி கூத்தடிச்சி திண்டிட்டுப் படுத்த. அடுத்தநாள் காலம்பிற நைசாப் போய் பூட்டைக் கழட்டித்தம். அவ காலையிலயும் கிடந்து தட்டுறாவு. ஒன்டுந் தெரியாத மாரிப் போய் "ஏன் மிஸ்? கதவு திறந்துதானே கிடந்த" என்டு சொல்லித்து அவ பதில் சொல்ல முதல் ஒரே ஓட்டம்!! :O)

ஒரு தவணைக்கு ஒருக்கா மாதிரி வெளில கூட்டித்துப் போவாங்க விடுதிப் பிள்ளையள. அதுக்கெண்டே சனி-ஞாயிறில வீட்டுக்கும் போகாமச் சில கிளையள் நிக்கிற. தெறிப்பு வேல பாக்கத்தான். ஒருக்கா இப்பிடித்தான் படம் பாக்கக் கூட்டிப் போனவங்க முன்னுக்கு லிபேர்ட்டித் தியேட்டருக்கெண்டு நினைக்கன். இன்டியானா ஜோன்ஸ் யேசு கடைசியாப் பானமருந்தின புனிதக் கோப்பையைத் தேடிப் போற கதை.[வேதக்காரப் பள்ளிக்கூடமெண்டவடியா வேற கதைகள் கூட்டிப் போமாட்டாங்க] அண்டைக்கு நாங்க காட்டின கூத்தில அதுக்குப் பிறகு படத்துக்கே கூட்டிப் போறல்ல. :O) அப்பிடி வெளில போனநேரம்தான் முதல்தரம் கார்ணிவெலுக்குப் போயிரிப்பன் போல. ஏனெண்டு தெரியா அதப்பத்தி ஞாவகமில்ல.

ஒரு நாள் என்ட ஒரு நண்பி அக்காச்சிக்குப் பிறந்த நாள். முதலே அம்மாட்டக் கேட்டு வைச்சித்து, பிறகு எப்பிடியோ wardenட்டயும் அனுமதி வாங்கித்தாவு. செரியான கெட்டிக்காரி. அவட நண்பிகள் நாலு பேரும் இவையும் நானும். கார்ணிவெலப் பத்தி என்ட முதல் ஞாவகம் அதுதான். அங்க போனா, என்னத்தை ஓடர் பண்ணிற எண்டு தெரியா. சரியெண்டு ஒரு சொக்ளற் சன்டே குடிச்சன். சா! என்ன திறமான ஐஸ்க்றீம். மட்டக்களப்பில இருக்கக்குள்ள பல்லுப் புடுங்கி
துக்குக் கிடைச்ச "பௌசியா"க்கடை ஐஸ்க்றீமை விடயே பரவால்லண்டா பாத்துக் கொள்ளுங்க.

விடுதியால வெளிக்கிட்ட பிறகும் ஆருக்கும் ட்றீட் குடுக்கிறண்டா இந்தக் கடைதான்.கொஞ்சம் பழைய வீட்டிலானே கடை நடந்த, திருத்த வேலை செய்யிறண்டு பிறகு கொஞ்ச நாள் பூட்டியிருந்த. Banana boat என்டும் ஒரு ஐஸ்கிறீம். வாழைப்பழத்த நெடுக்காப் பிளந்து இன்னுமென்னென்னையோ போட்டுத் தருவாங்க. [இப்ப சிட்னில இப்பிடி ஒரு ஐஸ்கிறீம நினைச்சும் பாக்கேலா! கிலோ தொண்ணுத்தொம்பது சதத்துக்கு வித்த வாழைப்பழம் இப்ப கிலோ 11 டொலருக்குக் குறைவா இல்ல. இந்த சீத்துவத்துல பனானா போட்தான்!!] பிறகு walls (streets) ஐஸ்க்றீம் கடை எல்ல இடத்திலயும் வந்தோணே வாற வழில வாங்கி வழி வழியாக் குடிச்சி வாற. அம்மாக்கு அந்தப் பழக்கத்தை கண்ணில காட்டேலா. ஆக்கள் ஒரு சாங்கமாப் பாப்பாங்களாமெண்டு சொல்லுவாவு. அவ ஏசிறன்டுத்து, விறு விறெண்டு ஐஸ்க்றீமைத் திண்டொழிச்ச பிறகுதான் வீட்டுக்கே போற. :O))

