மீண்டு

என் வீட்டை நிரப்பி மிதக்கிறது துயர். எப்போது அது தோள்மீதேறி அழுங்குப்பிடியாக மனதை பற்றிக் கொள்ளும் என்பதை அறிந்து கொள்ள முடிவதில்லை என்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. சிலநாட்களில் பாவம் பார்த்து அது உலாத்தப் போய்விடுகிறது. அப்படி அது இல்லாதிருக்கும் சில நேரங்களில் முப்பதுக்கும் இருபதுக்கும் இடையிலான ஆண்டுகளுக்கு முற்பட்டதொரு உலகத்தின் காட்சிகளும் ஓசைகளும் என்னை உயிர்ப்பிக்கின்றன. 

தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து இரண்டாயிரத்தின் ஆரம்ப ஆண்டுகள் வரை சில அன்றாடமும், விழா நாட்களும், விடுமுறைக்கு வந்திருக்கும் உறவுகளும், திருமணங்களும், திவசமும், சின்னஞ் சிறு குழந்தைகளும்  வளர்ந்த இரண்டாம் முறைக் குழந்தைகளும், நண்பர்களும், உறவினர்களும், இசைத்தலும், ஆடலும், பல்லுக்கொழுக்கட்டைகளும், செல்லங்களும், முறைப்புகளும், மாலை விளையாட்டுகளும் பதிவு செய்யப்பட்ட அற்புதமான ஒரு காணொளித் தொகுப்பு என்னைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. 

என் மனதை இப்போது நிரப்பும் சந்தேகங்கள், பயங்கள், அந்தரிப்புகள் இல்லாத என்னை நான் அவ்வுலகத்தில் காண்கிறேன். என்ன அழகு! சுயநம்பிக்கை இருந்தது. என்மீது எவ்வளவு அன்பிருந்தது (என்னுள்ளிருந்தும், மற்றவர்களிடமிருந்தும்). என்ன செய்தாலும் அந்த அன்பு இருக்கும் என்பது மனதின் அடியாழத்தில் பதிந்திருந்தது. நானாக இருந்தேன். ஒருவித வார்ப்புருக்குள்ளும் என்னைப் புகுத்திக் கொள்ளாமல் கவலையற்று நானாய் இருந்ததைக் காண்கிறேன். அந்த என்னைப் பார்க்கையில் ஆசையாக இருக்கிறது. தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்தும், தானாய் இருக்கச் சுதந்திரம் உடைய, அசைக்க முடியாத் தன்னம்பிக்கை கொண்ட ஒருத்தி. 

இப்போதைய என்னைப் பார்த்தால் அவளுக்கு என்ன தோன்றும்? ஏன் இப்படி இருக்கிறேன் என்ற வினா பல கோணங்களிலிருந்தும் தலை தூக்குமாயிருக்கும். அவளை ஞாபகப்படுத்திக் கொள்ள முயல்கிறேன்.  அவளாய்  இன்னுமிருப்பின் நான் என்ன செய்ய/சொல்லக்கூடும் என்று எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது. 

அவள் துணிவின் வெளிச்சத்தில் இப்போதுள்ள அறிவையும் அனுவபத்தையும் கொண்டு.

 

 

பூட்டிய கதவுகளைத் திறத்தல்

இன்றைக்கும் வழமை போல நடக்கப் போனேன். ஐந்தாறு நிமிடங்கள் நடந்த பின் கதவைத் திறப்புக் கொண்டு பூட்டினேனா என்ற சந்தேகம் முளைத்தது. அதுவும் வழமைதான், அதற்காகவே கதவைப் பூட்டும் போது முழுக் கவனத்தையும் அதில் வைப்பேன். இன்றைக்கு எப்படிக் கவனம் கலைந்தது என்று தெரியவில்லை. பூட்டியிருப்பேன் என்று தெரிந்தாலும், சரி போய்ப் பார்த்து வரலாம் என்று திரும்பினேன். 

