அவசரமாக ஐடியா தேவை.

நேற்று ஒரு பெண்குழந்தை பெற்றெடுத்த, மூன்று மாதங்களே இங்கே தங்கப்போகும் என் தோழிக்கு, உபயோகப்படும்படி என்ன கொடுக்கலாம்? சொல்லுங்களேன்?

புதுத்தாய்மார் (மற்றவர்களால் கொடுக்கப்படக்கூடியதாக) என்ன விரும்புவார்கள்?

பார்ப்பதற்கு இன்றிரவு போகிறோம் நண்பர்களே, இன்னும் 5 மணித்தியாலத்திற்குள் பதில் சொல்லுங்களேன்...

குறிப்பு:

 • தாயும் சேயும் நலம்.
 • இங்கே கோடைகாலம் இப்போது.
 • புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடில்லை அவளுக்கு.
 • நிறைய ஆடைகளும் வந்துவிட்டனவாம் குழந்தைக்கு.

மனக்கறை

அழகானதொரு கடற்கரைப்புறம் அசிங்கமாகிப்போன கதை:

க்ரொனொலா: இரண்டு வாரங்களுக்கு முன்பு - பணிமுடிந்து நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு தன்னார்வ lifeguardகள் மத்தியதரைக்கடற்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் தோற்றமுடைய ஒரு குழுவினரால் "இது எங்களுக்கான கடற்கரை. இங்கு எங்கே வந்தாய்? போ" என்று பயமுறுத்தப்பட்டார்கள். "எல்லாருக்குமான கடற்கரையில், உங்களைப் பாதுகாக்கவே நாங்கள் செயல்படுகிறோம்" என்று பதில் சொன்னதற்கு பரிசு மூர்க்கமான தாக்குதல். தாக்கப்படுவதைக் கண்டு சண்டை விலக்க ஓடிவந்த மூன்றாவது lifeguardம் பலமாகத் தாக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்: கடற்கரையில் lifeguardகள் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மத்தியகிழக்கு நாடுகள்/மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் போன்று தோற்றமுடையோர் தாக்கப்பட்டார்கள். காவலர் பாதுகாப்பளிக்க நேரிட்டது. lifeguard சங்கத்தினர் சில லெபனானியர்களுக்குத் தம் அலுவலகத்தில் பாதுகாப்பளித்தார்கள்.

அணிதிரண்ட அன்றிரவும், தொடர்ந்த இரவுகளிலும்: தம்மினத்தவர் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நொருக்கப்பட்டு, வீடுகளுக்கு கற்களெறியப்பட்டன.

பதிலுக்குப் பதில் என்று தொடர்கிறது சிட்னியில்.

பதட்டம் நிலவுகிறதென்றும், பிரச்சனைப்பட்டார்களென்றும் சொல்கிற ஊடகங்கள், பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்கள் பற்றி அலட்டிக் கொள்வதாய்க் காணோம். சம்பந்தப்பட்டவர்கள்: லெபனான்/பக்கத்து நாடுகளிலிருந்து இங்கே வந்து குடியேறியோர்/இரண்டாம் தலைமுறை & வெள்ளையர். (ஆக, அவுஸ்திரேலியனை, இன்னொரு அவுஸ்திரேலியன் தாக்குகிறான்!). இந்த வெள்ளை அவுஸ்திரேலியர்களுக்கு இருப்பது ஊடகங்களாலும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் அரசினாலும் புகட்டப்படும் செய்திகள். இவர்களுக்கு மத்தியகிழக்கு நாடுகள் / மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்களென்றால் ஒரு பீதி. தீவிரவாதியாக இருப்பானோ.. குண்டு வைப்பானோ என்று. அந்த பாதுகாப்பின்மையே ஒருவித மூர்க்கமான தற்காப்பு உணர்ச்சியை வளர்க்கிறது.

இங்கே, லெபனானியர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம் நல்லதன்று. இளைஞர்கள் சிலர் சேர்ந்தால் பொது இடத்தில் intimidating ஆக நடந்து கொள்வதுண்டு. இது லெபனானியர்கள் மட்டுமல்ல என்றாலும், கொஞ்சம் வன்முறை அதிகமானவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களே முன்னிறுத்தப்படுகிறார்கள். குழு வன்புணர்வுச் சம்பவங்களும் நடந்துள்ளன. வன்புணர்ந்த குழுவினர் இச்சமூகத்தினர் என்பதும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வெறுப்பையும், ஒரு வித அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. எந்தச் சமூகத்திலும் பிரச்சனைக்குரியவர்கள் சிறு அளவில் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்லாருமே இப்படியானவர்கள் என முத்திரை குத்துவது எனக்கென்னவோ முட்டாள்தனமாகப் படுகிறது.

பிடுங்குப்பாடாக (நன்றி வசந்தன்) இருக்கிறதைப் பற்றி லெபனானியரொருவர் பத்திரிகைக்கு "எப்போதும் ஒரு படி குறைவாகவே நடத்த/பார்க்கப்பட்டோம்; குழு வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்த போது ஒட்டுமொத்தமாக(அந்த ஒரு சிலர் காரணமாக) எங்கள் சமூகம் ஒதுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டோம். இப்படியானவற்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்." என்று சொல்கிறார். கடைசியாக அவர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா? "வன்முறைக்குக் காரணம் முஸ்லிம் லெபனானியர்கள்தான்; அவர்களுடனான பிரச்சனை அவர்களுடனேயே பேசித்தீர்க்கப்படவேண்டிய ஒன்று. அதனால் கிறிஸ்துவ லெபனானியர்களான எங்களைப் பலிகடாவாக்காதீர்கள்". இது எப்படி இருக்கு?

கடற்கரை எல்லாருக்குமானது; தனிப்பட்ட குழுவுக்கோ அதைச் சார்ந்தவர்களோ மட்டுமானதல்ல என, வாழ்க்கை முறையைக் காக்க வெளிக்கிட்டவர்கள் - lifeguards மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் - வன்முறைக்கு எதிரானதாக ஒலிக்கத் தொடங்கியது எப்படி/எப்போது இனவெறி சாற்றும் ஒன்றாக முகம் மாற்றித் தடம் மாறியது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இனவெறி எல்லாருக்குமில்லை. இருக்கிற சிலர் அதை வெளிக்காட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகவே இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு வெள்ளையர் அல்லாதோர் எவரும் அவரவர் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டியவரே. அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடு என்பதோ, வேறு நாட்டிலிருந்து வந்து இங்கு வாழ்வோர் நாட்டுக்குச் செய்யும் பங்களிப்பைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்கள் ஒருபுறமென்றால், மறுபுறத்தில் இங்கே வந்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளோரின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் ஊடகங்கள், அரசு புண்ணியத்தில் சாதாரண சராசரி மனிதர்களாய், குடிமக்களாய்ப் பார்க்கப் படாமல் விடப்படுகையில், அதன் காரணமாக ஏற்படும் ஆத்திரம், காழ்ப்புணர்ச்சி என்பவற்றால் ஆட்கொள்ளப்பட்டு வேண்டாத செய்கைகள்/பேச்சு/எண்ணங்களுடையவர்களாக மாற்றப்பட்டவர்களாய் காணப்படுகிறார்கள்.

அத்தகைய கொஞ்சப்பேரின் முட்டாள்தனத்தாலும் குறுகிய மனப்பாங்கினாலும் ஒரு வேண்டாத சிறு பொறியாய் ஆரம்பித்தது பெரிதாய்ப் பரவுகிறது. கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலே இந்தப்பிரச்சனையை கட்டுமீறிப்போவதிலிருந்து உடனடியாய்த் தடுக்கும். நாளாந்த நடவடிக்கையோ வாழ்க்கையோ கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக மேலும் இனவெறி தூண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடக்காதிருக்கும்படி கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், காவலர்களுக்கு இன்னும் கூடிய அதிகாரங்கள் அளிக்கப்படல் போன்றவை வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் குறைக்க உதவும்.

ஆனால், என்னதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இருபகுதியினருமே பதிலுக்குப் பதில் என்று நடந்து கொண்டால் ஒரு நாளும் முடிவு வராது. Political correctness பார்த்து, நோகாமல் நொய்யாமல் தீர்வு காண்பதென்பது முடியாது. இரு தரப்புமே பிரச்சனை இருபக்கமும் இருக்கிறதென்பதை உணர்ந்து அதைப் பற்றித் தெளிவாகப் பேசி தீர்க்கமான முடிவெடுத்து அதனைச் செயற்படுத்த முற்படும் வரை, இப்போது க்ரொனலாவிலும் மரூப்ராவிலும் நடப்பது தொடர்ந்து வேறு வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்கி, ஊடகங்களுக்குச் சிலநாள் தீனியாய் இருக்குமேயன்றி சுமுகமான உறவுள்ள சமூகம் உருவாகும் சூழ்நிலை தராது.

தண்டனை

அவுஸ்திரேலிய கிழக்கு நேரப்படி, இன்று காலை 9மணிக்கு (சிங்கப்பூர் காலை 6) அந்த இளைஞன் தூக்கிலிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்.

அவன், வான் ஙுவென். வழிதவறிய தனது இரட்டைச்சகோதரனின் வழக்குரைஞர் கடனைத் தீர்ப்பதற்காக சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்டிருக்கிறான். சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்திலே 400கிராம் ஹெரோயின் சகிதம் பிடிபட்டதற்கான தண்டனையே மேற்சொன்னபடி நிறைவேற்றப்பட்டது.

நல்லதொன்றைச் செய்ய யோசித்தும், அதைச் செயற்படுத்த தவறான வழியைத் (தெரிந்தே) தேர்ந்தெடுத்ததே அவனுக்கு முடிவையும் தேடித்தந்தது. அவன் குற்றவாளி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அவனுக்களிக்கப்பட்ட தண்டனை தான் உறுத்துகிறது. அவன் செய்ததற்கு சிறைத்தண்டனை போதும் என்பதே என் கருத்து. சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் அது முடிந்ததும் வெளியே வந்து இதையே மீண்டும் செய்ய மாட்டானா என்ற கேள்விக்கு (ஆயுள் தண்டனை வழங்கலாம் என்பதைத்தவிர) என்னிடம் பதிலில்லை.

சிங்கப்பூருக்குள் போதைமருந்து கடத்துவோருக்கு மரணதண்டனையளிப்பதன் மூலம் அவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை, தமது எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தயக்கத்தைக் காட்டும்படி வைக்கிறது சிங்கப்பூர். இந்தத் தண்டனை முறை அந்த எச்சரிக்கை விடுத்தலைச் செவ்வனே செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. மரண தண்டனைதான், ஆனாலும் தூக்கிலிட்டுக் கழுத்து முறிய, துடிதுடிக்கக் கொல்வதுதான் ஒரே வழியா? இதே எச்சரிக்கையை வேறு தண்டனை(கள்) மூலம் விடுக்க முடியாதா?

குறிப்பு: கடைசியாக மகனைக் கட்டித்தழுவ அனுமதி கேட்ட அவனது அம்மாவுக்கு, ஜோன் ஹவாட் (அவுஸ்திரேலியப் பிரதமர்) தனிப்பட்ட வேண்டுகோள் சிங்கப்பூருக்கு விடுத்தமையால், மகனது கைகளைப் பற்றிக்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

குறுக்கெழுத்து II

கொஞ்சம் வித்தியாசமான குறுக்கெழுத்து.

ஆங்கிலத்திலே குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லை கட்டங்களில் இட வேண்டும்.(உதாரணமொன்று நிரப்பப்பட்டுள்ளது). செய்றீங்களா?

நிரை(இ.வ):

1. Slumber 2. Post 4. Particle 5. Night 6. Hindrance; Harm 7. Bend 8. Cooking 9. Reparation
11. Vessel 13. Limericks 14. Sin 15. Goat 17. Widow 18. Consent 20. Abbreviation Of Mister (Reversed)


நிரல்(மே.கீ):

1. Mind 3. Rapidity 4. Proximity 5. Parody 6. Tooth 7. Paddy Field 8. Occurence 10. Home 12. Disparity 15. Yes (Upside Down) 16. Our 19. Tree (Upside Down) 20. Moon

இது கொலைகளின் கதை

மு.கு: இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம்..பிறகு என்னுடன் சண்டைக்கும் வர வேண்டாம்.

பகல் பலது வீட்டிலே கழிந்த போது ஆசையில் எடுத்து/வாங்கி வந்து பார்த்துப் பார்த்து தேவையறிந்து உரமிட்டு வளர்த்ததுவும், பள்ளிக்குப் போகையிலேயும் பாசத்துடன் கவனித்ததுவுமாய் இருந்த என் செல்லச் செடிகள்... ( "இவ்வளவு மரம் ஏன் வளர்க்கிறீங்க? கரப்பொத்தான் எல்லாம் வரும்". "இல்லை அப்பிடி ஒன்டும் வராது. நான் கவனமாப் பார்ப்பன்")

வாடிப்போய்த் தண்டுடன் இலையில்லாமல் நின்று வளர்ச்சி நிறுத்தப் போராட்டம் நடத்தின வாழைக்குத் தலை வெட்டி, ("ஐயோ! ஏன் வெட்டுறீங்க? ஒரேயடியா சாகப்போகுது". "இல்ல.. இப்பிடி வெட்டினா வருமாம்..--- சொன்னவ ".) இலைகள் வர, விசேட நாளுக்கெல்லாம் தலைவாழை கிடைத்ததுவும்..("அப்பவே சொன்னன் தானே! :O) ")

தாவரமும் அதன் வளர்ப்பும் பற்றி நண்பியின் ஆர்வம் தொற்றியதில் அது பற்றிய வகுப்புகளுக்குப் போனதொரு ("அவக்கு back yard இருக்கு, அவ அதுக்கு மரம் வைப்பா. உம்மட நிரம்பின பல்கனியில இனியெங்க இடம்?". "இல்லையில்ல, எப்பிடிப் பராமரிக்க என்டு படிக்கத்தான் நான் போறன்") ஆர்வக் கோளாற்றுக் காலத்தில் வாங்கின பூந்தொட்டிகளும், சிலபல செடிகளும் ஏற்கனவே இருந்த பலகணித் தாவரக் குடும்பத்தில் கலந்தனவே. ( "இன்டைக்கு இவ்வளவும்தானா?". ":O ")

சமையலறையின் சேதன மீதிகள் போட்டு வளர்த்ததில் ஒன்றாய் நன்றாக கிளையும், கிளையில் இலையும் விட்டு, கரப்பொத்தான் தொடங்கி சிலந்தி வரை பலதுக்கும் புகலிடமாய் ("அப்பவே சொன்னன்..இதெல்லாம் போடாதையும் என்டு!கேட்டாத்தானே!! ") நின்ற இரட்டைப்பிறவிக் கருவேப்பிலையை வகுப்புக்குப் போய் பெற்றதாக நினைத்துக்கு கொண்ட அசட்டறிவின் காரணமாய்ப் பிரித்து, துணையிழந்த சோகத்தில் அவற்றை ஆழ்த்தியதும் ("வீண் வேலைகள் செய்யிறது"), அத்துடனே பக்கத்தில் நின்ற அழகான கானேஷன் தண்ணீர் தண்ணீரென அலறியது கேட்காமல், அதை தொண்டை வற்றச் சருகாக்கியதும், எனதருமைச் சிலந்திப் புல்லும் அதே கதிக்காளாகியதும்.. :O(

தேயிலையும், முட்டைக் கோதும் போட்டு வளர்த்த ரோசாச்செடியெல்லாம்வெறும் முள்ளாகி நின்று ("ரோசாப்பூவெண்டா எப்பிடி இருக்கும்?" .."Grrrr"), வளரப் பார்த்த வத்தகை, வான் பார்த்து, பூமி ஆராய்ந்து, வராமலே போனதுவும் என்று தாவர சங்கமத்துள் பலதும் வளர்த்திளைத்தேன் நான் - மெய்யே கள்ளியொன்று என்றறிந்து இன்புற்றேன். ( "எல்லாம் போய் இப்ப இதுவா!")

கவனியாது விட்டாலும், இன்னும் இருக்கிறேன் பார் என்று காட்டி மகிழ வைக்கும் அன்பான கள்ளிச்செடிகளுக்கும் (" நல்லகாலம், ஒன்டும் செய்யாம விட்டிருக்கிறீர்..உயிரோட நிற்குது", ":O("), வீட்டுக்குள்ளே இருப்பதனால் தப்பிப் பிழைத்திருக்கும் மூங்கிலுக்கும் துணையாய் நேற்றுக் கிடைத்த Kangaroo Paw வுக்கு "மேற்தட்டு" வாழ்க்கை வெறுப்பது எப்பவோ.. அன்றைக்கு மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கும்.

இருக்கிறது..இல்லை?

இருக்கும் பொருள் :

 • இருப்பது போன்று தோற்றம் உடையது
 • இருப்பது போன்று தோற்றமற்றது. (புலன்களால் உணர முடியாததாய் இருப்பது)

இல்லாத பொருள்:

 • இருப்பது போன்ற தோற்றம் தரக்கூடியது.

சாப்பாடு, சட்டை & சாயம்

நல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்!!) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. "சோதனை மேல் சோதனை" தான்!) திரும்பவும் வந்திருக்கிறேன்.

தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை! விரைவில் தொடர்பு கொள்கிறேன்.


------------------------------------------------------------------

சரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும்! >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint!! ;o)

முக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது "7 நாள் உபதேசம் பெற்ற" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் "சமைக்கப்பட்ட" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர "ஞானம்" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா? நல்ல கேள்வி கேட்டீர்கள்!

"ஞானம்" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் என அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது "தூய்மையைக் கெடுக்குமாம்". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.


இவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா? இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள்? அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா!

வெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.

ஏன் இந்த நீட்டு ப்ளவுஸ்? சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா? அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்!!) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.

எனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா? அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா? அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், "பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்" இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்
பூசுவானேன்?

சொல்ல விரும்புவது

என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வலைப்பதிவாளர்களே, வணக்கம்.

