இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள். மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.
பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும் இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம்.
யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.
எங்கள் ஊர். எங்கள் அம்மா.
அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை நானோ ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா.
அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும்.
எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.
வாழ்தல் என்பது எப்படி என்று ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம்.
பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.
0 படகுகள் :
Post a Comment