எனது பக்கத்து வீட்டின் புல் முற்றத்தில் தாயுடன் நின்றான் அவன். பின்னேரங்களில் நடக்கப் போகும் போது காண்பேன்.. தாயுடன் தங்கள் வாசலில்/முன்முற்றத்தில் நிற்பான். இரண்டோ மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டின் ஒன்றரை வயது இளவரசன். நாங்கள்பேசிக்கொள்வதில்லை .. கையசைத்தல் மட்டுமே. இன்றைக்கு என்னைக் கண்டதும் ஓடி வந்தான். பேச இன்னும் வராது. ஆனாலும் பேசிக் கொண்டோம். அடுத்த வீட்டின் முற்றத்தில் செங்கல் பாவியிருந்தது. அதில் இரண்டு மூன்று கற்கள் சம நிலையில் இல்லாமல் நடனமாடின. அதை அசைத்துக் காட்டினேன். எனது கையைப் பிடித்திழுத்தான். தான் கீழே அமர்ந்து என்னையும் இழுத்தான். தாயும் அருகிலேயே அமர்ந்து கொண்டார். இன்னொருவர் முற்றத்தில் அமர்வது ஏதோ போலிருந்தது. அவனுக்கோ தாய்க்கோ அது பொருட்டாயிருக்கவில்லை. கைகளை ஆட்டி ஏதேதோ சொன்னான். பாதையின் மறுபுறம் என் வண்டி நின்றது. அதைக் காட்டியும் பேசினான், ஆம் அது என்னுடையது என்றேன்.. ஓ விளங்கிக் கொண்டாயா என்பது போல அழகாய்ப்  புன்னகைத்தான். பரஸ்பரம் பெயர்கள் அறிந்துகொண்டோம்.

நடக்கப் போகலாம் என்று எழுந்து அவனிடம் விடைபெற முனைந்தேன். கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அமர்த்தினான். அவன் அம்மா சிரித்துக் கொண்டார்.  நானும் அவரும் இருக்க, செங்கல் மீது நின்றாடினான். எறும்புகளைக் குந்தியிருந்து பார்த்தான். கரைந்தபடி பறந்த காகத்தையும் விர் விர்ரென்று சென்ற வண்டிகளையும். 

மனமில்லாது விடை பெற்றுக் கொண்டேன். 

எப்போதுமே,  திரும்பி நடந்து வரும் நேரத்தில் மனம் கொஞ்சம் அடங்கி அமைதியான நிலையில் இருக்கும். வீட்டிலிருந்து 500மீ இருந்திருக்கும்.. அவன் ஞாபகம் வந்தது. புன்னகைத்தேன்.. அழுகையும் வந்தது. அந்தக் குழந்தை சொரிந்த அன்பு எனக்கு மிகவும் தேவைப்பட்டிருந்தது.

கதவைப் பூட்டியது பற்றியது போன்றான  சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்குத் திரும்பிப் போகலாம்.. அன்பு காத்திருக்கும். 

 

  

அறைக்குள் பூக்கள்


 அறையெங்கும் கமகமக்கிறது

 காற்றில் மிதக்கும் வாசனை.

கதவு திறந்திருக்கிறது

மரத்தில் உள்ள பூக்கள் அறைக்குள் நடமிடுகின்றன. 

இங்கே பூக்கள் பூக்கள் அல்ல. 

 


 

 

 

சேய்மை

முதலில் அம்மா மட்டுமே இருந்தார். அவருக்குள் நான் இருந்தேன். 
 
பிறகு, அவர் அதே ஊரில் வேலைக்குப் போவார், வீட்டில் எம்மியுடன் பத்திரமாய் நானிருந்தேன். 
அம்மா எப்போதும் இருந்தார் - பாடசாலையில் நானும் வைத்தியசாலையில் மருந்தாய் அம்மாவும் இருக்கையிலும், பக்கத்து நகருக்குப் போன போதும், விடுமுறைக்கு எம்மியுடன் போகும் நாட்களிலும், வண்டியேறி அம்மாவுடன் பயணம் போகையிலும். 
 