இன்றைக்கு நான் சொல்லப்போவது உங்களுக்கு முக்கியத்துவமில்லாத செய்தி.. ஆனாலும் நீங்கள் "சொல்லவில்லையே நீ" என்று சொல்லிவிடாமல் இருப்பதற்காக நான் சொல்வது என்னவென்றால்: ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி சரியாக அவுஸ்திரேலிய நேரம் 12 ஒக்டோபர் 2005, 02:00 முதல் நடைமுறைப்படுத்தப்படும் சில செயற்பாடுகள்/நடைமுறைகள் காரணமாக கிட்டத்தட்ட 2 - 3 கிழமைக்கு இந்தப்பக்கம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு (நிகழ சந்தர்ப்பமே இல்லாத) மனவருத்தங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.(அடடே.. யாராவது வந்து corporate report எழுத கூட்டிட்டுப் போங்களேன்!! ;O)

புதிய செயற்பாடுகளை சரிவர மண்டைக்குள்ளே செலுத்தி (வசந்தன் - அந்த குளுக்கோசும் வீவாவும் இப்போ பயன்படும்! அன்பளிப்பு தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்!!) என்னென்ன செய்ய வேண்டும், எவ்வெப்போது செய்ய வேண்டும் என்பதையும் பழகியெடுத்து, சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அதனால்... "இரண்டு கிழமையாவது நிம்மதி" என்று சந்தோசப் படுகிறவர்களும் "ரொம்ப முக்கியம் இது" என்று அங்கலாய்ப்பவர்களும் "அடடா!!" என்று கவலைப்படுபவர்களும் (இது ஒரே ஒருவர் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!! ;O) ) ஒரு சில கோப்பை ரசங்களை (ரசம் - அவரவர் விருப்பத்தைப் பொறுத்து சுவை/நிறம்/மணம்/குணம் வேறுபடலாம்) அருந்தி மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்!

மீண்டும் கொஞ்ச நாளையால் சந்திக்கலாம்.

சம்பந்தமில்லாத பின்குறிப்பு: 125ம் பதிவு இந்த அறிவித்தலா!?! :O(

காணவில்லை!


தேடிச் chocolate நிதந் தின்று,
மழலைக் கதை பல பேசி,
களிப்புடனே புரண்டெழுந்து, குழப்படி மிக;
பிறர் மகிழக் குறும்புச் செயல்
புரியு மிந்தக் குட்டி வம்பனை...

பல நாளாய்க் காணோ மடா!!!

குண்டுவெடிப்பும் எரிச்சலும்

பாலியில்(Bali) குண்டு வெடித்தாலும் வெடித்தது ஊடகங்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யத்தொடங்கி விட்டன. 2002ல் வெடித்த குண்டின் இலக்குப் போலவே இந்த முறையுமா எனத்தெரியவில்லை. ஜமா இஸ்லமியாக் குழுவினர் தான் அக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

நான் சொல்ல வருவது அதைப் பற்றியன்று. குண்டு வெடித்ததாகச் செய்தி வந்தது வெள்ளியிரவு. சனி காலையில் செய்தியில் சொல்கிறார்கள் அவுஸ்திரேலிய/நியுசவுத் வேலஸ்(எதென்று சரிவர ஞாபகமில்லை) இஸ்லாமிய அமைப்பு இக்குண்டு வெடிப்புக் குறித்து தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறதென்று. சகலவிதமான அமைப்புகளும் இந்தக்குண்டு வெடிப்புத் தொடர்பாக தமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த வேளை, ஊடகங்கள் இஸ்லாமிய அமைப்பினரின் கண்டனச்செய்தியை மட்டும் தூக்கிப் பிடித்தமை ஊடகங்களின் பாரபட்சமான பார்வையையும், வேண்டாத, விஷ(ம)மான எண்ணங்களை மக்கள் மனதில் ஊன்ற வைக்கும் முயற்சியையுமே காட்டுகிறது. ஏற்கெனவே இஸ்லாமியர் = தீவிரவாதிகள் என்கிற எண்ணம் மக்களிடையே விதைக்கப்படுகிறது. கத்தோலிக்க, அங்லிக்கன், பௌத்த, இன்னும் எத்தனை மத அமைப்புகள் கண்டனச் செய்தியை வெளியிட்டிருக்கும்? ஏன் அவற்றைக் குறிப்பிடவில்லை? இஸ்லாம் மதத்தினர்தான் கண்டிக்கிறார்கள்; அவர்களைச் சார்ந்தவர்தான் செய்ததென அவர்களுக்கே சந்தேகம் வந்ததில்தான்/ தெரிந்ததில்தான் இவ்வாறு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்கள் என்கிற நினைப்புகளுக்கு இடம் தரும்வகையில் தான் செய்தி சொன்ன விதம் அமைந்திருந்தது. குண்டு வெடிப்புக்குச் சூத்திரதாரிகள் பற்றிய ஊகங்கள் நிலவினாலும், இன்னும் சரியாக நிறுவப்படாத நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்றதனமாக, குறிப்பிட்ட சமூகத்தினரின் மீது காழ்ப்புணர்ச்சி வரும்வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

பிரித்தானியரின் வழி வந்தவர்களென்று உறுதிப்படுத்திக்கொள்ள "Divide & Rule" உத்தியை ஊடகங்களின் மூலம் செயல்/வெளிப்படுத்துகிறார்களோ?

தெ.து.வ.ச.நி.கி.ச. க்கு வாழ்த்து!

நாளை தொடக்கம் நாளையன்றை வரை நடக்கவிருக்கும் நியூஸிலாந்து வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

சந்தித்துக் கொள்ளப்போகிறவர்களே, சிட்னி சந்திப்புப் போல அல்லாது விரைவிலே (சுடச்சுட) படங்களை வலையேற்றுங்கள்! ;O)

ஒரு அலறல்

அன்றைய ஒன்றுகூடல் எங்கேயோ, அங்கே திட்டுத்திட்டாய், தீவுகளாய்ப் பிரிந்து நின்று உரையாடல்கள். வெற்றுப்போத்தல்களுக்குப் பக்கத்தில் ஆண்கூட்டம். பிள்ளைகள் ஓடித்திரிவார்கள். அடிக்கடி, ஒரு விதுஷனுக்கோ அல்லது ஒரு லக்சனாவுக்கோ அம்மாவிடமிருந்து ஒரு உருட்டல்/மிரட்டல் குழப்படி கனத்தால் பரிசாய்க் கிடைக்கும். பிறகும் அம்மா தன் தோழிகளுடன் கதையில் மூழ்கிவிடுவா. அப்படியென்ன கதை என்று கேட்டால், நீங்கள் பாவம், "அனுபவிக்க" நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.

இந்தப் பெண்களுக்கு அநேகமாக ஒத்த வயதாயிருக்கும், அல்லது ஒத்த வயதில் பிள்ளைகளிருப்பார்கள். இங்கே முக்கியம் பிள்ளைகள் இருப்பது. அதுதான் அடித்தளமே! ஒருமாதம் தொடங்கி பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வரை அங்கே செல்லுபடியாவார்கள். பிள்ளைக் கவனிப்பு/வளர்ப்பு/தண்டனை & சமாதான முயற்சிக்கான வழிமுறைகள் பற்றிய அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படும். கொஞ்ச நேரம் அந்தக் குழுவுக்குள்ளே மாட்டுப்பட்டால்:

 1. இல்லாத பிள்ளையைக் கவனிக்க / சரிவர வளர்க்கத் தேவையான 100% அறிவு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உங்களுக்குக் கிடைக்கும்/தெரியவரும்.
 2. பைத்தியம் பிடிக்கும். விறாண்டுவதற்குப் பாயும் தேவைப்படலாம்.

எங்கள் "ஒன்றுகூடல்" சனத்தில் 3 தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ளாத பாக்கியசாலிகள். எப்ப பிள்ளை என்று எப்போதும் எங்கேயும் கேட்கப்பட்டு நச்சரிக்கப்படுபவர்கள். இதிலே நானும் ஒருத்தி. சில வேளைகளில் இவர்களது அலுப்புத் தாங்காமல் "pregnant ஆன் உடன் உங்களுக்குத்தான் முதல்ல சொல்லுவன். வந்து எல்லாம் செய்து தரோணும்" என்று (அல்லது இதே மாதிரி ஏதாவது) சொன்னால் அதற்குப் பிறகு ஒரு 3 சந்திப்புகளுக்குத் தப்பலாம். பிறகு ப.கு.க.தி. தான்! மற்றவர்களெல்லாரும் இருந்து Nappy rash, உடுப்பளவு, பிள்ளை சாப்பிடாமல் இருக்கிறது (இதற்கு பிள்ளையைத் தூக்க நாம்தான் 2 முட்டை குடிக்க வேண்டும்) பிள்ளைப்பராமரிப்பு நிலையத்துக்கு ஆகும் செலவு என்று நீண்டு போகும் கதைகளில் மூழ்கி அறிவுரை முத்துகளெடுத்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் இருந்து எங்களுக்குத் தேவையான கதைகள் பேசுவோம். அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்புகளுடனே எங்கள் சம்பாசணைகள் தொடரும்.

அதுக்கும் வைபட்டது ஆப்பு! தோழியர் இருவரும் மூன்று மாத வித்தியாசத்தில் பிள்ளைகளையும் பெற்றார்களா, நான் அம்போ! என்று தனித்தீவாய் இந்த அறிவுரைக்கடல்களில் தப்பிக்க இயலாமல் முக்குளிக்கிறேன். தோழியரும் இருந்து nappy விலையும், சாப்பாடும், தேவைப்படக்கூடிய பிள்ளைப் பராமரிப்பையும் பற்றிக் கதைக்கிறார்கள். இப்ப யாருமே என் தோணியில் இல்லை.

இப்போதெல்லாம் இந்த ஒன்று கூடல்கள் நிறைய சக்தி விரயமாகிறது. ஏனா, பிள்ளைக் கதை மழையில் நனைந்து, nappy விற்கும் விலையில் துவாய் வாங்கித் தலைதுவட்ட முடியாமல் அயர்ந்து போய்ச் சளி பிடித்து ..ஆ..ஹச்!

பிள்ளை இருக்கிறவர்களெல்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க. பிள்ளை என்றொன்று எனக்கு வந்தால் அறிவுரைக்கும், சம்பாசணைகளுக்கும் கட்டாயம் உங்களைத் தேடி வருகிறேன்; அப்படி நானாக வரும் வரைக்கும் தயவு செய்து என்னைச் சும்மா விடுங்கள்!

(பரவாச்)சோதியில் நானும்!

ஈழநாதனின் பதிவிலிட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிக்கிறேன்.

தமிழ்மணத்திலே பலரும் வழங்குவர் பதிவுகளை வாரி
வாசிக்கையிலே இருக்கையை விட்டெழுவார் மேலதி காரி
சாளரத்தைச் சொடுக்காவிட்டால் மாறி
கண்மணியே - வேலையிலே எல்லாம் நாறிவிடும் நாறி!


இன்னுமொன்று:

இன்னொரு வெள்ளியுடன் வருது வார இறுதி
இரண்டே நாளில் திங்கள் வருவதும் உறுதி
அளவின்றிச் சோமபானம் பருகி
புதுக்கிழமையும் உடல்கள் தள்ளாடும் வெறி பெருகி
குடிப்பது ஏனென்றால் stressஸை இளக்க
கைமேற் பலன் தலைவலி மண்டை பிளக்க!

பி.கு: இந்த நேரிசை , சொத்தி இசை எண்டெல்லாம் சொல்லுறாங்களே, அப்பிடியெண்டா என்ன?

ஒரு நாள் அமைதி

இன்றைக்கு

Peace One Dayயாம். ஐ.நா சபையினரால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாள் செயல்முறைக்கு வரக் கொஞ்சம் அதிகப்படியான முயற்சி தேவைப்பட்டிருக்கிறது. எப்படி இந்த நாளைப்பற்றிய எண்ணம் வந்தது என்பதிலிருந்து எந்தெந்த நாட்டு / பாதுகாப்பு / கூட்டுறவுச் சபைகளின், சமயத்தலைவர்களை அணுகி, செப்.21 ஐ போர் நிறுத்தங்களுக்குரியதொரு நாளாகக் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டது என்பதைப் பற்றியும், இந்த நாளின் முக்கியத்துவம், அது உணர்த்த விழையும் செய்தி என்பதையும் உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை நேற்றிரவு அரைவாசியிலிருந்து பார்க்கக் கிடைத்தது. ஜெரமி, தனது எண்ணத்தைச் செயற்படுத்தக் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்திருக்கிறார். அதையே நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தார்கள். ஒரு நாளைக்குப் போர் நிறுத்தமென்பது உணவு, மருத்துவ உதவி, தகவல், ஏனைய உதவிகள்/தேவைகள் போன்றவற்றைப் பெறுவதிலும் பகிர்வதிலும் அளப்பரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

2001ம் ஆண்டு செப். 11ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சமாதான மணியடித்து கோஃபி அனான் இந்த நாளைப்பற்றிப் பேசுவதாக இருந்த நேரத்திலே உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீதான தாக்குதலால் அந்நிகழ்வு தள்ளிப்போடப்பட்டது. ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்று இப்போது ஒரு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா நாடுகளுமல்ல. கடைப்பிடிக்கும் நாடுகளில் எல்லா அரசாங்கங்களுமல்ல. ஆனாலும் அரசு சாரா நிறுவனங்கள் (NGO), மாணவர் முன்னணிகள், மதக்குழுக்கள் போன்றோரால் இந்த "ஒருநாள் போர்நிறுத்தம்" பற்றிய விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. இவர்களின் நோக்கம் யுத்தத்தின் மூலம், வன்முறையின் மூலமன்றி வேறு வழியாலும் அமைதியைப் பெறலாம், நிலைநிறுத்தலாம் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லுதல். நம் சிறு பங்குக்கு, இந்த நாளைக் குறித்து நாம் என்ன செய்யலாம்?

தித்தோம்.. சந்தித்தோம்

நேற்றைய அறிவித்தலின் படியே சிட்னி வலைப்பதிவர் சந்திப்பு இடம்பெற்றது.

ஒரே "மேடை"யிலேயே நின்றிருந்தாலும் ஷ்ரேயாவுக்கும் சயந்தனுக்கும் ஆளையாள் கண்டுபிடிக்கக் கொஞ்ச நேரமெடுத்தது. எங்க நிற்கிறீங்கள்? மேடைக்கு வந்துட்டீங்களோ? போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்தவாறே தன்னைத் தேடி நடக்க ஆரம்பித்த சயந்தனை - வலைப்பதிவில் அவர் போட்டிருந்த படத்திலிருந்ததைப் போலவே ஒருவர் கடந்து போகிறார் என உணர்ந்ததும் - ஷ்ரேயா கையை ஆட்டித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். செயலாளருக்குப் 19 வயது தானாம்.. மெல்பேணில் அப்படித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்பக்கூடிய தோற்றம்தான்!

செயலாளரைப் பத்திரமாக மீண்டும் மெல்பேணுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதால் மிகுந்த பாதுகாப்பிற்கிடையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. ஒளிப்பதிவுக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. சில காவலர்களும் இதற்கெனவே சிறப்பு ஏற்பாடாக அமர்த்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பார்வையாளகளில் சிலருக்கு இருக்கக்கூட இடமிருக்கவில்லை. அவ்வளவு வலைப்பதிவு ஆர்வலர்களைப் பார்த்ததில் செயலாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அடிக்கடி பார்வையாளரில் சிலர் மீது அவர் பார்வை திரும்பியமை சந்திப்பில் சிறிது சலசலப்பையும் திசைதிரும்புதலையும் உருவாக்கச் சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனாலும் சிறிது நேரத்தில் செயலர் தன்னைச் சுதாரித்துக் கொண்டதில் கூட்டம் வழமைக்குத் திரும்பியது.

இந்தச் சந்திப்பில் முதலிலே என்ன கதைப்பதெனத் தயக்கமேற்பட்டதில் சில சொந்த விதயங்கள்/ தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் கொஞ்ச நேரத்தில் சந்திப்புக் களைகட்டியது. பேசப்பட்ட விதயங்களில் தெரிந்த/அறிந்த வலைப்பதிவர்களின் பிளவாளுமை பற்றிய கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது. ஊரறிந்த இரகசியமொன்றையும் வலைப்பதிவராகும் ஆர்வமுடையவர்களின் நன்மை கருதிச் செயலர் போட்டுடைத்தார், அது மிகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிளவாளுமை பற்றிய உரையாடலின் போதே வலைப்பதிவுலகின் துப்பறியும் நிபுணர்கள் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரோடு சேர்ந்து செயற்பட்டால் அத்துறையினர் மிகவும் பலனடைவர் என நம்பப்படுகிறது.

மேற்கூறியது, தமிழ் வலைப்பதிவுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பேச வழிகோலியது. சிட்னியில் தமிழ்/தமிழர் நிலை, பண்பு குறித்துத் தனது மனமகிழ்வைத் தெரிவித்த செயலர், சிட்னியில் போன்றதான் தமிழார்வம் மெல்பேணில் இல்லையென விசனமடைந்தார். இனிதே இவ்வாறு சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தலைவர் வசந்தன் செய்மதி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். (மாநாடு பற்றிய அறிவிப்பில் பின்னூட்டமிட்டு ஆசி தெரிவித்தமைக்கும் தலைவருக்கு நன்றி) செயலகத்தினை சிட்னிக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆராய்ப்பட்டது. ஆனாலும் இப்போதைக்கு அது தேவையில்லையெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவர் இருவரும் தத்தம் வாசிப்புக்குட்படுவன பற்றியும் பேசினர். ஏனைய வேலைகளுக்கிடையில் வாசிப்பிற்கென போதுமானளவு நேரம் ஒதுக்க முடியவில்லையென செயலாளர் மனம் வருந்தினார். பார்வையாளர்களுக்கு உதவுமுகமாக இடையிடையே ஒலிபரப்பப்பட்ட சில அறிவுறுத்தல்கள் சந்திப்புக்கு அவ்வப்போது இடையூறாய், நாராசமாய் இருந்திருப்பினும் அவை பெருந்தன்மையாக எம்மாலும், ஏனைய பார்வையாளர்களாலும் பொறுத்தருளப்பட்டன.

க்றைஸ்ட்சர்ச் மாநாடு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துத் தெரிவித்ததுடனும், ஞாபகார்த்தமாக சில புகைப்படங்கள் எடுத்ததுடனும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முதலாவது சிட்னி வலைப்பதிவர் மாநாடு இனிதே நிறைவேறியது. மேலும் விபரங்களும், படங்களும் விரைவில் செயலாளரின் பதிவில்.

சிட்னி மாநாடு

சிட்னியின் வலைப்பதிவர் மாநாடு தென் துருவ வலைப்பதிவர் சங்கச் செயலாளர் சயந்தனுக்கும் சிட்னிப் பொறுப்பாளராக தலைவர் வசந்தனால் நியமிக்கப்பட்டவருக்குமிடையிலான சந்திப்பாக நூற்றுக் கணக்கான பார்வையாளர்களுடன் இன்னும் இரண்டரை மணித்தியாலத்தில் நடக்கவிருக்கிறதென்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்!

பாதுகாப்புக் காரணங்களையொட்டி, எங்கே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறதென்பதை வெளியிட முடியாததற்கு வருந்துகிறோம்.