இந்த வனிலா ஐஸ்க்றீம் இரிக்கெலுவா..அதோட உறைப்புச் சுண்டல் சாப்பிட்டிருக்கெயளா? [க்றீம் கிறக்கரோட சேத்து சீசும் சீனிசம்பல்/கட்ட சம்பலும் சாப்பிடுற. இப்பிடி கொஞ்சம் 'வித்தியாசமான' கொம்பினேசன் முயற்சியும் இடைக்கிட செய்யிறதான் :O) ] [க்றீம் கிறக்கரெண்டத்தான் இன்னொண்டு ஞாவகம் வருது. லெமன் பவ் என்டொரு பிஸ்கற் வாறதானே. அதில பிஸ்கற் ரெண்டுக்கும் நடுவில லெமன் க்றீம் இரிக்கும். சின்னனில பிஸ்கற்றப் பிரிச்சி கிறீம மட்டும் ராவித் திண்டுத்து வெறும் பிஸ்கற்ற அம்மாட்டத் திருப்பிக் குடுக்கிற. போன கிழமை ஒரு சின்னாள் அதேவேலை செய்யிறதக் கண்டன். ;O) ]

உறைப்புச் சுண்டல் ஐஸ்கிறீமோட சாப்பிட்டதா என்டு கேட்டனாந்தானே..அந்தச் சுண்டலுக்கு காலிமுகத்(Galle face) திடலுக்குப் போகோணும். ஒரு காலத்தில வீட்டில எல்லாரும் சேர்ந்து போகக் கூடியதா இருந்த. தண்ணில் கால் நனைக்க உட மாட்டாங்க .. ஆனா அந்தக் காத்து.. அப்பிடியொரு சுகம். கடற்கரைக்குப் போனாக் கிடைக்கிற இன்னொண்டு அவிச்சுப் பொரிச்ச மரவள்ளிக் கிழங்கு. கொச்சிக்காத்தூளும் உப்பும் தூவி வச்சிரிப்பான். அந்த மாதிரி இரிக்கும். அந்தத் தள்ளு வண்டில் அங்கெங்கயோ வரக்குள்ளயே கண்டுபிடிச்சிருவம். இப்ப யோசிக்கிறன், தின்னுறத்துக்குத்தான் பீச்சுக்குப் போனனாமளா என்டு.

அண்ணாவங்க நிண்டா, கடற்கரைக்குப் போனா அன்டைக்கு முக்கியமான ஒரு சாப்பாட்டுச் சாமான் கட்டாயம் இரிக்கும். அத என்னண்டு அடுத்த பதிவில. சரியா மனே..

சொல் விளக்கம்:
கிரிபத்(சிங்களச் சொல்) - பொங்கல்
தெறித்தல் - குழப்படி/அட்டகாசம் பண்ணல்.
வேதக்கார - கிறிஸ்துவக்கார
அதுக்காவண்டி - அதற்காகவேண்டி
கொச்சிக்காய் - மிளகாய்
போனனாமளா - போனோமா
திறமான - உயர்ந்த/சிறந்த
ஏசிறன்டுத்து - ஏசுவது(திட்டுவது) என்பதால்
இரிக்கெலுவா - இருக்கிறது அல்லவா
ஒரு சாங்கமா - ஒரு மாதிரியாக
திண்டொழிச்ச - தின்று (உண்டு) முடித்த

9 படகுகள் :

வல்லிசிம்ஹன் October 19, 2006 5:55 pm  

இரை மீட்டல் என்றால் என்ன?
இவ்வளவு ஐஸ்க்ரீம்
படிச்சாலே வயிறு ரொம்பிடுச்சு. இன்னும் எனக்குத் தைரியம் போதாது. கோன் ஐஸைக் கையில் வைத்து சாப்பிட.