போர் எங்களூருக்கும் வந்து கதவைத் தட்டிய பொழுதிலும் அம்மா இருந்தார். பிறகு நாங்கள் அந்தச் சிறு தீவின் கிழக்கிலும் மேற்கிலுமாய் ஆனபோதும் எழுவான்கரையில் சூரியனோடு சேர்த்து அம்மாவும் இருந்தார். 
 
தீவின் படுவான்கரையில் மீண்டும் சேர்ந்து கொண்டோம். பதின்மத்தின் அத்தனையையும் நான் காட்ட, அம்மாவாய் மட்டுமே இருந்தார் அம்மா. அவரில்லாமல் -  தந்தைக்கொப்பான அண்ணனுடனே இருந்தாலும் கூட - நான் தவிப்பேன் என்பதை நோர்வேயிலுள்ள ஒரு கிராமமே  நினைவு தெரிந்த என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதலில் எனக்குச் சொன்னது. காலப்போக்கில் மனதின் அடுக்கொன்றில்  அந்த அறிதல் மறைந்து போயிற்று. அப்பொழுதும் அம்மா இருந்தார்.
 
குட்டித்தீவிலிருந்து அகன்று பெருந்தீவில் வாழ்வு என்றானது. அப்போதும் அம்மா இருந்தார். தொலைபேசியின் மறுமுனையிலும் கணினித் திரையிலும்.. அல்லாத போதுகளிலும்.
நினைவழிவு நோய் அம்மாவைப் பற்றிக் கொள்ள முன்பு இத்தனை இறுக்கமாய் நான் அம்மாவைப் பற்றிக்கொண்டதில்லை என்றே நினைக்கிறேன். அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் வாழ்க்கை என்முன் விரிந்து கிடந்தது. என்னிலும் 45 ஆண்டுகள் மூத்த அம்மாவுக்கு வயது போகிறது என்பது பற்றிச் சிந்தித்திராத காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 
 
அம்மா - சுதந்திரமாய்த் தன்னிறைவாய், எல்லாவற்றையும் தானே கவனிப்பவராயும் மற்றவருக்கும் செய்து தருபவராயும் இருந்தார். 
எங்கேயும் பயணிக்கத் தெரிந்த, 
எந்த அலுவலகத்திற்கும் போய் வேலைகளை முடிக்கத் தெரிந்த, 
பயமில்லாத, 
ஊக்குவிக்கிற, 
எல்லாருடைய பிறந்த நாட்களையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து மடல் அனுப்பும்,
தொலைபேசுகிற, 
யாரையும் அன்புடனே எப்போதும் பார்க்கும் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போகத் தொடங்கினார். 180 பாகை மாற்றம். அவரில் தங்கியிருந்த எம்மில் அவர் சார்ந்து கொண்டார். அது புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
என்னத்தை எப்படி எப்போது எங்கே செய்ய வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியாமல் போனால் என்ன செய்வது? யோசித்திருக்கிறேன். 
அப்படியே அம்மா அவற்றைத் தெரியாதவரானார். அதுவும் புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
வாழ்க்கையில் சில கேள்விகள் விடாமல் திரும்பத்திரும்பத் தோளில் தட்டும். அம்மா என்னை மறந்து போனால் என்ன செய்வது? இந்தக் கேள்வி என்னைப் பலநாட்கள் துரத்தியபடி இருந்தது. சில நாட்களில் எட்டிப்பிடித்து விடும். சில நாட்களில் அக்கேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் மனதைத்  திசைதிருப்பி விடுவேன்.  
அப்படியே அம்மா மறந்தும் போனார். அதுவும் புதிதாய் இருந்தது. 
'அம்மாவால் மறக்கப்படுதல்' எனும் பாதைவழியே பயணித்தல் என்பதுவும் விதிக்கப்பட்டதொரு வாழ்வனுபவமாகிற்று. 
அம்மாவே மறந்து விட்டால் குழந்தை என்ன செய்வது? தன்னிரக்கம் வழியும். அம்மாவும் அவரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் அறிவுரையும் தைரியமும் மிகவும் தேவைப்பட்ட காலகட்டத்தை அவையின்றிக் கடந்து கொண்டேன். 
அம்மா இல்லாது போய்க்கொண்டிருந்தார்.. ஆனாலும் இருந்தார்.