சிட்னியில் இசைப்புயல்

நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்து (என்ன நிகழ்ச்சியென்று கேட்பவர்கள் இதற்குப் பிறகு இந்தப்பதிவை வாசிக்கக் கடவது!!) அதைப்பற்றின என்னுடைய நினைப்பை போட வேணும் என்கிற எழுதப்படாத வலைப்பதிவு விதிப்படி நான் தட்டச்சத்தொடங்க முன்னமே, ஏன் இன்னும் பதியவில்லை என்று நிறையப்பேர் (நிறையப்பேர் என்டுறது இருவரைத்தான் என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குந்தானே) கேட்டதால(யும்) இந்தப்பதிவு. எள் விழக்கூட இடமில்லாதளவு கூட்டமெண்டு நான் சொல்ல மாட்டன்; ஏனா? ஆட்கள் நடந்து போறதுக்கு இருக்கை வரிசைகளுக்கிடையில நடைபாதையெல்லாம் இருக்கும், எள்ளைப்போட்டா அதிலயும், பட்டும் நகைகளுமா, தலைமயிருக்கு அளவுக்கதிகமான களிம்பெல்லாம் பூசிக் கொண்டு வந்திருந்த ஆட்கள்ட தலையிலயும்தான் விழுந்திருக்கும். (பிறகு சிலவேளை தலையில எள்ளோட வாறதே ஒரு நாகரீகமான ஒன்றாக மாறவும் சந்தர்ப்பம் இருக்கு!)

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னபடிக்கு 13,000 சனம். ஆனா எனக்கென்னவோ அதை விட இன்னும் கொஞ்சம் கூடப்பேர் இருந்த மாதிரி இருந்தது. சரி அதை விடுவம். எத்தினை பேர் வந்தா என்ன..கனபேர் என்டுறது தான் தேவை. அதிசயமா, நாங்களும் எங்கட "நேரத்துக்குப் போகாத" கலாச்சாரத்தை கைவிட்டுட்டு சரியான நேரத்துக்கு இருக்கையில! ஆனா ரஹ்மான் குழுவினர் பாவம், நாங்க நல்லபிள்ளைகளா மாறீட்டமெண்டு தெரியவில்லைப் போல, கொஞ்சம் பிந்தித்தான் வந்தார். முதல்ல மெல்பேணில போலவே ஹிந்திப் பாடல்களோட தொடங்கினது. "ரெலிபோன் மணிபோல்" பாட்டை ஹரிஹரன் வந்து கால்வாசி தமிழ், மீதி ஹிந்தியில படிச்சார். தமிழ்ல பாட்டுத்துண்டு வர தமிழ்ச்சனம் உற்சாகக்கூச்சல் போட்டிச்சினம். எங்களுக்கு முன்னுக்கு இருந்த வெள்ளை தம்பதியருக்கு ஏனெண்டு விளங்கல்ல. ஆளையாள் பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டாங்க. "மெல்பேண் மலர்"க்குப் பதிலா "சிட்னி மலர் போல்" என்டு மாத்திப் படிக்க, பின்னுக்கிருந்த கொஞ்சப்பேர், "there's no such flower" என்டு ஹரிஹரனுக்கு விளங்கப்படுத்த வெளிக்கிட்டாங்க.

3, 4 ஹிந்திப்பாட்டுக்குப் பிறகு வந்த உன்னிமேனன் முதல் முறையா ஏஆரோட அவுஸ்திரேலிய மேடையில பாடச் சந்தர்ப்பம் தந்ததுக்கு நன்றி சொல்லீட்டு சிவமணியின்ட மேளதாள் அடிகளோட தொடங்கினார் "என்ன விலை அழகே" என்டு. அரங்கம் அதிர்ந்தது என்டு கேள்விப்பட்டிருக்கிறன், சனிக்கிழமைதான் அதின்ட முழுப்பரிமாணத்தையும் உணரக்கூடியதா இருந்தது. "ஹே"க்களும் "யேய்"க்களும்! வந்திருந்த கூட்டத்தில தமிழாட்கள்தான் 65 - 70%. சிட்னிக்கு சங்கர் மகாதேவன் வரவில்லை. அவருக்குப் பதிலாத்தான் உன்னிமேனன். உன்னிமேனன் பாடப்பாட அங்க இங்கயென்டு வெளிக்கிட்ட சின்னச்சின்ன வெளிச்சம் அரங்கு முழுக்க திட்டுத்திட்டா நிறைய்..ய்..ய்ய்.ய!! நானும் என்ட பங்குக்குத் "ஒளிவீச" கைத்தொலைபேசியை எடுத்து on பண்ணிட்டு தலைக்கு மேலை துக்கிப்பிடிச்சு பாட்டுத்தாளத்துக்கேற்ற மாதிரி எல்லாரோடையும் சேர்ந்து ஆட்டிக் கொண்டிருந்தன் (ஊரோட ஒத்துவாழ் என்டு சின்னனில சொல்லித்தந்திருக்கிறங்களே!!). பார்க்க நல்ல வடிவா இருந்தது. நாங்கள் தமிழ்க்குஞ்சுகள் ஆட்டினதைக்கண்டு தங்கட பாட்டுகளுக்கு மற்றவையும் "ஒளிவீச" வெளிக்கிட்டாங்க, ஆனாச் சரிவரல்ல. கடல்ல போற தனிக்கப்பலின்ட ஒரு விளக்கு மாதிரி அங்கயும் இங்கையுமாத்தான் அவர்களுக்கு ஏலுமாயிருந்துது. நாங்களும் அடிக்கடி தூக்கித்தூக்கி ஆட்டினாலும், பிறகு எல்லாரும் சவுத்திட்டம். உன்னிமேனனுக்குக் கிடைச்ச ரசிகர் சத்தத்தை வைச்சு ரகுமான் பிடிச்சிட்டார் தமிழ்ச்சனம்தான் இதுக்குள்ள நிறைய என்டு. பிறகென்ன, ஹிந்தி!ஹிந்தி!! என்டு பின்னாலயிருந்து கொஞ்சம் கூச்சலைச் சகிச்சுக்கொள்ள வேண்டியதாகிட்டுது. ஆனாப்பாருங்க ரஹ்மானுக்கு நல்ல வசதி, அவற்ற பாட்டுகள் தமிழ்லயும் ஹிந்தியிலயும் இருக்கு. இரண்டு மொழியையும் கலந்து பாடி ரெண்டு தரப்பையும் சந்தோசமாக்கினாங்க.

"அந்த அரபிக்கடலோரம்" பாட்டைத் தொடங்கிவிட ரஹ்மான் வந்தார். "ஹம்மா ஹம்மா"வை கொஞ்சம் வித்தியாசமா எல்லாம் படிச்சுட்டு பாட்டைத் தொடங்கினாங்க. பாட்டு முடியக்கிட்டவா நல்ல விரைவான தாளமா மாத்தி சனத்தை எழும்பி ஆட வைச்சிட்டார். தைய தையா சைய சையாவையும் அப்பிடித்தான் விரைவாயெல்லாம் பாடினாங்க. சிவமணி தன்ட "கை"வரிசையைக் காட்டினார். அவரோட சேர்ந்து பொஸ்னியாலேருந்து வந்த ஒரு பெண் (பொம்பே ட்ரீம்ஸுக்கு பாட்டுப் படிச்சவவாம்) பாடினா. முதல்ல opera பாட்டு மாதிரி இருந்தது, பிறகு கொஞ்சம் வித்தியாசமா வந்துது. என்ன உயரம் அவ!! இப்பிடி மூச்சை இழுத்துப் பிடிச்சுப் பாடுறதெண்டா எவ்வளவு பயிற்சி செய்திருக்கோணும். அசந்து போனன். முன்னுக்குப் பாடிக்கொண்டிருக்க, பின்னால நெருப்பு, கதகளி, இன்னும் வேறயென்னவோ மாதிரியெல்லாம் தனியொராள் பெரீ..ஈ..ஈ..சா உடுப்புப் போட்டுக் கொண்டு வந்து அங்காலயும் இங்காலயும் என்று ஒரே இடத்தில நின்டு அசைஞ்சு கொன்டிருந்தார். காதல் ரோஜாவே பாட்டுக்கு பின்புல நடனம் கொஞ்சம் (நல்ல மாதிரிச் சொல்லுறதெண்டா..) வித்தியாசமா இருந்துது. ஆணும் பெண்ணும். ஆண் அவக்குக் கிட்டப்போறதும் ஏதோ மீள்கயிற்றில(elastic) கட்டுப்பட்டவர் மாதிரி பிறகு இழுபட்டு மற்றப்பக்கம் வாறதுமா கொஞ்சம் ballet அசைவுகளோட அமைஞ்சிருந்தது நடனம்.

தொடக்கத்தில வந்து ஒரு குட்டி ஒரு ஆள் துள்ளிக்கொண்டு ஒரு ஹிந்திப் பாட்டுப் படிச்சார், பேர் கைலாஷ் ஆக இருக்க வேணும். நீட்டுத்தலைமயிரும் ஆளும்..பார்க்க முசிப்பாத்தியா இருந்துது. பிறகும் வந்து நடுவில என்னவோ ஹிந்தில கதைச்சுப் போட்டு நல்ல ஆட்டம் போடக்கூடிய பாட்டுகள் ரெண்டை ஆட்டம் போட்டுக் கொண்டே பாடினார். உச்சஸ்தாயிக்குப் போற திறமான குரல்.

சொல்ல மறந்திட்டனே..நிறைய்ய்ய்ய்ய விசிலடிச்சான் குஞ்சுகள்..எனக்குப் பக்கத்திலயிருந்த 50+ வயதுப் பெண்மணி உட்பட!

ஒரு பொப் பாட்டொண்டு பாடினவர் ஹரிஹரன்..வாய்க்கேல்ல. நல்ல காலம் சின்னப்பாட்டு. ட்ரம்ஸுக்கு ஏத்த மாதிரித்தான் கனபாட்டுகள். எனக்கு விளங்கல்ல ஏன் "தங்கத்தாமரை மகளே"யை மறந்தாங்க என்டு. போய்ஸ் படப்பாட்டு "சரிகாமே..பதநிசே" தான் கடைசியா ஆட வைச்ச பாட்டு. பிறகு 'வந்தே மாதரம்' பாடி விரைவில் மீண்டும் சந்திப்போம் என்டு சொல்லி நிகழ்ச்சியை முடிச்சார் இசைப்புயல்.

காட்டப்பட்ட முப்பரிமாணக் காட்சிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஏன் லண்டனுக்கு முப்பரிமாணக்கண்ணாடி போகவில்லையெனக் கண்டுபிடித்தேன். (தெரிந்து கொள்ள விரும்பினால் தனிமடல் போடவும்). இசைநிகழ்ச்சி - மிகவும் திறமானதென்று சொல்வதற்கில்லை, ஆனாலும் இசைப்புயலுக்கும், சிவமணிக்கும் அந்தப் புல்லாங்குழலிசைத்தவருக்கும் (நவீன்குமாரென நினைக்கிறேன், சரியாய்த்தெரியவில்லை) பொஸ்னியப் பெண்ணுக்கும், கைலாஷ்க்கும் ..(நான் போட்டிராத) hats off! உள்ளம் கேட்குதே once more! :O)

இந்த நிகழ்ச்சி மூலம் அவுஸ்திரேலிய டொலர் 100,000 உதயன் சிறுவர் இல்லத்துக்கு கிடைக்கும். அதிலே ஒரு கொஞ்சமாய் என் பங்கும்...

அறிக்கை / சுற்று நிருபம்

வணக்கம்,

இன்றைய அறிக்கை, வாசிப்பது நீங்கள்.

தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் சுயம்புத் (தான் தோன்றி) தலைவர் வசந்தனின் குணாதிசயங்கள் ஒரு அரசியல்வாதியினதைப் போன்றே இருப்பதைக் கண்டு தென் துருவ வலைப்பதிவர் பலரும்(!!!) அதிர்ச்சியடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த மாதம் மெல்பேண் நகரில் இவர் கூட்டிய சந்திப்பொன்றில் தென் துருவ வலைப்பதிவர் சங்கத்திற்குத் (தான் தோன்றி) தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது யாவரும் (சரி சரி..அநேகமானோர்) அறிந்ததே! இதனையடுத்து ஏனைய நகரங்களில் இருப்பவையனைத்தும் கிளைச்செயலகங்களெனவும் அவை சந்திப்புகளை நடத்த முன்னர் தம்மிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இவர்களது அறிவிப்புக்கு முதலேயே சந்திப்பொன்றை க்றைஸ்ட்சர்ச் நரகத்தில் மன்னிக்கவும் நகரத்தில் ஒழுங்கு செய்திருந்த துளசிக்கு இது பேரிடியாக அமைந்தது. துளசி, தென் துருவத்திலிருந்து வலைப்பதிவுலகிற்கு அளப்பரிய சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பைக் குழப்ப/திசைதிருப்ப சிட்னியில் ஒழுங்கு செய்யப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பொன்றின் சூத்திரதாரி தான் தோன்றி தலைவர் வசந்தனேயாவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தன்னிடம் அனுமதி பெறாமல் வலைப்பதிவர் சந்திப்பொன்று தென் துருவத்தில் நடக்கவிருந்தமை இவருக்குப் பொறுக்கவில்லை என மேலும் அறியப்படுகிறது. (சிட்னி சந்திப்பைப் பற்றியதொரு விபரம் பிந்தியதொரு அறிக்கையில் தரப்படும்)

இச்சந்திப்பினை உண்மையான ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ஷ்ரேயாவுடன் தனிமடலில் தொடர்பு வசந்தன் அவர் 16ம் திகதி இரவு சிட்னி வருவதாயும் தொலைபேசுவதாயும் தெரிவித்திருக்கிறார். அச்சந்திப்பிற்கான நாள், நேரம், இடம் என்பவற்றிற்குரிய தீர்மானங்களை வசந்தனிடமே விட்டிருந்த ஷ்ரேயாவுக்கு நேற்றுக் காலை மின்னஞ்சலில் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் பற்றி ஷ்ரேயா சொன்னதாவது:

முதலில் தான் வந்து சிட்னியில் ஒரு கிழமை தங்கப்போவதாயும், எப்போது சந்திப்பை வைத்துக் கொள்ளாலாமென்றும் கேட்டார். எனக்கு வசதியான நேரத்தை அவருக்குத் தெரியப்படுத்தினேன். தலைவர் என்ற மரியாதையிலும், சிட்னி விருந்தோம்பற் பண்பிலும் சந்திப்பைக் குறித்த கடைசித் தீர்மானங்களை அவரிடமே விட்டிருந்தேன். யோசித்துச் சொல்வதாய்ச் சொல்லியிருந்தார். இந்த தகவற் பரிமாற்றமெல்லாம் தனிமடலிலேயே நடைபெற்றது. இம்மடல்களிலே தனது ஆலோசகர்கள் சரியில்லை எனவும், அவர்களை @#$%^!* எனவும் விளித்திருந்தார். சங்கத்தின் தலைமைக் குழுவில் இல்லாத ஏனைய உறுப்பினர்களைச் சந்திப்பதில் வசந்தனுக்கிருந்த தயக்கம் அவரது தனிமடலில் நன்கு வெளிப்பட்டது. மேலும் "தலைவர்" என்கிற கெறுவில் தான் அவரது மடல்களும், தொடர்பாடலும் அமைந்திருந்தன.

தனது பாதுகாப்பிற்கு சிட்னியில் உத்தரவாதமில்லையெனவும் தனக்கு இப்போது சோதனைக் காலமென்ற படியாலும் தான் சிட்னிக்கு வருவதற்கில்லை எனவும் தனக்குப் பதிலாக @#$%^!* என ஏளனமாகக் குறிப்பிடப்பட்ட ஆலோசகர்/ சங்கச் செயலாளர் சயந்தனை அனுப்பி வைப்பதாயும் வசந்தன் அறிவித்துள்ளார். க்றைஸ்ட்சர்ச் மாநாட்டிற்கு ஆதரவாக நடந்து கொண்டமைக்காக சிட்னி சந்திப்பு ஏற்பாட்டாளரைக் குறித்து அதிருப்தி கொண்டிருந்த வசந்தன், சிட்னி சந்திப்பைப் பற்றித் தொடர்ந்து மடல்களெல்லாம் அனுப்பியது, அவரைக் குழப்பி, ஏமாற்றி, அவர் முகத்தில் கரி பூசுவதற்காகவே எனப் பரவலாக நம்பப்படுகிறது.

சங்க உறுப்பினர்களைச் சந்திப்பதில் தயக்கமும் சிட்னி அலுவலகம் அவரது பாதுகாப்பை உறுதி செய்யாதது போன்றதொரு பொய்மைத் தோற்றமும் காட்டும் தலைவரின் வார்த்தைகள் குறித்து கிளைச் செயலகங்கள் விசனம் தெரிவித்துள்ளன. தலைவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை அவருடைய சோதனைகளை எதிர்கொள்ள நல்வாழ்த்துக்களையும், சிட்னிக்கு வருகை தரவிருக்கும் அன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய செயலாளர் சயந்தனை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் சிட்னி அலுவலகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இக்கண்டன அறிக்கை வெளியிடப்படுகிறதெனத் தெரிய வந்ததும் வசந்தன் சிட்னிக் கிளையலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வறிக்கை வெளிவராது தடுக்க முயற்சித்தார். அது கைகூடாமற் போனதினால் தனது பெயரில் களங்கமேதும் வந்து விடாவிடாதிருக்கும் பொருட்டே (சுயநல நோக்கிலேயே) தனது வலைப்பதிவில் ஒரு ஒரு கற்பனையான உள்ளிடுகையை இட்டுள்ளார் என்பதை இத்தால் சிட்னி கிளையலுவலகம் உறுத்திப்படுத்துகிறது.

ஒரு புத்தகத்திலிருந்து..

கெமரூஜ் உடனான தனது அனுபவங்கள் பற்றி Francois Bizot எழுதிய The Gate புத்தகம் வாசித்தேன். நான் வாசித்த மற்றைய போர்க்காலப் புத்தகங்கள் போல் இது இருக்கவில்லை. கெமரூஜினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒரேயொரு வெளிநாட்டவர் இவராம்.

கம்போடியாவை விட்டு நீங்கியதை இப்படிக்குறிப்பிடுகிறார்: வார்த்தைகளில் சொல்ல முடியாத மிகுந்த வலியினூடாக, பிறக்கும் ஒரு சிசுவைப்போல நான் வெளித்தள்ளப்பட்டேன்..(I was expelled, like the newborn, in the torments of an unspeakable pain).

கடைசியாய்ச் சொல்கிறார்:

But on this Earth, there is no place of permanent refuge

"ஆனால், இந்தப்பூமியில் பாதுகாப்பான இடமென்றொன்று நிரந்தரமாக இல்லை"

துக்கச்செய்தி

மலேசியாவிலிருந்து எழுதும் மீனாவின் தாயார் காலமானதாக நா.கண்ணனின் வலைப்பதிவில் அறியக்கிடைத்தது. மீனாவுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாக்களின் பிரிவு வலிக்கும். நிரந்தரப்பிரிவு இன்னும் அதிகமாகவே. என்னென்னவோ நினைக்கிறேன்..சொல்லத்தெரியவில்லை.

