ஒரு அலறல்

அன்றைய ஒன்றுகூடல் எங்கேயோ, அங்கே திட்டுத்திட்டாய், தீவுகளாய்ப் பிரிந்து நின்று உரையாடல்கள். வெற்றுப்போத்தல்களுக்குப் பக்கத்தில் ஆண்கூட்டம். பிள்ளைகள் ஓடித்திரிவார்கள். அடிக்கடி, ஒரு விதுஷனுக்கோ அல்லது ஒரு லக்சனாவுக்கோ அம்மாவிடமிருந்து ஒரு உருட்டல்/மிரட்டல் குழப்படி கனத்தால் பரிசாய்க் கிடைக்கும். பிறகும் அம்மா தன் தோழிகளுடன் கதையில் மூழ்கிவிடுவா. அப்படியென்ன கதை என்று கேட்டால், நீங்கள் பாவம், "அனுபவிக்க" நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.

இந்தப் பெண்களுக்கு அநேகமாக ஒத்த வயதாயிருக்கும், அல்லது ஒத்த வயதில் பிள்ளைகளிருப்பார்கள். இங்கே முக்கியம் பிள்ளைகள் இருப்பது. அதுதான் அடித்தளமே! ஒருமாதம் தொடங்கி பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வரை அங்கே செல்லுபடியாவார்கள். பிள்ளைக் கவனிப்பு/வளர்ப்பு/தண்டனை & சமாதான முயற்சிக்கான வழிமுறைகள் பற்றிய அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படும். கொஞ்ச நேரம் அந்தக் குழுவுக்குள்ளே மாட்டுப்பட்டால்:

  1. இல்லாத பிள்ளையைக் கவனிக்க / சரிவர வளர்க்கத் தேவையான 100% அறிவு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உங்களுக்குக் கிடைக்கும்/தெரியவரும்.
  2. பைத்தியம் பிடிக்கும். விறாண்டுவதற்குப் பாயும் தேவைப்படலாம்.

எங்கள் "ஒன்றுகூடல்" சனத்தில் 3 தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ளாத பாக்கியசாலிகள். எப்ப பிள்ளை என்று எப்போதும் எங்கேயும் கேட்கப்பட்டு நச்சரிக்கப்படுபவர்கள். இதிலே நானும் ஒருத்தி. சில வேளைகளில் இவர்களது அலுப்புத் தாங்காமல் "pregnant ஆன் உடன் உங்களுக்குத்தான் முதல்ல சொல்லுவன். வந்து எல்லாம் செய்து தரோணும்" என்று (அல்லது இதே மாதிரி ஏதாவது) சொன்னால் அதற்குப் பிறகு ஒரு 3 சந்திப்புகளுக்குத் தப்பலாம். பிறகு ப.கு.க.தி. தான்! மற்றவர்களெல்லாரும் இருந்து Nappy rash, உடுப்பளவு, பிள்ளை சாப்பிடாமல் இருக்கிறது (இதற்கு பிள்ளையைத் தூக்க நாம்தான் 2 முட்டை குடிக்க வேண்டும்) பிள்ளைப்பராமரிப்பு நிலையத்துக்கு ஆகும் செலவு என்று நீண்டு போகும் கதைகளில் மூழ்கி அறிவுரை முத்துகளெடுத்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் இருந்து எங்களுக்குத் தேவையான கதைகள் பேசுவோம். அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்புகளுடனே எங்கள் சம்பாசணைகள் தொடரும்.

அதுக்கும் வைபட்டது ஆப்பு! தோழியர் இருவரும் மூன்று மாத வித்தியாசத்தில் பிள்ளைகளையும் பெற்றார்களா, நான் அம்போ! என்று தனித்தீவாய் இந்த அறிவுரைக்கடல்களில் தப்பிக்க இயலாமல் முக்குளிக்கிறேன். தோழியரும் இருந்து nappy விலையும், சாப்பாடும், தேவைப்படக்கூடிய பிள்ளைப் பராமரிப்பையும் பற்றிக் கதைக்கிறார்கள். இப்ப யாருமே என் தோணியில் இல்லை.

இப்போதெல்லாம் இந்த ஒன்று கூடல்கள் நிறைய சக்தி விரயமாகிறது. ஏனா, பிள்ளைக் கதை மழையில் நனைந்து, nappy விற்கும் விலையில் துவாய் வாங்கித் தலைதுவட்ட முடியாமல் அயர்ந்து போய்ச் சளி பிடித்து ..ஆ..ஹச்!

பிள்ளை இருக்கிறவர்களெல்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க. பிள்ளை என்றொன்று எனக்கு வந்தால் அறிவுரைக்கும், சம்பாசணைகளுக்கும் கட்டாயம் உங்களைத் தேடி வருகிறேன்; அப்படி நானாக வரும் வரைக்கும் தயவு செய்து என்னைச் சும்மா விடுங்கள்!