எனக்கு மிகவும் பிடித்த 'மொழி பெயர்த்த மௌனம்' கவிதையில் இப்படி எழுதியிருப்பார் கார்த்திக் வேலு: 
"... குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, தலை சீவி, 
சட்டை அணிவித்து விடு. 
அவர்களுடன் நடை பயில்.."
தன்னையும் மறந்து காலத்தையும் கடந்து நிகழ்கணத்தில் மட்டும் வாழ்ந்திருந்த அம்மாவுடன் அதைத்தான் செய்தேன். மணிமுடி போன்றும் காதணிகளாயும் பூக்களை அவருக்கு அணிவித்தேன். அவர் அதுவரை ஒருபோதும் இட்டிரா மருதோன்றியையும்.
அதுவும் புதிதாக இருந்தது.  
அம்மா இல்லாதிருந்தார். ஆனாலும் இருந்தார்.
 
நடவாது போனார். படுக்கையிலானார். கையைத் தடவிக் கொடுத்தும், காலுக்கு எண்ணெய் பூசியும், பலருக்கு மருந்தாகவே இருந்தவரின் புண்ணுக்கு மருந்திட்டும், என்ன பேசுவதென்று தெரியாத பகல் வெக்கைப்பொழுதுகளில் சும்மா செல்லம் பொழிந்தும், சில நேரங்களில் வெறுமே கையைப் பற்றியபடியே உறங்கிப் போயும் அவர் அருகிருந்தேன்
புறப்படும் போது கொஞ்சிச் சொன்னேன் "கஷ்டப்படாதீங்க. போகோணுமெண்டா போங்க". 
அப்போதும் இருந்தார்.
 
வழியனுப்பிய போதில், தளைகளற்று, பேரன்பில் திளைத்திருக்கின்றார் அம்மா என்பது போலவும் ஏதோ அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்திருக்கிறார் போலவும் தோற்றிற்று. இன்னும் இருக்கிறார் என்பதாய். 
 
அம்மா இல்லாமல்தான் இருந்தார்.. ஆனால் இருந்தார். அம்மா இல்லாது இருத்தல் என்பது புதினமான ஒன்றாக இருக்கிறது. மனம் துழாவுகிறது. பாதுகாப்பாய் உணரக்காணோம். அரண் இருந்த இடம் வெற்றிடமாய் வெறுமையாய் இருப்பது, பெயரறியா உணர்வுகளையும் சேர்த்து மிகவும் புதிதாய் அந்தரிப்பாய் அந்நியமாய் ஒண்ணாமல் இருக்கிறது.
அம்மா காணாமற்றுப் போய்விட்டார். 
இப்போ, சட்டை அணிவித்துத் தலைசீவிப் பூ வைத்துவிட அம்மா இல்லாமல் நான் என்ன செய்யட்டும்?   

என் அரசி

இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள்.  மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.  

பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே   பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும்  இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம். 

யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.

எங்கள் ஊர். எங்கள் அம்மா.

அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை  நானோ  ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா. 

அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும். 

எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ  நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.

வாழ்தல் என்பது எப்படி என்று  ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம். 

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.   

  

 


காத்திருத்தலின் நிறம்

ஒரு பூ மதில் மேல் இருக்கிறது. இளவெயில் கொண்ட  ஒரு மாலைப்பொழுதோடு  கை கோர்த்தபடி புன்னைகையைப் பேசுகிறது அந்தப் பூ. தனதென்றோ இல்லையென்றோ சொல்லிவிட முடியாதவொன்றிற்காய் இதழ் விரிக்கிறது. குளிர்ந்த கைகளால், இதழ்களால்  என்று சொல்ல வேண்டுமோ.. காற்றை அளைகிறது. சொல்லித் தீர்க்க முடியாததொரு உணர்வில் ஒரு fado பாடலைப் போலத் திளைக்கிறது.