அம்மாவின் நினைவுகளும் பாசமும் மீனாவையும் குடும்பத்தாரையும் தேற்றட்டும்.

அம்மாட்டப் போகப் போறன்!

திருமணமாகி இங்கே வந்த புதிதில் கணவர் வேலைக்குப் போய்விடுவார். தனியே வீட்டில் இருப்பேன். படிக்கத்தொடங்க இன்னும் 6 மாதம் இருந்தது. கணவர் வெளிக்கிட்டால், நான் குளித்து வெளிக்கிட்டு சாப்பிட்டு சித்தி வீட்டிற்குப் போவேன், அவவுக்கு வேலை இல்லாத நாட்களில். மற்ற நாளெல்லாம் வீட்டுக்குள்ளே. மற்றப்படி பக்கத்திலே கடைக்கும் நூலகத்துக்கும் தான். சில வேளைகளில் செய்ய ஒன்றுமிராது. மனமும் ஒரு நிலையில் இருக்காது. புது இடம், யாரும் தோழிகளும் இல்லை. கிடைத்தவர்களோ கணவரின் நண்பர்களின் மனைவியர். அவர்களுடன் இப்போதும் நல்ல நட்புண்டு, ஆனால் ஒத்த வயதிலர். ஒத்த வயதுக்காரருக்குள் இருக்கும் ஒட்டே தனி. என்னுடன் படித்து, நான் வர 7 வருடங்களுக்கு முன்பதாகவே இங்கு குடும்பமாகப் புலம் பெயர்ந்து வந்து விட்ட என் தோழியும் அவளது தங்கைகளும் வேலை படிப்பென்று திரிந்ததில் அங்கேயும் மனம் விட்டுப் பேச, வந்த புதிதில் எப்படியிருந்ததென்றெல்லாம் கேட்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

திருமணமாகிச் சில வாரங்களே! அப்படியிருக்க, "இங்கே இருக்க முடியவில்லை, அம்மாவிடம் போகப்போறேன்" என்று சொல்லலாமா என்று ஒரு ஏனென்று தெரியாத (தேவையற்ற) தயக்கமோ வெட்கமோ ஈகோவோ ஏதோ ஒன்று அவரிடம் மனம் விட்டுச் சொல்வதைத் தடுத்தது. ஆனாலும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டார். "வீட்டிலிருக்காதே.. நூலகம் போ, தொடர் வண்டியிலேறிப் போய் cityயைப் பார்" என்று நகரின் வரைபடத்தையும் தந்து அனுப்பினார் ("உனக்கு கையில map தந்ததே பிழையாப் போச்சு! - வீட்டிலயே இருக்கிறதில்லை" - இது இப்பத்தைய வசனம் ;O) . புதிதாக இரண்டு தெரு சுற்றி வந்து பெயர் என்னென்ன என்று அவருக்குச் சொல்ல வேண்டும். இதிலேயே எனக்கு ஓரளவு ஊர் பிடிபட்டது. cityயென்றால் எனக்கு ஏதோ பெரிய சொர்க்கம் மாதிரி. பின்னே.. கொழும்பு மாதிரி ஒரு சின்ன நகரிலேயே நேரம் செலவழித்த எனக்கு சிட்னி புதுமையாக இருந்தது. "பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பாத்த கதை"தான்.

ஊரில் என் நட்பு வட்டம் பெரிது. அப்படி இருந்து, அறிகிற / உணர்கிற எல்லாவற்றையும் இன்னொருவரிடம் பகிர்ந்தே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு இவரொருவரிடமும், பழக்கமற்ற புதியவர்களிடமும் தான் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றான போது ஏமாற்றமாகவிருந்தது. கணவருடனான பகிர்வு சரி. மூன்று நான்கு வாரங்களாய்த்தான் பழக்கமுள்ளவர்களிடம் நினைப்பதெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன! (இங்கைத்தேய வட்டம் இப்போது மிகவும் பெரிதாகிவிட்டது). செல்லமாகவே வளர்த்தார்களா.. சமையலும் ஒழுங்காத்தெரியாது. (ஏதோ..இது வரை மருத்துவமனைக்கு என் சாப்பாடு காரணமாகப் போகவில்லை!) எல்லாமே புதிது. சரியாக வரவில்லை என்றதும் சில தடவை முயற்சித்தேன்.. தொடர்ந்து செய்யத்தான் கைவரும் என்பது உறைக்கவில்லை. அதுவும் இன்னொரு ஏமாற்றம். இப்படிப் புது முயற்சிகள் ஏமாற்றத்தில் முடிந்தன.

இப்பிடியாக நிறைய எதிர்பார்ப்பிலிருந்து வித்தியாசப்பட்டதில் உணரத்தலைப்பட்டதெல்லாம் பகிர ஆளின்றி /ஆளிருந்தபோதிலும் வீண் வீம்பு / ஈகோ இடம் கொடுக்காததில் உள்ளுக்குள்ளேயே போட்டுப் பூட்டி புழுங்கியது இந்தா அந்தா என்று வெடிக்கும் நிலை வந்தது. 3 மாதத்தில் நுழைவனுமதி(விசா) மாற்ற வேண்டி வந்ததில் இலங்கை போய் 3 கிழமையில் திரும்பினேன். கொஞ்சம் ஆறியிருந்த மனம் திரும்பக் குப்பை சேர்க்கத் தொடங்கியது. ஒன்றிரண்டு மாதத்தில் ஏதோ உடல் நலக்குறைவும் ஏற்பட்டு வைத்தியரிடம் போக, அவர் சொன்னார், இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டுமென்று. தாதி உள்ளே அழைத்துச் சென்று பேசியபடியே இரத்தமெடுத்தா.

பிறகு கேட்டா: "நீ இங்கே வந்து எவ்வளவு நாள்?"

"4/5 மாதம்."

"இங்கே இடம், மனிதர், சூழல்..பிடித்திருக்கிறதா"

"ம்ம்.."

"இடமாற்றத்தை, வாழ்க்கை முறை மாற்றத்தை எப்படிக் கையாளுகிறாய்? இயலுமாக இருக்கிறதா?"

அவ்வளவுதான். ஆரம்பித்தது! எதுவா? நயகரா. அதுவும் தோற்றது போங்கள்! அடைத்து வைத்திருந்த அவ்வளவும் தீரும் வரை அழுதேன். நல்ல தாதி போல. என் முதுகை தடவிய படியே இருந்தா. கணவருக்கு ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும், என் அழுகையைப் பற்றிய அவருடைய புரிதல் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. "புதிய இடத்தில் முற்றும் புதிதாக வாழ்க்க தொடங்குவதென்பது கஷ்டமானது. இசைவடையக் கொஞ்சக் காலமெடுக்கும்" என்றெல்லாம் சொல்லி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தா. அங்கிருந்து வெளிக்கிடும் போது, தெரியாத ஒருவரின் முன் அழுது விட்டோமே என்று வெட்கம் பிடுங்கியது. அவவின் முகமோ பெயரோ ஞாபகமில்லை. வார்த்தைகளே மனதில் நிற்கின்றன.

அவ சொன்னதன் உண்மை விளங்க எனக்குக் கொஞ்சக் காலம் எடுத்தது. விரைவில் படிக்கவும் ஆரம்பித்ததில் மனதிலிருந்தவைகளும் படிப்படியாக அகன்று என் இயல்பு நிலைக்கு வந்தேன். படிப்பதற்கோ வேலைக்கோ செல்பவர்கள் வீட்டிலிலேயே இருப்பவர்களை விட மிகக்குறைந்த கால அளவிலே இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவது கண்கூடு. வெளியில் செல்லாது வீட்டிலேயே தம் வாழ்க்கையை நடத்துவோர் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே தம்மை அடைத்துக் கொள்கின்றனர். இருக்குமிடம் பற்றிய ஆர்வமோ வெளியுலகில் ஈடுபாடோ இல்லாதவர்களின் "பிடுங்கி நடப்படும் வாழ்க்கை" எப்படியிருக்குமென யோசித்துப்பாருங்கள். கவனத்தைக் செலுத்துவதற்கு வேறு செயற்பாடுகள் / பிள்ளைகள் இல்லாதவிடத்து இதுவரை பழகியன போய் புதியனவாய்ப் புகும் புதுச் சூழலும் மனிதரும் வாழ்க்கை முறையும் மனதைப் போட்டு அருட்டும். ஆரம்பிக்கும் புது வாழ்க்கை ஒருவருக்குத்தான் என்றால் பரவாயில்லை. மற்றவர் உறுதுணையாயிருக்கலாம். இருவருக்குமே புதிதாய் வேர்விட வேண்டிய சந்தர்ப்பமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். அடிப்படையாய் நாம் பார்த்துப் பழகியவைகளும் கலாச்சாரமும் இருக்க, புதிதாய் எதிர்கொள்ளக்கூடியவைகள் முற்றிலும் மாறுபட்டதாயிருப்பது சாத்தியமே. எப்படி இவற்றையெல்லாம் சமாளித்து, பழகியெடுப்பது என்று ஒரு மலைப்பு ஏற்படுவது இயல்பே. சில எதிபார்ப்புகளும் கணிப்புகளும் நிறைவேற, வேறு சிலது ஏமாற்றங்களாகலாம். புதிய வாழ்க்கைக்கென எவ்வளவுதான் ஒத்திகை பார்த்து, எதிர்கொள்ளக்கூடியதென எதிர்பார்த்து அதற்கேற்ப ஆயத்தஞ் செய்து நடந்து கொண்டாலும் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துவதாய் எதிர்பாராமல் நிகழ்பவையும் புதிய இடத்தில் சுயமாய் ஒரு வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் நினைத்திருந்தவைகளைப் புரட்டிப் போட்டு விடும்.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்கிறேனென நீங்கள் கேட்பீர்கள். புதுசா உறவினரொருவரின் மனைவி வந்திருக்கிறா. அவ ஊரிலிருந்த பொழுதிருந்தே நான் தொலைபேசியிருக்கிறேன். ஒத்த வயது. அவவும் துணைவர் வேலைக்குப் போக வீட்டிலிருக்கிறா. பயந்த சுபாவம், இருக்குமிடம் ஆராயும் ஆர்வமுமில்லை. திரைப்படம் பார்த்து, சமைத்து, தூங்கியெழுகின்றதிலேயே அவவின் நாட்கள் கழிகின்றன. எதையும் இலகுவாக எடுத்துக் கொள்பவள் என்று என்னைக் குறித்து எனக்குக் கொஞ்சம் (தற்)பெருமையான எண்ணமுண்டு. அப்படியான நானே புதிதாய் வேர் விட வேண்டி வந்ததில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். அவவைப் பார்த்தால் அதிகமாக மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் சாத்தியமிருக்கும் போலத் தோற்றுகிறது. இயன்றவரை நான் கடந்து வந்த உணர்வுகள், பெற்ற அனுபவங்கள், இங்கத்தேய வாழ்க்கை & நடைமுறைகள் பற்றிச் சொல்லிவருகிறேன். வேலை தேடுகிறா. விரைவில் கிடைத்தால் நலம்.

இங்கே வந்து அடுத்த கிழமை என்னிடம் பேசிக்கொண்டிருந்தவ கேட்கிறா: "ஏங்க ஷ்ரேயா, உங்க வேலைய செவ்வாயிலேருந்து சனி வரைன்னு மாத்திக்க முடியாதா?" ஒரு குழந்தையிடம் பேசுவது போலிருக்கிறது.

இன்னொருமுறை வேண்டும்..

பள்ளிக்கூட விடுமுறை வந்தால் ஊரிலேயே இருப்பதென்பது அரிது. எங்கேயாவது போவோம். அதுக்காக ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒவ்வொரு ஊர் போய்ப் பார்த்தோம் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. கொழும்பு கம்பஹா, யாழ்ப்பாணம். இவ்வளவும்தான். சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள மாதிரி.

இவற்றிலேயும் கம்பஹா போனால் போடுற கும்மாளம்! அந்த ஊர்களில் நிலத்தில் சிறு சிறு கற்கள் நிறையக்கிடக்கும். செருப்பில்லாமல் முதல் இரண்டு நாட்களுக்கு நடக்க ஏலாம இருக்கும். பிறகு பழகிவிடும். பழகின பிறகு வெறுங்காலோட நடக்கிறதென்ன..ஓடியும் திரியலாம். (இப்ப போனா எல்லா நாளும் செருப்புத் தேவைப்படும் ..பின்னென்ன.. காப்பெட்டிலயும் பளிங்குத்தரையிலயும் தானே நடக்கிறது!)

எம்மி வீட்டில் அவவின் தம்பி மகள் என்னை விட ஒரு வயது மூத்தவ. அவவுடனும், பக்கத்திலிருக்கும் அவவின் தோழிகளுடனும் சேர்ந்து ஒரே விளையாட்டுத்தான். வீட்டுக்குக் கிணறு இருந்தாலும் "பல்லெஹா லிந்த"(கீழ் கிணறு) ல் குளிக்கும் சுகமே தனி. கிணறு என்று பெயர்தான் தவிர அங்கே சீமெந்தும் இல்லை துலாவும் இல்லை. மேடான இடத்தில் உள்ள வீட்டு வழியாக நடந்து வந்தால், வழி நெடுக இறப்பர், தென்னை, கமுகு, முந்திரிகை, கொறுக்காப்புளி, நமினங், பலா, வில்வம், விளா, மா, இவற்றுடன் பெயர் மறந்துவிட்ட & தெரியா மரங்களும் எலுமிச்சை, மிளகாய், கறுவா, கோப்பிச் செடிகளும் வளர்ந்து இருக்கும். எத்தனையோ ஆண்டாய் வீட்டிலிருந்து கிணற்றுக்கு நடந்த ஒற்றையடிப் பாதை பச்சைப் புல்லுக்கு நடுவில், ஆறொன்று வளைந்து நெளிந்து ஓடுவதைப் போல சிறுகல் நிரம்பிக் கிடக்கும். பள்ளத்திலே ஒரு 10 -12 அடி ஆழத்துக்கு கிண்டின வளைந்த மூலைகளுள்ள ஒரு 6 அடி x 7 அடி குழிதான் கிணறு. மேல் மட்டத்தில் தண்டவாளத்துக்கு ஸ்லீப்பர் கட்டை போல பலகைகள் (ஆனால் அடுத்தடுத்துப்) போட்டிருக்கும். மேட்டுப்பகுதியிலிருந்து இறங்கி வருவதற்கு மண்ணும் சுற்றி நின்ற மரங்களின் இயற்கையான வேரின் ஓட்டமும் கொண்டு அமைத்த படிகள். குளித்த/கழுவிய நீர் போக ஒரு ஓடை மாதிரிச் செய்திருப்பார்கள். கிடுகு பின்னி ஊற விட்டிருப்பார்கள். உடுப்புத் தோய்க்க ஒரு கல். கிணற்றுக்குப் பக்கத்தில் சின்னதொரு மண்மேடு. அதற்கப்பால் பசுமையான வயல். அரை மணி நேரத்திலே மூன்று நான்கு தடவை கேட்கும் தொடர்வண்டிச் சத்தம், மரத்தில் இருந்து கூவும் குயில் மற்றும் பெயர் தெரியாப் பறவைகள் என்று வெயில் தெரியாமல் அந்தக் கிணற்றில் கை வாளியால் அள்ளிக் குளிப்பது தனிச் சுகம். அதுவும் வேறெங்கு போனாலும் தலைக்கு மேல் ஷவரைத் திறந்து நின்று குளித்துப் பழகினால் இந்தக் குளிப்பு சொர்க்கம் மாதிரித்தானே இருக்கும். :O)

குளிக்கப் போவதற்கு இல்லாத ஆயத்தமெல்லாம் செய்வோம். அள்ளிக்குளிக்கும் வாளிக்குள்ளே குளித்த பின் அணியும் ஆடையும் சவர்க்காரமும் துவாயும். சொன்ன அனைவரும் வர முதல் நீ போகக்கூடாது என்று "விதிமுறைகளும்" கள்ளமாய் எடுத்துக்கொண்டு போகும் உப்பு மிளகாய்த்தூளும் (எதற்கா? வழியில் மா, நமினங் மரம் இருக்கென்று சொன்னேன் தானே..அதுக்குத்தான்.) இந்த நமினங் ஒரு விதமான பழம். பார்த்தால் காது போன்ற அமைப்பில் சுருக்கங்களுடன் இருக்கும். கடித்த அப்பிளின் உட்புறம் வெண்மையிலிருந்து ஒரு வித சிவப்பாய் மாறுவது போல இதன் நிறமும் மாறும். காலையில் 8 மணி போலத் தொடங்கி மத்தியானம் 12 ௧ மணி வரை போகும் விளையாட்டு. பிறகு குளிக்க ஆயத்தப்படுத்தப் பிரிவது 10 நிமிஷத்துக்கு. பிறகு குளிக்கப் போனவளுகளைத்தேடி யாராவது வரும்மட்டும் ஒன்றரை இரண்டு மணித்தியாலத்துக்கு நீராடல்தான். சில வேளைகளில் அட்டை வரும் என்று பயப்படுத்தினால் அன்றைக்கு சேற்று நிறத்தில் கலங்கிய தண்ணீரில் காலில் வந்து ஒட்டும் இலையும் எனக்கு "அட்டை"தான். மேட்டுப்பகுதிக்குத் தாவினால் தண்ணி(யின் நிறம்) தெளியும் வரை திரும்ப இறங்குவதில்லை! குளித்துமுடித்து உடுப்புக்கழுவி, கழுவின உடுப்பைக் கையிலும் ஒரு வாளி நிறையத் தண்ணியும் கொண்டு வீடுகளுக்குப் போவோம்.

பின்னேரத்தில் புளியங்கொட்டையும் கிரிக்கெட்/எல்லேயும் விளையாடுவோம். படிப்போம். (என்ன படிப்பு.. படத்துக்கு நிறம் பூசிறது தான்) பிறகு ஒரு ஐந்து மணிபோல போய் கறுவா மரத்தின்(செடியின்?) இலைத்தண்டைக் கடித்துச் சுவைத்த படியே மஞ்சாடி பொறுக்கிறது. சின்னனா சிவப்பா பாக்க வடிவா இருக்கும். (அது நிறயச் சேத்துக் கொண்டு மட்டக்களப்புக்குப் போனா, அதில கொஞ்சத்தைக் குடுத்தா, "காய்கள்" சன்னங்களா பாவிக்கப்படுற தன்ட மரத்துவக்கை செல்வம் அண்ணா 2/3 பின்னேரங்களுக்குக் கடன் தருவார்!)
பின்னேரம் சாமியும் கும்மிடவேணும். புத்தருக்கு "சரணம் கச்சாமி" சொல்லி அவ கும்பிடுவா. நான் அதையும் சொல்லி, அதுக்குப் பிறகு ரெண்டு தேவாரமும் படிப்பன். பூவெல்லாம் போட்டு தடல்புடலா பூசையும் நடக்கும். தேவாரம் தெரியாதுதானே என்ட தோழிக்கு. அதனால மத்தியானத்தில "படிக்கிற" நேரத்தில "தேவாரப்பட்டறை" நடக்கும். நல்லாச்சிரிக்கலாம்.. உச்சரிப்பைக் கேட்ட அம்மனோ.. சிவபெருமானோ.. புத்தரோ.. ஓடியே போயிடுவாங்க! ;O)

அங்கே மின்சாரம் 89 - 90ம் ஆண்டில்தான் வந்தது. அது வரை தொலைக்காட்சி இல்லை எங்களைத் தொந்தரவு பண்ண. சிலர் car கலத்திலே பாத்தவங்கதான். இரவில நிலாவோ இல்லையோ.. கட்டாயம் வெளி முற்றத்தில இருந்து ஆளுக்கு ஒவ்வொருவர் மடியில் தலை வச்சிருந்து கதை கேட்பம்.

