வெயில்

வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)

சுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிரு
க்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.

(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)

குளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவ
ம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், ந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்துக்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .

24 படகுகள் :

Unknown July 25, 2007 12:02 pm  

இக்கரைக்கு அக்கரைப் பச்சை?
மின்னசோட்டாவில் (அமெரிக்காவிலேயே குளிர்/பனி அதிகமுள்ள மாநிலம்!) வீட்டு முன் குவிந்திருக்கும் பனிக்குவியலை வேர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்யும்போதுதான் எனக்கு வெயிலின் அருமை பனியில் தெரிந்தது! இந்த மாநிலத்திற்கு வரும் முன், கலிபோர்னியாவில் பனிக்கு ஏங்கிய நாட்கள் சிரிப்பை வரவழைக்கின்றன!

துளசி கோபால் July 25, 2007 1:02 pm  

வெய்யிலைப் பத்திச் சொன்னதுக்கு நன்றி.

இன்னிக்கு ஒரே குஷிதான் எங்களுக்கு.

17 டிகிரி வெய்யில் வந்திருக்கு. அதுவும் ஜூலையில்.

ஹேப்பி யப்பா ஹேப்பி:-))))))

வெய்யிலின் அருமை குளிரில் தெரியும்:-)

கானா பிரபா July 25, 2007 1:52 pm  

உங்கள் பதிவை சிட்னிக் குளிரில் நடுங்கி நடுங்கி வாசிச்சு விட்டு எனக்குள் நினைத்தேன் வெயிலின் அருமை குளிரில் தெரியும் எண்டு அதையே துளசிம்மா சொல்லீட்டா.
நியூசிலாந்து எங்களை விட 2 மணி முன்னே இருக்கிறது ;-)

நல்ல பதிவு

`மழை` ஷ்ரேயா(Shreya) July 25, 2007 2:15 pm  

உண்மைதான்.. வெயிலின் அருமை குளிரில் தெரியும். ஆனால் "பனி" அல்லது "குளிர்" என்ற தலைப்புடன் பதிவொன்றை கோடைகாலத்தில் இதே இடத்தில் வாசிக்க நேர்ந்தால் ஆச்சரியப்படுவதுக்கில்லை ;O)

சினேகிதி July 26, 2007 9:47 am  

வெயிலோடு மழை சேரும் அந்த வானிலை சுகமாகும் :-)

Anonymous July 26, 2007 5:00 pm  

ம்...... மழையிலிருந்து வெயிலா?

எங்க ஊர்லருந்து வெயிலை மின்னசோட்டாவுக்கும்,நியூசிலாந்துக்கும், சிட்னிக்கும் அனுப்பவா?

வசந்தன்(Vasanthan) July 26, 2007 6:31 pm  

தமிழ் வலைப்பதிவுலகுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 27, 2007 4:10 pm  

அனுப்பறதுதான் அனுப்பறீங்க வெயிலான்.. கொஞ்சம் மேலதிகமாவே அனுப்புங்க. :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 27, 2007 4:10 pm  

நன்றி வசந்தன் அண்ணா.. மூத்த பதிவாளராகிய உங்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு ஊக்கம் தருகிறது.

சயந்தன் July 27, 2007 10:12 pm  

வசந்தன் வரவேற்கும் வரை காத்திருந்தேன். தமிழ் வலைப்பதிவுக்கு எழுத வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

த.அகிலன் July 30, 2007 10:31 pm  

சினேகிதின்ர பதிவில் இருந்து இங்க வந்தன்.வெயிலுக்கு நிறமும் இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். வாழ்வில் முக்கியமான நினைவுகள் சில அந்த நேரத்து வெயிலின் நிறமாக என்னுள்ளே பதுங்கிக் கிடப்பதாக நான் உணர்கிறென்.

எனக்கு சிலநேரங்களில் திடுமெனக் குறையும் அல்லது மூடும் வெயிலின் ஒளியும் வெப்பமும் சேர்ந்த கணங்கள் அதற்கும் முன்பாக நிகழ்த எதையோ மறுபடியும் நினைவூட்டிப்போவதாக நான் உணர்ந்திருக்கிறேன்.

நல்ல பதிவு

`மழை` ஷ்ரேயா(Shreya) August 01, 2007 10:08 am  

நன்றி சயந்தன். உங்களைப்போல வலைப் பதிவுலகத் 'தலை'களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 01, 2007 10:08 am  

நன்றி அகிலன் - நீங்கள் சொல்வதுடன் ஒத்துப் போகிறேன். நினைவில் நிற்கிற நிகழ்வுகளில் பல அந்நேரத்து வானிலையோடு மனதில் பதிந்து போவது வழமைதானென்றாலும் ஆச்சரியமே.