அரவணைப்பையும் புறக்கணிப்பையும் அறிந்த உணர்ந்த பூ அது. எத்தனை புறக்கணித்தாலும் அரவணைப்பை மட்டுமே பதிலாய்த்தர தர அது விழைகிறது. எரித்தாலும் பதிலுக்குக் குளிர்விக்கத்  தயங்காதது. எல்லாமறிந்த காற்றை மென்மையாய் ஏந்துவது. 

முற்றுப் பெறாதவொரு உரையாடலின் முழுமையற்ற ஞாபகம் அந்தப் பூ எதிர்பாராதவொரு கணத்தில் எங்கோ அடியாழத்திலிருந்து முகிழ்க்கின்றது . அதன் மீதியைத் தேடி,  பிரவகிக்கிற  எல்லா   நதிகளிலும் பூ நீந்துகிறது. மூழ்குகிறது. நதியை அறிந்து மீன்களோடும் பாசியோடும் கூழாங்கற்களோடும் கரையுமல்லாத நதியுமல்லாத சகதியோடும் தோழமை கொள்கிறது. அவை தம் ரகசியங்களைப்  பகிர்ந்து கொண்ட பிறகு பூ கரையேறுகிறது. இருந்த ஞாபகத்தையும் அந்த முடிவு காணா உரையாடலையும் ஒவ்வொரு நதியும் மறக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. பூவின் நிறத்தையும் கூட. 
 
ஒரே வாத்து எல்லாக்கரைகளிலும் பவழமல்லியை மிதித்துக்கொண்டு சிறகு உலர்த்தியபடி நடை பயில்கிறதை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரகசியங்கள் தொடர்ந்து இழைக்கப்படும் துண்டினால் தலை துவட்டிக் கொள்கிறது பூ.

நதி கழுவிக் கொண்டு போய்விடுகிற வண்ணத்தை மழை அழைத்துவரும் வானவில் மீண்டும் பூவுக்குப் பூசி விடுகிறது. எங்கும் சரியாய்ப் பொருந்தியிருந்தாலும்  ஞாபகம் முழுமையற்ற இடத்தில் மட்டும் வண்ணம் இருப்பதில்லை. பவழமல்லி மணக்கிற அவ்விடத்தில்தான் வண்ணத்தை விழுங்குகிற ஒரு வாத்தின் இறகின் தடமும் இருக்கிறது. ஆனாலும் அதனால் விழுங்கமுடியாத நிறமொன்றும்  உள்ளது. அது, காத்திருத்தலின் நிறம்.

காத்திருத்தலின் நிறம்  நீலம்; அதன்  நடனம் தாண்டவம். எனக்குத் தெரிந்த வரை.  
பூ காத்திருக்கிறது. நீல நிறத்தில். அருளல் ஆரம்பிக்கிற கணத்துக்காய். எப்போதும்போலவே எல்லாமுமாய்க் கூடவே  இருக்கிறது மழை.

ஒளித்தலும் வெளித்தலும்

 

காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச்  சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில் பட்டு, இதோ தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போல ஊறியிருந்தது மஞ்சள் வெய்யில். அவற்றின் மிக மெல்லிய நரம்புகள் கூட அப்படியே தெரிந்தன. சில இலைகளுக்குக் கொஞ்சமே வெய்யில் கிடைத்தது. கிடைத்தளவிற்குத தங்களைக் காட்டிக் கொண்டன அவை.  

மனிதர்களைப் பற்றி நினைத்தேன். இந்த இலைகளைப் போலத்தான் அவர்களும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறார்கள். தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இரகசியங்கள் எல்லாரிடமும் இருக்கின்றன. 

அன்பும்.

மலர்தல்


எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.

இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம்.  என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.

கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல்  ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.

நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று. 

தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு ன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது.  அவர் குரலை மட்டுமே  கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.

உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?

பெட்டகம்