வெளிக்கிடுறநாள் வந்தா அதைப்போல துக்கம் கிடைக்காது. ஏதோ இனிக்கிடைக்காது மாதிரி உள்ள இளநீரெல்லாம் ஆய்ஞ்சு தரச்சொல்லி வழுக்கல் எல்லாம் போட்டுக் குடிக்கிறதும், உலகத்திலயே கடைசி நாள் போல பலகாரம் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கென்டு பிரத்தியேகமாக் கட்டின ஊஞ்சல் ஆடி தோழிக்கு பதினைஞ்சு தரம் அடுத்த முறை வரும் போது என்ன செய்வது என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கையில் எம்மி கூப்பிடுவா. "ஏந்தான் இந்த அலுப்புப் பள்ளிக்கூடம் தொடங்குதோ!" என்று பலவிதமான திட்டுக்களோடவே, வெட்டக் கூட்டிக்கொண்டு போறது மாதிரி இழுபட்டுக் கொண்டு போவேன்.

இனிமேல் போனால் அந்த கவலையற்ற வயதில் செய்தவற்றின் நினைவுத்தடங்க்ள் தான் எஞ்சியிருக்கும். சாப்பாட்டுக்கோ குளிப்புக்கோ இருட்டுக்கோ நித்திரைக்கோ சொல்லவோ/கூப்பிடவோ எம்மியிருக்க மாட்டா. நேரத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்கிறதொரு அர்த்தமில்லாத அவசரமுள்ள ஒரு adult ஆக நான்..

இறப்புப் பற்றிய என் குறிப்பு

மரணம் தொட்ட முதல் கணமென்று தம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து விபத்தைப் பற்றி எழுத முடியாதவாறு மரணம் தொட்ட பொழுதிலேயே அதனோடு போய் விட்ட கார்த்திகேயனுக்கு அஞ்சலி.

இறப்புத் தேவைதான். அல்லாவிடில் உலகின் சமநிலை குழம்பிவிடும். மரணம் குறித்த பயம் கிட்டத்தட்ட எல்லாருக்கும் மனதின் அடியில் உறங்கிக் கிடக்கும். அதை மேல் மட்டத்திற்குக் கொண்டுவருவது தன் வட்டத்தில் நிகழும் இழப்பே. சில வேளைகளில் சில மரணங்கள் நிம்மதியைத் தந்தாலும் பல வேளைகளில் மனக் கிலேசத்தையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் பழகிய ஒருத்தரின் மரணம் பல நாட்களுக்கு மனதில் தேங்கும்.

மரணமென்று எனக்கு அறிமுகமாகிய போது எனக்குப் பத்துப் பதினொரு வயதிருக்கலாம். முதலாவது எம்மியோடு கூடவே செல்லும் புத்தவிகாரையின் பிக்குவும் இரண்டாவதாக எனது ஆசிரிரியரின் தங்கையும். பிக்குவுக்குத் தலை பிளந்ததால் ஏற்பட்ட காயம் ஏற்படுத்திய மரணம். மருத்துவமனையிலிருந்தவரைப் பார்த்த ஞாபகம் இன்னும் அவ்வப்போது தலைகாட்டும். ஆசிரியரின் தங்கை நஞ்சுண்டு தற்கொலை. வீட்டே தான் அலறியடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். ஒன்றும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை. வழியிலேயே உயிர் பிரிந்திருந்தது. அதற்கு முதல் 3 நாட்களுக்கு முன்னர் தான் கல்வி+இன்பச் சுற்றுலா ரியூஷன் மாணவர்களோடு போய் வந்திருந்தார்கள். அதன் போதெல்லாம் உற்சாகமாய் இருந்த பெண். என்ன ஏதென்று தெரியவில்லை. அரளிவிதை கைகொடுத்திருந்தது அவவின் மரணத்தை நிறைவேற்ற. அவவின் கணவரைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. நெருங்கியவர்களின் இறப்பு எப்படிப் பாதிக்கும் என்று கண்கூடாகப் பார்த்து உணர்ந்து கொண்டேன் அவவின் கணவரையும் அண்ணாவையும் பார்த்து. இன்னும் ஞாபகமிருக்கிறது, எத்தனை பேருடைய நாவில் எத்துணை கதைகள் அவவைப் பற்றியும், அவவின் இறப்பிற்கான காரணி பற்றியும். அவர்களின் சொல்லும் செயலும் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் காலாக இருந்தது.

நெருங்கிய உறவினர்களில் அறுவர் இறந்த போதும், அதில் மூவரின் செத்த வீட்டுக்குத் தான் போகக்கிடைத்தது. இறந்து போன அத்தையுடனான என் கடைசி ஞாபகம் எதற்கென்றே ஞாபகமில்லாத அவவுடனான அற்பச் சண்டை. மிகவும் பாதித்த மரணங்கள் இரண்டு. எம்மியினதும். ரீச்சரினதும். எம்மியைப் போன்றல்லாது ரீச்சரைக் கடைசியாகக் கூட பார்க்கக் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ்க்கைக்குக் கொடுக்கும் விலையில் இதுவும் ஒன்று. ஆனால் காணாததும் ஒரு வகையில் நல்லதுதானோ! இனிமையாய் வழியனுப்பி வைத்த முகம் தானே மனதில் நிற்கிறது. அசைவின்றிக் கிடக்கும் அவவை என்னால் பார்த்திருக்க/அதை மனதில் உள்வாங்கியிருந்திருக்க முடியாது.

சில செத்த வீடுகள் களைகட்டும் - சில பல வேளைகளில் திராவகங்களின் உதவியொடும். ஆனாலும் சுற்றத்தின் அழகு மரணவீட்டில்தான் வெளிப்படும். தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை இறந்தவர் காட்டிய அன்பு & சொத்து. பழைய குடும்பக் கதைகள் வெளிவரும். சுவாரசியம் குன்றாது சொல்வதில் விண்ணர்கள் புண்ணியத்தில். கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றியிருக்கும். சிலவேளைகளில் திருமணப்பேச்சுகளும் தொடக்கப்படும். ஒரு இறப்பு பலநாள் காணாதோருக்கு ஒரு சந்திப்புச் சந்தர்ப்பமாக அமைவதனாலாக இருக்கலாம்.

செத்த வீடுகளில் நான் செய்ததும் இப்போதும் செய்யத் தலைப்படுவதும் ஒன்றே ஒன்றுதான். ஏனென்று தெரியவில்லை - சவத்தை உற்றுப் பார்த்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா எனப் பார்ப்பேன்.. என்னதான் நான் ஊன்றிப் பார்த்தாலும், உற்றவர் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டவராவதில்லை. போனவர் போனவர்தான். செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை.

இது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது: மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள்.

பிஞ்சுமனம்

27ம் திகதி அபிநயாக்குப் பிறந்தநாள். எட்டாவது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் பெரியவர்களுக்கென்றும் குழந்தைகளுக்கென்றும் தனித்தனியே பிறந்தநாள் கொண்டாட்டம். விதம் விதமாய் கேக்கும் வேறு தின்பண்டங்களும் பெரியவர்களுக்கென்று உணவும் இருக்கும். இதற்கெனவே பிறந்தநாளுக்கு இன்னும் எத்தனை என்று நாட்கணக்குப் பார்ப்பாள். தம்பியினதுக்கும் நாட்கணக்குப்பார்ப்பது இவளே. அபிநயாக்குத் தம்பி இருந்தாலும் அவள் அம்மா செல்லந்தான். பிறந்த நாள் தொடக்கம் ஒரு வயது வரை ஒவ்வொரு நாளும் நிழற்படம் எடுத்ததும், வெட்டிய தலைமயிரில் கொஞ்சத்தை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்திருப்பதும் அம்மாவின் சிறப்புக் கவனிப்பில் சில.

அம்மாவின் தம்பி - இந்திரன் மாமாக்கும் மேரி மாமிக்கும் குட்டிக் குழந்தை விரைவில் பிறந்துவிடும். அதுவும் இந்த வாரமே. குட்டிப்பாப்பாவைப் பார்க்கப் போகும் உற்சாகம் மனதில் நிரம்பியிருந்தது. காணும் எல்லாரிடமும் வரப்போகும் குட்டி பேபியைப் பற்றித்தான் கதை. உடனே தூக்குவேன்..வீட்டே கூட்டி வருவேன் தம்பியும் நானும் பேபியுடன் விளையாடுவோம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெட்டிய கேக்கைக் கொடுக்க வந்த அபிநயாவை இழுத்துப் பிடித்த ரேணு மாமியின் "எப்ப பேபி வரும்?" கேள்விக்கு "She came now, few minutes ago. we are going to see her after the party. we have the same birthday" என்று பதில் சொன்ன அபிநயா ரேணு மாமியின் நச்சு வசனங்களை எதிர்பார்த்திருக்கவில்லை.

"இன்டைக்குத்தான் அவக்கும் birthday. அப்ப இனி உமக்கு ஒரு partiesம் இருக்காது, இனி அவக்குத்தான் எல்லாம். same birthday என்ட படியா இனிமேல் no one will come to your party. everyone will go to her's."

முகஞ் சிறுத்துப் போனது அபிநயாக்கு. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.

மருத்துவமனையில் புது வரவு அமுதாக்குட்டி "ஙா ஙா" என்று கை கால் ஆட்டிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. எல்லாரும் கிட்டே போய்ப் பார்த்தார்கள். அபிநயா மட்டும் தள்ளியே நின்றிருந்தாள். மேரி மாமி "பேபி பாக்கல்லயா? துக்கி மடியில வைச்சிருக்கிறீங்களா?" என்று கேட்டதற்கு அமுதாக்குட்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அபிநயாவிடமிருந்து இல்லையென்ற தலையாட்டலே கிடைத்தது.

-- கற்பனையல்ல :O(

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

தமிழ்மணத்துக்கு இன்று பிறந்த நாள். வலைப்பதிவர்களை மனதில் கொண்டு சொந்த நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு & போராடி (வீட்டில் பெற்ற "விழுப்புண்கள்" எத்தனையோ? ;O) )அந்த உழைப்பின் பயனாக தமிழ்மணத்தை உருவாக்கிய காசிக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனைத்து வலைப்பதிவர் சார்பிலும் நன்றி.

தமிழ்மணத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கின்ற இந்த நேரத்திலே, ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு முன்பு போன்றதான அசிங்கங்கள் அன்றி அழகியவைகள் மட்டும் உலாவ வேண்டும் வலைப்பதிவுலகத்தில். சிந்திக்க வைப்பதாயும் தெளிவிப்பதாயும் கருத்துகள் வரவேண்டுமேயன்றி, தேவையற்று ஒருவரையோ அல்லது அவரது நம்பிக்கைகளையோ/கொள்கைகளையோ இழிவு படுத்தும் வண்ணமிராது கருத்துச் செறிவுள்ள (நாகரீகமான) விவாதங்களுக்குப் பதிவுகள் இட்டுச் செல்ல வேண்டும்.

மீண்டும் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்.

தேவையா?

ஆங்காங்கே தொட்டுத்தொட்டு கருத்துப் பரிமாறல் பெறும் நிகழ்வுதான். இன்றைக்கு என் பங்குக்கு:

போனமாதம் பருவமெய்திய(!?) பெண்ணுக்கு நீராட்டு விழா கடந்த வார இறுதியில் நடந்தது. கொண்டாட்டத்துக்குரிய ஆயத்தங்கள் 2 - 3 கிழ்மைகளுக்கு முதலே ஆரம்பித்து விட்டன. மணவறைக்குச் சொன்னதும், உணவுக்கும் பலகாரங்களுக்கும், வந்தோருக்குக் கொடுக்க பலகாரம் போடப் பையும் என்று தடல்புடல். போன கிழமை போய் சில பலகாரம் செய்ய உதவவும், வீட்டில் செய்த படியால் விளக்குகள் மினுக்குவது போன்ற உதவிகளுக்கும் சென்றிருந்தோம். முதலில் கவனித்தது, பருவமடைந்த பெண்ணுக்கு (ப.பெ என்று குறிப்பிடாமல் கற்பனையாய் "சுமதி" என்று பெயர் வைப்போமா) நடக்கவிருக்கும் விழாவில் இருந்த ஆர்வம். "I wanted to give out invitation, but amma & appa didn't agree" - உலக மகா கவலை 12 வயது சுமதிக்கு.

பலகாரஞ் சுட்டு, அதைப் பைகளில் போட்டுக் கொண்டிருந்த வேளையில் சுமதியின் இரு மச்சாள்மாருடன் (ஒரு 23 & 30 இருக்கும்) இருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். "வழ்மையாக எப்படி இதற்கு வாழ்த்துச் சொல்வது" என்று ஆரம்பித்தார்கள்.. "வாழ்த்துக்கள் / கெங்க்ராஜுலேஷன்ஸ் என்று சொல்வார்கள்" - இது சுமதியின் மாமி. எதற்கு பீரியட்ஸ் தொடங்கினதுக்கா? கொல் சிரிப்பு. ஆனாலும் அவர்கள் கேள்வி சிந்திக்க வைத்தது. இதற்குப் போயுமா வாழ்த்துச் சொல்வார்கள்? உண்மை..பெண்ணின் வாழ்வில் புதிய அத்தியாயம் தான் ..இனவிருத்திக்கு இன்றியமையாத உடல் மாற்றம்தான்..ஆனால் அதற்கு வாழ்த்துவானேன்? இப்படிக் கேள்வி கேட்பவர்களைக் கண்டால் எனக்குச் சந்தோசம்..ஏனா? நான் கேட்க வேண்டுமென்று நினைத்து கேட்க வேண்டிய நேரத்தில், கேட்க வேண்டியவர்களிடம் கேட்காமல் விட்டதையெல்லாம் இவர்கள் தயக்கமின்றிக் கேட்பது தான். இவர்களிடம் பாசாங்கில்லை. இதுவே மிகவும் பிடித்தமானதாயிருக்கிறது.

விழாவாக ஏன் கொண்டாட வேண்டும் என்பது பற்றியும் பேச்சு வந்தது. இந்தக்காலத்துக்குப் பொருத்தமில்லையே "என் பெண் வயதுக்கு வந்து விட்டாள் = திருமணத்துக்குத் தயார்" என்று அறிவிப்பது. அதற்கும் மாமி ஒருவர் தயாராகப் பதில் வைத்திருந்தா.(எப்படித்தான் 5 - 10 செக்கன் தாடுமாற்றத்துக்குள்ளானாலும் பதில்களைத் தயார்ப்படுத்துகிறார்களோ!!)

"முதல்தான் அதற்குச் செய்வது, இப்ப இயந்திரகதியாகிவிட்ட வாழ்க்கையில் உற்றார் உறவினரோடு சேர்ந்து களிக்க இது ஒரு சாட்டு..அவ்வளவே".

பதில் கேள்வி வந்தது: "அப்பிடி குடும்பத்தாரோடு கூடி மகிழ்வது தான் காரணமென்றால் இந்த மணவறை எதற்கு, வெளிக்கிடுத்தல்கள் எதுக்கு? சும்மா பிள்ளைக்கு comfortable ஆன உடுப்பைப் போட்டு சாப்பாட்டுக்கு மட்டும் கூப்பிடலாமே?"

மாமியிடம் பதிலில்லை.


- அக்கா.. what's the use of this "thingie" you are having?

- நிஷா..எனக்கு நிறைய ப்ரசன்ட்ஸ் வரப்போகுது. I hope I get a lot of make up stuff and money.

- wow..will you share with me..if you don't like the presents can I have them?

- No way. you'll have your own ceremony, then get your own stuff.

- (ஏமாற்றக் குரலில்)..ok..I am going to tell ப்ரியா மச்சாள் that I want makeup and I will ask .... from --- aunty and...

அடுத்த அறையிலிருந்த சுமதியும் தங்கையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. இதுதான் பதிலா?

பொய்யெனப் பெய்யும் மழை

காரியங்கள் ஆக வேண்டியிருந்தால் சின்னதோ பெரிதோ பொய் சொல்லிவிட நேரும். (பொய்யென்றால் பொய்தானே..பிறகென்ன சின்னதும் பெரியதும்!)

யாரையாவது "நோக்கும்" படலம் நடைபெற்றால் அடுத்த கட்டத்துக்கு உதவும் என்று மின்னஞ்சலில் வந்தவற்றைத் தருகிறேன்.

 • அவளி(னி)டம் போய் "You are under arrest" என்று சொல்லுங்க. எதற்கு என்று கேட்கும் போது "என் உள்ளத்தைத் திருடியதுக்காக"

 • என்னுடைய தொலைபேசி இலக்கத்தைத் தொலைச்சிட்டேன்..உங்களுடையதை கடன் பெறமுடியுமா?

 • அவருடைய சட்டையில் இருக்கும் tag ஐத் திருப்பிப் பாருங்கள். என்ன செய்கிறீர்களெனக் கேட்கையில் "இல்ல..நீங்க "made in heaven" ஆ என்று பார்த்தேன்"

 • ஒரு பூவைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அவளுக்கு முன்னாலே நடந்து போய் சொல்லுங்க: "நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய் என்று இந்தப் பூவுக்குத் தெரியவில்லை..அதுதான் காட்டக் கொண்டுவந்தேன்"

 • ஆங்கில எழுத்துகளில் வரிசையை மாத்தீட்டாங்களே..தெரியுமா? "U"வையும் "I" யையும் சேர்த்துட்டங்களாம்

 • வழி தெரியாம தடுமாறி நிற்கிறீங்களா? ஏன் கேட்கிறேன் என்றா தேவதைகளை சொர்க்கத்திலிருந்து இவ்வளவு தூரத்தில் பார்ப்பது அரிது

 • "கண்டதும் காதல்" ல் உங்களுக்கு நம்பிக்கையுண்டா அல்லது நான் இன்னுமொருமுறை உங்களுக்கு முன்னால் நடக்க வேணுமா?

