பயணியின் குறிப்புக்கள்

காணவில்லையென்று தேடின கனபேரின்.. சரி சரி.. மூன்று பேரின் அன்புக்கு நன்றி.

இங்கே கோடை ஆரம்பிக்க உலகத்தின் வடபாதியில் குளிர்காலம் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு கார்த்திகை மாதத்தில் அமைந்தது என் வாழ்வின் முதலாவது பெரிய (பள்ளிக்காலம் தவிர்த்த) விடுமுறை & பயணம். பயணிப்பது ஒரு கலை. முதன்மையான அடிப்படைப் பாடங்கள் சில இப்பத்தான் கற்றிருக்கிறேன். இலக்கின்றிப் போக வேண்டும் என்கிற ஆசையிருந்தாலும், இந்த முறை இலக்கு வைத்துத் தான் புறப்பட்டோம். எனக்கும் ஒரு ஞாபகமாய் இருக்கட்டுமென்று நினைத்து
க் குறிப்பேடொன்றைக் கொண்டலைந்தேன். ஆனாலும், எப்பொழுதும் நடப்பது போல அரைகுறை வேலைதான். கடைசி 11 - 12 நாட்கள் பதியப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னாலெல்லாம் போன இடம் வந்த இடமென்றும் அந்த நாட்களில் என்ன நினைத்துக் கொண்டேன், எதைப் பற்றி சிந்தித்தேனென்றும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொருதாளாய் படமெடுத்து வலையேற்றலாமோவென்று யோசித்து, வேண்டாமென்று, நான் மிகவும் ரசித்த இடங்கள் பற்றிய என் குறிப்புகளை மட்டும் படங்களுடன் வலையேற்றுகிறேன்.

இடம் பார்த்ததை விட ஆட்கள் பார்த்ததுதான் அதிகம் என்றாலும் ஐந்து வாரங்களில் மொத்தம் 6 நாடுகளில் திரியக் கிடைத்தது. அதிலே எப்படியும் 7 நாட்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணிப்பதிலேயே கழிந்து விட்டன. ஆக நான்கு வாரங்களில் ஆறு நாடுகள். நினைத்த வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒன்றைத்தான் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், அந்தக் கதைக்கு அவரது நாட்டுக்கு வரும் வரை பொறுக்க வேண்டும். :O)

வழமையாக உல்லாசப்பயணிகளின் காலடி பட்டுத் தேய்ந்து போன தெருக்களினதும், சில முக்கிய இடங்களினதும் விருந்தினர் வரிசையிலே நாங்களும் இணைந்து கொண்டோம். உல்லாசப் பயணித் தடம் நிரம்பாத இடங்களையும் பார்த்தோம். இயற்கையை ரசித்தபடியும், வியந்தபடியும் கழிந்த பயணங்கள். பாரிஸில் நின்ற போது சின்னையாவிடமிருந்து (மூதூர்த் தோட்டத்தில் வேட்டையாடப் போவாராம்.. அந்தக்காலத்தில்) உக்கிளான் என்கிற சிறு மான் வகை பற்றி அறிந்து கொண்டேன். நண்டு பிடிக்கப் போகிற கதை சொன்ன போதும் ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன்.. ஆனால் பிறகு மறந்து விட்டது. அவரிடம் கேட்டால் என்ன சொன்னாரென்று அவருக்கும் ஞாபகமில்லை.

மனித இயல்புகள் & வாழ்வைப் பற்றியும் காலவோட்டம் பற்றியும் கூட நிறையக் கற்றுக் கொண்டதொரு பயணமாக இருந்தது. பயணிக்கும் போது மனதைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளே நுழைந்து இனிதாய் நிறைக்கும் அனுபவங்கள் எதிர்பாராதனவாய் இருக்கும். அட! என்று வியந்து நின்று நிதானமாய் அனுபவிக்கிற நாட்கள் நீண்டு கொள்ளும்.

எப்போதுமே ஏதோ ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று கொண்டுதானே இருக்கிறோம்?
வாழ்வதே பயணிப்ற்குத்தானோ என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். :O)

7 படகுகள் :

கானா பிரபா December 29, 2006 11:57 am  

உலாத்திவிட்டு வந்திட்டியளே, படங்களைப் போடுங்கோ பார்ப்பம்

வசந்தன்(Vasanthan) December 29, 2006 12:49 pm  

உக்கிளான், உருவத்தில் மானுக்கும் முயலுக்கும் இடையில். சுவையில் எல்லாவற்றுக்கும் மேல்.

ஒரு பொடிச்சி December 29, 2006 2:51 pm  

lucky you! :-)
அனுபவங்கள எழுதுங்க,
போகாட்டாலும் வாசித்தாவது கொாள்ளலாம்..

இளங்கோ-டிசே December 29, 2006 2:58 pm  

ஆகா கொடுத்து வைத்தவர். பயணக்குறிப்புக்களை தொடர்ந்து எழுதுங்கோ. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) December 30, 2006 12:48 am  

நன்றி நண்பர்களே. விரைவில் பதிவிடுகிறேன்.

வசந்தன் - உமக்கு நிறைய தாவரங்களையும் விலங்குகளையுந் தெரியுதப்பா.. பொறாமையா இருக்கு!

கஸ்தூரிப்பெண் January 04, 2007 4:41 pm  

பனியின் குறிப்புகளை சீக்கிரம் சொல்லுங்கப்பா!!!!! படிச்சுவிட்டுதான் அடுத்த விடுமுறைய திட்டமிடனும்.

மலைநாடான் January 05, 2007 9:35 am  

//வசந்தன் - உமக்கு நிறைய தாவரங்களையும் விலங்குகளையுந் தெரியுதப்பா//

அதேனென்டாங்கோ, அவர்தான்.... வேணாம்:))

பெட்டகம்