வெயில்

வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)

சுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிரு
க்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.

(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)

குளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவ
ம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், ந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்துக்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .

பெட்டகம்