முதலில் அம்மா மட்டுமே இருந்தார். அவருக்குள் நான் இருந்தேன்.
பிறகு, அவர் அதே ஊரில் வேலைக்குப் போவார், வீட்டில் எம்மியுடன் பத்திரமாய் நானிருந்தேன்.
அம்மா எப்போதும் இருந்தார் - பாடசாலையில் நானும் வைத்தியசாலையில் மருந்தாய் அம்மாவும் இருக்கையிலும், பக்கத்து நகருக்குப் போன போதும், விடுமுறைக்கு எம்மியுடன் போகும் நாட்களிலும், வண்டியேறி அம்மாவுடன் பயணம் போகையிலும்.
போர் எங்களூருக்கும் வந்து கதவைத் தட்டிய பொழுதிலும் அம்மா இருந்தார். பிறகு நாங்கள் அந்தச் சிறு தீவின் கிழக்கிலும் மேற்கிலுமாய் ஆனபோதும் எழுவான்கரையில் சூரியனோடு சேர்த்து அம்மாவும் இருந்தார்.
தீவின் படுவான்கரையில் மீண்டும் சேர்ந்து கொண்டோம். பதின்மத்தின் அத்தனையையும் நான் காட்ட, அம்மாவாய் மட்டுமே இருந்தார் அம்மா. அவரில்லாமல் - தந்தைக்கொப்பான அண்ணனுடனே இருந்தாலும் கூட - நான் தவிப்பேன் என்பதை நோர்வேயிலுள்ள ஒரு கிராமமே நினைவு தெரிந்த என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதலில் எனக்குச் சொன்னது. காலப்போக்கில் மனதின் அடுக்கொன்றில் அந்த அறிதல் மறைந்து போயிற்று. அப்பொழுதும் அம்மா இருந்தார்.
குட்டித்தீவிலிருந்து அகன்று பெருந்தீவில் வாழ்வு என்றானது. அப்போதும் அம்மா இருந்தார். தொலைபேசியின் மறுமுனையிலும் கணினித் திரையிலும்.. அல்லாத போதுகளிலும்.
நினைவழிவு நோய் அம்மாவைப் பற்றிக் கொள்ள முன்பு இத்தனை இறுக்கமாய் நான் அம்மாவைப் பற்றிக்கொண்டதில்லை என்றே நினைக்கிறேன். அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் வாழ்க்கை என்முன் விரிந்து கிடந்தது. என்னிலும் 45 ஆண்டுகள் மூத்த அம்மாவுக்கு வயது போகிறது என்பது பற்றிச் சிந்தித்திராத காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.
அம்மா - சுதந்திரமாய்த் தன்னிறைவாய், எல்லாவற்றையும் தானே கவனிப்பவராயும் மற்றவருக்கும் செய்து தருபவராயும் இருந்தார்.
எங்கேயும் பயணிக்கத் தெரிந்த,
எந்த அலுவலகத்திற்கும் போய் வேலைகளை முடிக்கத் தெரிந்த,
பயமில்லாத,
ஊக்குவிக்கிற,
எல்லாருடைய பிறந்த நாட்களையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து மடல் அனுப்பும்,
தொலைபேசுகிற,
யாரையும் அன்புடனே எப்போதும் பார்க்கும் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போகத் தொடங்கினார். 180 பாகை மாற்றம். அவரில் தங்கியிருந்த எம்மில் அவர் சார்ந்து கொண்டார். அது புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
என்னத்தை எப்படி எப்போது எங்கே செய்ய வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியாமல் போனால் என்ன செய்வது? யோசித்திருக்கிறேன்.