கண்டிஷன் போட்டே வளத்துட்டாங்கப்பா.மிட்னைட் பார்டிக்கே மவுசு அதிகம்தான்.நல்லா இருந்தது சுண்டலும்,உங்க ஊரு காத்தும்.

கலை October 19, 2006 10:04 pm  

அந்த கிரீம் கிரெக்கர் பிஸ்கெட் எனக்கும் நல்லா பிடிக்கும். ஒருக்கால் அந்த ஐஸ்கிறீமோட, உறைப்பு சுண்டல் சாப்பிட்டுத்தான் பார்க்க வேணும். :)

துளசி கோபால் October 20, 2006 9:19 am  

'கோ ஐஸ்க்ரீம்' நக்கித் தின்னும் வகை! அதான் வல்லிக்கு தைரியம் இல்லை:-)))

நான் தீரி( தீரனுக்குப் பெண்பால்)

கிரிபத்க்கு பொருள் சொன்னதுக்கு நன்றி. இல்லேன்னா இருக்கற பாயும் போயிருக்கும்:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) October 20, 2006 11:07 am  

வல்லி - கொழும்பில் ஒரு ஹோட்டலில் All you can eat என்று ஐஸ்க்றீம் கொண்டாட்டம் நடந்தது.. போகக் கிடைக்கலே.. :O(

//எனக்குத் தைரியம் போதாது. கோன் ஐஸைக் கையில் வைத்து சாப்பிட//
எதுக்கு பயந்துக்கிட்டு? அப்பிடியே நாக்கை ஒரு சுழட்டு சுழட்டி.. [வேணாம், பாவமா இருக்கு. விட்டிர்றேன்.;O) ]

`மழை` ஷ்ரேயா(Shreya) October 20, 2006 11:10 am  

கலை - சுண்டலும் நல்லம் அல்லது உறைப்புக் கடலையும் மொறுமொறெண்டு நல்லாத்தான் இருக்கும்.

//கிரீம் கிரெக்கர் பிஸ்கெட்//
ஊரில இளப்பமா அதை காய்ச்சல் பிஸ்கற் என்டுவாங்க.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 20, 2006 11:20 am  

"கிரி"ன்னா பால். "பத்"னா சோறு/சாதம். ஆக அது பாற்சோறு/பால்சாதம்தான்.

பாயை பத்திரமா வைச்சுக்கோங்க!! என் பதிவில அப்புறமா ஒருவேளை தேவைப்படும்!! ;O))

டூப்ளிகேட் ஜிகே உங்களை காணோமேன்னு கேட்டான் :O)

கலை October 20, 2006 5:59 pm  

அட நான் மாத்திச் சொல்லிப்போட்டன். எனக்கு பிடிச்சது கிறீம் கிரெக்கர் இல்லை. லெமன் பவ் :) (இதைத்தான் சொல்லுறது, எதையோ நினைத்துக் கொண்டு, எதையோ கதைக்கிறது/எழுதுறது எண்டு).

`மழை` ஷ்ரேயா(Shreya) October 23, 2006 10:37 am  

//எனக்கு பிடிச்சது கிறீம் கிரெக்கர் இல்லை. லெமன் பவ்//

நீங்களும் க்றீமில்லாத வெறும் பிஸ்கற்றை மட்டும் அம்மாட்டக் குடுக்கிறனீங்களா? :O))

sooryakumar November 02, 2006 10:42 am  

இப்போதுதான் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். சுவையாக இருக்கிறது. முழுவதும் படித்த பின்னர்..நீண்ட பின்னூட்டம் எழுதுகிறேன். என் பதிவு பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்

பெட்டகம்