 • உங்கட இதயத்துக்கு வழி சொல்ல முடியுமா? உங்கட கண்ணிலே நான் காணாமப் போயிட்டன்.


>>உடல் /மன நலத்துக்குக் கேடு விளைவிக்கும் விதமான பின்விளைவுகளேற்படின் நான் பொறுப்பல்ல!<<

நன்றி சொல்லிப் பொழியும்

கடந்த 7 நாட்களும், அதற்கு முன்பும் என் பதிவுக்கு வந்து, நான் கிறுக்குவதையெல்லாம் வாசித்து கருத்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும், தமிழ்மண நட்சத்திரமாக ஒளிர விட்ட மதி & தமிழ்மணத்தாருக்கும், சொந்த வேலை காரணமாக வலைப்பக்கம் வரமுடியாதென ஆகிய போது, கடைசி இரண்டு பதிவுகளையும் வலையேற்றிய துளசிக்கும் நன்றி.

மற்றுமொரு விளையாட்டுடன் மழை இன்னும் பொழியும்.

பார்வை

சின்ன வயதில் அம்மா அப்பா, ஆசிரியர்கள் என்று தொடங்கி மனதுக்குப்
பிடித்தவர்களை நம்முள்ளத்திலே மிக உயர்ந்த ஒரு அரியாசனம் போட்டு அதில் அமர்த்தி விடுகிறோம்.

அவர்களுக்குத் தெரியாததோ, செய்ய முடியாததோ ஒன்றுமேயில்லை என்ற அளவில் இருக்கும் அவர்கள் மீதான நம் கண்மூடித்தனமான நம்பிக்கை. யாராவது இவர்களைப்பற்றி - இருக்கிற நம்பிக்கையை சிதைக்கிற மாதிரி -
எதிர்க்கருத்துச் சொன்னார்களோ தொலைந்தார்கள். வளர்ச்சிதான் எம்மிலும்,
சுற்றியிருப்பவர்கள் & சூழல் பற்றிய எம் பார்வையிலும் எத்துணை
மாற்றத்தைக் கொண்டு வருகிறது! வளர வளர "அவர்களுக்கு எல்லாம் தெரியும் / இயலும்" என்கிற அசைக்க முடியாத(தாகக் கருதப்பட்ட) நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கும். ஆனாலும் அது எப்போதும் முழுதாகச் சிதைவதில்லை.

நாம் போட்டுக் கொடுத்த அரியாசனத்தில் தான் இன்னும் வீற்றிருப்பார்கள்.ஆனால் எமது பார்வை முதிர்ச்சியடைய அடைய, அந்த
அரியாசனத்தின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவது போலத் தோன்றும். அவர்களிலிருந்த அதே அன்பும் மதிப்பும் ஆரம்பகாலப் பிரமிப்பின்
& சிறுபிள்ளை நம்பிக்கையில் கொஞ்சத்தோடும் ஒரு ஓரத்தில் இன்னும்
இருக்கும். எட்டா உயரத்திலிருப்பவர் என்று அகலக்கண் விரித்துப்பார்க்கிற
அந்தப் பார்வை போய் எம்மைப்போலவே பார்க்கப்படும் காலம் வரும். அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடுகள் கொள்கைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் - இவற்றையெல்லாம் சீர்தூக்கி நாம் பார்க்கத் தொடங்குவோம்.

அப்படி நாம் பார்க்க வசதியாக அவர்களும் வாழ்ந்து வைத்திருப்பார்கள். ஏற்ற
இறக்கங்கள், எடுக்கப்பட்ட பலவிதமான முடிவுகளும், காரணங்களும்,
நம்பிக்கைகளும், பெற்றவையும் இழந்தவையும், ஏமாற்றங்கள்
எதிர்பார்ப்புகளுமென்று அங்கே ஒரு வாழ்க்கை, தொடர்ந்து கொண்டிருக்கும்
ஒரு இன்னிசைக்கச்சேரியைப்போல அரங்கேறிக் கொண்டிருக்கும்.

வாழ்க்கையை ஒரு விதமாகக் கணக்குப் போட நாம் கற்றிருப்போம்; அவர்கள் கற்றதும் செயல்படுத்தியதும் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் செயல்கள் காணும் போது மனம் சிலவேளைகளில் பெருமிதமும் மகிழ்ச்சியும், நன்றியுணர்வும், மற்றவேளைகளில் சலிப்பும் கசப்பும் ஆத்திரமும் என்று ஒவ்வொரு உணர்வாகக் கிளை தாவும்.

அவர்களும் மனிதர்கள்தான் என்று உணரக் காலம் தேவைப்படுகிறது. உணர்ந்தாலும் மனதில் ஏற்கெனவே அரியாசனத்தில் இருத்திய உருவத்துடன் ஒப்பிட்டு உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், மனதில் சின்னதொரு ஏமாற்றம் தலைகாட்டுகிறது.

விம்பங்களின்றிப் பார்க்கும் கலையை நான் இன்னும் கற்கவில்லை!

இருவர் கேட்டவை.

கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பதிவு போட்டு, கேள்வி கேட்கச் சொல்லிக்
கேட்டிருந்தேன். எங்கள் வலைப்பதிவர்கள் 1) எல்லாம் விளங்கியவராய் இருக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தெரியாதவராய் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த இரண்டு சந்தர்ப்பத்திலேயும் தான் கேள்விகள் எழுமாம் என்று எங்கட கணக்கு வாத்தி சொல்லியிருக்கிறார். வலைப்பதிவர்களை (நானாவே) முதலாம் வகைக்குள்ள வரிசைப்படுத்துவம் என்று நினைச்சுக் கொண்டிருக்க, 3 பேர் வந்தாங்கள், கேள்வி கேட்கப் போறமெண்டு. அதிலயும் ஒராள் நான் உதாரணத்துக்குக் கேட்டிருந்த கேள்விய, திரும்ப என்னட்டயே கேட்கிறார். அதுக்குப் பதில் சொல்லப் போவதில்லை, கேட்டிருக்கிற எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லப் போறதில்ல. ..ஏனா? அந்தப் பதிவில போட்ட நிபந்தனைகளை பாக்கல்லயா?

சரி முதலாவதா "எடுத்துக்" கொள்ளும் கேள்விகள் இரண்டும் பொடிச்சி கேட்டது.

ஷ்ரேயா என்டது சொந்தப்பெயரா? நான் மட்டக்களப்பு இருதயபுரத்தைச்
சேர்ந்தனானா என்டு கேட்கிறா. இல்லை பொடிச்சி. ஷ்ரேயா என்டுறது
சொந்தப்பெயரில்லை. நான் மட்டக்களப்புத்தான் (அதோட சேர்த்து
யாழ்ப்பாணமுந்தான்) ஆனால் இருதயபுரமில்லை

அடுத்த கேள்விகளெல்லாம் கேட்டது சுதர்சன் கோபால். இவர் கனக்கக்
கேட்டிருக்கிறார். மொத்தமே 7 கேள்வி (அதில ஒன்று "செல்லாது". மிச்சம் ஆறில 4 இவர் கேட்டா..இப்பிடித்தானே சொல்ல வேணும்?)

என்ன கேட்டவரா? முதல் கேட்டார் ஏன் எனக்கு மழை பிடிக்குமென்டு. சிலது ஏன் பிடிக்குமென்று சொல்ல ஏலாதுதானே.. அதுமாதிரிதான். ஆனா மழையில ரசிக்கிறதே கம்பி கம்பியா எங்கேயிருந்து தொடங்குது என்டு தெரியாம பெய்யிறதைத்தான்

அடுத்த கேள்வி கேட்டார், ஏன் மழையில நனைஞ்சதும் சிலருக்குத் தடிமன்
பிடிக்குதெண்டு. அது பாருங்க சுதர்சன், மழை பெய்யுது என்றால் நம்மில்
அநேகமானாக்கள் என்ன செய்வாங்க? மழையில் நனையாம ஒதுங்கப்பாப்பாங்க, நிறையப்பேர் ஒரே இடத்திலேயே ஒதுங்க நேரிடும் தானே..அப்ப ஏற்கெனவே தடிமன்/இன்ன பிற சுவாசத்தினால ஏற்படுற தொற்றுகள் மற்றவர்களுக்கு பரவுற வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மழையில் கொஞ்சம் நனைந்திருக்கவும் கூடும்..2 நாளையால பக்கத்துல எங்களோட கூடவே மழைக்கு ஒதுங்கினவர் புண்ணியத்தில தடிமன் வந்தால்..மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொள்கிறோமாம் என்று அம்மா சொல்லிருக்கிறா.

அடுத்த கேள்வி..செயற்கை மழை எப்பிடி உருவாக்கப்படுது? இந்தக்
கேள்விக்குப் பதில்: செயற்கையாத்தான்!என்னது.. கேட்ட கடைசிக் கேள்விக்கு பதிலைக் காணோமா? முதலாம் பந்தி..கடைசி வரியை நீங்க வாசிப்பீங்களாம்..நான் அப்பிடியே ஓடிருவேனாம்... ;O)

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I

பெரியம்மா வீட்டில் எனக்குத் தெரிந்து எப்போதும் ஆடு, மாடு, நாய், பூனை, மைனா, கிளி, கோழி என்று ஒரு விலங்குப் படையே வீட்டில நிற்கும். பெரியப்பா காலமை எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு பலாவிலை குத்தப் போவார். அவரோட நடந்து நடந்து ஆட்டுக்கு கிளிசரியாக் குழை பிடுங்கி, கோழிக்கு தீன் போட்டு வாறது எவ்வளவு சுகம் தெரியுமா!

இப்ப போனால், பெரியம்மா-பெரியப்பா இல்லாத வீட்டில், மாடும் ஒற்றை மைனாவும் ஐந்தாறு கோழிகளும் இரண்டு நாய்களும் இரண்டோ மூன்று ஆடுகளுமே! பலாவிலைகளும் கம்பியில் கோர்க்க ஆளின்றி சும்மா விழுந்து கிடக்கின்றன. :O(

வாசற்படித் தூணில் அல்லது வீட்டின் பின்புறத்திலே கட்டிப் போடப்பட்டிருக்கும் நாய்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தரம் மட்டுமே எங்களைக் கண்டாலும், ஞாபகம் வைத்திருந்துக்கும். உடம்பில் ஒரு துண்டு சதையையும் கேட்பதில்லை. நல்ல நாய்கள். தேவையான அளவு சாப்பாடு போட்ட பெரியம்மாக்கு ஒரு "ஓ".

அவவின் வீடு வடிவானது. "ட" வடிவில். முன் கூடத்தைத் தாண்டிப் போனால் கூட்டுக்குள்ளிருந்து "ராணி...ராணி" என்று பெரியம்மாவைக் கூப்பிடும் கிளிகள். வேறு சில சொற்களும் அவற்றுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் மறந்து போய்விட்டது. மைனாக்கள் பேசி அங்கே தான் நான் பார்த்தது. என்ன பேசின என்று கேட்கிறீங்களா? அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே! முகம் கழுவு / குளிச்சிட்டு வா - இதெல்லாம் என் காதுக்கு வந்து சேர முதல் காற்றில கரைந்து விடும். அப்படியே விழுந்தாலும் அதை யார் கேட்டது!

அங்கேயிருந்த ஒரு ஆட்டுக்கு என்னைப் பிடிப்பதில்லை. முட்ட வரும். முட்ட வரும் என்று சொல்லத்தான் இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.

அப்ப எனக்கு 2 - 3 வயது இருக்குமாம். (அதென்னா இருக்கு"மாம்"? நடந்தது எனக்கு ஞாபகமில்லை..வீட்டில எம்மியும் அம்மாவும் சொல்லக் கேட்டது.) ஒரு நாள் வீட்டில சீனி முடிஞ்சிட்டுதாம்/அல்லது முடியிற தறுவாயில இருந்துதாம். வீட்டில எம்மியும் பெரியண்ணாவும் நானும் தானாம் அந்த நேரம் இருந்ததனாங்க. வேற வேலைகளும் வீட்டில இருந்த படியா எம்மி போய் பெரியண்ணாட்ட கேட்டிருக்கிறா கடைக்குப் போய் சீனி வாங்கி
வரச் சொல்லி. அவரும் ஒம் என்று சொன்னாராம். கொஞ்ச நேரத்தால பாத்தா ஆள் இன்னும் வீட்டிலயே புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்தாராம்.

எம்மி (எம்மி யாரென்று தெரியாதவர்கள் இங்கே
பார்க்கவும்) சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் "தங்கச்சியப் பாத்துக் கொள்ளு" என்டிட்டு கடைக்கு வெளிக்கிட்டிருக்கிறா. எங்கட ஆள் என்ன செய்தார்...புத்தகம் வாசிக்கிறார். தங்கச்சிக்காரி விளையாடிக் கொண்டிருக்கிறா. புத்தக மன்னன் அதை வாசிச்சு முடிச்சிட்டு நிமிர்ந்தா... "ஞானம்..தங்கச்சிய காணம்!".

வீடெல்லாம் தேடி ..தெருவெல்லாம் தேடிக் களைச்சு பயத்தில வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கிறாராம் எம்மி வரேக்குள்ள. இங்கே இப்பிடிக் களேபரம் ஆகுமென்று தெரியாம திறந்திருந்த படலையால வெளியில போன குட்டி ஷ்ரேயா தத்தக்க பித்தக்க என்று நடந்து போயிருக்கிறா. ஒரு மாடு முட்ட ஆயத்தமா வந்துதாம். தெருவில நின்ற ஒரு ஆள் உடன தூக்கி எடுத்திட்டாராம். ஆரடா பிள்ளை .. தனிய "வீரமா" நடந்து வருது என்று பார்த்ததில அதில நின்ற ஒருவருக்குத் தெரிந்து விட்டது. இது வைத்தியரம்மாட பிள்ளை என்று கண்டு கொண்டதில் வீட்டிலே கொண்டு வந்து விட்டார்களாம். (இல்லாட்டி இன்றைக்கு நட்சத்திரமாக இருந்து இப்படியெல்லாம் எழுதி உங்களை இம்சைப் படுத்தக் கிடைச்சிருக்குமா!) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார்! இப்படிக் கூத்துக் காட்டியும், இவரின் "கொதி" வேலையை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவர் செல்லம்தான்.

சரி..சரி பெரியம்மாவின் ஆடு முட்ட வரும்...ஓடி வந்து விடுவேன். பிறகென்ன.. கோழிகளைத் துரத்துவதும்..தப்பியோட முயற்சிக்கும் பூனையை வலுக்கட்டாயமா தூக்கிக் கொண்டு திரிவதும் என்று மிச்சப் பொழுதுகள் போகும். மிருகங்களோடு கதைப்பது ஒரு அலாதி இன்பம். திருப்பிக் கதைக்க மாட்டா. சில வேளைகளில் ஆசிரியை - மாணவர் விளையாடும் போது "கணக்கு சரியாச் செய்யாத மொக்கு ஆட்டுக் குட்டிக்கு" மெல்லிய குட்டும் விழும். கொஞ்ஞ்ஞ்ஞ்சம் பொறுங்க!!! நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி? அம்மா ஆடு "குட்டினால் முட்டுவேன்" என்று நினைச்சுக் கொண்டுதான் எனக்குக் கிட்ட வந்திருக்க வேணும். :O|


ஆனாலும் எதிர்பார்ப்புகளின்றி அன்பு செலுத்துறதில ஆடு, மாடு, நாய், பூனைகளுக்கு இணையில்லை...என்ன சொல்றீங்க!

அம்மாவுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள அம்மா,

நாம் நலம். அதுபோல் நீங்களும் இருக்கக் கடவுளை வேண்டுகிறேன்.

என்னடா நேற்றுத்தானே தொலைபேசியில் கதைத்தாள்.. இன்றைக்குக் கடிதம் போடுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். கடிதம் போல் வராதுதானே அம்மா. கதைப்பவை மறந்து போகும், எழுத்திலிருப்பவை என்றும் இருக்கும்.

நான் வலைப்பதிகிறேனென உங்களுக்குச் சொல்லியிருக்கக்கூடும். இல்லாவிட்டால் இப்பொது தெரிய வந்திருக்கும். ஒன்றும் பெரிதாய் எழுதிக் கிழிப்பதில்லை. கைக்கு வந்ததைக் கிறுக்குவதுதான். என்னைப்போலவே நிறையப்பேர் வலைப்பதிகிறார்கள். ஒவ்வொரு விதமான எழுத்துகளும் கருத்துகளும் வெளிப்படுகின்றன. அப்படி ஒருவர் இன்றைக்கு அவரது அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அது இங்கே. மனதைக் கனக்கச் செய்த பதிவு. தனது அப்பாவைப் பற்றித் தெரிந்ததாக நினைத்ததெல்லாம் தெரியாததாகவே இருந்திருக்கிறது என்கிறார் அம்மா.

என் நிலைமையும் அப்படித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் உங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பினேன் தானே..உங்களுக்குப் பிடித்ததாயிருக்க வேண்டுமேயென யோசித்து அவற்றைத் தேடியெடுக்க எனக்குப் பல நாட்கள் சென்றன. அம்மா என்கிற பாத்திரம் தவிர ஒரு பெண்ணாய் சுய விருப்பு வெறுப்புடைய மனிதராய் உங்களைப் பார்த்ததில்லையே நான். அதுதான் பெரிதாய் ஒன்றும் உங்களைப் பற்றிப் தெரியவில்லை.

உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாதே... அடுத்த ஆண்டு போகும் போது போய்ப் பார்ப்போம் என்று நினைத்திருந்த பெரியம்மா இறந்த பிறகு, உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற நினைப்புத் தீவிரமாகியிருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் வயது போகிறது. உடல்நிலையிலும் நினைவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட முன்பு இயலுமான அளவு நேரத்தை உங்களுடன் கழிக்க வேண்டும். சின்ன வயதில்
கிடைத்த நேரங்களின் அருமை தெரியவில்லை. எத்தனையோ முறைகள் உங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன். பிழைகளை இப்பத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள். அப்பா இல்லாமல் போன பிறகு தனியாய் எங்கள் மூவரையும் வளர்த்தது எவ்வள்வு பெரிய விதயம் என்று இப்ப விளங்குகிறது.

எம்மியினதும் ரீச்சரினதும் இழப்புக்குப் பின் நீங்கள் இன்னும் அமைதியாகி விட்டது போலத் தோன்றுகிறது. உண்மையா? இவர்களிருவரும் தவிர, மாமியைத் தவிர்த்து - நீங்கள் யாருடனும் மனந்திறந்து பேசியதை நான் கண்டதில்லை. சகோதரிகளைப் போன்ற நண்பிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நினைத்த நேரம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள என் தோழிகளையே நான் மிஸ் பண்ணுகிறேன். பொங்கி வரும் உணர்வுகளை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமற் போகிற போது மிகவும் தவித்துப் போகிறேன். பகிர விரும்புபவற்றை கொஞ்ச நேரத்திற்கென்றாலும் மனதில் பூட்டி வைத்திருப்பது கடினமான செயலாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் அம்மா?