அப்படியே அம்மா அவற்றைத் தெரியாதவரானார். அதுவும் புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
வாழ்க்கையில் சில கேள்விகள் விடாமல் திரும்பத்திரும்பத் தோளில் தட்டும். அம்மா என்னை மறந்து போனால் என்ன செய்வது? இந்தக் கேள்வி என்னைப் பலநாட்கள் துரத்தியபடி இருந்தது. சில நாட்களில் எட்டிப்பிடித்து விடும். சில
நாட்களில் அக்கேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் மனதைத் திசைதிருப்பி விடுவேன்.
அப்படியே அம்மா மறந்தும் போனார். அதுவும் புதிதாய் இருந்தது.
'அம்மாவால் மறக்கப்படுதல்' எனும் பாதைவழியே பயணித்தல் என்பதுவும் விதிக்கப்பட்டதொரு வாழ்வனுபவமாகிற்று.
அம்மாவே மறந்து விட்டால் குழந்தை என்ன செய்வது? தன்னிரக்கம் வழியும். அம்மாவும் அவரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் அறிவுரையும் தைரியமும் மிகவும் தேவைப்பட்ட காலகட்டத்தை அவையின்றிக் கடந்து கொண்டேன்.
அம்மா இல்லாது போய்க்கொண்டிருந்தார்.. ஆனாலும் இருந்தார்.
எனக்கு மிகவும் பிடித்த 'மொழி பெயர்த்த மௌனம்' கவிதையில் இப்படி எழுதியிருப்பார் கார்த்திக் வேலு:
"... குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, தலை சீவி,
சட்டை அணிவித்து விடு.
அவர்களுடன் நடை பயில்.."
தன்னையும் மறந்து காலத்தையும் கடந்து நிகழ்கணத்தில் மட்டும் வாழ்ந்திருந்த அம்மாவுடன் அதைத்தான் செய்தேன். மணிமுடி போன்றும் காதணிகளாயும் பூக்களை அவருக்கு அணிவித்தேன். அவர் அதுவரை ஒருபோதும் இட்டிரா மருதோன்றியையும்.
அதுவும் புதிதாக இருந்தது.
அம்மா இல்லாதிருந்தார். ஆனாலும் இருந்தார்.
நடவாது போனார். படுக்கையிலானார். கையைத் தடவிக் கொடுத்தும், காலுக்கு எண்ணெய் பூசியும், பலருக்கு மருந்தாகவே இருந்தவரின் புண்ணுக்கு மருந்திட்டும், என்ன பேசுவதென்று தெரியாத பகல் வெக்கைப்பொழுதுகளில் சும்மா செல்லம் பொழிந்தும், சில நேரங்களில் வெறுமே கையைப் பற்றியபடியே உறங்கிப் போயும் அவர் அருகிருந்தேன்.
புறப்படும் போது கொஞ்சிச் சொன்னேன் "கஷ்டப்படாதீங்க. போகோணுமெண்டா போங்க".
அப்போதும் இருந்தார்.
வழியனுப்பிய போதில், தளைகளற்று, பேரின்பத்தில் திளைத்திருக்கின்றார் அம்மா என்பது போலவும் ஏதோ அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்திருக்கிறார் போலவும் தோற்றிற்று. இன்னும் இருக்கிறார் என்பதாய்.
அம்மா இல்லாமல்தான் இருந்தார்.. ஆனால் இருந்தார். அம்மா இல்லாது இருத்தல் என்பது புதினமான ஒன்றாக இருக்கிறது. மனம் துழாவுகிறது. பாதுகாப்பாய் உணரக்காணோம். அரண் இருந்த இடம் வெற்றிடமாய் வெறுமையாய் இருப்பது, பெயரறியா உணர்வுகளையும் சேர்த்து மிகவும் புதிதாய் அந்தரிப்பாய் அந்நியமாய் ஒண்ணாமல் இருக்கிறது.
அம்மா காணாமற்றுப் போய்விட்டார்.
இப்போ, சட்டை அணிவித்துத் தலைசீவிப் பூ வைத்துவிட அம்மா இல்லாமல் நான் என்ன செய்யட்டும்?
0 படகுகள் :
Post a Comment