இனிமைகள் காற்றுடன் கதை பேசும் இலைகளைப் போல தொடர்ந்து இசைத்துக் கொண்டுதானிருக்கின்றன.. நாம்தான் தொடர்ந்து செவி மடுத்துக் கொண்டேயிருப்பதில்லை. இயற்கையும் இசையும் கூட அப்படித்தான் - கவனித்தால் தன் பாட்டுக்கு மனம் இலேசாகி விடுகிறது.
இரண்டாம் குறிப்பு: இன்றைக்குக் கண்ட பிள்ளையார் எறும்புகள். சின்னக் கறுத்த எறும்புகள். இவற்றை ஏன் பிள்ளையார் எறும்புகள் என்று சொல்கிறோம்? (அல்லது வழக்கம் போல நான் தானா!). வீடு வரும்போது கட்டிட வாசலில் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு ஒரு இறந்து போன பூச்சியின் உடலைத் தூக்கிக் கொண்டு நின்றன. படியேறி வீட்டில் பை வைத்து நூலகத்துப் புத்தகங்களை எடுத்து மீண்டும் இறங்கி வர எடுத்த இரண்டு நிமிட நேரத்தில் மொத்தமாய்க் காணாமற் போயிருந்தன. பூச்சிக்கு அரச மரியாதையுடன் கூடிய தகனமா நல்லடக்கமா அல்லது வேறெதுவுமா?
சின்ன வயதில் எறும்பு கொன்று அதனால் சிவன் நெற்றிக் கண்ணால் எரித்து விடுவாரோ என்று பயந்திருந்த சில நாட்களின் ஞாபகம் திரும்பவும் மேலெழுகிறது.
முதல் குறிப்பு இரண்டாம் பகுதி: அலுவலகத்து 'Secret Santa' தந்த 'Air (French Band)' இனது 'மூன் சபாரி' கேட்கக் கேட்க கண்ணுக்குள் விரியும் ஒரு வேப்ப அல்லது மா மரத்தின் கீழ் போடப்பட்ட ஒரு கயிற்றுக் கட்டில்/ஹமொக், கொஞ்சம் காற்று, கொஞ்சம் பழரசம் (இவையுடன் அந்த இசையும்) சேர்ந்தால் சொர்க்கம் போலத் தோன்றுகிறது. பார்க்கலாம்.. நத்தார் விடுமுறைக்கு வேப்ப/மா மரங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு நிழலின் கீழ் இந்தச் சொர்க்கம் கிடைக்கிறதாவென்று. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பகல் கனவு.
முதல் குறிப்பு முதலாம் பகுதி: நாதமாய் செவியை நிறைக்கிறது. பயிற்சி இல்லாமல் துருப்பிடித்துப் போன சிலவற்றை இரண்டு தரம் திருப்பித் திருப்பி வாசிக்க வாசிக்க நீண்ட நாளைக்குப் பின் சந்திக்கும் நண்பர்களின் அளவலாவல் போல் வீணைத்தந்திகளில் விரல்களின் கோலங்கள். சிலவேளைகளில் கையைக் கூர்ந்து பார்த்தால் எப்படிப் போய் வருகிறது - அடுத்தது இந்த சுரம்தான் என்றெண்ணாமலே - என்பது ஆச்சரியமாயிருக்கிறது. சூழலை மறக்கடிக்கச் செய்யவென்றே இசை வழிகிறது. நனைந்து கொண்டேயிருக்கிறேன்..
இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
20 December 2007
வகை: கிறுக்கினது
2 படகுகள் :
ஹை.. மீ த ஃபர்ஸ்ட் படகோட்டி.. :P
யக்கா.. இதை படிக்கும் போது கவிதை படிக்கிற மாதிரியே கீதுக்கா.. கவிதை நடைல( அது எப்படி நடக்கும்னு கேக்கப் படாது.. அழுதுடுவேன்..) எழுதுங்க.. நன்னா இருக்கும். :)
இன்னாது..கவித மாதிரி கீதா? இப்டிதான் போன பதிவுக்கும் சினேகிதி சொன்னாங்க. ஒன்னுமே பிரியலபா.. ஆனா வந்ததுக்கு நன்னி. :O)
Post a Comment