இங்கே சிட்னிக்கு உங்களைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே என்று நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நானும் உங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் எப்போதுமே முழுமனத்தோடல்ல. அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே வராதம்மா. நினைத்த நேரம் பேருந்தில் ஏறிப்போய் தியான நிலையத்தில் இருந்து விட்டு வரலாம்..வேலைக்குப் போகலாம், போய் வருகிற வழியில் மரக்கறிக் கடையில் தேவையானதை வாங்கி விட்டு கைப்பையையோ, குடையையோ மறந்து விட்டுவிட்டு வரலாம்!

பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க?

முதலெல்லாம் அடிக்கடி "எப்ப வாறாய்" என்று கேட்பீர்கள்" இப்போது கேட்பதில்லையே? ஏன்? கேட்காததும் நல்லதுக்குதானோ...எனக்கும் குற்ற உணர்ச்சி வராது. "இப்ப டிரெக்ட் லைனில கதைக்கிறன்..பிறகு கார்டில எடுக்கிறன்" என்றதுடன் சேர்த்துச் சொல்லும் அவசர 5 - 10 சொற்களும், கடிதங்கள் இல்லாமல் வரும் வாழ்த்து மடல்களுமன்றி அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என நினைப்பதும் வாழ்த்து மடலுடன் 10 வரிக் கடிதமும் இரண்டு படங்களுமாவது அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாழ்வதும் வேறெதைத்தருமெனக்கு?

வழக்கம் போல அல்லாமல் கடிதம் கொஞ்சம் கனத்துப் போய் விட்டது. உண்மை பேசினதினாலேயோ என்னவோ.. மனப்பளுவை ஏந்தாத ஒரு அன்பான கடிதத்தில் மீண்டும் சந்திப்போம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
அன்பு மகள்

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் ஒரு நாய், ஒரு பூனை. இவ்வளவும் தான் வளர்கையில் செல்லப்பிராணிகள். அவற்றுக்கும் எனக்குமான தொடர்பை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை எழுதச் சொல்லும் "எனது செல்லப்பிராணி" கட்டுரையின் 5 வசனங்களில் அடக்கி விடலாம். அவ்வளவு நெருக்கம். அதற்காக நாய்/பூனை பிடிக்காதென்றில்லை. பிடிக்கும் என்றுமில்லை. கிட்டே வந்தால்..கடிக்க முயற்சிக்காவிட்டால் தடவிக் கொடுப்பேன்.

எங்கள் பூனை (பெயர் ஞாபகமில்லை..அதனால் இப்போதைக்கு 'பூனை' என்றே வைத்துக் கொள்வோம்.) வீட்டிற்கு வந்தது எப்படி என்று சொல்கிறேன். நாங்கள் இருந்தது அரச உத்தியோகத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட மனையொன்றில்.(குவார்ட்டர்ஸ்) பக்கத்தில் ஓரளவு பெரிய காணி. அதற்குள் ஒரு கிணறு(இல்லை..பூனை இதற்குள் இருந்து எடுக்கப்படவில்லை!!) ஏனோ தெரியவில்லை, ஒரு சிறிய (2 அடி X 4 அடி) செவ்வகத் துவாரம் தவிர்த்து கிணற்றின் மேல் புறம் மூடப்பட்டிருக்கும். வழக்கம் போல கிணற்றுவாசிகள்: தவளைகள் & ஒன்றிரண்டு மீன்கள்.கிணற்றிற்கு10 - 15 மீற்றர் தள்ளி ஊர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு. அதற்குப் பக்கத்தில் ஒரு பனை மரம். அப்பாலே 4 அடி எடுத்தால் தெரு. தெருவிலிருந்து வீட்டிற்கு வரும் ஒரு வழி இந்த வெளிநோயளர் பிரிவைத் தாண்டி வருவது. ஒரு நாள் எங்கள் வீட்டுக் கருணைக்கந்தன், பிராணிகளின் உயிர்காப்போன் , போனதொரு பிறவியில் சிபிமன்னனாயிருந்திருக்கக்கூடிய எனது சின்னண்ணா (இதை வாசிச்சா எனக்கு இருக்கு!;O) ) அவ்வழியால் நடந்து வந்துகொண்டிருக்கையில் வழக்கமா எல்லாப் பூனையும் கத்துற மாதிரியே 'மியாவ்..மியாவ்' என்று சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் வருகிறது...உருவத்தைக் காணவில்லை. தேடியதில் கண்டு பிடித்தது எங்கே தெரியுமா? பனைமரத்தில்!! அம்மரம் மற்றப் பனைகளோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குட்டையானது. யாரையோ பிடித்து மரத்திலிருந்து பூனையை இறக்கினார்களாம். வீட்டில் வைத்துப் பராமரித்தார் அண்ணா. அவருக்கு பூனைகள் என்றால் நல்ல விருப்பம் என நினைக்கிறேன். (ஆனால் தவளையைக் கண்டால் வேறே வினையே வேண்டாம்!! கரப்பானைக் கண்டால் (வீராவேசம்(!?) வரும் வரை) நான் செய்வது போல கதிரையிலிருந்து இறங்க மாட்டார்!!) :OD அதுதான் பூனை வந்த கதை.

நாய் இருந்தது என்று சொன்னேன் தானே..நாய் எப்படி வீட்டே வந்தது..யாரேனும் காப்பாற்றினார்களா என்றெல்லாம் தெரியாது. சூரன் என்று பெயர் வைத்திருந்தார்கள் அண்ணாமார். நல்ல முசுப்பாத்தி. ஒருநாள், ஆளுயர நிலைக்கண்ணாடி, இரண்டு இழுப்பறைகள் கொண்ட ஒரு சின்ன தளபாடம்(Dressing table) இருக்கிற அறைக்குள்ளே போய்விட்டது. வெளியே எவ்வளவு கூப்பிட்டும் வரவில்லை. கண்ணாடிக்கு முன்னுக்குப் போய் நின்றது தான் தாமதம் குரைக்க ஆரம்பித்தது. நிறுத்தவே முடியவில்லை. கண்ணாடியை நகங்களால் கீறி வைத்தது. (கண்ணாடியின் வீரத்தழும்புகளை இன்றக்கும் காணலாம்!!).

இவனுக்கு மட்டும் மிருக வைத்தியர் வந்து போவா. பூனையை ஏனென்றும் இல்லை(அதை நாங்க துளசி மாதிரி அக்கறையா ஒன்றும் பார்த்துக்கொள்ளுறதுமில்ல. அது தன்பாட்டுக்குச் சுத்திவிட்டு வந்து போடுறதைச் சாப்பிடும். அடுப்புக்குக் கிட்ட படுத்துக் கிடக்கும்..பிறகு திரும்ப ஊர்சுத்தப் போகும்.) அந்த வைத்தியருக்கு ஒரு கால் போலியோவோ ஏதோ வந்து, கொஞ்சம் சூம்பினது போலிருக்கும். இழுத்து இழுத்துதான் நடப்பா. வடிவான நீட்டுப் பாவாடை(காலை மறைப்பதற்காக?) தான் அணிவா. ஒன்றின் டிசைன் இன்னும் ஞாபகமிருக்கிறது. கடும்நீல நிறப் பின்னணியில் சின்னச்சின்னதாக மயிலிறகு வரைந்திருந்தது. அவவுக்கு வடிவாக இருக்கும்.

சூரன் ஒருநாள் எழும்பக் கஷ்டப்பட்டு அதன் கூட்டுக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. கண்ணைப் பார்த்தால் கருவிழியில் வெண்படலம் தெரிந்தது. ஆளனுப்பி மிருக வைத்தியரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவ பார்த்து விட்டுச் சொன்னா இரவு பாம்பு கடித்திருக்கிறதென்று. அன்றைக்கே சூரன் செத்துப் போனான்.

அதற்குப் பிறகு வடிவான மஞ்சள், சாம்பல் நிறங்களில், கோழிக்குஞ்சுகள் 10 வாங்கி வளர்த்தேன். அம்மாவின் "மருந்தக'த்துக்கு வெளியே ஒரு கூடடித்து கம்பி வலை போட்டு பத்துக் குஞ்சையும் குடி வைத்தோம். காலையில் திறந்து விடுவதும், பிறகு பள்ளிக்கூடத்தால் வந்து கொஞ்ச நேரம் விளையாடிக் கூட்டில் அடைப்பதும் (அடைக்க முயற்சிப்பதும்) தான் என் வேலை. நடுவில் தீனி போட்டு, பருந்து கொத்திக் கொண்டு போகாமல், யாரும் களவெடுக்காமல் பார்த்துக் கொள்வது இவ!
ஒருநாள் இரவு யாரோ பத்தையும் களவெடுத்துப் போய் விட்டார்கள். :O( ஒரே அழுகை.

அதுக்குப் பிறகு வீட்டில மிருகங்கள் வளர்க்கவில்லை. ஆனா மிருகங்களோடு விளையாட்டுக்குக் குறைவிருக்கவில்லை.

(தொடரும்)

குறுக்கால போற எழுத்துப் போட்டிவலைப்பதிவர்களை வைத்து சும்மா ஒரு சின்ன விளையாட்டு. இதை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை என்று இன்றைக்குத்தான் விளங்கிச்சு. அலுவலகத்தில வேலை செய்யிறதை விட்டிட்டு இதைத்தான் முக்கியமாகச் செய்தனான். விடை காண உதவிக் குறிப்புகள் கீழே:


சரியாக விடை சொல்வோருக்கு ஒரு சிறப்புச் சுட்டி பரிசு! (நெத்திச் சுட்டியெல்லாம் இல்லைங்கோ..இது உங்களை ஒரு வலைப்பதிவுக்கு அழைத்துச் செல்லும்). அப்பிடியென்ன சிறப்பு என்று கேட்கிறீங்களா? (தமிழ்) வலைப்பதிவருக்கு வயது 6.இடமிருந்து வலமாக:

1அண்டங்காக்கா கொண்டைக்காரி..(ரண்டக்க x 3)...16 பதிவுக்கு சொந்தக்காரி (ரண்டக்க x 3) :o)

4 சினேகிதியின் போட்டிகளின் பரிசு "இவரது" சமையல்

5 செல்ல(செல்வங்கள்)ங்கள் உடையவர்

7 முகத்தை மறைக்கப் போடுவது(திரும்பியுள்ளது)

11 பசு+அலை. குழம்பியுள்ளது.

13 பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகக் (முதலில்) குரல் கொடுத்தவர்.

14 போனவார நட் - சத்திரம்(<--இது அவரே சொன்னது!) ;O)

16 அலுவலக க்ராபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்று முறையிடுபவர்.

18 படிக்கப் போறேன் என்று வலைப்பதிவுக்கு கைகாட்டி விட்டா. கொஞ்ச நாள் கவிதைப் போட்டிகள் நடத்தினவ.

19 வலைப்பதியும் ஒரு "தமிழ"னின் அடைமொழி

20 கோடு என்றும் அறியப்படும்

21 "தவம்" செய்து கவிதையெழுதி "சந்தைப்படுத்து"வார்.

22 "நறை"யில் ஒரு துளியில் நடப்புகள் சொல்லிப் போவார்

25 "குமிழி"களுக்கும் "சிதறல்"களுக்கும் சொந்தக்காரர்.

26 வலையில் "தமிழ்மணம்" வீசக் காரணமாயிருப்பவர்.

28 தோழன்(குழம்பியுள்ளார்)

30 இவரது வலைப்பதிவின் தலைப்பின் பொருள் "கடல் அலை"மேலிருந்து கீழாக:


1 வசந்தனும் இவரும் ஒருவரே என்று மயக்கம் வருவதுண்டு

2 துளசி, இவரது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னா

3.சக்தி என்னும் மதுவை உண்போமடா என்று கொஞ்ச நாளைக்கு முன் வரை சொல்லிக் கொண்டிருந்தார்

5 கடலுக்குள் தேடியெடுப்பது.(கீழிருந்து மேலாக)

6 பவித்ரா - இப்படியும் அறியப்படுவார்

8 வல்லமை தாராயோ என்கிறார், சீனத்தைப் பற்றி எழுதுகிறார்.

9 நுனிப்புல் வெட்டுகிறார், "விடியல்" என்பது வடமொழியில் இவர் பெயருக்கு அர்த்தம்.

10 "கீர்த்திக்கு" இவரது பெயர் rhyme பண்ணும்

12 பன்மொழி அறிவார். மகர நெடுங்குழைகாதனின் பக்தர்

14 திருவாளர் அநாமதேயம். இவர் எழுதுவது பலசமயங்களில் இலகுவில் புரிவதில்லை.

15 வள்ளல் ஒருவர்

17 மண்டபத்திலே சிவனைக் கண்டு கதைத்தவர்.

18 பத்தி எழுத்தாளினி, கீழிருந்து மேலாக

20 தமிழில்: அறிவு, நிலவு; மலையாளத்தில்: போதும்; சிங்களத்தில்:போதாது

23 நிலவோடு கதைத்த பைத்தியம் (என்று கதை எழுதினார்) ;O)

24 யாழிசைக்கும் வலைப்பதிவர்

27 Mykirukkals என்று கவிதை எழுதுகிறார்

29 விவசாயி.

நட்சத்திரம் பார்க்கலையோ..நட்சத்திரம்!

எழுதுகிறவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது பதிவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனிப்பு அளிக்கப்படவுமாக என்று "மண்டைக்குள் & பதிவில் சரக்கு உள்ளவர்கள்" வாராவாரம் தமிழ்மண நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெருந்தலைகளெல்லாம் வந்து போகிற இடத்தில, என்னை நட்சத்திரமாக்கி வேடிக்கை பாக்க நினைச்சிருக்கிறாங்க! ம்ம்..வாற சந்தர்ப்பத்தை ஏன் விட? மதி எனக்கு முதலில் அஞ்சல் அனுப்பிக் கேட்ட போது உண்மையான பெயரைச் சொல்ல வேண்டும் என்கிற காரணத்தினாலும் (ஏதோ சாட்சி பாதுகாப்பு திட்டத்துல இருக்கிறவ மாதிரிக் கதைக்கிறா!:O) ) என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாத காரணத்தினாலும் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த முறை, இனிமேல் அடுத்த வாய்ப்பு வருமோ இல்லையோ என்று தெரியாததால் ஓமென்று தலையாட்டிவிட்டேன். இப்பவும் என்ன எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை.

( "ஐயோ..ஷ்ரேயாவா இ.வா.ந!! யாராரை நட்சத்திரமாக்கிறதெண்டு யோசிக்கிறதில்லையா" என்பவர்கள் மதியை தொடர்பு கொள்ளலாம்!! நீங்க அப்பிடி நினைக்கிறீங்களோ இல்லையோ..எங்கட கணினிக்கே நான் நட்சத்திரமாகிறது பிடிக்கல்ல. படுத்து விட்டது! அப்பாடா! என்றெல்லாம் அவ்வளவு கெதீல மூச்சு விடாதீங்க. இருக்கவே இருக்கு..அலுவலகக் கணினி!!! ) யாரங்கே!!..ஓட முயற்சிக்கிறவங்களையெல்லாம் பிடித்துக் கட்டி வையுங்கள்! ஓட முயற்சிக்காதவர்களுக்கு "க்ருபா" செலவில் கரும்புச்சாறு! ;O)


வலைப்பதியத் தொடங்கின புதிதில் என்னென எழுதலாம் என்று யோசித்த போது, மனதுக்கு வந்தது, நடந்த/கேள்விப்பட்ட சில நகைச்சுவைச் சம்பவங்களை எழுதலாமென்று. ஆனாலும் அதை முசிப்பாத்தியாக எழுதும் கலை இன்னும் எனக்குக் கைவரவில்லை என்றே தோன்றுகிறது. தொடர்ந்து எழுத எழுத, என்ன எழுதலாம் என்பது தன்னாலேயே பிடிபட்டு விடும் என்றார்கள் முன்னோடிகள். நானும் ஒன்றரை வருடமாக எழுத முயற்சிக்கிறேன். ஓரளவுக்கு என் பதிவுகளில் இடுபவை பற்றிய தெளிவு இருந்தாலும் இன்னும் "என்ன எழுதலாம்" என்கிற அந்த ஆரம்ப கால மயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே ..நீங்கள் எதிர்பார்த்தது போல எனது பதிவுகள் அமையாதிருந்தால் குறை கொள்ள வேண்டாம்..இப்போது எழுதுவதை/எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து, வாசித்து அதை எப்படி இன்னும் சிறப்புறச் செய்யலாம், என்று சொல்லுங்கள். என் எழுத்தையும் என்னையும் சீர்ப்படுத்திக் கொள்ள உங்கள் கருத்துக்கள் உளிகளாய் உதவும்.

பின்னூட்டத்தில் சந்திப்போம்.

அங்கே போல இங்கேயும்!!

லண்டனில் குண்டு வெடித்தாலும் வெடித்தது, எல்லா இடத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறார்கள். அங்கே தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்ததற்கு மறுநாளும்,தொடர்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கும் இங்கே தொடர்வண்டி நிலையங்களில் காவல் அதிகாரிகள் நின்றிருந்தார்கள். பிறகு காணவில்லை.

இங்கே எடுத்துள்ள ஒரு ஆய்வின் படி அவுஸ்திரேலியர்களுக்கு, தாங்கள் பயங்கரவாதிகளின் இலக்காக இருப்பதாகத் தோன்றவில்லையாம். ஆனாலும் பிரதமர் அண்ணாச்சி அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை விடவில்லை. பெரியண்ணா செய்கிறார்..நானும் செய்யப்போறேன் மனப்பாங்குதான். லண்டனில் போலே, அமெரிக்காவில் போலே ஒரு தாக்குதல் இங்கேயும் இடம் பெறுமானால் அதற்கு: அரசு அமெரிக்காவுக்குத் துணை போவதும், சிறு செய்தியையும் ஊதிப் பெரிசாக்கும் ஊடகங்களுமே இரு பிரதான காரணிகளாக இருக்கும்.

தேசிய அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்வரசின் நிலைப்பாட்டில் ஒன்று. ஆனாலும் அதற்கு பெருமளவு ஆதரவு கிட்டியிருக்கவில்லை. லண்டன் குண்டு வெடிப்பின் பின்னர் தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டியது கட்டாயம் என்னும் எண்ணம் சற்றே வலுப்பெற்றுள்ளது. இனிமேல் பேருந்து, நீருந்து(ferry), தொடர்வண்டிப் பயணிகளின் பைகள் எழுமாற்றுச் சோதனைக்கு(random checks) உட்படுத்தப்படுமாம். அதற்கு, பாதுகாப்பிற்கு ஓரளவு உத்தரவாதம் என்பதால் ஆதரவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் என்ற காரணத்தினால் எதிர்ப்பும் சம அளவில் மக்களிடையே காணப்படுகிறது. இன்றைக்கு காலையில் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டுச் சரிபார்க்கும் பொறியின் அருகில் நின்று கொண்டு காவலர்கள் எழுமாறாக ஒருவரைத் தம்மருகில் அழைத்து பையைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆளை அடையாளம் காண வாக ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தையும் வாங்கிப் பார்க்கிறார்கள். தேசிய அடையாள அட்டை வரும் காலம் மிகத் தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது!