12 படகுகள் :

வசந்தன்(Vasanthan) September 27, 2005 3:02 pm  

நானும் ஏதோ சயந்தனின்ர சந்திப்பைப் பற்றித்தான் எழுதியிருக்கிறியள் எண்டு வந்தேன்.

பதிவு பற்றிக் கருத்துச் சொல்ல எதுவுமில்லை, பிள்ளைக் கதை மழையில் நனைந்து, nappy விற்கும் விலையில் துவாய் வாங்கித் தலைதுவட்ட முடியாமல் அயர்ந்து போய்ச் சளி பிடித்த அனுபவங்களைக் கேட்கிற ஆவலைத்தவிர.

துளசி கோபால் September 27, 2005 3:09 pm  

ஷ்ரேயா,

அதெப்படி இங்கத்துக் கதைகளைக் கதைக்கப்போச்சு?

வீ. வீ .வா.தானே?

`மழை` ஷ்ரேயா(Shreya) September 27, 2005 3:20 pm  

வசந்தன் - நான் இந்தச் சனத்திட்ட மாட்டுப்பட்டு அவலாகிறன், உமக்கு ஆவலோ! நற..நற!!

துளசி - வீ.வீ.வா தான்!

Ramya Nageswaran September 27, 2005 3:29 pm  

ஷ்ரேயா..பிள்ளைகள் பிறக்கிறதுக்கு முன்னாடி நானும் ,என் கணவரும் இதே போல் தான் நண்பர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு கண்களை உருட்டி இருக்கிறோம். இப்பொழுது ஜோதியில் கலந்துட்டோம்!!

`மழை` ஷ்ரேயா(Shreya) September 27, 2005 3:31 pm  

ரம்யாக்கா - நீங்க உருட்டுப்பட்டதற்குப் பழி வாங்கிட்டிருக்கீங்களா இப்ப? ;O)

அன்பு September 27, 2005 4:05 pm  

இன்னும் கொஞ்சநாளைக்கு இதுமாதிரி என்னவேணா எங்களை/பிள்ளைகளைப்பற்றி பதிவு போட்டுக்கோங்க... ஆனா ஒரு காதுல நாங்க கதைக்கிறதெல்லாம் போட்டுக்குங்க, அப்புறம் யூஸாகும்:)

கலை September 27, 2005 5:22 pm  

அன்பு சொல்லுறதையும் கொஞ்சம் கவனிங்க ஷ்ரேயா. பிறகு நீங்க எங்களிட்டை கேக்க வரும்போது ஒருவேளை எங்களுக்கு சொல்லித் தர நேரமில்லாமல் போகலாமல்லவா? :))

Anonymous September 27, 2005 5:53 pm  

நல்லதொரு பதிவு ஷ்ரேயா.
உணர்வைப் பதியும் ஒரு சில சிறந்த வலைப்பதிவாளர்களில் நீங்களும் ஒருவர்.


//துளசி கோபால் //
ஷ்ரேயா,
அதெப்படி இங்கத்துக் கதைகளைக் கதைக்கப்போச்சு?//

துளசிஅன்ரி
யும் சிலோன் தமிழ் கதைக்க பழகியாச்சா?:)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 28, 2005 8:47 am  

அன்பு, காதில போட்டு வைச்சிருக்கிறன்!

... யாருக்காவது அறுவையுரை மன்னிக்கவும் அறிவுரை வேணுமெண்டா என்னைத் தனிமடல்ல அணுகவும்.
காதில சில "செய்யக்கூடாதது" விழும்; அப்படி விழுந்ததில அபத்தம் #1 என்கிற பரிசைத்தட்டிச் செல்லக்கூடியவைகளில் ஒன்று: மூன்று மாதம் வர பிள்ளையை நிமிர்த்தித் தூக்கக்கூடாது / தோளில் போடக்கூடாது. காரணம்: பிள்ளைக்குக் கண் பெருத்துவிடும்!!!!

`மழை` ஷ்ரேயா(Shreya) September 28, 2005 8:48 am  

கலை - நான் சொல்ற moodல இருக்கும் போது நீ கேட்கிற moodல இல்ல. நீ கேட்கிற moodல இருக்கும் போது நான் சொல்ற moodல இருக்க மாட்டன் என்டுறீங்களா? :O)

தீவு - துளசிம்மா எல்லாத் தமிழ்லயும் வெளுத்துக் கட்டுவா.

Ram C September 28, 2005 9:06 am  

Read your coverage of Sydney ARR concert. A Good one in tamil. Check out this post of mine for Singapore concert.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 28, 2005 12:09 pm  

நன்றி ராம்.

பெட்டகம்