காரூரன் August 08, 2007 11:44 pm  

மழை அக்கா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும் சினேகிதி மறக்காமல் வாழ்த்தியபடியால் தான் எங்களுக்கும் தெரிந்தது.
நான் வலைக்கு புதிது.
மழையையும் வெயிலயும் பற்றி சொல்லியாச்சு. அடுத்தது கலந்த வானவில்லா?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 10, 2007 9:45 am  

நன்றி காரூரன்,

ஒரு பதிவோட நிப்பாட்டிட்டீங்க? இன்னும் எழுதுங்க.
அடுத்து வானவில்லா?? ஓ எழுதலாமே.. பிறகு அப்பிடியே காத்து மின்னல் என்டும் தொடரலாம். ;OD

காரூரன் August 15, 2007 1:20 pm  

உங்களுடைய ஊக்கத்தினால் ஒரு கிறுக்கல் செய்துள்ளேன்.
நன்றிகள்

Shanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalan August 25, 2007 5:48 am  

உங்கள் மனசின் கவிதையாக அவிழும் நினைவுகள் எங்கள் மனசின் நினைவுகளையும் அவிழ்த்து விடுகிறது. நோர்வேயில் இருந்தீர்களா? என்னுடைய கவிதை ஒன்றில் "வழிதவறி அலாஸ்கா வந்தடைந்த ஒட்டகம்போல், ஒஸ்லோவில் நான்" என எழுதினேன். வெய்யில் மீதான காதல் என்றும் பெருகிய படிக்கு.
வ.ஐ.ச.ஜெயபாலன்

கொண்டோடி October 13, 2007 2:03 pm  

அடடா!
ஜெயபாலன் வந்து பின்னூட்டம் போடுற அளவுக்குப் பிரபலமாயிட்டியள் போங்கோ.

அந்தப் பின்னூட்டத்தை தனிய ஒரு பதிவாக்கி விளம்பரம் தேடுறதை விட்டிட்டு எங்க போய்த்துலைஞ்சியள்..

கலைஞர் அனுப்பிய கவிதை, கொளத்தூர் மணி அனுப்பிய ஆதரவு அறிக்கை எண்டு வலைப்பதிவுலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கேக்க நீங்கள் சந்தரப்பம் கிடைச்சும் சும்மா இருக்கிறது நல்லாயில்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 22, 2007 4:49 pm  

நோர்வேக்கு விடுமுறைக்காக இரண்டு தடவை போயிருக்கிறேன்.. இரண்டும் பனிக்காலத்திற்றான். முதல் தடவை 3 மாதங்கள் தங்கியிருந்தேன். அழகான நாடு.

`மழை` ஷ்ரேயா(Shreya) October 22, 2007 4:50 pm  

கொண்டோடி - இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே நேரமில்லையாம்..உமக்கு நக்கலா இருக்குதா?

பதிவு போட உமக்கு தலைப்பொண்டு கிடைச்சிருக்கு..அதை விட்டிட்டு..

சோமி October 22, 2007 5:16 pm  

மட்டக்களப்புல அம்மன் கோயில் குளிர்த்திக்கு முதல் எறிக்கும் வெயிலும் அம்மன் கோயில் குளிர்த்தியும் அதில வாறா அம்மன் களும் அற்புதம். 'அம்மன்கள்' வாறாதலையோ என்னவோ குலிர்த்திக்கு முன்பான வெயில் கூட இதமாக இருக்கும்.

மட்டகளப்பு கண்ணகி அம்மன் திருவிழாவும் ஏறாவூர் காளியமன் திருவிழவும்,பாண்டிருப்பு கண்ணகி அம்மன் திருவிழாவும் எங்களை நிறைய வெயில் குளிக்கச் செய்தன.

எறிக்கும் வெயிலில் ஐஸ்க்றீம் உருக சேர்ந்தே அவளுகளுக்காக நாங்களும் உருக சுடுமணல் நடை ம்.........

`மழை` ஷ்ரேயா(Shreya) October 23, 2007 11:13 am  

வாங்க சோமிதரன்... அப்ப நீங்களெல்லாம் 'சூடு' கண்ட பூனைகள் என்டுறீங்களா? ;O)

[அம்மன்கள் அற்புதமான படைப்புக்கள்.. என்ன சொல்றீங்க?]

விளையாட்டுச் சாமான் வேண்ட கொதி மணல்ல அலைஞ்சதுதான் எனக்குத் தெரியும் :O)

கானா பிரபா October 23, 2007 3:03 pm  

இந்த ஒரு பதிவை வைத்துக்கொண்டே நான்கு மாத காலமாக மழையடித்துக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். கஷ்டப்பட்டு மேலும் எட்டு மாதம் இதே பதிவில் இருக்குமாறு வேண்டுகிறேன் ;)

`மழை` ஷ்ரேயா(Shreya) October 25, 2007 9:44 am  

கண்ணு வைக்காதீங்க அண்ணே!!

பெட்டகம்