கேளுங்கள் - (ஒருவேளை) தரப்படும்!

சில கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என்று யோசித்தேன். இலகுவாய் அலுவலகத்திலிருந்து பதிவு போட வேற ஒன்றும் ஞாபகம் வருதில்லையே! கேள்விகளை நானே கேட்டு பதிலையும் நானே போட்டா நல்லாயிருக்காது. அதனாலே...

டும்டும்டும் (வேற ஒன்றுமில்ல..முரசொலி)

"மீரா ஜஸ்மின் - சதா" ஒப்பிடுக என்று (அறிவுபூர்வமாக!!) கேட்காமல் சும்மா கேள்விகளைக் கேளுங்க. இங்க பின்னூட்டத்தில கேட்டாலும் சரி..தனிமடலிலே கேட்டாலும் சரி.

இங்கே முக்கியம்: கேட்டல் மட்டுமே^ (^ என்றால் நிபந்தனைகளுக்குட்பட்டது என்றும், அவை கீழே நுண்ணிய எழுத்தில் தரப்பட்டுள்ளன என்றும் அர்த்தம்)(நிபந்தனைகள் சின்ன எழுத்திலதான் இருக்கணும் என்பது நிபந்தனைகளின் சொல்லப்படாத நிபந்தனை. அதற்கேற்ப சின்ன எழுத்தில் தரப்பட்டுள்ளது!)


^கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இந்த வாரக்கடைசியில் அல்லது அடுத்த வாரம் இங்கே பதிக்கப்படும். கேட்கப்படும் எல்லாக் கேள்விகளும் பதில் பெறும் என்றில்லை. (தலைப்பை ஒருமுறை பார்க்கவும்!)

அதாவது: கடமையைச் செய்..பலனை எதிர்பாராதே! ;o)

உதவி

என் கணவருக்கு சின்னதொரு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அவருக்கு பிடித்த/முக்கியமான பெண்மணியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இலங்கையில் வடபகுதி காரைநகரில் யூனியன் கல்லூரியில் படிப்பிக்கிறாவாம். திலகம்/திலகவதி என்ற பெயர். இவவைத் தெரிந்தால், தொலைபேசி இலக்கம் பெற்றுத் தரமுடியுமா? மேலும் விபரத்திற்கு தனிமடல் அனுப்புங்க. நன்றி.

இன்று!


முக்கியமான சிலருக்கு இன்றைக்குப் பிறந்த நாளாம் என்று கேள்விப்பட்டதில் உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்தேன். எங்களூர் பிரதமருக்கு இன்றைக்கு 66 வயதாகிறது. இவருடன் பிரபல எழுத்தாளர் பேர்னார்ட் ஷா, உளவியலாளர் கார்ல் ஜங், இசைக்கலைஞர் மிக் ஜாகர், நடிகர் கெவின் ஸ்பேசி, நடிகை சான்ட்ரா புல்லொக், கிரிக்கெட் வீரர் ஜொன்டி றோட்ஸுக்கும் இன்றைக்குப் பிறந்த நாளாம்.

இவர்களுடன்.. என்னுடைய ஒரு தோழியின் அப்பாவும், தன் பிறந்த நாளை என் அப்பாவுடன் கொண்டாடும் இன்னொரு தோழியின் அப்பாவும் நானும் இன்றைக்கு எங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். :o)

மெய்ப்பட வேண்டாம்

சினேகிதிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானேன். தூக்கியில்(lift) கீழே வந்து இறங்குமுக விரைவுப்படிக்கட்டில் காலை வைத்த படியே பக்கத்தில் வரும் நண்பருடன் அன்றைய நாளைப்பற்றிக் கதைக்கிறேன். இதென்ன...படி 45 பாகை சரிவிலிருந்து 80 பாகை சரிவாகிறதே! பக்கத்தில் வரும் நண்பரிடம் சொல்ல எத்தனிக்கிறேன்..குரல் எழும்புவதாகக் காணோம். அவரோ ஒரு வித சலனமும் இல்லாமல் தனது புதிய செல்லிடப்பேசியின் செயற்பாடுகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். படிகள் ஆடுகின்றன, அதை உணர்ந்து நிமிர்ந்து அவர் பார்ப்பதற்குள் படிகள் மேலிருந்து இறப்பர் போர்வையைப் பிரித்துக் கொண்டு விழ ஆரம்பிக்கின்றன. இருவரும் பக்கத்திலே செயற்படும் ஏறுமுகப்படிக்கட்டிற்குப் பாய்கிறோம். கால் தடுமாறியதில் அவர் விழுந்து விட்டார். உதவுவதற்காய் கைகளை நீட்டுகிறேன். அவரால் கைகளைப் பிடிக்க முடியவில்லை. படிகள் என்னை மேலே மேலே கொண்டு போகின்றன.

வெளியில் ஒரே இருட்டாக இருக்கிறது.நின்று சுற்றுமுற்றும் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. காலில் ஏதோ நெருடுகிறது. என்னவென்று தெரியாமல் பயத்தில் உதறுகிறேன். சரேலென விடுபட்டாலும் மீண்டும் மீண்டும் காலில் வந்து பூனையொன்று உடம்பைத் தேய்க்குமாற் போல் உரசுகிறது. அழுத்தம் அதிகரிக்க ஓட ஆரம்பிக்கிறேன். நாலைந்து அடிகளுக்கு மேல் எடுத்து வைக்கமுடியாமல் பாரமாக ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்கிறேன். அழுக்குப் பச்சை நிற மெல்லிய கிளைகள். நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் அவை என்னைச் சுற்றிப்படர்கின்றன. அறுத்தெறிந்து விட்டு தலைதெறிக்க ஓடுகிறேன். என் குளிர்கால coat பாரமாக இருக்கிறது. களைத்தாலும் - முதல் முறை நின்றபோது காலைச்சுற்றிய அக்கிளைகள் என்னைத் துரத்தியபடி ஜுமாஞ்ஜி படத்தில் போல இடையில் இருப்பவற்றையெல்லாம் விழுங்கித் தம் பிடிக்குள் எடுத்துக்கொள்வது போலத் தோன்றுவதால் - நிற்கும் துணிவில்லை. அவற்றிடமிருந்து தப்ப தொடர்வண்டி நிலையத்துக்குள் நுழைகிறேன்.

தொடர்வண்டி நிலையம் பழையதொரு கோட்டை போலக் காட்சி தருகிறது. பயணச்சீட்டு வழங்கும் இயந்திரமும், பூக்கடையும், வாசலிலே நிற்கும் சில இசைக் கலைஞர்களும் வழமையான இடமன்றி வேறிடங்களில். ஒரு கதவு - இதற்கு முதல் கண்டிராதது. திறந்து திறந்து மூடுகிறது. பலரும் சாரி சாரியாக உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். நானும் எனது பயணச் சீட்டைக் காட்டி உள்ளே ஓடுகிறேன். தொடர்வண்டி வரும் என்று எதிர்பார்த்தால்..அப்படி ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறைக்குள்தான் போயிருக்கிறேன். என்னுடன் சேர்த்து அந்த வரவேற்பறைக்குள் ஒரு இருபது, இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள். ஒரு மூதாட்டி வருகிறா. முகமெல்லாம் சுருக்கங்கள். வயதை சொல்ல முடியவில்லை. 80 - 85 அல்லது 100 - 105..அல்லது அதற்கும் கூட இருக்குமோ தெரியவில்லை. வயதைச் சொல்ல முடியவில்லை. இதற்கு முன் அவவை நான் கண்டதில்லை. ஆனாலும் உடனேயே அவவைப் பிடித்து விட்டது எனக்கு. எல்லாரையும் ஒரு பெரிய கூடத்துக்குள் அழைத்துப் போகிறா. மேசைகளில் விதம் விதமான சாப்பாடுகள். கணத்துக்குக்கணம் அவை முன் இருப்பவர்களின் எண்ணத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பொருள் எனக்காக நிறைய நாளாகக் காத்திருப்பதாக அந்த மூதாட்டி சொல்கிறா. ஒரு படிக்கட்டைக் காட்டி அதன் வழியே போய் அப்பொருளை எடுக்கட்டாம். நானும் படியில் ஏறுகிறேன்.

படிக்கட்டுச் சுழன்றுபோய், தலைகீழாக இருக்கும் இன்னொரு படிக்கட்டுடன் சேர்ந்து கொள்கிறது. அதன் வழியேயும் ஏறுகிறேன். வழியெல்லாம் விதம் விதமான சிற்பங்கள். சில, தாம் உருவாக்கப்பட்டது பற்றிய ஆவணப்படங்களை சலனப்படங்களாகக் காட்டுகின்றன. சிலவேளைகளில் படிகள் திடீரென முடிந்துவிடும்.பக்கத்திலிருக்கும் சுவரைத் தாண்டிக்குதித்து பயணம் தொடர வேண்டியிருந்தது. நடுநடுவில் இது வரை சந்தித்திராத பலரும், நிறைய நாட்களுக்கு முன் சந்தித்து பெயரும் முகமும் மறந்து போனவர்களும் வழியில் வந்து கதைத்துப் போகிறார்கள். சின்ன வயது ஞாபகங்களில் இருந்து உயிர் பெற்ற இடங்களும் இடையில் வருகின்றன. ஆனால் அங்கே போக முடியவில்லை. காவலர்கள் நின்று தடுக்கிறார்கள். ஞாபங்களில் மட்டுந்தான் இனிமேல் அங்கே போக அனுமதியாம். என்னைப்போலவே பல இடங்களூக்கு முன்னால் காவலர்களுடன் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பலரைக் காண்கிறேன். என்னையும் அவர்களையும் யோசித்துப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. கடைசியில் தூரத்தில் பல இழுப்பறைகள் கொண்ட ஒரு மரச்சுவர் தெரிகிறது. ஓடிப்போய் என் பெயர் சொல்லும் இழுப்பறையைத் திறக்கிறேன். அதற்குள் இதுவரை நான் காணாத ஒரு பூ. வேறொன்றுமில்லை..அந்தப் பூ மட்டும்தான். பூவைக் கையில் எடுத்து மூதாட்டியிடம் கேட்கிறேன் "இதை வைத்து நான் என்ன செய்வது?"

"கடற்கரையில் கொண்டு போய் நடு" என்று அவ சொன்னதைச் செய்ய கடற்கரைக்குப் போகிறேன். டார்லிங் ஹாபரோ மான்லியோ ஏன் வெள்ளவத்தைக் கடற்கரையோ அல்ல...மாறாக ஒரு நிழல் போலே ஞாபகமிருக்கும் பாசிக்குடாக் கடற்கரைக்கு. பூவுக்கு வளர்வதற்குத் தண்ணீர் வேண்டுமே என நினைத்து அலை படும் இடத்தில் நடுகிறேன். அலை பெருக்கெடுத்து வருகிறது. மூழ்கிவிடுவேனோ என்கிற பயத்தில் ஓடிப்போய் பக்கத்தில் உள்ள குகைக்குள் நுழைகிறேன். விளக்குடன் நிற்கும் அம்மா "வெள்ளம் வரமுன் வா" என்று சொல்லி ஆயத்தமாய் வைத்திருக்கும் கயிறொன்றையும் என்னிடம் வீசுகிறா. கயிறு காற்றில் பறந்து போகிறது. அம்மாவையும் காணவில்லை.தனித்து நிற்கிறேன். வெள்ளம் முழங்காலளவு வந்து விட்டது. தப்புவதற்காக உயரே உயரே கால் நோக நோக ஏறுகிறேன்.

குகைக் கூரையில் ஒருவனை நாலைந்து குள்ள மனிதர்கள் இழுத்துக் கொண்டு போகிறார்கள். இறந்து விட்டானாம்.அவன் யாரெனத் தெரிகிறது... படியில் தவறி விழுந்த என் நண்பன். இதோ எட்டிவிடும் என்றபடியே கொஞ்சம் கொஞ்சமாக கைகளை நீட்டி நுனிக்காலில் நின்றுகொண்டு "விளையாட்டுப்போதும்" என்று அவனைத் தட்டியெழுப்ப முயல்கிறேன். . இதென்ன .. அவனைபோலவே எனக்கும் கால் தடுமாறி, மீண்டு வரமுடியாத ஒரு இருண்ட பள்ளத்துக்குள்ளே...

திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்..அப்பாடா..கனவு மட்டுமே!

காதல் தோல்வியா

சனிக்கிழமை படமொன்று பார்த்தேன். பலருக்கும் பல நினைவுகளைக் கிளறிவிட்ட "ஆட்டோகிராஃப்". நல்ல படம்தான். ஆனாலும் ஒரு சின்ன மனவருத்தம். என்னவா? லத்திகாவைக் காதலித்து அது தோல்வி(!?)அடைந்ததினால் சேரன் புகைபிடித்து மது அருந்துவதாகக் காட்டியிருந்தார்கள் தானே. இந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ்ப்படங்களில் இப்படித்தான் காட்டுகிறார்கள். கொஞ்சம் நெருடலாகக் கூட இருந்தது. காதல் தோல்வியா "பிடி சிகரெட்டை..குடி சாராயத்தை" என்று default ஆக்கப்பட்டிருக்கிறது தமிழ்த் திரைப்படங்களில். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்டால் உணமையைத்தானே சொல்கிறோம்..காட்டுகிறோம் என்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்களேன்!! வேறே உதாரணம் காட்டுங்களேன்!!

மது குடித்து/புகைபிடிப்பதால் மனதில் ஏற்பட்ட காயம் ஆறிவிடுமா? சரி..காதல் தோல்வியடைகிறான் கதாநாயகன் என்று வைத்துக் கொள்வோம் - அவன் ஏன் அந்தக் கவலையை மறக்க ஏதாவது உழைப்பைத் தேடிக்கொள்வதாக/செய்வதாகக் காட்டக் கூடாது? அநேகமான கதாநாயப் பாத்திரங்கள் கல்லூரி மாணவர்கள். பகுதி நேர வேலை செய்வது போலக் காட்டலாம் தானே? உடலை வருத்தி வேலை செய்து அதிலே ஒன்றிப் போகின்ற வேளைகளில் மன ஆறுதல் பெறுவதாகக் காட்டலாம் தானே????? இதைப் பார்த்தாவது கொஞ்சம் முயற்சி செய்ய வேணும் என்கிற உந்துதல் இளைஞர்களுக்கு வராமலா போய்விடும்?

நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆண்களின் புத்தகம்

கைக்குக் கிடைக்கும்.. கிடைக்கும் என்று நூலகத்திலுள்ள பிரதியை எதிர்பார்த்து அலுத்துப் போய் தள்ளுபடியில் $12.95க்குப் போட்டிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். என்ன புத்தகம்? ஆண்டு தொடங்கியது முதல் (ஒரு வேளை அதற்கும் முன்னரே??) தொடர்வண்டியில் 60% பேர் வாசித்த புத்தகம்.

டா வின்சி கோட் தான். பிரபலமான புத்தகம். புத்தகமே வாசிக்காத என் சக பணியாளருக்கே இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. "ஒரு நாளும் நான் வாசிக்க மாட்டேன் : இது ப்ளாஸ்ஃபெமி (blasphemy)" என்று சொன்னா!!

வார இறுதியில் வாசிப்போமென்றால்..எங்கே? நேரம் கிடைத்தால் தானே! வெள்ளிக்கிழமை வாங்கியதை திங்கட் கிழமை தான் வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியில் காலைநேரக் கோழித்தூக்கம் போடும் நேரம் (லிட்கமிற்கும் பேர்வூடுக்கும் இடையிலான 10 - 15 நிமிடம்! ) தவிர மீதி நேரமெல்லாம் இந்தப் புத்தகம் தான். நேற்றுப் பின்னேரம் வண்டியில் வாசித்துக் கொண்டிருந்தேனா..யாரோ தட்டுகிறார்கள் என் தோளில். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு நண்பி. கதைத்துக் கொண்டே பயணம் தொடர்ந்தது.

"என்ன புத்தகம் வாசிக்கிறீங்க"

"டா வின்சி கோட்"

"ஆ??? அப்பிடியெண்டா?"

இந்தப்புத்தகம் பற்றித் தெரியாமல் கூட யாராவது இருக்கிறார்களா! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் "கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்" என்றேன்.

புத்தகத்தை வாங்கி, பின்புறம் திருப்பி பின்னட்டையில் இருந்த கதைச்சுருக்கத்தை வாசித்தா.

"ஆணகளின் புத்தகம் வாசிக்கிறீர்களே"

இப்போது நான் "ஙே!". "ஆண்களுக்குரிய புத்தகமா? அப்படியென்றால்??" விளங்காமல் கேட்கிறேன்...புத்தகங்களிலும் ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று இருக்கிறதா என்ன!

கேட்டதற்குப் பதிலாக அவ சொன்னது: "இந்த மாதிரிக் கதைகள் ஆண்கள் வாசிப்பதற்குத்தான் உகந்தது. அவர்கள் தான் இதை அதிகம் விரும்புவார்கள். பெண்கள் வாசிக்க எத்தனையோ "நைஸ் சப்ஜெக்ட்ஸ்" புத்தகங்கள் இருக்கின்றனவே".

அந்த " நைஸ் சப்ஜெக்ற்ஸ்" என்னென்ன என்று நான் கேட்கப்போகவில்லை. இந்த மாதிரி ("ஆண்கள்") புத்தகம் எனக்கும் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டுப் பேசாமலிருந்து விட்டேன்.

படைப்பில்(புத்தகமோ, சலனப்படமோ, ஓவியமோ எதுவென்றாலும்)ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று வேறுபாடு எங்கிருந்து முளைத்தது?

அலுமினியப்புழு


கொழும்பிலோடும் ஒற்றை டபிள்டெக்கர் போல் - இதுவும்
இரு தட்டில், பலதும் காவும் மனிதர்களைக் காவும்
நல்லவற்றைக் கண்டால் திறந்து கொள்ளும் மனது போல
ஒவ்வொரு நிறுத்தத்திலும் கதவு திறக்கும்,
புதிதாய் உள்வாங்கியும்,
முதல் வாங்கியதில் சிலதைத் துப்பியும் ஆன பிறகு
காது கிழிக்கும் சீழ்க்கை ஒலி தரும் அனுமதியுடன் கதவு பூட்டி
அலுமினியப்புழுப்போல ஊர்ந்து போகும்.

பெட்டகம்